பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் 'பண்டைத் தமிழர் பண்பாடு' பற்றி........

Tuesday, 18 October 2016 19:16 - குரு அரவிந்தன் - குரு அரவிந்தன்
Print

குரு அரவிந்தன் - கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தினால் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் பண்டைத் தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு என்ற நூல் வெளியீட்டு விழாவில் 25-09-2016 தலைமை தாங்கிய எழுத்தாளர் குரு அரவிந்தனின் தலைவர் உரையில் இருந்து ஒரு பகுதி..-

இன்றைய விழாவின் நாயகரான பேராசிரியர் இ. பாலசுந்தரம் ஆவர்களே, என்றும் அவருக்குத் துணையாக நிற்கும் திருமதி விமலா பாலசுந்தரம் அவர்களே, இன்றைய நிகழ்ச்சியை முன்னின்று நடத்தும் டாக்டர் கதிர் துரைசிங்கம் அவர்களே, மற்றும் மேடையில் வீற்றிருக்கும் சான்றோர்களே, சபையோர்களே உங்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த மாலை வணக்கத்தை முதற்கண் தெவிவித்துக் கொள்கின்றேன். கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் பண்டைத்தமிழர் பண்பாடு – ஒரு புதிய நோக்கு என்ற நூல் வெளியீட்டு விழாவிற்கு கனடா தமிழ் எழுத்தாளர் இணையத்தின் சார்பில் தலைமை தாங்கும் சந்தர்ப்பம் இன்று எனக்குக் கிடைத்திருக்கின்றது.

‘ஈழத்தமிழரின் வரலாறு இலகு தமிழில் எழுதப்பட வேண்டும்’ என்ற மதிப்புக்குரிய  விபுலாந்த அடிகளின் கனவை, அண்ணாமலை கனடா வளாகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் திரு. இ. பாலசுந்தரம் அவர்கள் இன்று இந்த வரலாற்று நூலான பண்டைத் தமிழர் பண்பாடு என்ற நூலை வெளியிடுவதன் மூலம் நிறைவேற்றியிருக்கின்றார். இந்தப் புத்தகத்தை நான் இன்னும் முழமையாக வாசிக்கவில்லை. ஆனாலும் அட்டைப் படத்தைப் பார்த்த போது மிகப் பழைய காலத்து தமிழர் வரலாற்றைச் சொல்லும் ஒரு நூலாக இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்த நூலுக்கான மதிப்புரையை முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் எழுதியிருக்கின்றார். கடல் கோள்களால் அழிவுற்ற குமரிக்கண்ட நாடுகளைப் பற்றியும், மெசப்பெத்தோமிய, சுமேரிய நாகரிகங்களின் அடிப்படை வரலாற்றுக்கும் தமிழுக்கும் உள்ள தொடர்புகள் பற்றியும், தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்ந்தார்கள், அவர்களின் பாரம்பரியம் என்ன என்பன பற்றியும் இந்த நூல் எடுத்துச் சொல்வதை அடிக் குறிப்புகளைப் பார்த்த போது புரிந்து கொள்ள முடிகின்றது. தமிழ் மொழியின் தொன்மையையும், பண்டைத் தமிழர் வாழ்வியல் பற்றியும், தமிழ் எழுத்துக்கள் பற்றிய ஆய்வினையும், தமிழர்களின் இசையறிவு, கலையறிவு, சிற்ப அறிவு போன்றவற்றையும் இந்த நூலில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கின்றார். மிகப் பழமை வாய்ந்த நூல்களான கி.மு சுமார் 1000 வருடங்களுக்கு முற்பட்ட  தொல்காப்பியம், மற்றும் சங்க இலக்கியங்கள் போன்றவையே இது போன்ற நூல்கள் வெளிவருவதற்கு அடிப்படைக் காரணிகளாக இருக்கின்றன. தமிழர் இலக்கியம், தமிழர் வரலாறு போன்றவை இதுவரை காலமும் இந்தியா, இலங்கை , மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளிலேயே எழுதப்பட்டிருந்தன. இவைகளைவிட புலம் பெயர்ந்த மண்ணான கனடாவில் இருந்தும் தரமான வரலாற்று நூல்களை எழுதமுடியும் என்பதை இன்று பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் இந்த நூல் மூலம் நிரூபித்திருக்கின்றார். ஏற்கனவே பேராசிரியர் எழுதிய இடங்களைப் பற்றிய ஆய்வு நூலை வாசித்து வியந்திருக்கின்றேன். எனது ஊரான மாவிடபுரத்தைச் சுற்றியுள்ள பல கிராமங்களைப் பற்றிய அவரது ஆய்வுகள் மிகவும் முக்கியமானவை. குறிப்பாக தையிட்டி, மயிலிட்டி, மயிலப்பை போன்ற ஊர்களின் பெயர்கள் எப்படி வந்தன என்பதைத் தெளிவாக விளக்கியிருக்கின்றார். எதையும் ஆவணப்படுத்துவதில் எமது இனம் காட்டும் அலட்சியத்தால்தான் இன்று நாங்கள் முன்னேற முடியாமல் தவிக்கின்றோம். பாரம்பரியமாக வாழ்ந்த சொந்த மண்ணைவிட்டு அகதிகளாக விரட்டப்பட்டிருக்கின்றோம். இச் சந்தர்ப்பத்தில் எங்களுக்குத் தஞ்சம் தந்த கனடிய மண்ணுக்கு என்றென்றும் நன்றி உள்ளவர்களாக இருப்போம்.

எங்களிடம் தகுந்த ஆவணம் எதுவுமே இல்லாதுதான் எங்களுடைய பின்னடைவுக்குக் காரணமாகும். அடுத்த தலைமுறைக்கு விட்டுச் செல்ல இதுபோன்ற நூல்களைத் தவிர வேறு எதுவும் புலம் பெயர்ந்த எங்களிடம் இல்லை. எனவே இதுபோன்ற நூல்களின் அவசியத்தைத் தமிழர்களாகிய நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனவே கொழும்பு, யாழ்ப்பாண பல்கலைக் கழகங்களில் தமிழ்த்துறை பேராசிரியராகக் கடமையாற்றிய அனுபவம் கொண்ட பேராசிரியரின் பண்டைத் தமிழர் பண்பாடு என்ற இந்த நூல் இனி வரும் சமுதாயத்திற்கு முக்கியமான ஆவணமாக இருக்கும் என்பதை மறுக்க முடியாது.  எமது சரித்திரத்தை நாமே எழுதவேண்டும் இல்லாவிட்டால் திரிபுபடுத்தப்பட்டு எமது இனம் ஒன்றுமே இல்லாத இனமாக மாற்றப்பட்டுவிடும். அந்த வகையில் எமது சரித்திரத்தை நம்மவரே எழுதியதில் நாங்கள் பெருமைப் படுவோம். இந்நூல் சேக்கிழார் ஆராய்ச்சி மையத்தின் இவ்வாண்டிற்கான(2016) முதற் பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டு பரிசுத்தொகையாக 10,000 ரூபாவையும் http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=3173:2016-02-14-04-56-51&catid=28:2011-03-07-22-20-27&Itemid=54
,சான்றிதழையும் பெற்றது தமிழர்களுக்குப் பெருமை சேர்க்கும் விடயமாகும்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 18 October 2016 19:17