ஐரோப்பியப்பயணத்தொடர் (1) : எல்லைகளை வெல்லவே…. --- -மனமும் மனம் சார்ந்த அயல்திணையும்

Monday, 29 May 2017 22:51 - முனைவர் ர. தாரணி - முனைவர் ர. தாரணி பக்கம்
Print

- முனைவர் ர.தாரணி அவர்கள் அண்மையில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றுக்குப் பயணித்துத் திரும்பியிருக்கின்றார். தனது ஐரோப்பியப்பயண அனுபவங்களை இலக்கியச்சுவை ததும்பும் நடையில் தொடராகப் 'பதிவுகள்' இணைய இதழில் எழுதுகின்றார். அப்பயணத்தொடரின் முதலாவது அத்தியாயம் 'எல்லைகளை வெல்லவே…. --- -மனமும் மனம் சார்ந்த அயல்திணையும்' என்னும் தலைப்பில் இவ்விதழில் வெளியாகியுள்ளது. - பதிவுகள் -


எனக்கு வேண்டும் வரங்களை   இசைப்பேன் கேளாய் கணபதி
மனதிற் சலன மில்லாமல்
மதியில் இருளே தோன்றாமல்
நினைக்கும் பொழுது நின்மவுன
நிலை வந்திடநீ செயல்வேண்டும்
கணக்குஞ் செல்வம் நூறுவயது
இவையும் தரநீ கடவாயே- -  மஹா கவி பாரதியார்

ஒரு சிறு முன்குறிப்பு

முனைவர் ர. தாரணிஐரோப்பியப்பயணத்தொடர்பிள்ளைப்பிராயம் தொடங்கி இன்று வரை காலம் தோறும் இடை விடாமல் மனதில் தோன்றும் ஒரு வினா - யார் வகுத்தது இந்தப் பிரபஞ்ச எல்லைகளை? பள்ளிப்பருவத்தில் உலக வரைபடம் காணுகையில் மனம் மனத்திற்கே எழுப்பிய ஒரு சந்தேகம். கடல்களைப் பிரித்தது யார்? சமுத்திரம் எனவும் மகா சமுத்திரம் எனவும் அதற்கு சக்தி வழங்கியது யார்?  அட்லாஸ் உலக வரைபடம் தவிர்த்து மேலே வானவெளியில் பறக்கும்போது இது ஆசியா இது ஐரோப்பா என எழுதி அங்கே ஒட்டி இருக்குமா? என்ன? தெரியாதே அப்போது. வெளியில் கேட்டால் தப்பாக நினைப்பார்களோ என்ற பயம். இன்றும் அதே நிலைதான். ஆனால் மாற்றம் யாதெனில் இதுவரை நாம் படித்துப் பெற்ற பட்டங்கள் விடை அளிக்காவிடினும் அந்த விடயத்தை தத்துவரீதியாக, இலக்கிய ரீதியாக மற்றும் செயல் முறையாகவும் அணுக வழிவகுத்துள்ளது என்பதில் எள்ளளவும் ஐயப்பாடு இல்லை. அதன் ஒரு வெளிப்பாடே இந்த எழுத்துப்பகிர்வு.

பலமுறை இதைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்க தொடங்கிய பொழுதுதான் ஓர் உண்மை புலப்பட்டது. புவியியல் சம்பந்தமான அறிவு சிறிதும் மூளையில் எந்த மூலையிலும் தென்படவில்லை என்பது. பள்ளி தேர்வுகளில் சமுத்திர குப்தர் சாம்ராஜ்யமும், அக்பர் எல்லைக்கோடுகளும் மனப்பாடம் செய்து வரைந்து மார்க் வாங்கியாயிற்று. இது அட்லாண்டிக் பெருங்கடல் இது வட அமெரிக்கா என உலக வரைபடத்தில் கலர் அடித்தும் நிரூபித்தாயிற்று. சிறிய கலர் பென்சில்களை வைத்து இந்த வரைபடங்களில் வர்ணம் தீட்டும் போது மனம் தன்னை உலகப்புகழ் பெற்ற ஓவியராக கருதும் என்பது அனைவருக்கும் ஏற்பட்டு இருக்கும் ஒரு மிகச் சிறந்த அனுபவம். அதிலும் கடலுக்கு வர்ணம் அடிக்கும் போது, மனம் துள்ளி குதிக்கும். நீல வர்ணம், வரைபடத்தில் நீண்டு விரிந்து இருக்கும் கடற்பரப்பு, சர சர என ஒரு இலாவகத்துடன் தேய்க்கும்போது பரந்து விரிந்த சமுத்திரமே தன கைக்குள் அடங்கியதாய் ஒரு கற்பனை எழும். கலர் பென்சில்கள் அடங்கிய குப்பியில் நீல வர்ணப் பென்சில் மட்டும்  அடிக்கடி சிறியதாகி விடும் என்பது அனைவர் வாழ்விலும் நடந்திருக்கும் ஒரு நிகழ்வுதான்.    சிறிய வயதில் இதுபற்றிச் சிந்திக்கத் தொடங்கியபோது நம் சிந்தனைகளை வலுப்படுத்த நம் காலத்தில் கூகிள் அல்லது வேறு வலைத்தளங்களோ அதை செயலாகும் இணையத்தள வசதியோ கிடையாது. உலகத்தின் எல்லைகளை வகுத்தது யார் என வெளிப்படையாக அன்று கேட்டு இருந்தால் கிடைத்திருக்கும் ஒரே பதில் என்னவாக இருக்கும் என்றால் "எல்லாரையும் படைத்த கடவுள்தான் உலகையும் படைத்தார்" என்றுதான் இருந்திருக்கும். அந்த கடவுளையே காலண்டரில், சினிமாவில், வரைபடங்களில், கற்றூண்களில் படைப்பவர்கள் ஆயிற்றே நாம். நல்ல வேளை. என் மன ஐயப்பாட்டை நான் யாரிடமும் தெளிவு படுத்திக்கொள்ள முற்படவில்லை. அதற்குக் காரணம் இந்த மாதிரி கேள்வி கேட்கும் நபருக்குக் கொடுக்கப்படும் பட்டம் "அதிகப் பிரசங்கி/" மேலும், 'இப்படி எல்லாம் தேவை இல்லாம பேசறதை விட்டுட்டு அந்த நேரத்தைப் படிப்பில் செலுத்தினால் நல்ல மார்க் வாங்கி ஸ்கூல்ல முதல் மாணவியாய் இருக்கலாமே' என்ற இலவச அறிவுரை வேறு கிடைக்கும்.

விளையாட்டாகக் கூறினாலும் ஆழ்மனதின் ஒரு பகுதியில் இவ்வினா எந்த திசையிலும் நகராமல் தேங்கி நின்றது திடமான  உண்மை. அன்று ஆழ்மனதில் வேரூன்றிய சிறு விதைதான் என் இன்றைய காலகட்டப் பயணங்களுக்குச் சரியான அத்திவாரம் என எடுத்துக்கொள்கிறேன். ஆங்கில இலக்கியம் படித்தது இந்த வித்துக்குச் சரியான முறையில் உரமிட்டு வளர்த்தது என்பதை அடித்துக் கூறலாம். சொல்லவொணாத் தாகம் தேசங்கள் மீதும் நதிகள் மீதும் வித விதமான மலர்கள் மீதும் பறவைகள் மீதும், காலங்கள் மீதும் மனிதர்கள் மீதும், ராஜா ராணிகள் மீதும்  அத்தனை ஏன் ஆங்கில கவிஞர்கள் புதைக்கப்பட்ட கல்லறைகள் மீதும் எனக்கு ஏற்படுத்தியது நான் படித்த ஆங்கில இலக்கிய இளங்கலை மற்றும் முதுகலை பட்டப் படிப்பு என்பதை நான் என்றும் மறுக்க மாட்டேன்  

இலக்கியப் படிப்பின் பல வகைகளில் பயண இலக்கியம் தொன்று தொட்டே முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. பயணங்களை பற்றிய விவரங்கள் குறிப்புகள் பல்வேறு யாத்ரீகர்களால் புத்தக வடிவில் மக்களுக்குச் சேர்க்கப்பட்டு உள்ளன. பயணம் சம்பந்தப்பட்ட எழுத்துக்கள் அதிக அளவில் வெளிநாடுகளில் வரவேற்புப் பெறுகின்றன. மேற்கத்திய நாடுகளில் பயணம் மேற்கொள்வது என்பது அவர்கள் வாழ்வில் மிக முக்கியமான ஒரு பகுதியாக இருக்கிறது. அது வாரக்கடைசி ஆனாலும் சரி, வருடக்கடைசி ஆனாலும் தன் இடத்தை தவிர வேறு இடங்களுக்கு அதிலும் குறிப்பாக தூர தேசம் பயணம் மேற்கொள்ளும் வழக்கம் உள்ளது. நம் இந்தியாவில் அப்படி ஒரு பழக்கம் மிகவும் குறைவாக உள்ளது. வருடம் முழுதும் வேலை செய்து சேகரிக்கும் பணம் கொண்டு மேலை நாட்டவர்கள் பல அந்நிய தேசங்களை பார்க்க விழைகிறார்கள். அதுவே நம் தேசத்தில் தன குழந்தைகளுக்காகச் சேமிக்கும் தொகையாக மாறுகிறது. கலாச்சார அடிப்படையிலேயே பயண விருப்பம் அமைகிறது. வருடம் முழுதும் சேமிக்கும் பணம் ஒரு சுற்றுலா சென்றால் செலவாகி விடும் என்றும் அதை சேமித்தால் எதிர்காலம் வளமாகும் என்பதும், எதிர்காலம் பின்பு நிகழ்காலத்தில் வாழ்க்கையை அனுபவிக்க பயணம் மேற்கொள்ளவேண்டும் என்பதும் மேலை மற்றும் கீழை நாட்டு கலாச்சார வேறுபாடுகளின் தாக்கமே ஆகும்.

அண்ட சரசாரங்களிலும் பிரமாண்ட வெளியாக உள்ள மனித மனம் இனம் காணமுடியாத காற்று புக இயலாத கற்பனைப் பிரதேசம் என்பது உணர மனிதன் தன ஆயுள் முழுதும் கடின பிரயாசை மேற்கொள்ளுகிறான். மனம் என்பது என்ன - படித்து வந்த அறிவா, பிறக்கும் போதே ரத்தத்தில் ஊறிய மரபணுவின் அடிமையா, நட்பு கொண்டோரின் விருப்பத்திற்கு இணங்க திசை திரும்பும் வாகனமா - மனித மனம்  என்ன  என்பது என்றறியும் ஆவல் காலம்தோறும் பலருக்கும் இருக்கும் ஒரு மறுக்க முடியாத விடயம். அதிலும் அவரவர் ஆழ்மன ஆசைகள் அவரவர்களே உணர முடியாத அளவு  மொஹஞ்சதாரோ ஹரப்பா நகரங்கள் போல்   புதையுண்டு கிடப்பது ஒரு வினோதமான விஷயம். அதில் இருக்கும் நேர்மறை, எதிர்மறை விஷயங்களின் தீவிரத்திற்கு தகுந்தாற்போல் அவரவர் வாழ்வும் வழி நடக்கிறது என்பதும் நன்கு கவனித்தால் தெரிய வரும். மனிதனின் மனம் என்றுமே ஒரு மாறுதலை விரும்புவது இயற்கை. அதில் மிகவும் முக்கியமான ஒரு செயலாக பயணங்களை முன் வைக்கலாம். 

முடிவில்லாத நீண்ட பயணங்களில் காணும் இணையற்ற இடவெளிகள் மனம் அமைதி பெறும் வழி எனவும் கொள்ளலாம். பயணங்கள் ஒரு வகையில் தியானங்கள். மனம் ஈடுபடும் யோகக்கலை. மனதை வசப்படுத்தும் திறன் அழகுமிகும் இயற்கை நிலத்தோற்றங்களுக்கு இயல்பாகவே உள்ளது. ஆத்மாவின் புவியியல் தன்மை தேடுதலில் கிடைக்கிறது. வாழ்நாள் முழுதும் புவி சார்ந்த ஈர்ப்புத்தன்மை மனிதனை தேடுதலுக்கு ஆட்படுத்துகிறது. ஏதோ ஒரு எல்லைக்கோட்டுக்கு ஏங்கி மனம் எல்லா  காலங்களிலும் தேடல் நிகழ்த்துகிறது. நிலப்பரப்புகளில் ஏதேனும் புலப்படும் என்பது காலம் காலமாக ஆழ்மனதில் வேரூன்றிய நம்பிக்கையாகிறது. நிலமகள் பொன் தருவாள், புதையல் தருவாள், வாழ்வு தருவாள் நீர் தருவாள் வாழ்விடம் வழங்குவாள் எனும் நம்பிக்கை என்றுமே பொய்த்ததில்லை. எந்நாட்டிலும், எக்காலத்திலும் மனிதர்கள் இந்த தத்துவத்தை மறந்து துறந்து வாழ்ந்ததாக சரித்திரம் கூறவில்லை.

பயணங்கள் என்றுமே இருவிதங்களில் அடங்கும். காலம் காலமாக பொன்னை அல்லது பொருளை. புதையலை  அல்லது பெண்ணை, புது பூமிகளை நாடிச் சென்ற பயணங்கள் உலகப்புகழ் பெற்றவை மட்டும் அல்லது பல்வேறு விதமான சாகசங்களை உள்ளடக்கியதாகவும் இருந்தன பழங்காலங்களில். மனிதனின் அந்தரங்கத்தில் அமைந்துள்ள மிக ஆழமான தேடும் உள்ளுணர்வே இப்பயணங்களின் மூல காரணம். எங்கோ, கண் காணா தூர தேசத்தில் தனக்கு வேண்டிய ஒரு பொருள் தன வருகைக்காகக் காத்திருப்பதாக மனித மனம் என்றும் நம்பிக்கொண்டிருக்கிறது. இந்த உணர்வு பொதுவாக அனைவருக்கும் அடிமனதில் உள்ளது எனினும் அது இருக்கும் இடம் ஆழ்மனம் மறைப்பதற்கு ஏதுவாக உள்ளதால்  மறைத்து மறக்கின்றனர். சொற்பமான சிலரே அவ்வுணர்வின் உந்துதலை உணர்ந்து பயணம் செய்யத் தலைப்படுகின்றனர்.

இவ்வகை பயணங்களில் முன்கூட்டியே திட்டமிட்டு செல்வது என்ற ஒரு தற்காப்பு நடவடிக்கையின் செயல் எடுபடாது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். உயிரின் கதி கூட நிலையில்லா ஒரு தன்மைதான். எடுத்துக்காட்டாக அமெரிகோ வெஸ்புகி மற்றும் கொலம்பஸ் போன்றோர்களின் நீண்ட யாத்திரைகளைக் கூறலாம். 14 மற்றும் 15 - ம் நூற்றாண்டுகளில் இன்று நமக்கு இருக்கும் அட்லாஸ் உலக வரைபடம் அன்று முழுமையாக்கப்படவில்லை. இன்னும் சொல்லப்போனால் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இருப்பதாகவே மற்றவர்கள் கருதவில்லை. இப்பயணங்கள் பொதுவாக  மர்ம தேசங்களை நோக்கி செல்வதாகும்.

ஆங்கில, கிரேக்க, ரோமானிய பிரெஞ்சு இத்தாலி இலக்கியங்களில் உள்ள பாணிகளில் பயண இலக்கியம் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. பொதுவாக, பயண இலக்கியமானது  'அவுட்டோர்' இலக்கியம், வழிகாட்டி கையேடு, இயற்கை சார்ந்த எழுத்துக்கள் மற்றும் நினைவுக்குறிப்புகள் போன்ற பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கியதாக உள்ளது. அனைத்துமே ஒரு வகையில் பயணத்துடன் தொடர்புடையதாகும். இரண்டாம் நூற்றாண்டில் இருந்து தொடங்கி இன்று வரை பல் வேறு புத்தகங்கள் பயணம் தொடர்பாக இலக்கியத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கிரேக்க நாட்டின் விவரணையில் தொடங்கி புது புது கண்டங்களை கண்டுபிடித்து அது தொடர்பான குறிப்புகளை சேகரித்து அதை பின்னாளில் வருவோருக்கு வழிகாட்டும் கையேடாக சமர்ப்பிக்கும் மாபெரும் பொறுப்பு அன்றைய பயணிகளுக்கு இருந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட யாத்ரீகர்கள் இதனைச் சரியாக செய்து வந்தனர். கடல் கடந்த பயணங்கள் அன்றைய காலத்தில் மிகவும் பிரசித்தி பெற்றவை. அதுவும் கப்பலில். கடலில் பயணம் செய்யும் போது அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் சாதாரணமானவை அல்ல. வெறும் காந்த கடிகார உதவி மட்டுமே கொண்டு பாய்மரக்கப்பலில் காற்றின் கருணையுடன் பல நாட்கள் செல்லும் இடம் அறியாது தவித்தவர்களும் உண்டு. இதில் மாண்டவர்களும் உண்டு. புயல், மலை, சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்களின் கொடூரத்தையும் எதிர் கொள்ளும் ஆற்றலும் அவர்களுக்கு இருக்க வேண்டும். ஆக மொத்தம் பழங்காலங்களில் பயணம் மேற்கொள்ளுபவர் மிகுந்த மனோதிடத்துடன், அதிக துணிச்சலுடன் எதற்கும் அஞ்சா நெஞ்சராக, ஒரு வீரராக மட்டுமே இருந்திருக்க கூடும்.

சுவாரசியம் ஊட்டும் ஒரு வகை பயணம் இலக்கியத்தில் நாம் காண்பது யாதெனில் கற்பனை பயணம் என்ற ஒரு பிரிவு. இல்லாத ஒரு நாடு அல்லது கண்டத்துக்கு கதையின் நாயகன் அல்லது கதாசிரியரே பயணிப்பது. அங்கே காண்பவை எல்லாமே முழுக்க முழுக்க கதாசிரியரின் கற்பனை. ஆனால் அவற்றை வர்ணிக்கும் விதமானது அத்தனை விஷயங்களுமே சத்தியமான உண்மை என நம்பும் அளவு மிகவும் சிறந்ததாக இருக்கும். ஒரு உதாரணமாக ஜொனாதன் ஸ்விப்ட் எழுதிய கல்லிவேர்'ஸ் ட்ராவல்ஸ் என்ற புத்தகம் மிக அதிக அளவில் மக்களிடையே வரவேற்பை பெற்றது. லேமுவேல்  கல்லிவர் எனும் மனிதர் கப்பலில் பயணம் செய்கையில் எதிர்கொள்ளும் இயற்கை சீற்றத்தின் மற்றும் கடற்கொள்ளையர்கள் தாக்குதல் என்ற கஷ்டங்களால் நான்கு விதமான தீவுகளில் கரை சேர்ந்து தப்பித்து வருவதே அதன் மூல கதை. நான்கு விதமான தீவுகளுமே நான்கு விதமான வாழ்க்கை முறை, அரசாங்கம் மற்றும் வித்தியாசமான மனிதர்கள் கொண்டவையாக ஜொனாதன் ஸ்விப்ட் கற்பனையில் இருந்து விவரிக்கிறார். ஒரு வகையில் இந்த புத்தகம் 18 -ம் நூற்றாண்டின் ஐரோப்பா அரசாங்கத்தை மறைமுக நையாண்டி செய்யும் எழுத்தாக இன்று வரை கருதப்பட்டு வருகிறது. இதில் நான் ரசித்தது என்னவென்றால் பார்க்கும் விஷயத்தையே வர்ணிக்க வார்த்தைகள் இல்லாத போது, இல்லாத தீவுகள், மனிதர்கள் மற்றும் அது தொடர்பான தவகல்களை மனதிலேயே கற்பனை செய்து அவற்றை மிக லகுவாக விவரித்த கதாசிரியரின் திறம். அவர் மனதின் பயணம் மற்றும் அவற்றின் வெளிப்பாடு இந்த மாபெரும் நான்கு பகுதிகள் அடங்கிய இந்த புத்தகம். பல காலகட்டங்களை கடந்து பல தலைமுறைகள் தாண்டியும் இன்றும் புத்தக வடிவிலும், சினிமா வடிவிலும் பொலிவு பெறும் இந்த எழுத்து பயண இலக்கிய வகையினைச்சாரும்

பல பயணங்களில் யாரும் நுழைந்தறியாக் கண்டங்களில் புதிதாகக் கால் வைக்கும் பொழுது அங்கே குடியிருக்கும் ஆதிவாசிகள் புதிதாய் வரும் நபர்களை கடுமையான முறையில் நடத்தி உயிர்சேதம் விளைவிக்கவும் தயங்க மாட்டார்கள். வாழ்வு முடியுமா அல்லது வெற்றி விளையுமா என்பது இப்படியான பயணம் மேற்கொள்ளுபவர்களின் கடின நிலை ஆகும். இப்படிப்பட்ட பயணங்கள் இன்றளவும் நடை பெறுகின்றது. விண்வெளியின் சாகசப்பயணங்கள் இவை போன்றவையே. ஒரு வகையில் பல் வேறு முன்னேற்பாடுகளுடன் சென்றாலும் எந்த இடத்தில எந்த ஆபத்து இருக்குமோ என்ற ஒரு பயமும் கலந்த பயணமாகவே விண்கலங்களில் பயணிப்பவர்க்கு இருக்கும். அதே போல் இந்த மாதிரிப் பயணங்களில் உயிர் இழந்தோர்  தியாகிகளாக நமக்கு வெளிப்படுத்தப்படுகிறார்கள். கல்பனா சாவலா ஓர் உதாரணம். இன்னும் பலர் தன சாகச பயணங்களில் மரணம் அடைந்திருக்கிறார்கள். இன்னல்கள் பலவும் பொறுத்திருக்கிறார்கள். இது முதல் வகைப் பயணம்.

மனம் விரும்பும் இனிய பயணங்கள் அடுத்த வகை ஆகும். வாழ்வின் இனிமையான தருணங்களாக இப்பயணங்கள் மாறிவிடும் அற்புதங்கள் நிகழும் இந்த வகையில். இங்கே எல்லாமே நம்முடைய விருப்பம். போகும் இடம், வழி, பயண ஊர்திகள், தங்கும் இடங்கள் , உண்ணும் உணவு, இருக்க வேண்டிய நாட்கள், நம்முடன் பயணம் செய்பவர்கள்  அனைத்தையும் நாம் தீர்மானிக்கலாம். செலவுக்கான தொகை நம்மிடம் சரியாக சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்தால் நம் மனம் விரும்பும் பயணங்கள் நமக்கு கை மேல் சாத்தியம். ஆனால் அதன் பிள்ளையார் சுழியாக திட்டமிடல் மிக அவசியம். எல்லா பயணங்களும் முன்கூட்டியே  திட்டமிடல் என்பது நமக்கு எவ்வளவு தன்னம்பிக்கை கொடுக்கிறதோ, அதே அளவு தலைவலியையும் கொடுக்கும் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. இதற்க்கு காரணங்கள் பல ஆயினும், முக்கிய காரணமாக நம் மனம் ஓடும் ஓட்டத்தை குறிப்பிடலாம். என்னை பொறுத்தவரை ஒவ்வொரு  முறை  பயணம் மேற்கொள்ளும்போதும் முன் கூட்டி திட்டமிடல் என்பது நம் உடலின் ரத்த அழுத்தத்தை அதிகரிக்க செய்யும் காரியமாகவே இருக்கும்.

எவ்வளவுக்கெவ்வளவு முன்கூட்டி திட்டமிட்டு செல்கிறோமோ  அவ்வளவுக்கவ்வளவு நாம் எதிர் பாரா நெருக்கடிகள் வரும் என்பது தெய்வ வாக்கு போலும். என் பயணங்களில் அப்படிதான் நிகழும். ஆனால் அதில் இருந்து நமக்கு கிடைக்கும் அனுபவம் யாதெனில் எப்படி அந்த நெருக்கடியை சமாளிப்பது என்று மனம் கடகடவென அந்த இடத்திலேயே தீர்மானித்து சரி செய்துவிடும். அப்படி ஒரு திறமை  நமக்கு உள்ளது என்பதே நமக்கே அப்போதுதான் தெரிய வரும். எனவே இந்த திட்டமிடல் என்பது பயணங்களின் முதல் கட்டம் ஆனாலும் அதையும் மீறி நம்மை மட்டுமே மூலதனமாகக்கொண்டு பயணம் மேற்கொள்ளுவதே நம்மை தயார் படுத்தும் எளிய வழியாக நான் கருதுகிறேன். மனம் வேண்டியபடி செல்லும் உடல் கேட்டேன் என்னும் மஹாகவியின் வேண்டுதலைபோல் பயணம் சிறக்க உடல் ஒத்துழைக்க வேண்டும். இதுதான் பயணத்திற்கான முதல் தகுதி.

2017 -ம் ஆண்டின் கோடை விடுமுறையில் ஒன்பது நாடுகளை சுற்றி வரும் பாக்கியம் எனக்கு எல்லாம் வல்ல கடவுள் அருளால் கிட்டியது. அப்பயணம் என் வாழ்வின் மறக்கமுடியாத விசேஷ தருணங்கள் என அமைந்தது அதன் சிறப்பு. அந்த நாடுகள் அனைத்தையும் எத்தனையோ மாமனிதர்கள் வலம் வந்திருக்கலாம். அதையும் தாண்டி சென்று இருக்கலாம். ஆனால் ஒரு சிறிய குருவி எட்ட முடியாத தூரம் சென்று திரும்பிய எல்லையில்லாத உவகையில்,  ஒரு சாதாரண மனிதனின் பார்வையில், நான் கண்டு ரசித்த ருசித்த விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்ள மனம் விழைகிறேன். எனது பார்வையில் என்ன எனக்குக் கிட்டியது அதை எனது தாய் நாட்டில் உள்ள மற்றும் தமிழ் தெரிந்த அனைவருக்கும் பகிர்ந்து கொள்வதில் பெரும் ஆனந்தம் கொள்கிறேன். அந்த அந்த நாட்டில் இருக்கும் போதே இணைய வலைத்தளம் மூலம் முகநூலில் உள்ள எனது தோழமைகளுக்குப் புகைப்படம் அனுப்பி பகிர்ந்து களித்தேன். இனி என் வார்த்தைகளால் அந்தப் பயணத்தை விவரிக்க எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்த என் இனிய நண்பர்  கனடா வாழ் தமிழ் படைப்பாளியும், என் மானசீக இலக்கிய வழிகாட்டியும் ஆகிய வ.ந. கிரிதரன் அவர்களுக்கும், அவர்களின் மிகச் சிறந்த சேவையான 'பதிவுகள்' இலக்கிய இணைய இதழுக்கும் பணிவு கலந்த நன்றி உரித்தாகுக.

[தொடரும்]

* முனைவர் ஆர்.தாரணிThis e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 10 June 2017 22:11