நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 32

Friday, 22 May 2020 11:32 - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - முனைவர் ர. தாரணி பக்கம்
Print

- மார்க் ட்வைன் -

முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


அத்தியாயம் முப்பத்தி இரண்டு

பிலிப்ஸின் பண்ணைக்கு நான் சென்று சேர்ந்த போது, சூரிய வெளிச்சத்துடன் வெப்பம் அதிகமாக இருந்தது. ஞாயிற்றுக்கிழமை நாட்களின் தேவாலயம் போல அங்கே அனைத்தும் அசையாது அமைதியாக இருந்தது. பண்ணையாட்கள் தங்கள் வேலையில் மும்முரமாக இருந்தார்கள். வண்டுகளும், ஈக்கூட்டங்களும் காற்றில் மொய்த்துத் தொடர்ச்சியான ரீங்காரத்தை எழுப்பியது ஏதோ நீங்கள் இறந்து அங்கிருந்து அகன்று விட்டதைப் போன்றதொரு தனிமை உணர்வை உங்களுக்கு ஏற்படுத்தியது. மெல்லிய தென்றல் காற்று அங்கிருந்த இலைகளைத் தாலாட்டி அசைப்பது உங்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தும். ஏனெனில் இறந்து பல வருடங்கள் ஆன ஆவிகள் உங்களுடன் கிசுகிசுப்பாக ஏதோ ரகசியம் உங்களைப் பற்றி பேசுவது போன்று அது தோன்றும். பொதுவாக, அது போன்ற விஷயங்கள் நீங்கள் இறந்து இந்த பூவுலகை விட்டு தொலைந்தது போன்றதொரு மாய உணர்ச்சியை ஏற்படுத்தும் வல்லமை மிக்கவை.

முழு இடமும் ஒன்று போலவே தென்படும் பஞ்சு உற்பத்தி செய்யும் ஒரு சிறிய பண்ணைதான் பிலிப்ஸுக்கு சொந்தமானது. இரண்டு ஏக்கர் பண்ணையை ஒரு கஜ அகலத்தில் உள்ள கம்பி வேலி சுற்றி வளைத்திருந்தது. பல்வேறு நீளங்களில் காணப்படும் பீப்பாய்கள் போன்றே, அறுக்கப்பட்டிருந்த மரக் கட்டைகளைக் கொண்டு, விலங்குகள் ஏறிவர இயலாது மனிதர்கள் மட்டுமே பயன்படுத்தக் கூடிய வெவ்வேறு நீள அகலங்களில் உள்ள ஏணிகள் போன்ற படிக்கட்டுகள் அமைத்திருந்தார்கள். வேலியைத் தாண்டி மனிதர்கள் உள்ளே வருவதற்காக மட்டும் அல்லாது, பெண்கள் அதைப் பயன்படுத்தி குதிரை மீது ஏறி அமரவும் ஏதுவாக அவை அமைக்கப்பட்டிருந்தது. முன்பக்கத் தோட்டத்தில் அங்கங்கே சோகைபடிந்த புல்திட்டுகள் காணப்பட்டன. அவற்றில் பெரும்பான்மையானவை பழைய கிழிந்த தொப்பி போல வெறுமையாகவும், வழவழப்பாகவும் இருந்தன.

வெள்ளைக்கார அமெரிக்க மக்கள் வசிப்பதற்காக மரக்கட்டைகளால் கட்டப்பட்ட இரண்டடுக்கு மர வீடு ஒன்று அங்கே காணப்பட்டது. கோடரி போன்ற ஆயுதம் கொண்டு செதுக்கப் பட்ட மரக்கட்டைகளை அடுக்கி, அதனிடையே ஏற்படும் பிளவுகளை மண் அல்லது சுண்ணாம்புக் கலவை கொண்டு பூசி மெழுகி அந்த வீடு எழுப்பப்பட்டிருந்தது. பிளவுகளை அடைத்த மண் மீது ஏதோ ஒரு சமயத்தில் வெள்ளைச் சாயம் அடித்திருக்க வேண்டும். மேற்கூரையிடப்பட்ட வழியின் மூலம் அந்த வீட்டுடன் இணைந்தாற்போல் இருந்த ஒரு பெரிய அகலமான திறந்திருந்த சமையல் கட்டு அங்கிருந்தது. பெரிய மரக்கட்டை புகைபோக்கி ஒன்று அந்த சமையலறையின் பின்பக்கமாக இருந்தது. அந்த புகைக்கூண்டுப் பகுதியின் இன்னொரு புறமாக மரக்கட்டைகளால் அமைக்கப்பட்ட மூன்று நீக்ரோ அறைகள் இருந்தன. அத்துடன் பின்பக்க வேலியின் அருகே ஒரு குடிசை தனித்து நின்றது தெரிந்தது.

வீட்டின் கீழ்பக்கமாக இன்னொரு புறத்தில், சிறு சிறு வீடுகள் சிலவும், சாம்பலை நீரில் அலசி வடிகட்டி அதன் மூலம் சவுக்காரக் கட்டிகள் தயாரிக்கும் இயந்திரம், சிறு குடிசைக்குள்ளே சவுக்காரக் கட்டிகளைக் கொதிக்க வைக்க ஒரு பெரிய அடுபிடிகலன் (கெட்டில்) மற்றும் சமயலறைக் கதவினருகே உக்கார ஒரு நீண்ட இருக்கை இவற்றுடன் நீர் நிறைந்த ஒரு வாளியுடன், பரங்கி காய் ஆகியவை காணப்பட்டன. அங்கே ஒரு நாய் சூரிய வெளிச்சத்தில் அசந்து தூங்கிக் கொண்டிருந்தது. மேலும் சில வேட்டை நாய்கள் ஆங்காங்கே படுத்து உறங்கி கொண்டிருந்தன. வேலியின் ஒரு மூலையில் மூன்றடுக்கு நிழல் தரும் மரம் ஒன்றும், இன்னொரு இடத்தில் அடர்ந்து புதர் போன்று வளர்ந்திருந்த திராட்சைவத்தல் கொடிகளும் இருந்தன. வேலிக்கு வெளிப்புறமாக ஒரு தோட்டமும் அதில் படர்ந்திருக்கும் தர்பூசணிக் கொடிகளும் தென்பட்டன. அந்தத் தோட்டத்திற்குப் பின்புறமாக பஞ்சுப்பொதி பண்ணையும் அதற்கும் பின்புறம் மரங்களடர்ந்த காடும் காணப்பட்டது.

வேலியைச்சுற்றி நடந்து சென்று பின்பக்கமாக இருந்த மரப்படிக்கட்டுகளாலான மதில் ஏணியின் மீது ஏறி, சாம்பல் அடைத்து வைத்திருக்கும் இயந்திரம் பக்கமாக இறங்கி சமையலறையை நோக்கி நடந்தேன். மிக அருகில் அங்கே நான் செல்லும்போது, மேலும் கீழுமாக சுழலும் ராட்டையின் ம்ம்ம்ம் என்ற ரீங்காரம் எனக்குக் கேட்டது. உலகத்திலேயே மிகவும் தனிமையுணரவைக் கொடுக்கும் சத்தம் அது என்பதால் நான் மாண்டு விட்டேனோ என்று கூட நான் நினைக்கும்படி நேர்ந்தது.

நான் அப்படியே நடந்து கொண்டிருந்தேன். என் மனதில் குறிப்பிட்ட எந்தத் திட்டமும் இல்லை. ஆயினும் தேவைப்படும் சமயங்களில், சந்தர்ப்பத்திற்குத் தகுந்த வார்த்தைகள் என் வாயிலிருந்து வெளிப்படும்படியாக இயற்கையின் அருள்நலம் எனக்குத் துணை நிற்கும் என்று நான் முழுமையாக நம்பினேன். அதை நான் உண்மையாகப் பயன்படுத்தினால், அந்த அருள்நலம் எனக்குச் சரியான வார்த்தைகளைக் கொடுத்து பல சந்தர்ப்பங்களில் என்னைக் காத்து நிற்பதை நான் பலமுறை கவனித்திருக்கிறேன்.

சமையலறையை நோக்கி பாதிதூரம்தான் நான் நடந்திருப்பேன். அதற்குள்ளாகவே, ஒன்றன் பின்னால் மற்றொன்று என அனைத்து வேட்டை நாய்களும் என்னைத் துரத்த ஆரம்பித்தன. இருந்தாலும், அவற்றை எதிர்கொள்ளும் விதமாகத் திரும்பி தைரியமாக நான் அசையாமல் நின்றேன். கால் நிமிட நேரத்திற்குள்ளாகவே எப்படி ஒரு சத்தம் போட்டு கலாட்டா செய்தன அவைகள் என்று நினைக்கிறீர்கள்! ஒரு சக்கரத்தின் ஆரக்கால்கள் போன்று நாய்கள் முற்றிலுமாக என்னைச் சூழ்ந்து கொள்ள நான் நடுவில் திகைத்து நின்றேன். தங்களின் கழுத்தையும், மூக்கையும் என் பக்கமாக நீட்டி கொண்டு பதினைந்து நாய்கள் என்னை வட்டமிட்டவாறே நகரவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தன. குரைத்துக் கொண்டே ஊளையிட்டவாறு என் பக்கமாக நெருங்கி வந்து கொண்டிருந்தன. வேலியின் மேலிருந்து குதித்தும், இன்னும் அங்குள்ள மூலைகளிலிருந்தும் கூட அவை பாய்ந்தோடி வந்து கொண்டிருந்தன.

ராட்டையில் சுழலும் கம்பி ஒன்றைக் கையிலேந்தியவாறே சமையலறையிலிருந்து ஒரு நீக்ரோ பெண் "அந்தப் பக்கம் போங்கள். டைகர்! போங்க அனைவரும்! இங்கிருந்து உங்க இடத்திற்குப் போய்ச் சேருங்கள்!" என்று கத்தியவாறே வெளியே ஓடி வந்தாள். ஒரு நாயை லேசாக அடித்து அது போன்றே இன்னொன்றையும் அடித்து அவர்கள் ஊளையிடுவதை நிறுத்த அவள் சொன்னாள். மற்றவைகள் பேசாமல் அவர்கள் இடம் சென்று மீண்டும் ஒய்வு எடுக்க ஆரம்பித்தன. ஆனால், அடுத்த நொடியே, அவற்றில் பாதிக்கும் மேற்பட்ட நாய்கள் வாலை ஆட்டிக் கொண்டு என் பக்கமாக வந்து தோழமைக்கு அடிப்போட்டன. கண்டிப்பாக வேட்டை நாய்களிடம் எந்தக் இழிபுத்தியும் இல்லை.

ஒரு நீக்ரோ சிறுமியும், இரண்டு நீக்ரோ சிறுவர்களும் நீக்ரோ பெண்ணின் பின்புறமாக வந்து நின்றனர். அவர்கள் மூவரும் நீண்டு தொங்கும் லினன் மேல் சட்டை தவிர வேறு எதுவும் அணிந்திருக்கவில்லை. அவர்களின் தாயின் நீண்ட அங்கியைப் பிடித்துத் தொங்கிக் கொண்டு, அவளின் பின்புறத்திலிருந்து எப்போதும் அவர்களுக்கு இருப்பது போலவே மிகுந்த வெட்கத்துடனும் ஆர்வத்துடனும் என்னை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஒரு வெள்ளைக்காரப் பெண்மணி உள்ளிருந்து அப்போது ஓடி வந்தாள். அந்த அம்மாளுக்கு ஒரு நாற்பத்தையைந்து அல்லது ஐம்பது வயது இருக்கலாம். தலையில் தொப்பி அணியாது, கையில் ராட்டைக்கான கம்பியை வைத்திருந்தாள். அவளின் சிறிய வெள்ளைக்காரக் குழந்தைகளும் அவளைப் பின்தொடர்ந்து வந்தனர். நீக்ரோ குழந்தைகள் செய்த மாதிரியே அவர்களும் செய்து கொண்டிருந்தார்கள். அதிகமாக புன்னகை பூத்தபடியே இருந்த அந்தப் பெண்மணி சந்தோசம் தாளாது, நேராக நிற்கக் கூட முடியாது தவித்தாள். பின்னர் கூறினாள்:

"ஆஹா! கடைசியாக, அது நீதான். நீதானே?"

ஒரு நொடி கூடச் சிந்திக்காது நான் பதிலிறுத்தேன், " ஆம் மேடம்."

ஆனந்தத்தில் அவள் என்னை இழுத்து இறுக்கமாக அணைத்துக் கொண்டாள். பிறகு, எனது இரு கைகளையும் கெட்டியாகப் பிடித்து குலுக்கிக் கொண்டே இருந்தாள். அவளின் இரு கண்களிலும் கண்ணீர் ஆறாகப் பெருகி கன்னங்களில் வழிந்தோடியது. என்னைக் கட்டி பிடித்தும், கைகளைக் குலுக்கியும் அவளுக்கு போதும் என்று தோன்றவேயில்லை போலும்! கீழ் வருமாறு கூறிக் கொண்டே சென்றாள்:

"நான் நினைத்தது போல உன் அம்மாவின் சாயலை நீ அதிகம் பெறவில்லை. அதெல்லாம் எனக்குப் பெரிதில்லை. கடவுள் புண்ணியத்தில் நான் உன்னைக் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். அன்புச் சிறுவனே! உன்னை அப்படியே பிடித்து விழுங்கி விடவேண்டும் என்று தோன்றுகிறது. குழந்தைகளா! இது யார் தெரிகிறதா? உங்களின் பெரியம்மா பையன் டாம். அவனுக்கு ஒரு ஹாய் சொல்லுங்கள், பார்க்கலாம்."


ஆனால் வாத்து போல அவர்கள் தலையை இன்னும் பின்னுக்கு இழுத்துக் கொண்டு வாயில் விரலை வைத்துக் கொண்டு குழப்பத்துடன் அவள் பின்னால் இன்னமும் ஒளிந்துகொண்டிருந்தார்கள். அவள் தன் பேச்சைத் தொடர்ந்தாள்:

"லிஸி! விரைவாகச் சென்று அவனுக்கு காலை உணவு உடனே கொண்டு வா. அல்லது காலை உணவை நீ படகிலேயே உண்டுவிட்டாயா, என்ன?"

நான் படகிலேயே உண்டுவிட்டேன் என்று பதில் கூறினேன். எனவே என் கையைப் பிடித்தவாறு, குழந்தைகள் பின்னால் ஓடி வர வீட்டின் உள்புறமாக அவள் கூட்டிச் சென்றாள். பிளவுற்ற கீழ் பக்கம் உள்ள ஒரு இருக்கையில் என்னை அமரத்தி வைத்தாள். . என் முன்பக்கமாக ஒரு சிறு முக்காலியில் அவள் அமர்ந்து கொண்டு எனது இரு கைகளையும் பிடித்தவாறே கேட்டாள்:

"இப்போது உன்னை என்னால் நன்கு பார்க்க முடிகிறது. கடவுளே! இத்தனை வருடங்களில் உன்னைக் காண நான் எத்தனை ஆவலுடன் இருந்திருப்பேன் தெரியுமா! இப்போது அந்த நாளும் வந்து சேர்ந்தது. கடந்த சில தினங்களாகவே நீ வருவாய் என நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். எது உன்னை தடை செய்தது? நீ வந்த படகு கரை தட்டிவிட்டதா?

"ஆமாம் மேடம்! அது ................"

"மேடம் என்று சொல்லாதே! சேல்லி சித்தி என்று அழை. படகு எங்கே கரை தட்டியது?

படகு மேல்பக்கமாக வந்தததா அல்லது நதியின் கீழ்பக்கமாக வந்து கொண்டிருக்கிறதா என்று எனக்கு ஒன்றுமே தெரியாத போது , இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், சில கூர்மையான உள்ளுணர்வுகள் எனக்குள் இருந்தன. அந்த உள்ளுணர்வுகளைப் பயன்படுத்தி நான் வந்த படகு நியூ ஆர்லியன்ஸ் திசையிலிருந்து மேல் நோக்கி வந்து கொண்டிருந்தது என்று கூற யோசித்தேன். ஆனால் அந்த வழியில் உள்ள மணல்திட்டுகளின் பெயர்கள் எனக்குச் சரியாக கூறத் தெரியாது. ஏதேனும் ஒரு பெயரை உருவாக்கிச் சொல்லவேண்டும் அல்லது அதை மறந்து விட்டது போல நடிக்க வேண்டும்.. அதனால் படகு கரை தட்டிப் போனது என்று கூற வேண்டும். ஆனால் எனக்கு வேறு ஒரு யோசனை உதித்தது. அதை நான் அங்கே பயன்படுத்தினேன்.

"நல்லது. படகு கரை தட்டியதில் ஒரு பிரச்னையும் இல்லை. அது எங்களைக் கொஞ்சமாத்தான் தடை செய்தது. ஆனால் படகினுள்ளே இருந்த இயந்திரத்தின் ஒரு பகுதி பழுதாகி வெடித்து விட்டது."

"அட ஆண்டவா! யாருக்கேனும் காயம் பட்டுவிட்டதா?"

"இல்லை மேடம். ஒரு நீக்ரோ மட்டும் அதில் கொல்லப்பட்டான்."

"நல்லது. அதிர்ஷ்டம்தான். சில சமயங்களில் மக்கள் அதிகமாக அடி பட்டுவிடுவார்கள். இரண்டு வருடங்கள் முன்பு கிறிஸ்துமஸ் சமயத்தில் உன் சித்தப்பா சைலஸ் லேடி ராக் என்ற பெயருடைய ஒரு பழைய நீராவிப் படகில் நீ ஆர்லியன்ஸ் நகரிலிருந்து வந்து கொண்டிருந்தார். இதே போல் அங்குள்ள இயந்திரத்தின் சிலிண்டர் வெடித்து ஒரு பயணி ஊனமாகி விட்டார். அதன் பின் அவர் இறந்து விட்டார் என்று கூட நினைக்கிறேன். அவர் ஒரு பாப்டிஸம் கொள்கையாளர். அவருக்கு தெரிந்த ஒரு குடும்பம் உனது சித்தப்பா சைலசுக்கும் தெரிந்ததால் நல்லதாகப் போயிற்று. ஆம். இப்போது எனக்கு ஞாபகம் வந்து விட்டது. அவர் இறந்துதான் போய்விட்டார். காலின் புண்கள் அழுகிப் போன நிலையில் அதை வெட்டி எடுக்க வேண்டியதாயிற்று. அந்த முயற்சியில் அவரைக் காப்பாற்ற முடியாது போயிற்று. ஆம். அது சீழ் பிடித்து அழுகிப் போன காயம்தான். அதுதான். அவரின் உடல் முழுக்க நீலம் பாரித்துவிட்டாலும் தான் கடவுளால் கீர்த்தியுடன் உயிர் பெறுவோம் என்ற நம்பிக்கையுடன் அவர் மரித்துப் போனார். அந்தக் காட்சி பார்க்க ரொம்ப பரிதாபமாக இருந்தது என்று எல்லோரும் கூறுவார்கள்.”

“உன்னைக் கூட்டிவர என்று உனது சித்தப்பா ஒவ்வொரு நாளும் ஊருக்குள் சென்று பார்த்துவிட்டு வருவார். இப்போது கூட அதற்குத்தான் சென்றிருக்கிறார். அவர் சென்று ஒரு மணி நேரத்திற்கும் கொஞ்சம் அதிகம் ஆகி இருக்கும். எனவே அவர் எந்த நிமிடமும் இப்போது வீடு திரும்பலாம். நீ அவரைச் சாலையில் சந்தித்திருக்கக் கூடுமே, இல்லையா? ஒரு வயதான மனிதன் கையில் ..........."

"இல்லை. நான் யாரையும் காணவில்லை, சேல்லி சித்தி! அதிகாலையில் அந்தப் படகு கரை சேர்ந்தது. கரையில் நங்கூரமிட்டு நிற்கும் படகிலேயே எனது உடைமைகளை விட்டுவிட்டுவிட்டு நேரத்தைப் போக்க நினைத்து ஊரையும் அதன் பக்கத்திலுள்ள சிறிய கிராமங்களையும் கொஞ்ச நேரம் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தேன். அத்தனை அதிகாலையில் உங்களை வந்து தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. எனவே, நான் இங்கே நேரம் கழித்து வரும் சமயம், பின் பக்க வழியாக வந்தேன்."

"உனது உடைமைகளை யாரிடம் கொடுத்தாய்?"

"யாரிடமும் இல்லை."

"ஆனால், குழந்தாய்! அவைகள் திருடப்பட்டுவிடும்."

"நான் மறைத்து வைத்துள்ள இடத்திலிருந்து யாரும் திருட முடியாது" நான் கூறினேன்.

"நல்லது. அத்தனை அதிகாலையில் படகு வந்திருந்தால், பிறகு எங்கே நீ காலை உணவு உண்டாய்?"

சன்னமான ஐஸ் கட்டிகளின் மீது சறுக்குவது போல நான் உணர்ந்தேன். எனவே நான் கூறினேன்:

"படகின் மாலுமி நான் அங்கே நின்று கொண்டிருப்பதைக் கண்டு கரைக்குப் போகும் முன் ஏதேனும் சாப்பிட்டுவிட்டு செல்லச் சொல்லி அறிவுறுத்தினார். எனவே அவரே என்னை உள்ளே கூட்டிச் சென்று அதிகாரிகள் சாப்பிடும் உணவகத்தில் எனக்குத் தேவையானதை எல்லாம் வாங்கிக் கொடுத்தார்."

எனக்குள் ஒரு நடுக்கம் மெல்லியதாக ஓடிக் கொண்டிருந்ததால், கவனத்துடன் இருப்பதைத் தவிர்க்க ஆரம்பித்தேன். முழு நேரமும் என மனம் அந்தக் குழந்தைகளின் விளையாட்டில் இருந்தது. நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும்போது அவர்களை வெளியே தள்ளி வந்து அவர்களிடமிருந்து நான் யார் என்பதான அனைத்து தகவல்களையும் கறந்து விட வேண்டும் என்று என மனம் துடித்தது. ஆனால் தொடர்ந்து மிஸஸ் பிலிப்ஸ் பேசிக் கொண்டே சென்றதால், அதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைக்கவே இல்லை. வெகு விரைவிலேயே எனது முதுகுத் தண்டு சில்லிடும்படியாக அவள் இவ்வாறு கேட்டாள்:

"நான் இவ்வாறு படபடத்துக் கொண்டு விசாரித்துக் கொண்டிருக்கிறேன். நீயானால் சகோதரி மற்றும் உள்ள அனைவரைப் பற்றியும் ஒரு வார்த்தை கூடக் கூறாது இருக்கிறாய். இப்போது நான் கொஞ்சம் ஓய்வெடுத்துக் கொள்கிறேன். நீ பேச ஆரம்பித்து விடு. அவர்களைப் பற்றி, ஒவ்வொருவரையும் பற்றி , அனைவரையும் பற்றி என்னிடம் கூறு. அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கூறு. என்ன செய்து கொண்டிருக்கிறார்கள், என்னிடம் கூறச் சொல்லி அவர்கள் என்ன சொல்லி விட்டார்கள், இன்னும் என்னவெல்லாம் அவர்களைப் பற்றி கூற முடியுமோ அவையெல்லாம் ஒன்று கூட விட்டுவிடாமல் என்னிடம் கூறு."

நல்லது. வெட்டுண்ட மரத்தின் கிளை உச்சியில் பிடிமானம் இல்லாது நிற்பது போலத் தோன்றியது. இதுவரை அருள்நலம் எனக்குத் துணை நின்று சரியாகக் கொண்டு சென்றது. ஆனால் இப்போது நான் தரையில் வீழ்வது போல் தோன்றியது. இனி இப்படியே சமாளித்துக் கொண்டு செல்வதென்பது இயலாத காரியம் என்று நான் கண்டுகொண்டேன். இந்த விளையாட்டில் விட்டுக் கொடுப்பதுதான் நல்லது. இதோ! இன்னொரு முறை நான் உண்மையைச் சொல்லி ஆபத்தை விலைக்கு வாங்கப் போகிறேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். இவ்வாறு தீர்மானித்து, உண்மையைச் சொல்ல வாயெடுத்த நேரம், எதிர்பாராதவிதமாக என்னை இழுத்துக் கொண்டு சென்று படுக்கையின் பின்புறம் மறைத்து வைத்தாள்.

பின்னர் "இதோ அவர் வருகிறார். உன்னுடைய தலையை இன்னும் கொஞ்சம் கீழே மறைத்து வைத்துக் கொள். - ம்ம் - அப்படித்தான். இது சரியாக உள்ளது. இப்போது நீ வெளியே தெரிய மாட்டாய். நீ உள்ளே இருப்பதை காட்டிக் கொடுத்து விடாதே. நான் ஒரு வேடிக்கை விளையாட்டு அவரிடம் செய்யப் போகிறேன். குழந்தைகளே! நீங்களும் வாயைத் திறக்காதீர்கள்." என்று சிறுபிள்ளை போலக் கூறினாள்.

அவிழ்க்கவே முடியாத சிக்கலில் நான் நன்கு சிக்கிக் கொண்டதை உணர்ந்து கொண்டேன். இதற்கு மேல் கவலைப்படுவது பிரயோஜனம் இல்லை என்று நினைத்த நான், அவள் உண்மையைக் கண்டுபிடித்து விட்டால், இதிலிருந்து வெளி வர என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி சிறிது தீவிரமாகச் சிந்திக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஒரு முதிய கனவான் உள்ளே நுழையும் காட்சி எனக்குக் கொஞ்சமாகத் தெரிந்தது. எனக்கு முன் பக்கமாக இருந்த படுக்கை அவரை முழுதும் காண விடாது தடுத்தது. மிஸஸ் பிலிப்ஸ் அவரை நோக்கி குதித்தவாறே சென்றாள்.

"அவன் வந்து விட்டானா?" அவள் கேட்டாள்.

"இல்லை" அவள் கணவன் பதிலிறுத்தான்.

"கருணையுள்ள கடவுளே!" அவள் கூறினாள், "அவன் இந்த உலகத்தில் எங்குதான் இருக்கிறான்?".

"என்னால் கற்பனை செய்து பார்க்க முடியவில்லை." முதிய கனவான் கூறினார், "எனக்கு இந்த விஷயம் கடுமையான சஞ்சலத்தைக் கொடுக்கிறது என்றுதான் நான் கூறவேண்டும்."

"சஞ்சலம்!" அவள் கூறினாள், "எனக்கு பித்துப் பிடிக்கும் போல உள்ளது. அவன் வந்திருப்பான். நீங்கள்தான் எங்காவது சாலையில் அவனைக்கவனிக்காமல் வந்திருப்பீர்கள். அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஏதோ ஒரு பட்சி எனக்கு அப்படித்தான் சொல்கிறது."

"ஆனால் சேல்லி! சாலையில் பார்க்காமல் அவனை நான் விட்டிருக்க வாய்ப்பேயில்லை. உனக்கு அது தெரியும்."

"ஓ! அன்புடையவனே! அன்புக் கணவனே! என் சகோதரி என்ன சொல்லுவாள்? அவன் இந்நேரம் வந்திருக்க வேண்டும். நீங்கள் அவனை எப்படியோ தவற விட்டுவிட்டீர்கள். அவன் .........."

"ஓ! இன்னும் அதிகமான மனக்கலக்கத்திற்கு என்னை ஆளாக்காதே! இப்போது என்ன செய்வதென்று எனக்குப் புரிபடவே இல்லை. என் அறிவையெல்லாம் இழந்த நிலையில் நான் இருக்கிறேன். நான் கடும்பீதியில் இருக்கிறேன் என்பதைக் கூட வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத்தயாராக இருக்கிறேன். ஆனால் அவன் இங்கே முன்னமே வந்திருப்பான் என்பதற்கு எந்த நம்பிக்கையும் இல்லை. வழியெல்லாம் பார்த்துக் கொண்டே வந்த என்னைத் தாண்டி அவன் ஒருக்காலும் இங்கே வந்திருக்கவே முடியாது. நான் அவனைத் தவற விட்டிருக்கவே மாட்டேன், சேல்லி! இது மிகவும் பயங்கரமாக உள்ளது. மிக பயங்கரம். அந்தப் படகுக்கு ஏதோ ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்று உறுதியாகக் கூறுகிறேன்."

"ஆனால், சைலஸ்! கொஞ்சம் அந்தப் பக்கம் பார்! அந்தச் சாலையைப் பார்! யாரேனும் வருகிறார்களா?"

படுக்கையின் தலைமாட்டின் அருகே இருந்த சன்னலை நோக்கி அவர் ஆவலாக ஓடிய வேளையை மிஸஸ் பிலிப்ஸ் பெரிதும் எதிர்பார்த்திருந்தாள். படுக்கையின் கால்மாட்டுப் பகுதியை நோக்கி விரைவாகக் குனிந்த அவள், அங்கு ஒளிந்திருந்த என்னை இறுகப் பற்றி இழுத்ததும், நான் வெளியே வந்தேன். ஏமாற்றத்துடன் அவர் சன்னலிலிருந்து திரும்பியதும், தீப்பற்றி எரியும் வீடு போல பிரகாசமான புன்னகை ஒளியை வீசிய வண்ணம் அவள் கம்பீரமாக நின்றாள். நானோ சக்தியிழந்து வேர்வை கொட்ட அவளின் பின்பக்கமாக நின்றேன். உற்று நோக்கிய அந்த முதிய கனவான், "ஏன், யார் அது?" என்று ஆச்சர்யத்துடன் வினவினார்.

"யாராக இருக்கும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?"

"எனக்கு சரியாகத் தெரியவில்லை. யார் அது?"

"இவன்தான் டாம் சாயர்!"

அடங்கொப்புரானே! தரையில் மயங்கி விழாத குறையாக நான் இருந்தேன். ஆனால் அதைப் பற்றி சிந்திக்கக் கூட நேரம் இல்லை. அந்த முதியவன் எனது கரத்தைப் பற்றி குலுக்கிக் கொண்டே இருந்தான். அந்தப் பெண்ணோ அறையெங்கும் குதித்து ஆடியபடியும், சிரித்துக் கொண்டும், அழுது கொண்டும் தனது சந்தோசத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். அதன் பின்னர் சிட் பற்றியும் மேரி பற்றியும் இன்னும் டாம் சாயரின் குலத்தில் யாரெல்லாம் உள்ளார்களோ அவர்கள் அனைவரைப் பற்றியும் விசாரித்துக் கேள்விக்கணைகளால் துளைத்து எடுத்தார்கள்.

ஆனால் என்னுடைய சந்தோசத்தின் முன் அவர்களின் சந்தோசம் ஒன்றுமே இல்லை. நான் திரும்பவும் புதிதாய் பிறந்தது போல உணர்ந்தேன். நான் யாருடைய இடத்தில் அங்கே இருந்தேன் என்று தெரிந்த பிறகு எனக்கு இன்பம் பெருக்கெடுத்து ஓடியது. நல்லது. பசை போட்டு ஒட்டிக் கொண்டாற்போல் தொடர்ந்து இரண்டு மணி நேரம் அவர்கள் என்னோடு கூடவே இருந்தார்கள். என்னுடைய, அதாவது டாம் சாயரின் குடும்பத்திலுள்ளவர்களைப் பற்றி அவர்களிடம் சொல்லிக் கொண்டே இருந்ததால் எனது தாடை நோக ஆரம்பித்தது. உண்மையாகவே டாம் சாயரின் குடும்பத்தைச் சார்ந்த ஆறு நபர்களுக்கும் என்ன நடந்தது என்ற அனைத்து நிகழ்வுகளையும் நான் அவர்களிடம் சொல்லி முடித்தேன். எப்படி நாங்கள் வெள்ளை ஆற்றில் சிலிண்டரை வெடித்தோம் என்றும், எப்படி அதைச் சரி செய்ய மூன்று நாட்கள் ஆனது என்பது பற்றியும் அவர்களுக்கு நான் விளக்கிக் கூறினேன். அந்தக் கதை அவர்களிடையே சரியாக வேலை செய்தது. மூன்று நாட்களில் சிலிண்டரை சரி செய்வது எப்படி என்பது பற்றி அவர்களுக்கு எதுவுமே தெரியாத மரை கழன்ற நபர்கள் என்பதால் நான் சொன்னதை அப்படியே நம்பினார்கள்.

இப்போது அந்த சூழ்நிலை எனக்கு வேண்டியவாறு சரிப்பட்டு வந்தது. டாம் சாயராக நடிப்பது ஒன்றும் கஷ்டம் அல்லவே. இந்தக் கூத்து நன்றாகவும் சுலபமாகவும் போய்க் கொண்டிருந்த வேளை அங்கே நதியின் கரையில் ஒரு நீராவிப் படகு வந்திருப்பதை நான் கேள்விப்பட்டேன். உண்மையிலுமே டாம் சாயர் அந்தப் படகில் வந்திருந்தால் என் கதி என்னவாகும் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். தடாலென்று அவன் இங்கே நடந்து வந்து, அவனுக்கு நான் ஜாடை காட்டி பேசாமலிருக்கச் சொல்லி உணர்த்துவதற்குள், என் பெயரை அவன் அழைத்துத் தொலைத்து விட்டால் என்ன செய்வது?

நல்லது. அப்படி நடக்க நான் விடமாட்டேன். அப்படி நடக்கவே கூடாது. நான் அதற்கு முன்பே சென்று அவனைத் தடுத்து விடவேண்டும். எனவே, என்னுடைய உடைமைகளை ஊருக்குள் சென்று எடுத்து வருகிறேன் என்று வீட்டில் இருந்தவர்களிடம் பொய்காரணம் கூறினேன். அந்த முதிய கனவான் என்னுடன் துணைக்கு வருவதாகக் கூறினார். நான் வேண்டாமென்று மறுத்து விட்டேன். குதிரையை நான் நன்கு செலுத்துவேன் என்று கூறி அவர்களிடம் இருந்து தப்பிக்க முயற்சித்தேன். அவர்கள் என் மேல் இத்தனை கரிசனம் எடுத்துக் கொள்வதை நான் பெரிதாக விரும்பவில்லை.

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 23 May 2020 20:51