நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 37

Saturday, 23 May 2020 22:53 - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - முனைவர் ர. தாரணி பக்கம்
Print

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


அத்தியாயம் முப்பத்தி ஏழு

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 37அனைத்தும் தயாரான நிலையில் இருந்தது. வீட்டை விட்டுக் கிளம்பி, பழைய கால்செருப்புகள், கம்பளிகள், காலியான சீசாக்கள், பழுதடைந்த தகரங்கள் மற்றும் வேண்டாத பொருட்கள் குவித்து வைத்திருக்கும் குப்பைகள் பின்கட்டுக்குச் சென்றோம். சமையல் பாத்திரங்கள் கழுவிப் போட்டு வைக்கும் பெரிய தகரப் பாத்திரம் ஒன்றைக் குப்பைகளை நன்கு கிளறிப் பார்த்து கண்டெடுத்தோம். அதினுள்ளே இருந்த ஓட்டைகளை எங்களால் முடிந்தவரை அடைத்து, அதை கேக் தயாரிக்கும் பாத்திரமாக மாற்றினோம். வீட்டின் கீழ்புறம் உள்ள மளிகைப் பொருட்கள் வைக்கும் அறைக்கு அந்தப் பாத்திரத்தை எடுத்துச் சென்று மாவு நிறையத் திருடி அதில் வைத்து நிரப்பினோம். பின்னர், காலை உணவு சாப்பிடத் தயாரானோம்.

நீண்ட ஆணிகள் ஒரு சிலதும் நாங்கள் கண்டெடுத்தோம். ஒரு சிறைக் கைதி தன்னுடைய பெயரையும், துன்பங்களையும் பற்றிச் சுவற்றில் கிறுக்க அந்த ஆணிகள் சிறந்ததாக இருக்கும் என்று டாம் கூறினான். தப்பி ஓடிவந்துள்ள நீக்ரோவை அன்று காலை அவர்களின் அப்பாவும் அம்மாவும் பார்க்கவிருப்பதாக அங்கிருந்த குழந்தைகள் தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்ததை நாங்கள் கேட்டோம். எனவே, அந்த ஆணிகளை சித்தப்பா சைலஸ் உடையிலும், சேல்லி சித்தி உடையிலும் எனப் பிரித்து மறைத்து வைத்தோம். அங்கிருந்த இருக்கையில் தொங்கிக் கொண்டிருந்த சேல்லி சித்தியின் சமையலறை உடையின் பையில் ஒரு ஆணியை டாம் போட்டு வைத்தான். இன்னொன்றை அலமாரியில் இருந்த சித்தப்பா சைலஸின் தொப்பியின் கயிற்றில் சிக்க வைத்தோம். அத்தோடு, மேசைக் கரண்டி ஒன்றையும் சித்தப்பா சைலஸின் மேல் சட்டைப் பையில் வைத்தான். பின்னர், சேல்லி சித்தி திரும்பி வரும்வரை காத்திருந்தோம்.

சேல்லி சித்தி திரும்பி வந்தபோது மிகவும் கோபத்துடனும் எரிச்சலுடனும் காணப்பட்டாள். சாப்பிடும் முன் சொல்லும் பிரார்த்தனையை சொல்லி முடிக்கும் வரை கூட காத்திருக்க அவளுக்குப் பொறுமையில்லை. ஒரு கையால் காப்பியை அனைவருக்கும் கோப்பையில் ஊற்றிக் கொண்டே, இன்னொரு கையில் அணிந்திருந்த மோதிரம் போன்ற விரல் முனைப்பூண் கொண்டு அருகிலிருந்த குழந்தையின் தலையை நிமிண்டினாள்.

 

"நானும் ஒரு இடம் கூட விடாது இங்கும் அங்குமாகத் தேடிப் பார்த்துவிட்டேன். ஆனால், உங்களுடைய இன்னொரு மேல்சட்டையை எங்குமே காணவில்லையே" என்று எரிச்சலுடன் கூறினாள்.

ஒரு நிமிடம் என் இதயம் தன் இருப்பிடத்தை விட்டுக் கீழே இறங்கி நுரையீரலின்மீதும், கல்லீரல் மற்றும் உள்ள அனைத்து உள்ளுறுப்புகளின் மீதும் அழுத்தி அமர்ந்தது போல இருந்தது. ஒரு கெட்டியான மக்காச்சோள ரொட்டித் துண்டின் மேலடுக்கு என் தொண்டையில் வந்து சிக்கியது. கடுமையாக நான் இருமியதால், சிக்கியிருந்த ரொட்டியின் மேல்பாகம் வெளியே பறந்து வந்து மேசையின் குறுக்காகச் சிதறி, அங்கு அமர்ந்திருந்த ஒரு குழந்தையின் கண்ணில் போய் விழுந்தது. தூண்டிலில் சிக்கவைக்கப்பட்ட புழுவினைப் போல் அந்தக் குழந்தை சுருண்டு கொண்டு கதறியது.

டாமின் முகம் கோபத்தால் நிறம் மாறியது. அடுத்த ஒரு பதினைந்து நொடிகளுக்கு நரகம் நேரில் வந்தது போல் அங்கே காட்சியளித்தது. எனது உறுப்புகளை பாதி விலைக்கு யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து விடுவேன் போன்றதொரு படபடப்பில் நான் இருந்தேன். ஆனால், நிலமை மறுபடியும் பழைய நிலைக்கே திரும்பியது. கொஞ்சமும் எதிர்பாராத தருணத்தில் எழுந்த மேல் சட்டையைப் பற்றிய பேச்சு எங்களைத் தாக்கியதில் கொஞ்சம் நிலைகுலைந்துதான் போனோம்.


"இது மிகவும் அசாதாரணமான ஒன்றாக இருக்கிறது. என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அதைக் கழற்றி வைத்த ஞாபகம் எனக்கு நன்றாக இருக்கிறது ஏனெனில் .............." சித்தப்பா சைலஸ் தடுமாறிக் கொண்டே கூறினார்.

"ஏனென்றால் அதை நீங்கள் போட்டுக் கொண்டிருக்கவில்லை. இந்த மனிதனின் பேச்சைத்தான் கொஞ்சம் கேளுங்கள்! நீங்கள் அதைக் கழற்றி வைத்ததும் எனக்குத் தெரியும் உங்களின் மறதி புத்தியை விட எனக்கு அதுபற்றி நன்றாகத் தெரியும். துணிகள் காயப் போடும் கொடியில் நேற்று இருந்ததை நானே என் கண்ணால் பார்த்தேன். ஆனால், உண்மை என்னவென்றால், அது இப்போது திருடு போய் விட்டது. இன்னொரு நல்ல மேல்சட்டை நான் தயாரித்துக் கொடுக்கும் வரை, நீங்கள் அந்த சிவப்பு உல்லன் மேல் சட்டையை மாற்றிக் கொள்ளுங்கள். கடந்த இரண்டு வருடத்தில், நான் உங்களுக்குத் தயாரித்துக் கொடுக்கப் போகும் மூன்றாவது மேல்சட்டை இது. உங்களுக்குச் சட்டை போதுமானதாக இருக்கிறதா என்று பார்த்துக் கவனிப்பதிலேயே, என் பிராணன் பாதியளவுக்கும் மேல் போய் விடுகிறது. உங்களின் உடுப்புகளை வைத்துப் பராமரிக்க உங்களுக்குச் சாமர்த்தியம் கிடையாது என்பதை நான் வெகு உறுதியாகக் கூறுவேன். வாழ்வின் இந்தக் கட்டத்திலாவது உங்களின் உடுப்புகளை நீங்களே கவனித்துக் கொள்ளும் அளவு தெரிந்து கொண்டிருக்கவேண்டும் என்று யாருமே நினைக்கத்தான் செய்வார்கள்."

"எனக்குப் புரிகிறது சேல்லி! நானும் என்னால் முடிந்த அளவு முயற்சி செய்துதான் பார்க்கிறேன். ஆனால், இது மொத்தமும் என்னுடைய தவறே அல்ல என்று உனக்கே தெரியும். அவைகளை அணிந்திருக்கும்போது தவிர மற்ற நேரங்களில் அவைகளைப் பார்த்துக்கொள்வதோ அல்லது அவைகளைக் கையாளுவதோ என எதுவுமே நான் செய்வதில்லையே. அணிந்து கொண்டிருக்கும்போது நான் ஒரு போதும் அந்தச் சட்டையை தொலைக்கவே மாட்டேன்."

"நல்லது. அது உங்கள் தவறே இல்லை, சைலஸ்! நீங்களாக அதைத் தொலைத்திருக்க எந்த வித வாய்ப்பும் இல்லைதான் என்று நான் நினைக்கிறன். அந்த மேல் சட்டை மட்டுமே காணாமல் போகவில்லை. இன்னும் ஒரு மேசைக்கரண்டி காணாமல் போய் உள்ளது. முதலில் பத்து இருந்தது. இப்போது ஒன்பது மட்டுமே உள்ளது. அத்தோடு முடியவில்லை. அந்தக் கன்றுக்குட்டி மேல்சட்டையைக் கடித்துத் தின்றிருக்கலாம் என்றுகூட எடுத்துக்கொள்ளலாம். ஆனால், கன்றுக்குட்டி மேசைக் கரண்டியை எடுத்திருக்க வாய்ப்பில்லை. இது உறுதி."

"வேறு என்ன காணாமல் போயிருக்கிறது, சேல்லி?"

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 37

"ஆறு மெழுகுதிரிகள் காணவில்லை. அதுதான். எலிகள் மெழுகுதிரியை எடுத்துப் போயிருக்க வாய்ப்புள்ளது. இன்னும் கொஞ்ச நாளில் மொத்த இடத்தையுமே எலிகள் தின்று தீர்த்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. எலி வங்குகளை அடைக்கப் போகிறேன் என்று முழங்கிக் கொண்டே இருப்பீர்கள். ஆனால் செய்ய மாட்டீர்கள். அவைகள் உங்கள் தலையில் வந்து குடியேறி வாழ்ந்தாலும், அது உங்களுக்கு ஒருபோதும் தெரியவே போவதில்லை. ஆனால், இந்த மேசைக் கரண்டி காணாமல் போனதற்கு எலிகளைக் குறை கூற முடியாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்."

"நல்லது, சேல்லி! இது என்னுடைய தப்புதான். இதை நான் ஒத்துக் கொள்கிறேன். இந்த வேலையைச் செய்வதை நான் கொஞ்சம் தள்ளிப்போட்டுவிட்டேன். உண்மைதான். ஆனால், நாளைக்குள் இந்த எலி வங்குகளைக் கட்டாயம் அடைத்து விடுகிறேன்."

"ஓ! ரொம்ப அவசரம் வேண்டாம். அடுத்த வருடம் செய்தால் போதுமானது. மட்டில்டா ஏஞ்சலினா அரமின்டா பிலிப்ஸ்!"

சேல்லி தனது விரல் பூண் கொண்டு குழந்தையை இன்னொரு இடி வைத்தாள். அந்தக் குழந்தை சர்க்கரைக் கிண்ணத்தில் வைத்திருந்த கரத்தை வெடுக்கென்று வெளியே இழுத்துக் கொண்டது. அந்தச்சமயத்தில், ஒரு நீக்ரோ பெண்மணி நடைவாயிலில் தோன்றினாள்.

"மிஸ்ஸஸ். அங்கே ஒரு விரிப்பு காணவில்லை." அவள் கூறினாள்.

"ஒரு விரிப்பு காணவில்லை! அட, ஆண்டவா!"

"இன்றே நான் அந்த எலி வங்குகளை அடைத்து விடுகிறேன்" மிகுந்த வாட்டத்தின் தோன்றிய சைலஸ் கூறினார்.

"ஓ! வாயைக் கொஞ்சம் மூடுங்கள். எலிகள் எங்கேயானும் ஒரு பெரிய விரிப்பை எடுத்துச் செல்லுமா என்று யோசியுங்கள். எங்கே அது போயிருக்கும், லிசி?"

"கடவுளே! எனக்குத் தெரியாது மிஸ் சேல்லி! துணி காயவைக்கும் கம்பியில் அது நேற்றுக் கிடந்தது. ஆனால், இப்போது அது போய் விட்டது. அங்கே அது காணப்படவே இல்லை."

"அநேகமாக இந்த உலகம் முடிவுக்கு வரும் போலத் தோன்றுகிறது. என் வாழ்நாள் முழுதிலும் இப்படியெல்லாம் நான் பார்த்ததே இல்லை. ஒரு மேல்சட்டை, ஒரு விரிப்பு, மேசைக் கரண்டி, ஆறு மெழுகுதிரிகள்........"

"மிஸ்ஸஸ்!" இன்னொரு இளம் நீக்ரோ கூறினாள், "பித்தளைப் பீடம் கொண்ட மற்றுமொரு மெழுகுதிரி காணவில்லை."

"இங்கே நிற்காதே. தொலைந்து போ, சின்ன மிஸ்ஸி! இல்லாவிட்டால் இந்தப் பாத்திரத்தின் கைப்பிடியால் பளாரென்று உன்னை உன்னைச் சாத்திவிடுவேன்."

சேல்லி சித்தி கோபத்தில் கொதித்துக் கொண்டிருந்தாள். வெளியே ஓடிவிட ஏதேனும் நல்ல சந்தர்ப்பம் கிடைக்குமா என்று நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். வெளியே சென்று மரங்களுக்கிடையில் சிறிது நேரம் திருட்டுத்தனமாக ஒளிந்து கொண்டு அவளின் கோபம் கொஞ்சம் தணிந்ததும் வீடு வரலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். மட்டற்ற ஆத்திரத்தில் கொதித்த அவள் அனைவரிடமும் கத்திக் கொண்டிருந்தாள். மற்ற அனைவரும் பணிவோடு அமைதியாக அங்கே அமர்ந்திருந்தனர். கடைசியாக அசடு வழியும் பாவனையில் சித்தப்பா சைலஸ் அவரின் சட்டைப் பையிலிருந்து ஒரு மேசைக் கரண்டியை எடுத்துக் கையில் வைத்து நின்று கொண்டிருந்தார். பேசிக் கொண்டிருந்த சேல்லி சித்தி, திறந்திருந்த வாயை மூடாமலும், உயர்த்தியிருந்த கைகளை கீழே இறக்காமலும் அப்படியே சிலையாக நின்றாள். என்னைப் பொறுத்தவரை, ஜெருசலேம் அல்லது அது போன்ற ஏதேனும் தூர தேசத்திற்கு உடனடியாக ஓடிப் போக வேண்டும் என்று விரும்பினேன்.

வெகு விரைவிலேயே தன்னிலைக்கு வந்த அவள் கூறினாள்: "நான் சந்தேகித்தபடியே நடந்திருக்கிறது. இதை உங்கள் சட்டைப்பையில் இத்தனை நேரம் வைத்துக் கொண்டு இருந்திருக்கிறீர்கள். மற்ற எல்லா பொருட்களும் அங்கேதான் இருக்கும் என்று நான் அடித்துக் கூறுகிறேன், அது எப்படி அங்கே போயிற்று?"

"எனக்கு உண்மையாகவே தெரியாது, சேல்லி!" மன்னிப்புக் கோரும் பாவனையில் அவர் இறைஞ்சினார். "எனக்குத் தெரிந்திருந்தால் உன்னிடம் சொல்லியிருப்பேன். காலை உணவுக்கு முன்பாக, பைபிளில் உள்ள ஆக்ட்ஸ் பதினேழாம் அத்தியாயம் நான் படித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறன். ஞாபக மறதியாக, பைபிளை சட்டைப் பையில் வைப்பதற்கு பதிலாக, இதை வைத்துவிட்டேன் போலிருக்கிறது. பைபிள் எனது சட்டைப்பையில் இல்லாததால், இப்படித்தான் நடந்திருக்க வேண்டுமென்று நினைக்க வேண்டியிருக்கிறது. நான் போய் பார்க்கிறேன். படித்த இடத்திலேயே பைபிள் இருக்கிறதா என்று நான் சரி பார்க்கிறேன். அதை சட்டைப் பையில் நான் போடவில்லை என்றால், மறதியாக இந்த மேசைக் கரண்டியை பைபிளுக்குப் பதிலாக .................."

“ஐயோ! கடவுளே! உங்கள் புலம்பலைக் கொஞ்சம் நிறுத்துகிறீர்களா? முதலில் இங்கிருந்து போங்கள். அனைவரும் போய் தொலையுங்கள். என்னுடைய மனம் அமைதியடையும் வரை, யாரும் என் அருகில் வராதீர்கள்."

தனக்கு மட்டுமே கேட்கும்படி குறைந்த சத்தத்தில் அவள் சொல்லியிருந்தாலும் கூட, என் காதில் அது இடி ஓசை போலத்தான் கேட்டிருக்கும். உயிரற்ற சடலம் போல நான் எழுந்து அங்கிருந்து நகன்றேன். நாங்கள் முன்னறையைக் கடந்து செல்லும் நேரம், அந்த முதியவர் தனது தொப்பியைக் கையில் எடுப்பதைக் கண்டோம். அதிலிருந்து ஒரு நீண்ட ஆணி வெளி வந்து கீழே விழுந்தது. ஒன்றும் பேசாது குனிந்து அந்த ஆணியை எடுத்த அவர், அதை அங்கிருக்கும் கணப்பு அடுப்பின் மேல்புற பலகையில் வைத்தார். பின், அமைதியாக அங்கிருந்து வெளியே சென்றார். அவர் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்த டாம் இவ்வாறு கூறினான்:

"சரிதான். இந்த மனுஷனைப் பயன்படுத்தி பொருட்களை கொடுத்து விடும் முயற்சி பலனளிக்காது. இவரை நம்ப முடியாது. ஆனாலும், உண்மை புரியாமலேயே, மேசைக் கரண்டி மறைந்து போன குற்றத்திற்கு தன்னைப் பலியாக்கி நம்மைக் காப்பாற்றி விட்டார். அவருக்குத் தெரியாமல் நாம் சென்று அந்த எலி வங்குகளை அடைப்பதுதான் நாம் அவருக்குச் செய்யும் உதவி."

வீட்டின் கீழ் பகுதியில் மிக அதிக அளவில் எலி வங்குகள் இருந்தன. அது முழுதும் அடைத்து முடிக்க எங்களுக்கு முழுதாக ஒரு மணி நேரம் எடுத்தது. எனினும், அந்த வேலையை நாங்கள் செவ்வனே செய்து முடித்தோம். வேலையை முடிக்கும் தருவாயில், யாரோ படியிறங்கி கீழே வரும் சத்தம் கேட்டது. கையிலிருந்த விளக்கை ஊதி அணைத்து விட்டு, மறைந்து நின்றோம். அந்த முதியவர் ஒரு கையில் மெழுகுவர்த்தியுடனும், இன்னொரு கையில் சில பொருட்களுடனும் கீழே இறங்கி வந்து கொண்டிருந்தார். ஏதோ பனி மூட்டத்தில் சிக்கித் தொலைந்தவர் போல ஞாபக மறதியுடன் இருந்தார். ஒரு எலி வங்கை கையால் தள்ளிப் பார்த்தார். பின்னர், இன்னொன்றைப் பார்த்தார். இவ்வாறாக, அனைத்தையும் ஒவ்வொன்றாகச் சென்று பார்த்தார். பின்னர், அங்கேயே ஐந்து நிமிடங்கள் நின்று யோசித்தார். கையிலிருந்த மெழுகுதிரியிலிருந்து வழிந்த பொட்டுகளை எடுத்துத் தூரப் போட்டுக் கொண்டே நின்று யோசித்தார். பின்னர், மெதுவாகத் திரும்பி படிகளில் ஏற முற்பட்ட அவர் இவ்வாறு கூறிக்கொண்டே சென்றார்.

"இவற்றை எல்லாம் எப்போது நான் அடைத்தேன் என்ற நினைவு என் வாழ்நாள் முழுதும் எனக்கு வராது போல இருக்கிறது. நல்லது. இப்போது இந்த எலிகளின் எல்லாக் காரியங்களுக்கும் நான் பொறுப்புக் கிடையாது என்று அவளிடம் சென்று நிரூபிக்கப் போகிறேன். இல்லை. கண்டுக்காமல் விடுவதுதான் நல்லது.. அதை விட்டுத் தள்ளிவிடுகிறேன். அவளிடம் போய் என்ன சொன்னாலும், எந்த நன்மையையும் நடக்கப் போவதில்லை."

இன்னும் ஏதேதோ முணுமுணுத்துக் கொண்டே அவர் திரும்பவும் மாடிக்குச் செல்லப் படிகளில் ஏறினார். நாங்களும் அங்கிருந்து அகன்றோம். அவர் ஒரு நல்ல முதியவர். எப்போதுமே அவர் அப்படித்தான்.

இன்னொரு புது மேசைக் கரண்டி எடுப்பது பற்றி டாம் மிகுந்த கவலை கொண்டான். ஆயினும், கண்டிப்பாக ஒன்று எங்களுக்குத் தேவைப்படும் என்றும் கூறினான். சிறிது நேர சிந்தனைக்குப் பின் அவன் ஒரு திட்டத்தை என்னிடம் கூறினான். மேசைக் கரண்டிகளை சேல்லி சித்தி அடுக்கி வைத்திருந்த கூடை அருகே நாங்கள் சென்று அவன் வரும் வரைக் காத்திருந்தோம். பின்னர், அந்த மேசைக் கரண்டிகளை ஒன்று ஒன்றாக எண்ணிக் கொண்டே கூடையின் ஒரு பக்கமாக டாம் வைக்க ஆரம்பித்தான். சந்தடி சாக்கில் நான் ஒன்றை எடுத்து என்னுடைய சட்டையின் கைப்பகுதியில் மறைத்து வைத்துக் கொண்டேன்.

"என்ன, சேல்லி சித்தி! இன்னமும் ஒன்பது மேசைக் கரண்டிகள் மட்டும்தான் இங்கே உள்ளது" என்று அப்பாவியாக டாம் கேட்டான்.

"போய் விளையாடுங்கள். என்னைத் தொந்திரவு செய்யாதீர்கள். எனக்கு நன்றாகத் தெரியும். நான்தான் சரியாக எண்ணி வைத்தேனே" அவள் பதில் கூறினாள்.

“சரிதான். நான் இரண்டு முறை எண்ணி விட்டேன், சித்தி! ஆனால் ஒன்பதுதான் இருக்கிறது."

குழப்பமடைந்தவளாய் காணப்பட்ட அவள் பொறுமையிழந்தவாறு , நாங்கள் நின்றிருந்த இடத்திற்கு அவற்றை எண்ணிப் பார்க்க வந்தாள். யாருக்குமே அப்படித்தானே இருக்கும்.!

"ஆம், இப்போது நான் அடித்துக் கூறுகிறேன். அங்கே ஒன்பது மட்டுமே இருக்கிறது!" அவள் கூறினாள்

"என்ன கர்மம் இது? கண்ராவி! அவற்றை திரும்பவும் கூடைக்குள் வைத்து விடு. நான் மீண்டும் எண்ணிப் பார்க்கிறேன்."

நான் என் கையில் ஒளித்து வைத்திருந்த மேசைக் கரண்டியை அந்தக் குவியலுக்குள் போட்டேன். மீண்டும் ஒரு முறை அவள் எண்ணி முடித்ததும், அவள் கூறினாள்: "என்ன ஒரே மாயமாகஇருக்கிறது! இப்போது பத்து இருக்கிறது." மிகவும் கவலையும் எரிச்சலும் கலந்து மண்டையை பிய்த்துக் கொண்டு நின்றாள்.

"இல்லை சித்தி! எனக்கென்னவோ, அங்கே பத்து இருப்பதாகத் தெரியவில்லை."

"அடேய், மரமண்டையா! நான் பத்து எண்ணுவதை நீ காணவில்லையா?"

"பார்த்தேன். ஆனால் ..........."

"சரி. அவற்றை நான் திரும்பவும் எண்ணிக் காட்டுகிறேன்."

நான் ரகசியமாக ஒன்றை எடுத்து மறைத்து விட்டேன். எனவே இந்த முறை அவள் எண்ணியபோது முதல்முறை இருந்ததைப் போலவே ஒன்பதுதான் இருந்தது. இப்போது அவள் மிகுந்த திகைப்புக்கு ஆளாகி, கோபத்தில் உடல் நடுக்கமுற்றாள். ஆயினும், திரும்பத் திரும்ப எண்ணிப் பார்த்து, பத்து, ஒன்பது என்பது போல் மாறிமாறித் தப்பாகவே வருவதைக் கண்டு வெறுத்துப் போனாள். மூன்று முறைகள் சரியான எண் அவளுக்குக் கிடைத்தது. மூன்று முறை தவறாக எண்ணினாள். பின்பு, கடுங்கோபத்தில், அந்தக் கூடையை எடுத்து வீடு முழுதும் பொருட்கள் சிதறும்படி விசிறினாள். சாவகாசமாக நடந்து சென்று கொண்டிருந்த ஒரு பூனையின் மேல் ஒரு மேசைக் கரண்டி போய் விழ, அது மலங்க மலங்க விழித்தது. அவளுக்கு சிறிது நேரம் ஒய்வு கொடுத்து, நாங்கள் அந்த இடத்தை விட்டு நகரும்படி எரிச்சலுடன் கத்தினாள். சாப்பாட்டுக்கு முன்புள்ள இடைப்பட்ட நேரத்தில் அவளை நாங்கள் தொந்திரவு செய்தால், எங்களின் தோலை உரித்துவிடுவதாகப் பயமுறுத்தினாள். அவள் கத்திக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு மேசைக் கரண்டியை அவளின் உடுப்புப் பையில் நாங்கள் போட்டு விட்டோம். மதிய வேளைக்குள்ளாகவே. அந்த மேசைக் கரண்டியும், ஒரு நீண்ட ஆணியும் ஜிம்மிடம் போய் சேர்ந்துவிட்டது.

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 37

இவ்வாறு, அனைவரின் கண்ணிலும் மண்ணைத் தூவும் எங்களின் திறமையை நாங்களே மெச்சிக் கொண்டோம். மேசைக் கரண்டி விஷயத்தில் மிகுந்த பிரயாசையுடன் நாங்கள் அவ்வாறு செய்த காரியம் சரியான ஒன்றுதான் என்று டாம் கூறினான். இனி சித்தி தன் வாழ்வைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு போதும் மேசைக் கரண்டிகளைத் திரும்ப எண்ணிப் பார்க்கவே மாட்டாள் என்றும் அவன் கூறினான். எத்தனை முறை அவள் மேசைக் கரண்டிகளை எண்ணிப் பார்த்திருந்தபோதும், தான் சரியாக எண்ணிப் பார்க்கவில்லை என்றே அவள் நம்பிக் கொண்டிருப்பாள். இன்னும் மூன்று நாட்களுக்கு அவள் அவ்வாறு எண்ணிக் கொண்டே இருப்பாளானால், அதன்பின் தன் வாழ்வில் எதையும் எண்ணிப் பார்க்கும் ஒரு காரியத்தை முற்றிலுமாக அவள் கைவிட்டுவிடக் கூடும் என்று தான் நம்புவதாக டாம் கூறினான். அது மட்டுமல்லாது, யாரேனும் அவளை திரும்பவும் எண்ணிப் பார்க்கச் சொல்லிக் கூறினால், அவர்களை அவள் கொலை கூடச் செய்து விடக் கூடும் என்றான்.

முன்பு நாங்கள் திருடி வைத்திருந்த அந்த மேசை விரிப்பை, துணி காயப்போடும் கம்பியில் இரவு வேளையில் நாங்கள் போட்டுவிட்டு, அதற்குப் பதிலாக சேல்லி சித்தியின் அலமாரியில் இருந்து ஒன்றைத் திருடி விட்டோம். பின்னர், அதைத் திரும்ப வைப்பது, மீண்டும் திருடுவது என்று அடுத்து வந்த சில நாட்களுக்குச் செய்து, கடைசியில் எத்தனை விரிப்புகள் அங்கே உள்ளது என்று அவளுக்கே தெரியாதபடி நன்கு குழப்பி விட்டோம். இறுதியாக, எத்தனை விரிப்புகள் அவளிடம் உள்ளது என்று அவள் இனி கண்டு கொள்ளவே போவதில்லை என்ற அளவுக்கு அவளை மாற்றிவிட்டோம். அதைப் பற்றி அவள் எண்ணவே விரும்பவில்லை. அவற்றை திரும்ப எண்ணுவதற்குப் பதில் செத்துப் போவதே மேல் என்ற முடிவுக்கும் வந்துவிட்டாள்.

கன்றுக்குட்டிகள், எலிகள் போன்றவைகளின் கிருபையிலும், குழப்பமான எண்ணிக்கையாலும், மேல் சட்டை, மேசை விரிப்பு, மேசைக் கரண்டி மற்றும் மெழுகுதிரிகள் காணாமல் போன விஷயத்தில், நாங்கள் இப்போது நல்ல சௌகரியமான நிலையில் இருந்தோம். அந்த பித்தளைப்பீட மெழுகுவர்த்தி விஷயம் பெரிதாகத் தலை தூக்கவில்லை. அதுவும் அநேகமாக விரைவிலேயே அப்படியே அமுங்கிப் போய் விடும்.

ஆனால் சூனியக்கார கேக் செய்யும் விஷயம் எங்களை பாடாய்த்தான் படுத்தியது. அந்த கேக் விஷயத்தில், எங்களின் துன்பம் தீர்ந்தபாடாய்த் தெரியவில்லை. மரங்களுக்கிடையே ஒரு அடர்ந்த பகுதியில் வைத்து நாங்கள் அதைத் தயார் செய்தோம். ஒரு நாளில் முடிக்க முடியாவிட்டாலும், நாங்கள் திட்டமிட்டபடியே அதை தயாரிக்க முயற்சித்தோம். மூன்று பாத்திரங்களில் மாவு வைத்து அடுப்பு மூட்டி தயாரிக்க ஆரம்பித்த நாங்கள், கடைசியில் எங்களுக்கு நெருப்புக் காயம் ஏற்பட்டு, கண்கள் புகையில் கலங்கி வேதனைப்படும் அளவு மாறும் நிலை ஏற்பட்டது. பாருங்கள்! நாங்கள் விரும்பியது என்னவோ உள்ளே முழுதும் வெந்து பம்மென்றிக்கும் ஒரு முழு கேக். ஆனால், உள்பக்கம் காலியாகி சுற்றிலும் கேக் போன்ற பாவனையில் உருவாகி எப்போது வேண்டுமானாலும் விழுந்து நொறுங்கி விடும் நிலையில் இருந்த ஒரு பண்டம் கிடைத்தது. இருந்தாலும், அதை எப்படிச் சரி செய்வது என்றும் நாங்கள் முடிவு செய்து விட்டோம். உள் பக்கத்திற்கு ஏணி போன்ற ஒரு பகுதி செய்து வைப்பதுதான் அந்த எண்ணம்.

இரண்டாம் நாளிரவும், நாங்கள் ஜிம்மைச் சந்திக்கச் சென்றோம். அந்த மேசை விரிப்பை சிறு துண்டங்களாகக் கிழித்துக் கொண்டோம். அந்தத் துண்டங்களை ஒன்றோடு ஒன்று முறுக்கி, அடுத்த நாள் காலை விடிவதற்குள், ஒரு மனிதனைத் தாங்கும் அளவுக்கு நேர்த்தியான ஒரு நூலேணி தயார் செய்து விட்டோம். அந்த ஏணியைத் தயார் செய்ய ஒன்பது மாதங்கள் பிடித்தது போல நாங்கள் பாவனை செய்து கொண்டோம்.

அடுத்த நாள் காலை, அந்த ஏணியை மடித்து எடுத்துக் கொண்டு காட்டுக்குள் சென்றோம். ஆனால், நாங்கள் தயாரித்து வைத்திருந்த கேக்கினுள் அது சரியாகப் பொருந்தவில்லை. பெரியதொரு மேசை விரிப்பைக் கொண்டு அது தயாரிக்கப்பட்டதால், ஒரு நாப்பது கேக்குகள் இருந்தாலும் கூட அதை வைத்து மறைக்க முடியாது போல இருந்தது. மிச்சம் இருக்கும் ஏணியை சூப் அல்லது பன்றி இறைச்சியைக் கொண்டு செய்யப்படும் வட்டவடிவ தின்பண்டம் அல்லது இன்னும் என்னவெல்லாம் நாங்கள் தேர்ந்தெடுக்கிறோமோ, அதனுள் எல்லாம் வைத்தாலும் பொருந்தாது என்றே தோன்றியது. சாப்பாட்டு வகை மொத்தமும் தேவைப்படும் என்பது போல ஆயிற்று.


ஆனால், அப்படி எதுவும் அதிக அளவு தேவை உருவாக்கிக் கொள்ள நாங்கள் விரும்பவில்லை. ஒரு கேக்கில் வைக்கத் தேவைப்படும் அளவு ஒரு ஏணி போதும். எனவே, கேக்கில் வைத்த பின் மிச்சமிருந்த ஏணியை நாங்கள் தூர எறிந்தோம். பாத்திரம் கழுவி வைக்கும் அகன்ற வாளியில், அது சீக்கிரம் உருகி விடும் உலோகம் என்பதால் அதில் நாங்கள் கேக்கை சமைக்கக் கொஞ்சம் தயங்கினோம். ஆனால், சித்தப்பா சைலஸிடம் அவருக்கு மிகவும் பிடித்தமான பெரிய மரக் கைப்பிடிகள் கொண்ட நேர்த்தியான பித்தளை அடுபிடிக்கலன் ஒன்று இருந்தது. இங்கிலாந்திலிருந்து ராஜா வில்லியம் என்பார் மேபிளவர் கப்பல் அல்லது அது போன்ற வேறு ஏதோ கப்பலில் வந்தபோது அவருடன் துணை வந்த சைலஸ் சித்தப்பாவின் முன்னோருக்குச் சொந்தமானது அந்த அடுபிடிக்கலன் என்று சொல்லப்பட்டது. பழைய பானைகள் மற்றும் உள்ள விலைமதிப்பு மிக்க பொருட்களுடன் சேர்த்து இதுவும் பரணில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவை உண்மையில் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள் அல்ல. அவை வெறும் நினைவுச் சின்னங்கள்தான்.

ஒரு வழியாக அதையும் திருடிக் காட்டுக்குள் கொண்டு வந்து சேர்த்தோம். அதுவும் முதல் சில முறைகளில் சரியாக வேலை செய்யவில்லை. உண்மையில், எங்களுக்கு அதை எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியவில்லை. கடைசியாக, எங்களது முயற்சியில், எப்படியோ ஒரு சிறந்த கேக் தயாரித்து விட்டோம். அதனுள்ளே மாவைப் பதமாகப் பிசைந்து வைத்து நிலக்கரி அடுப்பில் வைத்து சுட்டோம். பின்னர், பாதி வெந்த மாவினுள் நூலேணியை வைத்து மீண்டும் மேலே மாவு வைத்து மறைத்து அடுப்பில் வைத்து அதனின் மூடி கொண்டு அதை மூடி வைத்தோம். அதன் மேல் நிலக்கரியின் சில நெருப்புத் துண்டங்களை வைத்து விட்டு, நாங்கள் ஐந்தடிக்கும் மேலாக தள்ளி நின்று கொண்டோம். பின்னர் அந்த கலனின் குளிர்ந்திருந்த மரக் கைப்பிடிகளை பிடித்துப் கொண்டோம். பதினைந்து நிமிடம் கழித்து எங்களுக்கு மிகச்சிறந்த ஒரு கேக் கிடைத்தது.

ஆயினும், யாரேனும் அதைச் சாப்பிட்டார்களானால், உள்ளிருக்கும் அந்த நூலேணி கடித்து முழுங்குவதற்குக் கடுமையாக இல்லாதிருப்பதால், பீப்பாய் கணக்காக பல் குத்தும் குச்சிகள் கையில் கண்டிப்பாக வைத்துக் கொள்ளவேண்டும். மற்றது பற்றி எனக்குத் தெரியாது. சாப்பிட்டவர்கள் அனைவருக்கும் கடுமையான வயிற்றுவலி கூட வரக் கூடும் என்பது என் யூகம்.

அந்த சூனியக்காரி கேக்கை நாங்கள் ஜிம்மின் தட்டில் வைத்தபோது, நட் அதை என்னவென்று கூட ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மூன்று தகர தட்டுகளையும் உணவிருக்கும் அந்த தட்டின் கீழ் வைத்தோம். ஜிம்முக்கு எல்லாம் கிடைத்து விட்டது. அவன் தனித்திருக்கும் வேளையில் கேக்கை உடைத்துப் பார்த்து, அதனுள் இருக்கும் நூலேணியை எடுத்து அவனின் வைக்கோல் படுக்கைக்குள் மறைத்து வைத்துக் கொண்டான் பின்னர், அந்தத் தகரத் தட்டுகளில் ஒன்றில் ஏதோ சில குறிகளைக் கிறுக்கிவைத்து, சன்னல் துவாரத்தின் வழியாக வெளியே வீசினான்.

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view itLast Updated on Saturday, 06 June 2020 15:23