தொடர் நாவல்: கலிங்கு (2006 -3)

Tuesday, 03 November 2020 12:49 - தேவகாந்தன் - தேவகாந்தன் பக்கம்
Print

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


3

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்

அன்று காலை அவிழ்ந்து தாழ விரிந்திருந்த கூந்தலை அள்ளி குடும்பி போட்டபடி அறையிலிருந்து தயாநிதி வெளியே வந்தபோது, கலாவதி கிணற்றடியில் ஒரு நிழல்போல நின்றிருந்தது தெரிந்தது. நிழலின் திடமற்றவையாக செயல்களும். நாகி அடுக்களையிலிருப்பது, அடுப்பிலிருந்து கணகணத்து எழும் நீலப் புகை கூரையினூடாகவும், மட்டை வரிச்சுகளுக்கூடாகவும் பிதுக்கித் தள்ளிக்கொண்டிருப்பதில் அறியமுடிந்தது.

அவள் படுக்கையிலிருந்து எழுந்து வெளியே வரும்போதே, கலாவதி வழக்கமாக படுக்குமிடத்தில் பார்வையை உன்னித்திருந்தாள். படுத்திருந்ததின் மெல்லிய அடையாளங்களே தென்பட்டன. கலாவதி இரவு நெடுநேரம் அங்கே படுத்திருக்கவில்லையான எண்ணம் அவளது மனத்தில் ஊன்றியது. அவளிடம் கேட்கவேண்டும் எச்சரிக்கையாகவென எண்ணிக்கொண்டாள். இல்லாவிட்டால் கரடிக்குட்டிபோல் பாய்ந்துவிடுவாள்.  அப்போது வெளிக் காட்சிகளும் மனத்தை சஞ்சலம் செய்பவையாயே தோன்றிக்கொண்டிருந்தன. தயாநிதிக்கு குழப்பமாக இருந்தது. வீதியில் இயல்பான ஜன நடமாட்டம் ஆரம்பித்திருந்தது. ஆனால் நடமாடியவர்கள்தான் இயல்பில்லாமல் இருப்பதாகத் தோன்றியது. ஏறக்குறைய இரண்டு வருஷங்களுக்கு முன், 2004இல், கிழக்கில் எழுந்திருந்த இயக்கப் பிரச்னைக் காலத்தைப் போன்றதாகவே அது பெரும் அவலத்தோடும் இருந்ததாய்ப் பட்டது. அந்த 2004இன் ஒரு காலையை சோம்பலோடு மனத்தில் விரித்தெடுத்தாள் தயாநிதி.

வழக்கம்போல் அவள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப வெளிக்கிடுத்திக்கொண்டு இருக்கிறாள். கலாவதி தோட்டத்திலும்,  கணநாதன் பள்ளி செல்ல ஆயத்தமாகியும் அவரவர் வேலைகளில் மூழ்கிப்போய். காற்று கனதிப்பட்டு வந்ததுபோல் ஒரு உணர்கை. ‘றேடியோவைப் போடு… றேடியோவைப் போடு’ என வெளியிலிருந்து வந்த நாகி அவசரமாகச் சொன்னதும் றேடியோவை இயங்கவைக்க, எல்லாக் கனதிகளின் சாரத்தையும் றேடியோ சொற்களில் இறக்கியது. ‘கிழக்கில் புலிகளின் வல்லமையைக் கட்டிக்காத்திருந்த கருணாம்மான் இயக்கத்திலிருந்து வெளியேறி கிழக்கை வன்னியிலிருந்து தனியான பிரிவாக அமைத்துக்கொண்டார்.’ அது சாமான்யமான செய்தியில்லை. அனைவரையும் அதிர வைக்கிறது அது. வன்னியின் வலிமை மட்டுமில்லை, இயக்கத்தின் வலிமையே பிளவுண்டு சிதைந்துபோனதென நினைத்து கலாவதி தேகம் பதறுகிறாள். அவள் 2003இல் ஞானசேகரன் சென்ற வானில் போய் பெரும்பாலும் கிழக்கின் வளத்தையும், அதன் வடிவம் அளித்திருந்த சிறப்பான அரண்நிலையையும் நேரில் கண்டுவந்திருந்தவள். இப்போது தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் என்ற பெயரில் கருணாம்மான் பிரிந்துபோயிருப்பின், புலிகள் இயக்கம் பெரும் பலத்தை இழந்துவிட்டதென்றே அர்த்தமாக முடியும். தயாநிதிக்கும் வேறு அபிப்பிராயமில்லை. கணநாதன் தீர யோசிக்கும் வயது அடையாதவனாகையால், ஒரு சோகத்தோடு மௌனமாய் அமர்ந்திருக்கிறான்.

தயாநிதி எல்லாம் நினைத்தாள். சூரியனிலிருந்தும், ஏற்றும் விளக்குகளிலிருந்தும், நிலாவிலிருந்தும் இருளே கிளர்ந்தெழுவதாய் எவருக்கும் தோன்றிக்கொண்டிருந்த காலமாயிருந்ததை அவள் மறக்கவில்லை. இரண்டு வாரங்களின் பின் திடீரென ஒரு அறிவித்தல் வெளியாயிற்று. வன்னியிலிருந்து சென்ற இருநூறு சிறப்புப் போராளிக் குழுவிடம் கருணாம்மான் தோற்று, அவரும் அவரைச் சார்ந்த போராளிகளும் ராணுவக் கட்டுப்பாட்டெல்லைக்குள் தப்பியோடிவிட்டனரென்றும், சிலரைக் கைதுசெய்தும், மனம் மாறிய பலரை அழைத்துக்கொண்டும் அதிரடிப்படை வெற்றிகரமாக வன்னிக்குத் திரும்பிக்கொண்டிருப்பதான தகவலை அது சுமந்திருந்தது. கிழக்கு திரும்பப் பெறப்பட்டதென பலர் தமது இழந்த மகிழ்ச்சியைத் திரும்பப் பெற்றார்கள். அது தயாநிதிக்கு இல்லை. கிழக்கு மீட்கப்பட்டது பௌதீகார்த்தமானதாய் மட்டுமே அவளுக்குத் தோன்றியது. சொர்ணத்தின் தலைமையில் கிழக்குப் புலிகள் பழைய வலிமையோடு இயங்கமுடியுமாவென்று அவள் எப்போதும் கலாவதியோடும் கணநாதனோடும் மல்லுக்கு நின்றாள். கலாவதி அதை யோசித்ததுபோலிருந்தது. ஆனாலும் இயக்கம் சொல்வதை உள்வாங்கி புலிகளின் வன்மை கிழக்கில் குறைந்துவிடாதென்று வாதிட்டுக்கொண்டிருந்தாள். ‘கிழக்கில கருணாம்மானோட போயிட்ட போராளிகளின்ர தொகை சாதாரணமானதில்லை, கலா. ஆறாயிரம் பேர்.’ ‘அது இந்தியாவும் இலங்கையும் சொல்லுற கணக்கு. உண்மையில அறுநூறு போராளிகளே கருணாம்மானோட போயிருக்கினம். முக்கியமான போராளியளெல்லாம் புலியளோடதான் இப்பவும்.’ கணநாதன் தீர்க்கமாய்ச் சொல்லியதை கலாவதியும் ஆதாரித்து நின்றாள். தயாநிதி தனித்துப்போனாலும் விடுதலைப் புலிகள் பலஹீனமடைந்துவிட்டதான அபிப்பிராயத்தில் விட்டுக்கொடுத்துவிடாமல் வாதிட்டுக்கொண்டே நின்றாள். ‘தொகை முக்கியமில்லாட்டியும் கருணாம்மான் இயக்கத்துக்கு முக்கியம். அவரில்லாமல் புலிகளால கனகாலம் கிழக்கில தாக்குப்பிடிச்சு நிக்கேலாது.’

‘கருணாம்மான் இல்லாட்டி சொர்ணமில்லையோ, கௌசிகன் இல்லையோ… எழிலன் இல்லையோ? புலிகளின்ர பலம் அதாலயெல்லாம் குறைஞ்சிடாது.’ கணநாதன் எதிர்வாதம் செய்தான்.

தயாநிதி மேலே பேசாதிருந்தாள். அவளுக்கு உள்ளிலிருந்து தனபாலன் மூலமாக விஷயங்கள் தெரிந்துகொண்டிருந்தன. அவற்றை வெளிவெளியாகச் சொல்லி அவளால் அவர்களோடு வாதிட்டுவிட முடியாது. மௌனமே அப்போது அனுசரணையானது.

மெதுமெதுவாக சூழ்நிலை மாறிவந்ததை அவர்கள் கவனம் கொள்ளவேயில்லை.  ஆகஸ்டு 10, 2005இல் வெளிவிவகார அமைச்சர் கதிர்காமர் கொலை, பாதுகாப்பமைச்சர் சரத் பொன்சேகா மீதான கொலை முயற்சி, காலி துறைமுகத் தாக்குதலென்று  அனுசிதமான பல தாக்குதல்களும் புலிகளால் நடத்தப்பட்டுக்கொண்டிருந்தன. ‘இதெல்லாம் தங்கட பலத்தை நிரூபிக்க புலியள் எடுக்கிற அவசரங்கள்’ என்று தயாநிதி சொன்னபோது, பெரும்பாலும் அவளை அடிக்கிற அளவுக்கே அன்று கணநாதன் பாய்ந்துவிட்டான். கலாவதி கூடநின்றிருந்த வகையில் ஒரு ரசாபாசம் அங்கே நிகழாமல் தடுக்கப்பட்டது. தன் அறிதல்களதும் அனுபவங்களினதும் மேல் கட்டியெழுப்பிய நிலைப்பாடுகளையும் இப்போது பெரும்பாலும் அவள் மற்றவர்களோடு வாதிடுவதை நிறுத்தியிருந்தாள்.

2006 ஜுலை 21இல், வந்த செய்தியொன்று அவளையே தன் அபிப்பிராயத்தை மீளாய்வுசெய்ய நிர்ப்பந்தித்துவிட்டது. மதியமளவில் வெளியிலிருந்து வந்த கணநாதன் ‘ஹே!’ என்று கூவி முற்றத்தில் நின்று பெரிதும் ஆர்ப்பாட்டமிட்டான். அட்டகாசமாய்ச் சிரித்தான். இங்குமங்கும் ஓடினான். குதித்தான். மாமரக் கிளையில் தொங்கினான். அவனது அத்தனை புளுகத்தின் காரணம், சிறிதுநேரத்தில் ஒலிபரப்பான தமிழீழ வானொலியின் செய்தியில் தெரிந்தது. ‘கல்லாறு ராணுவ முகாமுக்கு சுமார் இரண்டு கிமீ தூரத்திலுள்ள கிழக்கின் முக்கியமான நீர்த் தேக்கமான மாவிலாறின் வான்கதவுகளை மூடி, அப்பகுதி நீர்விநியோகத்தை முற்றாக புலிகள் தடைசெய்திருக்கிறார்கள்.’

மாவிலாறு வான்கதவில் புலிக்கொடி பறந்துகொண்டிருப்பதை மாலையில் தமிழீழத் தொலைக்காட்சி கண்சாட்சியாக்கியதை எல்லோரும் கண்டனர்.  நொண்டி நொண்டி ஞானசேகரன் கிழக்கிலங்கை போயிருக்கிறானென்று  கலாவதி காட்சிகளைக் கண்டவுடனேயே சொல்லிக்கொண்டாள். நேர்த்தியும் துல்லியமும் நட்பமும் உணரக்கூடிய கண்களுக்கு,  சுளுவாக வந்து அடையாளம் சொல்லும் தன்மை அவனது கமரா கோணங்களுக்கு இருந்தது. கலாவதி அவற்றைக் கண்டறிந்திருந்தாள். கலாவதியும் கணநாதனோடு சேர்ந்துநின்று குதூகலித்தாள். புலிகளின் வலிமையும், தமிழீழத்தின் ஸ்திரமுமே தனது வாழ்வின் உத்தரவாதமென்று அவள் நம்பியிருந்தவள். தாய் நாகியைபோல, எல்லாம் அந்த வற்றாப்பளை அம்மன் பார்த்துக்கொள்வாளென்று அவளால் நினைக்க முடியாதிருந்தது. தயாநிதி அப்படியல்ல. அவளது அம்மன் பக்தி இப்போதுதான் குறைவு. முன்பெல்லாம் வற்றாப்பளை அம்மன், நாச்சிமார் கோவிலென்று திருநாளுள்ள கோயில்களுக்கெல்லாம் சென்று பொங்கல் வைப்பவள் அவள்.

கலாவதிக்கு கோயில் பொங்கலென்பது வயிற்றுப் பூஜைக்கானதுதான். லௌகீக விஷயமெல்லாம் அப்போது புலிகளாலேயே நிறைவேறுகிறது. பிரியனுடனான தொடர்பு கல்யாணம்வரை வருவதும், குடும்ப வாழ்க்கை தொடர்வதும் அதன் ஸ்திரத்திலேயே தங்கியிருக்கிறது.

இயக்கத்திலிருந்த நிறையப் பேர் கல்யாணம் முடித்துக்கொண்டு சகஜ வாழ்வுக்குத் திரும்பிக்கொண்டிருந்தார்கள். இயக்கத்தில் இல்லாதவர்களும் இயக்கத்தில் சேரக்கூடிய சாத்தியத்தைத் தவிர்க்க பதினேழிலும், பதினாறிலும், பதினைந்திலும்கூட, வயது போதாமையைக் கவனிக்காமல் கல்யாணம் செய்துகொண்டிருந்தனர். ஆரம்பத்தில் முறையான மணக் குழுவின் அனுமதியுடன் நடந்துகொண்டிருந்த கல்யாணங்கள், பின்னால் அனுமதியின்றியும் அவசரமாகவும் நடந்தன. இந்தச் சந்தர்ப்பத்தை அவள் தவறவிட்டுவிடக் கூடாது.

கணநாதன் இயக்கத்தாலும், அதன் தலைவராலும் ஆகர்ஷிக்கப்பட்டவன். வயது போதுமாயிருந்தால் அவனாகவே எங்கேயாவது ஒரு துவக்கை எடுத்துக்கொண்டு போய் இயக்கத்தில் சேர்ந்துவிடக் கூடியவனாயிருந்தான். இயக்க வெறி அவனை எந்நேரமும் பிடித்து ஆட்டிக்கொண்டிருந்தது. அவன் பள்ளிப்பாடங்களைவிட ஆயுதங்களைப்பற்றியே அதிகம் படித்தான். வீட்டு வேலைகளைவிட புலிகளின் போராட்ட யுக்திகளை அவர்களின் வெற்றிபெற்ற யுத்தங்களின் காணொளிப் பேழைகளில் ஆர்வமாய்க் கண்டு ரசித்தான். அவன் வன்னியின் பிள்ளை. அவனது கருத்துநிலைகளை இயக்கம் வகுத்திருந்தது. தேனிசை செல்லப்பா போன்ற பலரின் எழுச்சிமிக்க பாடல்களாலும், புலிகளின் செய்திப் பிரிவு மற்றும் நிதர்சனத்தின் வெளியீடுகளாலும் திரைப்படங்களாலும்தான் அங்கே பலபேரின் மனங்கள் வடிவமைக்கப்பட்டிருந்தன.

எட்டே நாட்களின் பின் ஒரு மாலையில், பக்கத்து வீட்டு யாதவன் படலையில் சைக்கிளை நிறுத்தி, மூடப்பட்ட மாவிலாறின் வான்கதவுகளைத் திறக்க சிறீலங்கா படைகள் ஒப்பறேஷன் வாட்டர் ஷெட்டை ஆரம்பித்திருப்பதாகச் சொல்லிப்போனான். நாகி, தயாநிதி இருவரும் அதிர்ந்தனர். கலாவதியும் திகைத்துப்போனாள். அவள் எதுவும் சொல்லவில்லை. எவர் சொல்லவும் எதுவும் இருக்கவில்லை.

எப்போது மாவிலாறு யுத்தம் தொடங்கியது? யாருக்கும் தெரியவில்லை. அது நடந்துகொண்டிருக்கும்போதுதான் பலர் அறிந்தார்கள்.

ஒரு வாரமாயிற்று. மதியமான நேரத்தில் செவிவழியில் செய்தியொன்று வெகுவேகமாகப் பரவிவந்தது. வான், தரை வழிகளின் தாக்குதலினால் மாவிலாறு வான்கதவுகளை இலங்கை அரசபடைகள் கைப்பற்றிவிட்டதான விபரம் அதில் இருந்தது. கிழக்கு மாகாண எல்லையில் அவர்களுக்கு ஒரு தோல்வி சம்பவித்திருக்கிறது. இது எதன் அடையாளம்? தன் நம்பிக்கையின் திசையில் விழுந்துகொண்டிருந்த வெடிப்பை அப்போது கலாவதி கண்டாள். அவள் தயாநிதியைப் பார்த்தாள். ‘ரண்டாயிரத்தாறு மேயில கனடாவும், ஐரோப்பிய யூனியனும் புலிகளைத் தடைசெய்திட்டுது. புலம்பெயர்ந்த ஆக்கள் புடுங்குவினமெண்டு இனியும் நாங்கள் யுத்தம்... யுத்தமெண்டு சொல்லிக்கொண்டிருக்க ஏலாது. மாவிலாறை மூடுறதால நாங்கள் இன்னும் பலமாயிருக்கிறமெண்டு எப்பிடிச் சொல்லேலும்?’ என்று சொன்ன தயாநிதியோடு, அது அப்படியில்லையென வாதுக்கு நின்றவள் கலாவதி. இப்போது என்ன சொல்லப்போகிறாள்?

‘சிறீலங்கா அரசின் கவனயீர்ப்பைக் கோரி கிழக்கு மாகாணத் தமிழர்களால் மூடப்பட்டிருந்த மாவிலாறு வான்கதவுகளை, இரு தரப்பு மோதல்களையும் தவிர்க்கும் உபாயமாக ஒரு பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட நல்லிணக்கத்தில் மீண்டும் புலிகள் திறந்தனர்’ என்று அன்று தமிழீழ வானொலியில் வந்த செய்தி பலபேரை திருப்திப்படுத்தவில்லை. ராணுவத்திற்கு மாவிலாறை புலிகள் விட்டுக்கொடுப்பதில் கலாவதிக்கு பிரச்னையில்லை. அது தமிழர், சிங்களர், முஸ்லீம்களாகிய மூவினங்களின் பாசன, குடிநீர் வசதிகளின் மூலம். ஆனால் ராணுவத்திடமான தோல்வியில் மாவிலாறு நீர்தேக்க வான்கதவுகளின் கட்டுப்பாடு கைமாறியதெனில், அவள் இயக்கம் குறித்த பல நிஜங்களைக் காணாதிருக்கிறாள் என்பதே அர்த்தமாக முடியும்.

இதைத்தான் தயாநிதி கருணாம்மான் பிரிந்துசென்ற காலத்திலும் சொல்லியிருந்தாளா? அப்போது நாகாத்தை தனக்கேபோல் சொன்னாள்: ‘எந்தக் கதவையும் ஆரும் சண்டையில திறக்கட்டும், அல்லாட்டி சமாதானத்தில திறக்கட்டும். தொடர்ந்து சண்டை கிண்டையெண்டு மோசமான நிலைமையொண்டும் வராட்டிச் சரிதான்.’

கலாவதிக்கும் அந்த அபிப்பிராயமேயுண்டு. விட்டுவிட்டென்றாலும் 2002இலிருந்து சற்றொப்ப நான்கு வருஷ கால சமாதானத்தின் வாழ்க்கை எவ்வளவு நிம்மதியை எவ்வளவு பேருக்குக் கொண்டுவந்தது! மீண்டும் சண்டை, மீண்டும் மரணங்கள், மீண்டும் ஷெல்லடி, மீண்டும் குண்டுவீச்சு, மீண்டும் இடப்பெயர்வுகளென ஆகும் நிலைமையை பல குடும்பங்கள் முற்றாய் வெறுத்தன.

அவர்களில் பலரின் வீடுகள் வடமராட்சிலோ தென்மராட்சியிலோ இருந்தன. விரைவில் தம் வீடுகளுக்குத் திரும்பும் நிலைமையை அவாக்கொண்டபடி அவர்கள் இருந்தார்கள். நோர்வேயின் தலையீட்டிலும், ஐநாவின் அனுசரணையிலும் நிலவிக்கொண்டிருக்கிற யுத்தநிறுத்தத்தில், சுமுகமான அரசியல் தீர்வொன்றை எட்டமுடியாது போனால், பின்னர் தமது வாழ்க்கைக்கான தவிப்புக்கள் எக்காலத்திலும் தணிக்கப்பட முடியாதவையாகிவிடும் என்பதை அவர்கள் அறிந்தேயிருந்தனர். யாரோ சொன்னதுபோல், அப்போதைய சமாதானத்தை முன்வைத்துத்தான் பலரின் வாழ்க்கைக்கான திட்டங்கள் அங்கே வரையப்பட்டன.

சூழ நிகழ்ந்துகொண்டிருந்த அத்தனை களேபரங்களுக்கிடையிலும் காலம் தன்னச்சில் தளர்ச்சியற்று இயங்கிக்கொண்டிருந்தது. வெற்றிகளும் தோல்விகளும் மறக்கப்பட்டு, வாழ்வதற்கான முயற்சிகளில் மக்கள் மறுபடி ஈர்ப்புண்டனர்.

இத்தகு நிலைமையிலேதான் அன்றைய காலை அவ்வாறு விடிந்திருக்கிறது. எதையென்று தயாநிதியால் எண்ணமுடியும்? பழைய நிலைமைகளையெல்லாம் மீட்டெடுத்தபடி திண்ணையில் நின்றிருக்க, மாங்குளப் பக்கத்திலிருந்து வந்த இரண்டு கார்களும், ஒரு வானும் முல்லைத்தீவைநோக்கி கடகடத்துப் பறந்துசென்றன. பெரும் புழுதி மண்டலமொன்று எழுந்து காற்றில் விரிந்து பரந்தது. அந்த வேகமே சொல்லியது நிலைமையின் பாரதூரத்தை.

தயாநிதி வானொலியை இயக்கினாள்.

நாகாத்தை வந்தாள். கணநாதன் வந்தான். கிணற்றடியில் நின்றிருந்த கலாவதியும் அவசரமாக வந்தாள். சிறிதுநேரத்தில் தமிழீழ வானொலியில் அந்த பதட்டங்களின் விபரமிருந்தது. அதில் அவர்களை அதிரவைத்த கூறு இருந்தது. ‘சிறீலங்கா அரசு  சமாதான உடன்படிக்கையைக் கைவிட்டு புலிகளுக்கெதிராகவும், தமிழீழ மக்களுக்கெதிராகவும் ஒருதலைப்பட்சமான யுத்தத்தை துவங்கியிருக்கிறது’.

‘மகிந்தவை ஆதரிச்சதுக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்’ என்று தன்பாட்டில் புறுபுறுத்தாள் நாகி. தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்ஹவை ஆதரிக்காமல் தேர்தலில் ஒதுங்கியிருந்தமையாலேயே, மஹிந்த ராஜபக்‌ஷ 2005 நவம்பரில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடிந்திருந்ததை அவள் மிகுந்த வலியுடன் ஞாபகம் வைத்திருந்தாள். அவளைப் பொறுத்தவரை மாவிலாறு யுத்தத்தில் ஏற்பட்ட தோல்விக்கு தமிழர் அரசியலின் வலுவின்மையது  பின்புலம் இருக்கிறது. மாவிலாறு வெற்றியின் துணிவுதான் சிங்களப் படையை இப்போது யுத்தத்தைத் துவங்க வைத்திருக்கிறது. செய்தியின் ஒலித் துகள்கள் காற்றிலேறிக் கரைந்தழிய, தொடர்ந்து வந்தது கீதமொன்று: ‘நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும்… நாட்டின் அடிமை விலங்கு தெறிக்கும்…’

தயாநிதி தொடர்ந்தும் அங்கே நிற்கவில்லை. நாகாத்தை திரும்ப அடுக்களைக்குப் போய்விட்டாள். தனியே திண்ணையில் வீதிக்கப்பால் வெறித்தபடி கலாவதி நின்றிருந்தாள்.

வெய்யில் ஏறிக்கொண்டிருந்தது.

பகல் வந்திட இருள் மறைந்துவிடுமென்றில்லை. அது சூரியன் ஏற ஏற சுருங்கிச் சுருங்கி பெருமரங்களின் அடியை அடைகிறது. அங்கு பல்லிபோல் ஒட்டிக்கொண்டு நிழலாக இருக்கிறது. மாலையில் சூரியன் மறைய மறுபடி இருளாக தன்னை அது விரித்தெடுக்கிறது.

அடிமரங்களில் நிழல் உறைய ஆரம்பித்தது.

கலாவதி பார்வையை மருத மரத்தடிக்குத் திருப்பினாள்.

காலை வெய்யிலில் மதகிலே அமர்ந்து யாருடனோ பேசிக்கொண்டிருந்தான் பிரியன். அவளைக் கண்டதும் ரகசியதில் சமிக்ஞை செய்தான்.

அவளுக்கு கண்கள் கலங்கிவந்தன. அவசரமாகத் துடைத்துக்கொண்டு தனக்குள்ளே சொல்லினாள்: ‘எனி நான் நித்திரைகொள்ளப் போறன்"

[தொடரும்]

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 11 December 2020 09:52