நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 41

Saturday, 23 May 2020 22:54 - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - முனைவர் ர. தாரணி பக்கம்
Print

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


அத்தியாயம் நாற்பத்தி ஒன்று

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 41வயதான அந்த மருத்துவர் மிகவும் கனிவு ததும்பும் முகத்துடன் நல்லவராகக் காணப்பட்டார். நானும், எனது சகோதரனும் ஸ்பானிஷ் தீவில் நேற்று வேட்டையாடிக்கொண்டு, நாங்கள் கண்டெடுத்த சிறு தோணியில் இரவு தங்கினோம் என்று அவரிடம் கூறினேன். இரவுத் தூக்கத்தில் ஏதோ கனவு கண்டதன் காரணமாகத் தெரியாத்தனமாக தனது காலால் துப்பாக்கியின் விசையை உதைத்ததால், அது விடுபட்டு அவனின் கெண்டைக்காலில் தோட்டா பாய்ந்து விட்டது என்றும் சொன்னேன். எனவே, என்னுடன் அந்த தீவுக்கு வந்து அவனின் காலைச் சரி செய்ய வேண்டும் எனவும், இது பற்றி யாருக்கும் தெரிவிக்கக் கூடாதென்றும் நான் அந்த மருத்துவரிடம் வேண்டிக் கொண்டேன். ஏனெனில், அன்றைய மாலை வேளையில் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் அளவு நாங்கள் தயாராகி, வீட்டில் உள்ளோர் அனைவரையும் வியப்பிலாழ்த்தப் போவதாக நாங்கள் திட்டமிட்டு வைத்திருக்கிறோம் என்று மேலும் கூறிச் சமாளித்தேன்.

"உங்கள் வீட்டில் உள்ளவர்கள் யார்?"

"கீழ் பக்கமாக வசிக்கும் பிலிப்ஸ் குடும்பத்தார்."

"ஓ!" அவர் ஆச்சரியமடைந்தார். ஒரு நிமிடம் யோசித்த அவர் மீண்டும் கேட்டார், "துப்பாக்கிக் குண்டு அவனை எப்படித் துளைத்ததென்று நீ கூறினாய்?"

"அவனுக்கு ஒரு கனவு வந்தது," நான் கூறினேன்," அதனால், அந்த துப்பாக்கி வெடித்து தோட்டா அவனைத் துளைத்தது."

"உண்மையிலேயே மிகவும் விசித்திரமான கனவுதான்" அவர் கூறினார்.

இவ்வாறு கூறியவாறே, அவரின் லாந்தர் விளக்கை ஏற்றி வைத்து, குதிரைச் சேணத்தில் பைகளை வைத்துத் தயாராகி, எங்களின் சிறிய படகு இருக்கும் திசை நோக்கி வந்தோம். ஆனால், படகைப் பார்த்ததுமே அதன் தோற்றம் அவருக்குப் பிடிக்கவில்லை. ஒருவர் அமர்ந்து செல்ல அதிகப்படியான இடம் கொண்ட படகானாலும், இருவர் அமர்ந்து செல்லப் பாதுகாப்பானது அல்ல என்று அவர் கூறினார்.

 

"ஓ. பயப்படாதீர்கள் சார். இதற்குமுன் அது எங்கள் மூன்று பேரைத் தாங்கியிருக்கிறது."

"மூன்று? எந்த மூன்று பேர்?"

"ஏன், நான், சிட் மற்றும் ........ மற்றும் .... அந்த துப்பாக்கி. அதைத்தான் நான் சொல்ல வந்தேன்."

"ஓ!" அவர் கூறினார்.

அவரின் காலை வைத்து படகின் பக்கப்புற பலகையை ஒரு முறை அசைத்துப் பார்த்து, பின் தனது தலையை அதிருப்தியுடன் ஆட்டிக் கொண்டார். வேறு ஏதேனும் நல்ல படகு பெரியதாகப் பார்க்கலாம் என்று நினைப்பதாக அவர் கூறினார். ஆனால், அங்கிருந்த மற்ற படகுகள் சங்கிலி கொண்டு பிணைக்கப்பட்டிருந்தன. எனவே, எனது படகை எடுத்துக் கொண்ட அவர், தான் திரும்பி வரும்வரை என்னை அங்கேயே காத்திருக்கச் சொன்னார். காட்டுக்குள் ஏதேனும் வேட்டையாடிக்கொண்டிருக்கலாம் அல்லது நான் விரும்பினால் வீட்டுக்குச் சென்று இன்ப அதிர்ச்சி கொடுக்கத் தேவையான அனைத்தையும் தயார் நிலையில் வைக்கக் கூடச் செய்யலாம் என்று அவர் கூறினார். நான் அதை விரும்பவில்லை என்று அவரிடம் கூறிவிட்டு, தோணியை அவர் சென்று கண்டுபிடிக்கும் வழியைக் கூறினேன். பின்னர், அங்கிருந்து அவர் சென்றார்.

வெகு விரைவிலேயே, எனக்கு ஒரு யோசனை உதித்தது. மருத்துவரால் டாமின் காலை விரைவாகச் சரி செய்ய முடியவில்லையெனில் என்ன ஆகும்? காயம் சரியாக மூன்று அல்லது நான்கு நாட்கள் எடுத்துக் கொண்டால் என்ன செய்வது? நாங்கள் என்ன செய்ய நேரிடும்? அவர் எங்களைப் பற்றி அனைவரிடமும் கூறும் வரை அங்கேயே இருப்பதா? இல்லை, ஐயா, இல்லை! நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்குத் தெரிந்துவிட்டது. திரும்பி வந்து இன்னும் சிறிது வேலை செய்ய வேண்டியிருக்கிறது என்று அவர் கூறும்வரை இங்கே காத்திருக்கப் போகிறேன். பிறகு, நான் கீழ் திசை நோக்கி, தேவைப்பட்டால் நீச்சல் கூட அடித்துச் செல்ல வேண்டும். பின்னர், அந்த மருத்துவரைப் பிடித்துத் தோணியில் கட்டி வைத்து சிறிது தூரம் நதியினுள்ளே தள்ளிக் கொண்டு செல்லவேண்டும். டாமின் காயத்தை அவர் சரி செய்த பின்னர், அவரின் வேலைக்கான ஊதியத்தைக் கொடுத்து அல்லது எங்களிடம் உள்ள அனைத்துப் பணத்தையும் அவருக்குக் கொடுத்து அவரைக் கரையில் கொண்டு சேர்க்க வேண்டும்.

எனவே, மரக்கட்டைக் குவியல் உள்ளே ஊர்ந்து சென்று, ஒரு குட்டித்தூக்கம் போட்டேன். கண் விழித்துப் பார்த்தபோது, ஆதவன் என் தலையின் மேல் ஒளிவெள்ளத்தைப் பாய்ச்சிக் கொண்டிருப்பதைக் கண்டேன். குதித்தெழுந்த நான் அந்த மருத்துவரின் வீடு நோக்கி ஓடினேன். இரவில் எங்கோ வெளியில் சென்ற மருத்துவர் இன்னமும் திரும்பி வரவில்லை என்று அவர் வீட்டார் கூறினார்கள். டாமின் நிலைமை மிகவும் மோசமடைந்திருக்கக் கூடும் என்று எனக்கு நானே கூறிக்கொண்டேன். எனவே, அப்போதே அந்தத் தீவுக்குச் சென்று பார்த்துவிடவேண்டியதுதான் என்று முடிவு கட்டினேன். வீடு இருந்த தெருமுனைக்கு விரைவாக ஓடிச் சென்ற நான் சைலஸ் சித்தப்பாவின் தொந்தியில் நேராகச் சென்று முட்டி கொண்டேன்.

"என்ன இது, டாம்! இத்தனை நேரம் நீ எங்கு சென்றிருந்தாய், போக்கிரிப் பயலே?" அவர் கோபத்துடன் கேட்டார்.

"நான் எங்கும் செல்லவில்லையே," நான் கூறினேன், "சிட்டும், நானும் தப்பி ஓடி வந்த அந்த நீக்ரோவைத் தேடிக் கொண்டு அலைந்துகொண்டிருந்தோம்."

"ஏன், எங்கே தொலைந்து போனாய்?" கோபம் குறையாத அவர் கேட்டார், "உங்கள் சித்தி மிகவும் கவலையில் ஆழ்ந்துள்ளாள்."

"அவள் கவலை கொள்ளத் தேவையில்லை," நான் கூறினேன், "ஏனெனில் நாங்கள் இருவரும் நலமாகத்தான் இருக்கிறோம். நேற்றிரவு ஓடிக் கொண்டிருந்த மனிதர்களையும், நாய்களையும் பின் தொடர்ந்து நாங்களும் ஓடினோம். ஆனால், அவர்கள் எங்களை முந்திக் கொண்டு வேகமாக ஓடி எங்கள் கண்களிலிருந்து மறைந்து விட்டார்கள். எனவே, ஒரு சிறு படகை எடுத்துக் கொண்டு அவர்களைப் பின்தொடர்ந்து செல்ல வேண்டி நதியின் குறுக்காகச் சென்றோம். ஆயினும், அவர்களைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை. படகைச் செலுத்திக் கொண்டே, கரையோரமாகவே அங்குமிங்குமாக அவர்களைத் தேடித் திரிந்த நாங்கள் ஒரு கட்டத்தில் களைத்துச் சோர்ந்து விட்டோம். பின்னர், படகைக் கட்டி வைத்து விட்டு, அங்கேயே அசந்து தூங்கிவிட்ட நாங்கள் இப்போது ஒரு மணிநேரம் முன்புதான் கண் விழித்தோம். அப்படியே துடுப்பை வலித்து கொண்டு வந்து, என்ன செய்தி என்று தெரிந்து கொள்ள இங்கே வந்தோம். அஞ்சலகம் சென்று என்ன நடந்ததென்று தெரிந்து கொள்ள சிட் அங்கே சென்றிருக்கிறான். நான் அப்படியே பிரிந்து வந்து ஏதேனும் சாப்பிடக் கிடைக்குமா என்று பார்க்க வந்தேன். அதன் பின்னர் வீடு வந்திருப்போம்."

இவ்வாறு கூறிய பின்னர், சிட்டை அழைத்துச் செல்ல நாங்கள் அஞ்சலகம் சென்று பார்த்தோம். நான் எதிர்பார்த்தது போலவே ,அவனை அங்கு காணவில்லை. அந்த முதியவருக்கு ஒரு கடிதம் அஞ்சலகத்தில் இருந்தது. அதை எடுத்துக் கொண்டு சிறிது நேரம் சிட் வருவான் என்று காத்திருந்தோம். ஆனால், சிட் வந்து சேரவில்லை. எனவே, குதிரை வண்டியில் என்னை அவருடன் கூட்டிக் கொண்டு செல்வதாகவும், சிட் நடந்து வந்து வீடு சேரட்டும் அல்லது அவனது வேடிக்கை விளையாட்டுகளை முடித்துக் கொண்டு சிறு படகை எடுத்துக் கொண்டு வந்து சேரட்டும் என்றும் அந்த முதியவர் உரைத்தார். சிட் வருவான் என்று அங்கே காத்திருக்க நான் விரும்பியதை அவரிடம் எடுத்துக் கூறியும் அவர் ஒத்துக் கொள்ளவில்லை. இனி அங்கே காத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை என்றும் அவருடன் நான் சென்று சேல்லி சித்தியை பார்த்தால் மட்டுமே நாங்கள் நன்றாக இருக்கிறோம் என்று தெரிந்து அவள் கொஞ்சம் சமாதானமடைவாள் என்றும் அவர் பிடிவாதமாகக் கூறிவிட்டார்.

நாங்கள் வீடு திரும்பியதும், என்னைக் கண்ட சேல்லி சித்தி மிகுந்த மகிழ்ச்சியடைந்தாள். சிரிப்பதையும், அழுவதையும் ஒரே சமயத்தில் செய்தாள். என்னை இறுக அணைத்துக் கொண்டு, அவளின் விசேஷமான செல்ல அடிகளில் ஒன்றை எனக்கு வலிக்காதவாறு கொடுத்தாள். சிட் வீடு திரும்பினாலும், இதையேதான் செய்யப் போவதாகவும் கூறினாள்.

அந்த இடம் முழுதும் விவசாயிகள் மற்றும் அவர்களின் மனைவிகள் என ஒரு கூட்டமாய் குழுமியிருந்தார்கள். அவர்கள் அனைவரும் உணவு உண்ணுவதற்காகக் கூடியிருந்தார்கள். இதுவரை நான் கேட்டிராத அளவுக்கு அவர்கள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். இருந்ததிலேயே, வயதான மிஸஸ். ஹாட்ச்கிஸ் மாதிரி மோசம் யாருமில்லை. வளவளவென்று முழு நேரமும் எதையோ பேசிக் கொண்டிருந்தாள்.

"நல்லது, சகோதரி பிலிப்ஸ்! நான் அந்த அறை முழுதும் சல்லடை போட்டுத் துளைத்து சலித்தெடுத்து விட்டேன். அந்த நீக்ரோ ஒரு அரைப் பைத்தியம் போல என்று நான் சகோதரி டேம்ரெல்லிடம் கூறினேன். இல்லையா, சகோதரி டேம்ரெல்? அவன் ஒரு பைத்தியம். இதே வார்த்தையைத்தான் நான் கூறினேன். நான் கூறியது உங்கள் அனைவருக்கும் கேட்டிருக்கும். அவன் ஒரு பித்துக்குளி. அந்த அறையிலிருந்த அனைத்துப் பொருட்களுமே அவன் ஒரு வீணாய் போன பித்துக்குளி என்றுதான் எடுத்துரைத்தது.”

“அந்தப் பாறாங்கல்லைதான் கொஞ்சம் பாருங்களேன்! நல்ல புத்தியில் உள்ள உயிருள்ள மனிதன் இப்படிப் போய் ஒரு பாறாங்கல்லில் கிறுக்கி வைப்பானா? "இங்கே ஒரு மனிதன் தன் இதயம் வெடித்து இறந்தான்" அத்துடன் இங்கே ஒருவன் முப்பத்தியேழு வருடங்களாகக் காய்ந்து மடிந்து கொண்டிருக்கிறான்" கூடவே, வேறு என்னவோ லூயிஸின் உண்மையான வாரிசு என்ற பிதற்றல் எல்லாம் வேறு அதில் உள்ளது. அவனுக்குப் பைத்தியம் முற்றிப் போன நிலைமையில் இருந்திருக்கிறது என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். அதுதான் நான் முதலில் சொன்னது. அதுதான் நான் மத்தியிலும் சொன்னது. அதுதான் நான் முழு நேரமும் சொல்லிக் கொண்டே இருப்பதும் ஆகும். பைபிளில் வரும் பழையகால முட்டாள் பாபிலோனிய மன்னன் போலவே இவனும் பித்துக்குளியாக இருந்திருக்கிறான் என்றுதான் நான் சொல்கிறேன்."

"அதுவும் கந்தலால் ஆன அந்த ஏணியை நீங்கள் பார்க்கவேண்டுமே, சகோதரி ஹாட்ச்கிஸ்!" முதிய மிஸஸ் டேம்ரெல் கூறினாள், "என்னவொரு அலங்கோலம், கடவுளே! அதை வைத்துக் கொண்டு அவன் என்னதான் ........."

"இதைத்தான் நான் ஒரு நிமிடம் முன்பு சகோதரி அட்டர்பாக் அவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தேன். அவர்களும் அதைப்பற்றித்தான் பேசிக் கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்த கந்தல்துணி ஏணியைப் பார்த்துவிட்டு, என்ன கூறினார்கள் தெரியுமா? " இதைத்தான் கொஞ்சம் பாருங்களேன். என்னதான் தேவைப்பட்டது அந்த நீக்ரோவுக்கு? ஷ் அவர்கள் சகோதரி ஹாட்ச்கிஸ், அவர்கள் ............"

"ஆனால், எப்படித்தான் அந்தப் பாறாங்கல்லை அவர்கள் உள்ளே கொண்டு சென்றார்களோ, என்னமோ? யார் அந்தத் துவாரத்தை உருவாக்கியது? யார் ......."

"என்னுடைய எண்ணமும் அதுவேதான், சகோதரர் பென்ராட்! நான் அதைத்தான் சொல்லிக் கொண்டிருந்தேன் - அந்த கரும்புச் சர்க்கரை இனிப்பை கொஞ்சம் என் அருகே கொஞ்சம் தள்ளி விடுகிறீர்களா- ஒரு நிமிடம் முன்பு சகோதரி டன்லேப்பிடம் நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன் என்றால், மிகப் பெரிய பாறாங்கல்லை அவர்கள் எப்படி நகர்த்திக் உள்ளே கொண்டு சென்றார்கள் என்பது பற்றித்தான். அதுவும் எந்த உதவியும் இல்லாது. நன்றாக யோசியுங்கள். எந்த உதவியும் இல்லாது என்று கூறினேன். அதுதான் எப்படி என்று நான் தெரிந்து கொள்ள வேண்டும். வேறு மாதிரி என்னிடம் கூறாதீர்கள். அவர்களுக்கு உதவி கிடைத்திருக்கிறது. அதுவும் அபரிதமான உதவி கிடைத்திருக்க வேண்டும். நான் சொல்வதை நன்கு கேட்டுக் கொள்ளுங்கள். கண்டிப்பாக ஒரு டஜன் மனிதர்களாவது அந்த நீக்ரோவுக்கு உதவி புரிந்திருக்க வேண்டும். யார் அவ்வாறு அவனுக்கு உதவியது என்று தெரிந்து கொள்ள, இந்த பண்ணையில் உள்ள ஒவ்வொரு நீக்ரோவின் தோலையும் உரிக்க வேண்டும் என்று நான் கூறுகிறேன். அத்துடன்..............."

"ஒரு டஜன் என்று நீங்கள் கூறுகிறீர்கள். நாற்பது பேர் சேர்ந்திருந்தால் கூட மொத்த வேலையையும் முடித்திருக்க முடியாது. அங்கிருந்த பேனாக்கத்திகள், ரம்பம் போன்ற பொருட்களை நீங்கள் கண்டிருக்க வேண்டுமே! எத்தனை முன்னெச்சரிக்கையுடன் அந்தச் செயல்கள் செய்யப்பட்டுள்ளன. மரக்கட்டிலின் காலை அந்தப் பொருட்கள் கொண்டு சீவி அறுத்திருக்கிறார்கள். ஆறு மனிதர்கள் முழுதாக ஒரு வாரம் முழுக்க அதைச் செய்திருக்க வேண்டும். படுக்கையின் மீதிருந்த அந்த வைக்கோல் பில்லினால் ஆன அந்த நீக்ரோ போன்ற பொம்மையை நீங்கள் பாருங்கள், அடேங்கப்பா! அப்புறம், பாருங்கள் ..............."

"நீங்கள் அதைக் கூறிவிட்டீர்கள், சகோதரர் ஹைடவர்! சகோதரர் பிலிப்ஸிடம் நான் சொல்லியது போலத்தான் இருக்கிறது. "ஹேய்! நீங்கள் அது பற்றி என்ன நினைக்கிறீர்கள், சகோதரி ஹாட்ச்கிஸ்? என்று அவர் கூறினார். "எது பற்றி நினைப்பது, சகோதரர் பிலிப்ஸ்" என்று நான் கூறினேன். "கட்டிலின் கால்பகுதி இழைக்கப்பட்டது பற்றி" என்று அவர் கூறினார். "அது பற்றி நினைப்பதா?" நான் கேட்டேன். "அது தானாகவே அறுக்கப்பட்டிருக்காது. யாரோ ஒருவர்தான் அதை அறுத்திருக்க வேண்டும். அதுவே என் கருத்து. வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள். அல்லது விட்டுவிடுங்கள். அதில் ஒன்றும் பெரிய வித்யாசம் இல்லை." நான் கூறினேன். "ஆனால், அதுதான் என் கருத்து. இதை விடச் சிறந்த கருத்து ஏதேனும் சொல்ல யாரவது இருந்தால், சொல்லுங்கள். அதையும்தான் கேட்கலாம்." நான் கூறினேன். சகோதரி டன்லேப்பிடம் நான் இவ்வாறு கூறினேன்."

"அடேங்கப்பா! ஒரு வீடு நிறைய நீக்ரோக்கள் நான்கு வாரங்களாக ஒவ்வொரு இரவும் அந்த வேலையைச் செய்திருக்க வேண்டும், சகோதரி பிலிப்ஸ்! அந்த மேல்சட்டையைக் கொஞ்சம் கவனியுங்கள். அதன் ஒவ்வொரு சிறு பகுதியும் ஆப்பிரிக்கர்கள் பயன்படுத்தும் சங்கேத பாஷை ரத்தம் கொண்டு எழுதப்பட்டிருக்கிறது. ஒரு தோணி நிறைய ஆட்கள் இதற்காக முழு நேரமும் வேலை பார்த்திருக்க வேண்டும். ஏன், யாராவது அது முழுதும் எனக்குப் படித்துக் காட்டினால், அவர்களுக்கு நான் இரண்டு டாலர்கள் இனாமாகக் கொடுப்பேன். அப்புறம், அதை எழுதிய நீக்ரோ கும்பலை சவுக்கால் விளாசித் தள்ளி அவர்கள் .............."

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 41

"அவனுக்கு உதவி செய்ய நிறைய ஆட்கள் இருந்திருக்கிறார்கள், சகோதரர் மார்பிள்ஸ்! நல்லது! நீங்கள் கொஞ்ச நாட்கள் முன்பு இந்த வீட்டில் இருந்து பார்த்திருக்கவேண்டும் என்று நினைப்பதாக நான் யூகிக்கிறேன். ஏன், எங்கெல்லாம் கை வைக்க முடியுமோ, அங்கெல்லாம் கை வைத்து தங்கள் வரிசையைக் காண்பித்து விட்டார்கள். எல்லா நேரமும் அவர்களைக் கண்காணித்துக் கொண்டேதான் இருந்தோம் என்றும் தெரிந்து கொள்ளுங்கள். கொடியில் காயப் போட்டிருந்த மேல்சட்டையை யாருக்கும் தெரியாமல் உருவி விட்டார்கள். அந்த ஏணி செய்ய உபயோகப்படுத்திய துணியை, எத்தனை முறை எங்கிருந்து திருடினார்கள் என்று கூறவே முடியாது போல இருக்கிறது. மாவு, மெழுகுதிரிகள், மெழுகுதிரிப் பீடங்கள், மேசைக் கரண்டிகள், பழங்காலத்து பெரிய பாத்திரம், அப்புறம் என்னுடைய ஒரு புது காலிகோ உடை, இப்போது என்னால் நினைவு படுத்திச் சொல்லமுடியாத இன்னும் இது போல ஆயிரம் பொருட்கள் எல்லாம் தொலைந்து விட்டன. இப்போது உங்களுக்குச் சொல்கிறேன், கேளுங்கள்! சைலஸ், டாம், சிட் மற்றும் நானும் சேர்ந்து பகலும் இரவும் என முழுநேரமும் கண்காணித்துக் கொண்டே இருந்தோம். ஆயினும், எங்கள் யாருடைய கண்களிலும் அவர்கள் சிக்கவேயில்லை. இதோ, இப்போது, கடைசி நிமிஷங்களில், நம் அனைவரின் கண்களிலும் மண்ணைத் தூவிவிட்டு, சாதுர்யமாகத் தப்பித்து விட்டார்கள். நம்மை ஏமாற்றியதோடு மட்டுமல்லாது, இந்திய பிராந்தியத்துக்குட்பட்ட கொள்ளைக்காரர்கள் கண்ணிலும் மண்ணைத் தூவியுள்ளார்கள். பதினாறு ஆண்கள், இருபது நாய்கள் விடாமல் துரத்தியபோதும் கூட, மிகவும் ஜாக்கிரதையாகவும், பாதுகாப்பாகவும், அந்த நீக்ரோவைக் கடத்திக் கொண்டுபோயிருக்கிறார்கள்.”

“நான் சொல்வதைக் கேளுங்கள். நான் கேள்விப்பட்டதிலேயே மிகவும் விசித்திரமான நிகழ்வு இதுதான், அம்மாடியோவ்! ஏன், பேய்கள் கூட இத்தனை சாதுர்யமாகவும், நேர்த்தியாகவும் காரியம் செய்திருக்க இயலாதுதான். ஒரு வேளை, அவைகள் அறிவுமிக்க பேய்களாகக் கூட இருக்கலாம் என்று நான் கணிக்கிறேன். ஏனென்றால், இந்த வட்டாரத்திலேயே, நமது நாய்களின் காவல் போன்று சிறந்த விஷயம் எதுவுமே கிடையாது. அப்படிப்பட்ட நாய்கள் கூட இவர்களின் வழித்தடத்தை கண்டுபிடிக்க முடியாது திணறிப் போனது புதிராக உள்ளது. உங்களால் முடிந்தால், இது பற்றி எனக்கு விளக்கம் சொல்லுங்கள். உங்களில் யாரேனும் ஒருவர் கூறுங்கள், பார்க்கலாம்!"

"ஆம். இந்த சந்தேகம் எல்லாவற்றையும் அடித்து விடுகிறது."

"அடக் கடவுளே! நான் ஒருபோதும் ..........."

"எனவே, எனக்கு உதவுங்கள். நான் மாட்டேன் ....."

"வீட்டுத் திருடர்களுடன் சேர்ந்து ..............."

"அம்மா சாமி! இப்படி ஒரு இடத்தில் வாழவே எனக்கு பயமாக இருக்கிறது ............"

"வாழப் பயம்! ஏன், எனக்கு எந்த அளவு பயம் என்றால், படுக்கைக்குச் செல்ல பயம். படுத்துறங்கப் பயம், எழுந்திருக்கப் பயம், உக்காரப் பயம், நிற்கப் பயம் என்று எல்லாமே பயம் மயம், சகோதரி ரிட்ஜ்வே! ஏன், அவர்கள் எதை வேண்டுமானாலும், திருடி, நம் ----------- அடக் கடவுளே! நேற்றிரவு நள்ளிரவு நெருங்கும் நேரம் என்ன ஒரு மனநிலைமையில் நான் இருந்திருப்பேன் என்று மட்டும் யோசித்துப் பாருங்கள்! வீட்டில் உள்ள யாரையேனும் அவர்கள் திருடிச் சென்றுவிடக் கூடாது என்று நான் எத்தனை வேண்டுதல் கடவுளிடம் வைத்தேன் என்று எனக்கு மட்டுமே தெரியும்.”

“ஒரு கட்டத்தில் எதையுமே நேராகச் சிந்திக்கும் திறனை நான் இழந்து விட்டேன் என்றுதான் கூறவேண்டும். இப்போது பகல் வெளிச்சத்தில் நான் நினைத்தது எல்லாமே முட்டாள்தனமாகத் தெரிகிறது. ஆனால், இரண்டு அப்பாவிச் சிறுவர்கள் மேல் தளத்தில் தனி அறையில் அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று எனக்கு நானே கூறிக் கொண்டேன். இப்போது உங்களிடம் கூறுகிறேன். நான் மெதுவாக நழுவிச் சென்று அந்தச் சிறுவர்கள் உள்ளே இருக்கும் அறையை வெளியில் தாழிட்டு வரும் அளவு நான் கவலையடைந்திருந்தேன். நான் அதைச் செய்தேன். யாருமே அப்படிதான் செய்திருப்பார்கள். ஏனென்று காரணம் கேட்டால், அந்த அளவு அச்சம் உங்களைப் பீடித்திருக்கும் போது, அது மிகவும் மோசமான நிலைக்கு உங்களைத் தள்ளிவிடும். உங்களின் அறிவு மழுங்கிவிட, பைத்தியக்காரத்தனமான வேலைகளைச் செய்யும்படிக்கு உங்களை மாற்றி விடும். விரைவிலேயே உங்களை நீங்களே கேட்டுக் கொள்வீர்கள். நீங்கள் மட்டும் ஒரு சிறுவனாக அந்த அறைக்குள் இருந்து, அறைக்கதவும் தாழிடப்பட்டு இருந்து, நீங்கள் ................" பேச்சை நிறுத்திவிட்டு, எதையோ மறந்து குழம்பியது போல விழித்தாள். பின்னர் அவள் மெதுவாக என் பக்கம் தன் தலையைத் திருப்பினாள். அவளின் கண்கள் என்னைச் சந்திக்கும் தருணத்தில், நான் எழுந்து நடக்க ஆரம்பித்தேன்.

சிறிது நேரம் வெளியே சென்று யோசித்தால் மட்டுமே, எங்களின் அறையில் நாங்கள் ஏன் உள்ளே இருக்கவில்லை என்பதற்கான சரியான விளக்கத்தை நான் தயாரிக்க முடியும் என்று எனக்குத் தோன்றியது. எனவே, அதைச் செய்தேன். ஆயினும், நான் சிறிது தூரம் நடந்து செல்லும் முன்பே என்னை அழைத்து வர அவள் ஆள் அனுப்பினாள். அந்த நாளின் பிற்பகல் பொழுதில், அனைவரும் அங்கிருந்து அகன்று விட்டபின், நான் அறைக்குள் சென்று அவளிடம் இவ்வாறு கூற ஆரம்பித்தேன். கடந்த நாளின், நள்ளிரவு வேளையில், கூச்சலும், வேட்டுச் சத்தமும் கேட்டு அதிர்ந்து நானும், சிட்டும் படுக்கையை விட்டு எழுந்தோம். அங்கே என்ன நடக்கிறது என்று காண மிகுந்த ஆவல் கொண்டோம். எங்களின் அறைக் கதவு வெளிப்பக்கமாக தாழிட்டிருந்த நிலையில், வேறு வழியின்றி, இடிதாங்கிக் கம்பியைப் பிடித்து கீழே இறங்கிச் சென்றோம். அவ்வாறு இறங்கியதில் எங்கள் இருவருக்கும் காயம் கொஞ்சம் பட்டுவிட்டதால், இனி இவ்வாறு இறங்க முயற்சிக்கக் கூடாது என்று தீர்மானித்துக் கொண்டோம்.

இவ்வாறெல்லாம் அவளிடம் கூறிய நான், முதலில் சைலஸ் சித்தப்பாவிடம் கூறிய அதே பொய் காரணத்தையும் சேர்த்துக் கூறினேன். எங்களை மன்னித்து விடுவதாக அவள் கூறினாள். நாங்கள் செய்தது ஒன்றும் பெரிய தவறே அல்ல என்றும் கூறினாள். சிறுவர்களாக இருப்பதால், ஆர்வக்கோளாறில் இப்படி மரை கழண்ட வேலைதான் செய்வார்கள் என்பது அவளுக்குத் தெரிந்த ஒன்றுதான் என்றாள். எனவே, பெரிதாக தீங்கு எதுவும் நேரவில்லை என்பதால் என்ன நடந்தது என்பது பற்றி கவலை கொள்ளவேண்டிய அவசியமில்லை என்று முடிவெடுத்து எனக்கும் சமாதானம் கூறினாள். நாங்கள் நல்ல நலத்துடன் உயிரோடு இருப்பதற்கு கடவுளிடம் நன்றிக்கடன் பட்டுள்ளதாகக் கூறி மகிழ்ந்தாள். மிகுந்த அன்புடன் என்னை முத்தமிட்டு தலையில் தட்டிக் கொடுத்தாள். சிறிது நேரம் ஏதோ ஒரு மோன நிலைக்குள் சென்றது போலக் காணப்பட்ட அவள், திடீரெனத் துள்ளிக் குதித்துக் கேட்டாள்:

"கருணை உள்ள ஆண்டவா! இரவு நேரம் நெருங்குகிறதே! இன்னும் சிட் வீடு திரும்பவில்லையே. எங்கே அந்தப் பையன்?"

இந்தச் சந்தர்ப்பத்திற்காகவே காத்துக் கொண்டிருந்த நான் ஒரு குதி குதித்தவாறு "நான் வேண்டுமானால் நேராக ஊருக்குள் ஓடிச் சென்று அவனைப் பிடித்துக் கொண்டு வந்து விடுகிறேன்" என்று உரைத்தேன்.

"இல்லை. நீ போகக் கூடாது" அவள் தீர்மானமாகக் கூறினாள், "இப்போது இருக்கும் இடத்தை விட்டு நீ நகரவே கூடாது. ஒரு குழந்தையைத் தொலைத்ததே போதும். இன்றிரவு உணவு அருந்தும் வேளைக்குள் அவன் வந்து சேரவில்லையென்றால், அவனைத் தேடி உனது சித்தப்பா செல்வார்."

நல்லது. இரவு உணவுக்கு அவன் வந்து சேரவில்லை. எனவே, உணவுக்கப்புறம், சைலஸ் சித்தப்பா உடனடியாக வீட்டை விட்டுக் கிளம்பினார்.

இரவு பத்து மணி வாக்கில், பெரும் கலக்கம் அடைந்தவராக வீடு திரும்பினார். அவரால் டாம் சென்ற வழித்தடத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சேல்லி சித்தியோ அளவுகடந்த பதற்றம் அடைந்தாள். ஆனால், அவன் வீடு திரும்பாததற்கு ஏதேனும் காரணம் இருக்கும் என்று அவளுக்கு சைலஸ் சித்தப்பா சமாதானம் கூறினார். சிறுவர்கள் சிறுவர்கள்தான் என்றார் அவர். எங்கேயாவது ஊர் சுற்றி விட்டு அடுத்த நாள் காலை கண்டிப்பாக அவன் வீடு திரும்பி விடுவான் என்பதால் அதற்காகக் கவலை கொள்ளவேண்டாம் என்றார். ஆனாலும், அவன் பார்க்க முடிவது போல, ஒரு விளக்கை ஏற்றிவைத்து சிறிது நேரம் அவனுக்காக காத்திருக்கப் போவதாக சித்தி கூறினாள்.

உறங்குவதற்காக நான் படுக்கைக்குச் சென்றபோது, கையில் மெழுகுதிரி ஏந்திக் கொண்டு அவளும் என்னுடன் வந்தாள். அன்பு கொண்ட தாயைப் போல் என்னை ஆவலுடன் அழுத்திப் பிடித்து கொண்டது என் மனதில் கடும் வருத்தத்தை ஏற்படுத்தியது. என்னால் அவள் முகத்தை நிமிர்ந்து கூடப் பார்க்க முடியவில்லை. படுக்கையில் என்னுடன் அருகில் அமர்ந்து, சிட் எத்தனை அருமையான சிறுவன் என்பது பற்றி வெகு நேரம் பேசிக் கொண்டிருந்தாள். அவனைப் பற்றி பேசும் பேச்சை அவள் நிறுத்துவதாகவே தெரியவில்லை. அவவ்வப்போது, அவன் எங்கேயாவது காணாமல் போயிருக்கக் கூடுமா அல்லது காயம் ஏதேனும் பட்டிருப்பானா, தண்ணீரில் முழ்கியிருப்பானா, அல்லது எங்கேயானும் படுத்துக் கிடந்து, அவள் அங்கே அவனுக்கு உதவ வழியில்லாது, இந்நேரம் கஷ்டம் அனுபவித்து இறந்து போயிருப்பானா என்பது பற்றி நான் ஏதாவது நினைக்கிறேனா என்று அவள் தொடர்ந்து என்னை விசாரித்துக் கொண்டேயிருந்தாள். அவளின் வேதனை தரும் இந்தச் சிந்தனையினால், அவளின் கண்களிலிருந்து வழிந்தோடிய கண்ணீர் அவளின் கன்னங்களைச் சத்தமின்றி நனைத்தது. சிட் நன்றாகத்தான் இருக்கிறான் என்றும் அடுத்த நாள் காலை கண்டிப்பாக வீடு திரும்பி விடுவான் என்றும் நான் அவளுக்கு உறுதியளித்துக் கொண்டே இருந்தேன்.

எனது கையை அழுத்தியவாறு, என்னை முத்தமிட்டவாறு, நான் கூறியதைத் திருப்பிப் திருப்பி சொல்லும்படி என்னைக் கேட்டுக் கொண்டாள். ஏனெனில் அது அவளுக்கு அமைதியைக் கொடுக்கிறது என்றும் கூறினாள். மிகவும் வருத்தத்தில் அவள் இருந்தாள். வெளியே அவள் செல்லும் முன்னே, எனது கண்களைக் குனிந்து நோக்கியபடியே மென்மையாகவும் அதே சமயம் மிகவும் உறுதியாகவும் கூறினாள்:

"கதவு தாழிடப்படாமல்தான் இருக்கப்போகிறது, டாம்! சன்னலும், அங்கிருக்கும் இடிதாங்கிக் கம்பியும் அங்கேதான் உள்ளது. ஆனால், நீ நல்லவனாக இருப்பாய். இல்லையா? நீ இனி வெளியே போக மாட்டாயல்லவா? எனக்காக?"

நான் வெளியே சென்று டாமைப் பார்க்கப் போகத் எத்தனை மோசமாகத் துடித்துக் கொண்டிருந்தேன் என்று அந்தக் கடவுளுக்கு மட்டுமே தெரியும். நான் வெளியே சென்று விடும் தீர்மானத்தில்தான் இருந்தேன். ஆனால், அவ்வாறு அவள் அன்புடன் கூறிய பிறகு, உலகின் எப்பேர்ப்பட்ட ராஜ்ஜியமாக இருந்தாலும் நான் இனிப் போகப்போவதாக இல்லை.

அவளும், டாமும் எனது மனதின் இரு மருங்கிலும் வியாபித்திருந்தார்கள். எனவே, தூக்கமின்றி புரண்டு கொண்டிருந்தேன். நள்ளிரவு வேளையில், இருமுறை இடிதாங்கிக் கம்பியைப் பிடித்துக் கீழிறங்கி பதுங்கியவாறே வீட்டின் முன்புறமாகச் சென்ற நான், கண்களில் கண்ணீருடன் சாலையைப் பார்த்தவாறு விளக்கு வெளிச்சத்தில் அமர்ந்திருக்கும் அவளின் கோலம் கண்டேன். ஏதேனும் நல்லது அவளுக்குச் செய்ய வேண்டுமென்று எனது மனது துடித்தது. ஆனால், அந்தச்சூழ்நிலையில் என்னால் செய்ய முடிந்ததெல்லாம் ஒன்றே ஒன்றுதான். அவளுக்கு மேலும் துன்பம் தராத எந்தச் செயலையும் செய்யாமல் இருக்கும் சத்தியம் மேற்கொள்ளுவது மட்டும்தான் என்று எனக்குத் தெரிந்தது. மூன்றாம்தடவை நான் விழித்துப் பார்த்தபோது, பொழுது புலரும் வேளையாக இருந்தது. இடிதாங்கிக் கம்பியைப் பிடித்து நழுவிக் கீழே இறங்கி வந்த போது, அப்போதும் அவள் அந்த இடத்திலேயே இருந்தாள். நரைத்த முடிக் கற்றைகள் கொண்ட அவளின் தலை அவள் கைகளின் மீது சாய்ந்திருக்கும்படி படுத்து உறங்கி கொண்டிருந்தாள்.

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி

 

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it





Last Updated on Tuesday, 09 June 2020 00:36