ஆய்வு: “செடல்” நாவலில் மதமாற்றத்திற்கான பின்புல அரசியல்

Sunday, 29 November 2020 21:16 - முனைவர் கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரியநாயக்கன்பாளையம், கோயமுத்தூர் - 641020 - ஆய்வு
Print

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்.தமிழக நிலபரப்பு ஐவ்வகையான நில அமைப்பைக் கொண்டுள்ளது. இங்குள்ள நிலஅமைப்புக்கேறிய ஐவ்வகையான தெய்வ வழிபாடுகளை மக்கள் வழிபட்டு வந்தனர். அதில் குறிப்பாக சிறுதெய்வ வழிபாட்டு முறையே மக்கள் கையாண்டு வந்தனர். இதனை ஆரியர் வருகைக்குப் பின் இந்நிலமைப்பில் சிறுதெய்வ வழிபாட்டு முறை மாறி, அனைத்தும் பெருதெய்வ வழிபாட்டு முறையாக மடைமாற்றம் செய்தனர். இதனால் மக்கள் குழப்பத்திற்குள்ளாகிய ஆரியர் வருகையினால் சிறுதெய்வ வழிபாடு பெரிதும் முடங்கின. இந்நிலையில் தமிழகத்தில் இந்துத்துவம் மிகவும் காலுன்றியது எனலாம். இந்துவத்தினால் இங்குள்ள மக்கள் மேலாதிக்க சாதியினர் மட்டுமே கோயிலில் நுழைய முடியும் என்ற நிலை வந்தது. மற்ற சமூக மக்கள் கோயிலில் நுழைத்தால் தீட்டுப்பட்டு விடும் என்றனர். இங்கு வாழ்ந்த மக்களுக்கு சுதந்திரமாக கோயிலில் கூட செல்ல முடியாத நிலை நிலவியது. இதனை அறிந்துக் கொண்ட கிறிஸ்துவ மத பாதிரியர்கள் தங்களின் மதபோதத்தைத் தமிழக தாழ்த்தப்பட்ட மக்களிடம் பரப்பி, கிறிஸ்துவ மதத்தைக் காலுன்ற செய்தனர். கிறிஸ்துவத்தைப் பரப்ப வந்த, பாதிரியர்கள் தமிழ்மொழியின் இலக்கண, இலக்கியங்களையும் நன்றாக கற்றுத் தேர்ந்தனர். அதன் பின்பு மதத்தைப் பரப்ப அவர்களுக்கு ஏதுவாக அமைத்தது எனலாம். 18,19-ஆம் நூற்றாண்டுகளில் பெரிதும் வளர்ச்சியடைந்த நவீன இலக்கியப் பிரதிகளில் தமிழ்நிலப்பரப்பில் நிலவும் சாதிய போக்கினையும், மக்களின் அன்றாட வாழ்வில் நிகழ்வினையும், நிலவுடைமையாளர்களால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஏற்படும் இன்னல்கள் போன்ற பல்வேறு கருதுபொருள், நவீன இலக்கியப் பிரதிகளில் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்துத்துவ கொள்கையினால் மக்களின் ஏற்றத்தாழ்வுகளைக் கண்ட கிறிஸ்துவர்கள் தங்களுக்குச் சாதகமாக மதப்பரவலைக் கையாண்டனர். இதன் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும்பாலனோர் கிறிஸ்துவ மதத்திற்கு மதம்மாற்றம் செய்யப்பட்டனர். இதனால் தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுக் காணப்படும் என்று அம்மக்கள் நினைத்தனர்.

தலித்திய இலக்கிய எழுத்தாளரான இமையம் தான் கண்ட நிகழ்வுகளைப் படைப்பாக்கமாக்கினார். அதில் “செடல்” நாவல் மிகவும் கவனத்திற்குரியது. இந்நாவலில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஒரு பெண்ணை (செடல்) ஊர்காவல் தெய்வமான செல்லியம்மனுக்குப் பொட்டுகட்டி விடுதல் என்ற வழக்கத்தைப் பற்றியும், அப்பகுதியில் கூத்தாடும் மக்களின் வாழ்வியலைப் பதிவு செய்துள்ளார். இந்நாவலில் நிலவுடைமை சமூகத்தால் பல்வேறு இன்னல்களுக்குள்ளான தாழ்த்தப்பட்ட மக்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினர். அப்படி மதம்மாறினால் தங்களின் நிலைமாறும் அதாவது கல்வி, பொருளாதாரத்தில் உயர்ந்து விளங்கலாம் என்று எண்ணினர். இந்நாவலில் வெளிப்படும் மதமாற்ற அரசியலை வெளிக் கொண்டுவருவதை ஆய்வுக்கட்டுரையின் நோக்கமாகும்.

தமிழ்ச் சமூகத்தில் நிலவி வந்த அடிமைத்தனத்திருந்தும் உழைப்பு சுரண்டலிலிருந்தும் தங்களைக் காத்துக்கொள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் எடுத்துக்கொண்ட ஆயுதம் தான் மதமாற்ற அரசியல் எனலாம். இதனால் அவர்களின் வாழ்வியல் நிலை மாறும் என்று எண்ணினர். இங்குள்ள சாதிய பேதத்தைப் பார்த்த மிஷினரிகள் தலித்து மக்களிடையே கிறிஸ்துவ மதத்தைப் பரப்பினர். “ஒவ்வொரு நாளும் அந்திப் பொழுதுகளில் பாதிரியர் பறத் தெருவில் பிரசங்கம் செய்ததோடு, சுற்றியுள்ள கிராமங்களுக்கும் பிரசங்கம் செய்யப் போவார். அப்படிப் போகும் போதெல்லாம் துணி, கோதுமை, மாவு, பால் பவுடர் என்று கொடுக்க ஆரம்பித்தார். இதை வைத்துக்கொண்டு துணி, கோதுமை கொடுத்துப் பறையர்களை வேதப் பறையர்களாக மாற்றுவதாகச் சிதம்பரம்பிள்ளை கதைகட்டிவிட்டார்.”1 அதாவது தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவே முதலில் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினர். இதற்கு பின்புலம் காரணம் இங்குள்ள நிலவுடைமையாளர்கள் தங்களை இழிவாக கருதுவதாலும், தங்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்ய முடியமால் போவதாலும் பறையர் இனமக்கள் மதமாறினர். இம்மாற்றத்தினால் தங்களின் வாழ்வதாரம் மாறி, தங்களும் இத்தமிழ்ச் சமூகத்தால் கௌரவமாக நடத்தப்படுவோம் என்று எண்ணினர். இதோடு இங்குள்ள சாதிய அமைப்பு தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாகக் கருதுவதை எண்ணியே மதம் மாறியதான் அரசியல் பின்புலமாகும். இம்மக்களுக்காக கிறிஸ்துவ மிஷினரிகள் அரசாங்கத்திடமிருந்து பல்வேறு நலத்திட்டங்கள் வேண்டும் என்று முறையிட்டனர். “இந்து சமயத்தின் சாதிய அமைப்போடு பின்னிப்பிணைந்திருந்த அடிமை முறை ஏராளமான மக்கள், அவர்களெல்லாம் தாழ்ந்தநிலையில் பிறந்தவர்கள் என்ற போலியான கற்பிதத்தின் பெயரில் சுரண்டப்படுவதற்கு இட்டுச்சென்றது என்று அழுத்தமாகக் கூறினர். மேலும் கூர்மையாகச் சொல்வதனால், அடிமைகளாக மக்கள் ஒடுக்கப்பட்டதை நியாயப்படுத்திய இந்து மத சாதிய அமைப்புதான் பறையர்கள் போன்ற தாழ்த்தப்பட்ட சாதிகளின் இழிநிலைக்குக் காரணம் என்று மிஷினரிகள் வாதிட்டனர்.”2 தாழ்த்தப்பட்ட மக்கள் மீது இந்து சமய மேலாதிக்க சாதியினர் தொடுத்த அடிமைமுறை மாறவே அம்மக்கள் வேறு மதங்களுக்கு மாற்றலாயினர். இங்குள்ள நில அமைப்பிற்கு ஏற்றவகையில் இல்லாத மதநம்பிக்கை மக்கள் ஏற்றுக் கொள்ள இங்குள்ள சாதிய கட்டமைப்பே தான் காரணம். இது காலங்காலமாக அனுபவித்து வந்த தாழ்த்தப்பட்ட சமூக மக்கள் தங்களின் இழிநிலையைப் போக்கவே இம்முடிவினை எடுத்துள்ளனர் எனலாம்.

மேலைநாட்டிலிருந்து வந்த கிறிஸ்துவ மிஷினரிகள் எந்த பாகுபாடுமின்றி மக்களிடம் இயல்பாக பழகிவந்தனர். இதனால் மக்கள் அவர்களின் மதத்தை எந்த குழப்பமின்றி ஏற்றுக் கொண்டனர். மதம் மாறிய தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் பெயர்களைக் கூட மாற்றினர். இதனால் தங்களின் நிலை இச்சமூகத்தில் மாறும் என்றும், வாழ்வாதாரம் மாறி நல்ல நிலையோடு வாழலாம் என்று எண்ணினர். “பறத் தெருவில் யார் வீட்டில் என்ன விசேஷம் நடந்தாலும், அந்த வீட்டுக்குப் பாதிரியாரை இழுத்துக் கொண்டு போய்விடுவான். முக்கியமாக தன்னுடைய பெயரான வடமலை என்பதை ஜான் என்றும் தன்னுடைய மகன்களின் பெயர்களை அந்தோணிசாமி, மைக்கேல் என்றும், பெண்டாட்டி கருப்பாயியின் பெயரை ரோசி என்றும் பெயர் மாற்றிக் கொண்டான். இதனால் அவனை ஊரிலுள்ளவர்கள் ‘வேதப் பறையன்’ என்று கூப்பிட ஆரம்பித்து விட்டனர்.”3 இந்து சமய சாதிய கட்டமைப்பிலிருந்து தங்களின் நிலையை மாற்றிக் கொள்ள தாழ்த்தப்பட்ட மக்கள் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார். அதனால் தங்களின் நிலைப்பாடு சமூகத்தில் மாறி, அனைவராலும் மதிக்கப்படுமாறு வாழ்ந்து வந்தனர். தாழ்;த்தப்பட்ட மக்கள் மதமாறியதனால் அரசாங்க வேலைகளிலும் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள கிறிஸ்துவ மிஷினரிகள் அரசாங்கத்திடம் வாதிட்டு வந்தனர். “புதை படிவம் போல பழமை வாய்ந்த சாதி சட்டகத்திற்குள் (Cast Framework) அடைத்து வைக்கப்பட்டிருந்த மக்கள் கற்பனை கூட செய்து பார்த்திராத புதிய நாகரீகத்தைக் காலனியாட்சி கொண்டு வந்தது. இந்து சமுதாயக் கட்டமைப்பில் எல்லோரையும் விடக் குறைந்த வலுவைக் கொண்டிருந்த தலித்துகள் சாதியடிமைத்தனத்திலிருந்து தப்பித்து அந்நிய ஆட்சியாளர்களின் மதங்களுக்கு மாறினார்.”4 இங்குள்ள நிலவுடைமையாளர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்த மிஷினரிகளின் மதங்களுக்கு தலித்து மக்கள் மாறியதனால், இந்து உயர்சாதிய சமூகத்திற்கு எதிராக தங்களின் வாழ்வியல் நிலைப்பாடு உயர்நிலையில் அடைத்ததாகக் கருதினர்.

“மதமாற்றம் எனும் அதிரடி அறிவிப்புகள் கண்டுகூட வருணாசிரமவாதிகள் கடந்த பத்தாண்டுகளாகத் தீண்டாமையை ஒழிக்க முன்வரவில்லையே. இப்போது மட்டும் துடிப்பது ஏன்? இவர்கள் தீண்டாமையை ஒழிக்க மாட்டார்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் மதம் மாறக்கூடாது. இது நல்ல கூத்து என்றார் பெரியார்.”5 இந்து சமய உயர் வர்கத்தினர் தங்களின் வயல்வொளிகளில் தலித்து மக்களின் உழைப்பை மட்டும் வாங்கிக் கொண்டு அவர்களை தீண்டதாகதவர்களாக இழிவாக பார்க்கும் நிலை உண்டு. இத்தீண்டாமை என்னும் கொடிய நோய்யினைப் போக்க மற்ற இந்து தலித்துகள் வேறு மதங்களுக்கு மாறினார். கிறிஸ்துவ மிஷினரிகள் கொடுக்கும் அடிப்படைத் தேவையான பொருட்களை மட்டும் வாங்கிக் கொண்டு, மதம் மாறமாலும் கிறிஸ்துவ ஆலயத்தைப் பார்க்க மட்டும் தீட்டு என்று எண்ணும் எதிர் முரணையும் செடல் நாவல் உணர்த்தகிறது. “பாதிரியர் மாரியம்மன் கோயிலுக்கு வரும் ஒவ்வொரு முறையும் கோதுமை, மாவு, பால் பவுடர், ரொட்டி கொடுத்திருக்கிறார். கிழவியும் தன் பங்குக்குக் கேட்டு வாங்கியிருக்கிறாள். கோதுமை, மாவு, பால் பவுடர் வாங்கித் தின்னலாம். ஆனாக் கோயில் கட்டுவதை மட்டும் ஏன் பார்க்கப் போகக் கூடாது”6 மக்கள் தங்களுக்குத் தேவையான அடிப்படை பொருட்கள் கிடைக்கமால் தவிக்கும் போதுகூட தங்களின் மதத்தின் மீது நம்பிக்கை வைக்கின்றனர். “செடல்” நாவலில் கிழவியின் கதாபாத்திரத்தின் மூலம் கிறிஸ்துவ மதத்தின் மீது எதிர்ப்பினைக் காட்டுவதாக நாவல் ஆசிரியர் வெளிப்படுத்தியுள்ளார்.

கிறிஸ்துவ மிஷினரிகளால் தலித்து மக்கள் கல்வி, பொருளாதாரம் போன்ற பல்வேறு நிலைகளில் உயர்த்து விளங்கினர். இதனால் தலித்து மக்களின் வாழ்வியல் நிலை பெரிதும் மாற்றமடைத்து காணப்பட்டது. தலித்துகள் கல்விக் கற்றதனால் அவர்களும் அரசாங்க வேலைகளுக்குச் சென்று அடிமைத்தனத்திலிருந்து தங்களின் வாழ்வியல் நிலை மாற்றமடைந்து எனலாம். “மாதா கோயிலும் பள்ளிக்கூடமும் கட்டவிட்டது மகா தவறு என்றும் எல்லாப் பறையர்களும் வேதப் பறையர்களாக மாறி, வெள்ளைக்காரன் பணம் அவர்கள் கையில் தண்ணீர் போலப் புரள ஆரம்பித்துவிட்டால் அடிமைப் பறையனாக வேலை செய்ய யார் வருவார்கள் என்றும் திண்ணைக்குத் திண்ணை பேசிக் கொண்டார்கள்.”7 காலங்காலமாக தலித்து மக்களுக்கு மாறுக்கப்பட்டு வந்த கல்வி கிறிஸ்துவ பாதிரியர்களால் வழங்கப்பட்டது. இதனை மேல் ஆதிக்க சாதியினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படி தலித்துகள் படித்து கல்வியறிவு பெற்றால் அடிமையாக வேலைக்கு வரமாட்டார்கள் என்ற மேட்டிமை சமூகம் அஞ்சியது. தலித்துகளுக்கு கல்வியறிவு வழங்கினால் அவர்களும் சமூகத்தில் அந்தஸ்தோடு நன்முறையில் வாழ்வார்கள் என்று எண்ணி மிஷினரிகள் அவர்களுக்கு என்று தனிய பள்ளிக்கூடங்கள் கட்டினர். “தலித்துகளிடையே கல்வி பரவி, நகர்ப்புறப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சியடைந்த பகுதிகளிலும் பணம் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கியது. இதுவும் பணப் பொருளாதாரத்தின் வளர்ச்சி வேலை வாய்ப்புகளில் ஏற்பட வளர்ச்சி ஆகியனவும் சேர்ந்து தலித்துகிடையே ஒரு புதிய வர்க்கம் தோன்றக் காரணமாயின”8 கிறிஸ்துவ பாதிரியர்களால் கல்வியறிவு பெற்ற தலித்துகள் எல்லா நிலையிலும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டனர். தங்களுக்கு நிகழும் அநீதிகளை எதிர்த்தும், கேள்விகேட்க தொடங்கினர். இதனை பார்த்த மேலாதிக்க சாதியினர் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பது நிதர்சனம்.

தமிழகத்தில் நிலவிய சாதிய சூழலைப் புரிந்து கொண்ட பாதிரிமார்கள் முதலில் தாழ்த்தப்பட்ட மக்களை கிறிஸ்துவ மதத்திற்கு மதமாற்றினார். பின்பு மேட்டிமை சமூகத்தில் உள்ள வறுமை நிலையிலிலிருந்த மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாக, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மதமாற்றினார். “குடித் தெருக்காரர்கள் பேசிக் கொள்வது மாதிரிதான் பறத் தெருவில் நிகழ்ச்சிகள் நடந்தன. தாலி கட்டிக் கொள்ள வந்த புதுப்பெண்ணைப் பார்க்கக் கூடும் கூட்டத்தைப் போல எப்போது பார்த்தாலும் பாதிரியாரைச் சுற்றி ஒரு சிறு கூட்டம் சேர்ந்துவிடும். அவரைத் தேடிக் கொண்டு பல ஊர்களிலிருந்து ஆட்கள் வர ஆரபித்துவிட்டார்கள். அவர் கொடுக்கிற துணி, கோதுமை மாவுக்காகப் பறையர்கள் மட்டுமில்லாமல் ஒன்றிரண்டு குடித் தெருக்காரர்களும் பஞ்சப்பட்டவர்கள் என்று வருவதோடு, அவர் செய்யும் பிரசங்கத்தைக் கேட்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.”9 மேட்டிமைச் சமூகம் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காக கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றலானார்கள். மேலும் அவர்கள் மதமாறியப் பின்னும் அவர்களின் மனம் மாறவில்லை, அங்கும் உயர்நிலையில் இருப்பதற்காக தனி ஆலயம், வழிபாடுமுறை அமைக்க பாதிரியர்களிடம் கட்டளையிட்டனர். பாதிரியர்களும் அவர்களின் கோரிக்கையே ஏற்கவும் செய்தனர். மேட்டிமைச் சமூக மக்கள் தங்களுக்கேன தனிஆலயம் அமைத்தனர். அது காற்சட்டை ஆலயம் என்று அழைத்தனர். “தங்களுக்கும் நாடார்களுக்கும் தனித்தனி இடமொதுக்கப்பட்ட இலத்தின் சிலுவை வடிவ ஆலயமொன்று வேண்டுமென்று வெள்ளாளர்கள் உறுதியாக நின்றார்கள். வெள்ளாளர்கள் இருவர் ஆலயத்திற்குத் கொடுக்கவேண்டிய காணிக்கையைக் கொடுக்க மறுத்தனர். தேவாலய வரியினைக்கட்ட வேண்டாமென்று முடிவெடுத்து, 1853 பிப்ரவரி 22ல் குழப்பமொன்றை ஏற்படுத்த வெள்ளாளர்கள் முயன்றனர்.

பின்னர் 1854 ஏப்ரல் 17ல் இரு தரப்பினரும், கோவிலைப் பராமரிக்கத் தேவையான பணத்தைத் தருவதாகப் பத்திரமொன்று எழுதிக் கையெழுத்திட்டார்கள். இறுதியாக கிரிகோரி என்ற துறவியும் பெர்கத்தால் என்ற துறவற சகோதரரும் வெள்ளாளர்களை நிறைவு செய்யும் ஆலய வடிவமைப்பு ஒன்றை உருவாக்கினார்கள். இது நாடார், வெள்ளாளர் என்ற இருதரப்பினராலும் 1855 மார்ச்சு 21ல் ஏற்றுக் கொள்ளப்பட்டது (இதுதான் தற்போதும் வடக்கன்குளத்தில் உள்ள திருக்குடும்ப ஆலயத்தின் வடிவமைப்பாகும்.) இதன் பின் ஒவ்வொரு தரப்பினரும் புதிய ஆலயம் கட்டுவதில் அவரவர்களுக்குரிய பணியினை ஏற்றுக் கொண்டார்கள். ஞானாந்திரம் என்பவர் நாடார் தரப்பிற்கும் மரிய பிள்ளை என்பவர் வெள்ளாளர் தரப்புக்கும், பொறுப்பாளராக நியமிக்கப்பட்டனர்.”10 இவ்வாறு மேட்டிமைச் சமூகம் மாதமாறியும் அவர்களின் மேட்டிமை குணாதிசியம் மாறவில்லை, அங்கும் அவர்களின் மேட்டிமைத்தனத்தை வெளிப்படுத்தினர்.

தமிழ் நிலப்பரப்பிற்கு ஏற்ப இருந்த இயற்கை வழிபாடுகள் ஆரியர் வருகைக்குப்பின் மாற்றமடைந்தது. அவர்களுக்குத் தேவையான முறையில் வழிபாட்டு முறைகளை மாற்றி, இங்குள்ள சிறுதெய்வ வழிப்பாட்டை உடைத்தேறிந்தனர். ஆரியர் வருகைக்குப்பின் வழிபாட்டு முறையில் குறிப்பாக சிறுதெய்வ வழிபாட்டு முறையே மாற்றி, பெருதெய்வ வழிபாட்டு முறைகளைக் கொண்டுவந்தனர். இதன் விளைவாக தாழ்த்தப்பட்ட மக்கள் கோவில்களுக்கு நுழையைத் தடை விதிக்கப்பட்டன. அதனூடாக தமிழ்ச் சமூகத்தில் சாதிய பாகுபாடு தலைத்துக்கியது எனலாம். மேலும் நிலவுடைமையாளர்கள் தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைப்படுத்தி அவர்களின் உழைப்பை வாங்கிக் கொண்டு குறைவாக கூலியை வழங்கி வந்தனர்.

நிலவுடைமையாளர்களால் பொருளதார நிலையில் பின்தங்கிய தாழ்த்தப்பட்ட மக்களின் உழைப்பு சுரண்டல் நிகழ்ந்துக் கொண்டே தான் இருந்தது எனலாம். தமிழ்ச் சமூகச் சூழலைப் புரிந்துக் கொண்ட கிறிஸ்துவ பாதிரிமார்கள் தங்களின் மதத்தைப் பரப்ப முன்வந்தனர். முதலில் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்காகவே மதமாறினர். பின்பு இங்குள்ள இந்துத்துவ அமைப்பு முறை, அதாவது கோவிலில் நுழையக் கூடாது என்றும், அடிமைமுறை, தீண்டாமை போன்ற காரணங்களுக்காக கிறிஸ்துவத்திற்கு மாறினர். அதேப் போல் கிறிஸ்துவ மதத்திற்கு மாறினால் தங்களின் வாழ்வாதாரம் மாறும் என்று எண்ணினார். அடிமைநிலையிலிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள தங்களுக்கு ஒத்துவராத மதகொள்கைகளுக்கு மக்கள் மாறியதன் பின்புலம் சாதிய கொடுமை தான். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மட்டும் மதமாறவில்லை. மேட்டிமைச் சமூகத்தில் வறுமையில் வாழ்ந்த மக்களும் கிறிஸ்துவ மதத்திற்கு மாற்றலானார்கள். இதற்கு காரணம் ஒரே சாதியில் உள்ள மக்களும் கூட வறுமை என்னும் பிடியில் சிக்கித்தவித்தனர். மதம் மாறிய உயர்சாதியினர் அங்கும் தங்களின் உயர்சாதிய மனோநிலையை வெளிப்படுத்தினர். அதாவது தனியாக ஆலயம் காட்டுதல், வழிப்பாட்டு முறையை மாற்றினர் எனலாம். இன்றைய நவீன இலக்கியங்களில் தலித்து மக்களின் வாழ்வியல் நிலை பேசுபொருளாக மாறியது. இது ஒருவகையில் வணிகப்படுத்துதல் தான் ஒழிய அம்மக்களின் வாழ்வியலில் எந்தொரு மாற்றமும்ட நிகழ்ந்துவிட வில்லை எனலாம்.

குறிப்புகள்

1. இமையம், செடல், ப.56.

2. ராஜ் சேகர் பாசு (தமிழில் : அ.குமரேசன்), நந்தனின் பிள்ளைகள் பறையர்

வரலாறு 1850 – 1956, ப. 157.

3. இமையம், செடல், ப.67

4. ஆனந்த் டெல்டும்ப்டெ தமிழில் : எஸ்.வி. ராஜதுரை, ஏகாதிபத்திய –

எதிர்ப்பும் சாதி ஒழிப்பும், ப.129

5. அருணன், பெரியாரின் தலித்தியம், ப. 124

6. இமையம், செடல், ப.57

7. இமையம், செடல், ப.56

8. ஆனந்த் டெல்டும்ப்டெ தமிழில் : எஸ்.வி. ராஜதுரை, ஏகாதிபத்திய –

எதிர்ப்பும் சாதி ஒழிப்பும்,ப.125

9. இமையம், செடல், ப.56

10. ஆ. சிவசுப்பிரமணியன், கிறித்தவமும் சாதியும், ப.53.

* கட்டுரையாளர்: - முனைவர் கா.சுரேஷ், உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை, யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பெரியநாயக்கன்பாளையம், கோயமுத்தூர் - 641020 -

 

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 29 November 2020 22:02