தொடர் நாவல்: கலிங்கு (2003 - 11)

Saturday, 11 July 2020 14:05 - தேவகாந்தன் - தேவகாந்தன் பக்கம்
Print

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் பதினொன்று!

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்

மனிதன் தன் மனத்தின் ஒவ்வொரு இண்டு இடுக்கிலும்  இருளையும், ரகசியங்களையும் பொதுக்கி வைத்திருக்கிறான். அதுபோலவே ஒரு நகரமும். வவுனியா நகரும் வெளிச்சத்தால் விலக்க முடியாத இருளையும், ரகசியங்களையும்  கொண்டிருந்தது. அந்த இரவுகளை சாமிக்குத் தெரியும். கடந்த இருபது வருஷ காலத்தின் அந்த இருள், அதற்கு முன்பிருந்த இருள்களைவிட வித்தியாசமானது. அதனுள் பயங்கரங்களும் இருந்திருந்தன. ஒரு வீட்டின் கதவைத் தட்டித் திறந்து, குறியைச் சரியாக இலக்கு வைத்து படபடவென குண்டுகளை இறக்கிவிட்டு, எந்த அவசரமுமின்றிப் போகிற சீருடை மனிதர்கள் அந்த இரவுகளில்தான் உயிர் பெறுகிறார்கள். திறந்த கதவுகளுக்கூடாக குறிவைத்த இரையை இழுத்துப்போய் சப்பித் துப்பிவிட்டு போகிறவர்களும் உலவிவந்த இருள் அதுதான். சீருடைகளுமே பலவிதங்களில் இருந்த விசித்திரமான காலப் பகுதி அது.

ரகசியங்களைக் காவிய மனிதரும், ரகசியங்களைக் கண்டறியும் மனிதர்போல், அங்கே திரிந்தபடி இருந்தனர். அவர்களது அந்த ரகசியங்களில், மிதமாயிருந்த போர் உறுமி எழுவதாயிருந்தது. சமாதானத்தை அதன் புதைகுழிவரை கொண்டுவந்து தள்ளி மூடும் உக்கிரம் கொண்டதாயும் அது காணப்பட்டது. பயணிகளின் இடையறுந்த பயணங்கள் மறுபடி தொடருமென்பதற்கு எந்த உத்தரவாதமும் அப்போது இருந்திருக்கவில்லை. சாமி எல்லாம் கண்டும், அறிந்தும் கொண்டுதான் இருந்தார்.

இரவுகள் அவ்வாறானவையெனில் அதில் கொழும்பு இரவு, கண்டி இரவு, வவுனியா இரவு, மட்டக்கிளப்பு இரவு, யாழ்ப்பாண இரவென என்ன பிரிவினை இருக்கமுடியும்?

கொழும்பிலிருந்து அனுராதபுரம் புறப்பட்ட இரவு ரயிலில் சாமி ஏறியது அக் காரணம் சுட்டியே நிகழ்ந்தது.
அப்போதுதான் சிங்கள தமிழ் கலைஞர் எழுத்தாளர் ஒன்றுகூடல் விழாவில் பார்த்திருந்த அந்த சிங்கள ஆணையும் பெண்ணையும் சாமி கண்டார். வவுனியாவிலிருந்து அந்த ஒன்றுகூடல் விழாவிற்கு வந்து திரும்புகிற சிங்களவர்,  வேறு சிங்களவர்களிலிருந்து தம்மை பிறிதாய் அவருக்கு இனம்காட்டியிருந்தார்கள். அவர்கள்மேல் அவருக்கு மதிப்பு வந்தது. வவுனியா பஸ்நிலையத்தில் தேநீர்க் கடையில் ரீ அருந்திக்கொண்டு இருந்தபோது, அவர்களோடு இணைந்துகொண்ட அந்த இன்னொரு மனிதரும் சிங்களராகவே இருக்கவேண்டுமென சாமி எண்ணினார். அவரையும் சாமி விழா மண்டபத்தில் கண்டிருந்தார். அவர்கள் ஒரு அணிக்குள் திட்டமாய் இணைக்காமலே அமைவுபெற்று வந்தவர்களாய் அவருக்குத் தோன்றியது. அவர்களில் ஒருவர் அல்லது இருவர் அல்லது மூவருமேகூட வவுனியா நகரில் குடியிருப்பவர்களென அவர் அனுமானித்தார். அடுத்தடுத்த முறைகளில் முடியுமாயிருந்தால் அவர்களைப்பற்றி இன்னும் அறிந்துகொள்ளவேண்டுமென அவர் எண்ணங்கொண்டார். ஒரு பழக்கத்தையும் ஏற்படுத்த அவருக்குள் விருப்பமிருந்தது.

செயற்பாட்டாளர்களாக இல்லாமலிருந்தாலும் ஒரே பாதையில் பயணிக்கிறவர்களோடு நினைவிலேனும் கொள்ளக்கூடிய சங்காத்தம்  உற்சாகத்தைத் தருகிறது. சுகமாகவும் இருக்கிறது. அதுவே நல்லதுகளின் ஐக்கியத்திலுள்ள அறுதியான பயன். நலமடைவதற்கான கூட்டுப் பிரார்த்தனைபோல் அது உள்ளது.

சாமிக்கு தூக்கம் வருகிறமாதிரி இருக்கவில்லை.

பேப்பர் இதழ்களை நிலத்துக்கு விரித்து, பையை தலைக்கு வைத்துக்கொண்டு, எந்தநேரத்திலும் தன்னை நெருங்கிவரக்கூடிய சப்பாத்துக் காலடிகளை எதிர்பார்த்தபடி அவர் விடியும்வரை நேரத்தைக் கடத்த ஒரு நினைவுச் சுருளையெடுத்து விரித்தார். தமக்கே அச்சம் தரும்படியான சில நினைவுகளும் மனிதரிடத்தில் இருக்கச் செய்கின்றன. அவரது நினைவின் கரத்தில் அப்போது அகப்பட்ட சுருள் அவர் அச்சம் படும்படியானதாக இருந்தது. அவர் எவருக்கும்போல தனக்கும் மறைத்திருந்த நினைவுச் சுருள் அது. மனத்தின் ரத்தம் சொட்டச் சொட்ட அதை இழுத்தெடுத்து விரித்துப் பார்க்கிற நோக்கமேதும் எப்போதும் அவரிடத்தில் இருந்திருக்கவில்லை. ஆனாலும் அதுவாகவே அவரது கையில் தன்னை ஒப்புவித்ததுபோல்  வந்து சேர்ந்திருந்தது. நிகழ்ந்தபோது தவிர பின் எப்போதும் அவர் நினைத்துப் பார்த்திராத அச் சம்பவம், அவரை மறுபடி சீணித்துப்போக வைக்கவும்கூடும். ஆனாலும் அது நடந்த நேரத்தில்போல் அப்போது அவரைச் சிதறவைத்துவிடாது. அவர் அதை இறுதியாகவென்றாலும் ஒருமுறை எண்ணிப்பார்க்க வேண்டும்.


ஓமந்தை ராணுவ பரிசோதனை நிலையம்வரை செல்லும் பஸ் புறப்பட இன்னும் நிறைய நேரம் இருந்தது. அங்கிருந்து மனித சூன்ய பிரதேசத்தை நடையில் கடந்து, புலிகளின் பரிசோதனை நிலையம் தாண்டி மறுபடி பஸ்ஸெடுத்து கிளிநொச்சி அடைவதுமென அவரது பயணம் இனி சிக்கலானது. அதுவரை அவருக்கு நிறைந்த ஓய்வு தேவை. அந்தநேரத்தை அவர் தன் காலங்களில் சஞ்சரிக்க முடிவுசெய்தார்.

1977க்குப் பின்னான காலம் அது.

மாளிகைக் கணக்கான தன் வீட்டில் ஒற்றையாய் இருந்துகொண்டிருக்கிறார், அரசாங்கப் பதவி வகித்த காலத்தில் கே.பி.எம்.முதலியென அறியப்பட்டிருந்த கந்தப்பிள்ளை பரமேஸ்வர மாப்பாண முதலி.

தனிமையின் இழைகள் அறைகளுள், கூடங்களுள், சமையலறைகளுள் இருந்து  விரிந்து எழுந்துகொண்டிருந்தன. அவரது சுவாசத்தையும் இறுக்குமளவு திணிந்த காற்றுப்போல் அவை இருந்திருந்தன. அவரே சமைத்தார். அவரே வீடு பெருக்கினார். அவரே முற்றம் கூட்டினார். வடித்த கஞ்சியையும் அருந்தினார். அது பணத்தை மிச்சப்படுத்தியதோ என்னவோ, நேரத்தை அவருக்கு சோவிட்டுத் தந்தது.

பெரியம்மா திரவியநாயகியின் வீடு எதிர்ப்புறத்தில் தள்ளியிருந்தது. பழைய காலத்து சுண்ணாம்பும் சீமெந்தும் கொண்டு கட்டிய வீடு. அவள் கணவன் காலமாகும்போது அவளுக்கு இருபது வயது. குழந்தைகளில்லை. கோயில் கோயிலென்று இளமையைக் கழித்துவிட்டு, திருவாசகமும் கையுமாக முதுமையை வாழ்ந்துகொண்டிருந்தாள்.

அதற்கும் சிறிது அப்பால் சின்னம்மா மங்களேஸ்வரியின் வீடு. சின்னம்மா மங்களேஸ்வரி, பெரியம்மா திரவியநாயகியின் உடன்பிறந்த தங்கையல்ல. தங்கையாகிற ஒரு சொந்தம். எனில் அக்காவெனில் அக்காதானே? சனி நீராட ஆண் அந்த வீட்டிலும் ஒருவர் இருக்கவில்லை.

மங்களேஸ்வரியுடன் கூடவிருந்த அவள் மகள் சகுந்தலை மூன்று வருஷங்களுக்கு முன்னர்தான் கணவனைப் பறிகொடுத்தவளாயிருந்தாள். சொத்து விஷயத்தில்  மச்சான்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கைமோசக் கொலையானவன். மங்களத்துக்கிருந்த ஆறு பிள்ளைகளில் கடைசிப் பிள்ளையாயும், ஒரே பெண்பிள்ளையாயும் இருந்தவள் அவள். அவளுக்கு நான்கு வயதிலும் ஐந்து வயதிலுமாய் இரண்டு குழந்தைகள் இருந்தன.

மற்ற உறவுகளும் அயலிலேயே இருந்தன. கே.பி.எம்.முதலி ஊரிலே நிரந்தரமாகத் தங்க வரும்வரை வீட்டையும், நிலபுலன்களையும் பராமரித்து வந்த மாமா இருந்ததும் கூப்பிடு தூரத்திலேயாகும்.

திரவியம் வீட்டிலே வேலைசெய்தவள் தனபாக்கியம். பண்டாரக் குடும்பத்துப் பெண். பனிக்குளத்திலிருந்து உறவினர் யாரோ தொட்டாட்டு வேலைக்கு ஆள் தேவையென்று கேள்விப்பட்டு அங்கே கொண்டுவந்து விட்டுப்போனார். வீடு போவதானாலும், திரும்ப வேலைக்கு வருவதானாலும் போஸ்ற் கார்ட் எழுதிப்போட்டு ஆள்வந்துதான் அவளைக் கூட்டிப்போய், கூட்டிவரவேண்டி இருந்தது. திசை தெரியாதவள். அயலும் தெரியாமல் வளர்ந்தவள்.

வேலையைவிட்டு வீடு வந்த பிறகு மிகவும் விரக்தியாகிப் போனது கே.பி.எம்.முதலிக்கு. குடியைத் தவிர வேறு பொழுதுபோக்கு அறியாதவராய் ஆகினார். அங்கேயிருந்த ஒரு  மேசையளவான குறுண்டிக் றேடியோவில் செய்தி கேட்பதில் எவ்வளவு நேரத்தை ஒருவர் கழித்துவிட முடியும்? அதற்கு மேல் வேறு நிகழ்ச்சிகளைக் கேட்பதற்கு அதன் தனியான மின்கலத்துக்கு தாங்குதிறன் இருக்காது. பற்றி வாங்கி களைத்தவர் அவரது தந்தை கந்தப்பிள்ளை மாப்பாண முதலியார்.

சாராயம் வாங்குவதானால் யாழ்ப்பாண ரவுணுக்குப் போகவேண்டும். அது நடையும், பஸ் பயணமுமாய் பெரும் பிரயத்தனத்தில் நடத்தவேண்டியது. அப்போதும் இரண்டு போத்தல்களுக்கு மேல் எடுத்து வந்துவிட முடியாது. அதனால் அவர் கள்ளை தஞ்சமடைந்தார். அது ஊரிலே எந்தநேரமும் கிடைக்கக்கூடியதாக இருந்தது. மலிவாகவும், விலைக்குக் கூடுதலான தரமாகவும் இருந்தது. பனங்கள், தென்னங்கள்ளென எதுவும் ஒத்துப்போனது அவருக்கு.

அல்வாயில் வந்து குடியேறிய அந்த முதல் மாப்பாணர் சொத்து போலவேதான் மானம், மரியாதைகளையும் சேர்த்து கட்டாக வைத்துவிட்டுப் போனார். பின்னால் அவரது மகன் அதற்கு குந்தகமாய் எது வினையும் புரிந்திருக்கவில்லை. அந்த நிமிஷம்வரை கே.பி.எம்.முதலியும் ஏறுமாறாய் எதுவும் நடக்கவில்லை. அவர் தூர சிங்கள தேசத்தில் ஏது செய்திருந்தாலும் அது அங்கே எட்டிவரவில்லை.

அந்த வயதுவரை அவர் கல்யாணம் செய்யாததில் உறவினர் சிலர் புறணிவிட்டுக்கொண்டு திரிந்தனர். ‘அவங்களுக்கு தங்கட வீட்டுப் பொம்பிளயளில நம்பிக்கையில்ல. அதுதான்…!’ என்று கே.பி.எம். முதலி கோப்பிறேஷன்களிலே அவர்களின் புறணிகளுக்கு பதிலடி கொடுத்தார். ‘அக்கறையிருக்கிற சொந்தக்காறன் புறணிவிட்டுக்கொண்டு திரியமாட்டான். கலியாணம் செய்துவைக்கப் பாப்பான். அதைச் செய்யாமல்…? அதுக்கு எனக்கு இந்த ஜென்மத்தில பலனில்லையெண்டுதான விட்டிட்டு இருக்கிறன். முடிய முடியத் தொடர்ற ஏழரைச் சனி. நான் கலியாணம் செய்த அடுத்த நாள் பொம்பிளைக்கு செத்தவீடு கொண்டாடவேணுமெண்டா, ஆர் எனக்குப் பொம்பிள தருவான்? அப்பிடித் தந்தாலும் ஏன் நான் அவளைச் சாகடிக்கவேணும்?’ நிலத்தினதும் வீட்டினதும் பயனுரித்து கைவிட்டுப் போனதில் மாமனுக்கு உள்ளுள்ளாக ஒரு சினம் இருந்துகொண்டிருந்தது. கறுத்த இரண்டு பெட்டைகளை வைத்துக்கொண்டு அவர்களது கல்யாணத்துக்குச் சொத்துச் சேர்க்க எண்ணியிருந்தவர் அவர். அதனால் வெளிப்படையாக வேறு காரணத்தில் அந்தக் கோபம் அவரில் வெடித்துக்கொண்டிருந்தது. சிலர் எட்டியே நின்றார்கள். வெட்டிக்கொள்ள முன்வரவில்லை. தங்கள் சொத்தையே அழிப்பதுபோன்று அவரது குடியிலும், விறுதாச் செலவிலும் வேறசில சொந்தங்களும் வெறுப்போடு வெஞ்சினத்தையும் அவர்மீது காட்டிக்கொண்டிருந்தன.

அவ்வாறு குடித்தனமற்று குடிமட்டும்  கொண்டவராக கே.பி.எம்.முதலி இருக்க, காலம் நகர்ந்துகொண்டிருந்தது. பெரியம்மா திரவியம்  பகலில் படுத்திருப்பது விறாந்தையிலிருந்த அந்த வேப்பமர வாங்காகவே இருந்தது. இரவிலும் சிலவேளை அதிலேயே படுத்தாள். அது தன் வாத உடம்புக்கு மிகுந்த இதமாக இருப்பதாக அவளே கே.பி.எம்.முதலியிடமும், வேறு சிலபேரிடமும் சொல்லியிருக்கிறாள். மாரியில்கூட அவளை உள்ளே படுக்கவைக்க தெண்டிக்கவேண்டியிருக்கும். உள்ளே படுக்க மூச்சடைப்பதுபோல் அந்தரமாயிருக்கிறதென்று அவள் சம்மதிப்பதில்லை.

தினசரி மாலையில் வேவிலந்தை பிள்ளையார் கோவிலுக்கு போவது அவளது பழக்கமாயிருந்தது. பின்னால் அது ஒவ்வொரு வெள்ளியுமென்று ஆனது. அதுவும் நின்றுபோன காலமாயிருந்தது கே.பி.எம்.முதலி வேலையைவிட்டு நிரந்தரமாய் ஊர் வந்த பின்னால்.

வீடு வளவு கூட்டுவது, பெரியம்மாவின் துணிகளைத் தோய்ப்பது, சோறும் ஒரு கறியும் வைத்து, அப்பளம் மிளகாய் வடகம் பொரித்து  அவளுக்கு சாப்பாடு தயாரிப்பது தவிர வேறு வேலை இல்லாமலிருந்தது தனபாக்கியத்துக்கு.

ஓரளவு சிவப்பென்று சொல்லக்கூடிய ஒரு நிறம் அவளது. அழகென்று சொல்ல முடியாவிட்டாலும் பார்க்க மனத்துக்கு ரம்யமளிக்கிறமாதிரித்தான் இருந்தது முகம். ஆதன பாக்கியம் இல்லாத அவளுக்கு பாக்கியமாக தனங்கள் கனத்தததாய் அமைந்திருந்தன.

கே.பி.எம்.முதலிக்கு அந்த அழகு வெகுவாய்ப் பிடித்திருந்தது.

கண் காணாத சிங்கள தேசத்தில் வேலை செய்தபோது அவருக்கு தவனம் சன்னதமிடும் நேரத்தில்  அலையவேண்டி இருக்கவில்லை. அவரை விருந்தாளியாய் அழைத்துப் பரிமாறும் சில இடங்கள் அங்கே இருந்தன. சொந்த ஊரில் வந்து செய்ய ஏதுமற்ற விரக்தியும்,  தமிழ்க் கிராமச் சூழலில் அடக்கப்பட முடியாத் தவனமும் மேலிட அவர் அலைக்கழிந்து திரிந்தார். தனபாக்கியத்தை அணுக அவருக்கு சந்தர்ப்பமே கிடைக்கவில்லை. எந்நேரமும் விறாந்தை வாங்கிலே திருவாசகத்தை விரித்து வைத்துக்கொண்டு உருப்போட்டபடி இருந்தாள் பெரியம்மா. இரவிலோ தனது வாங்குக்கு சமீபமாய் பாய் விரித்து  தனபாக்கியத்தை படுக்க வைத்துவிட்டு பாதி இரவும், அதற்கு மேலேயும், விழித்திருந்தாள் அவள். யாருக்கு யார் காவல்? தனபாக்கியத்தின் நினைவோடு போதையை ஏற்றிக்கொண்டு வருகிற ஒவ்வொரு வேளையிலும் காலடிக்கு பதைத்தெழுந்துவிடும் பெரியம்மா, ‘என்ன பரமா இந்தநேரத்தில…? இன்னும் நீ படுக்கேல்லையே? உன்னால இப்ப என்ர நித்திரை குழம்பியிட்டுது பார். இனி நான் நித்திரை கொண்டமாதிரித்தான். எல்லாத்துக்கும் காலமை வா’ என்று முணுமுணுத்து அவரது எல்லா முனைப்புகளையும் எரித்தாள்.

தனபாக்கியம் தலையைத் திருப்பி அவரது முகத்தை நிர்விகற்பமாய்ப் பார்த்துக்கொண்டு கிடப்பாள்.
ஒருநாள் மரவள்ளிக் கிழங்கு சுட அடுப்பங்கரைக்குப் போன இடத்தில், தனபாக்கியம் ஒத்தாசைக்காக அருகிலே வந்துநின்றாள். அப்போதுதான் தன் ஆச்சரியத்தையும், ஆசையையும் ஒரே வார்த்தையில் அவளுக்குப் புரியவைத்தார் கே.பி.எம்.முதலி. ‘பாக்கியம், உனக்கு எந்தப் பாக்கியமில்லாட்டியும் தனம் ரண்டும் நல்ல பாக்கியமாய் வாய்ச்சிருக்கு.’

அப்போது கைபோட்டுவிடுகிற அத்தனை தாபம் அவரது கண்களில் இருந்திருந்தது.

அதை அவள் தெளிவாய்க் கண்டாள்.

அதற்கு மெல்ல சிரிக்கமட்டும் செய்தாள்.

அவள் கல்யாணமாகாதவளாய் இருந்தாள். கன்னியாயிருப்பாளென்று அவளது தனக் கனதி அவரை நினைக்க விடவில்லை. அவள் இதற்கு முன் வேறு சில இடங்களிலும் வேலைசெய்திருக்கிறாள். ஆனால் அழிந்திருந்தாளென்றும் சொல்லமுடியாதிருந்தாள்.

அதன் பின் தன் இஷ்டத்தை அவள் தகுந்த தருணங்களில் அவருக்கு காட்டத் தவறவில்லை.

பகலிலே மதியச் சாப்பாட்டுக்கு மேலே திரவியம் கொஞ்சம் நித்திரை கொள்வாள். பக்கத்து பள்ளிக்கூடத்தில் பள்ளி விடுவதற்கான இறுதி மணி இறுக்க அடிக்கிற நேரத்தில் கண்விழிப்பாள்.

இரவில் பெரும்பாலும் தூக்கமற்றிருப்பவள் அந்த ஒன்றரை இரண்டு மணி நேரத்தில்தான் ஆழ்ந்த உறக்கம் கொள்ளுவது. தெரிந்துகொண்ட கே.பி.எம்.முதலி ஒருநாள், ‘வாறியே, மாயக்கை குகைமட்டும் போய்வருவம்?’ என்று தனபாக்கியத்தை வினவினார்.

எல்லாம் ஊகித்துக்கொண்டாலும், ‘இப்பவோ? இந்த பட்டப்பகல்லயோ?” என்றாள் அவள்.

‘பெரியம்மா மட்டுமில்லை, சனமெல்லாம்தான் நித்திரை கொள்ளும். வெய்யில் வேற கொளுத்துது. ஒருத்தரும் வெளிய வரமாட்டினம்.’

‘நடவுங்கோ, வாறன்.’

அவர் முன்னதாக நடந்துபோய் மாயக்கையில் காத்திருந்தார்.

அப்போது நாச்சிமார் கோவிலிலே மதியப் பூசை நடந்தது.

சிறிதுநேரத்தில் தனபாக்கியம் வந்தாள். பயத்திலும், ஆசையிலும், வெய்யிலிலும் வேர்த்து விறுவிறுத்திருந்தாள்.
வெளி அமானுஷ்யம் கொண்டிருந்தது.

பூஜை வைத்த ஐயர் இந்நேரம் வீட்டிலிருந்திருப்பார்.

மாயக்கையின் இருண்ட போறைக்குள் தன் தாபம் தணித்தார் கே.பி.எம்.முதலி.

திருப்தியின் எறியம் முகம் முழுக்க படர்ந்திருக்க தனபாக்கியம் இருட்டினுள்ளேயிருந்து வெளியே வந்து தளர்வாய் வீட்டுக்கு நடந்தாள்.

நாட்களாயின. சந்திப்புகள் தொடர்ந்துகொண்டிருந்தன.

தீர்ப்பதில் காமம் அடங்குவதில்லையென அவர் அறிந்திருக்கிறார். அதற்கான அங்குசம் அடக்குவதே என்பதும் அவருக்குத் தெரியும். ஆனாலும் அவர் அடக்காதிருந்தார்.

அடிக்கடி மாயக்கையின் முடிவறியாக் கோறைக்கு அவளைச் சமிக்ஞையில் அழைத்துக்கொண்டே இருந்தார் அவர். ஊரில் சந்தேகமாய் முதலில் விஷயம் உலா வந்தது. பின் நாச்சிமார் கோயில் ஐயர் கண்டதாய்க் கதை எழுந்தது. ‘தடிமாடே, வாடா இஞ்ச!’ என்றழைத்து பெரியம்மா அதுபற்றிக் கேட்டபோது, ‘இதென்ன விசர்க்கதை?’ என்று சொல்லி மழுப்பிவிட்டார் அவர்.

எல்லாம் அறிந்த சின்னம்மா மங்களம், சொத்து பண்டாரத்தியிடம் பறிபோகப் போகிறதென்ற பதற்றத்தில் தன் அப்பனை வீட்டுக்கு அழைத்து பெரியவீட்டினதும், தோட்ட நிலத்தினதும் உரித்துப்பற்றி விசாரித்தாள். அதிலென்ன சந்தேகமிருந்தது? தன் இஷ்ட புத்திரனுக்கு கந்தப்பிள்ளை மாப்பாணர் முழுச் சொத்தையும் எழுதி சாவதற்கு முந்தியே  உறுதி முடித்திருந்தாரே என்றார் அவளின் தந்தை.

அவள் காந்தாரியாய் சிலநாள் கிடந்து செய்வதறியாது கொதித்தாள். தன் கைம்பெண்ணாயிருக்கும் ஒற்றைப் புத்திரியை செல்வந்தியாக்க சூது புனைந்தாள். சரியான சாப்பாடின்றி, சரியான உறக்கமின்றி நாட்களைக் கடத்தினாள். அவள் மதி ஒவ்வொரு திட்டமாயிட்டு, வெளிப்பட்டுவிடும் சாத்தியங்களின் மேல் நிராகரித்துக்கொண்டு இருந்தது. இறுதியாக அவளின் மனத்துக்கு முழு திருப்தியளித்த திட்டம் உருவானது. அது ஏழு அறைகள், இரண்டு கூடங்கள், இரண்டு சமையலறைகள்கொண்ட அந்த மாளிகைக் கணக்கான பெரிய வீட்டை அவளுடைய மகளுக்காக்கும் வல்லபம் கொண்டிருந்ததுதான்.

‘பரமா…!’ காந்தாரி அழைத்தாள் ஒருநாள். ‘நீ உப்பிடி குடிச்சுக் குடிச்சு உடம்பைக் கெடுக்கப்போறாய். சாப்பாட்டயெண்டான்ன நேரத்துக்கு கவனிக்கிறியோ? சமைக்கிறன்… சமைக்கிறனெண்டு சொல்லுறாய், என்ன சமைக்கிறியோ, என்ன சாப்பிடுறியோ?’
‘சமைக்கிறனான், சின்னம்மா.’

‘நீ பகல்ல என்னெண்டான்ன செய். ஆனா ராச் சாப்பாட்டுக்கு இஞ்ச வந்திடு. எந்தநேரமெண்டான்ன வா, சாப்பாடு வைச்சிருப்பன். ராவில சாப்பிடாட்டி ஒரு ஆனைப் பலம் குறைஞ்சுபோயிடும்’ என்று உருகினாள்.

‘சரி, சின்னம்மா.’

இரவில் பிட்டாக, இடியப்பமாக, உறட்டியாக அவருக்கு செய்துவைக்கத் தொடங்கினாள் மங்களேஸ்வரி. நேரம் கட்டுப்பாடாயில்லாத வகையில் கே.பி.எம்.முதலிக்கு அந்த ஏற்பாடு மிக வசதியாகப் போனது.

சகுந்தலை தன் மாறாச் சோகத்தை மறைக்கும் பிரயத்தனம்கூட செய்யாமல் சாப்பாடு எடுத்துவைத்தாள். குடிக்க செம்பிலே தண்ணீர் எடுத்துக்கொடுத்தாள். கை கழுவ வாளியில் நீரெடுத்து ஊற்றி எல்லாம் செய்தாள். மங்களேஸ்வரி, ‘சாப்பிடு, ராசா… இன்னும் கொஞ்சம் எடுத்துவை, சகுந்தலா’ என்று மேலுபசரணை செய்துகொண்டு திரிந்தாள்.

சாப்பிட்டு முடிய வெற்றிலைச் செல்லத்தை எடுத்துவந்தாள் சின்னம்மா. ‘போடுற பழக்கமிருக்கோ?’ என்று கேட்டுச் சிரித்தாள். வேண்டாம், தனக்கு அந்தப் பழக்கம் இல்லையென, அவரை வற்புறுத்தி உட்காரவைத்துக்கொண்டு வெற்றிலையும், சீவலும், பிஞ்சுப் பாக்கும், களிப்பாக்கும், சுண்ணாம்பும், புகையிலையுமாக மாறி மாறி வாய் நிறையப் போட்டு அவள் முதல் துப்பலை வேலியோரம் விழும்படி எட்டித் துப்பியபோது  கால் மணி நேரம் கடந்திருந்தது. சகுந்தலை உள்ளே கதிரையிலிருந்து தூங்கி வழிந்துகொண்டிருந்தாள்.

கே.பி.எம்.முதலி படுக்கப் போவதாகச் சொல்லிக்கொண்டு போக, சகுந்தலையை எழுந்துபோய் தட்டியெழுப்பினாள். ‘என்ன பிள்ளை நீ? எவ்வளவு திட்டம்போட்டு வடிவாய்த்தான சொல்லித் தந்தன். சொன்னதெல்லாத்தையும் மறந்திட்டியே. உனக்காண்டித்தான பிள்ளை இதெல்லாம்’ என அங்கலாய்த்தாள்.

‘என்னண்டம்மா? அண்ணை முறையெல்லே எனக்கு?’

‘பாக்கப்போனா நீ ஒருமுறையும் இல்லை. ஒண்டைவிட்ட சின்னம்மாதான நான். அதுவும் ஒண்டைவிட்ட… ஒண்டைவிட்ட சின்னம்மா. இன்னொரு வழியில பாத்தா, பரமாவுக்கு நீ மச்சாள் முறை வரும்.’

பிறகு, ‘மறந்திடாத. நாளைக்கு கள்ளு இல்லாட்டி சாராயம் வாங்கிவைக்க  சொல்லியிருக்கிறன். அதை எடுத்துக் குடு. பிறகு நீயாய் ஒண்டுஞ்செய்யத் தேவையில்லை. எல்லாம் அதுபாட்டில நடக்கும்’ என்றாள்.

‘சாப்பாட்டுக்கு முந்தியோ பிந்தியோ குடுக்கவேணும்?’

‘இதென்ன மருந்து குடுக்கிற விஷயமே முன்னை பின்னை பாக்க? எப்ப வசதியோ அப்ப குடு.’

‘பிள்ளையள் இடையில எழும்பியிட்டா…?’

‘நான் போய் பக்கத்தில படுப்பன்.’

‘என்னவோ, நீ சொல்லுறாயெண்டு செய்யிறன்.’

‘செய். உன்ர நன்மைக்காண்டித்தான் எல்லாம். இல்லாட்டி அந்தளவு  சொத்தையும் அந்தப் பண்டாரத்தி காவிக்கொண்டு போயிடுவாள், மறந்திடாத.’

ஒரு அமாவாசை விரத நாளில், இரவு கோழி அடிச்சு கறி காய்ச்சியும், சாராயம் வாங்கிவைத்தும் எல்லாம் தயாராயிருந்த நிலையில் கே.பி.எம்.முதலி வந்தார். வரும்போதே நிலம் பார்த்து வந்தார். தலை தொங்கிக்கொண்டு இருந்தது.
மூன்று வருஷங்களுக்கு முன்பு செத்துப்போன தன் கணவனின் ஞாபகத்தை அன்றைக்கு ஒதுக்கி வைத்துக்கொண்டு சிங்காரம் பண்ணியிருந்த சகுந்தலை அவருக்கு சாப்பாடு பரிமாறினாள்.

பொன்ட்ஸ் பவுடரின் வாசம் அவளது மேனியில் கமகமத்தது.

உடல் முதலிக்கு கொதிக்கத் தொடங்கியது.

அவள் கண்டுகொண்டு காணாதவளாயும். கவனமில்லாதவளாயும்  மேனி அவரில் உரச உரச அருகே அமர்ந்திருந்துகொண்டு எடுத்தெடுத்து வைத்தாள். இன்னும் கொஞ்சம்… இன்னும் கொஞ்சமென்று கெஞ்சினாள்.

இருண்டு கிடந்த வாழையடியில் அவர் கைகழுவ நீர் வார்க்கச் சென்ற சமயம், ‘சகுந்தலை…!’ என்று அவளை கிட்ட இழுத்தார் கே.பி.எம்.முதலி.

கணம் தாமதமின்றி ஒட்டிக்கொண்டது அவளது மேனி அவரோடு.

முதலியிடத்தில் அந்த  உறவின் உறுத்தல் இருந்திருந்தது. அது வெகுநேரம் நிலைக்காதபடி சுகத்தின் சாரல்கள் அடித்துக் கலைத்துவிட்டன.

மாதங்கள் சில போயின. கே.பி.எம்.முதலி சகுந்தலாவோடிருந்த ஒருநாள் இரவு.

உறங்கிக்கொண்டிருந்த ஊரையே திடுக்கிட்டு எழும்படி மங்களம் விறாந்தையில் வந்துநின்று கத்தினாள். ‘இப்பிடிச் செய்திட்டியேடா. அன்னமிட்ட வீட்டில கன்னம் வைச்சமாதிரி அவமானம் பண்ணியிட்டியேடா. இனி நானும் என்ர பிள்ளையும் எந்தக் கிணத்தில போய் விழுறது?’

ஒன்றாய்… இரண்டாய்… ஐந்தாய்… பத்தாய் வீட்டு முற்றத்தில் கைலாந்தர்களோடு அயல் குழுமியது.
தலை குனிந்து நின்றிருந்தார் கே.பி.எம்.முதலி.

நடந்ததெல்லாம் அனுமானித்தது அயல். அனுமானத்தை நிஜமென்று சொல்லிக்கொண்டு ஒற்றைப் பாவடையையும் சட்டையுமாய் தலைவிரி கோலத்தில் நின்றிருந்தாள் சகுந்தலை.

சனம் காறித் துப்பியது அவர் முகத்தில். ‘பொம்பிள ஆசை வந்தா கலியாணத்தைச் செய்யிறது. இல்லாட்டி ஒரு சிங்களத்திய இழுத்துக்கொண்டு வந்து வைச்சிருக்கிறது. முறைகெட்டு நடந்திட்டியேடா.’

இரண்டு பேர் இன்னும் பொறுக்கமுடியாது அவரை உருட்டி உருட்டி அடித்து துவைத்தார்கள்.

எல்லாம் கண்டுகொண்டு பாதிக்கப்பட்டவளாய் கதவோரம் நின்றுகொண்டிருந்தாள் சகுந்தலை.

மங்களம் தொடர்ந்து கத்தினாள். ‘அவனை வெளிய போகச் சொல்லுங்கோ. இல்லாட்டி கடிச்சு குதறியிடுவன். போகச் சொல்லுங்கோ… இப்பவே போகச் சொல்லுங்கோ’ என்றவள் அந்த நாடகத்தின் இறுதிக் காட்சிக்கு வந்தாள். ‘கிடக்கிறதெண்டா அங்கயே போய்க் கிடக்கட்டும். ஆனா அப்பிடியே அங்கயே கிடந்திடவேண்டாமெண்டு சொல்லுங்கோ. அது முந்தியே சகுந்தலையின்ர பேரில எழுதிக் குடுத்தாச்சு. எல்லாம் அந்த ஒண்டுந்தெரியாத பிள்ளையை வளைச்செடுக்க போட்ட கூத்து. போடா… போ… போ.’

சின்னம்மாவின் சரம் அவரது நெஞ்சைத் துளைத்துக்கொண்டு பாய்ந்தது.

தன் மாளிகைக் கணக்கான வீட்டின் விறாந்தையில் தும்பும் தூசியுமான நிலத்தில் விழுந்து கிடந்திருந்தபோது கே.பி.எம்.முதலிக்கு அது லேசாக காலைப் பனியின் காட்சிபோல் புலனாயிற்று.

அவள் அப்போது குறுக்குப் பாவாடைக் கட்டோடிருக்கிறாள். பொன்ட்ஸ் வாசம் காற்றில் பறக்கிறது.

அவரைத் துளைத்தெடுத்துவிடுகிற மூர்க்கம் அந்த நெஞ்சுகளுக்கு.

அவர் என்ன, ஏதுவென ஒன்றும் பார்க்கவில்லை.

கொடுத்த பத்திரத்தில் அவள் சொன்னபடி சாட்சிக் கையெழுத்திடுகிறார். சாட்சிக் கையெழுத்து மட்டும். ஆனால் எந்த இடத்தில் இட்டார்?

எல்லாம் முடிந்துவிட்டது.

காதலால் ஜெகதாம்பாளை இழுத்துக்கொண்டு ஓடிவந்து மாடாய் உழைத்து பெரும் சொத்துக் கண்ட கதிர்காமத்தம்பி மாப்பாண முதலியின் கனவை ஒரு சபலத்தில் முற்றாக எரித்துச் சாம்பலாக்கியிருந்தார் அவர்.

திக்கறியா வெறுமையில் நான்கு நாட்கள் கழிந்தன.

பூட்டிய கேற் திறக்கப்படவேயில்லை.

திறந்த கதவுக்குள்ளால் அசைவு உள்ளே தெரியவில்லை.

சோகம் இருளாய் உள்ளே உறைந்திருந்தது.

கொஞ்சம் நடமாடக்கூடிய மாதிரியிருந்த பெரியம்மா திரவியம் அத்தோடு படுத்த படுக்கையானாள்.

ஒருநாள் அதிகாலையில் ஒப்பாரியெழுந்தது அவள் வீட்டிலிருந்து.

திடுக்கிட்டு எழுந்து ஓட முனைந்தார் கே.பி.எம்.முதலி. கால்களிலிருந்த பாரவிலங்கு தடுத்தது. நெஞ்சும் பின்னே நின்று இழுத்துப் பிடித்தது. விடுபட்டு மெல்ல அங்கே செல்ல பெரியம்மா அவளது வாலாய வாங்கிலே நீட்டி நிமிர்த்தி படுக்கவைக்கப்பட்டிருந்தாள். காலடியில் நிலத்திலே  ஒற்றைத் திரிக் குத்துவிளக்கு எரிந்துகொண்டிருந்தது. தலைமாட்டில் கட்டுச் சாம்பிராணிக் குச்சிகள் வாசமாய் எரிந்து பிணத்தின் வாடையை அடித்து விலக்கிக்கொண்டு இருந்தன. தள்ளியிருந்த மேசையில் அவள் தினமும் கண்ணை இடுக்கி இடுக்கி வாசித்த திருவாசகம் ஒரு வாசகமும் தெரியாதபடி மூடி வைக்கப்பட்டிருந்தது.

அதை வாசித்துவிட்டு பெரியம்மா எப்போதும் மூடி வைப்பதேயில்லை என்பது ஞாபகமாயிற்று அவருக்கு. அப்படியே கவிழ்த்து வைப்பாள். எப்ப எடுத்தாலும் விட்ட இடம் தனக்கு  கண்ணுக்கு முன்னால் வந்து நிற்கவேண்டுமென்பாள்.

வீட்டில் நின்ற வெள்ளைப் பூனை அடிக்கடி வந்து அவளைப் பார்த்து கத்திவிட்டு போய்க்கொண்டிருந்தது. அவரையும் அது பார்த்தது. அவரில் வழக்கமாயிருந்த அதன் அச்சம் அப்போது அற நீங்கியிருந்தது. அல்லது தன் துக்கத்தில் அது அந்த அச்சத்தை மறந்திருந்தது.

யார் என்ன சொன்னாலும் பரவாயில்லையென்று விறாந்தையில் பொத்தென அமர்ந்தார். யாரும் ஒன்றும் சொல்லவில்லை. சின்னம்மாகூட. பெரியம்மாவுக்கு கொள்ளிவைக்க அவரைத் தவிர வேறுபேர் இல்லை.

கொள்ளி வைத்த பின் வந்து அங்கேதான் இருந்தார். விறாந்தையிலேயே சாப்பிடுவது அவருக்கு ஞாபகமும் வரவில்லை. தூக்கக் கிறக்கம் கண்களில் மொய்க்கவுமில்லை.

மூன்றாம் நாளில் பாலூற்றி வந்த பின்னால் கூடவிருந்த சுற்றமெல்லாம் கலைந்தது.
தன்னந்தனியனாய் அந்த வீட்டில் அன்றைய இரவைக் கழித்தார்.

நான்காம் நாள் முதுகாலையில் சின்னம்மா வந்து வீட்டைப் பூட்டினாள்.

கடைசியாக… கடைசியாக… ஒருமுறை அவளைப் பார்க்க அவர் தலையை நிமிர்த்தினார்.

சின்னம்மாவும் திரும்பிப் பார்த்தாள்.

அன்றைக்கு கண்டிருந்த கோபத்தின் சிறு கீறுகூட அவளது கண்களில் இருந்திருக்கவில்லை. இன்னும் சிறிது பரிவிரக்கம்கூட இருந்ததாய்ப் பட்டது. அதை உறுதிப்படுத்த அவள் மேலும் அங்கிருக்கவில்லை. அழுதுவிடுவாள்போல அவசரப்பட்டு ஓடினாள்.
தனபாக்கியம் அங்கே இல்லை. செத்தவீட்டிலன்று சிணுங்கிக்கொண்டு தலைமாட்டில் நின்றது கண்டது மட்டும்தான்.

யாருமில்லை. யாருக்கும் அவரில்லைப்போல, அவருக்கும் யாருமில்லையென்று ஆகியிருந்தது.

[தொடரும்]

baladevakanthan@g

Last Updated on Wednesday, 09 September 2020 01:23