தொடர் நாவல்: கலிங்கு (2003 - 10)

Saturday, 11 July 2020 14:03 - தேவகாந்தன் - தேவகாந்தன் பக்கம்
Print

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் பத்து!

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்

ஆறரை மணிக்கு அவர்களுக்கு அனுராதபுரம் செல்ல கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து ரயில் இருந்தது. பன்னிரண்டு மணியளவில் போய்ச் சேர்ந்துவிடும். அந்த நேரத்துக்கு அங்கிருந்து வவுனியாவுக்கு பஸ் இருக்கிறது. எப்படியும் அதிகாலை நான்கு மணிக்குள் வவுனியா போய்ச் சேர்ந்துவிடலாம். அவர்கள் அவசரமாக சாப்பாட்டை முடித்துக்கொண்டு ரயில் நிலையத்தை அடைந்தனர்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு கொஞ்சக் காலமே ஆகியிருந்தும் யுத்த காலத்தைவிட அது அழகாகவே இருந்தது. அதன் அழகு மக்களின் மனத்திலிருந்து ஊற்றெடுக்கிறது. அவதியும் அச்சமும் பெருமளவு இல்லாத அக்காலத்தின் அழகு அவர்களது மனங்களின் அமைதியில் பதிந்திருந்தது.

பயணத்தில் எவ்வளவோ செய்திகளைச் சொல்லவும் கேட்கவும் வேண்டியிருந்தும், மௌனமாயே பெரும்பாலும் வந்துகொண்டிருந்தாள் குசுமவதி. அவளது நினைவுகள் செறிந்த முகத்தைக் கண்டு அதற்கு இடைஞ்சல் செய்யாதபடி அருகே இருந்துகொண்டிருந்தான் உக்கு.

ஊரைவிட்டு ஓட நேர்ந்தது அவளின் துர்பாக்கியம். வளர்ந்து வேலைக்குச் செல்லும் அவசியம் ஏற்படும்வரை, அடுத்த ஊர் மண்ணை அறியாதிருந்தவள் குசுமவதி. அவளுக்கு ஊரே எல்லாமாக இருந்தது. சோலையாய், நதியாய், மலையாய், குளமாய், பறவையாய் எதனையும் அது கொண்டிருந்தது. அவளுக்குக் காதலைக் கிளர்த்தியதிலும் அதற்கு பெரும் பங்குண்டு. அது இல்லாவிட்டால் அந்தக் காதல் கனிய இன்னும் நாளெடுத்திருக்கலாம். அது இல்லாவிட்டால் யயானி எட்டு மாதத்தில் பிறந்த பிள்ளையென ஊர் மக்கள் அதிசயப்படாமலும் இருந்திருக்கக்கூடும்.

அந்த ஊரைவிட்டுத்தான் அவளுக்கு ஓடநேர்ந்தது. அவள் அவ்வாறு ஓடமாட்டாளென நினைத்துத்தான் செனவிரத்ன அந்த வளையத்தைப் போட்டான். அது பயம் என்பதாக இருந்தது. அது வார்த்தைகளில் விளைக்கப்பட்டிருந்தது. வார்த்தையேயெனினும் பௌதீகார்த்தமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து தப்பவே அவள் தன் சொந்த ஊர்விட்டு ஓடினாள்.

அவளது கண்கள் அவ்வப்போது கலங்கி வந்தன. துக்கத்தை அடக்கப்போல் உதடுகள் சுழிந்து, நெளிந்து, இறுகி... அவஸ்தை பட்டுக்கொண்டிருந்தாள்.

நினைவுகள் திமிறியெழுந்து பயங்கரத்தின் வளையம் வீசப்பட்ட அந்தக் காலத்தை நினைத்தாள் குசுமவதி.
1988க்கு முன்னரே செனவிரத்னவுக்கும் அவளது கணவன் பந்துலவுக்கும் முறுகல் நிலை இருந்தது அவளுக்குத் தெரியும். ஜனதா விமுக்தி பெரமுனவின் கொழும்புக் கூட்டத்தில் நடந்த வாக்குவாதத்திலிருந்து அது அதிகரித்திருக்கவேண்டும். கூட்டத்துக்கு போய்வந்த பந்துல, செனவிரத்னவின் தலையீட்டையும், அதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தையும் அவளிடம் சொல்லியிருந்தான்.

உயர்ந்த ஒரு லட்சியத்தைநோக்கிப் பயணித்துக்கொண்டு இருந்தவனுக்கு மேல், உடனடியாகக் கிளர்ந்தெழுந்த உந்துதலில் புரட்சியின் ஆதரவாளனாகியவன் நடத்தும் யுத்தமென்பது, ஒரு சூதில் நிகழ்த்தப்படுகிறது. அது ஒரு துரோகத்திலோ, காட்டிக்கொடுப்பிலோதான் முடிய எப்போதும் சாத்தியம் கொண்டிருக்கிறது. எழுபத்தோராமாண்டு முதலாவது கிளர்ச்சியின் காலகட்டத்தைத் தொடர்ந்து, சுமார் பதினாறு பதினேழு ஆண்டுகள் பந்துல காணாமல் போயிருந்தவன். மறுபடி அவன் வெளியே பிரசன்னமான சிறிதுகாலத்தில் இரண்டாம் கிளர்ச்சி துவங்கியது. அப்போது பந்துலவும் குசுமவதியும் திருமணம் முடித்திருந்தார்கள். ஒரு குழந்தைகூட இருந்தது. இயக்கத்தின் தலைவனான ரோகண விஜேவீரவே பொலிஸ் ராணுவ உயர்மட்டக் குழுவொன்றினால் படுகொலை செய்யப்பட்டிருந்தான். அவ்வாறான நிலையிலும் பந்துல அந்தக் கிளர்ச்சியில் உயிர்தப்பினான்.

அவன் அரசியலைப் பொறுத்தவரை ஒரு மீனைப்போலிருந்தான். அதிலிருந்து வெளியே தூக்கிப்போட்டால் வாழமுடியாதவனாயிருந்தான். இருந்தாலும் இரண்டாயிரத்தை ஒட்டிய அந்த கெடுபிடிக் காலகட்டத்தின் முன்பாக அவனை அரசியலிலிருந்து சிறிது ஒதுங்கியிருக்கவும், அடையாளமற்றுத் திரியவும் குசுமவதி செய்திருந்தாள்.

பந்துல மறைந்திருந்த காலத்தில் அடிக்கடி அவள் முன் தோன்றிய செனவிரத்ன, தன் காமத்துக்கு அவள் வேண்டுமென்பது போன்ற வார்த்தைகளை அவள் காதுபட பேசிக்கொண்டு ஒரு இம்சையாய் இருந்துவந்தான். பந்துலவைவிட, பந்துலமீது குசுமவதி கொண்டிருந்த காதலையே அவன் வெறுப்பவனாய்த் தெரிந்தான். அது தனக்கு வேண்டுமென்பதுபோன்ற உக்கிரத்தில் திரிந்தான். அதை யாரிடத்தில் விட்டுவைத்தாலும் பந்துலவிடத்தில் இல்லையென்பதுபோல் அவனது நடத்தைகள் இருந்தன. பந்துலவினுடையவளாய் இருந்தபடியாலேயே அவளை அவன் தனக்குத் தேவையானானென்று பட்டது. ஜனதா விமுக்தி பெரமுனவினரை தேடும் வேட்டையில் ஒருமுறை அவள் கண்ணெதிரிலேயே ஒருவனை துரத்திவந்து பொலிஸ் சுட்டுக்கொன்றது. இந்திய அமைதிப் படையின் மேல் நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு ஜனதா விமுக்தி பெரமுன காரணமென நிலவிய ஊர்ஜிதமில்லாத தகவலில் அந்த நரவேட்டை தொடங்கியிருந்தது. எங்கும் பெரும் கெடுபிடியாகவிருந்தது. பந்துல கொழும்பில் நிற்பதாய் வெளியில் சொல்லிக்கொண்டு குசுமவதி அவனைக் கொண்டுபோய் பின்னவல யானைக் காப்பகத்தோரமுள்ள மலைக் காட்டுக்குள்ளே ஒழித்துவைத்தாள். அவனைப் பார்க்க கிளரும் தவிப்புக்களை அடக்கிக்கொண்டு நாட்களைக் கடத்தினாள்.

ஒருநாள் நள்ளிரவு தாண்டிய ஒருபொழுதில், பந்துல மறைந்திருந்த பின்னவல கிராமத்தின் எல்லையிலுள்ள அந்த மலைக்காட்டுப் பிரதேசத்திலிருந்து துவக்குவெடிச் சத்தங்கள் கேட்டன. திடுக்கிட்டு எழுந்தவள் மறுபடி படுக்கச் செல்லாமல் முற்றத்தில் நடந்தபடி நேரத்தை பதற்றத்தில் கழித்துக்கொண்டிருந்தாள்.

முதல் கீறு வெளிச்சத்தில் குசுமவதி அங்கே தன் அடையாளத்தை மூடிக்கொண்டு ஓடினாள். அக்கம் பக்கத்திலுள்ளவர் சிலர் அந்த அதிகாலையிலேயே அங்கே கூடியிருந்தனர். பொலிஸ் ஜீப்பொன்று நின்றுகொண்டிருந்தது. ஏழெட்டு பொலிஸாரும். அவர்களுடன் ஒரு வன்மச் சிரிப்புடன் செனவிரத்ன நின்றுகொண்டிருந்தான்.

கூட்டத்தை விலக்கிக்கொண்டு குசுமவதி முன்னே சென்றாள். எல்லோரது பார்வையும் குவிந்திருந்த இடத்தில் அவளுடைய பந்துல பிணமாகக் கிடந்தான். ஒரு மலைபோல் சாய்ந்திருந்தான். அவனிலிருந்து வழிந்த குருதி அருகெங்கும் நிலத்தில் உறைந்திருந்தது. சட்டையில் ஊறிக் காய்ந்திருந்தது.

குசுமவதிக்கு மூச்சை அடைத்துவந்தது. அவள் அலறினாள். நிலத்தில் விழுந்து துடித்தாள். சிறிதுநேரத்தில் மயக்கமானாள். பந்துல தவறான முடிவுகளுக்குள் இயக்க நிலை காரணமாய்ச் செல்லவேண்டி இருந்ததே தவிர, அவன் மார்க்சிய சித்தாந்தத்தை சரியாக அறிந்திருந்தானென்று அவளுக்குத் தெரியும். அவன் அவளது கணவன் மட்டுமில்லை, அவளின் ஆசானும். ஆரம்பத்தில் வற்புறுத்தியே அவளைக் கற்கவைத்தான் பந்துல. அவளது பத்தாண்டு வளர்ச்சியின்  விடாப்பிடியான விவாதத்தில்தான், அவனை அரசியல் நடவடிக்கைகளிலிருந்து சிறிது ஒதுங்கியிருக்கச் செய்ய அவளால் முடிந்திருந்தது. ஆயினும் அவனது முந்தைய நடவடிக்கைகளின் மேல் தகவல் எடுத்து, அவனது இருப்பிடத்தை வேவுபார்த்து, இரவோடிரவாக முற்றுகையிட்டு  பொலிஸ் அவனை சுட்டுக் கொன்றிருக்கிறது.

துக்கத்தைக் கட்டிவைத்தாள். அவளுக்கில்லாவிட்டாலும் அவளது பெண்குழந்தைகளின் வாழ்க்கை இருக்கிறது இன்னும். பள்ளி விஷயமாக ஒருநாள் அவளுக்கு கேகாலை போகவேண்டியிருந்தது. மலையிலிருந்து இறங்கி அடிவாரப் பாதையில் வந்துகொண்டிருந்தாள். அது கண்ட செனவிரத்ன விறாந்தையிலிருந்த தன் மனைவியை உள்ளே போகச் சொல்லிவிட்டு, குசுமவதியை நேர்முன்னாய் வந்து மறித்தான். அவசரமாக வந்துகொண்டிருந்தவள் அவனது குறுக்கீட்டில் திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

“பந்துல பெரமுனவில் எதுவுமே இல்லை, குசுமவதி. ஆனால் அவனுக்கு பெரிய வாயிருந்தது. அதனால்தான் அவன் அந்தமாதிரி சாகநேர்ந்தது. நல்லவேளை, ரோகண விஜேவீரபோல் சாகவில்லையென நினைத்து சந்தோஷப்படு. அந்த திருப்தியோடு அவனது நினைப்பினை நீ அழித்துவிடவேண்டும். மனத்தில் அவன் நினைப்பில்லாதவளாய் எனக்கு நீ வேணும். அப்படியில்லையென்று முரண்டு பிடிப்பாயானால் நான் வில்லங்கமாய் ஒன்றும் உன்னைச் செய்யப்போவதில்லை. உனக்கு இரண்டு பெண்பிள்ளைகள் இருக்கின்றன. மூத்தவளுக்கு பன்னிரண்டு வயதிருக்கும், இல்லையா? பெரியவளாக அதிக காலம் செல்லாதென நினைக்கிறேன். அதுவரை நான் காத்திருப்பேன், குசுமவதி.” சொல்லிவிட்டு அவன் சத்தமாய்ச் சிரித்தான்.

“சீ… போ அங்கால.”

அவ்வளவுதான் சொன்னாள். சொல்லிவிட்டு அப்பால் நடந்தாள்.

வீட்டிலிருக்கையில் சதா அதுவே நினைவாக வந்துகொண்டிருந்தது. ‘மூத்தவள் பெரியவளாக அதிக காலம் செல்லாது. அதுவரை நான் காத்திருப்பேன்.’ அது அவனது எச்சரிக்கை. படுக்கையிலும் கூச்சலிட்டு துள்ளியெழும்படி செய்த பயங்கரமான எச்சரிக்கை.

செனவிரத்னவின் பேச்சிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாகியிருந்தன அவளுக்கு. ஒன்று, அவளை நிர்க்கதியாக்கியதில் நேரடியாக செனவிரத்னவுக்கு பங்கிருக்கிறது. இரண்டு, அவள் அவனது இச்சைக்கு இணங்காதுபோனால் அவளது மூத்தபெண்ணை அவன் குறிவைத்துக் காத்திருப்பான்.

அவற்றிற்கெல்லாம் ஒரே வழி, அவள் அரநாயக்கவைவிட்டு ஓடிவிடுவதுதான். வடக்கே… இன்னும் வடக்கேயாக... போர் அடித்துத் தின்னும் மனிதர்களின் ஊர் ஓரத்துக்கு. அங்கு பெரும்பாலும் அவனது காமக் கரம் நீள வழியிருக்காது. அங்கும் அவனது அச்சம் தொடர்ந்தால் போர் நிலத்தின் மத்திக்கு அவள் ஓடுவாள். வேற்று இன மக்கள் மத்தியில் வாழ சிலவேளை இடமும் பாதுகாப்பும்கூட கிடைக்கக்கூடும்.

அவளது தெரிவின் ஆகக்கூடுதலான எல்லை வவுனியாவாக இருந்தது.

அனுராதபுரம் ரயில்நிலையத்தில் இறங்கி அவசரமாக பஸ்நிலையம் சேர்ந்தபோது, வவுனியா செல்லும் பஸ் புறப்படத் தயாராக நின்றுகொண்டிருந்தது.

பஸ் புறப்பட்டு சீரான வேகத்தில் செல்லத் துவங்கியதும், நினைவுகளின் புரள்விலிருந்த குசுமவதியை உக்கு உசுப்பினான். “ பின்னால் கடைசி வரிசையில் ஜன்னலோடு அமர்ந்திருக்கிற அந்த மனிதரை நான் விழா மண்டபத்திலும் கண்டிருந்தேன். உடனடியாகத் திரும்பிப் பார்க்காதே. நீல அரைக்கைச் சட்டை போட்டிருக்கிறார். எங்களைப் பின்தொடர்ந்து வருபவராகத்தான் தெரிகிறது.”

குசுமவதி நிதானமாக திரும்பிப்பார்த்தாள். அவரை எங்கேனும் முன்பு கண்டதாய் அவளுக்கு ஞாபகமில்லாதிருந்தது. ஆனாலும் கவனமாக இருக்கவேண்டுமென எண்ணிக்கொண்டாள். “நீ தேடப்படுபவனாக இருப்பதால் அப்படி உனக்குத் தென்பட்டதோ, என்னவோ? என்றாலும் நாம் அவதானமாகவே இருப்போம்.”

வவுனியா பஸ் நிலையத்தில் இறங்கியபோது இரவு இரண்டரை மணியைத் தாண்டியிருந்தது. நகரம் உறங்கப் போயிருந்தது. மிச்சம் மீதியாய் இருந்தவர்கள் அவசரமாய் உறங்கப் பறந்துகொண்டிருந்தார்கள். உறக்கம் என்பது என்ன? ஒரு பாதுகாப்புக்குள் ஒடுங்குவது என்பதுதானே?

ஜனசந்தடி அறுந்த நிலையத்தில் பஸ்கள்  சில மறுநாள் காலைக்காய் தவம் செய்துகொண்டிருந்தன. அப்போதும் தூர ஒரு தேநீர்க் கடை திறந்திருந்தது. அவர்கள் தேநீர் அருந்துவதற்காக கடையை நெருங்கினர்.

பஸ்ஸிலிருந்து அவசரமாக இறங்கிய அந்த மனிதர் அவர்களைத் தேடினார். அவர்கள் பஸ் நிலையத்திலிருந்து வெளியேறுவது கண்டு பின்னால் சென்றார். அவர்கள் தேநீர்க் கடைநோக்கி திரும்புகையில் விரைந்து அவர்களை அணுகினார். “உங்களை நான் பின்தொடர்ந்துகொண்டிருப்பதாக எண்ணியிருப்பீர்கள். உண்மைதான். விழா மண்டபத்தில் கண்டபோது தெரிந்தவர்கள்போல இருந்தது. யோசித்தபோதும் சரியாக யாரென ஞாபகம் வரவில்லை. எனது ஊரவர்கள்தான் என்று நிச்சயமானபோது நீங்கள் ரயிலடியை நோக்கிப் போய்க்கொண்டிருந்தீர்கள். எனக்கும் இந்தப் பகுதிக்கு வரத் தேவையிருந்தது. அதனால் ரயிலில் ஏறிவிட்டேன். அனுராதபுரம் பஸ்ஸில் ஏறும்வரைகூட அடையாளம் காணமுடியாதிருந்தது.  பின்னால்தான்  நீங்கள் யாரென்பதை நிச்சயித்தேன்.”

“அப்படியெதுவித பரிச்சயமும்... எங்களுக்கிடையில் இருந்ததாய்… எனக்கு ஞாபகத்துக்கு வரவில்லை…”

தடுமாறிய உக்குவைநோக்கி அவர் மெல்லச் சிரித்தார். “இதை குசுமவதி சொன்னால்கூட பரவாயில்லை. நீயே எப்படிச் சொல்லமுடியும், உக்கு? நெருக்கம் இல்லாவிட்டாலும் சொந்தம் இருக்கிறதல்லவா?”

இரண்டு பேருமே திகைத்தார்கள். ஊரை மட்டுமில்லை பெயரையும் சொல்கிறார். சொந்தமென்றும் சொல்கிறார். யார் இந்த மர்ம மனிதர்? உக்கு, குசுமவதி இருவர் மனத்திலும் கேள்விகள் உருண்டன.

சிறிதுநேரத்தின் பின், “நான்தான் சரத் … சரத் முனசிங்க” என்றார்.

“சரத்...!”

குசுமவதியின் சூழ்நிலை மறந்த கூவலாய் அது இருந்தது.
“ஹாமதுருவாய்…”

“நான் இப்போது அப்படியில்லை. பிறகு விபரமாய்ச் சொல்கிறேன். உன்னுடைய வீட்டுக்கு என்னையும் அழைப்பாயா, குசுமவதி?”

“சந்தோஷமாய்.”

குசுமவதி ஏதோ எண்ணி தனக்குள்ளாய்ச் சிரித்தாள். பிறகு அதன் காரணத்தை தன் நண்பர்களுக்குச் சொன்னாள். “அப்படியானால் இது இன்னொரு ஒன்றுகூடல். காணாமல் போனவர்களின் ஒன்றுகூடல்.”

அவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் தேநீர்க் கடையிலிருந்து வெளியே வந்த கறுப்புச் சட்டையணிந்த அந்த தாடிக்கார கிழவர் பஸ்ஸெடுக்கும்வரை பஸ்நிலையத்திலேயே காத்திருக்கப்போல் ஓரமாய் ஒதுங்கி கீழே பேப்பரொன்றை விரித்துக்கொண்டு படுத்தார்.

“அச்சமற்ற சுகஜீவி…!” சரத் முணுமுணுத்தார். அதை ஆமோதித்தாள் குசுமவதி. “வீட்டிலேயே போய் தேநீரைக் குடிப்போம். இந்தளவு நேரத்துக்கு மேலே இங்கே நிற்பதும் நல்லதல்ல.”

நடக்கத் தொடங்கிய குசுமவதியை இருவரும் பின்தொடர்ந்தனர்.

வெளிச்சத்துக்கும் இருட்டுக்குமிடையே பெரிய பேதத்தைக் காணமுடியாதிருந்தது சரத்தால். இருட்டுக்குள் போய்க்கொண்டிருக்கையில் பஸ்நிலையத்தைத் திரும்பிப் பார்க்க விளக்குகள் பிரகாசமாய் எரிந்ததாய்ச் சொல்ல முடியாதிருந்தது. விசை குறைந்த காலத்தில் எதுவும் அப்படித்தான் இருக்குமோ? சரத் நடந்தபடி எண்ணினார். தம்மில் மோதுகின்ற தேவதைகளதும் பிசாசுகளதும்  அழைப்புக் குரலை மலைகள் ஒன்றுபோலவே எதிரொலி செய்கின்றன. எதன் வழியில் போவதென்பது அவரவர் தேர்விலிருக்கிறது. தேவதையின் குரல் தர்மத்திலும், பிசாசின் குரல் அதர்மத்திலும் செல்ல வழிகாட்டுகின்றன. அரநாயக்கவின் அந்த மூன்று மலைக் குழந்தைகளும் தேவதையின் குரல் கேட்டு நடந்தவர்களாய் இருந்தார்கள்.

[தொடரும்]

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 09 September 2020 01:23