சிறுவர் இலக்கியம்: பாப்பா சொல்லும் கதை (6 & 7)

Tuesday, 09 June 2020 10:19 - பத்மா இளங்கோவன் - சிறுவர் இலக்கியம்
Print

குழந்தைகள் பக்கம்- பதிவுகளின் 'சிறுவர் இலக்கியம்': இப்பகுதியில் சிறுவர் இலக்கியப்படைப்புகள் வெளியாகும். உங்கள் படைப்புகளை இப்பகுதிக்கு அனுப்பி வையுங்கள். சிறுவர் இலக்கியத்தைப் பிரதிபலுக்கும் கதை, கவிதை, கட்டுரைகளை நீங்கள் அனுப்ப வேண்டிய முகவரி:  This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it . - பதிவுகள் -


1. வெள்ளைக் கோழியும் வண்ணக் குஞ்சுகளும்..!

எழுத்தாளர்  பத்மா இளங்கோவன்

 

 

 

 

 

 

1. வெள்ளைக் கோழியும் வண்ணக் குஞ்சுகளும்..!

பெரிய வெள்ளைக் கோழி
பொரித்த குஞ்சு பத்து
பஞ்சு போன்ற குஞ்சுகள்
பார்த்து வளர்க்கும் அம்மா.

கீச்சுக் கீச்சுச் சத்தம்
குண்டு மணிக் கண்கள்
பறக்கச் செட்டை அடிக்கும்
பார்க்க அழகாய் இருக்கும்.

செட்டைக்கு உள்ளே குஞ்சுகள்
சேர்ந்து புகுந்து இருக்கும்
அம்மாக் கோழிச் சூட்டில்
எல்லாம் நன்றாய் உறங்கும்.

வெளியே தாயின் கூடவே
விரைந்து யாவும் செல்லும்
தூர எங்கும் போகாமல்
தாயும் அருகே அழைக்கும்.

குப்பை கூளம் கிளறி
கொத்திக் காட்டும் அம்மா
பூச்சி புழுவைத் தேடிப்
பிடித்துக் கொடுக்கும் அம்மா.

பருந்து குஞ்சைப் பிடிக்க
பதிந்து வரும் போதே
பார்த்து இருக்கும் அம்மா
பாய்ந்தே பருந்தைக் கொத்தும்.

பயத்தில் எல்லாக் குஞ்சும்
பதுங்கி ஒளித்தே இருக்கும்
பருந்து போன பின்னால்
பாய்ந்தே ஓடி வந்திடும்.

பேணி அம்மா வளர்த்து
பெரிய குஞ்சு ஆனதும்
விலகி வெளியே சென்று
வாழப் பழகிக் கொள்ளும்.

சேவல் குஞ்சு வளர்ந்து
சிறகை அடித்துக் கூவும்
பேட்டுக் குஞ்சு வளர்ந்து
பெரிய முட்டை இடுமே.

அழகிய கோழி முட்டை
எங்கள் அம்மா பொரித்தா
நல்ல சுவை என்றே
நாங்கள் எடுத்து உண்போம்.

நிறையச் சத்து உள்ளது
நல்ல கோழி முட்டை
சிறுவர் நாமும் உண்டே
சிறப்பாய் வளர வேண்டும்.!


பாப்பா சொல்லும் கதை - 7: மெல்ல ஊரும் ஆமையும் துள்ளிப் பாயும் முயலும்..!

மெல்ல ஊரும் ஆமையும் துள்ளிப் பாயும் முயலும்..!

சின்ன முயல் குட்டி
சிவப்புக் கண்கள் இரண்டு
பஞ்சு போல மென்மை
பார்க்க அழகாய் இருக்கும்..

துள்ளித் துள்ளிப் பாயும்
தேடிப் புல்லை மேயும்
செவியை ஆட்டிப் பார்க்கும்
சத்தம் கேட்டால் ஓடும்..

ஆமைக் குஞ்சு ஒன்று
ஆற்றில் நீந்தி வந்தது
கரையில் நின்ற முயலும்
கண்டு சுகம் கேட்டது..

சுகமாய் உள்ளேன் என்று
சின்ன ஆமை சொன்னது
தண்ணீர் குடித்த முயலும்
தரையில் புல்லை மேய்ந்தது..

பார்க்க வீடு போலே
பெரிய ஓடு முதுகில்
அபாயம் வரும் வேளை
ஓட்டுள் ஒழிக்கும் ஆமை..

ஆமைக் குஞ்சு மெல்ல
அருகே ஊர்ந்து வந்தது
சின்ன முயல் பார்த்து
சிரித்துக் கொண்டே கேட்டது..

நீண்ட தூரம் போக
நேரம் மிக ஆகுமே
மெல்ல ஊரும் நண்பரே
மனதில் எனக்குக் கவலையே..

கவலை ஏனோ முயலாரே
கருமம் பலவும் பார்த்திட
உறுதி வேண்டும் மனதிலே
உமக்கு இது தெரியாதோ..

உறுதி இருந்தால் சரியாமோ
உமது வேகம் போதுமோ
முடிந்தால் வாரும் போட்டிக்கு
முடிவில் வீரம் தெரிந்திடும்..

இருவரும் ஓடத் தொடங்கினரே
இடையில் முயலார் பார்த்தாரே
ஆமை தொலைவில் வந்தாரே
அதனால் சிறிது தூங்கினாரே..

மெல்ல ஊர்ந்த ஆமையார்
முழுதும் ஓடி முடித்தாரே
முயலார் உறங்கி விழித்தாரே
முடிவில் தோற்று விட்டாரே..

உழைப்பில் உறுதி இருந்தாலே
உயர முடியும் வாழ்விலே
கருமத்தில் கவனம் இருந்தாலே
கிட்டும் வெற்றி நிச்சயமே..!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 23 June 2020 15:40