நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 17

Monday, 27 April 2020 19:32 - ஆங்கில மூலம்: மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ர.தாரணி - முனைவர் ர. தாரணி பக்கம்
Print

அத்தியாயம் பதினேழு

- மார்க் ட்வைன் -முனைவர் ஆர்.தாரணி

என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 17அடுத்த ஒரு நிமிடத்தில், திறந்திருந்த சன்னல் வழியாக தன் தலையை நீட்டாமல் ஒரு குரல் மட்டும் பேசியது.

"போதும் நிறுத்துங்க, பசங்களா! யார் அங்கே?"

நான் கூறினேன் "அது நான்தான்."

"யார் அந்த நான்?"

"ஜார்ஜ் ஜாக்சன், சார்!"

"உனக்கு என்ன வேண்டும்?"

"எனக்கு ஏதும் தேவை இல்லை சார். இந்தப்பக்கமாக நான் நடந்து சென்று கொண்டிருந்தேன். உங்களின் நாய்கள் என்னை அனுமதிக்கவில்லை."

"இந்த இரவு வேளையில் அனாவசியமாக எதற்கு இந்தப்பக்கம் சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறாய்? ஹே!"

"நான் சுற்றித் திரியவில்லை சார். நீராவிப்படகின் மேலிருந்து தவறி நீரில் வீழ்ந்து விட்டேன்."

"ஓ! உண்மையாகவா? யாரேனும் தீக்குச்சி உரைத்து லாந்தரைப் பற்றவைக்கலாமே? உன் பெயர் என்னவென்று சொன்னாய்?"

"ஜார்ஜ் ஜாக்சன், சார்! நான் ஒரு சிறுவன்.".

"இங்கே கவனி. உண்மையை மட்டும் நீ சொன்னால், பயப்படவேண்டிய அவசியம் இல்லை. யாரும் உன்னை எதுவும் செய்யமாட்டார்கள். ஆனால் அங்கிருந்து நகரப் பார்க்காதே. எங்கே இருக்கிறாயோ, அங்கேயே நில். உங்களில் ஒருத்தர் சென்று பாப் மற்றும் டாம் இருவரையும் தூக்கத்திலிருந்து எழுப்பி , துப்பாக்கியையும் எடுத்து வாருங்கள். ஜார்ஜ் ஜாக்சன்! வேறு யாரேனும் உன்னோடு இருக்கிறார்களா?

 

"இல்லை சார். யாரும் இல்லை."

இந்தச்சமயத்தில் வீட்டுக்குள் மனிதர்கள் நடமாடும் ஓசை கேட்டது. ஒரு விளக்கு எரிவதையும் நான் கண்டேன். அந்த மனிதன் கூறினான்

"விளக்கைத் தள்ளி வை, பெஸ்ட்டி, கிழட்டு முட்டாள்! உனக்கு பொது அறிவு என்று எதுவுமே கிடையாதா? கதவின் அருகில் தரையின் மீது அதை வை. பாப்! நீயும் டாமும் தயாராக இருந்தால், நீங்கள் நிற்கவேண்டிய இடத்தில் நின்று கொள்ளுங்கள்."

"அனைவரும் தயார்."

" சரி, இப்போது, ஜார்ஜ் ஜாக்சன்! உனக்கு செப்பேர்ட்சன் என்பாரைத் தெரியுமா?"

"இல்லை சார். அவர்களைப் பற்றியெல்லாம் நான் ஒருபோதும் கேள்விப் பட்டதே இல்லை."

"நல்லது. அது உண்மையாக இருக்கட்டும். இல்லாமலும் இருக்கட்டும். சரி. நாங்கள் அனைவரும் தயாராக உள்ளோம். முன்னுக்கு வா, ஜார்ஜ் ஜாக்சன். நான் உன்னை எச்சரிக்கிறேன். அவசரப்படாதே. மெதுவாக இங்கே வா! யாரேனும் உன்னுடன் இருந்தால், அவர்கள் விலகி இருப்பது நல்லது. அப்படி இல்லாமல் அவன் உன்னுடன் வந்தால், அவன் சுடப்படுவான். இப்போது வா! மெதுவாக நெருங்கு. கொஞ்சமாக அந்தக் கதவை நீக்கு- உள்ளே அழுத்தித் திருகு, சரியா?"

நான் அவசரப் படவில்லை. நான் நினைத்திருந்தாலும்கூட அது முடியாது. ஒவ்வொரு தடவைக்கும் ஒரு மெதுவான அடி எடுத்து வைத்தேன். எந்தச் சப்தமும் நான் செய்யாவிட்டாலும் கூட, என் இருதயம் அடித்துக் கொள்ளும் ஒலி எனக்குத் தெளிவாகக் காதில் விழுந்தது. அந்த நாய்க்கூட்டம் மனிதர்களை விடவும் அதிகமாக அமைதி காத்தன. ஆனாலும், எனக்குச்சிறிது பின்னால் இருந்து என்னைத் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன.

மூன்று மரப்படிக்கட்டுகளின் மீது நான் ஏறியபிறகு, உள்ளிருக்கும் கதவின் குறுக்குக் கட்டையை விலக்கி, பூட்டைத் திறந்து தாழ்ப்பாளை நீக்கி அவர்கள் திறந்த சப்தம் எனக்குக் கேட்டது. கதவின் மீது கையை வைத்து கொஞ்சமாகத் திறக்க முயற்சித்த போது யாரோ கூறுவது கேட்டது. "அந்த இடைவெளியே அதிகம். தலையை உள்ளே நீட்டு." நான் நீட்டினேன். ஆனால் அவர்கள் ஒருக்கால் என்னை சுட்டுத்தள்ளிவிடலாம் என்று கூட அந்தக் கணத்தில் அஞ்சினேன்.

தரையின் மீது ஒரு மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. ஒரு சில வினாடிகளுக்கு அறையில் உள்ள அனைவரும் என்னையே உற்று நோக்குவது தெரிந்தது. நானும் அவர்கள் அனைவரையும் நோக்கினேன். அங்கே மூன்று பெரிய மனிதர்கள் அவர்களின் கையில் உள்ள துப்பாக்கி முனையில் என்னைக் குறி பார்த்துக் கொண்டிருந்தார்கள். என்னை அது அதிர்ச்சியடையச் செய்தது. அவர்களில் வயதானவராகத் தென்பட்ட மனிதர் நரைத்த தலைமுடியுடன் அறுபது வயது மதிக்கத்தக்கவராக இருந்தார். மற்ற இருவரும் ஒரு முப்பது வயதுக்கு கொஞ்சம் முன்னே பின்னே இருப்பார்கள். அனைவருமே மிகவும் உடல் உறுதி மிக்கவர்களாகவும், பார்க்க நேர்த்தியாகவும் தென்பட்டார்கள். அவர்களுடன் ஒரு தலை நரைத்த இனிமையான மூதாட்டியும் இருந்தார். அவரின் பின்னால் இரண்டு இளம் பெண்கள் இருந்தனர். ஆனால் அவர்களை நான் சரியாகக் கவனிக்க முடியவில்லை.

 

"சரி. எல்லாம் சரியாகத்தான் உள்ளது என்று நான் நினைக்கிறன். நீ உள்ளே வரலாம்."

நான் உள்ளே நுழைந்தவுடன், அந்த வயதான மனிதர் கதவை அடைத்து தாழிட்டு, குறுக்குக்கட்டையை அடைத்துப் பூட்டினார். அந்த இளைஞர்களையும் அவர்கள் கையில் உள்ள துப்பாக்கியுடன் உள்ளே வரச்சொல்லிப் பணித்தார். அவர்கள் அனைவரும் தரையில் புதுக் கம்பளம் விரிக்கப்பட்டிருந்த பெரிய ஹால் போன்ற பகுதியில் கூடினார்கள். முன்சன்னல்களுக்கு எட்டாத தொலைவில் உள்ள மூலையில் அவர்கள் அனைவரும் ஒன்று கூடி அமர்ந்தார்கள். அங்கே எந்தப் பக்கத்திலுமே சன்னல்கள் தென்படவில்லை. விளக்கை கையில் எடுத்து என்னை நன்கு சோதித்துப் பார்த்தார்கள். பின் அனைவரும் கூறினார்கள் "இவன் ஒரு செப்பேர்ட்சன் அல்ல. இல்லை. இவனிடம் தென்படும் எதுவுமே செப்பேர்ட்சன் மாதிரி இல்லை." என்றார்கள்.

பிறகு என்னிடம் ஏதேனும் ஆயுதங்கள் உளளதா என்று என்னைச் சோதனை போட நான் அனுமதிக்க வேண்டும் என்று வயதான அந்தக்கிழவனார் கூறினார். அது என்னைக் கஷ்டப்படுத்த அல்ல என்றும் என்னிடம் எதுவும் இல்லை என்று உறுதி செய்யவே அவர் விரும்புகிறார் என்றும் கூறினார். என்னுடைய சட்டை மற்றும் நிஜார் பைகளுக்குள் கைவிட்டு சோதனை போடவில்லை என்றாலும், மேல்புறமாக தடவிப் பார்த்து ஒன்றும் இல்லை என்று சான்றளித்தார். அதன் பின்னர் சமாதானமடைந்த அவர் என்னிடம் தன் வீடு போன்றே நினைத்து வசதியாக இருக்கச் சொன்னார். பின் என்னைப் பற்றிய விஷயங்களைக் கூறச் சொன்னார். ஆனால் அதற்கு முன்பாக அந்த மூதாட்டி கூறினார்.

“கடவுள் ஆசீர்வதிக்கட்டும், சால்! அந்த பாவப்பட்ட குழந்தை மிகவும் நனைந்து நடுங்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்குப் பசிக்காது என்று நீ நினைக்கிறாயா?"

"சரியாகச் சொன்னாய் ரேச்சல்! நான் மறந்து விட்டேன்."

எனவே அந்த மூதாட்டி கூறினாள் "பெட்ஸி! (அந்த நீக்ரோ பெண்ணை அவள் விளித்தாள்) சீக்கிரம் சென்று சாப்பிட ஏதேனும் மிக விரைவாக எடுத்து வா. பாவம் அவன். அப்புறம் பெண்களே! உங்களில் ஒருவர் பக்கை எழுப்பி அவனிடம் சொல்லுங்கள் .... ஓ! இதோ பக் வருகிறானே! இந்த புதுச்சிறுவனை உன்னுடன் அழைத்துச் சென்று அவனின் நனைந்த ஆடைகளைக் களைந்துவிட்டு உன்னுடைய சலவை ஆடைகள் ஏதேனும் அணியக் கொடு."

பக் என்னுடைய வயதை ஒத்தவனாகத்தான் - ஒரு பதிமூன்று அல்லது பதினான்கு வயதில்தான் - இருப்பான். ஆனாலும் பார்க்க என்னைவிடப் பெரியவனாகத் தெரிந்தான். அவன் ஒரு மேல்ச்சட்டை மட்டுமே அணிந்து, பாதித் தூக்கத்தில் எழுந்து வந்ததால், மப்பும், மந்தாரமுமாகத் தென்பட்டான். கொட்டாவி விட்டபடி ஒரு கையால் தன் கண்களைத் தேய்த்துக் கொண்டு, இன்னொரு கையால் துப்பாக்கியை ஏந்திக் கொண்டு வந்தான். அவன் கூறினான்" இங்கே செப்பேர்ட்சன் ஆட்கள் வந்தார்களா?"

"இல்லை. அது ஒரு பொய்த் தகவல்." அவர்கள் கூறினார்கள்.

"நல்லது. அப்படி யாரேனும் வந்திருந்தால், அவர்களுள் ஒருவரை நான் கொன்றிருப்பேன்."

அனைவரும் சிரித்தார்கள். பின்னர் பாப் சொன்னான் "ஏன் பக்! இவ்வளவு மெதுவாக நீ வந்து சேர்வதற்குள் அவர்கள் எங்கள் தோலை உரித்திருப்பார்கள் அல்லவா!."

"நல்லது. யாருமே வந்து என்னை எழுப்பவில்லை. எப்போதுமே என்னை இப்படி விட்டுவிடுவது சரியே அல்ல. செயலில் ஈடுபட எனக்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது.”

"வருத்தப் படாதே, பக் குழந்தாய்! வயதான மனிதர் தேற்றினார். "கூடிய விரைவில் நீ வேண்டிய மட்டும் செயல்களைக் காணப்போகிறாய். அது பற்றிக் கவலைப் படாதே. இப்போது செல். உன் அம்மா கூறியபடி செய்."

நாங்கள் மேல்தளம் சென்றபோது எனக்கு ஒரு கடினமான மேல்சட்டை, அதற்கு மேல் அணியும் ஜாக்கெட் மற்றும் சில கால்ச்சட்டைகளையும் அவன் கொடுத்தான். அவற்றை நான் அணிந்து கொண்டேன். ஆடை அணியும் வேளையில் என் பெயர் என்ன என்று அவன் கேட்டான். ஆனால் நான் பதிலளிக்கும் முன்பே, இரண்டு நாட்கள் முன்பு காட்டில் அவன் பிடித்த நீலக் குருவிகள், குட்டி முயல்கள் பற்றிப் பேச ஆரம்பித்து விட்டான். பிறகு, மெழுகுவர்த்தி அணைந்தபோது மோசஸ் எங்கே சென்றான் என்று கேட்டான். மோசஸ் பற்றியும் மெழுகுவர்த்தி பற்றியும் நான் கேள்விப்பட்டதில்லையாதலால், அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்று நான் கூறினேன்.

"நல்லது. யூகித்துச் சொல்."

"எப்படி யூகிப்பது" நான் கேட்டேன் "இதுபற்றி நான் எதுவுமே இதற்கு முன் கேட்டதே கிடையாது."

"ஆனாலும் நீ யூகிக்க முடியும். முடியாதா என்ன? அது ரொம்பச் சுலபம்."

"எந்த மெழுகுவர்த்தி?

"ஏதோ ஒரு மெழுகுவர்த்தி."

"அவன் எங்கே இருந்தான் என்று எனக்குத் தெரியாது." நான் சொன்னேன் "அவன் எங்கே இருந்தான்?"

"ஏன், அவன் இருட்டில் இருந்தான். அங்கேதான் முதலிலும் இருந்தான்."

"நல்லது. அவன் எங்கே இருக்கிறான் என்று உனக்குத் தெரிந்திருக்கும் போது. என்னை எதற்குக் கேட்கிறாய்?"

நாவல்: ஹக்கில்பெர்ரிஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 17

"அடச் சீ. இது ஒரு புதிர் விளையாட்டு. இது உனக்குத் தெரியவில்லையா?ஹேய்! எத்தனை நாள் நீ இங்கே தங்கப் போகிறாய்? இங்கேயே எப்போதும் நீ தங்கிவிடவேண்டும். நாம் இருவரும் சேர்ந்து நன்கு சந்தோசமாக விளையாடலாம். இப்போது பள்ளி எதுவும் இயங்கவில்லை. உன்னிடம் நாய் உள்ளதா? என்னிடம் ஒன்று உள்ளது. நீ வீசி எரியும் மரத்தட்டுகளை நதியிலிருந்து எடுத்து வந்து அவன் தருவான். ஞாயிற்றுக் கிழமைகளில் நல்ல ஆடை உடுத்து அதன் பின்னர் செய்யும் அறிவற்ற செயல்களை செய்வதில் உனக்கு இஷ்டம் உண்டா? எனக்குப் பிடிக்கவே பிடிக்காது என்று இந்நேரம் உனக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அம்மா என்னைக் கட்டாயப்படுத்துவாள். ஓ! கொடுமையான இந்த கால்ச்சொக்காய்! நான் எதற்கும் இதை இப்போது அணிந்து கொள்கிறேன். ஆனால் இது ரொம்பச்சூடாக இருப்பதால் இதை அணிவது எனக்கு எப்போதுமே பிடிக்காது. சரி. எல்லாம் அணிந்து கொண்டாயா? வா என்னுடன் என் செல்லக் குதிரையே!"

கீழே, எனக்காக குளிர்ந்த மக்காச்சோள ரொட்டி, உப்பு தடவிய பன்றி இறைச்சி மற்றும் நீர்மோர் தயாரித்து வைத்திருந்தார்கள். நான் இதுவரை உண்டதிலேயே அது போன்ற சுவையானதொரு உணவைச் சாப்பிட்டதே இல்லை. பக், அவன் அம்மா, மற்றும் உள்ளோர் அனைவரும் நீண்ட புகைக் குழாயில் புகைப் பிடித்தார்கள். அந்த இரண்டு இளம்பெண்கள் புகை பிடிக்கவில்லை. அந்த நீக்ரோ பெண்மணி உள்ளே சென்று விட்டாள். அனைவரும் புகை பிடித்துக் கொண்டும், கதைத்துக் கொண்டும் இருந்தார்கள். நான் உணவு உண்டுகொண்டே பேசிக்கொண்டிருந்தேன். அந்த இரண்டு இளம் பெண்களும் தங்கள் தலைமுடியை விரித்து, அது அவர்களின் முதுகின் பின் தொங்குமாறு விட்டிருந்தார்கள். போர்வையால் தங்களைப்போத்திக் கொண்டிருந்தார்கள். அவர்கள் என்னை நிறைய கேள்விகள் கேட்டார்கள்.

நான், என் அப்பா மற்றும் எங்கள் குடும்பம் எப்படி ஆர்கன்சாஸின் கீழ்ப்பகுதியில் உள்ள ஒரு சிறிய பண்ணையில் குடும்பம் நடத்திக்கொண்டிருந்தோம் என்று அவர்களிடம் கூறினேன். எனது சகோதரி மேரி ஆன் ஓடிப்போய் திருமணம் செய்து கொண்டது, அவளைப் பற்றி இன்றுவரை எந்தத் தகவலும் கிடைக்காதது, எப்படி பில் சகோதரியைத் தேடித் போனது, அவனைப் பற்றியும் எந்தத் தகவலும் கிடைக்காமல் போனது என்றெல்லாம் மேலும் கூறினேன். எனது சகோதரர்கள் டாம் மற்றும் மார்ட் இருவரும் எனது அப்பாவையும் என்னையும் விட்டுவிட்டு இறந்துபோனது பற்றியும், அப்பா இந்தக் கவலைகளால் எலும்பும், தோலுமாக ஆனது பற்றியும் கூறினேன்.

அப்பா இறந்த பிறகு, அந்தப் பண்ணை எங்களுக்குச் சொந்தம் இல்லாததால், அப்பா விட்டுப்போன பொருட்களை மட்டும் எடுத்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டு, நதியில் மேல்நோக்கிய பாதையில் செல்லவிருந்த ஒரு நீராவிப் படகில் இடம் ஒன்று பதிவு செய்து பயணம் செய்தேன். பிறகு அங்கிருந்து கீழே விழுந்து இங்கு வந்து சேர்ந்தேன் என்று என் கதையைக் கூறினேன். கதையை அனுதாபத்துடன் கேட்ட அவர்கள், நான் விரும்பும் வரை அவர்களுடன் இருக்கலாம் என்று கூறினார்கள். அந்த சமயத்தில் காலை பொழுது, விடியும் நேரம் ஆனதால் அனைவரும் களைப்புடன் உறங்கச் சென்றார்கள். பக்குடன் சேர்ந்து நானும் உறங்கச் சென்றேன்.

காலை எழுந்தவுடன், கஷ்டகாலம், நான் அவர்களிடம் கூறிய என்னுடைய புனைப்பெயர் எனக்கு மறந்து தொலைத்து விட்டது. ஒரு அரை மணிநேரம் அப்படியே படுத்துக் கொண்டே யோசித்துப் பார்த்தேன். பிறகு பக் கண் விழித்து எழுந்தவுடன், நான் அவனிடம் கேட்டேன் "என் பெயரின் எழுத்துக்களை சொல்வாயா, பக்?"

"ஓ ஆமாம்." பக் சொன்னான்.

"நீ சொல்ல இயலாது என்று பந்தயம் கட்டுகிறேன்." நான் சொன்னேன்.

"என்னால் முடியாது என்று நீ நினைத்தாலும், நான் சொல்லமுடியும் என்று நானும் பந்தயம் கட்டுகிறேன்."

"அப்படியானால் சரி" நான் சொன்னேன் "மேலே சொல்லு."

"ஜா -ர்- ஜ்- ஜா -க் - ச - ன். இதோ நான் சொல்லிவிட்டேன்." அவன் கூறினான்.

"பிரமாதம்." நான் சொன்னேன் "நீ செய்யமுடியாது என்று நான் நினைத்ததை நீ சாதித்து விட்டாய். எழுத்துக்கூட்டிச் சொல்ல அது ஒன்றும் சுலபமான பெயரும் அல்ல. அதுவும் உன் தலைக்குள் இருந்து, மனப்பாடம் ஏதும் செய்யாமல் டக் என்று கூறிவிட்டாயே! "

ஒருவேளை மீண்டும் அங்கே யாரேனும் என் பெயரைக் கேட்டால் மறந்துவிடாமல் சொல்வதற்கு எளிதாக இருக்க ஒரு சிறு பெட்டிக்குள் அந்தப் பெயரை நான் எழுதி வைத்துக் கொண்டேன். அதைக் கையிலேயே வைத்துக் கொண்டு அவ்வப்போது சொல்லிப் பார்த்துக் கொண்டேன். அபபோதுதான் மிகவும் பழகிய பெயராக வாய் பிறழாமல் உச்சரிக்க முடியும் என்பதற்காக அவ்வாறு பயிற்சி செய்து கொண்டேன்.

அவர்கள் ஒரு நல்ல குடும்பமாகத் திகழ்ந்தார்கள். அவர்கள் வசித்த வீடும் மிகவும் நன்றாக இருந்தது. அவ்வளவு வசதிகளுடன் பார்க்க நேர்த்தியாக உள்ள சிறந்த ஒரு கிராமத்து வீட்டை இதுவரை நான் கண்டதில்லை. முன்கதவில் இரும்புத் தாழ் ஏதும் இல்லை. மரத்துடன் சேர்ந்த மான்தோல் கம்பிகள் கூட அதில் இல்லை. நகர்ப்புறங்களில் உள்ள வீடுகளில் உள்ளதைப் போன்றே திருகும் பித்தளைக் கைப்பிடி அதில் இருந்தது. நகர்ப்புறங்களில் பெரும்பான்மை வீடுகளில் முன்னறையில் படுக்கை வைத்துக் கொள்வது போன்ற வழக்கப்படி அல்லாது முன்னறையில் படுக்கை ஏதும் இல்லை. முன்பு படுக்கை அங்கே இருந்ததற்கான எந்த அடையாளமும் கூட இல்லை. செங்கல் மட்டத்திலாலான கணப்பு அடுப்பு அங்கே இருந்தது. நீர் ஊற்றிக் கழுவி, இன்னொரு செங்கல்லை வைத்து தேய்ப்பதன் மூலம் அந்த கணப்பு அடுப்பு செங்கற்களை மிகுந்த சுத்தமாகவும் சிவப்பு நிறம் மாறாமலும் வைத்திருந்தார்கள். சில சமயங்களில் சிவப்புச் சாயத்தை நீரில் கலந்து அதை முழுதுமாகக் கழுவினார்கள். அதற்குப் பெயர் ஸ்பானிஷ் ப்ரவுன் என்பதாகும். நகர்ப்புறங்களில் அது போன்றுதான் செய்வார்கள்.

கணப்பு அடுப்புக்குப் பயன்படுத்தும் விறகுகளை அடுக்கிவைக்கும் பித்தளையால் செய்யப்பட்ட ஓர் பெரிய உலோகச் சட்டம் அவர்களிடம் இருந்தது. அது பெரிய மரத் தண்டுகளையும் தாங்கக் கூடியதாக இருந்தது. கணப்பு அடுப்பின் மீது இருந்த பெரிய அலமாரி போன்ற பகுதியின் நடுவில் ஒரு அழகான கடிகாரம் மாட்டப்பட்டிருந்தது. கடிகாரத்தின் கீழ் பக்கக் கண்ணாடியில் ஒரு நகரின் காட்சி வரையப் பட்டிருந்தது. கடிகாரத்தின் நடுவில் சூரியக் கடிகாரம் இயங்க வட்ட வடிவமான இடம் இருந்தது. அதன் பின்பக்கமாக பெண்டுலம் ஆடிக் கொண்டிருப்பதை நீங்கள் காணலாம். அந்த டிக் டிக் சத்தம் கேட்க மிகவும் இனிமையாக இருந்தது. சில சமயங்களில் ஊர் ஊராகப் பயணம் செய்து வீடுகளைச் சுத்தம் மற்றும் சரி செய்து கொடுக்கும் “பிக்ஸ் இட்” அமைப்பு மனிதர்கள் வந்து வீட்டைச் சுத்தம் செய்து கடிகாரத்தைச் சரி செய்யும்போது, நூறு அல்லது ஐம்பது முறை அடித்தபின் அது ஓய்ந்து நிற்கும். அந்த வீட்டு மனிதர்கள் எந்தக்காலத்திலும், எதற்காகவும் அந்தக் கடிகாரத்தை விற்க மாட்டார்கள்.

கடிகாரத்தின் இருபுறமும் ஏதோ ஒரு சுண்ணாம்பு போன்ற பொருளால் செய்யப்பட்ட கண்ணைப்பறிக்கும் பளபளப்பில் இரண்டு மிகப்பெரிய கிளிகள் இருந்தன. களிமண்ணால் ஆன ஒரு சிறு பூனைக்குட்டியும் அதன் அருகே ஒரு களிமண் நாய்பொம்மை ஆகிய இரண்டும் கிளியின் அருகே இரண்டு புறமும் இருந்தன. அவைகளைக் கீழ்ப்பக்கமாக அழுத்தும்போது கிரீச்சிட்டு கத்தும் சப்தம் கேட்கும். ஆனாலும் அவைகள் வாயைத் திறக்கவோ, அல்லது ஆர்வம் காட்டவோ, அப்படி எதுவும் செய்யவே செய்யாது.

காட்டு வான்கோழிகளின் விரிந்த இறக்கைகள் போன்ற மிகப்பெரிய இறக்கைகள் சிலது அந்த பொம்மைகளின் பின்புலமாக இருந்தது. அறையின் நடுப்புறத்தில் இருந்த மேசையில் களிமண்ணால் ஆன ஒரு அழகான கூடை வைக்கப்பட்டிருந்தது, ஆப்பிள்கள், ஆரஞ்சுகள், பீச் பழங்கள், திராட்சைகள் போன்ற பழங்களால் அது நிரம்பி இருந்தது. உண்மையான பழங்களை விட அவை அதிகச் சிவப்பாகவும், மஞ்சளாகவும், அதிக அழகுடனும் காணப்பட்டது. ஆனாலும், சிலச் சில பகுதிகளில் களிமண் பூச்சு கழன்று உள்ளிருக்கும் சுண்ணாம்பு அல்லது வேறு ஏதோ கலவை வெளியே தெரிவதால், அவை கண்டிப்பாகச் செயற்கைப் பழங்கள் என்று நீங்கள் கணித்து விடக்கூடும்.

மேசையின் மீது இருந்த மேசைவிரிப்பு தண்ணீரால் பாதிக்கப்படாத எண்ணைத் துணியால் செய்யப்பட்டிருந்தது. அதன்மேல் சிவப்பு மற்றும் நீல நிறங்களில் இறக்கை விரித்தவாறு உள்ள ஒரு கழுகு வரையப்பட்டிருந்தது. அத்துடன் மேசைவிரிப்பின் ஓரங்கள் முழுதும் அழகாக வண்னம் தீட்டப்பட்டிருந்தன. அந்த மேசைவிரிப்பு பிலடெல்பியாவிலிருந்து பிரத்தியேகமாக வரவழைக்கப்பட்டது என்று அவர்கள் கூறினார்கள். அந்த மேசையின் ஒவ்வொரு மூலையிலும் சில புத்தகங்கள் நேர்த்தியாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

அவற்றில் ஒன்று அதிகப்படங்களுடன் கூடிய குடும்ப பைபிள். இன்னொன்று தன் குடும்பத்தை விட்டுப் பிரிந்து பல்வேறு இன்னல்களை சந்திக்கும் ஒரு மனிதனின் கதையான "பில்க்ரிம்ஸ் ப்ராகிரஸ்" என்ற புத்தகம். நானும் எத்தனையோ முறை படித்துப் பார்த்தேன். அவன் குடும்பத்தை விட்டு ஏன் பிரிந்தான் என்ற காரணம் அந்தப் புத்தகத்தில் சொல்லப்படவே இல்லை. அந்த புத்தகத்தின் வாக்கியங்கள் சுவையாக இருந்தாலும், படித்துப் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம்தான். தோழமையின் சமர்ப்பணம் என்ற இன்னொரு புத்தகம் முற்றிலுமாக கவிதைகள் அடங்கியது அங்கே வைக்கப்பட்டிருந்தது.

கவிதைகள் அதிகம் படிப்பதில்லையென்றாலும் அது நல்ல கவிதைகள் கொண்ட தொகுப்பாகத் தோன்றியது. ஹென்றி கிலே அவர்களின் உரைகள் அடங்கிய ஒரு தொகுப்பு, யாரேனும் உடல் நலம் குன்றினால் அல்லது இறந்து விட்டால் என்ன செய்வது என்று கூறும் டாக்டர் கன் என்பாரின் குடும்ப மருத்துவம் போன்ற புத்தகங்களும் அங்கே இருந்தன. அவற்றுடன் கடவுள் துதிப் பாடல் புத்தகம் மற்றும் வேறு சில புத்தகங்களும் காணப்பட்டன. வசதியான பிளவு அடிப்பாகம் கொண்ட நாற்காலிகளும் அவர்கள் அங்கே வைத்திருந்தார்கள். அவை அனைத்தும் சிதைந்த பழைய கூடை மாதிரி நடுப்பக்கம் வளைந்து தொங்காது நல்ல திடமாக இருந்தன.

படங்களை சுவர்களில் அவர்கள் அதிகம் மாட்டி வைத்திருந்தார்கள். வாஷிங்டன், லேஃபஎட் (பிரெஞ்சுப் பிரபு) , போர்கள் அடங்கிய காட்சிகள் மற்றும் ஹைலண்ட் மேரி (கவிஞர் ராபர்ட் பர்ன்ஸ் என்பாரின் காதலி) ஆகிய படங்களே அங்கே அதிகம் இருந்தன. ஒரு படத்தில் உறுதி ஆவணம் கையெழுத்திடும் நிகழ்வு காணப்பட்டது. அவர்கள் குடும்பத்தில் முன்பு இறந்து போன ஒரு மகள் கிரேயான் பென்சில்களால் தன் கைப்பட வரைந்த ஓவியங்கள் சில இருந்தன. அவள் தனது பதினைந்தாவது வயதில் அதை வரைந்திருக்கிறாள். அந்த ஓவியங்கள் நான் அதுவரை பார்த்த மற்றவற்றை விட மிகவும் வித்தியாசமாக இருந்தன. மற்ற ஓவியங்களை விட அடர்ந்த கருத்த நிறமும் சோகமும் கலந்து அதில் அதிகம் தெரிந்தது. அதில் ஒன்றில் ஒல்லியான ஒரு பெண்மணி கருப்பு உடையில் இருந்தாள். அவளின் அக்குளுடன் சேர்த்துக் கயிற்றால் கட்டி வைக்கப்பட்டு இருந்ததால், அவளின் கைகளின் மத்தியப் பகுதி முட்டைக்கோசு போன்று உப்பிக் காணப்பட்டது. அவளின் தலையில் கிரீடம் போன்ற தொப்பி அணிந்து முகத்தைக் கருப்புநிற சல்லாத் துணியால் மறைத்திருந்தாள்.

உளி போன்ற தோற்றத்தில் இருந்த அவளது கருப்பு நிற கால் செருப்புகளும், அவற்றில் உள்ள மெல்லிய கயிறு ஒன்று அவளின் வெள்ளைநிற கணுக்கால்களை சுற்றிப் படர்ந்து கொண்டிருந்ததும் நன்கு புலப்பட்டது. தனது வலது முழங்கையை ஒரு கல்லறையின் மீது ஊன்றிச் சாய்ந்தவாறு எதையோ தீவிரமாகச் சிந்தித்தபடி கண்ணீர் சொட்டும் வில்லோ மரத்தின் கீழே நின்று கொண்டிருந்தாள். அவளது இன்னொரு கரம் அவளது பக்கவாட்டில் கீழே தொங்கிக் கொண்டிருக்க, அக்கரத்தில் ஒரு வெள்ளைக் கைக்குட்டையும், ஒரு கைப்பையும் காணப்பட்டது. அந்த ஓவியத்தின் கீழ் "இதற்கு மேலும் நான் பார்க்கப் போவதில்லை, பரிதாபம்!" என்ற வாசகம் இருந்தது. இன்னொரு ஓவியத்தில் தலையை ஒழுங்காகச் சீவி முடித்து ஒரு நாற்காலியின் பின்புறம் போன்ற தோற்றத்தை அளிக்கும் வன்ணம் தலைக்கு மேல்புறமாக தலைமுடியைச் சேர்த்து ஒரு முடிச்சுப் போட்டு முன்னே நிறுத்திய தோற்றத்தில் ஒரு இளம்பெண் காணப்பட்டாள். ஒரு கரத்தில் உள்ள தனது கைக்குட்டைக்குள் முகத்தை வைத்து அழுதபடியே, இன்னொரு கரத்தில் இறந்து போன ஒரு பறவையின் கால்கள் மேலே இருக்கும்படியாகப் பிடித்திருந்தாள். அந்த ஓவியத்தின் வாசகம் "உனது இனிமையான கானங்களை இனி நான் என்றும் கேட்கப் போவதில்லை, பரிதாபம்!" என்று கூறியது. மேலும் ஒரு ஓவியத்தில், இன்னொரு இளம்பெண் கண்களில் நீர் பெருகிக் கன்னங்களில் வழிந்தவாறு சன்னல் வழியே தெரியும் நிலவைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

ஒரு முனையில் கருப்பு நிற மெழுகு முத்திரை அடையாளம் காணப்படும் ஒரு திறந்த கடிதத்தை அவள் தனது ஒரு கரத்தில் பிடித்திருக்கிறாள். இன்னொரு கரத்தால் கழுத்தில் உள்ள சங்கிலியின் லாக்கெட்டை வாயினருகே அழுத்தி வைத்துக் கொண்டிருக்கிறாள். அதன் கீழ் "நீ சென்று விட்டாய். நீ சென்று விட்டாய். அந்தோ பரிதாபம்" என்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. அவை அனைத்தும் மிக அழகான ஓவியங்கள் என்று நான் கருதினேன். ஆனால் அவற்றை எனக்கு ஏனோ பிடிக்காமல் போயிற்று. என்னுள் ஒரு மெல்லிய நடுக்கத்தைக் கொடுத்து எனது உற்சாகத்தைக் குறைத்தது. இன்னும் அதிகமாக வரையத் திட்டம் அவள் வைத்திருந்தாள் என்பதால் அவள் இறந்தது அங்கே இருப்பவர்களுக்குப் பெருத்த சோகமாக இருந்தது. அவள் வரைந்த ஓவியங்களை பார்க்கும்போது அவள் இறப்பு எவ்வளவு பெரிய இழப்பு என்பது உங்களுக்கே நன்கு புரியும்.

ஆனாலும், அவளின் குணாதிசயங்களை கணக்கிட்டுப் பார்க்கும்போது அவள் கல்லறையில் இருப்பதையே அதிகம் விரும்பியிருக்கிறாள் என்று எனக்குத் தோன்றியது. அவளின் தலைசிறந்த படைப்பை அவள் வரைந்து கொண்டிருக்கும்போது அவள் நோயுற்றதாகக் கூறியிருக்கிறாள். அந்தப் படைப்பை முடிக்கும்வரை அவள் வாழ்ந்திருக்க வேண்டும் என்று அவள் பிரார்த்தனை செய்திருக்கிறாள். ஆனால் அது நடக்கவில்லை. நீண்ட வெள்ளை உடை அணிந்த ஒரு இளம்பெண் ஒரு பாலத்தின் மதில்சுவரின் மீது நிற்பது போன்ற ஓவியத்தை அவள் வரையத் தொடங்கி இருக்கிறாள். அவளின் நீண்ட தலைமுடி பின்புறமாகத் தொங்க கன்னங்களில் நீர் வழிந்தவாறு அண்ணாந்து அவள் நிலவைப் பார்ப்பது போன்றதொரு ஓவியம். குதிக்க அவள் தயாராகிறாள். அவளின் இரண்டு கரங்கள் மார்பை ஒட்டி இறுக்ககட்டியவாறு இருக்க, இன்னும் இரண்டு கரங்கள் முன்னே நீட்டியவாறு இருக்க, மேலும் இரண்டு கரங்கள் நிலவைத் தொட நீண்டு செல்வது போல இருக்கிறது.

அந்த ஓவியத்தில் இருக்கும் இளம்பெண்ணுக்கு அழகான, இனிமையான முகம். ஆனால் இரண்டுக்கும் மேற்பட்ட அவளின் கரங்கள் அவளை ஒரு சிலந்தியைப் போல காட்சி அளிக்க வைக்கிறது. உண்மையில் அந்தப் பெண்மகள் எந்தக் கரங்களை வைத்தால் நன்றாக இருக்கும் என்று பார்த்து விட்டு மற்ற கரங்களை அழித்து விடலாம் என்று கூட எண்ணியிருக்கக் கூடும். ஆனால், நான் கூறியது போல, அந்த முடிவை எடுப்பதற்குள் அவள் இறந்து விட்டாள். அந்த ஓவியத்தை அவளின் அறையில் உள்ள படுக்கையின் தலைமாட்டில் மாட்டி வைத்துள்ளார்கள். அவளின் ஒவ்வொரு வருடப் பிறந்த நாளன்றும் அந்தப் படத்திற்கு பூக்கள் வைத்து அலங்காரம் செய்வார்கள். மற்ற சமயங்களில், அங்குள்ள ஒரு சிறிய திரைச்சீலையின் பின் பாதி மறைந்த நிலையில் அது இருக்கும்.

அந்தப் பெண் உயிருடன் இருந்தபோது, படங்கள், செய்தித் தாள்களின் வெட்டிய பகுதிகள் முதலானவை ஒட்டிய நோட்டுப்புத்தகம் ஒன்று அவளிடம் வைத்திருந்தாள். இரங்கல் செய்திகள், விபத்து பற்றிய அறிக்கைகள், கிருத்துவ மதச் சமயகுருக்களின் பார்வையாளர் கூறிய துன்பப்படும் நோயாளிகள் பற்றிய கதைகள் போன்றவற்றை அவள் அதில் ஒட்டி வைத்திருக்கிறாள். இந்த விஷயங்களைப் பற்றி அவள் மனதில் தோன்றிய சில கவிதைகளும் அவள் எழுதி வைத்திருக்கிறாள். அருமையான கவிதைகள் அவை. எடுத்துக் காட்டாக, கிணற்றில் வீழ்ந்து மூழ்கிய ஸ்டீபன் டொவ்லிங் பாட்ஸ் என்ற பெயருள்ள சிறுவனைப் பற்றி அவள் எழுதிய கவிதை இதோ:

இறந்த ஸ்டீபன் டௌலிங் பாட்ஸ்ஸுக்கு ஒரு இரங்கற்பா!

இளம் ஸ்டீபன் நோயுற்றுத்தானோ

அந்த இளம் ஸ்டீபனும் இறந்தானோ?

சோக நெஞ்சங்களும் உறைந்து நிற்க

சோக நெஞ்சங்களும் உறைந்து நிற்க

இல்லை. அதுவேதான் அவன் தலைவிதி

இளம் ஸ்டீபன் டௌலிங் பாட்ஸ்

சோக நெஞ்சங்கள் உறைந்து அவனைச் சூழ

நோயின் தாக்கத்தினால் அன்று

கக்குவான் இருமல் அசைக்கவில்லை அவன் கட்டையை

புள்ளிகளால் தட்டம்மை துன்புறுத்தவில்லை

இவை யாவும் புனிதப் பெயரைச் சிதைக்கவில்லை

ஸ்டீபன் டௌலிங் பாட்ஸ்

வெறுப்புற்ற அன்பும் துன்பத்துடன் அடிக்கவில்லை

அந்த சுருண்ட முடிச்சுகள் கொண்ட தலையை

வயிற்று வலியும் சாய்க்கவில்லை அவனை

இளம் ஸ்டீபன் டௌலிங் பாட்ஸ்

ஓ! இல்லை! கசியும் கண்களுடன் இதைக் கேள்

நான் கூறப்போகும் அவனின் தலைவிதியை

பாழும் உலகை விட்டு விலகியது அவன் ஆத்மா

கிணற்றில் வீழ்ந்ததாலே

எடுத்தார்கள் அவனை. வெளியேற்றினார்கள் நீரை

அந்தோ! காலதாமதம் ஆகி விட்டதன்றோ!

வான்நோக்கிப் பறந்த அவன் ஆவி

நன்மையோடும், சிறப்போடும் உள்ள சாமராஜ்யம் சென்றதே!

தனது பதினான்கு வயதுக்கு முன்பே எம்மெலின் க்ரேன்ஜ்போர்ட், அதாவது அந்தப் பெண் இந்த அளவு கவிதை எழுத முடியுமானால், அவள் மட்டும் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் எப்படியெல்லாம் புகழ் பெற்றிருப்பாள் என்று கூறவே முடியாது. தனக்கு அதெல்லாம் ஒன்றுமே இல்லை என்பது போல அவளால் கவிதைகளைச் சும்மா கடகடவென்று கொட்ட இயலும் என்று பக் கூறினான். நின்று யோசிக்கக் கூடத் தேவைப்படாது அவளுக்கு. ஒரு வரியை எழுதி விட்டு சரியான எதுகை மோனை அமையவில்லை என்றால் அதை அடித்து விட்டு இன்னொரு வரியை எழுதிப் பார்ப்பாள் என்றும் பக் கூறினான். குறிப்பிட்டு சொல்ல முடியாத எந்த தலைப்பில் வேண்டுமானாலும், அவை சோகமான விஷயமாக இருக்கும் பட்சத்தில், அவள் கவிதை எழுதுவாள்.

ஒவ்வொரு முறையும் யாராவது ஆண், பெண் அல்லது குழந்தை இறந்து விட்டால், அவர்கள் உடலின் சூடு குறைந்து குளிர்ந்து போகுமுன்பே கவிதாஞ்சலி அவர்களுக்கு அவள் செலுத்தி விடுவாள். அந்தக் கவிதைகளை அவள் அஞ்சலி என்று அழைத்தாள், தெரியுமா! யாரேனும் இறந்து விட்டால், முதலில் மருத்துவரை எதிர்பார்க்கலாம். பின்னர் வருவது எம்மெலின்தான் அடுத்ததுதான் வெட்டியான் வருவான் என்று அக்கம் பக்கம் உள்ள வீட்டுக்காரர்கள் கூறுவார்கள். ஒரே ஒரு முறைதான் வெட்டியான் எம்மெலினுக்கு முன் வந்துவிட்டான். இது எம்மெலினை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதன் காரணமாக அப்போது இறந்த விஸ்ட்லேர் என்ற மனிதனுக்கு கவிதாஞ்சலி எழுதக் காலதாமதம் செய்து விட்டாள். அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் அவள் முன் மாதிரி இல்லை. அவள் ஒருபோதும் யாரையும் குறை கூறவில்லை. ஆனாலும் நலிவுற்று வாடி, அதன் பின்னர் நெடுநாள் வாழவில்லை.

பாவம் அவள்! அவளின் பழைய படுக்கை அறைக்குச் சென்று செய்திகள் ஒட்டவைத்திருக்கும் அவளின் புத்தகத்திலிருந்து அவளைப் பற்றி படித்துத் தெரிந்து கொள்வேன். உயிருடன் இருப்பவர்கள், இறந்தவர்கள் என அந்தக் குடும்பத்திலிருக்கும் அனைவரையும் நான் விரும்பினேன். எனக்கும் அந்தக் குடும்பத்திற்கும் இடையில் ஏதும் வராமல் நான் பார்த்துக் கொள்ளப்போகிறேன். பாவப்பட்ட எம்மெலின் உயிரோடு இருக்கும்போதே இறந்தவர்களைப் பற்றி கவிதை எழுதிக் குவித்திருக்கிறாள். ஆனால் அவள் இறந்த பிறகு அவளை பற்றி யாருமே இப்போது கவிதை எழுதாமலிருப்பது நல்ல விஷயம் அல்ல என்று தோன்றியது. ஒன்று அல்லது இரண்டு கவிதைகள் எழுத நானும் என்னால் இயன்ற அளவு முயற்சித்தேன். ஆனால் என்ன காரணத்தினாலோ என்னால் அதைச் செய்து முடிக்க இயலவில்லை. எம்மெலினின் அறையை அந்தக் குடும்பம் அவள் இருக்கும் போது இருந்தவாறே மிகுந்த சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருந்தது. அந்த அறையை யாரும் உபயோகித்துப் படுத்துறங்குவதில்லை. எத்தனையோ நீக்ரோ பணிப்பெண்கள் அவர்களிடம் வேலைக்கு இருந்த போதும், அந்த மூதாட்டிதான் அந்த அறையை பார்த்துக் கொள்வாள். அடிக்கடி அவள் உள்ளே அமர்ந்து தையல் வேலை அல்லது பைபிள் படித்தல் போன்ற விஷயங்களைச் செய்து கொண்டிருப்பாள்.

நல்லது. நான் முன்பே கூறியது போல, முன்னறையில் உள்ள சன்னல்களுக்கு மிக அழகான திரைச்சீலைகள் போடப்பட்டிருந்தன. வெள்ளை நிறத்தில் உள்ள திரைச்சீலைகளில் திராட்சைக் கொடிகள் சூழ்ந்த கோட்டைகள், மேய்ச்சலுக்குச் சென்று திரும்பிய கால்நடைகள் அகழிகளில் நீர் பருகுவது போன்ற காட்சிகள் அழகாக வரையப்பட்டிருந்தன. அங்கே ஒரு சிறிய பியானோ இசைக்கருவியும் அதன் மேல் ஒலி எழுப்பக்கூடிய சிறு சிறு கம்பிகளும் இருந்தன.அந்த பியானோ இசைக்கருவியை இசைத்து அதனுடன் சேர்ந்து "கடைசி இழையும் அறுக்கப்பட்டது" மற்றும் "பிராக் போர்" என்ற இரு பாடல்களையும் பெண்கள் பாடிக் கேட்பதை விட சிறந்த விஷயம் உலகத்தில் ஏதும் இல்லை. அங்கிருந்த அனைத்து அறைகளின் சுவர்களிலும் சுண்ணம் பூசப்பட்டிருந்தது. பெரும்பான்மையான அறைகளில் தரைகளில் கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. மொத்த வீடுமே வெளிப்பக்கம் வெள்ளைச் சாயம் பூசப்பட்டிருந்தது.

இருபிரிவுகளாக அந்த வீடு பிரிக்கப்பட்டிருந்தது. இரு பிரிவுகளுக்கும் இடையே இருந்த பெரிய மைதானம் போன்ற பகுதிக்கு தரையும் கூரையும் போடப்பட்டிருந்தது. அந்த இடம் குளிச்சியாகவும், வசதியாகவும் இருந்தது. சில சமயங்களில் மதிய வேளைகளில், சாப்பிட மேசை அங்கே அமைப்பார்கள். அதைவிட நன்றாக வேறு எதுவுமே இருக்காது. அத்துடன் சமையலும் மிகவும் சிறப்பாகவே இருக்கும். குறையில்லாமல் டன் கணக்கில் வேறு கிடைக்கும்.

[தொடரும்]


முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 28 April 2020 13:43