வ.ந.கிரிதரனின் கட்டடக்கலைக்குறிப்புகள் 2: பேராசிரியர் நிமால் டி சில்வாவின் 'பாரம்பரியக் கட்டடக்கலை'யும் 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பும்'.

Sunday, 14 January 2018 14:47 - வ.ந.கிரிதரன் - அறிவியல்
Print

பேராசிரியர் நிமால் டி சில்வாமொறட்டுவைப் பல்கலைக்கழகத்தில் கட்டடக்கலை பட்டப்படிப்பினைப் படித்துக்கொண்டிருந்த காலத்தில் எங்களுக்குப் 'பாரம்பரியக் கட்டடக்கலை' (Traditional Architecture) என்னும் பாடத்தினை எடுத்தவர் பேராசிரியர் நிமால் டி சில்வா. இவர் கட்டடக்கலைஞரும் கூட. தனியாகக் கட்டடக்கலை நிறுவனமொன்றினையும் நடத்தி வந்தவர். இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்பட்ட பாரம்பரியக் கட்டடக்கலை பற்றிய விடயங்களில் இப்பாடத்தின் மூலம் எம் கவனம் திரும்பியது. இப்பாடம் உண்மையில் கட்டடக்கலையின் வரலாறு என்னும் பாடத்தின் துணைப்பாடமாகக் கற்பிக்கப்பட்டு வந்தது. தமிழ்ப்பகுதிகளில் கடைப்பிடிக்கப்பட்ட நாற்சார வீடுகள் பற்றி, தென்னிலங்கையில் கடைப்பிடிக்கப்பட்டு வந்த மண்ணால் நிரப்பப்பட்ட மரச்சட்டங்கள் கொண்டு கட்டப்பட்ட வீடுகள் (wattle and daub) பற்றியெல்லாம் அறியத்துணையாகவிருந்த பாடமிது. எனக்குப் பாரம்பரியக் கட்டடக்கலை மீது ஆர்வத்தினை ஏற்படுத்தியதில் பேராசிரியர் நிமால் டி சில்வாவுக்கு முக்கிய பங்குண்டு.

எப்பொழுதும் சிரித்த முகத்துடன் காணப்படும் நிமால் டி சில்வாவின் 'பாரம்பர்யக்கட்டடக்கலை' பாடத்தின் மூலம்தான் நான் முதன் முதலில் பண்டைய அநுராதபுர நகர அமைப்பு பற்றியும் முதன் முதலாக அறிந்துகொண்டேன். தொல்லியற் துறையில்  நன்கு அறியப்பட்ட ரோலன் சில்வா அவர்களின் (இவர் ஒரு கட்டடக்கலைஞரும் கூட) 'பண்டைய அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையொன்றினை பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் எமக்கு அறிமுகம் செய்தார். எவ்விதம் பண்டைய அநுராதபுர நகரமானது சந்தையினை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டதென்பது பற்றியும், நகரைச் சுற்றி இரு வேறு வட்ட ஒழுக்கில் எவ்விதம் தாதுகோபங்கள் கட்டப்பட்டன என்பது பற்றியும் விபரிக்கும் ஆய்வுக் கட்டுரை அது.  பேராசிரியர் ரோலன் சில்வா அவர்கள் பின்னர் இலங்கைத் தொல்பொருள் நிலையத்திணைக்களத்தின் தலைவராகவும், மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் விளங்கியவர்.

எனக்கு நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றி அறியும், ஆராயும் ஆர்வத்தை ஏற்படுத்திய காரணங்களிலொன்று பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் அறிமுகப்படுத்திய அக்கட்டுரை. அவர் அன்று அறிமுகப்படுத்திய ரோலன் சில்வாவின் 'அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையின் விளைவாக எனது ஆய்வு நூலான 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' தமிழகத்தில் ஸ்நேகா/மங்கை பதிப்பகம் (கனடா) வெளியீடாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு விடயத்துக்காகவே எப்பொழுதுமென் நினைவில் நிற்கும் ஆளுமைகளிலொருவராக பேராசிரியர் நிமால் டி சில்வா அவர்கள் விளங்குவார்.

இச்சமயத்தில் பெளத்த கட்டடங்கள், நகர அமைப்புகள் மற்றும் இந்துக்களின் நகர அமைப்பு, நகர அமைப்புகள் பற்றி குறிப்பாக அவற்றின் வடிவங்கள் பற்றிச் சிறிது நோக்குவது அவசியம். இது பற்றி எனது 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' நூலில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகளை இங்கு எடுத்து நோக்குவது நல்லது.

" இந்துக்களின் கட்டடங்களையும், பெளத்தர்களின் கட்டடங்களையும் நோக்குபவர்கள் ஒன்றினை இலகுவாக அறிந்து கொள்வார்கள். பெளத்த கட்டடங்கள், தாது கோபுரங்கள் போன்றவை வட்டவடிவில் அமைக்கப்பட்டன. இந்துக்களின் கட்டடங்களோ சதுர அல்லது செவ்வக வடிவங்களில் அமைக்கப்பட்டன. அநுராதபுர நகர, கட்டட அமைப்புத் துறையினை வட்ட வடிவம் எவ்வளவு தூரம் பாதித்துள்ளதென்பதை ரோலன் டி சில்வா என்ற சிங்களப் பேராசிரியர் ஆராய்ந்து தெளிவு படுத்தியுள்ளார். சந்தையை மையமாக வைத்து உருவான பண்டைய அநுராதபுர நகரைச் சுற்றி வட்ட ஒழுக்கில் வட்ட வடிவமான தாது கோபுரங்கள், இரு வேறு ஒழுக்குகளில் அமைக்கப்பட்டிருந்ததை அவரது ஆய்வுகள் புலப்படுத்தும். வட்ட வடிவம் இயக்கத்தை உணர்த்தும். தோற்றமும், அழிவும், இரவும், பகலும் இவ்விதமாக ஒருவித வட்ட ஒழுக்கில் நகரும் காலத்தை மேற்படி வட்டவடிவம் உணர்த்தும். மேலும் இவ்வட்ட வடிவம் நாம் வாழும் பூமிக்குரிய வடிவ இயல்பையும் குறிக்கும். பொருள் முதல்வாதக் கோட்பாட்டினை அதிகம் நம்பும் பெளத்தர்கள் வட்டவடிவத்தைத் தேர்ந்தெடுத்தது ஆச்சரியமானதொன்றல்ல.

பெளத்த கட்டடங்கள், தாது கோபுரங்கள் போன்றவை வட்டவடிவில் அமைக்கப்பட்டன.-

- பெளத்த கட்டடங்கள், தாது கோபுரங்கள் போன்றவை வட்டவடிவில் அமைக்கப்பட்டன.-

மாறாக சதுரவடிவம் ஓர் இறுதியான, தெளிவான வடிவம். வட்டத்தைப்போல் இது இயக்கத்தைப் புலப்படுத்துவதில்லை. இந்துக்கள் இப்பிரஞ்சத்தை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு போன்ற திசைகளால் உருவான சதுர வடிவான வெளியாகவும், அவ்வெளியில் நேரத்தின் பாதிப்பை இராசிகளாலும் உருவகித்தார்கள். நவீன பெளதிகம் கூறுவதைப் போல இந்துக்களும் இப்பிரஞ்சத்தை ஒருவித வெளி-நேர (Space- Time) அமைப்பாகத்தான் விளங்கி வைத்திருந்தார்களென்பது இதிலிருந்து புலனாகின்றது. இவ்விதம் இப்பிரஞ்சத்தைச் சதுர வடிவாக உருவகித்த இந்துக்கள் இவ்விதிகளுக்கமைய உருவாக்கப்பட்ட கட்டடங்கள், நகரங்கள் என்பவற்றையும் சதுர வடிவாகவே (அல்லது செவ்வக) அமைத்தார்களென்பது ஆச்சரியமானதொன்றல்லதான். மாறாக சதுரவடிவம் ஓர் இறுதியான, தெளிவான வடிவம். வட்டத்தைப் போல் இது இயக்கத்தைப் புலப்படுத்துவதில்லை. இந்துக்கள் இப்பிரபஞ்சத்தை வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு போன்ற திசைகளால் உருவான சதுரவடிவான வெளியாகவும், அவ்வெளியில் நேரத்தின் பாதிப்பை இராசிகளாலும் உருவகித்தார்கள். நவீன பெளதிகம் கூறுவதைப் போல் இந்துக்களும் இப்பிரபஞ்சத்தை ஒருவித வெளி(Space) நேர (Time) அமைப்பாகத்தான் விளக்கி வைத்திருந்தார்களென்பது புலனாகின்றது. இவ்விதம் இப்பிரபஞ்சத்தைச் சதுர வடிவாக உருவகித்த இந்த்துக்கள் இவ்விதிகளிற்கமைய உருவாக்கப்பட்ட கட்டடங்கள், நகரங்கள் என்பவற்றையும் சதுர வடிவாகவோ (அல்லது செவ்வக வடிவாகவோ) அமைத்தார்களென்பதும் ஆச்சரியமானதொன்றல்லதான். இவ்விதம் சதுரவடிவில் அமைக்கப்பட்ட 'வாஸ்து' புருஷமண்டலத்திற்கேற்ப நகரங்கள் அல்லது கட்டடங்கள் அமைக்கப்பட்டன. வாஸ்து புருஷனை இச்சதுர வடிவில் இழுத்துப் பிடித்து வைத்திருக்கும் தெய்வங்கள் ஒவ்வொருவரும் சிறுசிறு சதுரங்களாக உருவாக்கப்பட்டார்கள். மேற்படி சதுரவடிவான வாஸ்து புருஷ மண்டலம் மேலும் பல சிறுசிறு சதுரங்களாகப் பிரிக்கப்பட்டன. இத்தகைய சிறுசதுரங்கள் 'படா'க்கள் (Padas) என அழைக்கப்பட்டன. ஒவ்வொரு சிறு சதுரத்தையும் ஒவ்வொரு தெய்வம் ஆக்கிரமித்திருக்கும். வாஸ்து புருஷமண்டலத்தின் மையப்பகுதியில் பலசிறு சதூரங்களை உள்ளடக்கிய பெரிய சதுரமொன்று காணப்படும். இச்சதுரத்தை பிரம்மனிற்கு உருவகப்படுத்தினார்கள்."  ['நல்லூர் இராஜதானி நகர அமைப்பு', வ.ந.கிரிதரன், பக்கம் 49-55]

- இந்துக்களின் கட்டடங்களோ சதுர அல்லது செவ்வக வடிவங்களில் அமைக்கப்பட்டன. -

முதன் முறையாக பண்டைய அநுராதபுர நகர் அமைப்பைப்பற்றி நிமால் டி சில்வாவின் 'பாரம்பரியக் கட்டடக்கலை' பாடத்தின் மூலம அறிந்தபோது எனக்கு இலங்கைத்தமிழர்களின் ஆட்சியிலிருந்த பண்டைய நகர்களின் நகர அமைப்பு பற்றிய சிந்தனைகளோடின. எனக்குத் தமிழர்களின் நகர அமைப்பு பற்றிய சிந்தனைகள் என் மாணவப்பருவத்தில் வாசித்த பல தமிழகத்து எழுத்தாளர்களின் வரலாற்றுப்புனைகதைகளை வாசித்த சமயங்களில் ஏற்பட்டிருக்கின்றன. தஞ்சாவூர், பழையாறை, குடந்தை, காஞ்சிபுரம், புகார், மதுரை, வஞ்சி என்று பண்டையத்தமிழ் அரசர்களின் தலைநகர்கள் பற்றிய கனவுகளில் திளைத்திருக்கின்றேன். சங்க இலக்கியங்களில் , சிலப்பதிகாரம் போன்ற காப்பியங்களில் கூறப்பட்டுள்ள அத்தலைநகர்களின் நகர அமைப்புகள் பற்றிய தகவல்கள் என்னைப் பிரமிப்படைய வைத்திருக்கின்றன. ஆனால் அதே சமயம்  இலங்கையில் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் சிறந்து விளங்கிய அநுராதபுரம், யாப்பக்கூவா, பொலனறுவா போன்ற நகர்களின் அமைப்புகள் பற்றியெல்லாம் தகவல்கள், ஆய்வுகள் செய்யப்பட்டிருக்கையில் ஈழத்தமிழர்களின் தலைநகர்கள் பற்றியெல்லாம் போதிய தகவல்கள் இல்லாமலிருந்தது எனக்கு வியப்பினைத்தந்தது. ஏன் அண்மைக்காலத்தில் சுமார் ஐநூறு வருடங்களுக்கு முன்னர் சிறந்த விளங்கிய நல்லூர் இராஜதானி பற்றியெல்லாம் கூடப் போதிய தகவல்கள் இல்லையென்பது வியப்பினைத் தந்த அதே சமயம் வரலாற்றை, வரலாற்றுச்சின்னங்களைப்பேணுதல் போன்ற விடயங்களில் தமிழர்கள் காட்டிய அசிரத்தையையும் அந்நிலை வெளிப்படுத்தியது. பழம் பெருமை பேசும் தமிழர்கள் வரலாற்றைப்பேணுவதில் காட்டிய அசிரத்தை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல. இவ்விடயத்தில் அவர்கள் சிங்கள மக்களிடமிருந்து பல விடயங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். வரலாற்றுச்சின்னங்களைப்பேணுவதற்கு அவர்கள் ஆட்சியிலிருந்த அந்நியராட்சியைக் குறை கூறலாம். அவ்விதமானால் ஏன் அவர்களால் தம் வரலாற்றை முறையாகப் பதிவு செய்து வைத்திருக்க முடியவில்லை என்னும் கேள்விக்குப் பதில் கூற முடியாது போய் விடும். இன்றும் மயில்வாகனப்புலவரின் பல வழுக்களுள்ள வரலாற்று நூலொன்றுதானே ஆதாரமாக எம்மிடம் இருக்கிறது? ஏன் யாருமே தமிழர்களின் வரலாற்றை முறையாகப் பதிவு செய்திருக்கவில்லை? இதற்கு முக்கிய காரணமாகத் தமிழர்களின் அசிரத்தையையே கூறுவேன். இதற்கு அண்மைக்கால உதாரணங்களிலொன்றாகக் கீழ்வரும் விடயத்தைக் கூறுவேன்.

நாற்பதுகளில் கோப்பாயில் தமிழ் அரசர்களின் அரண்மனை இருந்ததாகக்கருதப்படும் கோப்பாய்க் கோட்டை என்னும் பகுதி பற்றி சுவாமி ஞானப்பிரகாசர் வரலாற்று ஆய்விதழொன்றில் கட்டுரையொன்று எழுதியிருக்கின்றார்.  இது பற்றி எழுபதுகளின் இறுதியில் அல்லது எண்பதுகளின் ஆரம்பத்தில் கலாநிதி கா. இந்திரபாலாவை யாழ் பல்கலைக்கழகத்தில் சந்தித்தபொழுது முதன்முறையாக அறிந்துகொண்டேன். அதன்பின் அப்பகுதியைப்பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். திருமதி வூட்ஸ்வேர்த் என்பவருக்குச் சொந்தமாக விளங்கிய பழைய கோட்டை (Old Castle) என்னும் அப்பகுதி பல்வேறு பகுதிகளாகப்பிரிபட்டுச் சிறுத்துப்போயிருந்தது. இதனைப்பற்றிச் சிறு கட்டுரையொன்றும் வீரகேசரியில் எழுதியிருக்கின்றேன். ஏன் சுவாமி ஞானப்பிரகாசரின் காலத்தில் அவரால் சுட்டிக் காட்டப்பட்ட பின்னரும் இன்றுவரை அப்பகுதி முறையாகப்பாதுகாக்கப்படவில்லை? தமிழ் அரசியல்வாதிகள், ஆய்வாளர்கள் இவ்விடயத்தில் என்ன நடவடிக்கைகள் இதுவரையில் அப்பகுதியைப் பாதுகாப்பது பற்றி எடுத்தார்கள்? எவ்விதமான ஆய்வுகளை இதுவரையில் செய்திருக்கின்றார்கள்? இவற்றையெல்லாம் செய்வதற்கு ஏன் யாரும் பெரிதாக முயற்சிகள் செய்யவில்லை? வரலாற்றுச்சின்னங்களைப்பாதுகாப்பதில் எம்மவர்கள் காட்டும் அசிரத்தைக்கு இதுவோர் மிகச்சிறந்த உதாரணம்.

இந்நிலையில்தான் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றிய என் கவனத்தைத்திருப்பினேன். தர்க்கரீதியாக வரலாற்று நூல்கள் கூறும் தகவல்கள், வெளிக்கள ஆய்வில் கிடைக்கப்பெற்ற காணிப்பெயர்கள், வரலாற்றுச்சின்னங்களின் அடிப்படையில், பண்டைய கட்டடக்கலை ,நகர அமைப்பு பற்றிக் கிடைக்கப்பெறும் தகவல்கள் அடிப்படையில் என்னால் முடிந்த அளவுக்கு இந்நூலில் விளக்கியுள்ளேன். இவ்வகையில் இந்நூல் ஒரு முதனூல். இதுவரை யாரும் செய்யாததொன்று. பொதுவாக ஈழத்துத் தமிழ் மன்னர்களின் வரலாறு  பற்றி, தலைநகர்கள் பற்றி கிடைக்கப்பெறும் வரலாற்று நூல்களில் , கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆனால் இதுவரையில் இலங்கைத்தமிழ் மன்னர்கள் காலத்தில் புகழ்பெற்று இராஜதானியாக விளங்கிய நகர் பற்றி ஆய்வுக்கண்ணோட்டத்தில் அணுகப்பட்டிருப்பது இதுவே முதற் தடவை. அன்றைய நல்லூர் இராஜதானி நகர அமைப்பு இன்றைய நகர அமைப்பில் எவ்வாறு அமைந்திருந்தது என்பதைத் தர்க்கரீதியாக அணுகியிருக்கின்றேன் எனது இந்த ஆய்வில். எதிர்காலத்தில் இன்னும் பலர் விரிவாக ஆய்வுகளைச் செய்வதற்கு இந்நூல் அணுகுமென்பது என் எண்ணம். அவா.


பேராசிரியர் ரோலன் சில்வாரோலன்ட் சில்வாவின் 'பண்டைய அநுராதபுர நகர அமைப்பு' ப

நல்லூர் இராஜதானி நகர அமைப்பு பற்றிய ஆய்வுக்கு என்னைத்தூண்டிய காரணிகளில் முக்கியமான காரணி பேராசிரியர் நிமால் டி சில்வா தனது 'பாரம்பரியக் கட்டடக்கலை' பாடத்தில் அறிமுகப்படுத்திய ரோலன்ட் சில்வாவின் 'பண்டைய அநுராதபுர நகர அமைப்பு' பற்றிய கட்டுரையே. அந்த வகையில் அவருக்கு நான் என்றுமே நன்றிக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

உசாதுணை:
1. ரோலன் சில்வாவின் பண்டைய அநுராதபுர நகர் அமைப்பு பற்றிய கட்டுரை.
2. சுவாமி ஞானப்பிரகாசரின் கோப்பாய்ப் பழைய கோட்டை பற்றிய கட்டுரை.
3. வ.ந.கிரிதரனின் 'கோப்பாய்ப் பழைய கோட்டையின் இன்றைய கோலம்' கட்டுரை (வீரகேசரி)
4. வ.ந.கிரிதரனின் 'நல்லூர் இராஜதானி நகர அமைப்பு' ஆய்வு நூல்.
5. V.N.Giritharan  - Nallur Rajadhani: City Layout  [ https://vngiritharan23.wordpress.com/category/architecture-town-planning ]

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 14 January 2018 15:08