பாப்பா சொல்லும் கதை - 8: வண்ண மயிலும் சின்னப் புறாவும்..!

Thursday, 25 June 2020 01:22 - பத்மா இளங்கோவன் (பத்மபாரதி) - சிறுவர் இலக்கியம்
Print

குழந்தைகள் பக்கம்

- பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்': இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப் பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it . - பதிவுகள் -


எழுத்தாளர்  பத்மா இளங்கோவன்

வெண் மேகம் கறுத்தது
வீசும் தென்றல் குளிர்ந்தது
மின்னல் வெட்டி அடித்தது
மழையும் வரவு காட்டியது..
மயிலும் தோகை விரித்தது
மான்கள் துள்ளி ஓடின
குயில்கள் கூவத் தொடங்கின
கூடப் புறாக்கள் சேர்ந்தன..

மழையின் வரவை நோக்கி
மகிழ்ந்தே யாவும் துள்ளின
கீச்சுக் கீச்சு அணிலும்
குதித்துக் குதித்து ஓடியது..
சின்னச் செட்டை விரித்தே
சோடிப் புறாக்கள் ஆடின
சிவந்த பாதம் தூக்கியே
சுற்றிச் சுற்றி வந்தன..

 

ஆட்டம் பார்த்த மயிலாரும்
ஏனோ பொறுமை இழந்தாரே
வண்ணத் தோகை மின்னிட
வந்தே மெல்லக் கேட்டாரே..
என்ன சின்னப் புறாவே
ஏதோ ஆட்டம் போடுகிறாய்
என்னைப் போலத் தோகை
அழகு உனக்கு உண்டோ..

எனது செட்டை அழகு
எனக்குப் போதும் அக்கா
உனது தோகை அழகை
என்றும் இரசிப்பேன் அக்கா..
தோகை விரித்து உன்னால்
தூரப் பறக்க முடியுமோ
தூது கொண்டு என்னால்
தூரச் செல்ல முடியும்..

என்று சொல்லிப் புறாவும்
எழுந்து மேலே பறந்தது
புரிந்து கொண்ட மயிலும்
புறாவைப் பார்த்து இரசித்தது..
கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தால்
கவலை இன்றி வாழலாம்
இல்லாத ஒன்றிற்கு ஏங்கினால்
என்றும் கவலை உண்டாம்..!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 25 June 2020 01:25