தொடர் நாவல்: கலிங்கு (2003 - 8)

Monday, 06 July 2020 13:59 -தேவகாந்தன்- தேவகாந்தன் பக்கம்
Print

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் எட்டு!

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்அன்றைக்கும் மரத்திலேறி விழித்தபடியிருக்க எழுதியிருந்த விதியை எண்ணி தனக்குள்ளாய்ச் சிரித்தபடி, சூழலை நோக்கினான் உக்கு பண்டார. குளத்தின் மறுபக்கத்தில் பெண்கள் சிலர் இருளினுள்ளே நீராடிக்கொண்டிருப்பதைத் தெரிந்தான். அவர்களுக்கும் நீளக் கூந்தல் இருக்குமா, அவர்களும் கூந்தலால் மேலை மூடிக்கொண்டுதான் குளிப்பார்களாவென எண்ணமெழுந்தது. மெல்ல மெல்லமாய் அவர்களின் சத்தமும், நீரின் சளசளப்பும் தேய்ந்து ஒடுங்கின. சிறிதுநேரத்தில் குடியிருப்பில் சந்தடி அதிகரித்தது. யார் யாரையோ கூவியழைக்கும் சத்தமும் எழுந்தது. சூள்கள் கொளுத்திய உருவங்கள் அங்கிங்காய் நடந்துகொண்டிருந்தன. அதைப் பார்த்துக்கொண்டிருந்த வேளை, இருளாய் ஓருருவம் அவனைநோக்கி வந்தது. ‘உஸ்’ஸென்ற எச்சரிக்கையொலியோடு, சற்றும் எதிர்பாராதபடி அவனது கையைப்பற்றி இழுத்து தன் பின்னே வரப் பணித்தது. குளத்தில் நீராடக் கண்டிருந்த அதே கறுத்தப் பெண்தான். அவன் அச்சப்பட அல்லது யோசிக்க ஏதுமிருக்கவில்லை. அவளது கண்களிலும் முகத்திலும் அவன்மீதான பரிதாபம் மெல்லியதாய்த் தெரிந்தது. அவன் பையை எடுத்துக்கொண்டு பின்தொடர்ந்தான்.

கூடாரமாய் கிளைகளைப் பரத்தியிருந்த மரங்களின் கீழாக, நிழல் அசைவதுபோன்றும் தெரிந்துவிடாத அவதானத்துடன் அவள் நடந்தாள். பாதங்களை ஒரு பூனைபோல் மெல்ல ஓசையெழாது பதித்தாள். அதுபோலவே அவனும் நடந்தான். தனித்துப்போல் தூரத்திலிருந்த அவளது குடிசைக்குள் நுழைந்ததும் அவள் வாசலிலிருந்த படங்கை இழுத்து வெளியிலிருந்து பார்வை நுழையாத தடுப்பை இட்டாள். அடுப்பின் தணலில் சிவந்து வந்தது குடிசையின் உள்.

பின் மெதுவாக படங்கை விலக்கி வெளியே நோக்கினாள். அவனும் வந்து அவள் பிரித்த இடைவெளியினூடாக அவளது தோளுக்கு மேலாக பூர்ந்து  பார்த்தான். நான்கைந்து சூள்கள் அவன் தங்கியிருந்த மரத்தடியைநோக்கி நகர்ந்துகொண்டிருந்தன. அவள் ஏதோ தெரிந்துதான் தன்னை அங்கு அழைத்து வந்ததாக அவன் திண்ணப்பட்டான். அது என்ன? சூள்களின் வெளிச்சத்தில் குடியிருப்பிலுள்ளவர்கள் தன்னை காணச் சென்றது ஏன்? கேட்க அவளைநோக்கி அவன் திரும்பினான்.

அவனை இருக்க சைகையில் பணித்தாள் அவள். அவன் மண்சுவரோடு சாய்ந்தமர, முன்னால் குந்தி, “நீ ஆமியிலிருந்து ஓடிவந்த ஆள்தானே?” என்று காற்றை அசைப்பதுபோன்ற தொனியில் கேட்டாள்.

அவளது மூச்சு முகத்தில் பட்டபோது இனிமையாய் உணர்ந்தான் உக்கு.

அவனுக்கு என்ன கேட்டாளென விளங்கியது. ஆனாலும் அது சிங்களம்மாதிரியான ஒரு மொழியே. அவனும் காற்றசைவினும் மெல்லிய சத்தத்தில் கேட்டான்: “இது என்ன பாஷை நீ பேசியது?”

“இதுவா? இதுதான் எங்களின் பாஷை. சிங்களம், தெலுங்கு, தமிழ் எல்லாம் கலந்த ஒரு பாஷை. ஏன், உனக்குப் புரியவில்லையா?”

“புரிகிறதுதான். கொஞ்சம் வித்தியாசமாயிருந்தது, கேட்டேன்.”

“ம்…! நீ என் கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை.” கேட்டுக்கொண்டு  சுவரோடு சாய்ந்து அவனோடு ஒட்டி அமர்ந்தாள் அவள்.

“எப்படித் தெரிந்தாய் அதை?” அது கேள்வியெனினும் பதிலுமானது. அதை பதிலாய் எடுத்துக்கொண்டு கேள்விக்கு அவள் பதிலைச் சொன்னாள்: “அது கஷ்ரமில்லை. உன் உடம்பும் முகமும் தலைமயிர் வெட்டும் சொல்லியது. உன்போல் சிலர் சில காலத்துக்கு முன் இந்த வனத்துக்குள் பதுங்கியிருந்ததை நான் கண்டிருந்தேன். குடியிருப்பின் மூத்தாரும் அதைச் சொன்னார். பிறகு, ‘யாரும் தஞ்சம் கொடுத்துவிடக்கூடாது. அவர்கள் சட்டத்துக்கு புறம்பாக நடப்பவர்கள்’ என்றார்.”

“நீ அவர்களில் யாருக்கேனும் இங்கே அடைக்கலம் கொடுத்தாயா?”

“இல்லை.”

“ஏன்?”

“ஏனோ கொடுக்க மனம் சொல்லவில்லை.”

“என்னைப் பார்த்தபோது மனம் சொல்லியதா?”

“பார்த்தபோதில்லை. அம்பு மூதாட்டியின் குடிசைக்கு நீர் வாங்க வந்து திரும்பியபோது நீ இரண்டு இறைச்சி வற்றல்களை எடுத்துச் சப்பினாயே, அப்போது தோன்றிற்று.”

“இப்போது எதற்காக குடியிருப்புவாசிகள் நான் தங்கியிருந்த மரத்தடிக்குப் போகிறார்கள்?”

“எனக்கென்ன தெரியும்? ஒருவேளை மூத்தார் வந்திருப்பார். தகவல் சொல்லியிருப்பார்கள். ஏதாவது கேட்க மற்றவர்களோடு போயிருப்பார்.”

“எனக்கு ஆபத்து எதனையும் விளைக்க இல்லையே?”

“நீ எதிரியில்லை. அவ்வாறிருந்தாலும் கெடுதி செய்துவிடமாட்டோம்.”

“அப்ப… எதற்காக என்னை ரகசியத்தில்போல் இங்கே அழைத்துவந்தாய்? அவர்களிடமிருந்து காப்பாற்றத்தானே?”

“அப்படி நீ நினைக்கிறாய். உண்மை அதுவல்ல. நீ பட்டினியாய் இருப்பாயென்று நினைத்தேன். அந்த இடத்தில் விஷ ஜந்துக்களும் அதிகம் ஊசாடும். அந்த இடத்தில் நீ படுப்பது ஆபத்து. இரவை இங்கே தங்கட்டுமேன் என்று நினைத்தேன்.”

“அப்ப... பூனைபோல் நடந்தாயே…!”

“அதுதான் என் இயல்பான நடையே. சருகசைவும் எழுந்துவிடாத அமைதியில் நடப்பேன்.”
பின்னியிருந்த கூந்தலை அவள் அவனோடு பேசியபடி குலைத்துக்கொண்டிருந்தாள். அது ஏனென அவன் அறியாதிருந்தான். ஒரு சிறுபெண் தூங்கிக்கொண்டிருந்ததை குடிசையுள் ஓரமாய். கண்டு, “உன் குழந்தையா?” என்றான்.
அவள் ஆமென்றாள்.

“அப்போ… உன் கணவன் எங்கே?”

“இவள் வயிற்றிலிருந்தபோதே பாம்பைவிட்டு கடிக்கச் செய்துவிட்டாள். காட்டிலேயே செத்துப்போனான்.”
அந்தளவில் அவள் இன்னும் அவனை நெருங்கியிருந்தாள். அவளின் மேற்சூடு அவனுள் பரவிக்கொண்டிருந்தது. அவள் சிறிதுநேரத்தில் எழுந்து தயாராய் மண் சட்டியிலிருந்த கறியும் சோறும் கலந்த குழையலை எடுத்துவந்து அவனிடம் கொடுத்து, மண் குடுவையில் நீரும் எடுத்து முன்னால் வைத்தாள்.

இருந்த பசியில் எதுவும் சொல்லாமல் விறுவிறென தின்று தீர்த்து தண்ணீரையும் குடித்தான் உக்கு. பின் பையிலிருந்த சிகரெட் ஒன்றை உருவியெடுத்தான்.

அவள் தடுத்தாள். பின் எழுந்துபோய் வெளியே பார்த்துவிட்டு வந்தாள்.  “யாருமில்லை. ஆனாலும் அதை இங்கே பத்தாதே. அதன் கந்தம் புறத்தியானொருவனின் இருப்பைக் காட்டிக்கொடுத்துவிடும். வேண்டுமானால் பீடி புகை. வைத்திருக்கிறாயா? என்னிடம் உண்டு.”

அவன் பீடியொன்று வாங்கி தணலெடுத்து மூட்டி புகைத்தான். “இது எப்படி உன்னிடத்தில்…?”

“நான் புகைப்பேன். இரவுகளில் மட்டும். இங்கே இரவுகளில்தான் பெண்கள் புகைப்பார்கள். இரவு அவர்களுக்கானதுதானே? அவர்கள் ஆட்சிசெய்கிற பொழுது அது.”

“உன் கணவன் இறந்துபோயுள்ள நிலையில் யாரை நீ அந்த இரவுகளில் ஆட்சிசெய்கிறாய்?”
“என்னையேதான். தன்னையே ஆட்சிசெய்வதென்பது பெரிய வித்தை. ஆனாலும் கணவனுள்ள பெண்கள் பாக்கியம் செய்தவர்கள். நான் பாக்கியமற்றுப் போனதை நினைத்து புகைப்பேன்.”

அவளின் குரலில் ஒரு  சோகத்தின் ரேகை ஓடியிருந்ததா? அச்சொட்டாகச் சொல்லமுடியவில்லை உக்குவுக்கு.

“இவ்வாறு கேட்டேனேயென்று வருத்தப்படாதே.”

“இதிலென்ன வருத்தம்? அதுசரி… என் பீடி எப்படி இருக்கிறது?” அவள் கேட்டாள்.
“நன்றாயிருக்கிறது. இது வேறு புகையானாலும் கந்தம் இனிது. இது என்னைச் சிறிது பறக்கவும் செய்கிறது.”

“செய்யும். அதற்கான மூலிகை இலைகளும் கலந்தது இது. பீடி இலையும் நல்ல தேர்வு. இரு.. நானும் ஒன்று புகைக்கிறேன்.” அவள் பீடியை மூட்டிக்கொண்டு மறுபடி அமர்ந்தபோது சட்டையின் முடிச்சினை அவிழ்த்துவிட்டிருந்தாள். வியர்வை முகத்திலிருந்து வழிவது மினுங்கலாய்த் தெரிந்தது. அது நெஞ்சக் குவடுகளுக்கூடாக வழிந்துகொண்டிருக்கவும் கூடும். என்றாலும் கூந்தல் மார்பை மறைத்திருந்தது. பீடி நெருப்பின் செவ்வொளியில் அவனது பார்வை அடிக்கடி திரும்பி கலசங்களைத் துளாவிச் சென்றது. அதை அவள் கவனித்தாள். கூந்தலை அங்குமிங்குமாய் அலைக்கழித்து அவனது இரையைக் காட்டினாள்..

அது நிவேதனம்.

அவனுக்கு அவள் வைத்த அவி பாகம்.

அவன் பூஜையை நிராகரிக்கிற தெய்வமில்லை.

நெடுநேரத்தின் பின் புற்பாயில் அருகருகே படுத்திருந்தபடி, “நீ கானகத்தின் இனிப்போடு இருக்கிறாய். என்னில் மறக்க முடியாத நினைவாகியும்விட்டாய். ஒன்று கேட்கவேண்டும் உன்னிடம். கரும்பு கட்டோடு இருந்தால் எறும்பு தானே போய் தானே வரும் என்பார்கள். நீ கட்டறுந்த கரும்பு. எறும்புகள் தானே போய் தானே வந்துகொண்டிருக்கின்றனவா இங்கே?”

“நீ என்ன கருதுகிறாயென்று தெரிகிறது எனக்கு. கட்டு என் மனத்திலேதான் இருக்கிறது. அது என்றும் அறுந்துபோகவில்லை. கட்டை ஒருவேளை நான் அவிழ்த்தாலும், இங்கே யாரும் வந்து என்னை மொய்த்துவிட மாட்டார்கள். கணவனற்ற ஒரு பெண்ணின் திசைக் காவலர்களே இங்குள்ள ஆண்கள். இறந்த கணவன் வானத்திலிருந்து நட்சத்திரக் கண்களால் எல்லாம் கண்டுகொண்டிருக்கிறானென்று எங்கள் குலத்தவரிடையே ஒரு நம்பிக்கையிருக்கிறது.”

“உனக்கு அந்த நம்பிக்கை இல்லையா?”

“இருக்கிறது. உன்னை வேறு ஆணாய் இல்லை, என் இறந்த கணவனாகவே நான் கண்டிருந்தேன். அவனோடேயே சல்லாபிக்கையில் அவன் கண்டுவிடுவானென்று நான் அஞ்சுவது எங்ஙனம்?”

அவன் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை.

பிறகு, “உன் பெயரென்ன?” என்று கேட்டான்.

“லெட்சுமை” என்றாள் அவள். பிறகு, “விடியலின் முன் முதல் பறவைச் சத்தத்திலேயே வந்த பாதையிலேயே நடந்து நீ தங்கியிருந்த மரத்தடிக்குப் போய்விடு. மூத்தார் ஏதாவது முடிவெடுத்திருக்கிறாரா என்பது நாளைக்குத் தெரியவரும். மதியம்வரை உன்னை யாரும் இங்கே அழைக்காவிட்டால் மதியத்தில் குளிக்க வரும்போது நீ சாப்பிடுவதற்காக ஆகாரம் ஏதாவது கொண்டுவருவேன். அங்கேதான் எங்காவது ஒரு இடத்தில் வைப்பேன். எறும்பு மொய்த்துவிடும். விரைவில் பார்த்து எடுத்துக்கொள். சரியா?”

“ம்.”

“இன்னுமொன்று…”

“சொல்லு.”

“நாளைக்கும் நீ அங்கே தங்கநேர்ந்தால், குளத்துக்குக் கிட்ட தங்காதே.”
“ஏன்?”

“அது பெண்கள் குளிக்கிறதுக்கான இடம். ஆண்களுக்கு வேறு இருக்கிறது. இன்று பகலிலே பல பெண்கள் குளிக்கப் போகாததற்கு நீ அங்கே இருந்ததே காரணமாயிருக்கலாம்.”

“நீ குளித்தாயே?”

“அது உன்னைக் காணாதபோது.”

அவன் அப்போது பேசாமலிருக்க, “என்ன யோசிக்கிறாய்?” என்று கேட்டாள் லெட்சுமை.

“ஒன்றுமில்லை, இப்படியே எவ்வளவு காலங்களைக் கழிக்கவேண்டுமோவென்று யோசித்தேன்” என்றான் அவன்.

அதற்கு அவள், “நீ வேலையேதாவது செய்ய பிரியமானவனாய் இருந்தால், நான் சொல்லுகிறேன் ஒன்று கேள். சூரியபடு திசையில், இங்கிருந்து மூன்று நான்கு கூப்பிடு தொலைவில், ஒரு கள்ள மரக்காலை இருக்கிறது. மரங்களை அரிந்து தளவாடங்கள் செய்து ஊரிலே காவிச் சென்று விற்கிற ஒரு பறக்கும் பட்டறை அது” என்றாள்.

“அதென்ன பறக்கும் பட்டறை?”

“கொஞ்சக் காலத்துக்கு முந்தி அது வனத்தில் எங்கோ ஓரிடத்தில் இருந்தது. மூத்தார் பார்த்திருக்கிறார். பிறகு இங்கே வந்திருக்கிறது. இன்னும் கொஞ்சக் காலத்தில் வேறு எங்கேனும் போகக்கூடும். அவர்கள் நிலையாக ஓரிடத்தில் தங்குவதில்லை. இந்த வனத்தில் நீண்ட நாள் தங்கி வேலைசெய்ய பலர் விரும்புவதில்லை. ஒரு வேலையாளுக்கு எப்போதும் அந்தப்  பட்டறையில் தேவையிருக்குமென நான் அறிந்திருக்கிறேன். முடிந்தால்  போய் ஒருநாள் கேட்டுப்பாரேன்.”

“விடிந்ததும் போய்க் கேட்கிறேன்.”

“நல்லது” என்றாள் லெட்சுமை.

மறுநாள் விடிபொழுதில், லெட்சுமையின் குடிசையைவிட்டு இருளோடு இருளாய்க் கரந்துபோய் மரத்தடியை அடைந்தான் உக்கு.
கோடையில் காலை விறுவிறுவென விடிகிறது. குருவிகள் நேரத்தோடு எழும்புகின்றன. மேய்ச்சல் மாடுகளை குடியானவர்கள் வெள்ளெனவே சாய்த்துச் செல்கிறார்கள்.

நன்கு விடிந்ததும் லெட்சுமை சொல்லியபடி மரக்காலைத் திசையை அனுமானித்துக்கொண்டு நடந்தான். தூரத்தில் சென்றுகொண்டிருக்கும்போதே பொழி அடிக்கும் சத்தம் டொக்… டொக்கென்று கேட்டு வழிகாட்டியது. சிறிதுநேரத்தில் காட்டின் நடுவில் ஒரு தறப்பாள் போட்ட தொழிற்சாலை தெரிந்தது.

மரக்காலை உரிமையாளர் அங்கே குடும்பமாய் குடியிருந்தார் போலிருந்தது. இடுப்புக் குழந்தையோடு மரப்பலகை வீட்டுக்கு முன்னால் ஒரு பெண் நின்றிருந்தாள். அவளோடு பேசியபடி மரக்குற்றியொன்றைக் கோதி துளையடித்துக்கொண்டு இருந்தார் ஒருவர். யாரோ வருவதை அவள் சொல்ல, வேலையை நிறுத்திவிட்டு நிமிர்ந்து பார்த்தார்.

உக்கு தன் பெயரையும் ஊரையும் சொல்லி அறிமுகம் செய்தான். தன் நிலைமையை அவரிடம் சொல்லாமல் காரியமாகாதென்று எண்ணி நடந்தவற்றை விபரமாய்க் கூறினான். “சண்டை வேலையை விட்டிட்டு, மரவேலை செய்ய வந்த ஆமி!” என்று சிரித்தார் மரக்காலை உரிமையாளர்.

உக்கு திகைத்தான். தவறான ஒரு மனிதரிடம் தன்னை அடையாளப்படுத்திவிட்டானோ?

பிறகு, “என் பேர் சுமணபால. நானும் ஆமியிலதான் இருந்தேன். தொண்ணூற்றாறில் புலிகள் நடத்திய ஒரு முகாம் தாக்குதலில் முழங்காலோடு சிதறிப் போச்சு. நஷ்டஈடு, உதவித் தொகை எதுவும் இதுவரை கிடைக்கவில்லை. ஆனாலும் என் திட்டத்தைச் சொல்லி கல்யாணம் பண்ணுகிறாயா என்று, இதோ இங்கே நிற்கிறாளே, இவளைக் கேட்டேன். சம்மதித்தாள். கல்யாணம் கட்டி மூன்று மாதத்தில் இங்கே கூட்டி வந்துவிட்டேன்” என்றார்.

அவன் காட்டிய மனிதாபிமானத்தின் மேலெழுந்த இடுக்கணை, ஒரு மனிதனாய் விலக்குவதற்கு தனக்கொரு பொறுப்பிருக்கிறதென்று சொல்லி, அவனுக்கு வேலை கொடுத்தார் சுமணபால.

காலம் மெதுவாய் நகர்ந்துகொண்டிருந்தது.

சுமணபால அண்மைய நகருக்கு சமையல் சாமான்கள் வாங்கச் செல்லுகையில் கிடைக்கிற பத்திரிகைகளை எடுப்பித்து வாசித்தான். பீடி புகைத்துக்கொண்டு இரவுகளைக் கழித்தான். அம்மாவுக்கு தன் நலம் தெரிவித்து இரண்டு கடிதங்களும், கொஞ்சம் பணமும் அதுவரை அனுப்பியிருந்தான். அவனெடுத்திருந்த அந்தத் தர்மயுத்தத்தின் நீட்சி எதுவரையாகப் போகிறது? தெரியாது. ஆனாலும் அவன் பின்வாங்க மாட்டான்.

சுமணபாலவுக்கும் அரசியல் பிடிப்பாக இருந்தது. பல மாலைகளை பெரும்பாலும் அரசியல் பேச்சுகளிலேயே இருவரும் செலவிட்டிருக்கிறார்கள். 2002இன் யுத்த நிறுத்தத்தைப்பற்றி, யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகள்பற்றி, நோர்வேயின் அனுசரணையில் நடக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைபற்றியென பலதும் அவர்கள் பேசியிருக்கிறார்கள். ஒருமுறை சுமணபால நகரம் போய்வந்த வேளை வாங்கிவந்த பத்திரிகையொன்றில் வரும் 29 ஐப்பசியில் சிங்கள தமிழ் கலைஞர் எழுத்தாளர்களின் இரண்டாவது ஒன்றுகூடல் கொழும்பில் நடக்கவிருப்பதான செய்தி அவன் கண்ணில்பட்டது. ஏனோ அடையாளம் மாறியிருந்த அந்தக் கோலம் தன்னை எவருக்கும் காட்டிக்கொடுத்துவிடாது என்ற நம்பிக்கையில் கொழும்பு செல்ல தீர்மானித்தான் உக்கு. “இன சௌஜன்யத்துக்கான அப்படிக்கொத்த நிகழ்ச்சிகளை நாம் ஆதரவு கொடுத்து முன்னகர்த்திவிடவேண்டும்” என்றார் சுமணபாலவும்.

அதை சுமணபாலவுக்குப்போலவே தாமரைக் குளத்துக்கு லெட்சுமை நீராட வரும் நேரம்பார்த்துச் சென்று அவளிடம் சொல்லவும் அவன் மறக்கவில்லை.

“எப்போது அது?”

“இருபத்தொன்பதாம் தேதி.”

“எப்போது போவாய்?”

“இருபத்தேழில்.”

“திரும்ப…?”

“கார்த்திகை மூன்றாம் தேதி.”

“கண்டிப்பாக வந்துவிடுவாயல்லவா?” என்று கேட்டாள் லெட்சுமை. அப்போது அவளது கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டிருந்தது. பதிலுக்கும் தாமதிக்காமல் அவள் போய்விட்டாள். அந்த அழுகையை நிறுத்த இரண்டு நாட்கள் அவனும் இருளாக மாறவேண்டியிருந்தது.

ஒருநாள் அருகருகே கிடந்து ஆனந்தத்தின் வியர்வையைச் சிந்திக்கொண்டிருந்த வேளையில், “நான் ஒருநாளைக்கு இங்கயிருந்து போவேன். அது எப்போதென்று எனக்குத் தெரியாது. ஆனா போவேன். அப்போது நீயும்தான் என்னோடு வருவாய், சத்தியம்” என்று ஆணையிட்டான். “இன்னும்தான் உனக்கு என்னிலே நம்பிக்கை வரவில்லை, இல்லையா?”

அவளுக்கு எப்படிச் சொல்வதென்று திணறலெடுத்தது. சொல்லிவைத்தமாதிரி ஏதோ திரளாய் வந்து குரல்வளையை அடைத்திருந்தது. அவ்வளவு நல்லவனாக இருக்கிறவனுக்கு, தான் விரும்புகிற ஒருத்தி அத்தனை கள்ளச் சந்திப்புக்களுக்குப் பின்னரும் தன்னைச் சந்தேகம் கொண்டிருப்பதென்பது பெரிய அபகீர்த்தியல்லவா? அவளுக்கு இன்னும் குரல் வரவேயில்லை. “என்ன பேசாமலிருக்கிறாய்?”

“சொன்னால் உனக்குப் புரியாது. சண்டை நின்று சமாதானம் வந்துவிட்டதென்று நீங்களெல்லாம் கதைக்கிறீர்கள். அது எனக்குத் தெரியாது. ஆனால் ஒன்று தெரியும். இந்த வனத்தில் முன்புபோலவே நடமாட்டம் பயப்படும்படி ஆகிக்கொண்டிருக்கிறது. அது சண்டை தொடங்கப்போவதன் அடையாளம்தான்.”

“விளங்கவில்லையே.”

“நீ வருவதற்கு முன்னரே இந்த வனத்தின் அமானுஷ்யம் போய்விட்டிருந்தது. வனத்தை ஊடறுத்து நிறையப் பேர் போய்வந்துகொண்டிருந்தார்கள். யாரென்று தெரியாது. சத்தம் மட்டும்தான் நாங்கள் கேட்டோம். அது சிறிதுகாலம் குறைந்திருந்தது. சமாதான காலமென்று சொன்னாயே  இப்போது அதிகரித்துக்கொண்டிருக்கிறது.”

“யாரையாவது தேடுவதுபோல இருந்ததா? அல்லது பயணத்தில் இருக்கிறமாதிரி இருந்ததா அது?”

“பயண வழியில் கதைத்துக்கொண்டு போனதுபோலவே இருந்தது. அத்துடன் அவர்கள் தமிழில் உரையாடினார்கள்.”

“கொட்டியா வனம் கடக்கும் பாதை இங்கேதான் இருக்கிறதென எண்ணுகிறேன்.”

“அதனால் உனக்கொன்றும் ஆபத்தில்லையே?”

“இல்லை. அது இருக்கின்ற யுத்த நிறுத்தத்திற்குத்தான் ஆபத்து.”

“அப்படியென்றால்,,,?”

“இனி நான் சொல்வது உனக்குப் புரியாது. விடு அதை.”

சிறிதுநேரம் பேசாமலிருந்த லெட்சுமை தான் புரிந்துகொண்டாள் என்பதைக் காட்டினாள். “அப்ப… யுத்தநிறுத்தம் முடிந்து சண்டை மீண்டும் தொடங்குமென்று நீயும் எண்ணுகிறாய்.”

அது அவர்களது கரிசனைக்குரிய விஷயமேயெனினும், கவலைப்பட்டு எதுவும் ஆகப்போவதில்லை.

அவன் அவளை அணைத்தான்.

அடுத்த தடவை சந்தித்தபோது தன் இன்னொரு சந்தேகத்தை லெட்சுமை கேட்டாள். “நான் இவ்வளவு கறுப்பாய் இருக்கிறேனே, ஊரிலே கறுத்த கானகத்தியைக் கூட்டிவந்திருக்கிறானென்று உன்னைக் கேலிசெய்ய மாட்டார்களா?”

“நானும் கறுப்புத்தான். உன்னைவிட குறைந்த கறுப்பு.”

அதன் பிறகு லெட்சுமை கலகலப்பாக திரிந்தாள்.

அவன் பஸ்ஸெடுக்க செல்வதற்கான குறுக்குவழியொன்றை ஒருநாள் சுமணபால அவனுக்குச் காட்டிக்கொடுத்தார்.

அப்போதுதான் தான் அவ்வளவு காலமாக வாழ்ந்துகொண்டிருந்த நிலப்பரப்பின் பூகோளம் அவனுக்கு விளங்கியது. “நாம் சிலவேளை போய் நீராடியிருக்கிறோமே அதுதான் யான்ஓயா. அதை நீ தாண்டினால் கிண்ணியா-ஹறவபொத்தான வீதிவரும்.” அவன் புறப்படுகிற நாள் வந்தது.

அந்த நாளை லெட்சுமை அடுப்பில் கரியெடுத்து சுவரில் பதிந்தாள் 27-10-2003 என.

[தொடரும்]

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 09 September 2020 01:24