தொடர் நாவல்: கலிங்கு (2003 - 13 )

Sunday, 19 July 2020 00:51 - தேவகாந்தன் - தேவகாந்தன் பக்கம்
Print

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் பதின்மூன்று!

எழுத்தாளர் தேவகாந்தன்

தேவகாந்தனின் 'கலிங்கு'கருமேகங்களை இழுத்து மூடி, வானம் மறுபடி தன்னை மறைத்தாயிற்று. இருட்டு நேரத்துக்கு முன்னாகவே பூமியைத் தழுவியிருந்தது. மழை வரலாம். குளிர் காற்றும், மேக அசைவுக் குறிகளும் அதைச் சொல்லிக்கொண்டிருந்தன. வெளியே விறாந்தையில் கிடந்திருந்த கம்பி முறிந்த குடையை எடுத்துக்கொண்டு குசுமவதி கடைக்குப் புறப்பட்டாள்.

உக்கு புறப்படுவதற்குப்போல மதியத்தில் ஒரு இடைவெளியை மழை விட்டுவைத்திருந்தது. சந்தோஷமாக அவனை அனுப்பிவைத்தாள் குசுமவதி. சந்திப்போமென்று அப்போது சொல்லியிருந்தாலும், இனி எப்பவென்ற கேள்வி இருவரிடத்திலும் ஒரு சோகச் சுமையாய் இருந்திருந்தது. எவர் நினைப்பதுபோலும் காலம் சீராக இயங்கிக்கொண்டு இருக்கவில்லை.

யயானியையும், சிரானியையும் அவள் அப்போது  கூடவர அழைக்கவில்லை. அவளுக்குள் அவர்கள்பற்றி ஒரு குறையிருந்தது. அது கோபம்தான். கோபமென்று சொல்லமுடியாத அளவுள்ள கோபம். ‘பேசாமலிருந்து படியுங்கோ, கடைக்குப் போயிட்டு வாறேன்.’ குசுமவதி போய்விட்டாள்.

அது ஏனென்று பிள்ளைகளுக்கும் தெரிந்திருந்தது.

முதல்நாள் அதிகாலையில் நடந்த அந்தச் சம்பவத்தை யயானி நினைத்துப் பார்த்தாள்.

கொழும்புக்குப் போவதற்கு முன்னால், பக்கத்து வீட்டு ஹேமாவின் தாயாரை  இரண்டு நாட்கள் வீட்டிலே வந்து தங்கிநிற்க குசுமவதி கேட்டிருந்தாள். குசுமவதி புறப்பட்ட அடுத்த நாள் மாலையில்  யயானிக்கும் சிரானிக்கும் திடீரென சண்டையாகிப் போனது. ‘என்ன சத்தம் அது?’ என ஹேமா அன்ரியின் தாயாரின் உறுக்கலில் சண்டையை அவர்கள் நிறுத்திக்கொண்டாலும், கடுகடுக்க முகங்களை வைத்துக்கொண்டு கனநேரம் இருந்தார்கள்.

நேரமாக ஆக அது தீவிரமிழந்து  இருவருக்கும் பின்னர் ராசியாகிப் போனது. விழுந்த நோவுடன் சிரானியும் சம்பவத்தை மறந்து நோவு மட்டும் நினைத்திருந்தாள். அப்போது அந்தச் சம்பவத்தை தாயாரிடம் சொல்லவேண்டாமென யயானி  தங்கையிடம் கெஞ்சினாள்.

சிரானி சம்மதித்தாள். ‘இனிமேல் என்னை அடிக்கமாட்டாயென்றால் சொல்லமாட்டேன்.’

‘என்னுடைய செல்லமான நங்கியை இனி எப்போதும் அடிக்கமாட்டேன்.’

நள்ளிரவுக்கு மேல் கூடத்தில் எழுந்த சந்தடியில் அம்மா கொழும்பிலிருந்து  திரும்பிவிட்டது அறிந்து  சிரானிதான் முதலில் அறையிலிருந்து எழுந்துவந்தாள்.

உண்மையில் அம்மாவிடம் சொல்கிற எண்ணமேதும் அவளிடம் இருந்திருக்கவில்லை. ஆனால் வெளியேவந்த சிரானிக்கு அம்மாவைக் கண்டதும்  விம்மல் வெடிக்கத் துவங்கிவிட்டது. இரண்டு நாட்களாய் அம்மாவைக் காணாதிருந்த ஏக்கம்கூட அவ்வாறு வெளிப்பட்டிருக்கலாம்.  அவள்  விம்மி விம்மி அழுதாள். அவளைத் தாக்காட்ட வெகுநேரம் சிரமப்பட்டாள் குசுமவதி. ‘என்ர செல்ல மகளுக்கு என்ன நடந்தது? ஏன் அழுகிறீங்கள்? அக்கா அடிச்சாளா…? சொல்லுங்கோ.’
அப்போது அழுதபடியே சிரானி தலையை ஆட்டினாள்.

நங்கி இப்படிச் செய்துவிட்டாளே! யயானி தன் பங்குக்கான முறைப்பாட்டோடு முன்னே பாய்ந்து வந்தாள் . ‘அவள் வண்ணத்துப் பூச்சி பிடிக்க ஓடினாள், அம்மா. கல்லுக் கும்பத்திலே ஏறி சறுக்கி விழவும் செய்தாள். கல்லுக் கும்பியும் சிதறிப்போனது. அதனால்தான் அடித்தேன். கன தரமுமில்லை. ஒரேதரம்தானம்மா.’

அந்த விளையாட்டுத்தனம் ஒன்று அவளிடத்திலுள்ளது  தெரிந்துதான் இருந்தது குசுமவதிக்கு. மலையிலிருந்து வரும்போது அதுவும் அவளோடு ஒட்டிக்கொண்டு வந்திருந்ததோ? மலையிலே ஆயிரமாயிரமாய் அவை வெகுத்திருந்தன. கையெட்டும் தூரத்தில் செடிகளில் மொய்த்துப் பறந்து திரிந்தன. நீட்டிய கைகளில்கூட அவை வந்தமர்ந்து ஆறுதலடைந்து செல்லுபவையாய் இருந்தன. அவைக்கு அங்கே அச்சமிருக்கவில்லை.

வன்னியில் மாரியில் மழை  ஓய்ந்த நேரத்தில் எங்கிருந்தோ உயிர்பெற்றுப்போல் வண்ணத்துப் பூச்சிகள் பசுமை நோக்கிப் பறந்து திரியத் துவங்குகின்றன. அதைப் பிடித்து நூலிலே கட்டி பட்டம்போல் பறக்கவிடுவதில்  பிள்ளைகள் குதூகலம் கண்டன. பிள்ளைக்கு விளையாட்டு, சுண்டெலிக்கு சீவன் போகிறது என்ற கதைதானே?

அந்தளவு பெரிய சிறகுகளாக இருந்தாலும் சற்று இறுக்கிப் பிடித்தால் அவை நொருங்கிப் போபவையாய் இருந்தன. அதற்கு ஒரு சரக்கட்டை அளவுகூட உடம்பு இருக்காது. அந்த உடம்புக்கு கட்டிய நூலின் இறுக்கத்தைத் தாங்கும்  வன்மை இருக்கவேயில்லை. மேலும் நூல் கொஞ்சம் இறுக்கிவிட்டால்  இரண்டு கூறாய்ப் போகக்கூடிய உடல்வாகும் அதற்கு. அது துடித்து உயிரடங்கும் பரிதாபத்தை தாங்கமுடியாமலிருக்கும்.

அதனால்தான் குசுமவதி வண்ணத்துப் பூச்சிகளைப் பிடித்து விளையாடக்கூடாதென சிரானிக்குச் சொல்லியிருந்தாள். அது குழந்தைக்கான மென்மையோடு இருந்தது. ‘செத்த மயிர்க்குட்டியிலிருந்துதான் வண்ணத்துப் பூச்சி உயிர்பெற்று எழுகிறது. அதைப் பிடித்து விளையாடினால் மேலெல்லாம் கடிக்கத் துவங்கிவிடுமெல்லோ? அதை நீங்கள் பிடித்து விளையாடவே வேண்டாம்.’

‘அது தெரியும் எனக்கு. மயிர்க்கொட்டியின் சுணைமயிர் இன்னும் அதில் இருக்கிறதாவென்று பார்க்கத்தானம்மா,  அதை நான் பிடிக்கிறது.’

சிரானியின் பேச்சில் தனக்குள்ளாய் சிரித்தாள் குசுமவதி. ‘இப்போது மயிர்க்கொட்டி மயிர் அதில் இருக்கிறதென்று தெரிந்துவிட்டது அல்லவா? இனிமேல் பிடிக்கவேண்டாம்.’

பழைய சம்பவத்தை நினைத்துக்கொண்டு குசுமவதி யயானியின் பக்கம் திரும்பினாள். சிரானி தவறு செய்திருக்கக்கூடுமாயினும், அவளுக்கு மூத்தவளாய் இருப்பதாலேயே யயானி அவ்வண்ணம் நடந்திருக்கக்கூடாது. ‘அம்மா வீட்டிலில்லாத நேரத்தில் விழுந்த நங்கியைத் தூக்கி நீ அவளுக்கு ஆறுதல் அளித்திருக்கவேண்டும். அல்லாமல் நீ அவளை அடித்திருக்கிறாய். சரி சரி, அதைப் பிறகு பார்க்கலாம். முதலில் தேநீர் வைக்க நீ அடுப்பை மூட்டி கேத்திலை எடுத்துவை. இந்த மாமாக்களுக்கு தேநீர் போடவேண்டும்.’
அம்மா சொன்னபடிதான் செய்கிறாள். பிறகு பார்க்கலாமென்று சொன்னதுபோல் இரண்டு மாமாக்களும் போன பின்னால் பார்க்கத் துவங்கியிருக்கிறாள். புதைக்கப்பட்ட பிணத்தை பரிசோதனைக்காக மீண்டும் தோண்டியெடுப்பதுபோல் அதில் ஒரு தீர்க்கமும், முறைமையும் இருந்திருந்தது.

முதலில் அவர்களோடு வழமைபோல் கதைக்காமலிருப்பதிலிருந்து தன் யுத்தத்தை ஆரம்பித்தாள்.

அவள் கடையிலிருந்து திரும்பிவந்ததைக்கூட  இரண்டு பேரும் பார்த்திருக்கவில்லை. கேற்றையும் சத்தமெழாமல் திறந்து வந்திருந்தாள்.

நல்லகாலமென்று இருந்தது இருவருக்கும். அவள் போன பின்னால் அவர்கள் எழுந்து இங்கே அங்கே நடமாடக்கூட செய்யவில்லை. அம்மா போனபோதுபோலவே அப்போதும் கதிரைகளில் அமர்ந்திருந்தார்கள். முன்னால் புத்தகங்கள் விரிந்தபடி கிடந்திருந்தன.

குசுமவதி மேசைக்கு ஆகக்கூடிய தூரத்தில்  சுவரோடு சாய்ந்து நிலத்திலே அமர்ந்தாள். அது அவள் வழக்கமாக அமருகிற இடமில்லை. ஒதுங்க நினைக்கிற நேரத்தில் ஒட்டுகிற இடம்.
இருவரின் முகத்தையும் அந்தளவு இடைவெளியில்தான் சுட்டிப்பாய்க் கவனிக்க முடியும்போல் அவள் அளந்தெடுத்த தூரமாயிருந்தது அது. அவ்வளவு கூர்மையாய், உறைப்பாய் அவளது பார்வை தங்கள் முகங்களில் பதிய அந்த இடைத்தூரமே காரணமென்று பிள்ளைகள் நினைத்தார்கள். அதைவிட அவள் இரண்டு அடிகளை அடித்திருக்கலாம்போல இருந்தது யயானிக்கு. அவ்வளவு வேதனை செய்வதாயிருந்தது அம்மா தூரவிருந்து எறிந்த அந்தப் பார்வை. அம்மா திட்டமிட்டே அதைச் செய்கிறாள்.

வீட்டின் முன்னால் றோட்டோரமுள்ள மஞ்சணத்தி மரத்தில் அம்மாவுக்கு நல்ல விருப்பம். காலையில் கலகலக்கிற குருவிகளை அந்த மரம்தான் குடிவைத்திருந்தது. இரவிலும் இருக்கும் உயிர்ப்பை அவையே கிணுகிணுத்து நிசப்படுத்துகின்றன. அதுதான் அந்தத் தெருவிலுள்ள ஆக உயர்ந்ததும், ஆக சடைத்ததுமான மரமாயிருந்தது. மலையிலுள்ள மரம்போல அது மேலேமேலேயென்று மேலும்மேலுமாய் வளர்ந்துகொண்டிருந்தது. தான் விழிக்கிறபோது தனக்கு முந்தியே விழித்திருக்கிற மரம் அதுதானென்று அம்மா ஒருநாள் சொல்லியிருந்தாள். அத்தனைக்கு அவள் அந்த மரத்தோடு ஒரு பிரிக்கமுடியாப் பந்தத்தை கொண்டிருந்தாள்.

ஏதேனும் ஒரு குருவி அந்தநேரத்தில் கத்தி அம்மாவின் கவனத்தை தங்களிலிருந்து திருப்பாதா என்றிருந்தது யயானிக்கு.
அவளுக்கு கண்கள் கலங்கி வந்தன.

அதிலேயிருந்த இரண்டு மணி நேரத்தில் அவர்கள் எதையும்தான் படித்திருக்கவில்லை. திரும்பத் திரும்ப ஒரே பக்கத்தை…. திரும்பத் திரும்ப அதே எழுத்துக்களை... பார்த்துக்கொண்டிருந்ததே நடந்தது.

அம்மாவைத் திரும்பிப் பார்க்கவும் மனதுளைந்தது. தங்களுக்கான தண்டனையாக அவள் தன்னைத்தான் தண்டித்துக்கொண்டிருக்கிறாளோ?

ஒருபொழுது புத்தகத்தின் மேல் குனிந்திருந்த தலையைச் சாய்த்து அம்மாவைப் பார்த்த யயானிக்கு விசும்பல் கட்டுடைத்து அழுகையாய் வெடித்தது. அவள் ஓடிவந்து அம்மா அருகிலே சுவரோடு தொம்மென அமர்ந்தாள். “இனிமேல் நங்கியை அடிக்கமாட்டேன், அம்மா. ஆணை… ஆணை” என்று அம்மாவின் முகத்தை ஏறிட்டுக் கெஞ்சினாள்.

குசுமவதியால் இனிமேலும் அந்தமாதிரி இருந்துவிட முடியாது. அவளுக்கு நாலு வார்த்தை புத்திமதியாய்ச் சொல்லி, அமைதிப்பட இரண்டு வார்த்தைகளைக் கூறி, அன்று மதியத்தில் அவளின் நண்பன் உக்கு பயணம் சொல்லிக்கொண்டு போன பின்னால் தொடக்கிய தன் நாடகத்தை ஒரு முடிவுக்குக் கொண்டுவந்தாள் குசுமவதி.

அம்மா சமாதானமாகிவிட்டது கண்டு சிரானியும் ஓடிவந்து அம்மாவின் அடுத்த பக்கத்தை எடுத்துக்கொண்டாள். ‘வண்ணத்துப் பூச்சிகளுக்குப் பின்னால் இனி பறக்கவே மாட்டேனம்மா. ஆணை… ஆணை.’
இவ்வாறாக மஞ்சணத்தியின் குருவி இல்லாமலே நிலைமை தலைகீழாய் மாறியது.

பிள்ளைகளை படிக்க அனுப்பிவிட்டு, குசுமவதி எழுந்தாள். இரவுச் சாப்பாட்டிற்கு பாணும், சீனிச் சம்பலும், வாழைப் பழமும் வாங்கிவந்திருந்தாள். ஒரு பிரச்னை தீர்ந்துபோனது. தனக்காக ஒரு காட்டைத் தேநீரைப் போட்டுக்கொண்டு வந்து வழக்கமான தன்னிடத்தில் அமர்ந்தாள்.

வறுமையைத் தாங்கிக்கொண்டு வாழ்வது பழகியிருந்தது குசுமவதிக்கு. வறுமை ஒரு பிரச்னையாக என்றுமே இருந்ததில்லை அவளுக்கு.

பிள்ளைகள், குடும்பமென்று வருகிறபோது அவளுக்கு பழக்கமும், ஒழுக்கமும்  முக்கியமாக இருந்தன.

வறுமை ஒரு நிலை மட்டுமே. ஆனால் ஒழுக்கம் வாழ்நிலையின் தளமாக இருக்கிறது.

தாழ்ந்திருந்த நிலைமை ஒரு காலச் சுழற்சியில் மாறி உயர்ந்து போவது எப்போதும் நடந்திருக்கிறது. ஆனால் ஒழுக்கத்திலிருந்து இழிந்துவிடுதல் திரும்புதற் சாத்தியத்தை முற்றாக அற்றிருந்தது.

குசுமவதிக்கு அவளது அம்மா அனுல போதித்தது அது. இன்னும் அவளது ஊர் அரநாயக்க கற்றுத் தந்த பாடமும் அதுதான்.

அதை அவள் கடைப்பிடித்தாள்.

அதனாலேதான் அங்கு எப்போதாவது இருந்துவிட்டெனினும் பூசல் எழுகிறது.

அவளால் பிள்ளைகளைப் படிக்கவைக்க முடியும். அவர்கள் ஒரு நல்ல நிலைமையை அடைவது அவளின் கனவேயெனினும், அவளது கையில் மட்டும் இல்லாதது அது. அவர்கள் ஒழுக்கமானவர்களாக, ஒழுக்கத்தின் விழுப்பம் தெரிந்தவர்களாக வளர்வது அதைவிட அவளுக்கு முக்கியம். அது அவளது கையில் இருக்கிறது.

இருவரில் எந்தப் பிள்ளையையும் அவள் இதுவரை அடித்ததில்லை. சாட்டுக்குத் தட்டியது மட்டும்தான். தட்டி அவர்களது அழுகையை அடக்கியதுண்டே தவிர, அவர்களை அழ வைத்ததும் கிடையாது. ‘ரண்டு போடு’ போட்டு அடக்கிறதுக்குப் பதிலாய் செல்லம் கொஞ்சி அவர்களைக் கெடுத்தது அவளேயென்ற பந்துலவின் செல்லப் பழி சுமந்தவள் அவள்.

அவள் கணவனையும், அவர்கள் தந்தையையும் இழந்து ஒரே அளவான துக்கத்தை அனுபவிப்பவர்கள். குண்டு துளைத்த பந்துலவை சடலமாய் பெட்டியில் வைத்து வீட்டிற்கு காவி வந்தபோது, ஏற்கனவே கண்டு துடித்து கதறி மயங்கிப்போன குசுமவதி பாதி உயிர் போனவளாய் இருக்கையில், பெட்டி திறக்க தங்கள் தந்தையின் கோலம் கண்டு இரண்டு பிள்ளைகளும் துடித்துக் கதறியது இப்போதும் ஒரு படம்போல அவளது மனத்திலிருந்து அதைக்கிறது.

சோகத்தின் பாசாங்கில் நின்றிருந்தவர்களும் துக்கத்தை வெடித்து கண்ணீராய்ச் சிதறவிட்டது அப்போது நடந்ததே!

அவ்வாறு இழப்பின் முடிவறியாச் சோகத்தை அவர்கள் தங்கள் மனங்களுள் பொதிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் இனிமேல் அழுவது எந்தவிதத்திலும் நியாயமில்லை.

குசுமவதி எல்லாம் நினைத்தேயிருந்தாள்.

பந்துல இருந்தபோதுபோலவே அவனின் பின்பும் அவள் குழந்தைகளை அடித்ததில்லை. உறுக்கியதுகூட இல்லை. தன் அம்மா அனுலபோல இருந்தாள் குசுமவதி.

அனுல வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் தவறாது விஹாரைக்குச் செல்லுகிறவள். அவளும் தன் குடும்பத்தின் துயர வெடிப்புகளால் அதைக் கைவிட்டு சிலகாலம் இருந்துமிருக்கிறாள். குசுமவதி விஹாரைக்கு அதிகமும் போகாதது மட்டுமல்ல,  பிரார்த்தனைகளிலும் அக்கறை அற்றவளாக இருந்தாள்.

வறுமையானது ஆன்மீக யோசனைகளை ஒருபோது அவளிடத்தில் அண்டவிடாதிருந்தது. பின்னால் அவளுக்கு ஒரு தெளிவு வந்தது. ஆன்மீகமும் லௌகீகமும் வேறுவேறு என்பதும், ஆன்மீகத்தினால் லௌகீக பிரச்னைகளையோ, லௌகீகத்தினால் ஆன்மீக பிரச்னைகளையோ தீர்த்துவிடமுடியாதென்பதும் தெரியவர வேறொரு மார்க்கத்தில் அவள் நம்பிக்கை கொள்ள ஆரம்பித்தாள்.

திருமணமாகி குடும்பஸ்தியான நிலையிலும் காதல், காமமென்ற இரண்டை மட்டுமின்றி, அவள் தெரியாதிருந்த  உலக விடிவிற்கான  ஒரு மூன்றாவது மார்க்கத்தையும் பந்துல அவளுக்குக் காட்டினான்.
வறுமையைச் சகித்து வந்தவளுக்கு, வறுமையை அனுபவிக்க அது காட்டிக்கொடுத்தது.

அப்போதும் ஒழுக்கம் உயரிய விஷயமாகவே அவளுக்குத் தோன்றியிருந்தது. ஒழுக்கத்தில் தலையிடாததாகவே அந்த மார்க்கமும் இருந்தது.

பந்துல அவளது பகலின் வாழ்க்கை மட்டுமல்ல, இரவின் வாழ்க்கையும். அந்தத் வாழ்தலை அவள் இரவில் தனித்தே செய்யவேண்டியிருந்தது. அம்மா, அப்பா, சகோரர், குழந்தைகள் யாரும் அந்த உலகத்தில் இல்லை. அவள் மட்டுமே. அது வேறு மண்டலம்.

‘ஓ… பிரிய! என் பந்துல…!’

எந்த இரவில் அவளுயிர் அதை உச்சாடனம் பண்ணவில்லை?

மன வாழ்க்கையும், வெளி வாழ்க்கையும் சாராத இன்னொரு வாழ்க்கையும் அவளுக்கு இருந்தது. அந்த மூன்றாவது வாழ்க்கை நியாயப்பாடு தெரிந்த பலபேருக்கும் இருந்தது. நேரடியாக அரசியலென்று சொல்லமுடியாதது அந்தப் பாதை. ஆயினும் அது அபிப்பிராயங்களை ஆரவாரமில்லாமல் உருவாக்கக்கூடியது. அதுவே அவளை சிங்கள – தமிழ் கலைஞர் எழுத்தாளர் ஒன்றுகூடலுக்கு அவ்வளவு பணச் சிரமத்திலும்  செல்ல வைத்தது.

அதைச் சொன்னபோது, ‘நீ இன்னும் மாறவேயில்லை, குசுமவதி’ என்றான் உக்கு.

அவள் மாறமாட்டாள். ஏன் மாறவேண்டும்?

அவன் அழைக்கும் விதத்தை அவள் அப்போதும் ஞாபகமானாள். அவளை விளிக்கின்ற போதெல்லாம்  அரநாயக்கவில்போல் குசும என்றில்லாமல், குசுமவதியென்று அழைக்கிறான் உக்கு. வாலிபத்தில் அவள்மீதான பிரேமை ஏதேனும் அவனில் இருந்திருக்கக்கூடுமோ? அவனம்மாவுக்கு அவளை அவனுக்குக் கட்டிவைக்கிற விருப்பமிருந்தது குசுமவதிக்கு தெரியும். அவளே நேரில் சொல்லியிருந்தாள். ஆனால் உக்கு விரும்பியிருந்தானா?

இது வேறுதான். ஒரு நண்பனாய் தன் எல்லையறிந்து உக்கு நின்றிருந்த புள்ளி அது. அடுத்த தடவை சந்திக்கும்போது  அதைச் சொல்லி அவனைக் கேலி பண்ணவேண்டுமென அவள் எண்ணிக்கொண்டாள்.

இன்னொரு அவதானத்தையும் அவள் அப்பொழுது நினைத்தாள். உக்கு ராணுவத்தில் இருந்திருந்தாலும் அதை விட்ட பின்னால் ஒரு பிக்குவின் குணாம்சத்தையும், பிக்குவாய் இருந்திருந்தாலும் சங்கத்தைவிட்டு நீங்கிய பின் சரத் ஒரு ராணுவத்தானாயும் மாறிவிட்டிருந்ததை அவள் கண்டாள். கோபத்தை அடக்கிய பழக்கத்தில்  எவனுக்கு கோபம் வரக்கூடாதோ அவனுக்கு வந்து, எவனுக்கு தன் தொழில் நிலைமையால் கோபம் வரக்கூடுமோ அவனுக்கு வராதிருந்தது அவளுக்கு அதிசயமாயிருந்தது.

நிகழ்காலத்தை நசித்துக்கொண்டிருக்கும் சகல அம்சங்கள்மீதும் சரத்தின் கோபம் பாய்ந்துகொண்டிருந்தது. அதில் அவள் விரும்பிய அம்சம் எதுவெனில், அந்தக் கோபம் ஒரு ராணுவத்தானதாய் இல்லாமல், தார்மீகவாதியினதாய் விசாலித்து இருந்ததே. அவன் ராணுவ நடவடிக்கைகளையும் செயற்பாடுகளையும்கூட எதிர்ப்பவனாக இருந்தான். அவனது கோபம் சகல அநீதிகளினதும், அக்கிரமங்களினதும் மேலானதாக இருந்தது.

பின்னால் மஞ்சணத்தியில் குருவிகள் கிளுகிளுத்தன.

அவை என்ன பேசிக்கொள்ளுமென எண்ணினாள் குசுமவதி.

‘தள்ளிப் போகாதே… குளிரடிக்குது…! காற்றடிக்கிறது பலமாக… கால்களால் கிளையைக் கவ்விக்கொள் இறுக்கமாக...’ என்றுதானே இருக்கும்?

காதலுக்கு அவற்றிற்கு பகல் போதுமானது. வேளைதான் வேண்டியிருந்தது. மனிதனுக்குத்தான் இரவு வேண்டும். இரவிலே பயந்துகொண்டும், வருந்திக்கொண்டும் வாழவே நேர்கிறதெனினும், இரவே அதற்கானது.
யயானி அம்மாவை அழைத்தாள்.

எழுந்துபோய் சாப்பாட்டை எடுத்துக் கொடுத்து தானும் சாப்பிட்ட பின் அவர்களை படுக்கைக்கு அனுப்பிவிட்டு குசுமவதி மேசையில் வந்தமர்ந்தாள்.

கிறிஸ்மஸ் தாத்தாவின் படம்போட்ட கொப்பியொன்று முன்னாலிருந்தது. ஏனோ, தாடி வளர்த்த அந்த கறுப்புச் சட்டைக்கார முதியவர் அவளது ஞாபகத்துக்கு வந்தார். அவள் அவரை விழா மண்டபத்திலும் கண்டிருந்தாள். எல்லாவற்றிலும் அவர் வெகு ஆர்வமாய் இருந்திருந்தார். கூர்மையான கருத்துக்கள் மேடையில் பகிரப்பட்டபோது முதல் பிரதிபலிப்பைச் செய்தவரும் அவராகவே இருந்தார். அவையே அவரை அவளது மனத்தில் பதித்தன.

அவரது கோலம் அதீத கவனத்தைக் கவர்வதாய் இருந்தது. வெளித் தோற்றம் மட்டுமில்லை. இயங்குதலின் வெளிப்பாடும். சித்த சுவாதீனமற்றவராய் அவரை அவள் கொள்ளமாட்டாள். ஆனாலும் ஒருவிதத்தில் எங்கோ அவர் பாதிக்கப்பட்டிருக்கிறாரென்று தெரிந்தாள்.

போரடித்த மண்ணிலிருந்து வந்தவரல்லவா? அவளதுபோன்ற அனுபவங்கள் அவருக்கும் இருந்திருக்கலாம். பிரிவு… இழப்பு… கண்ணீர்… வேதனை…

அங்கம் பாதிக்கப்படாமல் சித்தம் பாதிக்கப்பட்ட பலபேர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரா அவர்? யுத்தமே ஒருவரைப் பாதிக்கிறதென்றில்லை. துவேஷத்துக்கு உள்ளாதல், கலவரத்துள் அகப்படுதல், அவமானம் சுமத்தப்படுதல் போன்றவையும் அதை விளைக்கவே செய்கின்றன.

எப்போதும் அவலம் பெருக்குவதாய் ஏன் அவளது தேசம் இருக்கிறது?

அடங்கிய குரல்களில் அந்த முதல் நாளிரவில் மூன்று நண்பர்களும் அதுபற்றி பேசியிருந்தார்கள். அந்த மூன்று பேரும்கூட மூன்று நிலைகளில் தம் அபிப்பிராயத்தைக் கொண்டிருந்தவர்கள். ஆனாலும் அவர்களிடத்தில் தங்கள் நாடுபற்றிய அக்கறை மெய்யாகவே இருந்தது.

நாட்டின் அந்த நிலைமைக்கு அரசியலென்றும், மதமென்றும், இரண்டுமேயென்றும் அவர்களுக்கு காரணங்கள் வேறுவேறாயிருந்தன. ஆயினும் அவரவர் அபிப்பிராயங்களை அவர்கள் மதித்தார்கள்.  நட்பு சேதப்படாமல் அந்த உரையாடல் முடிந்ததில் மூவருக்குமே திருப்தியிருந்தது.

தேநீர் அருந்தும்போது குசுமவதி தான் ரயில் பயணத்தில் அயர்ந்தபோது ஒரு கனவு கண்டிருந்தாள். புத்தபிக்கு ஒருவரின் நீட்டிய சுட்டு விரல், அமானுஷ்ய நீளம்பெற்று தான் பயணித்த ரயிலின் வேகங்களோடு சேர்ந்து தன்னைத் தொடர்வதாய் கண்டுகொண்டு இருக்கிறாள். அது அவளை பற்றிப்பிடித்து நசுக்க வந்துகொண்டிருப்பதாய் அவளுள் கலக்கமெழுகிறது. ஒருபோது அவளை அப்படியே ஒரு சிறிய பூச்சியைப்போல அது அமர்த்திப் பிடித்தும்விடுகிறது. அப்போது அவள் திடுக்கிட்டு எழும்பியிருந்தாள். அதை அவள் அப்போது அவர்களுக்குச் சொன்னாள்.

‘அது நாளைகளின் முழுநம்பிக்கைகளையும் தேடித் தேடி நசுக்க திரிந்துகொண்டுதான் இருக்கும். அது ஒரு விரலல்ல, ஒரு அடையாளம். நசுக்கி அழித்தலின் அடையாளம்’ என்றான் உக்கு.

சரத்தும் அந்தக் காட்சியைக் கண்டிருந்தான். தன்னையும் அந்த விரல் ஒரு ஸ்தம்பிதத்தில்  நிறுத்தியிருந்தது என்றான். ‘புத்த சமயத்தின் வெவ்வேறு உபபிரிவுகளாக பல்வேறு அமைப்புகள் இப்போது தோன்றிக்கொண்டு இருக்கின்றன, குசுமவதி. மதம்சாரா விஷயங்களில் அதீத அக்கறை கொள்கின்றன. குறிப்பாக, நலக ஹாமதுறுவோ மதத்தின் அதிதீவிரத்தைக் கொண்டது. அதன் பௌதீக இயக்க தோரணையே உக்கிரமாக இருக்கும். அது ஒரு புத்த பிக்குவின் துவராடைக்கு தனியான அந்தஸ்து கோருகிறது. தனியுரிமை கோருகிறது. தனக்கான மரியாதைக்கு எவரிடமும் அது கட்டளையிடுகிறது. நாம் ஊர்வல முடிவில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்துக்கு முன்னால் பார்த்த பிக்குகள், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களாய் இருக்க சாத்தியமில்லை. பெரும்பாலும் அவர்கள் சிகள ஹெல உறுமயவைச் சேர்ந்தவர்களாகவே இருப்பர். ஒரு பொலிஸ் அதிகாரியோடு வாதிட்டுக்கொண்டிருந்த அந்த பிக்குவின் தோரணை மிக அருவருப்பானதாக, மிக மூர்க்கம் கொண்டதாக இருந்ததென்பது உண்மைதான். அதையே நீ கனவாய்க் கண்டிருக்கிறாய். அது நிஜத்தை முன்னறிவிப்புச் செய்த கனவு.’

ரயிலில் அவள் அயரும் ஒவ்வொரு பொழுதிலும் அது நீண்டு நீண்டு அவளை நசுக்க வந்தது. ஒரு சுட்டு விரல் ஆயிரம் சுட்டுவிரல்களாய்ப் பெருகியது. அவை நீள நீளமாய் வளர்ந்து தேசத்தின் கனவையெல்லாம் அழிக்க மேலும் நீண்டுகொண்டிருந்தன.
அவளில் அந்தக் கலக்கம் பின்னமறாது இருந்துவிடப் போகிறதா? அப்போதும் ஒரு விநாடியளவில் அது அவளுக்கு மனத்தரிசனம் ஆகி மறைந்தது. அவள் உடம்பை, கூட மனத்தையும், சிலிர்த்தாள். இன்னும் அது நினைவில் ஒட்டியிருந்ததாகவே பட்டது. 
ஆனாலும் அதுவே அவளின் கருத்தைச் செப்பனிட்டும் உருப்படுத்தியது.

ஒரு விஷயத்தில் மற்றவர்களது  கருத்தினை  சரத் முனசிங்க வற்புறுத்திக் கேட்டபோது, அந்த உரையாடல் வேறொரு திசையில் இறுக்கமாக நகர்ந்தது. ‘இப்போதைய யுத்த நிறுத்தம் எவ்வாறாக முடியுமென்று நீங்கள் நினைக்கிறீர்கள்?’
சிறிதுநேர மௌன இடைவெளியின் பின் குசுமவதி சொன்னாள்: ‘இது ஒரு சிறந்த தருணம். சிங்களருக்கும் தமிழருக்கும். இது எது காரணம்கொண்டும் கைநழுவினாலும் வேறு தருணம் இல்லை. இனிமேல் புதிதாக உருவாவதும் சாத்தியமில்லை. பல ஒப்பந்தங்களும் உடன்படிக்கைகளும் உருவாகி ஆக்ரோஷமான  கர்ஜனைகளின் பின் கிழித்தெறியப்பட்ட வரலாற்றைக் கொண்ட நாடு இது. சொல்கிறேன், முடிந்தால் எழுதிவையுங்கள். இந்தச் சந்தர்ப்பம் தவறினால்  மொத்த அழிவுதான் வரும்.’
‘குசுமவதி சொல்வது சரிதான்’ என்றான் உக்கு. ‘வனத்தின் இருளுக்குள்ளும், வெளியே துவேஷத்தின் தீக்கொழுந்துக்குள்ளும் ஜன சமூகத்தின் அபிலாசைகளை வதம் செய்துவிடக்கூடாது. இது ஒரு தருணம் மட்டுமல்ல, ஒரே தருணம். இல்லையேல் வரலாறு அவர்களைச் சுட்டெரிக்கும். விரல்கள்  ஆயிரமாயிரமாய் பெருகிவருகின்றன. குசுமவதியின் கருத்துக்களைக் கொண்டிருக்கக்கூடிய அனைவரையுமே நிஜத்தில் வந்து அவை நசுக்கி அழித்துவிடும். அவ்வளவுதான். சரத், நீ எதுவேனும் சொல்லவிருந்தால் இப்போதே சொல்லிவிடு. மேலே இதுபற்றி நாம் பேசாமலிருப்பதே உத்தமம். நாம் மறைந்திருக்கிறவர்கள். எங்கள் கருத்துக்களால் இரவைக் கிழித்துவிடக்கூடாது.’
சரத்தும் அதே கருத்துடையவனாக இருந்தான்.

மீண்டும் விழுந்தது இடைவெளி. அதைக் கலைத்தாள் குசுமவதி: ‘சரி, நீ என்ன செய்கிறாயென்று சொல், உக்கு? எப்படி காலத்தைக் கழிக்கிறாய்? சிரமமாக இல்லையா?’

உக்கு பண்டார தான் செய்யும் வேலைபற்றிச் சொன்னான். ‘சிரமம்தான். ஆனால் சந்தோஷமான சிரமம். மரமிழுத்து… கிடங்கிலிறக்கி அரிந்தெடுத்து… சீவிலிக் கூடு போட்டு… பொழியடித்து… இப்போது நான் கட்டில்களும், கதிரைகளும் செய்கிற தச்சனாகியிருக்கிறேன். பொதுமன்னிப்பு கிடைக்கிற ஒரு தருணத்தில் நான் அரநாயக்க போவேன். சின்ன இடத்தில் சிறிசாய்த் தொழில்செய்யும் சின்ன தச்சனாய் வாழ்ந்துவிட என்னால் முடிந்துவிடும்.’

‘எந்த இடம் அது?’

உக்கு பதிலைச் சொல்லிவிட்டு, காட்டு வாழ்க்கையிலும் சலனங்களை அந்த யுத்தம் விழுத்திவிட்டிருப்பதை தன் அனுபவத்திலிருந்து தொடர்ந்து சொன்னான்.

வனங்களுமே மாறிவிட்டதை சரத் சொன்னான். வன்னியினதும் கிழக்கினதும் வனங்களை பல தடவைகள் ஊடறுத்து நடந்த அனுபவமுடையவனாக அவன் இருந்தான். வனத்துக்குள் மறைந்திருந்தவர்களுக்கும் மறையவேண்டிய நிர்ப்பந்தத்தை ஒருபோது கொண்டிருந்தவன்.  ‘சுதந்திரமடைந்த காலத்தில் லங்காவின் நிலப்பரப்பில் எழுபத்தெட்டு சத விகிதம் வனமாயிருந்தது. இருபத்தைந்து முப்பது வருஷங்களுக்கு முந்தி அறுபது சத விகிதமாயிருந்ததென ஒரு புள்ளி விபரத்தில் தெரிந்தேன். இன்றைக்கு அது இருபது சத விகிதமாகச் சுருங்கியிருப்பது எவ்வளவு சோகமானது! இந்தச் சிறிய இடம்கூட இப்போது ஆயுததாரிகளின் நடமாட்டத்தால் இருப்பைக் கேள்வியாகக் கொண்டுள்ளது.’

‘அப்படியான நிலையில் யானை, மான், மரை, கரடியாதிய மிருகங்களும் தமக்கான இடமின்றி அலைவனவாயிருக்கும். அவை வனப் பகுதிக் கிராமங்களுக்குள் நுழைகிறபோது அவர்களது வாழ்க்கையும் தறிகெட்டுப் போகிறது.’ குசுமவதி சொன்னதை இருவரும் அவதானித்தனர். நிகழ்வுகளிலிருந்து விளைவுகளை அறியும் புலம் அவளுக்கிருந்ததை அது காட்டியது.

பிறகு அவர்கள் வேறு விஷயங்களைப் பேசினர். ஊர் விஷயமாக, குடும்ப விஷயமாக பின்னர் அது மாறியது. ‘உன்னால் இங்கேயிருந்து சமாளிக்க முடிகிறதா, குசுமவதி?’ என்றான் சரத்.

‘ஏன், சமாளிப்பதற்கென்ன? அதுவும் ஆரம்பத்தில்தான் சமாளிக்கிறதாக இருந்தது. இப்போது இந்த நீரோட்டத்தோடு நான் சங்கமித்தே விட்டேன்’ என்றாள் அவள்.

‘அப்போது அரநாயக்க…? நீ அதை நினைக்கிறதேயில்லையா? அங்கு போய் எப்போது வாழத் தொடங்குவதென்ற தவனம் ஏற்படுவதில்லையா உனக்கு?’ தலையிட்டான் உக்கு.

‘எப்போதாவது நான் அரநாயக்க போவேன். ஏனெனில் அது எனது மண். அந்த வாழ்வுதான் இன்னும் என் கனவு. ஆனாலும் இங்குகூட என்னால் வாழ்ந்துவிட முடியும். அது இந்த மக்களின் வாழ்வியலைப் புரிவதோடு சேர்ந்திருக்கிறது.’
சரத் முனசிங்க மறுநாள் காலையிலேயே கிளம்பிப் போனான். பிறகு உக்குவும் குசுமவதியும் நேரத்தைக் கடத்த பலதும் பேசினர்.

உக்கு ஓரளவு பதட்டம் தெளிந்திருந்த நிலையிலும், சரத் முனசிங்க கொஞ்சம் தன் நிலைமைபற்றிய அவ்வப்போதான யோசனையோடும் இருந்ததை அவள் அப்போது  நினைவுகொண்டு சொன்னாள்.

தானும் அதை அவதானித்ததாக உக்குவும் பதிலுரைத்தான்.

புறப்படுகிறபோது, மழை வருமோ தெரியவில்லையென்று  முனங்கினான் உக்கு. வந்தால் அவனுக்கு பயணம் சிரமமாயிருக்கலாம். எனினும் அது பெரிய விஷயமுமில்லை.

மதியமான பொழுதில் ஒரு கரிய பாம்புக் கழுத்துள்ள குருவியொன்று எதிரிலிருந்த மரங்களில் வந்து மோதிக்கொண்டு பறந்து அப்பால் போனது.

‘இதென்ன குருவி?’ உக்கு கேட்டான்.

‘தெரியாது. அவ்வப்போது இங்கே கண்டிருக்கிறேன். மழைகாலத்தில் வரும். இது வன்னியின் குருவி. நீ யோசிக்கத் தேவையில்லை. கட்டாயம் இரவுக்குள் மாரி கொட்டும். குருவி சொல்லிப் போனது.’ கூறிவிட்டு சிரித்தாள் குசுமவதி

[தொடரும்]

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 09 September 2020 01:23