அஞ்சலி: ' ரோஜா' சஞ்சிகை ஆசிரியர் வி.எல்.ஆனந்த் மறைவு!

Monday, 15 June 2020 02:24 - குரு அரவிந்தன் - குரு அரவிந்தன்
Print

'ரோஜா' ஆனந்த்பழகுவதற்கு மிகவும் இனிமையான நண்பர் ஆனந்தின் பிரிவு கனடா தமிழ் இலக்கிய உலகிற்குப் பெரும் இழப்பாகும். புலம்பெயர்ந்த ஆரம்ப காலங்களில் மிகவும் வீரியத்துடன் ரொறன்ரோவில் இலக்கிய முன்னெடுப்புகளில் முன்னின்றவர். அதன்பின் மொன்றியலுக்குச் சென்று அங்கும் இலக்கிய சேவைகளை முன்னின்று தொடர்ந்து செய்தவர். 1990 களில் கனடாவில் இருந்து வெளிவந்த ரோஜா என்னும் தமிழ் இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்து பலருடைய ஆக்கங்களை வெளியிட்டவர். வசதிகள் குறைந்த அந்தக் காலத்தில் இலக்கிய ஈடுபாடுகாரணமாக மிகச் சிறப்பாக அந்த இதழ்களை வடிவமைத்திருந்தார். எனது சிறுகதைகளும் சில அந்த இதழ்களில் வெளிவந்து பல வாசகர்களையும் சென்றடைந்தன. கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்திலும் ஆரம்பகாலத்தில் இவர் அங்கத்தவராக இருந்தார்.

எனது முதல் நாவலான ‘உறங்குமோ காதல் நெஞ்சம்’ என்ற போராட்ட சூழலில் எழுதப்பட்ட முதல் நாவலுக்கு, மிக அழகான அட்டைப்படம் வடிவமைத்துக் கொடுத்தது இவர்தான். முதல் பதிப்பு கனடாவிலும், இரண்டாவது பதிப்பு சென்னை, மணிமேகலைப்பிரசுர வெளியீடாகவும் வெளி வந்தது. மொன்றியலில் இருந்து வெளிவந்த இருசு பத்திரிகையின் ஆசிரியராக இவர் இருந்தபோது, இருசு பத்திரிகைக்குத் தொடர்கதை ஒன்று எழுதித்தரும்படி கேட்டிருந்ததால், ‘என்ன சொல்லப் போகிறாய்?’ என்ற தொடரை எழுதியிருந்தேன். பின்பு மணிமேகலைப் பிரசுரத்தால் அந்தத் தொடர் நூலாக வெளியிடப்பட்டிருந்தது. எனது சிறுகதைகள் சிலவற்றைத் தெரிவு செய்து, தானே குரல் கொடுத்து இசையும் கதையுமாக அலையோசை வானொலியில் ஒலிபரப்பியிருந்தார். ‘இங்கேயும் ஒரு நிலா’ என்ற தலைப்பில் அந்தக் கதைகள் ஒலிப்புத்தகமாக வெளிவந்தன. ஆரம்ப காலங்களில் ரோஜா இதழ், அலையோசை வானொலி, இருசு பத்திரிகை போன்றவற்றின் மூலம் மிகப்பெரிய அளவில் கனடிய தமிழ் வாசகர்களை எனக்கு உருவாக்கித்தந்த பெருமை நண்பர் ஆனந்திற்கும் உண்டு.

நல்ல இதயம் படைத்த நண்பரின் பிரிவுத் துயரில் அவரது குடும்பத்தவருடன் இணைந்து, கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பாக நாங்களும் பங்கு பற்றுகின்றோம். அவரது ஆத்மா சாந்தியடைய ஆண்டவனை வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்.

குரு அரவிந்தன்
தலைவர்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்.
14-6-2020


ரோஜா சஞ்சிகையின் பக்கம்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 18 July 2020 12:34