வாரம் ஒரு பறவை (1 - 4) மாம்பழக்குருவி!....

Tuesday, 08 December 2020 02:26 - வடகோவை வரதராஜன் - சுற்றுச் சூழல்
Print

வடகோவை வரதராஜன்எழுத்தாளர் வடகோவை வரதராஜன் அவர்கள் சிறுகதை, கவிதை மற்றும் கட்டுரை என இலக்கியத்தின் பல்வேறு தளங்களிலும் இயங்கி வருபவர். சூழற் பாதுகாப்பில் மிகுந்த ஈடுபாடு மிக்கவர். அவர் அண்மைக்காலமாகப் பறவைகளைப் பற்றி எழுதி வரும் கட்டுரைத்தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததொரு தொடர். வாரம் ஒரு பறவையெனப் பறவைகளை அறிமுகப்படுத்தி வருகின்றார். அவர் தனது முகநூற் கட்டுரைகளைப் பதிவுகள் இணைய இதழில் பதிவு செய்வதற்கு அனுமதித்துள்ளார்.  அவருக்கு எம் நன்றி. - வ.ந.கிரிதரன், பதிவுகள்.காம் -


வாரம் ஒரு பறவை (1) மாம்பழக்குருவி

இரண்டு வருடங்களுக்கு முன் மதிப்புறு நண்பர் Giritharan Navaratnam   அவர்களின் பதிவு ஒன்றில் நான் போட்ட பறவைகளைப் பற்றிய பின்னுட்டம் ஒன்றைப் பார்த்த நண்பர் கிரி, "நீங்கள் அறிந்த பறவைகளைப் பற்றி நீங்கள் கட்டாயம்  எழுதவேண்டும் " என்று அன்பு வேண்டுகோள் விடுத்திருந்தார் .பதிகிறேன் என ஒத்துக்கொண்ட நான் எனது வழமையான எழுத்துச் சோம்பலால் அதை எழுதவில்லை . அண்மையில்  நண்பி  J P Josephine Baba அவர்கள் பகிர்ந்த பறவையின் படமொன்றில் அப்பறவையின் பெயரை , நம்மவர்கள்  தப்புத் தப்பாக குறிப்பிட்டிருந்தைப் பார்த்து வேதனையடைந்தேன் . எமது வீடுகளில் கூடுகட்டி வாழும் 'பிலாக்கொட்டை'க் குருவி எனச் செல்லமாக அழைக்கப்படும் தேன்சிட்டைக் கூட நம்மவர்கள் அறிந்து வைத்திருக்கவில்லையே என்ற கவலை மேலோங்கியது . எனவே வாரம்தோறும் புதன் கிழமைகளில் நான் அறிந்த பறவைகளைப் பற்றி எழுதலாம் என ஆர்வமுற்றுள்ளேன் .

சிறு வயது தொடக்கம் பலவகைப் பறவைகளையும் விலங்குகளையும் செல்லப் பிராணிகளாக வளர்ந்தவன் என்ற ஒரே ஒரு தகுதிதான்  இப் பதிவை எழுத எனக்குள்ள தகுதியாகும். மற்றும்படி நான் பறவைகள் ஆராச்சியாளனோ பறவைகள்
அவதானிப்பாளனோ அல்ல .இப்பதிவை என்னை எழுதத் தூண்டிய நண்பர்  கிரிதரன் நவரத்தினம் , நண்பி    Malini Mala  ஆகியோருக்கு நன்றி கூறி தொடர்கிறேன் .

இலங்கையில் 223 வகை பறவைகள் வாழ்வதாக அவதானிக்கப் பட்டுள்ளது . இதில் 26 வகைப் பறவைகள் இலங்கைகே  உரித்தான பறவைகள் ஆகும் . இவற்றில் யாழ்ப்பாணத்தில் நான் கண்ட பறவைகளைப் பற்றிய பதிவே இது .

மாம்பழக்குருவி

மாம்பழக்குருவி

- மாம்பழக்குருவி -

யாழ்ப்பாணத்தில் பரவலாகக் காணப்படும் ஒரு அழகிய பறவையிது. தமிழ்நாட்டில் மாங்குயில் என அழைக்கப்படுகிறது . Black headed Orile என்ற ஆங்கில பெயரையும்    Oriolis Xanthous  என்ற விஞ்ஞானப்  பெயரையும் கொண்ட இப்பறவையே எல்லார் வீட்டு மரங்களிலும் கண்டிருப்பீர்கள் . மாம்பழ நிறத்தில் , கறுப்பு பட்டை கொண்ட இறக்கையுள்ள  இப்பறவையின் சொண்டு பவள நிறத்தில் இருக்கும் . ஏறத்தாளா மைனாவின் உருவத்தை ஒத்த தோற்றம் உடையது . ஆண் பறவை பிரகாசமான மஞ்சள் நிறத்துடன் இருக்க பெண் பறவை பிரகாசம் குன்றி இருக்கும் . இனப்பெருக்க காலத்தில் மிக இனிமையான குரலில் நீண்ட நேரம் பாடிக் கொண்டிருக்கும் . அத்தி , ஆல் அரசம் பழங்களே இதன் பிரதான உணவு ஆகும் . இடையிடையே சிறு பூச்சிகளையும் உணவாக கொள்ளும் . இதில் உள்ள சிறப்பு அம்சம் என்னவென்றால் இதை ஒரு போதும் நீங்கள்  தரையில் கண்டிருக்க முடியாது . மரக் கிளைகளிலேயே வாழ்க்கையை கழிக்கும் . குச்சு பொரித்திருக்கும்  காலத்தில் தன்னைவிட பலமடங்கு பெரிய காகத்தையே மூர்க்கமாகக்  கொத்தி , ஓட ஓட விரட்டும் . இந்த அழகிய மாம்பழக் குருவியையும் அதன் இனிய குரலையும் இரசிப்போம் நண்பர்களே .


வாரம் ஒரு பறவை  (02) :  பிலாக்கொட்டைக் குருவி

- ஆண் தேன் சிட்டு -

பூமரங்கள் , உங்கள் வீடுகளில் காணப்படுமாயின் கண்டிப்பாக இப்பறவை உங்கள் வீட்டிற்கு வருவதைக் கண்டிருப்பீர்கள் . அதிகாலை வேளைகளில் செவ்விரத்தம் பூக்களின் அடிப்பகுதியை ஊசி போன்ற தன்  அலகால் குத்தி தேன் குடிக்கும் ஊதா நிற தேன்சிட்டே  யாழ்ப்பாணத்தில் 'பிலாக்கொட்டைக்' குருவி என அழைக்கப்படுகிறது . ஒரு பெரிய பலாக்கொட்டை அளவே இருப்பதால் இது நம்மவர்களால் 'பிலாக்கொட்டைக்' குருவி என அழைக்கப் படுகிறது போலும் . தமிழில் ஊதா தேன்சிட்டு என அழைக்கைபடும் இப்பறவை ஆங்கிலத்தில் Purple sun bird என அழைக்கப்படுகிறது. இதன் விஞ்ஞானப் பெயர்      Cinnyris asiaticus ஆகும் .

மணிக்கு 50 தொடக்கம் 100 K M வேகத்தில் பறக்க கூடிய இப்பறவையில் உள்ள சிறப்பம்சம்  என்னவென்றால் இது பின்புறமாகவும் பறக்கக்கூடியது. அது மட்டுமல்ல பக்கவாட்டாக நிலைக்குத்தாக தலைகீழாக என பறத்தலில் பல சாகசம் காட்டிடக்கூடிய பறவையிது . அதுமட்டுமல்ல  ஒரே இடத்தில் பறந்து கொண்டே நிற்க கூடிய வல்லமை இதற்கு உண்டு . பின்புறமாக பறத்தல் , Humming bird  என்னும் இத் தேன் சிட்டுக்களுக்கு மாத்திரம் உள்ள சிறப்பியல்பாகும் .

இது பறந்து கொண்டே  பூவில் உள்ள தேனைக் குடிக்கும் . இதன் கால்கள் குச்சி போன்று வலுவற்று இருப்பதால் இதனால் நடக்க முடியாது . மரக்கிளைகளில் தங்க மட்டுமே இந்த கால்கள் உதவுகின்றன .

பிலாக்கொட்டைக் குருவி

- பெண் தேன் சிட்டு -

இப் பறவைகளில் ஆண் பெண் என்பன வெவ்வேறு வர்ணம்களில் காணப்படும் . ஆண் பறவை பளபளக்கும் மயில் கழுத்து ஊதா நிறத்தில் காணப்படும் . ஆணிற்கு வளைந்த நீண்ட சொண்டு  உண்டு  . பெண்பறவை ஆண் பறவையை விட சற்று சிறியது. சொண்டும் ஆண் பறவையை விட சற்று நீளம் குறைவாகவே காணப்படும் . பெண்பறவையின் முதுகுப்புறம் அழுக்குப் பச்சையும் மர நிறமும் சேர்ந்த மங்கல் நிறத்தில் காணப்படும் . அடிவயிறு மங்கலான மஞ்சள் நிறத்தைக் கொண்டது இதில் உள்ள இன்னுமோர் சிறப்பு அம்சம் உலகிலேயே சிறிய முட்டைகளை இடும் பறவைகளும் இத் தேன் சிட்டுக்கள்தாம் . உலகில் பெரிய முட்டையயை  , தீக்கோழி இட , உலகில் மிகச் சிறிய முட்டையை இவை இடுகின்றன . இவற்றின் கூடுகளை  மாதுளை , எலும்பிச்சை , தோடை போன்ற முள்ளு மரங்களில் தொங்கிக் கொண்டிருப்பதைக் கண்டிருப்பீர்கள் . கோடாலிப்பாம்பு எனப்படும் வேலிப் பாம்பில் இருந்து தனது குஞ்சுகளை பாதுகாக்கவே இது முள்ளு மரங்களில்  கூட்டை அமைக்கிறது . கூடுகள் ஒரு பெரிய தோடம்பழத்தின் அளவே இருக்கும் . இவை  சிலந்தி வலைகளைக் கொண்டுவந்து அதில் சருகுகள் , நார்கள் என்பவற்றை ஒட்டவைத்து  வினோதமான முறையில் கூடுகளை அமக்கின்றன . கூட்டின் வாசலில் மழை நீர் உள்ளே புகாமல் இருக்க  'சன் ஷேட்'(sun shade) போன்ற அமைப்பு காணப்படுகிறது . சிலந்தி பூச்சிகளின் முட்டைகளைப் பாதுகாக்க வட்டமாக  , பெரிய பொட்டுப் போன்ற கவசம் காணப்படுகிறது அல்லவா ,

அவற்றைக் கொண்டுவந்து கூட்டின் வெளிப்புறத்தில் ஒட்டி வைத்திருக்கும் . மேலோட்டமாகப்  பார்த்தால் இது பெரிய சிலந்திக் கூடு போன்று காணப்படும் . கூட்டின் உட்புறம்  பஞ்சு போன்ற மென்மையான பொருட்களால்  சொகுசு பண்ணப்பட்டு  இருக்கும் .

பெண்பறவை முட்டையிட்டுக் குஞ்சு பொரித்ததும்  குஞ்சுகளுக்கு உணவாக சிறிய பூச்சிகளை வேட்டையாடிக்கொண்டு வந்து ஊட்டும். குஞ்சுகள் வளர்ந்ததும் பெற்றோர்களைப்போலவே மலர்களைத்தேடிப் போய் தேனை உண்ணும் . தேனீக்களைப் போலவே மகரந்த சேர்க்கைக்கு இவை பெரிதும் உதவுவதால் , சுற்றுச்சூழல் அபிவிருத்தியில் இவை முக்கிய பங்காற்றுகின்றன .  காலை நேரத்தில் எமது செவ்வரத்தம் பூக்களில் தேன்குடிக்க  வந்து என்னைப் பரவசப்படுத்தும் பறவையிது . இரவில் அயலில் உள்ள பலாமரத்தில் தங்குகிறது . இரவு நேரங்களில் பெரிய வெடிச்சத்தம் கேட்டால் , அதனால் கலவரப்பட்டு , வீட்டு மின்விளக்கு வெளிச்சத்தை நோக்கி வீட்டிற்குள்  வந்து பறந்து திரியும் . இப்படி பறக்கும்போது சுவரில் மோதி  இறக்கைகளில் காயம் ஏற்படலாம் . இதனால் மின்குமிளை அணைத்து விட்டு இப்பறவையை பிடித்து சிறிய காட்போட் பெட்டியில்  அடைத்து வைத்திருந்து காலையில் பறக்க விடுவேன் . சில சமயம் எனது மோட்டார்  சைக்கிள் கண்ணாடியில் வந்தமர்ந்து , தனது விம்பத்தைப் பார்த்து அதனுடன் சண்டையிட்டுக்கொண்டிருக்கும் . சூழலை பசுமையாக்க  மகரந்த சேர்க்கைக்கு உதவிபுரிந்து ; நம் நந்தவனங்களையும்  அழகுபடுத்தும் இவழகிய  பறவையையும் அதன்  சுவீஈஈஈ   சு வீஈஈஈட்  எனப்பாடுகின்ற  அதன் குரலையும் இரசிப்போம் நண்பர்களே .


வாரம் ஒரு பறவை (3):  குக்குறுவான் அல்லது குக்குறுப்பான்

குக்குறுவான் அல்லது குக்குறுப்பான்

- குக்குறுப்பான் -

உங்கள் வீடுகளில் பழமரங்கள் இருக்குமாயின் நிச்சயம் இந்த பறவை உங்கள் வீட்டிற்கு வரும் . கிளிப்பச்சையும் மண்ணிறமும் கலந்த இப்பறவை வெய்யிலில் அலைந்து திரிவதில் உற்சாகம் காணுகிறது . மழைகாலத்தில் சோம்பித்திரிகிறது .இலங்கையில் இப்பறவையில் மூன்று வகை இனங்கள் காணப்பட்டாலும்  யாழ்ப்பாணதில் காணப் படுபவை குக்குறுவான் எனத் தமிழிலும் Brown headed Brabet என ஆங்கிலத்திலும் அழைக்கப்படும் இந்த

பச்சை மண்ணிறப் பறவையே ஆகும் .  இதன் விஞ்ஞானப் பெயர் Megalaima zeylanica  என்பதாகும். மைனாவைவிட சற்று பெரியதாகவும் புறாவை விட சற்று சிறியதாகவும் காணப்படும் இப் பறவை ஏறத்தாழ 27 cm நீளம் உடையது . தலை பெரிதாகவும் கழுத்தும் வாலும் குட்டையாகவும் காணப்படும். இதன் தலை , கழுத்து , மார்பு , பின்புறத்தின் மேற்பகுதி என்பன பழுப்பு நிறத்தில் காணப்பட  எஞ்சிய சிறகுப் பகுதி கிளிப்பச்சை நிறத்தில் காணப்படும் . கண்களைச்சுற்றி சொண்டின் அடிப்பாகம் வரை செம்மஞ்சல் வட்டம்  காணப்படுகிறது . அலகு பெரிதாகவும் தடிப்பாகவும்  செம்மஞ்சல் நிறத்திலும் இருக்கிறது . அலகுக்கு மேலே முக்குத்துவாரத்துக்கு அண்மையாக  பூனையின் மீசை மயிர்கள் போல ஐதான மயிர்கள் குத்திட்டு நிற்கின்றன . ஆல் , அரசு , அத்தி , மா , வாழை , கொவ்வை, யாம் மரம் ,  மஞ்சள்நுணா   என்பவற்றின் பழங்களே இவற்றின் பிரிய உணவாகும் .ஆல் , அரசு அத்தி போன்ற மரங்களின் வித்துக்களை எடுத்து நீங்கள் மண்ணில் போட்டால்  அவை முளைக்காது .ஒரு பறவையால் உண்ணப்பட்டு  பறவையின் சமிபாட்டு நொதியங்களால்  அருடப்பட்டு பறவை எச்சத்துடன் வந்தாலே இவை முளைக்கும் ஆற்றலைப் பெறுகின்றன . அந்தவகையில் ஆல் , அரசு அத்தி , மஞ்சள்நுணா , யாம் மரம் ஆகியவற்றின் பரவலுக்கு குக்குறுவான் பெரிதும் உதவி செய்கிறது .

இப்பறவையின் வெளித் தோற்றத்தில் ஆண் பெண் வித்தியாசத்தை கண்டு பிடிக்க முடியாது . பெண் பறவை பட்ட  மரங்களில் பொந்து அமைத்து அதில் இரண்டு தொடக்கம் நாலுவரை முட்டையிடுகிறது . ஆண் பெண் பறவைகள் மாறி மாறி அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகளுக்கு தாய் ,தந்தை ஆகிய இரு பறவைகளுமே உணவூட்டி  வளர்க்கின்றன . வசந்த காலத்தில் ஒரு பறவை கூவல் எழுப்ப பல திசைகளில் இருந்தும் பல பறவைகள் இதற்கு போட்டியாக கூவல் எழுப்புவதை அவதானிக்க முடியும் . மற்றைய பறவைகள் எல்லாம் இறக்கையை மேலும் கீழும் அடித்து பறக்க , இப்பறவை சில சமயம் இறக்கையை சுருக்கி விரித்து அம்பு போல்  பறப்பதை நான் அவதானித்து வியந்துள்ளேன் . பழங்களை உண்டு விதைகளைப் பரப்பி மரங்கள் உருவாக்கத்திற்கு அரும்பணி ஆற்றுகின்ற இப்பறவையையும் இதன்  'குட்டூ --குட்டூக்' என்ற பெரிய தொனிக் கூவலையும் இரசிப்போம் நண்பர்களே .


வாரம் ஓர் பறவை அறிவோம் (4): புலுனி  அல்லது தவிட்டுக்குருவி

புலுனி  அல்லது தவிட்டுக்குருவி

- புலுனி  அல்லது தவிட்டுக்குருவி -

யாழ்ப்பாணத்தில் புலுனி என்றும் , தமிழ் நாட்டில் தவிட்டுக்குருவி அல்லது பண்டிக் குருவி அல்லது வெண்தலைச் சிலம்பன் என அழைக்கப்படும்  இந்த சிறு பறவையை நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள் . எந்த நேரமும் கீச் கீச் என கெச்சட்டமிட்டு இரைச்சல் எழுப்புவதால் இதை ஆங்கிலத்தில் Babbler என்றும் ஏழு பறவைகள் கொண்ட சிறு கூட்டமாக திரிவதால் Seven sisters என்றும் அழைக்கப்படுகிறது . இதன் விஞ்ஞானப் பெயர் Turdoides affinis ஆகும் .

சிறு கூட்டமாக திரியும் இப்பறவைகள் ,மைனாவின் பருமன் உள்ளவை. களிமண் நிற உடலையும் , செம்பழுப்பு நிற அலகையும் , உருவத்திற்கு பொருத்தமில்லாத குண்டூசியின் தலையளவே உள்ள கண்களையும் கொண்டுள்ளன .  சருகுகளைக் கிளறி அதன் கீழ் காணப்படும் பூச்சி புழுக்களையும் உண்ணும்  இப்பறவைகள்  உங்கள் வீட்டு அடுக்களையின் கதவு , சாரளங்கள் திறந்திருந்தால் உரிமையுடன் உள்ளே நுழைந்து உங்கள் உணவுப் பொருட்களை   உணக்கூடியவை. புலுனிகள் , மனிதனை அண்டிவாழவே பிரியப்படுகின்றன .

எனது வீட்டுக்கு இந்த விருந்தாளிப் பறவைகள் ஒவ்வொருநாளும் வருவார்கள் . முற்றத்தில் தத்தி தத்தி , நாய்க்கு வைத்த மீதி உணவை கொத்தித் தின்பார்கள். ஒர்முறை முற்றத்தை கூட்டிவிட்டு , வெளியே போய்விட்டு வந்து பார்த்தால் , வீட்டு பீலியின் கீழே தரையில் பழைய சருகுகள் கொட்டிக்கிடந்தன . இது யார் செய்த வேலை என புறுபுறுத்தபடி திரும்ப முற்றத்தைக் கூட்டி குப்பைகளை அள்ளினேன் . அடுத்தநாளும் இதே வேலை நடைபெற்று இருந்தது . மூன்றாம் நாள் வெளியே போகாமல் இந்த களவைப் பிடிக்கக் காத்திருந்தேன். பத்து மணிவாக்கில் இந்த ஏழு சகோதரிகள் வந்தார்கள் .பறந்து பீலியில் அமர்ந்து கீச் கிச்சு என சலம்பியபடி பீலிச் சருகுகளை கிளறி கீழே தள்ளி விட்டுக்கொண்டே அதனுள் இருந்த புழு பூச்சிகளை பொறுக்கினார்கள். சரி , பீலி துப்பரவாக்குகிற வேலை நமக்கு மிச்சம் என்று அவைகளின் சலம்பல்களை இரசிக்க தொடங்கினேன் . இவற்றில் உள்ள இன்னுமோர் சிறப்பு அம்சம் , இவைகளுக்கும் அணில்பிள்ளைகளுக்கும்  இருக்கும் கூட்டு.

எங்கே புலுனியை நீங்கள் கண்டாலும் ,பக்கத்தில் அணில் பிள்ளைகளையும் காணலாம் . அடுக்களையின் வந்து உணவு உண்பதில் கூட்டுக் களவாணிகளாகவே இவைகள் செயற்படுவார்கள் , ஆபத்துக்கள் , எதிரிகளை கண்டால் ஒருவருக்கு ஒருவர் குரல் மூலம் எச்சரிக்கை செய்து தற்காப்பு எடுப்பார்கள். இராமாயண காலம் தொட்டு இந்த நட்பு  நீடிக்கிறது . இராமர் இலங்கைக்கு வர வானரங்கள் உதவியுடன் பாலம் கட்டியபோது ,அணில்பிள்ளையும் சிறுக சிறுக மண் எடுத்து போட்டதாம் .புலுனி மணல் குளித்து வந்து பாலத்தடியில் வந்து இறக்கைகளை உதற அதில் ஒட்டியிருந்த மண் துணிக்கைகள் பாலத்தில் சிதறுமாம்.

இவைகளின் இந்த கருதலான  வேலைகளைப் பார்த்த இராமபிரான் , அணில் பிள்ளையை வாஞ்சையுடன் தன் மூன்று விரல்களால் தடவிக் கொடுத்தாராம் , அதனால் ஏற்பட்டதே அணில் பிள்ளையின் முதுகில் உள்ள மூன்று கோடுகள் . இவ்வாறே புலுனியை , தன் சேற்றுக் கரங்களுக்குள் பொத்தி அணைத்துக்கொண்டாராம். அதனால் ஏற்பட்டதே புலுனியின்  களிமண் நிறம் . இந்த கர்ண பரம்பரைக் கதையை நீங்களும் கேள்விப் பட்டிருப்பீர்கள் .

ஒன்றுக்கு ஒன்று போட்டியில்லாமல் , ஒன்றுக்கு ஒன்று அனுசரணையாக வாழும் இந்த பறவைக்கும் , விலங்குக்குமான நட்பை பற்றி பிரபல்ய  சூழலியலாளர் Amrith Ayem   அவர்களும் தனது கட்டுரை ஒன்றில் வியந்து குறிப்பிடுகிறார் . மனிதனை அண்டி வாழும் இப்பறவைகள் பற்றி Ranjakumar somapala   தனது கோசலை கதையிலும் ,புதுவை இரத்தினதுரை தனது பூவரசு வேலிகளும் புலுனிக்குஞ்சுகளும் என்ற கவிதையிலும்  குறிப்பிடுகிறார்கள் . அதிக தூரம் பறக்காத இந்த சோம்பேறி பறவை தரையிலேயே தன் அதிக நேரத்தைக் கழித்தாலும் , இதனால் நடக்க முடியாது .  இவற்றில் ஆண் பெண் பறவைகளை வெளித்தோற்றத்தில்  வித்தியாசம் கண்டு பிடிக்க முடியாது . பங்குனி தொடக்கம் வைகாசி மாதம்  வரையிலும் பின் , ஐப்பசி தொடக்கம் கார்த்திகை மாதம் வரையிலும்   , பூவரசு , மஞ்சநுணா  ஆகியமரங்களில்  சிறு தும்புகள் கொண்டடு வட்டவடிவான கூடுகளை அமைத்து இவை இரண்டு தொடக்கம் மூன்று முட்டைகளை இட்டு அடைகாத்து குஞ்சு பொரிக்கின்றன . இவற்றின் முட்டைகள் கடும் நீல நிறத்தில் பார்க்க மிக அழகாய் இருக்கும் .

சில சமயம் இந்த பறவைகள் எனது வாழைக் குலையின் இரண்டு சீப்புகழுக்கிடையில் தமது கூட்டை  அமைத்து விடுகின்றன . இதனால் குலை முற்றும்போது அறுவடை செய்யமுடியாமல் பல வாழைக் குலைகளை அப்படி விட்டிருக்கிறேன் . Santhan sargunam  பறவைகளைப் பற்றி பதியும் போது அவற்றின் கூடுகளின் படத்தையும் பகிருங்கள் என கேட்டிருந்தார் . அவர் போன்ற ஓவிய படப்பிடிப்பாளன் என்னுடன் இருந்தால் யாழ்ப்பாண பறவைகளின் கூடுகள் , அவற்றின் முட்டைகள் , குஞ்சுகள் , போன்றவற்றைப் பற்றி ஓர் அற்புதமான தொகுப்பை என்னால் தரமுடியும் .  அண்மையில் வாஸ்துசாஸ்திரம் தெரிந்த நண்பர் ஒருவரைச் சந்தித்தேன் . புலுனி , அடைக்கலம் குருவி என்பன எவ்வித தயக்கமும் இன்றி ஒரு வீட்டிற்க்குள் வந்து போகுமாயின் அவ் வீட்டில் எவ்வித கெட்ட சக்திகளும் இல்லையென்றும் , ஆந்தை , வௌவால் என்பன அந்த வீட்டில் குடியிருக்குமாயின் அவ் வீட்டில் தீயசக்திகள் இருக்கும் என்றும்  கூறினார் . உங்கள் வீட்டு முற்றத்துக்கு வந்து சலம்பித் திரியும் இந்த ஏழு சகோதரிகளை பார்த்து இரசியுங்கள் நண்பர்களே .

[தொடரும் ]

Last Updated on Tuesday, 15 December 2020 10:02