அம்மா வந்தாள் புதினத்தில் மீறல்கள்

Monday, 18 January 2021 09:20 - முனைவர் கி. இராம்கணேஷ், உதவிப்பேராசிரியர்- தமிழ்த்துறை, ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி, பொள்ளாச்சி- 642 107 - ஆய்வு
Print

முன்னுரை
முனைவர் ராம்கணேஷ்1966- ஆம் ஆண்டு வெளியான தி. ஜானகிராமனின் அம்மா வந்தாள் புதினம் அன்றைய காலத்தின் ஆசாரங்களைப் பின்பற்றும் அந்தணக் குடும்பமொன்றில் நடைபெறும் வித்தியாசமான  வாழ்வியலை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. சமூக கட்டுகளை உடைத்தெறிந்து விட்டு நுட்பமான பார்வையில் எதார்த்தத்தை அப்படியே பிரதிபலிக்கும் நிலையில்  புதினம் அமைந்துள்ளது. ஒளிவு மறைவின்றி கதாபாத்திரங்களின் மனநிலைகளை ஆர்ப்பாட்டமில்லாமல் விறுவிறுப்பாக பதிவு செய்துள்ளது. ஐம்பதாண்டுகளுக்கு முன்பாக இப்படியொரு புதினம் வெளிவந்திருப்பது வியப்பில் ஆழ்த்துகிறது. தி. ஜானகிராமனின் 'மோகமுள்', 'மரப்பசு' உள்ளிட்ட பிற படைப்புகளும் வேறுபட்டதொரு கதைக்களத்தைக் கொண்டு விமர்சனங்களுக்கு உள்ளாகும் நிலைகளில் அமைக்கப்பட்டிருக்கிறது.

கதைச்சுருக்கம்
அப்பு என்ற வேதம் படிக்கும் ஒருவனின் குடும்பத்தை மையமிட்டதாக புதினம் அமைந்துள்ளது. சிறுவயதில் கணவனை இழந்த பவானியம்மாள் என்பவரின் வேதபாடசாலையில் சுந்தர சாஸ்திரிகளிடம் படிக்கும் அப்பு, பதினாறு ஆண்டுகள் படிப்பு முடிந்து தன் சொந்த ஊருக்குச் செல்லத் தயாராகிறான். பவானியம்மாளின் தம்பி மகள் இந்து, தாய் தந்தையை இழந்தவள். கணவனையும் இழந்து தன் அத்தையுடன் வசித்து வருகிறாள். கல்யாணமென்றால் என்னவென்று அறியாத வயதில் அவள் வாழ்க்கை தொடங்குகிறது. சிறிது காலத்தில் கணவன் இறந்துவிட திரும்பி விடுகிறாள். நீண்ட காலத்திற்கு முன்பிருந்தே அப்புவின் மீது கொண்ட காதலை வெளிப்படுத்துகிறாள். வேதங்களைக் கற்று பெரியாளாக வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் அப்புவுக்கு அவள் மேல் ஆசையிருக்கிறது. இருப்பினும் வெளிக்காட்டாமல் மறுக்கிறான். இந்து ஒதுங்கிச் செல்லும் அப்புவிடம் அவன் தாயின் நடத்தையைப் பற்றிப் பேசி விடுகிறாள். கோபம் கொண்டான் அப்பு. மறுநாள் பவானியம்மாளிடம் சொல்லிக் கொண்டு ஊருக்குச் செல்கிறான். இரயில் பயணத்தில் இந்து தன் தாயைப் பற்றிச் சொன்னதைச் சிந்திக்கிறான்.

வீட்டுக்குச் சென்ற நேரத்தில் தம்பி கோபுவைப் போல் சிவசு என்ற நிலக்கிழார் அமர்ந்திக்கிறாh.;. அப்பா தண்டபாணி, அம்மா அலங்காரத்தம்மாள் உடன்பிறப்புகள் எல்லோரும் இருக்கிறார்கள். சில நாட்களில் சிவசு அடிக்கடி வீட்டுக்கு வருவதை அப்பு கவனிக்கிறான். இந்து சொன்னதின் உண்மை விளங்கிவிடுகிறது. அப்பா தண்டபாணியின் மேல் கோபம் வருகிறது. அவர் ஊரிலுள்ள பெரிய மனிதர்களுக்கெல்லாம் வேதம் சொல்பவர். எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். கல்லூரியில் பேராசிரியர் பணியிலிருக்கும் அண்ணன் கிருஷ்ணன், எந்நேரமும் அடுக்களையில் இருக்கும் அண்ணி, தம்பிகள் கோபு, வேம்பு. தங்கை காவேரி எல்லோருடைய செயல்பாடுகளும் சிவசு நீண்ட காலமாய் வீட்டிற்கு வந்து செல்பவர் என்பதை உணர்த்தி விடுகின்றது. மற்ற பிள்ளைகளை விட தன் மீது பாசம் வைத்திருக்கும் அம்மாவின் செயல்பாடு புதிராக இருக்கிறது. அப்புவுக்கு அங்கு இருக்கப் பிடிக்கவில்லை. ஒன்றிரண்டு மாதங்கள் கழிந்த பின்னர் பவானியம்மாளுக்கு உடல் நிலை சரியில்லை என்ற கடிதம் கண்டவுடன் திருச்சி செல்ல பெற்றோரிடம் அனுமதி பெறுகிறான். வழியில் திருமணமாகி சேலத்தில் வசிக்கும் விசாலம் அக்காவின் வீட்டுக்குச் செல்கிறான். அங்கும் அம்மாவின் நடத்தையைப் பற்றிய செய்தியைத் தெரிந்து கொள்ள நேர்கிறது. திருச்சி சென்றவுடன் பவானியம்மாள் வேதப் பள்ளியை நிர்வகிக்கும் பொறுப்பை அப்புவிடமும் இந்துவிடமும் ஒப்படைக்கிறாள். சுந்தர சாஸ்திரிகள் வயோதிகம் அடைந்துவிட்டபடியால் அப்புவை மாணவர்களுக்கு வேதம் கற்பித்துத்தரச் சொல்கிறார் பவானியம்மாள். ஒருநாள் அலங்காரத்தம்மாள் திருச்சி வருகிறாள். அப்புவை வீட்டுக்கு அழைக்கிறாள். அப்பு வர மறுக்கிறான். அலங்காரத்தம்மாள் தன் பாவம் தொலைய காசி செல்வதாகக் கூறிவிட்டு இரயிலேறி சென்று விடுகிறார். இவ்வாறாக புதினம் அமைந்துள்ளது.

அப்பு
நாவல்: அம்மா வந்தாள்புதினத்தின் நாயகனான அப்பு வேதம் படித்துத் தேர்ச்சி பெற்றவன். பதினாறு ஆண்டுகள் வேதத்தைக் கற்ற காலங்களில் சிலமுறை மட்டுமே பெற்றோரிடம் சென்றிருக்கிறான். காவிரிக்கரையோரமும் வேதமும் அப்புவுடன் இரண்டறக் கலந்துவிட்ட சூழலை உணரமுடிகிறது. படிப்பு முடிந்து சொந்த வீட்டுக்குச் சென்றபோது ஒரு விருந்தாளி போல் நடத்தப்படுகிறான். விருந்தாளி போல் அப்புவும் நடந்துகொள்கிறான். வீட்டிற்கு சிவசு வருவது இவனுக்கு ஆரம்பத்தில் தெரியாது. இந்துவின் மூலமாக ஏற்கனவே அம்மாவைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறான். தன் தம்பியான கோபுவைப் பார்க்கும் போது சிவசுவைப் போல் தெரிவதன் மூலம் அம்மாவின் நடத்தையை அறிந்து கொள்ள நேர்கிறது. தந்தையான தண்டபாணி ஏன் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளவில்லை என எண்ணும் போது கோபம் வெளிப்படுகிறது. இருந்தாலும் தந்தையிடம் இதைப் பற்றிக் கேட்கவில்லை. ஒரேயொரு முறை மன்னியிடம் கேட்கிறான் சரியான பதில் கிடைக்கவில்லை. இந்து தன்னை விரும்புவதாகச் சொல்ல அவளை சட்டை செய்யாதவனாக இருக்கிறான். இந்துவின் மேல் அவனுக்கு உள்ள காதலை  வெளிப்படுத்தவில்லை. அவள் நெருங்கி வரும்போது விலகிச் செல்பவனைப் போல் சில நேரங்களில் நடந்து கொள்கிறான். தன் மீது அன்பு வைத்திருக்கும் தாயிடம் சிவசுவைப் பற்றிக் கடைசி வரை கேட்காமலேயே விட்டுவிடுகிறான். பவானியம்மாள் வேதப்பள்ளியை நிர்வகிக்கக் கேட்கும் போது பெற்றோரின் அனுமதியைப் பெறாமலேயே ஒத்துக்கொள்கிறான்.

அலங்காரத்தம்மாள் ஊருக்குக் கிளம்பலாம் எனச் சொல்லும் போது வரமறுக்கிறான். அலங்காரத்தம்மாள் அதனாலேயே காசிக்குச் செல்வதாகக் கூறுவதை அறியமுடிகிறது. அம்மாவைத் தடுத்து நிறுத்த பெரிய முயற்சியை அப்பு எடுக்கவில்லை. அம்மாவை வழியனுப்பிவிட்டு வரும்போது இந்து அம்மாவின் அழகைப் பற்றிப் பேச, ' அழகா இருந்தா. ரொம்ப கஸ்டம் இந்து' என்கிறான். காசிக்குப் போகிற அம்மாவை நினைத்து கடவுளிடம் வேண்டிக் கொள்கிறான்.

தண்டபாணி- அலங்காரத்தம்மாள்
பத்திரிகை அலுவலகமொன்றில்  ப்ரூப் ரீடர் வேலை பார்க்கிறார் தண்டபாணி. அங்கு கௌரவமாக நடத்தப்படுகிறார். மாலை வேளைகளில் நீதிபதி உள்ளிட்ட பெரிய பெரிய மனிதர்கள் தரையில் அமர்ந்திருக்க இவர் இருக்கையில் இருந்து கொண்டு வேதம் சொல்லித் தருவார். அவர்களும் பயபக்தியுடன் மாணவர்கள் போல் அமர்ந்து கேட்பர். வீட்டுக்கு வந்து விட்டால் அலங்காரத்தம்மாளிடம் அப்படியே அடங்கிவிடுவார். மூன்றாவது பிள்ளையான அப்பு பிறந்ததிற்குப் பின்னர், அவர் படுக்கை வீட்டுக்குள்ளிலிருந்து மாடிக்கு மாறியது. மற்ற நான்கு பிள்ளைகளின் பிறப்பு கடவுளுக்கு மட்டும் வெளிச்சம், மற்றவர்களுக்கு இலைமறைகாய்.

அலங்காரத்தம்மாள் பேருக்குத் தகுந்தாற்போல் இருந்தார். வீட்டின் பிடி முழுவதும் அவர் வசமிருந்தது. கோயிலுக்குச் செல்லுதல், இன்னபிற ஆசாரங்கள் இருந்தாலும் சிவசு என்ற ஓரிடத்தில் சறுக்கி விடுகிறார். கணவரான தண்டபாணி உடலளவிலாவது அலங்காரத்தம்மாளைக் கட்டியாண்டுவிடவேண்டுமென்று நினைப்பது, அலங்காரத்தம்மாளின் பெயரை ' அலங்காரமாம் அலங்காரம் தேவடியாளுக்கு வைக்கிறாற்போல!' என மனதில் நினைப்பது, கடந்த காலத்தை நினைத்து ஏங்குவது வியப்பில் ஆழ்த்துகிறது. வேதம் படித்தவர், பிறருக்கு ஜாதகம் பார்த்துச் சொல்பவர் என்ற நிலையிலிருந்தும் அடங்கியிருப்பது, தனக்கு ஜாதகத்தின் மேல் நம்பிக்கையில்லை எனச் சொல்வது அவரை விந்தையான கதாபாத்திரமாக முன்னிறுத்துகிறது. மனைவியைக் கண்டித்ததாகவோ, வெறுப்பைக் காட்டியதாகவோ ஓரிடத்திலும் இல்லை. அதற்கான காரணம் எங்கும் வெளிப்படவில்லை.

அலங்காரத்தம்மாள் முழுமையான ஆளுமை கொண்ட பெண்ணாக விளங்குகிறார். அப்புவை வேதப்பள்ளியில் சேர்த்து மிகப் பெரிய கனபாடியாக உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் பதிந்து கிடக்கிறது. தண்டபாணி மூலமாக திருச்சியில் வேதப்பள்ளியில் சேர்க்கக் காரணமாக விளங்குகிறார். பொருளுக்காக சிவசுவிடம் பழகுவது போல் தெரியவில்லை. அப்பு வேதம் படித்து வீட்டிற்கு வந்த நாளில் அப்புவுக்கு சிவசு கொடுத்த பணத்தை ஏற்க மறுப்பதிலிருந்து தெரிய வருகிறது. எல்லோரும் விரும்பும் அழகு கொண்டவராகவே அலங்காரத்தம்மாள் படைக்கப்பட்டிருக்கிறார். ஏழு பிள்ளைகள் பெற்றிருந்தாலும் மூன்றாவதாகப் பிறந்த அப்புவைக் கடைசிப் பிள்ளை எனச் சொல்வதின் மூலம் அப்புவோடு தண்டபாணியின் தந்தை நிலை நிறைவடைவதை அறிய முடிகிறது. சிறுவயது முதலே மற்ற பிள்ளைகளிடம் காட்டாத அன்பு, அப்புவிடம் மட்டும் காட்டப்படுகிறது தன்னுடைய வேறொரு வாழ்க்கை அப்புவுக்கு மட்டும் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவும் தன் பாவம் தீர்க்கும் பிள்ளை என நினைத்து, தன் நடத்தை தெரியக்கூடாது என நினைத்ததாகத் தோன்றுகிறது. அப்பு வேதபாடசாலையை விட்டு வரமாட்டேன் எனக் கூறும்போது, அலங்காரத்தம்மாள், ' ஒண்ணு பிள்ளையோட கண் முன்னாலெ செத்துப் போகணும். இல்லேன்னா காசியிலே செத்துப் போகணும். நீ ஒண்ணுதான் என் பிள்ளைனு நினைச்சுண்டிருந்தேன். நீ ரிஷியாயிட்டே, உன் காலில் விழுந்து எல்லாத்தையும் பொசுக்கிண்டு விடலாம்னு நினைச்சேன்' எனச் சொல்வதிலிருந்து அப்புவைப் பிள்ளையாகவும் தெய்வமாகவும் பார்த்த நிலையை அறிய முடிகிறது. சிவசுவிடம் பழகுவது தவறு என்று அலங்காரத்தம்மாளுக்குத் தெரிந்திருந்தும் அதைக் கைவிடாமல் இருப்பதற்கான காரணத்தை அறியமுடியவில்லை.

அப்பு சென்னையிலிருந்த போது தண்டபாணி ஒரு பெண்னைப் பார்த்து வைத்திருந்தார். அப்பெண்ணின் தாய் அவளின் தந்தையை விடுத்து சேட்டு ஒருவரிடம் பழகியவள் என்ற காரணத்தால் அவள் வேண்டாம் எனச் சொல்வது அலங்காரத்தம்மாளின் வேறுபட்டதொரு மனநிலையைக் காட்டுகிறது. அப்புவிடம் கணவரான தண்டபாணியைப் பற்றிச் சொல்கையில், ' அது ஞான சூரியன். கருணாமூர்த்தி. என்னைக் கருக்கிப் போடாம இருந்துதே இத்தனை நாளா! அதுவே பெரிசு' எனக் கூறும்போது, அப்படிப்பட்ட கணவனுக்கு ஏன் துரோகமிழைத்தார் எனச் சந்தேகம் எழுகிறது.

பவானியம்மாள்- இந்து
சிறுவயதிலேயே வாழ்விழந்த பவானியம்மாள் வேத பாடசாலை நடத்தி வருகிறார் . தன்னைப் போன்றதொரு நிலை தன் தம்பி மகளான இந்துவிற்கு வந்தபோது வருந்துகிறார். அப்புவுக்கு இந்துவை மணமுடிக்க வேண்டும் என்ற எண்ணம் பேச்சாக வெளிப்படவில்லையென்றாலும் சிற்சில செயல்பாடுகளில் இந்துவுக்கு ஒரு துணையாக அப்பு வேண்டும் என்பது தெளிவாகிறது. இளமைக்குரிய எந்த இன்பத்தையும் அனுபவிக்காத பவானியம்மாள், இந்துவிற்கு அப்படியொரு நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் கவனமாக இருந்ததாகத் தெரிகிறது. அப்புவும் இந்துவும் சேர்ந்து வேதப்பள்ளியை நடத்த வேண்டும் என எழுதி வைத்ததிலிருந்து பவானியம்மாளின் எண்ணத்தை அறிய முடிகிறது.

சிறுவயதில் தான் அனுபவித்த கைம்மை நிலை இந்துவுக்கும் வந்து விடக் கூடாது என்பதில் தெளிவாய் இருப்பதை பவானியம்மாளின் செயல்பாடுகள் உணர்த்தி விடுகின்றன.. இந்துவுக்கு காதல் உள்ளிட்ட உணர்ச்சிகள் உண்டு. அப்புவைத் தழுவிக் கொள்ளுதல், அன்பாக உரையாடுதல் போன்றவை. உணர்ச்சிகளின் வெளிப்பாடாக அமைகி;ன்றன. அப்பு, அம்மாவிடம் வேதப்பள்ளியை பவானியம்மாள் இரண்டுபேர் பெயரிலும் எழுதி வைத்திருப்பதாகக் கூறும் போது, ' புருஷனும் ஒருத்தன் இருந்து பார்த்துண்டாத் தேவலைன்னு போட்டிருக்கா போலிருக்கு' என்ற அலங்காரத்தம்மாளின் பேச்சின் மூலம் இந்துவுக்கு அப்பு துணையாகிவிட்டான் என்பதை உணரலாம். பவானியம்மாள் அப்புவின் பெற்றோரிடம் பள்ளியை நிர்வகிக்க அப்பு வேண்டும் என ஏன் கேட்கவில்லை, ஒருவேளை ஒத்துக்கொள்ள மாட்டார்களோ? என நினைத்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகிறது.

அலங்காரத்தம்மாள், பவானியம்மாளிடம் என்னைக் கேட்காமல் ஏன் அப்புவை இங்கேயே தங்கவைத்துக்கொண்டீர்கள் எனக் கேட்கவில்லை. இந்துவுக்கு யார் மூலமாக அலங்காரத்தம்மாளின் நடத்தை பற்றி தெரியவந்தது என்பதற்கான பதிலும் இல்லை.

மீறல்கள்
ஆச்சாரமான குடும்பமொன்றில் பிறந்த அலங்காரத்தம்மாள் சிவசுவிடம் பழகுவது சரியாக இல்லை. கணவனான தண்டபாணி அதைக் கண்டுகொள்ளவில்லை. கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் மூத்தமகன் உள்ளிட்ட பிள்ளைகள் யாரும் சிவசு வருகைக்கு எதிர்ப்புக் காட்டாமல் இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. அப்புவிடம் இருந்த துடிப்பு மற்றவர்களுக்கு இல்லை. தண்டபாணியின் மனதில் சிவசுவின் மீதும் அலங்காரத்தம்மாளின் மீதும் இருக்கும் கோபம் அவர் மனதில் மட்டுமே உள்ளது. வேறொரு வீட்டிற்கு திருமணமாகிச் சென்ற மகள் விசாலத்திடம் மட்டும் வெளிப்படையாக அலங்காரத்தம்மாளின் நடத்தை பேசப்படுகிறது. அதனால் தாய் வீட்டை மறந்து தன் கணவன் வீட்டிலேயே இருக்கிறாள் என்பதை அறியமுடிகிறது. தன்னைப் போன்று தவறு செய்த ஒருத்தியின் மகளை அப்புவுக்கு வேண்டாம் எனச் சொல்வது அலங்காரத்தம்மாளின் பிறழ்மனதைக் காட்டுகிறது. புதினத்தில் வரும் பெரும்பான்மையான கதாப்பாத்திரங்கள் கோபங்களை தங்களுக்குள்ளேயே வைத்திருக்கிறார்கள். பிறரிடம் ஏன்? எதற்கு? எப்படி? எனக் காரணங்கள் கேட்காதவர்களாகவே படைக்கப்பட்டுள்ளார்கள். பத்தினிகள், சீதை, கண்ணகி, கற்பு எனப் பேசப்பட்ட காலத்தில் பெண்ணொருத்தியின் இச்செயல்பாடு மரபு மீறலின் வெளிப்பாடாக அமைந்திருக்கிறது. ஓர் ஆண் இரண்டு பெண்களை மணப்பதும், பல பெண்களிடம் தன் பாலியல் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதும் தவறு என வெளிப்படையாகப் பேசப்படாத காலகட்டத்தில், கணவனைத் தவிர மற்ற ஆண்களை  பெண்கள் நிமிர்ந்து பார்க்கக் கூடாது எனச் சொல்லப்பட்ட காலத்தில் அலங்காரத்தம்மாள் போன்ற பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்பதே புதினம் பரவலாக விமர்சனத்துக்கு உள்ளானதற்குக் காரணமாகிறது.

அலங்காரத்தம்மாளைப் போல் ஓர் ஆண் இருந்திருந்தால் இப்புதினம் பேசப்பட்டிருக்காது. தவறான நடத்தை கொண்டவராக அலங்காரத்தம்மாள் இருந்தாலும் குடும்பத்தை விட்டு வேறெங்கும் செல்லவில்லை. குடும்பத்தின் பிடி அவர் கையில் இருந்தது. அப்புவை வேதம் படிக்க வைக்காமல் வேறு ஏதேனும் படிக்க வைத்துவிட்டு தன்னருகில் அலங்காரத்தம்மாள் வைத்திருந்தால் அப்புவுக்கு  சிவசு  மீது வெறுப்பு ஏற்பட்டிருக்காது என்பது புலனாகிறது.

முடிவுரை
அலங்காரத்தம்மாளின் நடத்தையே புதினத்தின் மையக்கருவாக உள்ளது. சமூகத்தில் இது போன்ற நிலை அக்காலத்தில் இருந்திருப்பதாகச் சொல்லப்பட்டிருப்பது உண்மையின் வெளிப்பாடு என்பதை தி. ஜானகிராமனின் படைப்பின் வழியாக உணர முடிகிறது. கதாப்பாத்திரங்களின் மனநிலைகள் வாசகர்களை பல இடங்களில் சிந்திக்க வைக்கிறது.

முதன்மை நூல்
1. அம்மா வந்தாள் - தி. ஜானகிராமன்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

* கட்டுரையாளர்: -    முனைவர் கி. இராம்கணேஷ்,   உதவிப்பேராசிரியர்- தமிழ்த்துறை,   ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,   பொள்ளாச்சி- 642 107 -

Last Updated on Monday, 18 January 2021 09:55