ஆய்வு: ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள்

Tuesday, 29 December 2020 20:32 - மா. ராஜேஸ்வரி, ஆய்வியல் நிறைஞர் , தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), விழுப்புரம், இந்தியா - ஆய்வு
Print

முன்னுரை

ஆய்வு: ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகள்தமிழில் சென்ரியு கவிதையின் உள்ளடக்கம் குறித்து சரியான புரிதல் அற்ற நிலை காணப்படுகிறது. பல சென்ரியு கவிதைகள் ஹைக்கூ என்று அழைக்கப்படும் நிலை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஹைக்கூவும் சென்ரியுவும் வடிவ அளவில் ஒன்றாக தோன்றினாலும் கருத்தளவில் இரண்டும் வெவ்வேறானவை. மனித நடத்தைகளையும் சமூகத்தில் நடக்கும் அவலங்களையும் சிக்கல்களையும் அடிப்படையாக கொண்டு படைக்கப்படுவது சென்ரியு. ஹைக்கூவின் சென் தத்துவம், புரிதல் அற்ற தன்மை, வார்த்தைகள் தேர்ந்தெடுப்பு ஆகிய இறுக்கமான கட்டுப்பாடுகளை கொண்டது. சென்ரியு எவ்விதமான கட்டுபாடுகளும் இன்றி சுதந்திரமாக செயல்பாட்டினை உடையது. சென்ரியுவின் இத்தகைய தன்மையே சென்ரியு பிற இலக்கியங்களிலிருந்து வேறுபடக் காரணமாகின்றது. சென்ரியுவின் தனித்தன்மைகளான அங்கதம், நகைச்சுவை, வேடிக்கை, உண்மையை உரைத்தல், விடுகதை, பொன்மொழி ஆகியத் தனித்தன்மைகள் ஈரோடு தமிழன்பனின் 'ஒரு வண்டி சென்ரியு' நூலில் வெளிப்படும் தன்மையினை இவ்வாய்வுக்கட்டுரை ஆராய்கிறது.

அங்கதம்

அங்கதம் என்பது நகைச்சுவையும் கருத்து வளமும் உடைய இலக்கிய வடிவம். சமுதாயத்தில் நிகழும் நிகழ்வுகளை நேரடியாக அல்லது மறைமுகமாக எடுத்துரைப்பது ஆகும்.

“அங்கதத்தின் பணி ஒருவரை இழித்துரைப்பதோடு முடிந்து விடுவதில்லை மாறாக அன்னாரைக் கண்டித்து திருத்தி சீர்திருத்தும் பொழுதே அதன் பணி முழுமையடைகின்றது. ஆக பழிப்புக்குரிய ஒன்றை ஏளனம் செய்து தாழ்த்தியுரைத்து உணர வைத்து திருத்துகின்ற ஓர் உன்னத இலக்கியக் கலையாக அங்கதம் உருவெடுத்துள்ளது.”1

என்று கூறப்படுகின்றது. அங்கதம் குறித்து தொல்காப்பியத்தில்

“அங்கதம் தானே அரில்தபத் தெரியிற்
செம்பொருள் கரந்த தெனவிரு வகைத்தே”2

அங்கதமானது செம்பொருள் அங்கதம், பழிகரப்பு அங்கதம் என இருவகைப்படும். நேரடியாக உண்மையை உரைப்பது செம்பொருள் அங்கதம் மறைமுகமாக உலகியல் நிகழ்வை உரைப்பது பழிகரப்பு அங்கதம் என்றும் கூறப்படுகின்றது.

தமிழன்பனின்

“குருக்களாகிவிட்ட கடவுள்
மறுபடியும் கடவுளாகவில்லை
தட்டு நிறையக் காணிக்கை”3

என்னும் கவிதை அமைந்துள்ளதைக் காணமுடிகின்றது. இன்று கடவுளுக்கு செலுத்தப்படும் காணிக்கையை விட குருக்களின் தட்டில் நிறையும் காணிக்கையே அதிகம் என்பதை மறைமுகமாகவும் அதே நேரம் சிறிது நகைத்தோன்றவும் இக்கவிதையில் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

எப்பொழுதும் பாடம் நடத்துவது நோக்கமாகக் கொண்ட ஆசிரியர்கள் மாணவர்கள் நலனில் மிகுந்த அக்கறை உடையவர்களாக திகழ்கின்றனர். அவர்கள் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியையும் சமுதாயத்தைப் பற்றிய புரிதலையும் உருவாக்குபவர்களாக விளங்குகின்றனர். அப்படிப்பட்ட ஆசிரியர்கள்

“தடுக்கி விட்டதும்
ஆசிரியர் உடைந்து உதிர்ந்தார்
பாடம் பாடமாய்”4

அங்கதத் தன்மையுடன் இக்கவிதை வெளிப்படுத்துவதை காணமுடிகிறது.

நகைச்சுவைத் தன்மை

சென்ரியுவிற்கே உரிய முதன்மை தன்மை நகைச்சுவையாகும். சமுதாய நலன்களை முதன்மைப்படுத்தி மனித நடத்தைகளை நகைச்சுவை கலந்த கருத்துக்களுடன் சென்ரியு கவிதைகள் படைக்கப்படுகின்றன. நகைச்சுவை தன்மையுடைய கவிதைகளைப் படைத்தல் என்பது ஒரு கலை. கவிஞன் வாசகனின் நகைச்சுவை உணர்வினை தூண்டுவதில் வெற்றி பெறுவது என்பது அவனுடைய சிந்தனை மற்றும் படைப்பாக்க நிலையினை சார்ந்தது. ஈரோடு தமிழன்பனின் சென்ரியு கவிதைகள் பெருமளவு
நகைச்சுவை பயப்பதாகவே படைக்கப்ப்ட்டுள்ளது.

மூன்று வரிகளில் செறிவான கருத்துக்களையும் அதே நேரம் நகைச்சுவையும் தோன்றுமாறு கூறுவது சென்ரியு கவிதையில் மட்டுமே சாத்தியம். இதனை

“முதலாளி சமாதிமேல்
முட்டிக் கொண்டழுதான்
சம்பளப் பாக்கி”5

என்னும் ஈரோடு தமிழன்பனின் காருமியை வெளிப்படுத்தும் கவிதை வழி அறியமுடிகின்றது. முதலாளி சமாதி மேல் முட்டிக் கொண்டழுதான் என்னும் வரிகளில் முதலாளியின் மீதுள்ள பற்றினால் அழுகின்றான் என்னும் எண்ணம் தோன்றுமாறும் , இறுதி வரியில் சம்பளபாக்கி என்று நகைச்சுவை தோன்றும் வகையிலும் ஆசிரியர் முடித்துள்ளார்.

குடும்பத்தில் பொறுப்பில்லாத தந்தையினால் பொறுப்பில்லாத மகன்கள் உருவாக்கப்படுகிறார்கள். தந்தை என்பவர் தொடக்கத்திலிருந்தே மகனை கண்டித்து வளர்ப்பது அவசியம். மகனை நன்னெறி படுத்துவதுதான் தந்தையின் முதல் கடமையாக இருத்தல் வேண்டும். ஆனால்

“மகன் வைத்த மீதி மது
குடித்த தந்தை திட்டினார்
பொறுப்பில்லாத பையல்”6

கவிதையானது பொறுப்பில்லாத தந்தையின் செயல்பாடுகள் பற்றி நகைச்சுவையுடன் வெளிப்படுத்துகிறது. உடல் நலமுடன் இருக்க சரிவிகித உணவு முறையினை கடைபிடித்தல் அவசியமாகும். தம் விருப்பப்படியே கிடைக்கக்கூடிய அனைத்தையும்
உண்ணுவதால் பல உபாதைகளை உடல் சந்திக்க வேண்டிய நிலை வரும். இதனை

“அக்கா பங்கையும் தின்றவள்
சோடா வாங்கப் போனாள்
அம்மாவுக்கு”7

நகைப்பு தன்மையுடன் வெளிப்படுத்துவதாக இச்சென்ரியு கவிதை படைக்கப்பட்டுள்ளது.

விடுகதை போன்றது

விடுகதை என்பது விடுவிக்கப்பட வேண்டியது. முறை பொருளினின்றும் விடுவிக்கப்பட்ட வேண்டிய கதையே விடுகதையாகும்.

“விடுகதை கேட்போரின் எண்ணத்தைக் கிளரச் செய்து அதன் பொருளை அறிய ஊக்குவிக்கும் சிந்தனைக் கருவியாகும். சிந்தனைக்கு விருந்தாகவும் நகைப்பிற்குக் களமாகவும் விடுகதை பயன்படுவதால் அது பாமர மக்களின் விருப்பமான விளையாட்டு

என வருணிக்கப்படுவதுண்டு”8

என்று ச.வே.சுப்பரமணியன் தனது நூலில் கூறியுள்ளார்.

நாட்டில் நாளுக்கு நாள் கட்சிகளின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே போகிறது. ஊருக்கு ஒரு கட்சி என்று இருந்தது போய் தெருவிற்கு ஒரு கட்சி என்றாகிவிட்டது. இதனை

“மழைநாள் கவலை
காளான்களை எண்ணுவதா?
கட்சிகளை எண்ணுவதா?”9

என்று விடுகதைப்போக்கில் கவிஞர் இக்கவிதையினை படைத்துள்ளார்.

வேடிக்கைத் தன்மை

சென்ரியு கவிதைகளின் தனித்தன்மைகளில் வேடிக்கையும் இன்றியமையாத ஒன்றாக கருதப்படுகின்றது. தமிழ் கவிஞர்கள் வேடிக்கையான சம்பவங்களை சென்ரியு கவிதையின் பாடுபொருளாக நகை உணர்வுடனும் சிந்தனையை தூண்டுமாறும் படைத்துள்ளனர். இத்தகைய வேடிக்கை தன்மையை உணர்த்தும் வகையில்

“எல்லோர் வீட்டிலும்
இரவல் குழம்பு கேட்கிறாள்
காணாமல் போனது கோழி”10

என்னும் ஈரோடு தமிழன்பனின் கவிதை அமைந்துள்ளதைக் காண முடிக்கின்றது. இவ்வரிகள் மனிதனிடம் உள்ள தீய குணமாகிய திருட்டுத்தனத்தையும் அத்திருட்டை கண்டறிய மேற்கொள்ளும் முயற்சியல் உள்ள வேடிக்கை தன்மையையும் எடுத்துரைக்கின்றது.

குழந்தைகள் செய்யும் சின்னச் சின்ன குறும்பு தனங்களை ரசிக்காதவர்கள் யாருமில்லை. அப்படி ரசிப்பிற்குரிய அக்குழந்தைகளின் குறும்புகளை கவிதையில் புகுத்தும் போது அக்கவிதை இன்னும் அழகாகின்றது. இதனையே

“முதல் நாளிலேயே
ஆசிரியரின் பிரம்பைக் கேட்டு
அடம் பிடத்தது குழந்தை’’11

என்னும் இக்கவிதை உணர்த்துகின்றது. மிகவும் வேடிக்கைத் தன்மையுடையதாகவும் இக்கவிதை படைக்கப்பட்டுள்ளது. பள்ளிச் செல்லும் ஒரு குழந்தையின் வேடிக்கையான செயலினையும் ஆசிரியரின் பிரம்பால் தான் வருங்காலத்தில் உதைக்கப்படப் போகிறோம் என்பதை உணராத குழந்தையின் மனநிலையினையும் இக்கவிதை வரிகள் வெளிப்படுத்துகின்றன.

உண்மையை உரைத்தல்

சென்ரியு உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு படைக்கப்படும் இலக்கியமாகும். மனித நடத்தைகளையும் சமூக அவலங்களையும் பாடுபொருளாகக் கொண்டது. மேலும்> சென்ரியு கவிதை கற்பனைக்கோ வர்ணனைக்கோ இடம் தராமல் கூறவந்த செய்தியை பொட்டில் அறைந்தார் போல் எடுத்துக்கூறும் தன்மைக் கொண்டது. இதனை உணர்த்தும் வகையில் ஈரோடு தமிழன்பனின்

“சிலைக்கு வெளியே போய்வந்த
கடவுள் நிலையாய் நின்றார்
சிலையைக் காணோம்”12

என்னும் கவிதை வரிகள் அமைந்திருப்பதைக் காணமுடிகின்றது. சமூகத்தில் கொலை> கொள்ளை போன்ற சம்பவங்கள் பெருகி வருகின்றன என்பதையும் இன்றைய சூழலில் மனிதர்களை காக்க வேண்டிய கடவுளுக்கே இங்கு பாதுகாப்பு இல்லை என்பதையும் இக்கவிதை வரிகள் எடுத்துரைப்பதாக அமைந்துள்ளது.

சமூகத்தில் எந்த அரசு அதிகாரியும் லஞ்சம் வாங்காமல் தங்கள் பணியை செய்வதில்லை. அப்படி எவரேனும் நேர்மையான அதிகாரியாக பணிபுரிந்தாலும் அவர்களை சுற்றியிருப்பவர்கள் அவ்வாறு நேர்மையாக பணிபுரிய விடுவதில்லை. இதனையே>

“அதிகாரி பிறந்த நாள்
வீடு முழுக்க
இலங்ச அலங்காரம்”13

என்னும் கவிதை வழி அறியலாம். இக்கவிதை அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுகின்ற முறையினையும் லஞ்சத்தை பரிசாக கொடுத்தேனும் தங்களது வேலைகளை எளிமையாக முடித்துக் கொள்ளும் அதிகார வர்க்கத்தின் மனப்போக்கினையும் வெளிப்படுத்துகின்றது.

அரசியல்வாதிகளின் சுயநலப் போக்கினை வெளிப்படுத்தும் வகையிலும் பதவில் இருக்கும்வரை தாங்கள் சம்பாதிப்பதையே நோக்கமாக கொள்கின்றனர் என்பதையும்>

“ஆட்சி முடிந்த அமைச்சர்
அறிக்கை............
இனி நாட்டுக்கு உழைப்பேன்”14

இக்கவிதை உணர்த்தும் வகையில் அமைந்துள்ளது. இவ்வரிகள் அரசியல் வாதிகளுக்கே உரிய பொதுத்தன்மையை காட்டுகின்றது. இனி நாட்டுக்கு உழைப்பேன் என்னும் வரிகளின் மூலம் ஆட்சியில் இருந்தவரை மக்களுக்காக எந்த நன்மையும் செய்தது இல்லை என்பதை இக்கவிதை வரிகள் எடுத்துரைக்கின்றன.

பழமொழி போன்றது

பழமொழி என்பது கிராமப்புற மக்களின் வாழ்க்கை முறையினையும் அவர்களது பண்பாடு கலாச்சாரத்தை பிரதிப்பலிப்பதும் ஆகும். இதனையே

“நுண்மையும் சுருக்கமும் ஒளி உடைமையும்
ஓண்மையும் என்றிவை விளங்கத்தோன்றிக் குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
ஏது நுதலிய முதுமொழி என்ப”15

என்று கூறப்படுகின்றது. இவ்வரிகளின் மூலம் கருதிய பொருளை விளக்கும் வகையில் நுண்மை> சுருக்கம்> தெளிவு> மென்மை ஆகிய இயல்புகளுடன் பழமொழி விளங்குகின்றது என்பது புலனாகின்றது. இத்தகைய பழமொழி சென்ரியுவில் எவ்வாறு

கையாளப்பட்டுள்ளது. இதனை

“கழுதை
கற்புரவாசம் தெரிந்தும்
கழுதை”16

இக்கவிதையானது பழமொழி அமைப்பில் படைக்கப்பட்டுள்ளது. மேலும் இக்கவிதையில் அங்கதச் சுவை வெளிப்படையாகவே பயின்று வந்துள்ளதை அறியலாம்.

உறு மீன் ஓட ஒடும் மீன் பார்த்திருக்குமாம் கொக்கு என்பது பழமொழி. இப்பழமொழியினை ஈரோடு தமிழன்பன் சென்ரியு கவிதையாக படைத்துள்ள திறமானது,

“உறுமீன் ஓட
ஓடும் மீன் பார்த்திருக்கும்
மக்கு”17


இரசிப்புத் தன்மைக்கு உரியதாக இக்கவிதையை வெளிப்படுத்துகின்றது.

தொகுப்புரை

சென்ரியு கவிதை பிற இலக்கியங்களிலிருந்து வேறுபட்டு காணப்பட அதன் தனித்தன்மையே முக்கியமான காரணமாகும். சென்ரியு கவித்துவம் குறைந்தும் கற்பனை கலப்பின்றியும் முற்றிலும் உண்மையை வெளிப்படுத்தும் தன்மையுடன் பாடப்படுகின்றது. சென்ரியு கவிதைகள் மக்களிடம் ஏதேனும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக நோக்குடன் படைக்கப்படுகின்றது.

ஈரோடு தமிழன்பனின் ஒருவண்டி சென்ரியு கவிதைத்தொகுப்பின் தனித்தன்மைகளை அங்கதம், நகைச்சுவை, விடுகதை, பழமொழி போன்றவற்றின் வாயிலாக வெளிப்படுத்தும் விதத்தினை இவ்வியலின் வாயிலாக அறிகின்றோம். சென்ரியு அங்கதத்தன்மையில் மெல்லிய நகைப்புடன் சமூக சீர்திருத்த கருத்துக்களையும் எடுத்துரைக்கின்றது. சென்ரியு நகைச்சுவை தன்மையுடையது எனினும் சமூகத்தில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டுவதில் முதன்மை வகிக்கின்றது.

பிற கவிதைகளில் ஏதேனும் ஒரு இடத்தில் கவிஞனின் மன உணர்வும் கவிஞனின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வின் தாக்கமும் வெளிப்படும். ஆனால் சென்ரியு கவிதைகளில் சமூக நலனும் மனித வாழ்வின் அவலங்களை சுட்டிக்காட்டும் போக்குமே மிகுதியாகக் காணப்படுகின்றது. எனவே தான் சென்ரியு பிற கவிதைகளிலிருந்து கருத்தளவிலும் அதனை வெளிப்படுத்தும் தனித்தன்மைகளின் அடிப்படையிலும் வேறுபட்டு நிற்பதை காணமுடிகின்றது.

அடிக்குறிப்பு

1. மலேயசியப் புதுக்கவிதைகள் தோற்றம் வளர்ச்சி> இராஜம் இராஜேந்திரன்> பக்.17
2. தொல்காப்பியம் – பொருள்.இளம்பூரணர்> பக்.461
3. ஒரு வண்டி சென்ரியு> ஈரோடு தமிழன்பன்> பக்.27
4. மேலது> பக்.54
5. மேலது> பக்.75
6. மேலது> பக்.100
7. மேலது> பக்.60
8. வளர்தமிழ் ஆய்வு> பக்.40
9. மேலது> பக்.76
10. மேலது> பக்.76
11. மேலது> பக்.67
12. மேலது> பக்.40
13. மேலது> பக்.60
14. மேலது> பக்.76
15. நாட்டுப்புறவியல் ஆய்வு, சு.சக்திவேல்> பக் -106
16. மேலது> பக்.76
17. மேலது> பக்.80

* கட்டுரையாளர்: - மா. ராஜேஸ்வரி, ஆய்வியல் நிறைஞர் , தெய்வானை அம்மாள் மகளிர் கல்லூரி (தன்னாட்சி), விழுப்புரம், இந்தியா -

 

Last Updated on Tuesday, 29 December 2020 20:58