சூழற் பாதுகாப்பு: பூவரசங்குளம் பிரதேசத்தில் காடழிப்பு!

Wednesday, 04 November 2015 23:38 - கவரிமான் - சுற்றுச் சூழல்
Print

பூவரசங்குளம் பிரதேசத்தில் காடழிப்பு!வவுனியா மாவட்டம் பூவரசங்குளம் - வன்னிவிளாங்குளம் வீதியானது, வவுனியா - மன்னார் - முல்லைத்தீவு ஆகிய மூன்று மாவட்டங்களுக்கும் பயணிக்கக்கூடிய மிகவும் முக்கியமான போக்குவரத்து வீதியாகும். வன்னித்தொகுதி என்று அழைக்கப்படும் இம்மூன்று மாவட்டங்களையும் இணைக்கும் இத்தரைவழிப்பாதையின் மையப்புள்ளியாக பூவரசங்குளம் எனும் கிராமம் அமையப்பெற்றுள்ளது. செழிப்பு மிகுந்த வனாந்தரக் காடுகளை ஊடறுத்துச் செல்லும் பூவரசங்குளம் - வன்னிவிளாங்குளம் வீதியை அண்டிய காட்டுப்பகுதிகளிலும், பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்தின் ஆளுகைக்குள்பட்ட பகுதிகளிலும் சட்டவிரோத தனிமனித காடழிப்பு நடவடிக்கைகள் பொலிஸாரின் ஒத்துழைப்போடு அசுர வேகத்தில் இடம்பெற்று வருகின்றன. பல இலட்சம் ரூபாய்கள் பெறுமதி வாய்ந்த பாலை, முதிரை, கருங்காலி மரங்கள் இக்காட்டுப்பகுதிகளிலிருந்து ஒவ்வொரு இரவும் பொலிஸாரின் பாதுகாப்போடு மூன்று மாவட்டங்களுக்கும் எண்ணிக்கை கணக்கின்றி விற்பனைக்காக அனுப்பப்படுகின்றன.

இது தொடர்பில் கந்தன்குளம் கிராம பொதுஅமைப்பு ஒன்றின் பிரதிநிதி தகவல் தருகையில், பூவரசங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள அனைத்து கிராமங்களின் மக்களுக்கும் நன்கு பரிச்சயமான ‘வீரப்பன், காட்டு ராசா, காட்டு அரசன்’ என்ற பட்டப்பெயர்களால் அழைக்கப்படும் ஒரு சில நபர்களே, காடழிப்பை ஒரு தொழிலாக (பிசினஸ்) செய்து வருவதாகவும், அவர்களிடம் பணம் மற்றும் குடி வகைகள், போதைப்பொருள்களை இலஞ்சமாக பெற்றுக்கொண்டு பொஸிஸார் இவ்வாறான சட்ட விரோத காடழிப்பு நடவடிக்கைகளுக்கு சம்மதம் வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த நபர்கள் காடுகளை அழித்துக்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில், தாம் ஒரு சமுக அக்கறையோடு பூவரசங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தொலைபேசியில் தகவல் கொடுத்தால்… பொலிஸார் அடுத்த நிமிசமே, காடுகளை அழித்துக்கொண்டிருக்கும் அந்த நபர்களுக்கு போன் பண்ணி, ‘இன்ன நம்பரில இருந்து, இன்னாள் உங்களப்பத்தி முறைப்பாடு செய்யது. பார்த்து செய்யுங்க. கவனம். ஆளையும் கவனிச்சு வையுங்க’ என்று அறிவுறுத்துவதாகவும், காட்டிக்கொடுப்பதாகவும் குறைபட்டுக்கொண்டார்.

குறித்த நபர்கள் குஞ்சுக்குளம், நவ்வி காடுகளை மொட்டையடித்தது போல அரிந்து வழித்துத் துடைச்சு எடுத்து விட்டனர் என்று ஆதங்கப்பட்டுக்கொண்ட அவர், சிலவேளைகளில் தாம் தகவல் கொடுத்து பம்பைமடு வன இலாகாவினர் காடழிப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் குறித்த நபர்களை கையும் களவுமாக பிடிப்பதற்காக விரைந்து வந்தால், ‘வன இலாகாவினர் வருகின்றனர்’ என்று பொலிஸாரே உன்னிப்பாக காவல் இருந்து தகவல் கொடுத்து குறித்த நபர்கள் தப்பித்து ஓட நன்றாகவே வேலை பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

கவனியாதோர் கவனத்துக்கு:

நீடித்து நிலைத்திருக்கக் கூடிய அபிவிருத்திக்கு மிகவும் பிரதானமானதும் அத்தியாவசியமானதும் மரம் (காடு) ஆகும். இன்று இந்த சமுகத்தில் சீவிப்பவர்கள் நாளைய தமது சந்ததிக்காக சிரத்தையோடு பொத்திப்பொத்தி பாதுகாத்து கையளிக்க வேண்டிய அருமருந்தன்ன வளங்களில் காடே முதன்மையானது. 

தென்னிலங்கையிலிருந்து வந்து வடக்கில் வேலை பார்க்கும் பொலிஸாரிடம் இத்தகைய சமுக நலச்சிந்தனையை நாம் எதிர்பார்க்க முடியாது. மரம் போனால் என்ன? மழை போனால் என்ன? கிராமங்கள் தரிசு நிலங்கள் ஆனாலென்ன? மனுசர்கள் செத்து பிழைத்தாலென்ன? தமிழ் இனத்தின் நாளைய சந்ததிகளின் வளமான வாழ்க்கை பற்றி, இருப்பு பற்றியெல்லாம் சிங்கள இனப்பொலிஸார் கரிசனையோடு தொழில்படுவர் என்று எதிர்பார்ப்பது சுத்த முட்டாள்தனமாகும்! 

இத்தனைக்கும் வன்னித்தேர்தல் தொகுதியில் தமிழ் மக்கள் தமது அரசியல் பிரதிநிதிகளாக தெரிவுசெய்த தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சார்பில் 05 பாராளுமன்ற உறுப்பினர்கள், 02 வடக்கு மாகாண அமைச்சர்கள், 11 வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களாவது சமுக அக்கறையோடு தொழிற்படுவார்களா? என்பதே ‘சூழல் பாதுகாப்பு, நாளைய தமிழ்ச்சமுகத்தின் இருப்பு’ தொடர்பில் கவலைகொள்ளும் ஒவ்வொரு தமிழரினதும் கேள்வியாக இருக்கின்றது.

-கவரிமான்-
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 04 November 2015 23:59