நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 40

Saturday, 23 May 2020 22:54 - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - முனைவர் ர. தாரணி பக்கம்
Print

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


அத்தியாயம் நாற்பது

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 40காலை உணவுக்குப் பின், நாங்கள் இருவரும் மிகவும் சந்தோசமாக உணர்ந்தோம். என்னுடைய சிறு படகை எடுத்துக் கொண்டு ஆற்றில் மீன் பிடிக்க ஒரு சுற்று சுற்றிவரச் சென்றோம். மதிய உணவை எங்களுடனேயே எடுத்துக் கொண்டு வந்து விட்டபடியால், பொழுது இனிமையாகவே கழிந்தது. என்னுடைய தோணிக்கும் சென்று சரிபார்த்தோம். நல்ல நிலையிலேயே அது இருந்தது. பின்னர், வெகு நேரம் கழித்து இரவு உணவு சமயம் வீடு திரும்பிய நாங்கள், மிகவும் கலவரமடைந்த நிலையில் அந்தக் குடும்பம் உள்ளதைக் கண்டோம். தங்களுக்கு நடக்கவிருக்கும் ஆபத்தை நினைத்துக் குழம்பித் திகைத்து செய்வதறியாது கலங்கி இருந்தார்கள். எது அவர்களைக் குடைகிறது என்று அவர்கள் வெளியே கூறாவிடினும், அனைவரும் இரவு உணவு அருந்தி முடித்த கையோடு, நேராக அவரவர் படுக்கைக்குச் சென்றார்கள். மற்ற அனைவரையும் விட எங்களுக்கு அங்குள்ள நிலைமை புரிந்திருந்ததால், அவர்களின் பிரச்னை என்ன என்று அவர்கள் எங்களுக்கு சொல்லத் தேவையில்லை.

கடைசியாக சேல்லி சித்தி தனது பின்புறத்தைக் காட்டியபடி சென்று மறைந்ததும், மாடிப்படிக்கட்டு பாதி ஏறிக் கொண்டிருந்த நாங்கள், திருட்டுத்தனமாக கீழே இறங்கி வந்து, பாதாள அறையின் அலமாரிக்குள் நுழைந்து கொண்டோம். எங்களின் உணவுக்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் எடுத்து மூட்டை கட்டிக்கொண்ட பின் எங்களின் அறைக்குச் சென்றோம். எங்களின் படுக்கையில் படுத்துப்புரண்டு கொண்டிருந்த நாங்கள், இரவு பதினொன்றரை அளவில் மீண்டும் எழுந்து கொண்டோம். சேல்லி சித்தியின் உடையை டாம் அணிந்து கொண்டான். உணவுப் பொட்டலங்களைக் கையிலெடுத்துக் கொண்டு நகரும் வேளையில், டாம் கேட்டான்: "வெண்ணை எங்கே?"

“ஒரு பெரிய கட்டியை நான் எடுத்து வைத்திருந்தேனே" நான் கூறினேன் "அந்த மக்காச்சோள ரொட்டித் துண்டு மீது வைத்திருந்தேன்."

"ஓ, நல்லது. அதை நீ அங்கேயே விட்டுவிட்டு வந்திருக்க வேண்டும். ஏனெனில் அது இங்கே இல்லை."

"அது இல்லாமலும் நாம் இருக்கலாம்." நான் கூறினேன்.

"அது நம்முடன் இருக்கும்படியும் செய்யலாம்" அவன் கூறினான் "கீழே அந்த பாதாள அறைக்குச் சென்று மீண்டும் அதை எடுத்து வா. பிறகு, இந்த இடிதாங்கிக் கம்பி வழியாக வெளியே நழுவி வந்து என்னுடன் சேர்ந்துகொள். இப்போதே நான் சென்று ஜிம்மின் ஆடைக்குள் வைக்கோல் வைத்து அவன் அம்மாவின் மாறுவேடம் போன்று அதைத் தயார் செய்யப் போகிறேன். ஆடு போல “பே” என்று கத்தத் தயாராகிக் கொள். பின்னர் விரைவாக அங்கிருந்து வெளியேறிவிடு."

அவன் அகன்று விட்டான். நான் பாதாள அறைக்குச் சென்றேன். ஒரு மனிதனின் கை முஷ்டி அளவு பெரிதாக உள்ள அந்த வெண்ணைக் கட்டி நான் விட்டுவிட்டு வந்த இடத்திலேயே இருந்தது. மக்காச்சோள ரொட்டித்துண்டின் மீது பதிந்து இருந்த அதை அப்படியே எடுத்துக் கொண்டேன். விளக்கை ஊதி அணைத்து விட்டு, அமைதியாக மீண்டும் படிகளில் ஏறத் தொடங்கினேன். மேலே ஏறி முதல் தளத்தை அடைந்தவுடன், தூரத்தில் சேல்லி சித்தி கையில் மெழுகுதிரியுடன் வருவதைக் கண்டேன். உடனடியாகக் கையிலிருந்த வெண்ணை அடங்கிய ரொட்டித் துண்டத்தை எனது தலையின் தொப்பிக்குள் மறைத்து வைத்து, தொப்பியைத் தலையில் அணிந்து கொண்டேன். அடுத்த வினாடியே என்னை நெருங்கிய அவள் என்னைப் பார்த்துக் கூறினாள்: "பாதாள அறைக்குள் போயிருந்தாயா?"

"ஆமாம் மேடம்."

"அங்கே, கீழே என்ன செய்துகொண்டிருந்தாய்?"

"ஒன்றுமில்லை."

"ஒன்றுமில்லை?"

"இல்லை மேடம்."

"நல்லது. இந்த இரவு வேளையில் தேவையில்லாமல் உன்னை அங்கே போகச் செய்தது எது?"

"எனக்குத் தெரியவில்லை, மேடம்!"

"உனக்குத் தெரியவில்லையா? அப்படி என்னிடம் பதில் கூறாதே, டாம்! நீ அங்கே இத்தனை நேரம் என்ன செய்து கொண்டிருந்தாய் என்று எனக்குத் தெரியவேண்டும்."

"அங்கே நான் எதுவும் செய்து கொண்டிருக்கவில்லை, சேல்லி சித்தி! சத்தியமாக, நான் எதுவும் செய்யவில்லை."

அவள் விட்டுவிடுவாள் என்று நான் நினைத்தேன். சாதாரணமான சமயங்களில், அவள் என்னை விட்டிருக்கக் கூடும். ஆனால், இவ்வாறான விசித்திரமான நிகழ்வுகள் வீட்டில் நடந்து கொண்டிருக்கும்போது, அவள் சாதாரணமான சிறு விஷயங்களைக் கூட ஆவேசம் வந்தது போல அணுகுவாள் என்பதை நான் கணித்தேன். கடினமான தீர்மானத்துடன் அவள் கூறினாள்:

"நேராக முன் அறைக்குச் சென்று உனது சித்தப்பா வரும் வரை அங்கேயே இரு. ஏதோ செய்யக்கூடாத ஒன்றை நீ செய்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. அது என்ன என்று நான் கண்டுபிடித்து அதன் பின்னர் உன்னைத் தொலைத்துக் கட்டிவிடுகிறேன்."

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 40

சொல்லிவிட்டு அவள் நடந்து சென்று விட்டாள். முன்னறைக் கதவைத் திறந்து உள்ளே சென்று அமர்ந்தேன். அங்கே ஒரு பெரிய கூட்டமே இருந்தது. பதினைந்து விவசாயிகள் அவர்களின் கையில் துப்பாக்கியுடன் அமர்ந்திருந்தார்கள். அதிர்ச்சியுடன் சோர்வடைந்த நான் அங்கிருந்த இருக்கையில் சரிந்தேன். சுற்றிலும் இருந்த அவர்களுள் சிலர் மெல்லிய குரலில் தங்களுக்குள் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அனைவருமே மிகுந்த சஞ்சலத்துடன் பரபரப்பாக இருந்தார்கள். ஆனால், அப்படி இல்லாதது போல வெளியே காட்டிக் கொள்ள முற்பட்டார்கள். அவர்கள் தங்களின் தொப்பிகளைக் கழற்றிக் கையில் வைத்துக் கொள்வது, பின் திருப்பி மாட்டிக் கொள்வது, தங்களின் தலையை கீறிக் கொள்வது, மாறி மாறி வேறு இருக்கைகளில் அமர்வது, தங்களின் சட்டைப்பொத்தான்களைத் திருகுவது போன்ற செயல்களிலிருந்து, அவர்களின் படபடப்பை நான் நன்கு உணர்ந்து கொண்டேன். அவர்களைப் போலத்தான் நானும் அமைதியின்றி கலக்கமுற்றிருந்தேன். ஆயினும், எனது தொப்பியை நான் கழற்றவில்லை.

சேல்லி சித்தி திரும்ப வந்து என்னைத் தொலைத்துக் கட்டுவாள் என்று எதிர்பார்த்தேன். அவள் நினைத்தால் என்னை நன்கு அடிக்கக் கூடச் செய்யலாம். எப்படியாவது இங்கிருந்து வெளியே சென்று, அளவுக்கதிகமாக நாம் விளையாடி ஆபத்தை உருவாக்கி விட்டோம் என்று டாமிடம் கூற வேண்டும். இந்த முட்டாள் விளையாட்டு விளையாடுவதை இனியாவது நிறுத்திக் கொள்ளவேண்டும். இந்த மனிதர்கள் கடுப்பாகிப் பொறுமையிழந்து எங்களைத் துரத்திக் கொண்டு வருவதற்குள், ஜிம்மைக் கூட்டிக் கொண்டு இங்கிருந்து சீக்கிரமே வெளியேறி விடவேண்டும். என்ன ஒரு .குளறுபடி இங்கே நாங்கள் விளைவித்துவிட்டோம்!

ஒருவாறாகக் கடைசியில் திரும்பி வந்த சேல்லி சித்தி என்னைக் கேள்விக் கணைகளால் துளைத்தெடுத்தாள். நான் மிகவும் அச்சமுற்றிருந்ததால், அவளின் கேள்விகளுக்கு சரியான முறையில் என்னால் பதில் அளிக்க இயலவில்லை. நள்ளிரவு நேரத்திற்கு இன்னும் சில வினாடிகளே இருப்பதாகக் கூறிக் கொண்டு, அங்கிருந்த மனிதர்களில் சிலர் பொறுமை இழந்து, உடனடியாக வெளியே சென்று அந்த கொள்ளைக் கூட்டத்தைச் சந்திக்கத் தயாரானார்கள். ஆடு கத்தும் சமிக்சை கேட்கும் வரை காத்திருக்கச் சொல்லி மற்றவர்கள் அவர்களைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தார்கள். அத்தோடு, சித்தி ஒன்று மாற்றி ஒன்றாக கேள்வி கேட்டு உயிரை எடுத்தாள். மிகுந்த நடுக்கம் கொண்ட எனக்கு அப்படியே தரைக்குள் நழுவி உள்ளே மூழ்கிவிடமாட்டோமா என்று கூடத் தோன்றியது. அந்த இடத்தில் சூடு அதிகரித்துக் கொண்டே சென்றது. தலையிலிருந்த வெண்ணை உருகி எனது காதுகளின் பின்புறம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் வழிந்தோடியது.

வெகு விரைவில், "நான் இப்போது அறைக்குள் முதலில் நேராகச் சென்று, அவர்கள் அங்கே உள்ளே நுழையும்போதே கையும் களவுமாகப் பிடித்து விடுகிறேன்" என்று ஒருவர் கூறினார். மயங்கி விழாத குறையாக நான் அங்கே இருந்தேன். ஒரு கோடு போல வெண்ணை எனது நெற்றிப்பரப்பில் இறங்க ஆரம்பித்தது. அதைக் கண்ட சேல்லி சித்தி , பீதியில் வெளுத்துப் போன நிலையில் கூறினாள்:

"அடக் கடவுளே! இந்தக் குழந்தைக்கு என்ன ஆயிற்று? இவனுக்குக் கண்டிப்பாக மூளைக்காய்ச்சல்தான் வந்திருக்க வேண்டும். இவன் மூளை இப்படி உருகி வெளியே வழிகிறதே!"

எல்லாரும் அதைக் காண ஓடி வந்தார்கள். எனது தொப்பியை சேல்லி சித்தி வெடுக்கென்று பற்றி இழுத்தாள். அதனுடன் சேர்ந்து ரொட்டியும், மிச்சமிருந்த வெண்ணையும் வெளியே வந்தன. என்னை இறுகப் பற்றி அணைத்துக் கொண்ட அவள் கூறினாள்:

"ஐயோ! என்னை மிகவும் பயமுறுத்திவிட்டாய்! மோசமான விஷயம் ஒன்றும் நடக்கவில்லை என்பதில் எனக்கு மகிழ்வும் நன்றியும் ஏற்படுகிறது. தொடர்ந்து நமக்கு துரதிஷ்டங்களாகவே வருகிறது. மழையானால் நிற்காமல் கொட்டித் தீர்க்கிறது. உன் தலையில் இருந்து வெண்ணை உருகி வழிந்த காட்சியைக் கண்டபோது, உன்னை நாங்கள் இழந்து விட்டோம் என்று நான் நினைத்து விட்டேன். அதுவும் வழிந்தோடிய அந்த திரவத்தின் நிறம் காண்கையில், உன்னுடைய மூளைதானோ என்று எண்ணி பயந்து விட்டேன். அடத் தங்கமே! இந்த விஷயம்தான் கீழே நீ செய்து கொண்டிருந்தாய் என்று ஏன் என்னிடம் நீ சொல்லவில்லை? இதற்காகத்தான் என்றால் நான் கவலை கொண்டிருக்கவே மாட்டேன். சரி! இப்போது, உனது படுக்கைக்குச் செல். நாளை காலை வரை நான் உன்னை வெளியே பார்க்கக் கூடாது."

ஒரு நொடியில் திரும்பவும் மாடி ஏறிச் சென்ற நான், பின்னர் அந்த இடிதாங்கிக் கம்பியைப் பிடித்து அடுத்த நொடியில் கீழே இறங்கி விட்டேன். இருட்டில் கண்மண் தெரியாது ஓடி ஜிம் அறையின் பக்கத்து கொட்டகை வழியாக உள்ளே அறைக்குச் சென்றடைந்தேன். அச்சம் மிகுந்த பரபரப்பில் எதுவுமே சொல்ல இயலாது தவித்தாலும், டாமிடம் எவ்வளவு விரைவாக கூறமுடியுமோ, அவ்வளவு விரைவாக விஷயத்தைக் கூறி, இனியும் தாமதிக்காது, காரியத்தை அப்போதே முடிக்க வேண்டும் என்றும் கூறினேன். அந்த வீடு முழுதும் கையில் துப்பாக்கியுடன் மனிதர்கள் இருப்பதால், இனி ஒரு நொடி கூட விரயம் செய்யக் கூடாது என்றேன்.

டாமின் கண்கள் பளபளத்தன. "ஓ! அப்படியா சங்கதி? உண்மையில் மிகச்சிறந்த விஷயம். ஏன், ஹக்! இதை மட்டும் நான் இவ்வாறு செய்ய நினைத்தால், இருநூறு ஆண்கள் என்னைச் சுற்றி வளைக்க, நான் அவர்களைச் சமாளிக்க முடியும் என்பதை நான் உறுதியுடன் கூறுகிறேன். தப்பித்துப் போகும் இந்த எண்ணத்தை மட்டும் இன்னும் கொஞ்சம் தள்ளிப் போட்டால் ..........."

"அவசரம்! அவசரம்!" நான் கூறினேன் "ஜிம் எங்கே?"

"உனது முழங்கையின் பின்பக்கம்தான் அவன் இருக்கிறான். உனது கையை நீ நன்கு நீட்டினால், அவனை நீ தொட்டுவிடலாம். பெண் உடையணிந்து அவன் தயாராக உள்ளான். எல்லாம் தயார் நிலையில் உள்ளது. இப்போது நாம் திருட்டுத்தனமாக வெளியே போக வேண்டியதுதான். ஆடு கத்தும் சமிக்சை கொடுக்க வேண்டியதுதான்."

ஆனால், அந்தக் கணத்தில் கூட்டமாக மனிதர்கள் கதவினருகே ஓடி வரும் சத்தம் கேட்டது. அத்துடன் அவர்கள் அந்தக் கதவின் தாளை அழுத்தித் திறக்கும் ஓசையும் நாங்கள் கேட்டோம். அதில் ஒருவன் "இங்கே சீக்கிரம் வந்து காத்திருக்கலாம் என்று நான் சொன்னேன் அல்லவா! அவர்கள் இன்னும் வரவில்லை. கதவு இன்னும் பூட்டியே இருக்கிறது. இங்கே, அறைக்குள் உங்களில் சிலரை நான் வைத்துப் பூட்டி விடுகிறேன். இருட்டில் நீங்கள் மறைந்து நின்று கொண்டு, அவர்கள் உள்ளே நுழைந்தால் கொன்று விடுங்கள். மற்றவர்கள் சுற்றிலுமாக பல திசைகளில் இருந்து கொண்டு அவர்கள் வருகிறார்களா என்று கண்காணியுங்கள்." என்று கூறுவதையும் நாங்கள் கேட்டோம்.

அவர்கள் உள்ளே வந்தார்கள். இருட்டில் அவர்களால் எங்களை பார்க்க இயலவில்லை. எங்கள் மேலே ஏறி மிதித்து விடுவார்கள் போலத் தோன்றியதால், அவசரமாக நாங்கள் படுக்கையின் கீழ் நுழைந்தோம். அதன் வழியாகவே சரியாக அந்தத் துவாரத்தைக் கண்டுபிடித்து மிகவும் அமைதியாக ஜிம் முதலிலும், நான் அவன் பின்னும், டாம் கடைசியாகவும் என டாம் கொடுத்த அறிவுரையின் பேரில் ஊர்ந்து வெளியே சென்றோம். பக்கத்து கொட்டகைக்குள் இப்போது நாங்கள் நுழைந்து விட்டோம். தடதடவென காலடி ஓசைகள் எங்களை நெருங்குவது நன்கு கேட்டது. அங்கிருந்த கதவை நோக்கி நாங்கள் நகர்ந்தோம். அங்கே டாம் எங்களை நிற்கச் சொன்னான். சாவித்துவாரத்தில் தனது கண்களை வைத்து வெளியே நோக்கினான். கும்மிருட்டாக இருந்ததால், அவனால் எதையும் காண இயலவில்லை.

அந்தக் காலடி ஓசைகள் சப்தத்தைக் கவனித்து அவை தூரமாகச் சென்று ஓயும்வரை காத்திருக்கச் சொல்லி அவன் எங்கள் காதில் கிசுகிசுத்தான். பின்னர் அவன் எங்களை நெட்டித் தள்ள, முதலில் ஜிம் பதுங்கிச் செல்ல பின்பு நான், கடைசியாக டாம் என மெதுவாக வெளியேற வேண்டும் என்றும் கூறினான். அவனது காதுகளை அந்தத் துவாரத்தில் வைத்து சிறிது நேரம் வெளியே இருக்கும் சத்தத்தைக் கவனித்தான். அந்த காலடிச் சத்தங்கள் ஓயாமல் கேட்டவண்ணமே இருந்ததால், இறுதியில் எங்களை நெட்டித் தள்ளி வெளியேற சமிக்சை செய்தான். நாங்களும் வெளியே நழுவினோம். குனிந்த வண்ணம் மூச்சுக்காற்றைக் கூட வெளியே விடாமல், எவ்விதச் சப்தமும் செய்யாமல் திருடர்கள் போல நழுவி, வேலியின் அருகே ஒரே வரிசையில் சென்றோம். வேலியை வந்தடைந்ததும், ஜிம்மும், நானும் மேலே ஏறி அடுத்த பகுதிக்குக் குதித்து விட்டோம். ஆனால் டாமின் கால்சராய்கள் வேலியின் மேற்புறம் உள்ள கம்பியின் உடைந்த ஒரு துண்டில் மாட்டிக் கொண்டது. காலடிச் சத்தங்கள் அருகில் வருவது போல கேட்டுக் கொண்டிருப்பதால், அந்த துண்டிலிருந்து அவனின் உடையை விடுவிக்க அதைப் பட்டென்று சப்தத்துடன் அவன் கிழிக்க நேர்ந்தது. அவனும் எங்களின் பக்கம் வந்து விழுந்த வேளை, யாரோ சத்தமாகக் கூவினார்கள்:

"யார் அது? பதில் கூறுங்கள். இல்லையெனில் சுட்டுப் பொசுக்கிவிடுவேன்."

நாங்கள் பதில் கூறவில்லை. ஆனால், குதிகாலை அழுத்தி வைத்து அங்கிருந்து ஓட ஆரம்பித்தோம். சிறிது நேரம் அங்கே கூச்சலும் குழப்பமும் நிலவியது. பின்னர் பேங் பேங் என்று துப்பாக்கிக் குண்டுகள் காற்றைக் கிழித்துத் துளைத்தவாறு எங்களைச் சுற்றி வட்டமிட்டுச் சென்றன.

அந்த ஆட்கள் இரைந்து ஆணையிடுவது எங்களுக்குக் கேட்டது: "அவர்கள் இங்கே இருக்கிறார்கள். அவர்கள் நதியை நோக்கி ஓடுகிறார்கள். அவர்களைப் பின்தொடருங்கள், பசங்களா! நாய்களையும் அவிழ்த்து விடுங்கள்."

மிகுந்த வேகத்துடன் எங்களைத் தொடர்ந்து அவர்கள் ஓடி வந்தார்கள். அவர்களின் கால் பூட்ஸ் சப்தம் மற்றும் அவர்கள் கத்தும் ஓசை ஆகியவற்றால், எங்களுக்கு அவர்களை நன்கு கேட்க முடிந்தது. ஆனால், நாங்கள் பூட்ஸ் அணியவுமில்லை. கத்தவுமில்லை. அங்கிருந்த ஆலையை நோக்கி ஓடிய நாங்கள், அதை நெருங்கியவுடன், அருகிலிருந்த புதர்களுக்குள் குதித்து மறைந்து கொண்டு, எங்களைத் தாண்டி அவர்களை ஓட விட்டோம். பின்னர், அவர்களின் பின்புறமாக இருந்த பாதையில் நாங்கள் திரும்பி ஓடினோம். பொதுவாக, நாய்களைத் தனியாகக் கட்டி வைத்திருப்பார்கள். எனவே, அவைகள் திருடர்களை பயமுறுத்தாது. ஆனால், அந்தச் சமயத்தில், யாரோ அவைகளை அவிழ்த்து விட்டிருக்கிறார்கள் போலும். ஒரு கோடி நாய்கள் ஒன்றிணைந்து வருவது போல, அவைகள் எங்களை நோக்கி அதி விரைவில் ஓடி வந்தன. ஆனால், அவைகள் எங்களின் தோழர்கள் அல்லவா! எனவே எங்களின் பாதையில் திரும்பி ஓடாமல், அவைகள் எங்களை வந்து சேரும் வரை அப்படியே சிறிது நேரம் நின்றோம்.

எங்களைக் கண்டதும், அவைகளின் நண்பர்கள் நாங்கள் என்று கண்டுகொண்டன. எனவே, பெரிதாக ஆர்ப்பரிப்பு செய்யாது, ஒரு நிமிடம் அமைதியாக நின்று எங்களுக்கு ஒரு ஹலோ சொல்லிவிட்டு, பின்னர் ஓங்கிக் குரலெடுத்துக் குரைத்து சப்தம் எழுப்பிக் கொண்டே ஓடிச் சென்றன. அவர்களின் பின்னாலேயே ஓடிய நாங்கள் ஆலையின் அருகே சென்றடைந்தோம். பிறகு, என்னுடைய சிறு படகு மறைத்து வைத்துள்ள அந்த இடத்திற்கு புதர்களின் ஊடே ஓடிச் சென்றோம். ஒற்றைகாலில் நொண்டிக் கொண்டே அந்த படகைத் தள்ளிக் கொண்டு எங்களின் இனிய வாழ்வைக் காத்துக் கொள்ள, எவ்வளவு குறைவாக ஒலி எழுப்பமுடியுமோ அவ்வளவு குறைவான சத்தத்தில், நதியின் மத்தியப்பகுதியை நோக்கித் துடுப்பை வலித்தோம். அங்கே சென்றதும், சிறிது நிம்மதி அடைந்த நாங்கள், கொஞ்சமாக அவகாசம் எடுத்து ஓய்வெடுத்துக் கொண்டு பின் எனது தோணி வைத்திருக்கும் சிறு தீவை நோக்கிச் சென்றோம்.

நதிக்கரையின் கீழ்புறமாக மனிதர்கள் செய்த அமளிதுமளியும், நாய்கள் ஒன்றுக்கொன்று நோக்கிக் குரைக்கும் ஓசையும் நாங்கள் வெகுதூரம் சென்று மறையும் வரை கேட்டுக் கொண்டே இருந்தது. பின்னர், அவை கொஞ்ச கொஞ்சமாக மறைந்து காணாமல் போய்விட்டது. தோணிக்குள் நாங்கள் கால் வைக்கும் வேளை, நான் கூறினேன்:

"இப்போது நீ மீண்டும் ஒரு சுதந்திர மனிதன், ஜிம்! அத்தோடு மீண்டும் நீ அடிமைத்தனத்துக்குள் என்றுமே நுழையப் போவதில்லை என்றும் நான் அடித்துக் கூறுகிறேன்."

"நீ மிகப்பெரிய சாதனை செய்திருக்கிறாய், ஹக்! மிக அழகாகத் திட்டமிடப்பட்டு, சரியாக அதை இழுத்துச் சென்று செயல்படுத்தியுமிருக்கிறாய். இது போன்ற உயரிய, நுணுக்கமான திட்டத்தைத் தயாரித்து சரியாகச் செயல்படுத்த உன்னைத் தவிர யாராலும் முடியாது."

நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தோம். எங்கள் இருவரையும்விட மிகுந்த ஆனந்தத்தில் டாம் இருந்தான். காரணம் அவனது கெண்டைக் காலில் ஒரு துப்பாக்கிக் குண்டு துளைத்திருந்தது.

இந்த விஷயம் ஜிம்முக்கும், எனக்கும் தெரிய வந்ததும், எங்களின் மகிழ்ச்சி காணாமல் போய்விட்டது. மிகுந்த வலியுடன் டாம் இருந்தான். ரத்தம் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருந்தது. தோணியில் உள்ள கூம்பு வடிவக் குடிசையில் அவனைப் படுக்க வைத்து, பிரபு பயன்படுத்தி வைத்திருந்த சட்டைகளை அவனின் காலுக்கு கட்டுகளாகப் போட்டோம். ஆனால் "அந்த கந்தலை என்னிடம் கொடுங்கள். நானே எனக்குச் செய்து கொள்வேன். இப்போது இங்கே நிற்காதீர்கள். ஏய்ப்பு வேலை மிக நன்றாக நடக்கும்போது, இங்கே முட்டாள்தனமாக நிற்காதீர்கள். துடுப்பை வலித்து அவளைச் செலுத்துங்கள். பசங்களா! நாம் மிக அழகாகச் செய்து முடித்து விட்டோம். ஆம். நாம் முடித்து விட்டோம். பதினாறாம் லூயியை வெளியெடுக்க முயற்சி செய்தவர்களில் ஒன்றாக நாம் இருந்திருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அப்படி மட்டும் இருந்திருந்தால் அவரின் வாழ்க்கைக் குறிப்பில் "செயின்ட் லூயிஸின் மகன் சொர்க்கத்தை நோக்கிச் செல்கிறான்" என்ற வாசகம் எழுதப்பட்டிருந்திருக்காது. இல்லை சார். அவரை அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு எல்லையைக் கடந்திருப்போம். அப்படித்தான் அவருடன் சேர்ந்து நாம் செய்திருப்போம். அப்படியே அசராமல் சாதாரண காரியம் போலச் செய்திருப்போம். துடுப்பைச் செலுத்துங்கள். துடுப்பைச் செலுத்துங்கள்."

ஆனால் ஜிம்மும், நானும் கவலையடைந்தவர்களாக அது பற்றிப் பேசிக் கொண்டோம். பின்பு யோசித்தோம். ஒரு நிமிடம் யோசித்த பிறகு, நான் கூறினேன்: "நீ சொல்ல நினைப்பதை சும்மா தைரியமாகச் சொல்லு, ஜிம்!"

எனவே அவன் சொன்னான்: "நல்லது. எனக்கு இப்படித்தான் தோணுகிறது, ஹக்! ஒரு வேளை டாம்தான் சுதந்திரமாக்கப்பட்ட மனிதன் என்றும் அவனுடன் இருந்த சிறுவர்களில் ஒருவன் சுடப்பட்டுவிட்டான் என்றும் வைத்துக் கொண்டால், "சரி, சரி! போலாம். என்னை நீங்கள் காப்பாற்றியே ஆகவேண்டும். மருத்துவர் பற்றியெல்லாம் சிந்திக்காதீர். என்னை நீங்கள் காப்பாற்ற வேண்டாமா? என்று டாம் கூறியிருப்பானா? மாஸ்டர் டாம் அப்படியா கூறியிருப்பான்? அவன் அப்படிச் சொல்வானா? கண்டிப்பாக இல்லை. அவன் அப்படிச் சொல்லவே மாட்டான். அப்படியானால், ஜிம் மட்டும் அப்படிச்சொல்லப் போகிறானா? என்ன? இல்லை சார். ஒரு மருத்துவர் இங்கே வந்து அவன் காயத்தைப் பார்த்துச் சரி செய்யும் வரை, அது நாற்பது வருடம் ஆனாலும் சரி, நான் இங்கிருந்து நகரவே மாட்டேன்."

ஒரு வெள்ளைக்கார மனிதனைப் போல உள்ளம் படைத்தவன் ஜிம் என்பது எனக்கு நன்கு தெரியும். எனவே, இப்படித்தான் அவன் சொல்லுவான் என்றும் தெரியும். எப்படியோ முடிவு கிடைத்துவிட்டது. நான் திரும்பிச் சென்று ஒரு மருத்துவரை அழைத்து வருகிறேன் என்று டாமிடம் கூறினேன். மிகப் பெரிய பிகு அவன் செய்தான். ஆனால், ஜிம்மும், நானும் பிடிவாதமாக இருந்தோம். தவழ்ந்தபடியே கூம்புக் குடிலை விட்டு வெளியே வந்த டாம் தோணியை அவிழ்த்து நீரில் விட முனைந்தான். ஆனால், அதற்கும் நாங்கள் அனுமதிக்கவில்லை. பிறகு, எங்களை நோக்கி கண்டமேனிக்குக் கத்தினான். அதற்கும் நாங்கள் அசைந்து கொடுக்கவில்லை. எனவே, சிறிய படகை எடுத்து நான் புறப்பட ஆயத்தம் ஆனபோது அவன் கூறினான்:

"போய்தான் தீரவேண்டும் என்று நீ முடிவு கட்டிவிட்டால் சரி, நல்லது. கிராமத்தை அடைந்து நீ என்ன செய்ய வேண்டும் என்று நான் சொல்கிறேன், கேட்டுக் கொள். பாதுகாப்பாக, மருத்துவரின் கண்களைத் துணியால் கட்டி மறைத்துக் கொண்டு, யாரிடமும் அவர் பார்க்கும் விஷயத்தைக் கூறக் கூடாதென்று சத்தியம் வாங்கிக் கொண்டு கூட்டி வா! அவரின் கையில் தங்கம் நிரம்பிய ஒரு மூட்டையைக் கொடுத்து, அவரை இங்கே அழைத்து வருவதற்கு முன்பு, நீரின் கழிமுகப் பகுதிகளில் சுற்றிச் சுற்றி அலைய வைத்து இருட்டில், இந்தச் சிறு படகில் கூட்டி வரவேண்டும். தீவுகளுக்குள் நுழைந்து சுற்றி வரும் பாதையை எடுத்து கொள். அவரின் சட்டைப்பையில் தேடி சுண்ணாம்புக் கட்டி ஏதேனும் இருந்தால், அதை அவரிடமிருந்து நீ எடுத்து வைத்துக் கொள். திருப்பிக் கொண்டுபோய், கிராமத்தில் அவரை விடும்வரை, அதை நீ அவரிடம் கொடுக்காதே. இல்லாவிட்டால், அவர் அந்த சுண்ணாம்புக் கட்டியால், இந்தத் தோணியில் ஒரு குறியிட்டு வைத்து பிறகு அதை வந்து கண்டுபிடித்து விடுவார். அப்படிதான் அவர்கள் எப்போதுமே செய்வார்கள்.”

அப்படியே செய்கிறேன் என்று நான் அவனிடம் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டேன். மருத்துவர் வருவார் என்று கண்டதும், ஜிம் சென்று மரங்களுக்கிடையில் ஒளிந்து கொண்டான். அவர் திரும்பிச் செல்லும்வரை அவன் வெளி வருவதாக இல்லை.

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 09 June 2020 00:36