ஆய்வு: தமிழர்களின் இறை நம்பிக்கை

Sunday, 15 November 2020 00:58 - முனைவர் கோ. வசந்திமாலா, தமிழ்த்துறைல, இணைப்பேராசிரியர், பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி, கோவை – 641014 - ஆய்வு
Print

ஆய்வுக் கட்டுரை வாசிப்போம்.தமிழர்கள் பல சமயங்களைப் பின்பற்றி வாழ்ந்து வருகின்றனர்.இன்றும் சைவம், வைணவம், புத்தம், சமணம், இஸ்லாமியம், கிறிஸ்துவம் போன்ற பல சமயங்கள் தமிழர்களிடம் பரவி இருக்கின்றன. இஸ்லாம், கிறிஸ்தவமும் நமது நாட்டில் புகுவதற்கு
முன் சைவம், வைணவம் ,புத்தம், சமணம் ஆகிய நான்கு சமயங்கள் தமிழகத்தில் பெரும்பாலும் நிலவின.ஆனால் சமயங்களை வேண்டாம் என்பவரும் சமய நெறிகளைப் பின்பற்றாதவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை உலக ஆயுத என்பர்.
இருப்பினும் சமயம் என்பது மிகப் பழமையானது.

சமயம் என்ற ஒன்றைத் தமிழர்களிடம் எப்பொழுது தோன்றியது என்பதை அறுதியிட்டு கூற இயலாது. ஆனால் இறை நம்பிக்கை என்பது பண்டுதொட்டு தமிழர்களிடம் இருந்து வந்துள்ளது என்பதை எடுத்துரைப்பது இவ்வாய்வுக் கட்டுரையின்
நோக்கமாகும்.

தெய்வங்கள்

தமிழர்கள் எப்பொழுது தனித்தனிக் குடும்பங்களாக வாழத் தொடங்கினார்களோ அப்பொழுது அவர்களிடம் இறைவன் நம்பிக்கை ஏற்பட்டது என்று கூறலாம். மனிதர்களின் மனதில் தோன்றிய அச்ச உணர்வே தெய்வ நம்பிக்கையை உண்டாக்கியது
எனலாம். எனினும் தெய்வ நம்பிக்கை தோன்றிய காலத்தைக் கணக்கிட முடியாது தொல்காப்பியர் காலத்திலேயே பல தெய்வ வழிபாடு இருந்துள்ளதைச் சான்றுகளின் வழிக் காணலாம் .

"மாயோன் மேய காடடுறை உலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெரம மணல் உலகமும்
முல்லை ,குறிஞ்சி ,மருதம், நெய்தல் எனச்
சொல்லிய மறையாற் சொல்லவும் படுமே"
( தொல்காப்பியம், அகம். நூற்பா எண் :05)


என்கின்ற நூற்பாவின் மூலம் திருமால், முருகன்,இந்திரன், வருணன் போன்ற தெய்வங்களை வழிபடுவதை அறியமுடிகிறது.

எனவே இறை வழிபாடு என்பது தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே இருந்திருக்கக்கூடும் என்பதும் இறைநம்பிக்கை என்பது இருந்த காரணத்தினாலேயே தொல்காப்பிய நூற்பாவில் இறைவன் பெயர்கள் இடம் பெறுவது கொண்டு இறைவழிபாட்டின்

பழமை அறியமுடிகிறது. மேலும் கொற்றவை என்னும் பெண் தெய்வ வழிபாட்டினையும் முக்கால மக்கள் கொண்டு இருந்தனர் என்பதனை தொல்காப்பியம்,

"மரம் கடைக் கூட்டிய குடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அகத்திணைப் புறனே"
(தொல்காப்பியம், புறம், நூற்பா எண் :04)


என்ற நூற்பா விளக்குகிறது. (கொற்றவை துர்க்கை அல்லது காளி). இவை மட்டுமல்லாது மக்கள் இயற்கைப் பொருள்களையும் இறைவனாகவே நினைத்து வழிபட்டார்கள்,அதனையும் தெய்வமாகக் கருதி போற்றினார்கள் என்பதனையும் நாம்

தொல்காப்பியத்தின் வழியே அறிய முடிகின்றது.

இதனைத் தொல்காப்பியம்,

"கொடிநிலை கந்தழி வள்ளி என்ற
வடுநீங்கு சிறப்பின் மன்னிய மூன்றும்
கடவுள் வாழ்த்தோடு கண்ணிய வருமே"
(தொல்காப்பியம், புறம், நூற்பா எண் : 33)

என்பதனைக் கொண்டு இயற்கை இறைவழிபாட்டினை நாம் உணர முடிகிறது. எனவே பழங்காலத்தில் இயற்கையை இறைவனாகக் கருதி மக்கள் வழிபட்டார்கள் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைகின்றது. மேலும் பழந்தமிழர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்வு வாழ்ந்தார்கள் என்பதையும் நாம் பெறமுடிகின்றது.


சிவன் வழிபாடு

சிவபெருமானைக் குறிக்கும் சொல் தொல்காப்பியத்தில் காணப்படவில்லை. ஆனால் சேயோன் என்பது சிவந்த நிறத்தை உடையவன் என்று குறிப்பிடுவதால் சிவபெருமானைக் குறிக்கும் என்று சில .அறிஞர்கள் சுட்டுவர். சிலர் முருகனை குறிக்கும்
என்றும் சுட்டுகின்றனர். ஆனால் இலக்கியத்தில் சிவபெருமான், பலதேவன், திருமால் ,முருகன் போன்ற கடவுளர்களைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளனர்.

"ஏற்று வலன் உயரிய எரிமருள்
அவிர்சடை மாற்றரும் க
ணிச்சி
மணிமிடற்றறோனும்

என்று சிவனையும்,

"கடல் வளர் விரிவளை புரையும் மேனி
அடல் வெம் நாஞ்சில் பனைக்கொடி யேனும் "


என்று பலதேவனையும்,

"மண்உறு திருமணி புரையும் மேனி
விண்ணுயர் புட்கொடி விறல் வெய்யோனும்"


என்று திருமாலையும்,

"மணி மயில் உயரிய மாறா வென்றிப்
பிணிமுக ஊர்தி ஒண்செய் யோனும்"

என்று முருகப்பெருமானையும்,
(புறநானூறு,மதுரை கணக்காயனார் மகனார் நக்கீரனார். பாடல் எண் : 56)

மேலும் திருமால் குறித்து அகநானூற்றில்

இங்கு பாடல் வரவேண்டும்

என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இறை நம்பிக்கை என்பது தமிழர்களிடையே சங்ககாலத்தில் இருந்ததற்கு பல்வேறு சான்றுகளை நாம் சங்கப்பாடல்களில் காணமுடிகிறது. எனவே தமிழர்கள் இறைநம்பிக்கையில் மிகவும் மிகுந்த ஈடுபாடு உடையவர்களாக இருந்தனர் என்பதும் பெறமுடிகின்றது.


நடுகல் வழிபாடு

இறந்தோரைத்தெய்வங்களாகக் கருதி வணங்கும் வழக்கமும் தமிழர்களிடம் இருந்தது. இது தமிழ் மக்களின் வழிவழி பழக்கமாக இருந்தது. மேலும் போரில் மாண்ட வீரர்களுக்குக் கல் நட்டு வணங்கும் பழக்கம் தமிழர் பண்பாடு என்பதனைத்
தொல்காப்பியத்தின் மூலம் காணலாம்,

"காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல்
சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தல்"
( தொல்காப்பியம், புறம், நூற்பா எண் :05)

இந்நூற்பாவில் மூலம் நடுகள் வழிபாடானது ஆறு வகையாகக் கூறப்படுகிறது. அவை

1.நல்ல உறுதியான கல்லைக் காணுதல்
2. கல்லை எடுத்து வருதல்
3.அக்கறை நீராட்டுதல்

4.அதனை குறித்த இடத்தில் நடுதல் 5.மக்களுடைய பெயரும் புகழும் குறித்தல் 6.அதனை தெய்வமாக வைத்து விழாக் கொண்டாடி வாழ்த்தி வணங்குதல் என்பனவை ஆகும். போரிலே வெற்றி பெற்ற வீரனை அல்லது தோல்விக்காக நாணுகின்றத்
தன்மையுடைய சிறந்த வீரனின் பெயரையும், பெருமையையும், கல்லில் பொறித்து வழிகளிலே மயில் பீலி சூட்டி விளங்குகின்ற நடுகற்கள் என்பதனை அகநானூறு சுட்டுகிறது.இதனை

"நல் அமர்க் கடந்த நாணுடை மறவர்
பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்
பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்"
(அகநானூறு, பாடல் எண் :67)


என்று அகநானூற்றுப் பாடல் பதிவு செய்ய அறியமுடிகின்றது. எனவே பழந்தமிழர்கள் மிகச்சிறந்த வீரனுக்கு இறைவனுக்கு இணையான மதிப்பையும்,மரியாதையும்,கொடுத்து வணங்கினார்கள் என்ற செய்தியானது இதன் வழியாக அறிய முடிகின்றது.

பலியிடுதலும் - வணங்குதலும்

பழந்தமிழர்கள் இடம் மது அருந்துவது,மாமிசம் உண்பதும் வழக்கமாக இருந்தது என்பதற்குப்பல்வேறு சான்றாதாரங்கள் நமக்கு சங்க இலக்கியப் பனுவல்கள் மூலம் கிடைக்கின்றன. எனவே பெரும்பாலான தமிழர்கள் மதுவும் மாமிசமும் உண்டு

வாழ்ந்து வந்தார்கள் என்பதில் ஐயமில்லை. தங்கள் பழக்க வழக்கப் படி வழிபாடு செய்தனர் பழந்தமிழர்கள்.ஆடு கோழிகளைப் பலியிட்டு மது மாமிசங்களைப் படைத்து வழிபாடு செய்தனர். இதனைச் சங்க இலக்கியச் சான்றுகள் வழி ஆராயலாம்.

"மரிக் குரல் அறுத்துத் தினைப் பிரப்பு இரீஇச்
செல் ஆற்றுக் கவலை பல்இயம் கறங்கத்
தோற்றம் அல்லது நோய்க்கு மருந்து ஆகா
வேற்றுப் பெருந் தெய்வம் பலவுடன் வாழ்த்திப்
பேஎயக் ககோளீஇயள் இவள் எனப்படுதல்
நோதக் கன்றே தோழி "
(குறுந்தொகை, பாடல் எண் : 263)


இப்பாடல் தோழியே நீராடும் ஆற்றின் நடுத்திட்டிலே அன்னை வெறியாட்டு எடுக்கக்கருதி இருக்கின்றாள். உன்னுடைய காதல் நோயை எந்த வகையிலும் தணிக்க முடியாத வேறு பல தெய்வங்களை போற்ற நினைத்தாள். ஆட்டுக்குட்டியை அறுத்து
துணையால் செய்த பலியைப் படைத்து பலவகையான வாத்தியங்களும் முழங்கும் படி பூசைபோடும் போது தெய்வங்கள் பூசாரிகளின் மேல் தோன்றுமே தவிர,உன் காதல் நோய்க்கு மருந்தாகாது. இத்தகைய தெய்வங்களை வாழ்த்து என் மகள் ஆகிய
இவள் பேயால் பிடிக்கப்பட்டால் என்று அன்னை தெய்வத்தின் மேல் பழி சுமத்துதல் வருந்தத்தக்கது என்ற பொருளை உணர்த்துகின்றது இப்பாடல். தெய்வத்திற்கு ஆடு போன்றவற்றை பலி இடுதலும், அந்த தெய்வத்தினை வணங்குதலும் ஆகிய
செய்தியானது இப்பாடலின் வழியாகப் பெறமுடிகின்றது. மேலும்,

"வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவி னோரும்"
(புறநானூறு, பாடல் எண் : 62)


என்ற பாடல் நுவாடாத கற்பகத்தின் தாரினையும், இமைக்காத கண்ணினையும் நாற்மாகிய உணவையும் உடைய தேவர்களும், என்னும் பொருளையும் உணர்த்துவதாக அமைகின்றது.

எனவே பழந்தமிழர்களிடம் தெய்வங்களுக்குப் பலி இட்டு வணங்குகின்ற வழக்கமானது இருந்தது என்பதனைச் சான்றுடன் பெற முடிகின்றது.

வெற்றிக்காக இறை வழிபாடு

பழந்தமிழர்கள் போர் முறைகள் எல்லாம் கொண்டு வாழ்ந்த காரணத்தினால், வெற்றிக்காக இறைவனைக், கடவுளை வணங்குகின்ற தன்மையானது அவர்களிடையே நிலவிவந்த செய்தியானது அறியமுடிகின்றது. வீரர்கள் வெற்றியின் பொருட்டுக் கொற்றவை என்னும் தெய்வத்தை வணங்கி வந்தனர் இதனை ,

"மரம் கடை கூட்டிய துடிநிலை சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே"
( தொல்காப்பியம், புறத்திணை நூற்பா எண் : 59)

எனும் நூற்பாவில் வெற்றிபெற்றவர்கள் உடுக்கை அடித்து வெற்றியைக் கொண்டாடுவதும், வெற்றியைத் தந்த கொற்றவையின் சிறப்பை எடுத்துப் புகழ்ந்து கொண்டாடுவதும், வெட்சித்திணைச் சார்ந்ததாகும் என்பது உரைக்கப்பட்டுள்ளது. இந்த கொற்றவை
தெய்வ வழிபாட்டின் சிறப்பினைச் சிலப்பதிகாரம் வேட்டுவவரியில் 6 முதல் 19 வரையிலான அடிகளில் உரைக்கப்பட்டுள்ளது. கானவர்கள் தங்கள் வாழ்வை மேம்படுத்த வழிபட்டனர். கொற்றவைக்குப் பூசை போட்டு விழா எடுக்கும் வழக்கத்தைக்
கொண்டிருந்தனர் என்பதும் அறியப்படுகின்றது. எனவே வெற்றிக்காகப் பழந்தமிழர்கள் கொற்றவையை வழிபட்டனர் என்ற இந்த செய்தியின் வழியாகவும் ,இறைவழிபாடும், இறைக் கொள்கையும் பழந்தமிழர்களிடையே இருந்து வந்ததை அறியலாம்.

மழை வேண்டி இறைவழிபாடு

மழை பெய்யாத பொழுது மழை தரவேண்டி இறையை வழிபட்டனர் பழந்தமிழர்கள் என்ற செய்தியும் சங்கப் பனுவல் வழியாக நாம் அறிவியல் ஆகின்றது. மழை இல்லாவிட்டால் தெய்வத்தை வேண்டி விழாவெடுத்தல் மழை மிகுதியாகப் பெய்தாலும்
அது நிற்கும்படி தெய்வத்தை வேண்டிக் கொள்வர். இவ்வழக்கம் தமிழர்களிடம் இருந்துள்ளதை,

"மலைவான் கொள்கென உயிர்ப்பலி தூஉய்
மாரி ஆன்று மழைமேக்கு உயர்க எனக்
கடவுள் பேணிய குறவர் மாக்கள்
பெயல் கண் மாறிய உவகையர்"
(புறநானூறு, கபிலர். பாடல் எண் :143)


என்ற பாடல் உணர்த்துகின்றது. நிறைய மழை பெய்ய வேண்டுமென்று பலிகொடுத்து வேண்டியதால், அடர்ந்த மழை பொழிகின்றது. நம் மழையைத் தாங்கமுடியாமல் அம்மழைப் போய்விட வேண்டும் என்று மீண்டும் வேண்ட மழை நின்று விடும்
என்பது இப்பாடலின் கருத்தாக அமைகிறது. எனவே மக்கள் மழையை வேண்டி இறைவனை வழி விட்டனர் என்பதும், மழை அதிகமாகப் பெய்ததால் மழையை நிறுத்த வேண்டும் என்று இறைவனிடம் வழிபட்டனர், என்பது கொண்டு அவர்களின்
இறைநம்பிக்கைப் பெறமுடிகின்றது.

காலத்தால் முற்பட்ட தொல்காப்பியத்தின் வாயிலாக திருமால், முருகன், இந்திரன், வருணன், கொற்றவை, சூரியன், சந்திரன் நெருப்பு போன்றவற்றைத் தெய்வங்களாக வணங்கி வந்தனர் பழந்தமிழர்கள் என்பதும், கூற்றுவன், பேய்,
பிசாசு,முதலியவைகளையும், தேவர்களையும் தெய்வங்களாக வழிபட்டு வந்தனர் என்பதனையும் சான்றுகள் வழி அறிய முடிகின்றது.

சங்க இலக்கியச் சான்றுகளின் வாயிலாகச் சிவன், பலதேவன், திருமால், முருகன், போன்ற தெய்வங்களைப் பற்றிய குறிப்புகளையும் தெய்வங்களை அவர்கள் வழிபட்ட தனையும் அறிய முடிகின்றது. இறந்தோரை நடுகல் நட்டு வழிபட்டு வணங்கிய தன்மையினையும் பெறமுடிகிறது. மாமிசம் மது போன்றவற்றைப் படைத்து வழிபடும் பழக்கமும்,பலியிடுதல் என்னும் மரபும் தமிழர்களிடையே காணப்பட்டதும் அறியப்படுகின்றது. தங்களின் செயல்கள் வெற்றி பெற வேண்டி வழிபடும் வழக்கமும் மக்களிடையே இருந்து வந்தது. அதுமட்டுமன்றி மழை வேண்டி இறைவனை வழிபட்டனர் பழந்தமிழர். மிகுதியாக மழை பெய்த காரணத்தினால் அது நிற்க வேண்டி இறைவனை வழிபட்டனர் என்ற செய்தியானது அவர்களின் இறை நம்பிக்கையை மேலும் வலுவூட்டிக் காட்டுகின்றது . எனவே பழந் தமிழர்களிடையே இறை நம்பிக்கையானது பழங்காலம் தொட்டே இருந்து வந்துள்ளது என்பதைத் தக்கச் சான்று ஆதாரங்களைக் கொண்டு நாம் அறிந்து உணர முடிகின்றது.

துணை நூல்

அகநானூறு மூலமும் உரையும் முதல் தொகுதி,
வர்த்தமானன் பதிப்பகம்
ஏ ஆர் ஆர் காம்ப்ளக்ஸ்
தியாகராய நகர்
சென்னை - 600017. ஆண்டு. 1999

புறநானூறு மூலமும் உரையும்
வர்த்தமானன் பதிப்பகம்
ஏ ஆர் ஆர் காம்ப்ளக்ஸ்
தியாகராய நகர்
சென்னை - 600017. ஆண்டு - 1999

மதுரைக்காஞ்சி
வர்த்தமானன் பதிப்பகம்
ஏ ஆர் ஆர் காம்ப்ளக்ஸ்
தியாகராய நகர்
சென்னை - 600017.ஆண்டு

குறுந்தொகை மூலமும் உரையும்
வர்த்தமானன் பதிப்பகம்
ஏ ஆர் ஆர் காம்ப்ளக்ஸ்
தியாகராய நகர்
சென்னை - 600017. ஆண்டு.- 1999

5. தொல்காப்பியம் தெளிவுரை
மணிவாசகர் பதிப்பகம்
சிங்கர் தெரு
பாரிமுனை சென்னை - 600108. மூன்றாம் பதிப்பு - 1999

* கட்டுரையாளர்: முனைவர் கோ. வசந்திமாலா, தமிழ்த்துறைல, இணைப்பேராசிரியர், பூ. சா. கோ. கலை அறிவியல் கல்லூரி, கோவை – 641014

 


This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 15 November 2020 01:05