தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்)- 11

Tuesday, 14 April 2020 15:17 - மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ஆர்.தாரணி - முனைவர் ர. தாரணி பக்கம்
Print

- மார்க் ட்வைன் - என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


அத்தியாயம் பதினொன்று

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 11முனைவர் ஆர்.தாரணிஉள்ளே வரலாம்,"கூறினாள் அந்தப்பெண். உள்ளே நான் நுழைந்தேன். "உக்காரு" அவள் கூறினாள்.

நான் அமர்ந்தேன். பளபளத்த அவளது சிறு கண்களால் என்னை மேலும் கீழும் நோக்கிய அவள் கேட்டாள். "உனது பெயர் என்னவாக இருக்கும்?"

"சாரா வில்லியம்ஸ்"

"எங்கே வசிக்கிறாய்? இந்த ஊரின் அருகாண்மையிலா?"

"இல்லை அம்மா. நான் ஓடையின் ஏழு மைலுக்குக் கீழே உள்ள ஹூகெர்வில் பகுதியில் வசிக்கிறேன். அங்கிருந்தே நடந்தே வந்ததால் நான் மிகவும் களைப்படைந்துள்ளேன்."

"நீ பசியோடு இருக்கிறாய் என்று நான் நினைக்கிறன். இரு சாப்பிட ஏதாகிலும் இருக்கிறதா என்று பார்த்து வருகிறேன்."

"இல்லை அம்மா. பசியெல்லாம் எனக்கு இல்லை. வரும் வழியில் பசித்ததால் இரண்டு மைலுக்கு முன்னால் உள்ள ஒரு பண்ணையில் நின்று அங்கே சாப்பிட்டு வருகிறேன். அதனால் பசி எனக்கு இப்போதைக்கு இல்லை. அதனால்தான் இங்கே வந்து சேர இவ்வளவு நேரம் ஆகி விட்டது. எனது அம்மா உடல்நலக்குறைவினால் படுக்கையில் இருப்பதையும் அவள் பணப்பற்றாக்குறையினால் கஷ்டப்படுவதையும் எனது மாமா அப்னர் மூர் அவர்களுக்குத் தெரிவிக்க இங்கு வந்துள்ளேன். அவர் இந்த ஊரின் வட எல்லையில் வசிப்பதாக எனது அம்மா கூறினாள். நான் இந்த ஊருக்கு வந்ததே இல்லை. உங்களுக்கு அவரைத் தெரியுமா?"

"இல்லை. இந்த ஊரில் உள்ள அனைவரையும் நான் தெரிந்து கொள்ளவில்லை இன்னும்.. இரண்டு வாரங்களாகத்தான் நான் இங்கே வசிக்கிறேன். இங்கிருந்து வட எல்லை மிகவும் தூரத்தில் இருக்கிறது. இன்றிரவு இங்கே தங்கி ஓய்வெடுத்துக் கொள். தலையைச் சுற்றியுள்ள பானட்டைக் கழற்று."

"இல்லை." நான் அவசரமாகச் சொன்னேன். "கொஞ்ச நேரம் ஓய்வெடுத்துவிட்டுப் போகலாம் என்று நினைக்கிறேன். இருட்டைக் கண்டால் எனக்கு பயம் இல்லை."

என்னைத் தனியாக அனுப்ப விருப்பமில்லை என்றும் அவளின் கணவன் இன்னும் ஒன்று அல்லது அரை மணி நேரத்தில் வீடு திரும்பியதும் அவனை எனக்குத் துணையாக அனுப்புவதாகவும் கூறினாள். பிறகு அவளது கணவன் பற்றியும், நதியின் மேல் மற்றும் கீழ்க் கரைகளில் வசிக்கும் சொந்த பந்தங்களைப் பற்றியும் பேச ஆரம்பித்தாள். தாங்கள் முதலில் மிகுந்த பண வசதி படைத்தவர்களாக இருந்ததாகவும், தாங்கள் வசித்து வந்த அந்த ஊரைவிட்டு இந்த ஊருக்கு வந்தது தவறான காரியம் என்றும் பிரஸ்தாபித்தாள். இடைவெளி விடாது தொடர்ந்து பேசிக்கொண்ட போன அந்தப் பெண்மணியைப் பார்த்து இந்த ஊரில் என்ன நடக்கிறது என்று தெரிந்து கொள்ள இந்தப் பெண்மணியிடம் வந்தது தவறு என்று நான் எண்ண ஆரம்பித்தேன். எனினும், வெகு விரைவிலேயே அவள் எனது அப்பாவைப் பற்றியும், அந்தக் கொலையைப்பற்றியும் பேச ஆரம்பித்தாள். அவள் இது பற்றி மேலும் அதிகமாகப் பேசுவதில் நான் சந்தோஷமடைந்தேன். எவ்வாறு டாம் சாயர் ஆறாயிரம் டாலர்கள் கண்டு பிடித்தான் (அவள் பத்தாயிரம் மட்டும் என்று நினைத்திருக்கிறாள்) என்று என்னிடம் கூறினாள். பிறகு எனது அப்பாவைப் பற்றியும் அவரின் வெறுக்கத்தக்க குணங்களைப் பற்றியும், அவரின் மோசமான மகன் ஹக்கில்பெர்ரி பற்றியும் கூறினாள். கடைசியாக, என்னுடைய கொலையைப் பற்றிக் கூற அவள் வந்த போது நான் கேட்டேன். “"யார் அதைச் செய்தது? நாங்களும் அங்கே எங்களின் ஊர் ஹுகர்வில்லில் இதைப்பற்றி நிறைய கேள்விப்பட்டோம். ஆனால் யார் ஹக் ஃபின்னை கொன்றது என்று எங்களுக்குத் தெரியவில்லை."

"நல்லது. இங்கேயும்கூட பல மனிதர்கள் யார் அவனைக்கொன்றிருக்கக் கூடும் என்று தங்களது மண்டையைப் பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள். சிலர் ஹக்கின் கிழட்டு அப்பாவே அவனைக் கொன்றிருக்கக் கூடும் என்று கருதுகிறார்கள்."

"இல்லை ---- ஓ, அப்படியா?"

"அப்படிதான் முதலில் ஒட்டுமொத்தமாக அனைவருமே நினைத்தார்கள். அவன் தூக்குமேடைக்கு எவ்வளவு அருகில் சென்றான் என்று அவனுக்கே தெரிந்திருக்காது. ஆனால் அன்று இரவு நெருங்குவதற்குள், அனைவரும் தங்களின் மனதை மாற்றிக்கொண்டு, ஹக் கொலை செய்யப்பட்டது ஓடிப்போன ஜிம் என்ற பெயருடைய ஒரு நீக்ரோவினால் என்று முடிவு செய்தார்கள்."

"ஆனால் அவன் ......." சொல்ல வந்ததை நான் நிறுத்தினேன். வாயை மூடிக்கொள்வது நலம் என்று கருதினேன். நான் அவளின் பேச்சை இடைமறித்தது கூட உணராத அவள் தனது பேச்சைத் தொடர்ந்தாள்.

"அந்த நீக்ரோ ஓடிப்போன அதே இரவுதான் ஹக் ஃபின்னும் கொலை செய்யப்பட்டிருக்கிறான். எனவே அவனைத் தேடி பிடித்துக் கொடுப்பவர்களுக்கு முன்னூறு டாலர்கள் பரிசுத்தொகை என அறிவிக்கப்பட்டது. அத்துடன் அந்த கிழட்டு மனிதன் ஃபின்னைக் கண்டுபிடித்து தருவோருக்கும் இருநூறு டாலர்கள் பரிசு என்றுள்ளது. உனக்குத் தெரியுமா? அந்தக் கொலைக்குப் பின் காலையில் இந்த ஊருக்கு வந்து அந்தக் கிழவன் அனைவரிடமும் அதை பற்றிக் கூறி இருக்கிறான். இந்த ஊர்காரர்களும் அவனுடன் ஒரு படகில் சென்று அந்தப் பையனைத் தேடி இருக்கிறார்கள். ஆனால் அந்த இரவுக்குப் பின் அவன் ஓடிவிட்டான். இரவின் போதே அவனைத் தூக்கிலிட அனைவரும் தீர்மானித்திருக்கிறார்கள். ஆனால் அவன் ஓடிவிட்டான். நல்லது. அடுத்த நாள் அந்த நீக்ரோவையும் சேர்ந்து காணவில்லை. அவன் கொலை நடந்த முதல் நாள் இரவு பத்துமணியிலிருந்தே காணப்படவில்லை. எனவே சந்தேகம் அவன் மீதும் விழுந்தது. அப்போதுதான் அந்தக் கிழட்டு ஃபின் மீண்டும் நீதிபதி தாட்சரிடம் சென்று அவனின் மகனைக் கொன்ற நீக்ரோவை இல்லினோய் முழுதும் தேட அவனின் பணம் வேண்டும் என்று கூறி ஒப்பாரி வைத்திருக்கிறான்.”
தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 11
“நீதிபதியும் அவனை நம்பி கொஞ்சம் பணம் கொடுத்திருக்கிறார். ஆனால் அந்த இரவே சில மோசமான மனிதர்களுடன் சேர்ந்து நடு இரவு தாண்டியும் குடித்து போதையில் இருந்திருக்கிறான். பிறகு அவர்களுடன் புறப்பட்டுச் சென்றவன்தான் இதுவரை திரும்பிவரவே இல்லை. இந்த பிரச்னை முடியும்வரை அவன் திரும்ப வருவான் என்றும் தோன்றவில்லை. ஏனெனில் அவன்தான் ஹக்கின் பணத்திற்காக அவனைக் கொன்றுவிட்டு திருடர்கள் செய்தது போல் நாடகம் ஆடி அனைவரையும் ஏமாற்றி இருக்கவேண்டும் என்று ஊர்மக்கள் அனைவரும் நினைக்க ஆரம்பித்து விட்டனர். இப்படிச் செய்தால், வழக்கு ஏதும் பதிவு செய்து நேரத்தை வீணடிக்காமல், அவன் மகனின் பணத்தைப் திரும்பப் பெற்று விடலாம் என்று அந்த குடிகாரன் கருதியிருக்கக் கூடும். அவன் அப்படி ஒரு காரியம் செய்யத் தயங்காத மனிதன்தான் என்று அனைவரும் கருதினார்கள். ஓ! அவன் எத்தனை கெட்டிக்காரன்! அவன் செய்ததை யாரும் நிரூபிக்க முடியாது என்பது அவனுக்குத் தெரிந்திருக்கிறது. ஒரு வருடம் இப்படியே கண்ணுக்கெட்டாமல் வெளியே திரிந்து கொண்டிருந்தால் அவனுக்கு நல்லதுதான். பிறகு எல்லாமே கப்சிப் என்று அடங்கிவிடும். அதன் பிறகு அவனால் ஹக்கின் பணத்தை சுலபமாகப் பெற்றுக்கொள்ள முடியும்."

"ஆமாம். நானும் அப்படிதான் எண்ணுகிறேன் அம்மா! அவனைத் தடுக்கும் வழி எதுவும் எனக்கும் தெரியவில்லை. அப்படியானால் அந்த நீக்ரோதான் அந்தக் கொலையை செய்திருப்பான் என்ற எண்ணத்தை அனைவரும் கைவிட்டார்களா?"

"ஓ இல்லை. எல்லாரும் இல்லை. பல பேர்கள் அவன்தான் செய்திருக்கக் கூடும் என்று இன்னமும் நினைக்கிறார்கள். ஆனால், கூடிய விரைவில் அந்த நீக்ரோவைப் பிடித்து விடுவார்கள். அதன் பின் அவனை உருட்டி மிரட்டி அவனிடம் இருந்து வாக்குமூலம் வாங்கிவிடுவார்கள்."

" நல்லது. மக்கள் அவனைத் தேட ஆரம்பித்து விட்டார்களா?"

"ஏன், இவ்வளவு அறியாப் பெண்ணாக இருக்கிறாயே! பரிசுத் தொகை முன்னூறு டாலர் பெறப்படாமலேயே காத்திருப்பில் கழிகிறதே ஒவ்வொரு நாளும். அவன் இங்கிருந்து வெகு தொலைவில் இல்லை என்று சிலர் கருதுகிறார்கள். நானும் அப்படித்தான் நினைக்கிறேன். ஆனால் இதுபற்றி நான் அதிகம் பேர்களிடம் பேசுவதில்லை. சில நாட்களுக்கு முன்பு, எனது பக்கத்தில் இருக்கும் மர அறையில் வசிக்கும் வயதான தம்பதிகளிடம் பேசிக் கொண்டிருந்தேன். ஜாக்சன் தீவு என்று உள்ளதாம். அங்கே யாருமே செல்வதில்லையாம். அங்கே யாரும் வசிப்பதில்லையா? நான் கேட்டேன். இல்லை. யாரும் இல்லை. என்று அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு நான் ஏதும் பேசவில்லை. ஆனால் என் மனதில் ஒரு சிந்தனை உதித்தது.” “ஒன்றிரண்டு நாட்களுக்கு முன் அந்தத் தீவின் தலைப்பகுதியிலிருந்து புகை கிளம்பியதை நான் உறுதியாகப் பார்த்தேன் அந்த நீக்ரோ அங்கேதான் ஒளிந்துகொண்டிருக்கிறான் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். எதுவாகினும், சிரமம் பார்க்காமல் அந்தத் தீவை ஒரு அலசு அலசினால் பரவாயில்லை. அதன் பிறகு இதுவரை நான் புகை எதுவும் காணவில்லை. அவனாக இருக்கும் பட்சத்தில் அவன் அங்கிருந்து நகர்ந்திருக்கக்கூடும். எனது கணவனும் இன்னொரு மனிதனும் சோதனை போட அங்கே சென்றார்கள். நதியின் மேல் கரை வரை சென்று விட்டு இன்று திரும்பி வந்துவிட்டார்கள். இரண்டு மணி நேரம் முன்பு அவர் இங்கே வந்தவுடனே அவரிடம் நான் கண்ட விஷயங்களை எல்லாம் கூறினேன்.”

மிகவும் பதற்றமடைந்த என்னால் அமைதியாக அமர முடியவில்லை. என் கைகளைக் கொண்டு ஏதேனும் செய்ய விரும்பினேன். எனவே மேசையின் மீதிருந்த ஊசியை எடுத்து நூல் கோர்க்க ஆரம்பித்தேன். எனது கரங்கள் நடுங்கின. ஊசி கோர்க்கும் அந்த வேலையை படு கேவலமாகச் செய்து கொண்டிருந்தேன். அந்தப் பெண்மணி பேச்சை நிறுத்தியதும், நான் அவளை நிமிர்ந்து பார்த்தேன். அவள் என்னை வேடிக்கை பார்த்தபடியே சிறிது சிரித்தாள். நான் ஊசியையும் நூலையும் வைத்து விட்டு, அவள் கூறுவதை ஈடுபாட்டுடன் கவனிப்பது போல நடித்து கொண்டே கவனித்தேன். பின்பு கூறினேன். “முன்னூறு டாலர்கள் என்பது மிகப்பெரிய தொகை. எனது அம்மாவிற்கு அது கிடைத்தால் நல்லது என்று நான் விரும்புகிறேன். இன்று இரவு உங்கள் கணவர் அங்கே செல்கிறாரா?."

"ஏன், ஆமாம். ஊரின் வடக்குப்பகுதிக்கு நான் உன்னிடம் முன்பே குறிப்பிட்ட மற்ற சில மனிதர்களுடன் சென்று அவர்களுக்கு ஒரு படகும் இன்னொரு துப்பாக்கியும் கிடைக்குமா என்று பார்க்கப்போய் உள்ளார். இன்று நள்ளிரவுக்குப் பிறகு அவர்கள் அங்கே செல்வார்கள்."

"பகல் வேளை வரை பொறுத்திருந்து சென்றால், அவர்களால் இன்னும் நன்கு பார்க்க முடியும் அல்லவா?"

"ஆம். ஆனால் அந்த நீக்ரோவுக்கும் இவர்களைப் பார்ப்பது எளிதல்லவா? நள்ளிரவில் அவன் அசந்து தூங்கிகொண்டிருக்கக் கூடும். மேலும் அவன் குளிர் விரட்ட தீ மூட்டி இருந்தால், அந்த கும்மிருட்டில் அவர்கள் பதுங்கிச் சென்று அந்த தீயை வைத்து அவனைப் பிடித்து விடலாம் அல்லவா?"

"இதை நான் யோசிக்கவே இல்லை."

அந்தப் பெண் என்னை மிகவும் வேடிக்கையாக நோக்கினாள். உடனே அவள் கேட்டாள் "உன் பெயர் என்னவென்று நீ கூறினாய், செல்லமே!"

"ம் மேரி வில்லியம்ஸ்."

மேரி என்பது நான் முதலில் சொன்ன பெயர் அல்ல என்று ஏதோ ஒரு உணர்வு எடுத்துரைத்தது. நான் சாரா என்று கூறியதாக எனக்கு ஒரு ஞாபகம். கையும் களவுமாக என்னைச் சிறைப் பிடித்தாற்போல் நான் உணர்ந்ததும் அல்லாது அதே போலவும்தான் தோன்றவும் செய்தேன். எனவே நான் நிமிர்ந்து பார்க்க விரும்பவில்லை. அந்தப் பெண் ஏதேனும் கூறக் காத்திருந்தேன். எத்தனை நீண்ட நேரம் அவள் பேசாது அமர்ந்திருந்தாளோ அத்தனைக்கத்தனை உறுத்தலுடன் நான் அமைதியாய் இருந்தேன். பின்னர் அவள் கூறினாள் "கண்ணே! நீ முதலில் வந்தபோது சாரா என்று உன் பெயரைக் கூறியதாக நான் நினைத்தேன்."

"ஓ ஆமாம். அம்மா! நான் சொன்னேன். சாரா மேரி வில்லியம்ஸ். சாரா என் முதல் பெயர். சிலர் என்னை சாரா என்றழைப்பர். மற்றவர்கள் என்னை மேரி என்று கூப்பிடுவார்கள்."

"ஓ. அப்படியா சேதி?"

"ஆமாம் அம்மா!"

நான் கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தேன். எனினும் அங்கே வந்திருக்கக் கூடாதென்றே முழு மனதுடன் நினைத்தேன். இன்னும் என்னால் நிமிர்ந்து பார்க்க இயலவில்லை.

நல்லது. எவ்வளவு கடினமான காலம் அது என்றும் எவ்வளவு ஏழைகள் அவளும், அவள் கணவனும் என்றும், எப்படி எலிகள் தங்கள் சொந்த வீடு போல இங்குமங்குமாக ஓடித் திரிகின்றன என்றும் அந்தப் பெண் மேற்கொண்டு பேச ஆரம்பித்தாள். அவள் பேசிக்கொண்டே போக நான் மீண்டும் கொஞ்சம் நிம்மதி அடைய ஆரம்பித்தேன். அவள் எலிகளைப் பற்றிக் கூறியது சரிதான். அவ்வப்போது வீட்டின் மூலையின் ஒரு ஓட்டையில் இருந்து தங்கள் மூக்கை வெளியே நீட்டி தங்கள் இருப்பை உணர்த்திக் கொண்டிருந்ததை நீங்களும் கூடக் காண முடியும்.

அவள் தனித்திருக்கும் போது அவற்றின் மீது வீசி ஏறிய கையில் ஏதெனும் பொருள் வைத்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் இல்லாவிடில் அவைகளின் ஆட்டம் அதிகமாக இருக்கும் என்றாள். முடிச்சுப்போட்டது போல் வளைந்திருந்த ஒரு ஈயக்கட்டியை எனக்குக் காண்பித்தாள். அதை வைத்து நன்கு குறி வைத்து எறிய முடியும் என்றாலும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு முன் அவ்வாறு எறியும்போது தனது கரங்கள் திரும்பிக் கொண்டதாகவும் தெரிவித்தாள். இனி அவளால் அந்த எலிகளின் மீது முன்போல் குறிபார்த்து எறிய முடியுமா என்று தெரியவில்லை என்று வருந்தினாள். அவள் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்து, ஒரு எலி ஓடும்போது அதை அடிக்க முற்பட்டு அந்தப் பொருளை எறிந்தாள். அவள் வைத்த குறி தப்பியதுடன், அவளின் கரத்தின் வலியால் "ஐயோ" என்று சத்தம் போட்டாள். அடுத்த முறை அடிக்க என்னை முயற்சித்துப் பார்க்கும்படி கூறினாள். உண்மையில், அந்த வீட்டின் கிழவன் வருமுன் நான் அங்கிருந்து கிளம்ப நினைத்தேன். அந்த ஈயக்கட்டியைக் கையில் எடுத்தேன். முதலில் வந்த ஒரு எலி மீது விட்டெறிந்தேன். அது அந்த இடத்திலேயே நின்று இருந்தால் மாட்டி இருக்கும். ஆனால் அடி வாங்கி கொண்டு ஓடி விட்டது. நான் மிகவும் நன்கு குறி பார்த்து வீசியதாக அந்தப் பெண் பாராட்டினாள். அடுத்த முறை என் குறி தப்பாது என்றாள்.

அவள் எழுந்து சென்று அந்த ஈயக் கட்டியை எடுத்துக் கொண்டு கூடவே வளையமாக்கிச் சுற்ற வேண்டிய நூல் எடுத்து வந்து என்னை அதற்கு உதவி செய்யச் சொன்னாள். நான் எனது இரு கரங்களை நீட்டினேன். அவள் எனது கரங்களைச் சுற்றி நூலை சுழற்றிக் கொண்டே அவளின் கணவனின் தொழிலைப் பற்றி பேசிக்கொண்டே போனாள். ஒரு கட்டத்தில் நிறுத்திய அவள் கூறியதாவது:

"ஒரு கண் எலிகள் மீது வைத்திரு. அந்த ஈயக் கட்டியை உன் மடியிலேயே வைத்துக் கொள்வது நல்லது." என்றாள்

பிறகு அந்த கட்டியை எனது மடியில் போட்டாள். அவள் பேசிக்கொண்டே இருக்கையில் எனது கால்களை ஒன்று சேர்த்தி அதைப் பிடித்தேன். ஒரு நிமிடம்தான் அவள் பேசியிருப்பாள். பின்னர் என் கரங்களில் சுற்றியிருந்த நூல் வளையத்தை எடுத்துக் கொண்டு எனது முகத்தை நேராகப் பார்த்து, அன்புடன் கேட்டாள் " இப்போது சொல். உனது உண்மையான பெயர் என்ன?"

"எஹ் என்ன அம்மா?"

"உன் உண்மைப் பெயர் என்ன? பில், டாம் அல்லது பாப்? என்ன அது?"

புயல் காற்றில் தவிக்கும் ஒரு இலையைப்போல் நடுங்க ஆரம்பித்தேன். என்ன செய்வது என்று எனக்குப் புரிபடவில்லை. ஆனாலும் நான் சொன்னேன், " என்னை போன்ற ஒரு அப்பாவிப் பெண்ணைக் கேலி செய்யாதீர்கள் அம்மா! உங்களுக்குத் தொந்தரவு என்றால் நான் ......."

"இல்லை. நீ போகக் கூடாது. எங்கே இருக்கிறாயோ அங்கேயே அமர்ந்து கொள். உன்னை நான் துன்புறுத்தப் போவதில்லை. உன்னை நான் யாரிடமும் காட்டிக்கொடுக்கவும் போவதில்லை. என்னை நம்பி உனது ரகசியத்தைச் சொல்லலாம். அதை நான் மறைத்து வைத்துக்கொள்வேன். உனக்கு உதவி கூடச் செய்வேன். உனக்குத் தேவையானால், எனது கணவனும் அதையே செய்வார். நீ ஏதோ பணிபுரியும் இடத்திலிருந்து ஓடி வந்த மாதிரி தெரிகிறாய். அவ்வளவுதான். இது ஒரு பெரிய விஷயம் அல்ல. அதில் எந்தக் கெடுதலும் இல்லை. உன்னை மிகவும் கொடுமைப்படுத்தி இருக்கலாம். எனவே நீ ஓடி வர முடிவு செய்திருக்கிறாய். கடவுள் உன்னைக் காக்கட்டும், குழந்தை! நான் உன்னை காட்டிக் கொடுக்க மாட்டேன். நல்ல பையனாக இப்போது என்னிடம் அனைத்தையும் கூறிவிடு."

இனி எதையும் மறைத்து அந்த அம்மாளை முட்டாளாக்க முயற்சிப்பதில் எந்தப்பயனும் இல்லை என்று கூறிவிட்டு அவள் என் கதையை யாரிடமும் கூறாமல் இருந்தால் எனது இதயப் பெட்டகத்தைத் திறந்து அனைத்தையும் கூறுவேன் என்று சொன்னேன். எனது அப்பா மற்றும் அம்மா இருவரும் இறந்துவிட்டார்கள் என்று அவளிடம் கூறினேன். நதியிலிருந்து சுமார் முப்பது மைல் தொலைவில் உள்ள ஒரு நாட்டில் வசிக்கும் ஒரு கீழ்த்தரமான கிழட்டு விவசாயியிடம் சட்டம் என்னை அனுப்பிவைத்தது. அவன் படுத்திய கொடுமை தாள முடியாது சில நாட்களுக்கு முன் அவன் வெளியே சென்ற சமயத்தைப் பயன்படுத்தி, அவன் மகளின் பழைய துணிகளை எடுத்து அணிந்து கொண்டு ஓடி வந்து விட்டேன் என்றும் கூறினேன். முப்பது மைல்கள் கடந்து வர எனக்கு மூன்று நாட்கள் தேவைப்பட்டது. இரவு நேரங்களில் பயணம் செய்து, பகல் நேரங்களில் பதுங்கி அல்லது தூங்கிக் கொள்வேன். அந்த விவசாயி வீட்டிலிருந்து கொண்டு வந்த ஒரு பை நிறைய ரொட்டிகளும், கொஞ்சம் இறைச்சியும் இதுவரை தாக்குப் பிடித்தது. எனவே எனக்குச் சாப்பிடுவதற்கு எந்தக் குறையும் இல்லை. எனது மாமா அப்னர் மூர் என்னைப் பார்த்துக்கொள்வார் என்று நினைத்து அங்கு வந்ததாகக் கூறினேன். அதனால்தான் கோஷன் நகரை நோக்கி நான் சென்று கொண்டிருந்தேன் என்றும் கூறினேன்.

"கோஷனா, குழந்தாய்? இது கோஷன் நகர் அல்ல. இது செயின்ட் பீட்டர்ஸ்பர்க். கோஷன் நதியின் மேற்புறம் மேலும் பத்து மைல் தொலைவில் உள்ளது. இது கோஷன் என்று உனக்கு யார் கூறியது?"

"ஏன், இன்று அதிகாலை நான் காட்டில் உறங்கச் சென்று கொண்டிருந்த போது சந்தித்த ஒரு மனிதன். இந்த சாலையின் கவட்டி போன்ற பிரிவில் வலது புறம் திரும்பினால் ஐந்து மைல் தொலைவில் கோஷன் உள்ளது என்று அவன் கூறினானே."

"அவன் ஒரு குடிகாரனாக இருந்திருப்பான். நீ செல்லவேண்டிய வழிக்கு எதிர்பதமாக அல்லவா கூறி இருக்கிறான்."

"ஆம். அவன் ஒரு குடிகாரன் மாதிரிதான் நடந்து கொண்டான். அது இப்போது முக்கியம் அல்ல. நாளைக் காலை விடிவதற்குள் நான் கோஷனை அடைய இப்போதே நகர ஆரம்பிக்க வேண்டும்."

"ஒரு நிமிடம் இரு. உனக்கு சாப்பிட ஏதேனும் கட்டித்தருகிறேன். சில மணி நேரத்திற்குப் பிறகு உனக்கு அது தேவைப்படலாம்."

எனக்காக உணவு அவள் கட்டிக் கொடுத்தாள் . பின் கூறினாள்

"ஹேய்! ஒரு பசு மாடு படுத்து இருக்கிறது என்றால், அது எழும் போது அதன் உடலின் எந்தப்பகுதி முதலில் எழும்பும்? சீக்கிரம் பதில் சொல். யோசிக்காதே. எந்தப்பகுதி முதலில் எழும்பும்?"

"பின்புறம் அம்மா!"

"குதிரைக்கு?"

"முன்புறம் அம்மா!"

"மரத்தின் எந்தப் பகுதியில் பாசி படரும்?"

"வடக்குப் பகுதியில்"

"பதினைந்து பசுக்கள் மலையின்மீது மேய்ந்து கொண்டிருந்தால், எத்தனை பசுக்களின் தலைகள் ஒரே திசையை நோக்கிக் கொண்டிருக்கும்?"

"அனைத்து பதினைந்து பசுக்களின் தலையும்தான் அம்மா!"

"நல்லது. நீ நகரத்தில் வாழ்ந்திருக்கிறாய் என்று எனக்கு புரிந்த விட்டது. திரும்பவும் பொய் சொல்லுகிறாயோ என்று எண்ணிவிட்டேன். உன் உண்மையான பெயர் என்ன?"

"ஜார்ஜ் பீட்டர்ஸ் அம்மா!"

"நல்லது. ஜார்ஜ். உனது பெயரை நினைவில் கொள்ள முயற்சிக்கிறேன். திரும்பவும் நீ கிளம்பிச் செல்லுமுன் மாற்றி அலெக்சாண்டர் என்று கூறிவிட்டு, பின் உனது பொய்யை நான் கைப்பிடியாய்ப் பிடித்ததும் ஜார்ஜ் அலெக்சாண்டர் என்று சமாளித்துக் கூற முயற்சிக்காதே. அத்தோடு பெண்கள் அணியும் இந்த பழையகால காலிகோ துணியைப் போட்டுகொண்டு அலையாதே. இதை வைத்து ஒரு ஆணை வேண்டுமானால் நீ ஏமாற்றலாம். கொஞ்சமும் பார்க்கச் சகிக்க முடியாத பெண்ணின் தோற்றத்தில் நீ தோன்றுகிறாய், பாவப்பட்ட குழந்தாய்! ஊசியில் நூல் கோர்க்கும் போது, நூலை அப்படியே ஆடாமல் வைத்துக் கொண்டு ஊசியை நூலின் அருகே கொண்டு வர முயற்சிக்காதே. அதற்குப் பதிலாக, ஊசியை அசையாமல் ஒரு கையில் வைத்து, நூலை அதனுள்ளே நுழைக்க முயற்சி செய். அப்படித்தான் பெண்கள் பொதுவாகச் செய்வார்கள். ஆனால் ஆண்கள்தான் நீ செய்த மாதிரி தலைகீழாகச் செய்வார்கள்.”

“அதேபோல் எலியின் மீது அல்லது வேறு எதனின் மீதாவது எந்தப் பொருளையாவது வீசி எறியவேண்டுமானால், காலின் நுனி விரலில் எழுந்து நின்று, தலைக்குமேல் உனது கையை எத்தனைத் தடுமாற்றத்துடன் கொண்டு போகமுடியுமோ அத்தனை இசகுபிசகாக கொண்டு செல்ல வேண்டும். ஆறு அல்லது ஏழு அடி தூரத்தில் உள்ள எலியைத் தவற விடவேண்டும். தோள்பட்டையிலிருந்து கரத்தை கடினமாக வைத்து அங்கே ஒரு சுழல்முனை இருப்பது போலத்திரும்ப வேண்டும். இதுவே பெண்கள் குறி பார்த்து அடிக்கும் விதம். உனது கரம் வேறு புறம் திரும்பியிருக்க மணிக்கட்டு மற்றும் முழங்கையில் இருந்து ஒரு சிறுவன் விளையாடும்போது எறிவது போல எறியக் கூடாது. அத்துடன் இதையும் கேள்! ஒரு சிறுமி மடியில் எதையேனும் பற்றிப்பிடிக்க முயலும்போது அவளது இரண்டு மூட்டுகளையும் வேறு வேறு புறம் நகர்த்தி மடியைக் காட்டுவாள். நீ அந்த ஈயக் கட்டியை மடியில் ஏந்தும்போது உனது முட்டிகளை இணைத்து வைத்தது போன்று செய்யாதே. ஏன். நீ ஒரு சிறுவன் என்பதை என்பதை நீ ஊசியில் நூல் கோர்க்க முயற்சிக்கும்போதே நான் தெரிந்து கொண்டேன். அதை உறுதி செய்ய இன்னொரு யுத்தியைப் பயன்படுத்தினேன். அவ்வளவுதான்.”

"இப்போது, உனது மாமா வீட்டுக்கு நீ போகலாம், சாரா மேரி ஜார்ஜ் அலெக்சாண்டர் பீட்டர்ஸ்! ஏதேனும் பிரச்னையில் நீ மாட்டிக்கொண்டால் மிஸஸ் ஜூடித் லோப்டஸ் என்பாருக்கு, அதாவது எனக்குத் தகவல் சொல்லி அனுப்பு. நான் என்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக உனக்குச் செய்கிறேன். நதியின் அருகே செல்லும் சாலையிலேயே நடந்து செல். அடுத்த முறை இவ்வாறு முப்பது மைல்கள் நடக்கவேண்டி வந்தால் உன்னுடைய ஷூ மற்றும் சாக்ஸை போட்டுக் கொள்வதை உறுதிப்படுத்திக்கொள். நதியின் சாலை கடினமான பாறைகளைக் கொண்டிருக்கிறது. இப்படியே வெறும் காலில் நீ நடந்து கோஷனை அடைவதற்குள், உறுதியாக உனது பாதங்கள் கிழிந்து நார் நாராகி விடும்."

வெளியில் வந்த நான், ஒரு முப்பது அடிகள் நதியின் கரையில் வேகமாகச் சென்றேன். பிறகு, அந்த வீட்டிலிருந்து தூரத்தில் கீழ்த்திசை நோக்கிய நதியில் இருந்த தோணிக்குச் செல்லும் வழியை திரும்பச் சென்று கண்டுபிடித்தேன். அதில் குதித்து அவரசமாக அதைச் செலுத்தினேன். தீவின் தலைப்பகுதியை அடைய நதியின் மேல்திசையில் வெகு தூரம் சென்றேன். அதன் பின் துடுப்பை குறுக்காக வலித்தேன். வழியின் முழுக் காட்சிகளையும் சரியாகக் காண வேண்டி, தலையில் கட்டியிருந்த பானட்டை எடுத்தெறிந்தேன். அந்த சமயத்தில் நதியின் மத்தியை நான் அடைந்தேன்.

கடிகாரமணி ஒலிக்கும் ஓசை எங்கிருந்தோ கேட்டது. துடுப்பு வலிப்பதை நிறுத்திவிட்டு ஒரு கணம் அந்த ஓசையைச் செவிமடுத்தேன். அந்த ஒலி நீரின் மேல் கடந்து வரவேண்டியுள்ளதால், மிகவும் மெல்லியதாக ஆனாலும் தெளிவாகக் கேட்டது - பதினோரு அடிகள். தீவின் தலைப்பாகத்தை அடைந்தவுடன் கடுமையாக நான் மூச்சுத் திணறினாலும், ஒரு நொடி கூட நின்று எனது மூச்சை நிம்மதியாக சுவாசித்துக் கொண்டிருக்கவில்லை. அதற்கு பதிலாக, நான் முதன்முதலில் தீ மூட்டி இருந்த இடத்திற்கு காடுகளினூடே புகுந்து ஓடினேன். அங்கே உயரமான, காய்ந்து இருந்த ஒரு இடத்தில் நன்கு எரியும் தீயை மூட்டினேன்.

அதன் பின், மீண்டும் தோணியில் குதித்து ஒன்றரை மைல் தூரத்தில் நதியின் கீழ்த்திசையில் இருந்த எங்களின் தங்குமிடத்தை நோக்கி எத்துணை விரைவாகச் செல்லமுடியுமோ அத்துணை விரைவாகச் சென்றேன். கரை இறங்கியதும், மூச்சிரைக்க காடுகளினூடே புகுந்து ஓடி அதன் உச்சியை அடைந்து குகைக்குள் நுழைந்தேன், அங்கே அசந்து தூங்கிக் கொண்டிருந்த ஜிம்மை எழுப்பிக் கூறினேன் "எழுந்திரு. உடனடியாகப் புறப்படு ஜிம்! ஒரு நிமிடம் கூட இனி நாம் இழக்கக் கூடாது. அவர்கள் நம்மைத் துரத்தி வருகிறார்கள்."

ஒரு வார்த்தை, ஒரு கேள்வி கூட ஜிம் கேட்கவில்லை. அடுத்த அரைமணிநேரம் பரபரப்பாக அவன் செய்த வேலைகள் அவன் எவ்வளவு பயத்திற்குள்ளாகி இருக்கிறான் என்பதைத் தெளிவுபடுத்தியது. அடுத்த முப்பது நிமிடங்களில் எங்களுக்குச் சொந்தமான அனைத்து பொருட்களும் வில்லோ மரக்கூட்டத்தின் மறைவில் நிறுத்தி வைத்திருந்த எங்களது தோணியில் ஏற்றப்பட்டு, அங்கிருந்து துடுப்பு வலித்துக் கிளம்பத் தயாரானோம். குகைக்குள் இருந்த குளிர் விரட்டும் தீயை முழுதுமாக அணைத்தோம். அதன் பின்னர் வெளி வந்த நாங்கள் ஒரு மெழுகுவர்த்தி கூட ஏற்றவில்லை.

துடுப்பை வலித்து கரையை விட்டு சிறிது நகர்ந்து என்னால் ஏதும் காண முடிகிறதா என்று பார்த்தேன். விண்மீன் வெளிச்சம் மட்டுமே இருந்ததாலும், மரங்களின் நிழல் அடர்த்தியாக இருந்ததாலும் ஏதேனும் படகு அருகில் வருகிறதா என்பதைக்கூட என்னால் காண இயலவில்லை. பிறகு, கட்டி வைத்திருந்த தோணியை அவிழ்த்து நதியின் கீழ்நோக்கிய திசையில், மரநிழல்களின் மறைவில் தீவின் பாதம் போன்ற பகுதியைத் தாண்டி எவ்வளவு அமைதியாக செல்ல முடியுமோ அவ்வளவு அமைதியாக, ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளாமல் துடுப்பை வலித்து, தோணியைச் செலுத்தினோம்.

[தொடரும்]


மொழிபெயர்ப்பாளர் பற்றி...

முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 14 April 2020 16:41