தொடர் நாவல் : கலிங்கு (2003 – 6)

Saturday, 27 June 2020 21:40 -தேவகாந்தன்- தேவகாந்தன் பக்கம்
Print

வடலி பதிப்பகம்வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. உலகளாவியரீதியில் 'கலிங்கு' நாவலையெடுத்துச் செல்வதில் 'பதிவுகள்' மகிழ்ச்சியடைகின்றது.  'கலிங்கு' நாவலை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


அத்தியாயம் ஆறு!

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்இருண்டும் போக்குவரத்தற்றும் கிடந்த வீதியைக் கடந்து, சாமி தங்கியிருந்த வீட்டின் கேற்றை ஓசையின்றித் திறந்து, ஒரு பூனையின் சாதுர்யத்தோடு நிலா அவரை நெருங்கி, அந்தக் கண்களின் கிறக்கத்தைக் கண்டபடி நின்ற சிறிதுநேரத்தில், அதை மெல்லிய ஒலியலைகளால் கலைக்க முடியுமா என்பதைப் பார்க்கப்போல, “சாமிஐயா!” என்றழைத்தாள். சாமி திடுக்கிட்டு குரல் திசையில் சடாரெனத் திரும்பினார். “நீயாடி, மகளே! வா… வா…!” என்று சுதாரித்தார் சாமி. அப்போதும் திடுக்காட்டத்தின் அதிர்வுகள் அவரது கண்களிலும் முகத்திலும் இருந்திருந்தன.

“ஒழிக்காமல் சொல்லுங்கோ, எத்தினை காலமாய் உங்களிட்ட இந்த எழிய பழக்கமிருக்கு?” என்றபடி வெளிச்சத்துக்கு தன்னைக் கொண்டுவந்தாள் நிலா.

இவள் பிரதீபனில்லையென்ற திண்ணம் சாமியிடமிருந்தது. அப்படியிருந்தாலும் இது அவர்களது எல்லைக்குட்பட்ட பிரதேசமில்லையென்ற தெளிவும் இருந்தது. மேலும் நிலாவும் அவர்மீதான அன்பின் அக்கறை வழிய நின்றுகொண்டிருந்தாள். அவர் அவளிடம் சொல்லலாம். “கனகாலமாய். என்ர வீட்டைவிட்டு, ஊரைவிட்டு வெளிக்கிட்டாப் பிறகு. ஆயிரத்து தொளாயிரத்து எண்பது... எண்பத்தொண்டில.”

அவரையே கண்டபடி நின்றுகொண்டிருந்தாள் நிலா. “விட்டிடுங்கோ. அது உங்களையே மாத்தியிடும். உங்கட எல்லா நல்ல குணங்களையும் அழிச்சிடும். உங்கட பேரையே கெடுத்திடும்.”

கடகடவெனச் சிரிக்கவேண்டும் போலிருந்தது சாமிக்கு. அவரது அதனிடமான தஞ்சம், அவள் சொன்ன அந்த அம்சங்களை தன்னில் தக்கவைக்கவே என்பது அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. “மரங்கள் சும்மாயிருந்தாலும் காற்று அதுகளை விடுறேல்லயெண்டு சொல்லுவினம். அந்தக் கதைதான் இது. நினைவுகள அடக்கிக்கொண்டு வாழுறவன் நான். அப்பிடியான என்னை, அந்த நினைவுகள் எப்பிடியோ தாங்களாய்க் கிளம்பி வந்து இம்சை பண்ணத் துவங்கியிடுதுகள். அதுகள கலைஞ்சுபோக, அடக்கிவைக்க எப்பவும் தெண்டிக்கிறன். அதால அப்பப்ப இது எனக்கு தேவையாயிடுது. இயல்பான ஒரு சமூகத்துக்குள்ள தனி மனிசனாய் நான் படுற அவலம் என்ர வாழ்க்கை. வெட்டிக்கொள்ளாட்டியும், ஒட்டிக்கொண்டும் வாழேலாமலிருக்கு. அந்த இடைநிலையைச் சாத்தியமாக்கிற மருந்து எனக்கு இதுதான்.”

“உப்பிடிச் சொல்லுறனீங்கள் உதை இனி விடவே மாட்டியள். ஏனிண்டா, உங்களுக்கெண்டு கட்டமைச்ச ஒரு தனியான வாழ்க்கைமுறையாய் நீங்கள் இதைப் பாக்கிறியள்.”

“இருவத்தைஞ்சு வரியத்துக்கு முந்தி ஆரெண்டான்ன இப்பிடிச் சொல்லியிருந்தா நான் என்ன செய்திருப்பனெண்டு எனக்குத் தெரியா. ஆனா இப்ப என்னைத் திருத்திறது என்னை அழிக்கிறமாதிரி. அதை நான் செய்யப்போறதில்லை. இதோட சேர்ந்த வாழ்க்கை எவ்வளவு மோசமாயிருந்தாலும் வாழத்தான் மனசு விரும்புது.”

நிலா மௌனமானாள். அவரை அவள் முழுதுமாய்ப் புரிந்துகொண்டாளா என அவளுக்கு நிச்சயமில்லை. மயக்க வஸ்துகளில் தஞ்சமடைவோர், துக்கங்களைக் கிளர்த்தும் நினைவுகளுக்குள் அழுந்தத்தான் அதிகமாகவும் அவற்றை விரும்பியிருக்கிறார்கள். இவர் அதிலிருந்து தவிர்ந்தொதுங்க அதை நாடுகிறார். இவரது நிலைமைகள் வித்தியாசமாகவும் இருக்கக்கூடுமென எண்ணிக்கொண்டு இருந்தாள்.

துளிதுளியாய் நொடிகள் கழிந்துகொண்டிருந்த ஒருபொழுதில், “எப்பிடியெண்டான்ன போங்கோ. நான் இனிமே இதைப்பற்றிக் கதைக்கமாட்டன்.”

“அப்பிடியெண்டா நீ உன்ர கோபத்தையும் விட்டிடவேணும். வா, இப்பிடி இரு. இந்தப் பக்கமாய் இரு. அப்பதான் வெளிச்சம் முகத்தில படும். கொழும்பால வந்தோடன உன்னத் தேடினன். பிறகு நீ வேலைக்குப் போய் வாறத கண்டன். சரி, நேரமிருக்கேக்க வருவாய்தானயெண்டு காத்துக்கொண்டிருந்தன். உங்களுக்கும் ஆயிரம் வேலையிருக்கும்.”

“ரண்டு மூண்டு நாளாய் மனம் சரியில்லை.”

“வீட்ட போய் வந்தியே, ஏன், வீட்டில எதாவது பிரச்சினையோ?”

“வீட்டில இல்லை, வெளியிலதான். ஒவ்வொரு நாளும் நான் வேலைக்குப் போட்டு வாற நேரத்திலயெல்லாம், அங்க சாவச்சேரி முகாமில நிக்கிற ஆமி ஒருதன் என்ர நிர்வாகச் சீருடையை அந்தமாதிரி முறைச்சு முறைச்சுப் பாக்கிறன். கொஞ்சம் நிம்மதியாயிருக்கிற என்ர மனம் அதோட கலவரப்பட்டுப்போகுது.”

“அதென்ன, சீருடையை அந்தமாதிரிப் பாக்கிறானெண்டா?”

“எரிச்சிடுறமாதிரி.”

“ஒருவேளை அதை இயக்கத்தின்ர அடையாளமா நினைச்சு தன்ர கோவத்தை அப்பிடிக் காட்டுறானோ, என்னவோ? நீ மற்ற ஆக்களோடதான போய் வாறாய்? அதால அவ்வளவு யோசிக்கத் தேவையில்லை. ம்… அதை விடு, அதென்ன கையில பேப்பர்?”
சாமி சாவகாசமானார்.

“கவிதை… ராத்திரி நான் எழுதினது. உங்களிட்ட வாசிச்சுக் காட்டலாமெண்டு கொண்டுவந்தன்.”

“அப்ப வாசி. கவிதையை அனுபவிக்க இதைவிட வேற நல்லபொழுதில்லை.”

“கவிதை வாசிப்பியளா, சாமிஐயா?”

“வாசிக்கிறதென்ன, எழுதவும் ஏலும். ஆனா எழுதுறேல்ல. நான் வாசிச்ச கவிதையெல்லாம் கம்பராமாயணம்தான். கொஞ்சம் பாரதியார் கவிதையும் வாசிச்சிருக்கிறன்.”

“அப்ப… நீங்கள் எழுதினாலும் அது கம்பராமாயணப் பாட்டுமாதிரித்தான் வரு”மென்று நிலா கிணுகிணுத்தாள்.

“அப்பிடிச் சொல்லேலாது. அது ஆயிரம் வரியத்துக்கு முந்தின கவிதை. நானெழுதிறது இந்த நூற்றாண்டுக் கவிதைமாதிரித்தான் இருக்கும்.”

“இந்தக் காலத்துக் கவிதையைத் தெரியாமல், எப்பிடி சாமியையா, உங்களால இந்தக் காலத்துக் கவிதை எழுதேலும்?”
“இந்தக் காலத்தின்ர உணர்ச்சியையும் கருத்தையும் எழுதினா இந்தக் காலத்து கவிதை நடையிலதான் வரும். நான் என்ன சொல்லுறனெண்டா, இந்தக் காலத்தின்ர உணர்ச்சியையும், இந்தக் காலத்தின்ர கருத்தையும் வேற எந்தக் காலக் கவிதை நடையிலயும் சரியாய்ச் சொல்லேலாது எண்டதைத்தான்.”

கவிதையையே புரிந்துகொண்டு சொன்னதுபோல சாமியின் வார்த்தைகள் தோன்றின நிலாவுக்கு. இருந்தாலும் வாதிக்க அதில் இடைவெளியும் இருந்தது. அது அவள் கரிசனமில்லை அப்போதைக்கு.

“என்னைத் தேடினதாய்ச் சொன்னியளே, ஏன்?” என்று அந்த விஷயத்திலிருந்து மாற்றுவழி எடுத்தாள் அவள்.

“பெரிசா ஒண்டுக்குமில்லை. வன்னி போகலாமெண்டு ஒரு யோசனை வந்திருக்கு. எப்ப வெளிக்கிடுவனெண்டு தெரியாது. நினைச்சோடன பையைத் தூக்கிற ஆள்தான நான்? அதால எதுக்குமொருக்கா விஷயத்தை உன்னிட்ட சொல்லிவைப்பமெண்டு நினைச்சன்” என்றார் சாமி.

“எப்ப போவியள்?”

“எப்பவும்.”

“வன்னியில எங்க தங்குவியள்?”

“எங்கயும். புளியம் பொக்கணை, இரணைமடு, மாங்குளம், வற்றாப்பளை… இப்பிடி எங்ஙனயாச்சும்.”

“வன்னி உங்களுக்குப் பிடிக்குமா, சாமிஐயா?”

“நல்லாய்ப் பிடிக்கும்.”

“யாழ்ப்பாணத்தைவிட பிடிக்குமா?”

“பிறந்த இடத்தையும் வெளியிடத்தையும் அந்தளவு லேசில ஒப்பிட்டிடேலா. இது இதுதான். அது அதுதான். அப்பிடிப் பாத்தா, ரண்டுக்கும் கனக்க வித்தியாசமிருக்கு.”

“உங்கட சொந்த ஊர் எது, சாமிஐயா?”

“ரிஷிமூலம் கேக்கக்குடாதெண்டு சொல்லுவினம். என்ர ஊரை நான் கண்ணால கண்டே கன வரிஷமாச்சு. இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னால ஒருக்கா அதை நினைச்சுப் பாத்தன். வாழ்ந்த ஊர், பிறந்த வீடு… எல்லாம் கனவுபோல ஞாபகம் வந்திது. திரும்பவும் நினைக்க மனமில்லை. அது சோகங்களைத்தான் உள்ள கொண்டிருக்கு.”

“அதை ஆறுதலாய்ச் சொல்லுறனெண்டு எனக்குச் சொல்லியிருக்கிறியள்.”

“அதுக்கொரு நேரம் வரும். அப்பவாச் சொல்லுவன். இப்ப என்ர ஊரைச் சொல்லுறன். அதுவும்…உனக்கெண்டபடியா. நான் பிறந்து வளந்ததெல்லாம் அல்வாய்தான்.”

“சரி, உங்கட ஊருக்கும் வன்னிக்கும் என்ன வித்தியாசமிருக்கு?”

“இஞ்ச… ஒரு செப்பமான தன்மையிருக்கு. நிலவு, இயற்கை, உறவுகள், அதால வாற உணர்வுகளெல்லாம் ஒரு நெருக்கத்தில இருக்கு. உறவும் பக்கத்தில இருக்கு, வெறுப்பும் பக்கத்தில இருக்கு. படிப்பு… உத்தியோகம்… வீடு… எண்டொரு ஒழுங்கும் நியதியும் இஞ்சயிருக்கு. இது வன்னியில இல்லை. இந்தமாதிரி ஒழுங்கும் நியதியும்தான் இல்லை. அதுக்கான ஒழுங்கும் நியதியும் வேறமாதிரி. அது இருக்கு. ஒழுங்கு நியதியெண்டிறது… இப்பிடிச் சொன்னா விளங்கும்… ஒரு கட்டுப்பாட்டோட எல்லாமிருக்கும். அப்பிடி வாழ்ந்திடுற ஒரு கட்டாயமும் இருக்கும். அது கெடுபிடியாய் இருக்கும். அங்க அப்பிடியில்லை. அங்கத்திய வெளியைப்போல, ஒரு சுயாதீனம் வன்னியில இருக்கு.”

“இஞ்சயிருந்து போன ஆக்கள்தான அங்கயும் கனபேர் இருக்கினம்? அப்ப… இஞ்சத்தத் தன்மைதான அங்கயும் வரும்?”

“நீ சொல்லுறது ஒரளவுக்குத்தான் சரி. அங்க போனவுடன அந்த வெளிக்கேத்த விடுதலைத் தன்மை அவைக்கு மெல்லமெல்லமாய் வரத் துவங்கியிடும். வெளியை எண்டைக்கும் மனிசன் மாத்தினதில்லை. வெளிதான் மனிசனை மாத்தியிருக்கு.”

சாமியுடனான உரையாடலை ஒரு விளையாட்டாகத்தான் துவங்கியிருந்தாள் நிலா. ஆனால் தன் அனுபவத்தால் இன்னும் உள்ளே உள்ளேயாக அவளை இறக்கிக்கொண்டிருந்தார் சாமி.

“அந்த வெளியில உங்களுக்கு பிடிச்சது எது?” அவளது கேள்வியில் சாமி சிறிது யோசித்தார். தாடியை உருவினார். வெளியைப் பார்த்தார். பீடி எடுத்து புகைத்தார். அது ஒரு பதிலுக்கு எடுக்கக்கூடிய ஆகக்கூடுதலான நேரமென்றாலும் அவள் அவசரமின்றி காத்திருந்தாள். அவர் சொன்னார்: “அந்த வெளியில அருவமாய் இருக்கிற எல்லாம் பிடிக்கும்.”

“அருவமாய் இருக்கிறதெண்டா…?”

“கடவுள், கலாச்சாரம், பேய், பிசாசு, காத்து, கதை…”

“கதை இங்கயுமிருக்கே.”

“எங்கயும் கதையிருக்கு. மனிசர் இருக்கிற இடத்திலயெல்லாம் கதையிருக்கு. அங்க அந்த வெளி கதையளப் புதிசுபுதிசாய் உருவாக்குது. அங்கயிருக்கிற அந்த ஒழுங்கின்மையும் நியதியின்மையும்தான் கதை பிறக்க வாஸியான வெளியாயிருக்கெண்டு நினைக்கிறன்.”

“அங்க கனக்க கதை கேட்டிருக்கிறியளோ, சாமிஐயா?”

“அந்தக் கொடுப்பினை எனக்கில்ல. வத்தாப்பளை அம்மன் கோயிலுக்குக் கிட்ட ஒரு கிழவி அப்பப்ப வந்து கதை சொல்லுமாம். கோயிலுக்கெண்டு வாற சனம் அங்கயிருக்கிற மரத்தடி, வயல்வெளியளில இருந்து கதை கேக்குதாம். கதை கேக்கிறதுக்கெண்டே அயலூர்ச் சனம் அங்க வந்து கதை கேட்டிட்டு, போகேக்க அம்மாளையும் கும்பிட்டிட்டுப் போகுதுகளாம். அப்பிடி ஒரு மாட்சி கதை சொல்லுறதில அந்தக் கிழவிக்கு. முள்ளிக் கிழவியெண்டு அக்கம்பக்கத்தில அந்தக் கிழவியைச் சொல்லிச்சினம். ஆனா ஊர் ஊரா காடு கடந்து போகிற மனிசி அது.”

அவர் அவளிடம் கதை கேட்டதில்லை. ஆனால் அவளைக் கண்டிருக்கிறார். இரண்டொரு பொழுதுகளில் அவளது அட்டகாசமான கதை சொல்லலில் கிறங்கியிருந்த சனங்களையும், அந்தந்த உணர்வுகளுக்கேற்ற அவளது கையசைவுகளையும் கண்டிருக்கிறார். ஒரு கறுத்த, மெலிந்த, வயதுக்கு நரைக்காத உயரமான கிழவியவள். எதையோ தேடிக்கொண்டிருப்பதுபோல் சதா அலையும் கண்கள் அவளுடையவை. வன்னியின் வனத்தை அவள்போல் அறிந்தவர் எவருமில்லை என்றிருந்தார்கள். வனம் அவளுக்கு மிகவும் பிடித்திருக்க நிறைய வாய்ப்பிருந்ததுபோல அவளது நடத்தைகளும் இருந்திருந்தன. யானைகளை, மான்களை, மரைகளை, கரடிகளை நேசித்ததுபோல், ஒரு பரிவு அவைபற்றி அவள் சொல்லும் கணங்களில் அவளது கண்ணில் மிதந்துகொண்டிருக்கும். அவள் வெளியில் காணப்படாத வேளையில் வனத்துக்குள்ளேயே இருந்திருக்கமுடியும். அவள் வேட்டையும், அணில் உடும்பு முயலென, ஆடியிருப்பாள். அந்த மெலிந்த கைகளின் பின்னாலிருந்த வலு அதைச் சொல்லியது. அவள் கண்களின் தீட்சண்யம் அதுக்கான இன்னொரு சாட்சி.

எல்லாம் அவர் நினைத்துப் பார்த்தார். முதன்முதல் பார்த்தபோதே அவருக்கு மனத்தை இறுக்கியது, கறுப்பாய், மெலிவாய், உயரமாய்…

சகுந்தலையை அவர் பலகாலம் நினைக்காமலிருந்தார். கதைக் கிழவிதான் அவளை நினைக்கப் பண்ணினாள். மறக்க நினைத்தவருக்கு நினைப்பைக் கொடுத்தவளாய் இருந்தாள் அவள். வன்னியில் ஒருவேளை கதை சொல்லும் கிழவியைக் கண்டால், சகுந்தலை மறுபடி அவருக்கு ஞாபகமாகவும்கூடும். அவள் எழுச்சியை விதைத்தவள் அவருள். மட்டுமில்லை, அந்த எழுச்சியை என்றுமாய் அறுத்தவளும். அதில் விரசங்கள் மட்டுமில்லை, முறையின் வழுக்களும் இருந்தன. எல்லாவற்றையும் ஒரு சூதின் புனைவில் அவரது சின்னம்மா நிறைவேற்றி வைத்தாள். அவர் வாழ்வில் என்றும் நினைக்க விரும்பாத ஒரு பகுதியாகவிருந்தது அது. “என்ன, சாமிஐயா, அப்பிடியே இருந்திட்டியள்? பழைய ஞாபகங்களோ?” என்ற நிலாவின் குரல் அவரை மீட்டது.

“நினைக்கிறதுக்கென்ன, கொஞ்சமே இருக்கு? அது போகட்டும். இதை என்ன செய்யப்போறாய், மகள்?” என்று அவளது கையிலிருந்த பேப்பரை அவர் காட்டினார்.

“அதை இண்டைக்கில்லை, இன்னொரு நாளைக்கு வாசிச்சுக் காட்டுறன்.”

“அந்த நேரம் உனக்கு வரேக்க நான் இஞ்ச இருக்கவேணுமெண்டதுதான் என்ர விருப்பம். இல்லாட்டி என்ன செய்யிறது? உதையே என்னிட்ட தர ஏலாதோ? வசதியிருக்கேக்க பாக்கிறன்.”

“இது இன்னும் பிரதியெடுக்கேல்லை. எடுத்திருந்தா தந்திருப்பன்.”

“அதுசரி… முந்தியும் கவிதை இதுமாதிரி எழுதியிருக்கிறியோ?”

“அஞ்சாறு. வன்னியிலயிருந்து வெளிவாற ‘வெளிச்ச’த்தில வந்திருக்கு.”

“நீ போராளி மட்டுமில்லை, கவிதைக்காறியெண்டும் அறிஞ்சதில நல்ல சந்தோஷம். இது எதைப்பற்றின கவிதை? காதல் கவிதை… இல்லாட்டி போராட்டம் பற்றின கவிதை… அப்பிடித்தானிருக்கும்” என்று ஒரு குமிழும் சிரிப்போடு கேட்டார் சாமி.
“ரண்டுமில்லை. இது வாழ்வு பற்றின கவிதை. சமாதானத்தின் வாழ்வு எண்டு தலைப்பு வைக்கலாமெண்டிருக்கிறன்.”
“நல்லது. இப்ப தேவையான கவிதை. போர் எப்பவும் அழிவோட சம்பந்தப்பட்டதுதான், மகள். அது எதுக்கானதெண்டாலும் சரி. ஆனா விடுதலையில்லாம மனிசரும் இல்லை. அப்ப... போர் தேவையாயுமிருக்கு. ஆனா அழிவு நிச்சயம். ஒண்டு தெரியுமோ உனக்கு? வெற்றிக்காகவே நடத்திற போரெண்டும், விடுதலைக்காக நடத்திற போரெண்டும் ரண்டு வகையிருக்கு. விடுதலையை மய்யப்படுத்தி நடக்கிற போர் இடையில நிக்கும். நிக்கவேணும். நிக்கிறமாதிரித்தான் அந்தப் போரும் ஒரு அவதானத்தில நடக்கும். சமரசம் வாறதுக்கான எல்லா வாசலும் அப்ப திறந்தே இருக்கவேணும். ஜெயத்தைமட்டும் குறியாயிருக்கிற போரில ஒரு வெறி இருக்கு. எந்த ஒரு தரப்பாவது முற்றாய் அழியாமல் அந்தப் போர் முடியிறதில்லை. அந்தப் போர் நல்லமில்லை.”
நிலா திடுக்கிட்டாள்.

அதுதானே அவளது மனத்திலும் இருப்பது?

அதுதானே அவளும் கஜந்தனும் கதைத்தது?

அதுதானே அவளது கவிதையின் உட்பொருளாய்க் கிடப்பது?

மேலே பேச இல்லைப்போல் நிலா சாமியிடம் சொல்லிக்கொண்டு தன் வீட்டுக்கு நடந்தாள்.

[தொடரும்]

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 09 September 2020 01:24