தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 7

Thursday, 09 April 2020 23:41 - - மார்க் ட்வைன் | தமிழில்: முனைவர் ஆர்.தாரணி- முனைவர் ர. தாரணி பக்கம்
Print

- மார்க் ட்வைன் -- என் பால்ய ,பதின்ம வயதுகளில் மேனாட்டு நாவலாசிரியர்களின் நாவல்கள் பலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகளை நான் யாழ்ப்பாணப் பொதுசன நூலகத்திலிருந்து இரவல் பெற்று வாசித்துள்ளேன். அவற்றில் என்னை மிகவும் கவர்ந்த நாவல்களாக  மார்க் ட்வைனின் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்', ரொபேர்ட் லூயி ஸ்டீவன்சனின் 'புதையல் தீவு' என்பவற்றைக் குறிப்பிடுவேன். பின்னர் வளர்ந்ததும் ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள் நாவலின் ஆங்கில; நூலினையும் வாசித்துள்ளேன். அண்மையில் முனைவர் ர.தாரணி 'பதிவுகள்' இணைய இதழுக்கு மார்க் ட்வைனின் சிறுகதையொன்றினைத் தமிழாக்கம் செய்து அனுப்பியபோது அவர் தமிழாக்கம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  உடனேயே ஒரு யோசனையும் தோன்றியது. அவரிடம் ஏன் அவர் 'ஹக்கில்பெர்ரி ஃபின்னின்  சாகசங்கள்' நாவலைத் தமிழாக்கம் செய்யக்கூடாது என்று கேட்டிருந்தேன். அதற்கு அவர் உடனடியாகவே மகிழ்ச்சியுடன் சம்மதித்தார். உடனேயே அத்தியாயங்கள் சிலவற்றையும் தமிழில் எழுதி அனுப்பியிருந்தார். அவருக்குப் 'பதிவுகள்' சார்பில் நன்றி. இந்நாவல் இனி பதிவுகளில் தொடராக வெளிவரும். வாசித்து மகிழுங்கள். உங்கள் கருத்துகளையும் அறியத்தாருங்கள்.  - வ.ந.கிரிதரன், ஆசிரியர் 'பதிவுகள்'


-அத்தியாயம் ஏழு

தொடர் நாவல்: ஹக்கில்பெர்ரி ஃபின்னின் சாகசங்கள் (டாம் சாயரின் தோழன்) - 8முனைவர் ஆர்.தாரணி"எழுந்திரு. என்ன செய்துகொண்டிருக்கிறாய்?

நான் கண்களை விழித்து சுற்றிலும் பார்த்து எங்கே இருக்கிறேன் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். சூரியன் மேலே எழும்பிவிட்டது. நான் அயர்ந்து உறங்கி விட்டேன் போலும். கோபமும் சோர்வும் முகத்தில் தெரிய அப்பா என் முன்னே நின்று கொண்டிருந்தார். அவர் கேட்டார். "இந்த துப்பாக்கியை வைத்துக் கொண்டு என்ன செய்கிறாய்?"

கடந்த இரவு அவர் நடந்துகொண்டது அவர் நினைவில் இல்லை என்பதை உணர்ந்தேன். எனவே நான் சொன்னேன் "யாரோ கதவை உடைத்து உள்ளே நுழைய முயற்சித்தார்கள். எனவே அவன் வரும்வரை அவனுக்காக நான் காத்துக் கொண்டிருந்தேன்.

"ஏன் என்னை எழுப்பவில்லை?"

"நான் மிகவும் முயற்சித்தேன். நீங்கள் அசையக்கூட இல்லை."

"நல்லது. சரி. முழுநாளும் அசட்டுத்தனமாக ஏதும் செய்துகொண்டே நிற்காதே. வெளியே சென்று மீன் வலையில் மீன் ஏதேனும் உள்ளதா என்று பார்த்து எடுத்து வா. அப்போதுதான் நாம் காலை உணவு சாப்பிட முடியும். இன்னும் சில நிமிடங்களில் நான் வெளியே சென்று விடுவேன்."

அவர் கதவைத் திறந்ததும் நான் நதியின் கரை நோக்கிச்சென்றேன். நதியில் மரக்கிளைகள் மற்றும் குப்பைகளுடன் மிதந்த மரப்பட்டைகள் துள்ளிக்கொண்டு செல்வதை கண்ட எனக்கு நதியின் நீரோட்டம் அதிகரிப்பது தெரிந்தது . நான் மட்டும் இப்போது ஊருக்குள் இருந்திருந்தால், அதிகமான சேட்டைகள் செய்து மகிழ்ந்திருப்பேன். ஒவ்வொரு வருடமும் ஜூன் மாதம் நீரின் வரத்து அதிகரிப்பது எனக்கு எப்போதுமே நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும் நேரமாக இருக்கும். ஏனெனில் நதியில் விடப்படும் மரக்கட்டைகள் அப்போதுதான் மிதந்து வரும். சில சமயங்களில் டஜன் மரக்கட்டைகளை ஒன்றிணைத்து செய்யப்பட்டிருக்கும் மரக்கலம் மிதந்து வரும். நான் அதைப் பிடித்துச் சென்று மரஅறுவை மில்களுக்கும், மரக்கட்டைகளை வாங்கும் நிலையத்திற்கும் விற்று விடுவேன்.

கரையின் கூடவே சென்ற நான் ஒரு கண்ணால் அப்பாவைக் கண்காணித்துக் கொண்டும், இன்னொன்றால் ஏதேனும் உபயோகமானது மிதக்கிறதா என்றும் பார்த்துக் கொண்டே சென்றேன். அப்போதுதான் ஒரு குறுகிய மரத்தோணி மிதந்து வருவதைக் கண்டேன். பதிமூணு பதினாலு அடி நீளத்தில், குழிந்த உட்புறத்துடன் ஒரு அன்னம் போன்று மிக அழகுடன் இருந்தது. தலை குப்புற தவளை போன்று அணிந்திருந்த உடையுடனே நீரினில் பாய்ந்து அந்த மரத்தோணி நோக்கி நீந்திச் சென்றேன். அதன் உள்ளே யாரேனும் மறைந்து படுத்திருக்கக்கூடும் என்று நான் எதிர்பார்த்தேன். சில சமயங்களில் குறும்பு செய்வதற்காக உள்ளே மறைந்திருந்து, யாரேனும் அவர்கள் அருகில் சென்றால், திடீரென எழுந்து பயப்படுத்திச் சிரிப்பது போன்ற விளையாட்டு இருக்கலாம் என்று நான் நினைத்தேன். ஆனால் இந்த முறை அப்படி ஏதும் நடக்கவில்லை. உண்மையாகவே அது ஒரே நல்ல மரத்தோணி. எனவே நான் அதில் இறங்கி துடுப்பை வலித்து கரையை நோக்கிச் செலுத்தினேன். இதனது மதிப்பு ஒரு பத்து டாலருக்குத் தேறும் என்பதால் எனது கிழவன் இதைப் பார்த்தால் மிகுந்த மகிழ்ச்சி கொள்வான்.

அழுததால் கன்னத்தில் வீழும் கண்ணீர்த் துளி போன்று வீழ்ந்து கிடைக்கும் வில்லோ மரக்கிளைகளும், மற்ற கொடிகளும் தலையின் மீது இறங்கும் அளவு சிறிதாக உள்ள குறுகிய நீர்ப்பாதையில் அதை வலித்துக் கொண்டுச் சென்றேன். ஆனால் அப்பா அங்கே வெளியே வரவில்லை என்றதும் எனக்கு வேறு ஒரு யோசனை தோன்றியது. நான் அங்கிருந்து வெளியேறி ஓடும்போது காடுகளுக்கிடையே நீண்ட தூரம் நடப்பதை விட இந்த மரத்தோணியில் ஒளிந்து கொண்டு சுமார் ஐம்பது மைல் தொலைவுக்கு ஆற்றிலேயே அதைச் செலுத்தி பின் அங்கே வெகு தூரத்தில் ஒரு நிரந்தர தங்குமிடம் அமைத்துக்கொள்ளலாம் அல்லவா!

நான் எங்களது அறைக்கு மிக அருகில்தான் இருந்தேன். நான் சிந்தித்துக் கொண்டிருக்கும் வேளை எனது கிழவன் வரும் சப்தம் கேட்டது. ஆயினும், அந்த மரத்தோணியை சமாளித்து மறைத்து வைத்து விட்டேன். எனது வேலை முடிந்ததும், தொங்கிக்கொண்டிருந்த வில்லோ மரக்கிளைகளினூடே ஒளிந்து, அந்தக் கிழவன் பாதையின் கொஞ்சம் கீழ் நின்று ஒரு பறவையைக் குறி வைத்து துப்பாக்கியை நீட்டிக்கொண்டிருப்பதைக் கண்டேன். சிறப்பு. அவன் எதையும் பார்க்கவில்லை.

கடைசியாக அவன் என்னைக் கண்டபோது, நதியின் குறுக்கே செல்லுமாறு வலையைக் கட்டிக்கொண்டிருந்தேன். நேரம் கடத்துகிறேன் என்று அவன் என்னை மென்று துப்பினான். நான் நனைந்திருப்பதைக் கண்டு அவன் பல கேள்விகள் கேட்கக்கூடும் என்பதை நான் அறிந்ததால், அவனிடம் நான் நீரில் விழுந்து விட்டதாகக் கூறினேன். நாங்கள் ஐந்து கெளுத்தி மீன்களை வலையில் பிடித்தெடுத்து வீடு சென்றோம்.

காலை உணவுக்குப் பிறகு இருவரும் களைத்திருந்ததால் சிறிய கோழித்தூக்கம் ஒன்று போட்டோம். நான் ஓடிச் சென்ற பின் எனது அப்பா மற்றும் அந்த விதவை இருவரும் என்னைத் தேடி அலையாவண்ணம் நல்லதொரு திட்டம் தயாரிக்க வேண்டும் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். நான் சென்றுவிட்டேன் என்று அவர்கள் உணரும் முன் அந்தத் திட்டம் நான் வெகுதூரம் செல்லத்தேவையான கால அவகாசம் கொடுக்கும் இந்தச் சந்தர்ப்பத்தை நான் நழுவ விடுவதாக இல்லை. ஏனெனில் நிறைய விஷயங்கள் தவறாகப் போவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருந்தன.

 

இவ்வாறாக நான் ஒரு திட்டம் தீட்டுவதற்காக மூளையைக் கசக்கிகொண்டிருந்த வேளையில், இன்னொரு பீப்பாய் நீர் குடிக்க எழுந்தார் அப்பா. அவர் சொன்னார் "அடுத்த முறை யாரேனும் திரிந்து கொண்டு இங்கே வந்தால் என்னை எழுப்பி விடு, என்ன? நேற்று இங்கே வந்தவன் நல்லதற்காக வரவில்லை. நேற்றே அவனை சுட்டிருப்பேன். அடுத்த முறை, என்னை எழுப்பி விடு, சரியா?"

. பின்னர் மல்லாந்து படுத்து தூங்க ஆரம்பித்து விட்டார். அப்பா கூறியது ஒரு வகையில் எப்படி மற்றவர்கள் என்னைத் தொடர்ந்து வர நினைக்காமல் இருக்கச் செய்வது என்பதற்கான ஒரு யோசனையை எனக்குக் கொடுத்தது.

மதிய வேளை நாங்கள் எழுந்து வெளியே சென்று மீண்டும் நதியின் கரையோடு நடந்தோம். நதியின் நீர்வரத்து வெகு விரைவாக அதிகமாகி, அதில் நிறைய மரக்கட்டைகள் மிதந்து வந்தன. அதிவிரைவிலேயே ஒன்பது மரக்கட்டைகள் சேர்த்து கட்டப்பட்ட மரக்கட்டைகளால் ஆன கலம் போன்ற ஒன்று எங்களைத் தாண்டி மிதந்து வந்தது. அதைத்தடுத்து தள்ளிக் கரை சேர்த்தோம். பிறகு நாங்கள் மதிய உணவு உண்டோம். அப்பா மட்டும் வேறொரு ஆளாக இருந்திருந்தால், இன்னும் என்னவெல்லாம் மிதந்து வருகிறது என்று காத்திருந்து பார்த்திருப்பார். ஆனால் அதுவல்லவே அவரின் பழக்கம். ஒன்பது மரக்கட்டைகள் ஒரு நாள் குடிக்கப்போதுமானது என்று முடிவுகட்டி அப்போதே அவற்றை விற்க ஊரை நோக்கிப் பயணமானார்.

ஒரு மூன்றரை மணி அளவில், என்னை அறைக்குள் தள்ளி பூட்டிவிட்டு, கீழ்ப்புற நதியலையோடு தனது தோணியை எடுத்துத் துழாவிக்கொண்டு ஊரை நோக்கிப் புறப்பட்டார். அன்றிரவு அவர் திரும்பி வர வாய்ப்பில்லை என்று நான் கணித்தேன். அவர் கொஞ்ச தூரம் செல்லும்வரை காத்திருந்த நான், பின்னர் அந்த மரம் அறுக்கும் ரம்பம் எடுத்து சுவற்றில் இருந்த ஓட்டையில் வைத்து அறுத்துத் பெரிதாக்கினேன். அவர் நதியின் ஒரு புறம் தாண்டிச் செல்வதற்குள் நான் என் வேலையை முடித்து வெளிவந்துவிட்டேன். அவர் அந்த நதியின் மேல் ஒரு சிறு புள்ளி போல் தெரிவதை நான் கண்டேன்.

கொடிகளையும், மரக்கிளைகளையும் அந்தப்புறம் தள்ளிவிட்டுக் ஒரு சாக்கு மக்காச்சோள உணவு, உப்புக்கண்டம் தடவிய பன்றி இறைச்சி, மற்றும் ஒரு குவளை விஸ்கி ஆகியவற்றை அந்தத் தோணியில் வைத்தேன். அதனுடன், காபி மற்றும் சர்க்கரை, வெடிமருந்துகள், துப்பாக்கி சுற்றி வைக்கும் உறை, ஒரு வாளி மற்றும் பரங்கிக்காய், தேக்கரண்டிகள், தகரக்கோப்பைகள், ரம்பம், இரண்டு கம்பளிகள், ஒரு வாணலி, மற்றும் காபி தயாரிக்கும் குவளை ஆகியவற்றையும் எடுத்து வைத்தேன். சில மீன்பிடி வலைகளையும், தீப்பெட்டிகள் மற்றும் எவையெல்லாம் பணம் பெறுமோ, அவை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டேன். கடைசியாக துப்பாக்கியையும் எடுத்து தோணியில் வைத்தேன். பிறகு அந்த இடத்தை சுத்தம் செய்தேன். ஒரு கோடாரியை நான் எடுக்க விரும்பினேன். ஆனால் இருந்த ஒன்றும் மரக்குவியலுக்கு அருகே இருந்தது. அதை அங்கே விட்டு வைப்பதற்கும் எனக்கு ஒரு காரணம் இருந்தது.

அந்த ஓட்டை வழியாகவே ஒரு தடையில்லாத பாதை அமைத்து அனைத்துப் பொருட்களையும் அதன் வழியாகவே இழுத்துக் கொண்டு சென்று தோணிக்குச் சேர்த்தேன். பின்னர் அந்த இடங்கள் மொத்தமும் எத்தனை குப்பைகளை சிதறடிக்க முடியுமோ அவ்வளவு போட்டு யாரும் நடக்காத பாதை போலவே சரி செய்தேன். அங்கே இருந்த மரஅறுவைத்தூள் மற்றும் நடந்து ஏற்பட்ட பாதையை மொத்தமாக குப்பைகள் மறைத்தது. பின்னர் அறுத்து எடுத்த அந்தச் சுவரைத் திரும்பவும் பழையபடி பொருத்திவைத்து அந்தச்சுவர் தரையைத் தொடாமல் இருந்ததால் பின்புறம் அதைத் தடுக்கும் விதமாக இரண்டு பாறைகளை அதன் கீழ் வைத்து சரி செய்தேன். நான் அவ்வாறு செய்து முடித்ததும், நீங்கள் ஐந்து அல்லது ஆறு அடி தூரம் நகர்ந்து பார்த்தீர்கள் என்றால் உங்களுக்கு முன்னமே தெரிந்திருந்தாலொழிய அப்படி ஒரு ஓட்டை அங்கே இருந்தது என்று நீங்கள் சொல்லவே மாட்டீர்கள். மேலும், அந்த ஓட்டை அறையின் பின்புறம் இருந்ததால், யாரும் அந்த இடத்தில் போய் அதைச் சோதிக்கும் வாய்ப்பும் குறைவு.

அறையில் இருந்து தோணிக்குச்செல்லும் வழி முழுதுமான மைதானம் புற்களால் மூடப்பட்டிருந்தது. எனவே , அங்கே கால்தடம் விழுந்து விடுமோ என நான் அஞ்சவேண்டியதில்லை. இருந்தாலும் ஒரு முறை திரும்பச்சென்று அதைச் சரி பார்த்துக்கொண்டேன். நதியின் கரையில் நின்று ஒருமுறை அனைத்தையும் பார்த்தேன். எல்லாமே பாதுகாப்பாக இருந்தது. எனவே துப்பாக்கியை எடுத்துக்கொண்டு காட்டினுள் சிறிது தூரம் சென்றேன். சில பறவைகளை வேட்டையாடிக்கொண்டிருக்கும் வேளை, காட்டுப் பன்றி ஒன்றைக் கண்டேன். பண்ணை வீடுகளில் மேய்வதற்கு உள்ள புல்வெளியில் இருந்து தப்பித்து வெளி வரும் பன்றிகள் வெகு விரைவில் கட்டுப்பாடற்று ஆக்ரோஷமாக மாறிவிடும். அப்படிப்பட்ட ஒன்றை நான் சுட்டு வீழ்த்தி அறைக்கு எடுத்து வந்தேன்.

கோடாரியை கையில் எடுத்து ஒரே போடாகப் போட்டு கதவைத் துண்டுதுண்டாக உடைத்தேன். அந்த பன்றியை சுமந்து வந்து அறையில் உள்ள மேசையின் பக்கத்தில் வைத்து, அதனின் கழுத்தை கோடாரி கொண்டு அறுத்தேன். பின்னர் அதைக் கீழே கட்டாந்தரையில் கிடத்தி- தரை எந்தப்பலகையாலும் மூடப்படாது முற்றிலும் குப்பைகளால் நிரம்பி இருந்தது--அதன் ரத்தம் முழுதும் கீழே தரையில் வெளிவரும்படி செய்தேன். பின்னர் ஒரு பழைய சாக்கை எடுத்து அதை அந்த பன்றியின் அருகில் வைத்து, அதில் என்னால் தூக்க முடிந்த அளவிலான சிறு சிறு கற்பாறைகளை முழுதும் போட்டு நிரப்பினேன். பின்னர் அந்த சாக்கை பன்றியைத்தாண்டி அறையினுள்ளே இருந்து கதவு வழியாக வெளியே இழுத்து வந்து நதிக்குக்கொண்டு செல்லும் காட்டுப்பாதை வழியாக இழுத்துச் சென்று நதிக்குள் வீசி அது உள்ளே மூழ்கி கண்ணில் இருந்து மறையும்வரை பார்த்துக்கொண்டே இருந்தேன்.

ஏதோ ஒன்றைத் தரையில் ரத்தத்துடன் குறுக்காக இழுத்துப்போன தடயத்தை நான் அவ்வாறு செய்து முடித்ததும் நீங்கள் சுலபமாகக் காண முடியும். டாம் சாயர் மட்டும் இங்கே இருந்திருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஏனெனில் அவன் இந்த மாதிரியான என்னுடைய திட்டங்களில் மிகவும் ஆர்வம் காட்டி முடிவாக்கச் சரி பார்ப்புகளை கச்சிதமாகச் செய்து முடித்திருப்பான் என்று எனக்குத் தெரியும். சிறு சிறு விவரங்களைக் கையாளுவதில் டாம் சாயரை விடச் சிறந்தவர்கள் யாரும் இருக்க முடியாது.

இறுதியாக என்னுடைய தலைமுடிக் கற்றைகள் சிலவற்றை இழுத்து எடுத்து, கோடாரியின் பின்புறத்தில் பன்றியின் ரத்தத்தில் தோய்த்து எடுத்து ஒட்டவைத்தேன். பின்னர் அந்தக் கோடாரியை அந்த அறையின் மூலையில் வைத்தேன். அந்த பன்றியை எடுத்து அந்த ரத்தம் சிந்தாமல் எனது மேல்ச்சட்டையுடன் வைத்து மார்போடு அணைத்து வீட்டிலிருந்து வெளியேறி சரியான இடம் பார்த்து நீரில் அதை வீசி மூழ்கடித்தேன்.

பிறகு எனக்கு வேறு ஏதோ மனதில் உதித்தது. எனவே திரும்பவும் தோணிக்குச் சென்று அந்த மக்காச்சோளமாவு மூட்டை மற்றும் ரம்பம் ஆகியவற்றை எடுத்தேன். மக்காச்சோள மாவு மூட்டையை அறையில் அதன் இடத்திலேயே வைத்தேன். ரம்பம் கொண்டு அந்தச் சாக்கின் கீழ்ப்பகுதியில் ஒரு ஒட்டையைப் போட்டேன். எந்தவிதமான கத்தி, ஃபோர்க் ஆகியவை அங்கே இல்லாததுதான் நான் ரம்பத்தைப் பயன்படுத்தியற்குக்காரணம். அப்பா பொதுவாக பேனாக்கத்தியைத்தான் தன் சமையலுக்குப் பயன்படுத்துவார்.

பிறகு அந்த சாக்கை ஒரு நூறு அடித்தூரம் புல்வெளியின் மீது இழுத்துக் கொண்டு வில்லோ மரங்களுக்கிடையில் வீட்டின் கிழக்கு மூலையில் உள்ள ஆழமற்ற ஏரிவரை கொண்டு சென்றேன். ஐந்து மைல் அளவில் பரந்து விரிந்த ஏரியில் அதிகம் நாணல்களும் சீசன் சமயங்களில் வாத்துக்களும் நிறைந்திருக்கும். ஏரியின் இன்னொரு புறம் பல மைல்களுக்கு இட்டுச்செல்லும் சதுப்புநிலத்தேக்கம் அல்லது ஒரு சிற்றோடை அமைந்திருந்தது. அது எங்கே செல்கிறது என்று எனக்கு சரியாகத் தெரியாவிட்டாலும், கண்டிப்பாக ஆற்று நீருக்கு இட்டுச்செல்லவில்லை என்று தெரியும். நான் செய்த ஓட்டை வழியாக கொஞ்சமாக வெளிவந்த மக்காச்சோள உணவு அந்த ஏரி வரைச் செல்லும் பாதையில் விழுந்து அடையாளம் உருவாக்கியது. அப்பாவின் சாணை தீட்டும் கல்லையையும் அவர் ஞாபக மறதியாக விட்டது போன்ற தோற்றத்தை உருவாக்க அங்கே எறிந்தேன். பிறகு ஒரு கயிறு கொண்டு சாக்கில் உள்ளது மேலும் கீழே சிந்தாமல் இருக்க அந்த ஒட்டையைக் இறுக்கிக்கட்டி, அந்த மூட்டையையும், ரம்பத்தையும் எடுத்துக்கொண்டு சென்று தோணியில் சேர்த்தேன்.

இருள் சூழ ஆரம்பித்தது. எனவே தோணியை நதிக்கரையில் வீழ்ந்திருந்த வில்லோ மரக்கிளைகளூடே மறைத்து வைத்து வானில் நிலவு மேல் எழும்பக் காத்திருந்தேன். அதே வில்லோ மரங்களின் மறைவில் அமர்ந்து கொஞ்சம் உணவு எடுத்துக்கொண்டேன். அப்படியே, தோணியில் வாகாக சாய்ந்து புகை பிடித்துக் கொண்டே திட்டத்தில் அடுத்து என்ன என்று யோசித்து முடித்தேன். நான் பாறைக்கற்களால் நதிக்கரையில் விட்டு வந்திருக்கும் ரத்தத்தால் ஆன வழியைப் பின்தொடர்ந்து அவர்கள் வந்து நதியை சல்லடை போட்டுத் துழாவுவார்கள் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

மேலும் அந்த மக்காச்சோள உணவு சிந்தியிருக்கும் வழியை பின்தொடர்ந்து ஏரிக்கு வந்து என்னைக் கொன்றுவிட்டு அனைத்துப்பொருட்களையும் களவாடிச் சென்ற கள்வர்களைத் தூரத்தே உள்ள சதுப்புத்தேக்க சிற்றோடையில் தேடுவார்கள். என்னுடைய உடல் கிடைக்குமா என்று தேடுவது பற்றி பெரிதாக எண்ண மாட்டார்கள். வெகு சீக்கிரமே இந்த அவ்விஷயத்தில் களைப்படைந்து என்னைத் தேடுவதைக் கைவிட்டுவிடுவார்கள். இது உண்மையிலேயே மிகச் சிறந்த விஷயம். நான் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். ஜாக்சன் தீவு எனக்கு மிகவும் ஏற்றதாக இருக்கும். அந்தத் தீவு பற்றி அனைத்து விஷயங்களும் எனக்கு முழுதாகத் தெரியும். வேறு யாரும் பெரிதாக அங்கே செல்வதில்லை. அங்கே வசிக்க ஆரம்பித்தால், இரவு நேரங்களில் துடுப்பை துழாவிக்கொண்டு ஊருக்குள் சென்று அலைந்து, கிடைக்கும் பொருட்களை எடுத்துக்கொள்ளலாம். ஆம். ஜாக்சன் தீவுதான் நல்ல இடம்.

அதீத களைப்பினால் என்னையும் அறியாமல் நான் அசந்து உறங்கி விட்டேன். கண் விழித்துப் பார்க்கையில், ஒரு நிமிடம் நான் எங்கே இருக்கிறேன் என்றே எனக்குப் புரியவில்லை. எழுந்து அமர்ந்து சுற்றிலும் பார்த்த வேளை, கொஞ்சம் பயமாய் உணர்ந்தேன். பிறகு எனக்கு எல்லாம் நினைவுக்கு வந்தது. கரை காணமுடியாத அளவு நதி பல மைல்களுக்கு அகன்று காணப்பட்டது. நதியலையில்அடித்துச்செல்லப்படும அனைத்து கருப்புநிற கெட்டி மரக்கட்டைகளையும் நூறு அடி தூரத்தில் இருந்த கரையில் இருந்தே என்னால் எண்ணிசொல்லமுடியும் அளவுக்கு நிலவு வெளிச்சம் ஜொலித்துக்கொண்டிருந்தது. மிகுந்த நேரம் ஆகிவிட்டது. அனைத்தும் மயான அமைதியில் இருந்து, காணும் காட்சிகளும், நுகரும் மணங்களும் கூட அது மிகவும் நேரமாகி விட்டது என்றுணர்த்தியது. எனக்கு அதை எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை ஆயினும் நான் என்ன சொல்ல வருகிறேன் என்று உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.

ஒரு பெரிய கொட்டாவி விட்டு நெட்டி முறித்தேன். தோணியை அவிழ்த்து நதியில் செலுத்த முனைந்த அந்நேரம் திடீரென தண்ணீரிலிருந்து ஒரு சப்தம் கேட்டது. நான் கூர்ந்து கவனித்தேன். வெகு விரைவில் மீண்டும் அந்தச் சப்தம் எனக்குக் கேட்டது. துடுப்புப் படகுகளில் துடுப்பை நிறுத்த வைத்திருக்கும் அமைப்பில் யாரோ வேலை செய்வது போன்றதொரு மெல்லிய ஒலி அது. வில்லோ மரங்களினூடே தலையைத் துருத்திப் பார்த்தபோது ஒரு லேசான சிறு படகு ஒன்று வருவதைக் காண முடிந்தது. ஆயினும் அதில் இருக்கும் ஆட்கள் எத்தனை என்பதைக் கூற முடியவில்லை. அது என்னை நோக்கித்தான் வந்து கொண்டிருந்தது. அது இன்னும் கொஞ்சம் நெருங்கி வரும் சமயம் அதில் இருப்பது ஒரே மனிதன்தான் என்று பார்க்க முடிந்தது. அது அப்பாவாகக்கூட இருக்கலாம். நான் அவரை அங்கே எதிர்பார்க்காவிடினும், அவர்தான் என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டேன். படகில் இருந்த அந்த மனிதன் நதியின் அதீத ஓட்டத்தோடே வேகமாக என்னைத் தாண்டிச் சென்று விரைவில் நதி அமைதியடைந்த இடத்தில் கரையை நோக்கி நிதானமாக படகைச் செலுத்தினான். என்னுடைய துப்பாக்கி முனையால் அவனைத் தொடும் அளவுக்கு மிகவும் அருகாமையில் வந்து என்னைக் கடந்து போனான். அந்த ஆள் என் அப்பாதான். மிகுந்த யோசனையுடன் அவர் இருந்தது அவர் துடுப்பைத் துழாவிய விதத்தில் இருந்தே நான் அறிந்து கொள்ள முடிந்தது.

ஒரு நிமிடம் கூட தாமதிக்க நான் விரும்பவில்லை. நீரின் கீழ் ஓட்டப்பாதையில் நதியின் கரையில் உள்ள மரங்கள் தந்த நிழல்களூடே அமைதியாக ஆனால் விரைவாக எனது தோணியைச் செலுத்தினேன். இரண்டரை மைல் தொலைவு சென்று மீண்டும் ஒரு கால் மைல் பக்கமாக துடுப்புப் போட்டவுடன் நதிக்கரைக்கு ஒதுங்கும் மற்ற தோணிக்காரர்கள் என்னை கண்டு அழைக்கும் அபாயம் தவிர்க்க நதியின் மையத்துக்கு சென்று சேர்ந்தேன். நதியில் அலைந்து கொண்டிருக்கும் மரக்கட்டைகளுடன் கலந்து, தோணியின் கீழே மறைத்து படுத்துக் கொண்டு நதியின் கீழ் ஓட்ட விசைக்கேற்ப தோணியில் மிதந்தேன். அதில் படுத்துக்கொண்டு மேகமில்லாத வானத்தை பார்த்து, நிம்மதியாக ஓய்வெடுத்து புகைப்பிடித்தேன்.

நீங்கள் மல்லாந்து படுத்து நிலவொளியில் தெரியும் வானத்தைப் பார்த்தால் இத்தனை ஆழமாக அது தெரியும் என்பது அதுவரை எனக்குத் தெரியாது. அதனூடே, எத்தனை சப்தங்கள் அந்த நள்ளிரவில் நீரின் மீதிருந்து கேட்க முடிகிறது என்பது பற்றி நான் மிகவும் வியப்படைந்தேன். படகில் வந்து கரை இறங்கும் மனிதர்களின் பேச்சொலிகள். கரை இறங்கும் அவர்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் என்னால் கேட்க முடிந்தது. வருடத்தில் இரவுகள் குறைவாகவும், பகல் அதிகமாகவும் இருக்கும் சமயத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்று ஒரு மனிதன் கூறினான். அன்றைய இரவு கண்டிப்பாக குறைவான நேரம் உள்ள இரவு அல்ல என்று இன்னொரு மனிதன் தன் யூகத்தைத் தெரிவித்தான். பிறகு இருவரும் இணைந்து நகைத்தவாறே திரும்பத் திரும்ப அதே விஷயத்தைக் கூறிக் கொண்டு திரும்பத் திரும்ப நகைத்தார்கள்.

பிறகு தூங்கி கொண்டிருந்த இன்னொரு மனிதனை எழுப்பி அவனிடம் இதே விஷயத்தைக் கூறி மீண்டும் நகைத்தார்கள். ஆனால் விழித்தெழுந்த மனிதன் பதிலுக்கு நகைக்கவில்லை. அதற்கு பதிலாக அவர்களிடம் "வள்" என்று கடித்து அவனைத் தனியே விட்டுப் போக அவர்களிடம் சொன்னான். இது ஒன்றும் முன்பு அவளிடம் கூறிய விஷயங்களைவிட பெரிதாக வேடிக்கையானது அல்ல எனினும், இந்த விஷயத்தை அவனது கிழவியிடம் சொன்னால் அவள் அதை மிகவும் வேடிக்கையாகக் கருதுவாள் என்று முதலில் பேசியவன் கூறினான். அப்போது மணி அதிகாலை மூன்று இருக்கலாம் எனவும் கூடிய விரைவில் வெளிச்சம் வரக்கூடும் என்று ஒரு மனிதன் கூறுவதையும் நான் கேட்டேன். அதன் பின் எந்த வார்த்தைகளும் எனது காதில் விழாத அளவுக்கு வெகு தொலைவுக்கு நான் மிதந்து சென்றுவிட்டேன். இருந்தாலும் முணுமுணுக்கும் ஓசைகளும், சிரிப்புச் சத்தங்களும் அவ்வப்போது காதில் விழுந்தாலும், அது வெகு தொலைவில் இருப்பதாகத் தோன்றியது.

இப்போது படகுத்துறைக்கு வெகு தொலைவில் நதியின் கீழ்விசைப்பகுதியில் இருந்தேன். அதே கீழ்ப்பகுதியில் இரண்டரை மைல் தொலைவில் நதியின் நடு மத்தியில் இருந்து ஜாக்சனின் தீவு மெதுவாக உயர்ந்து நிற்பதை நான் எழுந்து அமர்ந்து கண்டேன். ஒரு நீராவிப்படகு எந்த விளக்கும் இல்லாது இருப்பதைப் போல் மிகவும் பெரியதாகவும், இருட்டாக அடர்ந்தமரங்களால் சூழப்பட்டுள்ளதாகவும் அது இருந்தது. அதனின் முகப்பில் எந்த அறிவிப்புப்பலகையும் இல்லாது அனைத்து இடமும் நீர் நிறைந்து காணப்பட்டது.

அந்தத் தீவுக்குள் நுழைய எனக்கு வெகு நேரம் பிடிக்கவில்லை. நதியின் நீரோட்ட விசை மிகவும் விரைவாக இருந்ததால் அந்த தீவின் தலைப்பகுதிக்கு வெகு விரைவிலேயே வந்தடைந்தேன். பின்னர் அங்கே தேங்கி நின்ற நீரை அடைந்து இல்லினோய் கரைப்பகுதியில் தோணியை நிறுத்தினேன். அங்கு அடர்ந்திருந்த வில்லோ மரங்களை விலக்கி விட்டு அதனுள் ஆழமாக இருந்த, எனக்கு முன்னமே பரிச்சயமான ஒரு ஒடுங்கிய வளைவில் தோணியை நிலைநிறுத்தினேன். அவ்வாறு பாதுகாப்பாக அதை அந்த இடத்தில் நிறுத்தியிருப்பதால், வேறு யாரும் கண்டுபிடிக்க முடியாது.

நதிக்கரையின் மேல் ஏறி தீவின் நுழைவுப்பகுதியில் இருந்த ஒரு மரக்கட்டை மீது அமர்ந்தேன். அங்கிருந்து அந்த பெரிய நதியை அதில் மிதந்து வரும் கருப்புநிற மரக்கட்டைகளை நோக்கினேன். அங்கிருந்து பார்க்கும்போது மூன்று மைல் தொலைவில் இருக்கும் ஊரில் மூன்று அல்லது நான்கு விளக்குகள் மட்டுமே மினுக்குவதைக் காண முடிந்தது. மேல்திசை நதியில் ஒரு மைல் தொலைவில் ஒரு மிகப்பெரிய மரக்கட்டைகளால் ஆன தோணி ஒன்றில் ஒரு லாந்தர் விளக்கு நடுவில் இருப்பதைக் காண முடிந்தது. அந்த மரப்பலகைத் தோணி மெதுவாக மிதந்து வந்தது. அது எனக்கு நேராக என் முன்னே வரும்போது ஒரு மனிதன்    "துடுப்பைப் பின்னால் அங்கே தள்ளு. படகின் தலையை வலது புறம் திருப்பு" என்று கூறுவது ஏதோ என் அருகில் அவன் நின்றுகொண்டு கூறுவதைப் போல் இருந்தது.

அந்த சமயம் வானம் சிறிது சிறிதாக சாம்பல் நிறமாக மாறியது. எனவே அந்த மரங்களுக்கிடையில் நடந்து சென்று காலை உணவுக்கு முன்னதாக ஒரு குட்டித் தூக்கம் போட ஆரம்பித்தேன்.   [தொடரும்]


மொழிபெயர்ப்பாளர் பற்றி...

முனைவர் ஆர்.தாரணி

- முனைவர்  ர. தாரணி M.A., M.Phil., M.Ed., PGDCA., Ph.D.  தமிழ்நாட்டில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவஸ்தலமான, திருப்புக்கொளியூர் என்று முன்பு திருநாமம் பெற்ற அவிநாசி என்ற ஊரில் உள்ள  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஆங்கிலத்துறையின் தலைவராக பணியாற்றி வருகிறார். ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றது கல்வித்துறையில் அவர் தேர்வு செய்த விஷயம் என்றாலும் அவரின் பேரார்வம் மொழிபெயர்ப்பின் மீதும்தான். -

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 14 April 2020 15:16