தொடர் நாவல் : கலிங்கு (2003 – 2)

Sunday, 31 May 2020 23:34 -தேவகாந்தன்- தேவகாந்தன் பக்கம்
Print

வடலி' பதிப்பக வெளியீடாக வெளியான எழுத்தாளர்  தேவகாந்தனின் நாவல் 'கலிங்கு'. தற்போது 'பதிவுகள்' இணைய இதழில் தொடராக வெளியாகின்றது. இதற்காக தேவகாந்தனுக்கும், வடலி  பதிப்பகத்துக்கும் நன்றி. நாவல் 'கலிங்'கை வாங்க விரும்பினால் வடலியுடன் தொடர்பு கொள்ளுங்கள். வடலியின் இணையத்தள முகவரி: http://vadaly.com


3

தேவகாந்தனின் 'கலிங்கு'எழுத்தாளர் தேவகாந்தன்இன்னும் விடிந்திராத ஒரு பொழுதில் நிலா கண்விழித்தாள். அப்பா கூடத்து அகல வாங்கில் படுத்துத் தூங்கியபடி. அம்மா வாளியில் தண்ணீர் தூக்கிக்கொண்டு உள்ளே போனபடியிருந்தாள். அவளுடைய நாள் ஆரம்பித்துவிட்டது. அம்மாபோல சிலரையே அவள் தெரிந்திருந்தாள். யாரோடும் நின்றோ இருந்தோ அவள் பேசுவதுகூட ஒரு சம்பிரதாயத்திலும் தேவையிலுமே. கால்களிலே சில்லுகளைக் கட்டிக்கொண்டான ஒரு விசையிருந்தது அவளில். அவளுக்கு பொழுதுபோக்கும் வேலைதான். வீடு கூட்டுதல், துணி துவைத்தல், சமையல் ஆகிய அன்றாட வேலைகள் முடிந்த பின்பு, வளவில் எதையாவது செய்துகொண்டிருப்பது அவளது பொழுதுபோக்குத்தான். மறவன்புலவிலிருந்து, ரிவிரச நடவடிக்கையில் ஓடநேர்ந்தபோது சாவகச்சேரி கற்குழியில் யாருடைய வீட்டிலோ தங்கிவிட்டு, ‘சண்டை முடிஞ்சுது, வாருங்கோ வீட்டை போகலாம்’என்று நாலாம் நாளே புறப்பட்டவள் அவள். அவளே முதலில் மீள்குடியேற்றத்துக்கு வெளிக்கிட்ட ஆளாயும் இருந்திருக்கலாம். கற்குழி வீட்டில் அவளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்களை அவள் மீண்டும் சென்று பார்த்து நலன் உசாவி வந்திருப்பாளென்று நிலா எண்ணவில்லை. அதற்கு முந்திய ஒப்பறேஷன் லிபறேஷன் காலத்தில் ஜனங்கள் கூண்டோடு இடம்பெயர்ந்து வந்தபோது, அவர்களுக்கு புகல் மறுக்கவும் அவள் செய்ததில்லை. இரண்டு வேளைகள் அலுக்காமல், புறணிவிடாமல் அவித்துப் போட்டுக்கொண்டே இருந்தாள். போனவர்களில் யாரும் பின்னால் வந்து அவளையும் நலன் விசாரித்ததில்லைத்தான். அம்மா கொஞ்சம் படித்திருக்கிறாளென்று, அவளுக்கு எழுத, வாசிக்க தெரியுமென்பதிலிருந்து நிலாவுக்கு ஒரு ஊகம் இருந்தது. அதைக்கூட அவள் பயன்படுத்தி நிலா கண்டதில்லை. வாசிப்பின் வெகு தொலைவில் அம்மா நின்றிருந்தாள். அது அப்பாவின் எப்போதும் வாசிப்பு என்ற பழக்கத்துக்கு நேர் எதிரானது. என்றாலும் வீட்டை அந்தளவு கச்சிதத்தில் நடத்தியதற்கு வாசிப்பு,  பொழுதுபோக்கு என எதுவுமில்லாமல் கால்களில் சில்லுகளைக் கட்டித் திரியும் அம்மாவாலேயே சாத்தியமானதென்பதையும் நிலா உணராமலில்லை.

வித்தியா படுக்கையிலிருந்து எழுந்து குளிக்க போய்க்கொண்டிருந்தாள். அன்றைக்கு வேலைக்கு விடுப்பெடுத்திருந்ததாய் முதல்நாள் சொல்லியிருந்தாள். சனிக்கிழமைகளில் விடுப்பெடுப்பாளா என்று அப்போது நிலாவுக்கு யோசனை வந்தது. வெள்ளிக்கிழமையாதலால் அக்காவுடன் கோவிலுக்குப் போகலாம். அது இருவருக்குமான தனிமையையும் தரக்கூடியது. அறைக்குள்ளே குசுகுசுக்காமல் சில விஷயங்களை உணர்வோடு கதைக்க நல்ல வாய்ப்பானது கோயில் முற்றம். கூடத்துள் இரவு புழுங்கி அவிந்திருந்தது. அறைக்குள்ளே எப்படி இருந்திருக்குமோவென நிலா நினைத்துப் பார்த்தாள். இங்கிலாந்திலிருந்து வந்தவர்களுக்கு அது மிகவும் சிரமமாகவே இருந்திருக்கும். விடிந்தெழும்பியதும் பெட்டியைத் தூக்கு என்று கஜந்தன் ஒருவேளை பிடிவாதம் பிடிப்பானோ தன் அப்பாவுடன்?

அப்போது இன்னும் விடிந்திருந்தது கண்டு நிலா எழுந்து பாயைச் சுருட்டி வைத்தாள். அம்மா திரும்பி எதற்கென்றில்லாமல் அவளைப் பார்த்துச் சிரித்தாள். அது அவள் கனதியான யோசனைகள் ஏதுமற்ற மனநிலையில் இருப்பதன் வெளிப்பாடு. அம்மாவின் முகம் எவ்வளவு ஆறுதலாக, நிறைவாக இருக்கிறதென்று எண்ண நிலாவின் நெஞ்சுக்குள் ஒரு மெல்லிய வலி  எழுந்தது. அம்மா எப்போதும் எவரின் எந்தக் குறையையாவது புறுபுறுத்துக்கொண்டே இருப்பாள். இப்போது அது அவளில் கொஞ்சம் மாறியிருக்கிறது.

நிலா இயக்கத்தில் சேர்ந்தது எந்தத் தாய்க்கும்போல அவளுக்கும் துக்கமாகவேதான் இருந்திருக்கும். ஒருவேளை நிலாவின் வருகை யுத்தநிறுத்தம் இல்லாத காலத்திலாய் இருந்திருந்தால், அம்மா இவ்வளவு மகிழ்ச்சிகரமாக இருந்திருப்பாளாவென்று நிலாவுக்குச் சந்தேகம். சமாதான சூழலில்தான் இயக்கத்திலிருந்தவள் வீட்டுக்கு வந்ததையும், ஏதோ வெளியூரில் வேலைக்குப் போன மகள் வீடு வந்ததுபோல அவளால் கொண்டாட முடிகிறது.

அந்தளவில் அப்பாவும் எழுந்துவிட வீடு கலகலப்பானது. இங்கிலாந்திலிருந்து வந்தவர்கள் தாங்களாகவே எழும்பவேண்டும். வேறு நாட்டில் அவர்களுக்கு தூங்கும், எழும்பும் விஷயங்களில் நேரத் தகராறு இருக்கிறதென்று நிலா முன்பே அறிந்திருக்கிறாள். மேலும் எத்தனை மணிக்கு தங்கள் கதை பேச்சுக்களை முடித்துக்கொண்டு அவர்கள் தூங்கினார்களென்றும் அவளுக்குத் திட்டமில்லை. அந்த வெக்கையும் அவர்களை இடைஞ்சல் செய்யக்கூடியது. ஒருவேளை காலையில்தான் தூங்கவும் அவர்கள் தொடங்கியிருக்கலாம்.

“போய்க் குளிச்சிட்டு வா, நிஷா. இண்டைக்கு வெள்ளிக்கிழமைதான, அக்காவோட கோயிலுக்கு போட்டு வாவன்” என்றாள் அம்மா. நேரிலே பார்க்காமல் பாத்திரங்களைத் தேய்த்தபடிதான் சொல்லிக்கொண்டு இருந்தாள். அது நல்ல வாஸியாய் அமைந்தது நிலாவின் திட்டத்துக்கு. உடனே குளிக்க கிளம்பினாள். வித்தியாவும் நிலாவும் கோயிலுக்குப் புறப்பட்டார்கள். சேலை கட்டியிருந்ததில் யாருக்கும் நிலாவை நிஷாவாய்க் காண சிரமமிருந்தது. அல்லாவிட்டாலும்தான் பலரால் அவளை அடையாளம் கண்டிருக்க முடியாமலே இருந்திருக்கும். அவர்களுக்குத் தெரிந்தவர்களாக அவள் இல்லைப்போல், அவளுக்குத் தெரிந்தவர்களாகவும் அங்கே பலர் இல்லை. அது ஒரு புதிய குடியேற்றம்போல. வேர்விட்ட, விழுதுகள் விட்ட தங்கள் தங்கள் ஊர்களில் வாழ பலபேருக்கு கொடுப்பனவு இருக்கவில்லை. ஊரைவிட்டு ஓடுகிறவர்கள் பாதுகாப்பின் வாய்ப்புக் கண்ட ஊரில் தங்கிவிடுகிறார்கள்.

கோயில்களில் பூஜைகள் எந்த ஊரிலும் சிறப்பாக நடந்தன. படையினரிடமிருந்து அதற்கு எந்த இடையூறும் ஏற்படவில்லை. மக்களுக்கும்கூட, கதைக்கவும் உலாத்தவுமென அந்த இடம் மிகுந்த தோதாக இருந்தது. ஒருசிலபேரேனும் எப்போதும் கோயில் முன்றிலில் காணப்பட்டனர். கோயில்கள் பயமறுத்துக் கிடந்த காலம் அது. தெய்வச் சிலைகளை தூக்கிக்கொண்டு வேறிடம் ஓடும் நிலை இனிமேல் வந்தாலும் அப்போதில்லாதிருந்தது. அதனால் தெய்வங்களும் நிம்மதியாக இருந்தன. கொண்டுவந்திருந்த சூடத்தைக் கொடுக்க தீபாராதனை காட்டிவந்து ஐயர் பிரசாதம் கொடுத்தார். வாங்கிய பின் தட்சணையை இட்டுவிட்டு வித்தியாவும் நிலாவும் கோயில் முன்னாலுள்ள ஆலமரத்தடியில் வந்து அமர்ந்தனர்.

“வித்யா, நீ இப்பவும் அந்த ஆமியைப் பாக்கப் போய்க்கொண்டிருக்கிறியோ?”

நிஷாவின் கேள்வி நாட்பட்ட புளித்த மணமடித்ததை வித்தியா உணர்ந்தாள். அந்தக் கேள்வியை எவ்வளவு காலம் அவள் தன்னுள் ஊறப்போட்டிருந்தாளோ?

மனம் களைத்த மூச்சொன்றை இழுத்து விட்டாள் வித்தியா. அவள் அதற்கான பதிலை அவதானமாகச் சொல்லவேண்டும். அரசியல் வகுப்புகளும், அனுபவங்களும், வாசிப்புகளுமாய் அந்த மூன்றாண்டுக் காலத்தில் நிஷா எவ்வளவோ வளர்ந்திருக்கிறாள். முன்புபோல ஒரு விஷயத்தை அவளுக்கு முன்னால் வித்தியாவால் வைத்துவிட முடியாது. ஒரு சொல் அதன் சரியான அர்த்தத்தை தாங்கியிருக்கவேண்டும். இல்லையேல் தனது அக்காவும் துலைந்துபோனாளென்று நிஷா நினைக்கவும் நேரலாம். அவள்,

“எல்லாச் சனிக்கிழமையளிலயும் இல்லை…” என்றாள் மெதுவாக.

“இப்பவும் சந்திக்கப் போய்க்கொண்டிருக்கிறாய் அப்ப?”

“அப்பப்பதான்.”

“அதென்ன அப்பப்ப? இப்பவும் நீ உன்னைச் சிதைக்க விட்டுக்குடுத்துக்கொண்டு இருக்கிறாயெண்டு சொல்லு.”

“சனியில்லாத நாள்களிலயும் சிலவேளை சந்திக்கிறம்.”

அவளுக்கு அந்த விஷயத்தைத் தொடவேண்டியிருந்தது. நிஷா புரிந்துகொள்வாளா?

“அப்ப… சந்திக்கிறதில உனக்கும் விருப்பமிருக்கு.”

வித்தியா மௌனமாயிருந்தாள். பிறகு, “நானும் விரும்பத்தான் இப்ப முயற்சிபண்ணிக்கொண்டு இருக்கிறன். எனக்கு வேற வழி இருக்கா, நிஷா?” என்றுவிட்டு அவளது பதிலை எதிர்பார்ப்பதுபோல் தங்கையை நிமிர்ந்து பார்த்தாள். அக்காவின் கண்களில் இருப்பது என்ன? தன்னை எதுவிதத்திலும் தவறாக அவள் எண்ணிவிடக்கூடாதென்ற ஆதங்கமாவென நிலா யோசித்தாள்.

“உங்களுக்க இருக்கிறது அப்ப லவ்தான். உனக்குள்ளயும் அது இருக்கு. எனக்கு அது விசித்திரமாயிருக்கு. எண்டாலும் லவ்விருக்கெண்டே வைச்சுக்கொள்ளுவம். உன்னை கலியாணம் செய்ய அந்தாள் சம்மதமாயே இருக்கா, வித்யா?”

“அதுக்குச் சம்மதம்தான். நிரந்தரமான சமாதானம் வந்திட்டுதெண்டா கலியாணம் செய்து ஊருக்கு கூட்டிக்கொண்டு போகும்.”

“சொந்த இடம் எதாம்?”

“தெற்கிலதான். கதிர்காமத்துக்குக் கிட்ட ஒரு கிராமம்.”

“கதிர்காமக் கந்தனை கும்பிடுகிற ஆளோ?”

“நீ பகிடி விடுறாய்.”

“அதைவிடு. நீ இதையெல்லாம் நம்புறியா, வித்யா?”

அவளே அதை அப்போதுதான் நினைப்பதுபோல மௌனத்தில் சில மணித்துளிகளைக் கடத்தினாள். பிறகு சொன்னாள்:

“நம்பத்தான வேணும்?” அதற்கு நிலாவிடமிருந்து பதில் வராதுபோக வித்தியா தொடர்ந்தாள்: “அது சொன்ன கதையளக் கேட்டா லவ்வெண்டு வராட்டியும், இரக்கம் கட்டாயம் வரும். ஓஎல் படிச்சிட்டு வேலைக்கு அலைஞ்சுகொண்டிருந்துதாம் ஊரில. மூண்டு தங்கச்சிமார். தேப்பன் ஜேவிபி காலத்தில… எண்பத்தொன்பதில எண்டு நினைக்கிறன்… மறியல்ல இருக்கேக்க செத்துப்போச்சாம். தாய்தான் தங்களை வளத்துதாம். புத்தசாமி ஒருத்தர் வந்து குடும்பத்தைக் காப்பாத்த தான் ஒரு வேலைக்கு ஒழுங்கு செய்யிறதாய்ச் சொல்லித்தானாம் தன்னை ஆமியில சேரவைச்சது. தனக்கு தமிழாக்கள், சிங்கள ஆக்களெண்டு துவேஷம் இல்லையெண்டிது, நிஷா. ஆமியில இருக்கிறது வேலைக்காண்டி எண்டும் சொல்லிச்சுது. தாய்க்கு கெதியில லெற்றர் எழுத இருக்கு எங்களைப்பற்றி.”

“சொன்னதெல்லாம் நம்பக்கூடினமாதிரி இருந்துதா உனக்கு?”

“ஒராளின்ர முகத்தைப் பாத்தா சொல்லுறது உண்மையா பொய்யா எண்டது தெரியும்தான?”

“அது, ஒருதரின்ர முகத்தைப் பாத்து உண்மை பொய் அறியலாமெண்ட விஷயம் சொல்லுற ஆளுக்கு தெரியாம இருக்குமட்டும்தான் சரி. இப்ப படுஅயோக்கியனும் மூஞ்சையை பாவியாய் வைச்சுக்கொண்டுதான் முழுப்பொய்யைச் சொல்லுறான்.”

“அப்பிடியெண்டாலும், ஒருக்கா நடிக்கலாம்… ரண்டு தரம் நடிக்கலாம்… எப்பவுமே நடிச்சுக்கொண்டிருக்க ஏலாது, நிஷா. எனக்கென்னவோ நம்பலாம் மாதிரித்தான் இருக்கு.”

நிலா வானத்தைப் பார்த்தாள். அவர்கள் வரும்போது பஞ்சுப் பொதிகள் குவிந்திருந்ததுபோல் தோன்றியிருந்தது வானம். அப்போது சாம்பல் நிறச் சேலையால் இழுத்து மூடப்பட்டிருந்ததுபோல் காணப்பட்டது. நேரஞ்சென்றே வெளிவந்திருந்த சூரியனும் அப்போது மூடுண்டு கிடந்தது. மழை வருமா? அந்த மூட்டத்துக்குத்தான் அவ்வளவு வெம்மை கெலித்தெழுந்ததோ இரவு?

வித்தியா மேலும் தொடர்ந்தாள்: “சொன்னா நீ நம்பமாட்டாய். அதுவும் நான் பிறந்த அதே மாசம் தேதியிலதான் பிறந்தது.”

“ம்… என்ன பேராம்?”

“ஶ்ரீமல்… ஶ்ரீமல் பத்திரான.”

“வழக்கமான சிங்களப் பேராய்த் தெரியேல்ல.”

“தெற்கில சனத்தின்ர வாழ்க்கையும், போக்கும் வித்தியாசம்தான? கொழும்பைவிட அவையின்ர பேருகளும் ஒருமாதிரித்தான் இருக்கும்போல.”

"அப்பிடியான இடத்தில போய் உன்னால வாழ்ந்திட ஏலுமெண்டு நினைக்கிறியோ, வித்யா?”

“அங்கயே போய் நாங்கள் வாழப் போறேல்லத்தான. வேலை எங்க கிடைக்குதோ, அந்த இடத்திலதான் போய் இருப்பம்.”

“அதற்கும் எவ்வளவு காலம் ஆகுமோ?”

“அந்தக் காலம் கெதியில வருமாம். தனக்கு ஆமியைவிட்டு ஓடியிடவேணும்போலதானாம் கிடக்கு. அப்பிடி ஓடினா ஆமியில அது குற்றம். பிறகு ஒரு இடத்தில நிலையாயிருந்து குடும்பம் நடத்தேலாது. அதாலதான் ஶ்ரீமல் இன்னும் ஆமியில இருக்கு. சண்டை முடிஞ்சாப் பிறகு விலத்தியிடும்.”

மௌனம் விழுந்திருந்த சிறிதுநேரத்தின் பின், “சொல்லுறனேயெண்டு வருத்தப்படாத, வித்யா. உன்ர விருப்பமில்லாமல் உன்னோட போகம் வைச்ச ஒரு ஆளோட, இந்தமாதிரி ஒரு உறவில இணைய உனக்கு மனசில கசப்பாய்… அருவருப்பாய்… வரேல்லயோ?” என்று கேட்டாள் நிலா.

என்ன பதிலை வித்தியாவால் அதற்குச் சொல்ல முடியும்?

அழலாம். அழுகையும் வந்தது. ஆனால் கோயிலில் நிற்கிறவர்கள் என்ன நினைப்பார்களோவென பிரயத்தனத்தில் அடக்கிக்கொண்டு வித்தியா சொன்னாள்: “தனக்கு அந்தமாதிரி எண்ணமே இருக்கேல்லையெண்டு ஶ்ரீமல் சொல்லிச்சுது. என்னை அடிக்கடி அது பாத்திருக்கு. எப்பிடியும் என்னை எடுத்திடுறதெண்டு முடிவுகட்டியிருக்கு. ஒருதிக்கு விருப்பமில்லாத நேரத்தில பிறகும் முன்னுமாய் கலைச்சுத் திரிஞ்சு லவ்வைச் சொல்லுறதுமாதிரித்தான் என்னை பஸ்ஸிலயிருந்து இறக்கி கூட்டிக்கொண்டு போனதாம்.”

“இது ஆமிக்காறன்ர முறையாமோ?”

“தான் அண்டைக்கு குடிச்சிருந்துதாம்.”

“அப்பிடியெண்டாலும் சரசுவை ஏன் மினிபஸ்ஸால இறக்கவேணும்? சரசுவையும் ஆரும் விரும்பிச்சினமாமோ? கேட்டியா?”
“சரசுவையும் இறக்கினாத்தான் செக் பண்ண இறக்கினமாதிரி இருக்குமெண்டு கூடநிண்ட ஆமி சொன்னானாம்.”

“உண்மையில சரசுக்கு என்னதான் நடந்தது, வித்யா?”

“எங்கள பஸ்ஸால இறக்கினவுடன, கச்சேரி றோட்டில ஆக்களில்லாத ஒரு வீடு இருக்கு, அங்கதான் கொண்டுபோச்சினமாம். அப்பிடிச் செய்திருக்கக்குடாதெண்டு ஶ்ரீமல் அழுவாரைப்போல சொல்லிச்சுது. அங்க முதல்லயே போன ஆமியள் கொஞ்சப்பேர் நல்லாய்க் குடிச்சிருந்தாங்களாம். ஶ்ரீமல்லோட நானிருந்ததால அவங்கள் சரசுவைப் பிடிச்சுக்கொண்டாங்களாம். எல்லாம் ஒரு முசுப்பாத்தியாய்த்தான் துவங்கிச்சுதாம். மேல்ல கை வைச்சவுடனை சரசு கத்தத் துவங்கியிருக்கு. பட்டப்பகல்ல ஆரும் கேட்டாலுமெண்டு ஆரோ ஒருதன் அதுகின்ர வாயைப் பொத்தியிருக்கிறான், சரசுக்கு மயக்கம் போட்டுட்டுது. பிறகு சரசு எழும்பேல்லையெண்டு சொன்னாங்களாம். உண்மையில சரசுக்கு என்ன நடந்ததெண்டு ஶ்ரீமல்லுக்கு அண்டைக்குத் தெரியாதாம், நிஷா. அடுத்தடுத்த நாளிலதான் கதை அவைக்குள்ள வெளிக்கிட்டுது.”
“பாவம், சரசுவை கடைசியில என்ன செய்தாங்களோ?”

“அதுக்குத் தெரியாது, நிஷா. நான் கேட்டன். அப்பிடித்தான் சொல்லிச்சுது.”

“இதை கட்டாயம் மனித உரிமை ஆணையத்தில முறைப்பாடு செய்திருக்கவேணும், வித்யா. நீ, உன்ர விஷயம் வெளிய வரக்குடாதெண்டு நடந்ததெல்லாத்தையும் மறைச்சிட்டாய். இனிமேலும் இதுமாதிரி ஒண்டு நடக்காமலிருக்க இதெல்லாம் உரிய இடங்களில புகாராய் இருக்கவேணும்.”

“எனக்கு விளங்குது, நிஷா. ஆனா… ங்ஆ… அடுத்தநாள் சரசுவின்ர புருஷன் அவவைத் தேடி கடைக்கு வந்திது. சனிக்கிழமை வேலையால சரசு வீட்டை வரேல்லயெண்டிது. அண்டைக்கும் என்னோடதான் பஸ்ஸில வந்துதோ, என்ன நடந்தது எண்டு கேட்டுது.”

“அதுக்கு நீ என்ன சொன்னாய்?”

“வழக்கமாய் ஒண்டாய்ப் வாறதுதான். அண்டைக்கு சாமான் வாங்கவேண்டியிருந்ததால நான் கூடப்போகேல்லை எண்டிட்டன்.”
“இதெல்லாம் சின்ன விஷமெண்டு நீ நினைச்சிருக்கிறாய்போல. ஒரு உயிர் இல்லாமல் போயிருக்கு, வித்யா. அதுக்கு என்ன நடந்ததெண்டும் வெளியில தெரிய வரேல்ல. ஒருவேளை உன்னாலதான் சரசுவுக்கு இந்த நிலமை வந்ததெண்டு சொன்னா, நீ என்ன பதில் சொல்லுவாய்?”

“ரா ராவாய் அதை நினைச்சு அழுதிருக்கிறன், நிஷா. நீயும் இல்லை. தனியக் கிடந்து அழுதிருக்கிறன். துக்கம் தானாய் தெளியிறவரைக்கும் அழுதிருக்கிறன். மூண்டு வரிஷமாச்சு, இண்டைக்கு அவளை நினைச்சாலும் செஞ்சு பொறுக்கேலாமல் இருக்கும். இதைவிட வேற நான் என்ன செய்யேலும், சொல்லு?”

“உன்னைச் சொல்லி என்ன பிரயோசனம்? எங்கட சனத்துக்கு அப்பிடி ஒரு வல்விதி எழுதியிருக்கு, வித்யா. உனக்கு, சரசுக்கு… அதைப்போல ஆயிரம் ஆயிரம் பேருக்கு இப்பிடி நடந்திருக்கு. இப்பவும் நடந்துகொண்டிருக்கு. நீகூட அந்த விபத்தில தப்பித்தான் வந்து இப்ப உயிரோட இருக்கிறாய். அப்பிடி எதாவதொண்டு உனக்கு நடந்திருந்தா எங்களால எப்பிடித் தாங்கியிருக்கேலும், சொல்லு? நினைச்சா எனக்கு உடம்பே நடுங்குது. எண்டாலும் இந்த விஷயம் வெளியில வந்திருக்கவேணும். இதில எனக்கு வேற அபிப்பிராயம் இல்லை.”

“அண்டைக்கு கடைக்கு வந்த சரசுவின்ர புருஷனிட்ட கடையில நிண்ட எல்லாரும் சொல்லித்தான் விட்டம், மனித உரிமை அமைப்பில, பொலிசில, ஆமியில போய் என்றி போடச்சொல்லி.”

“அந்தாள் போய்ச் சொல்லியிருக்குமோ? அவ்வளவு விபரம் தெரிஞ்ச ஆளா அது?”

“சொல்லியிருக்குமெண்டுதான் நினைக்கிறன். பிறகு அந்தாளை நான் காணேல்லை.”

“ம்…! வேலையெல்லாம் உனக்கு எப்பிடிப் போகுது?”

“எதோ போகுது. பெரிசாய் யாவாரமில்லை. சனத்திட்ட காசு இருக்குதுதான். வெளியில இருக்கிற சொந்தங்கள் அனுப்புதெல்லே? ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள்ள இருக்கிறதால அதுக்கான கஷ்ரமெண்டு ஒண்டிருக்கு. மற்றும்படி சண்டையெண்ட கஷ்ரமில்லாமல் இருக்கினம். யாவாரம் கடையளில குறைவெண்டாலும் இயக்கத்துக்கும் காசு கட்டவேணும். அப்பாட்ட படிச்ச ஆளெண்டபடியா இன்னும் என்னை வைச்சு சம்பளம் தந்துகொண்டிருக்கிறார் ஓணர். அதுசரி, உன்ர விஷயம் என்னமாதிரி? நல்லாய் இருக்கிறியோ இயக்கத்தில?”

“எனக்கென்ன குறைச்சல்? நான் விரும்பித்தான இயக்கத்தில சேந்தனான். என்ன ஒண்டு, தோளில ஆனையிறவுச் சமரில காயம் பட்டுட்டுது. இப்ப மாறியிட்டுது. எண்டாலும் பாரமான வேலையள் செய்யேலா.”

“இஞ்ச இருக்கிறமாதிரி இன்னும் ஆறு மாசத்துக்கு இருந்தியெண்டா தோள்மூட்டு நோ மெல்லமெல்லப் போயிடும்.”

“அப்பிடித்தான் சொல்லுகினம். என்ர படையணித் தலைவி துர்க்கா அக்காவும் என்னை இஞ்ச அனுப்பேக்க அப்பிடித்தான் சொன்னா.”

“வன்னியில இருக்கிறதோ, இஞ்ச இருக்கிறதோ உனக்கு விருப்பமாயிருக்கு?”

“எல்லாம் தமிழாக்கள்தான், வித்யா. எண்டாலும் இருவேறு தமிழாக்கள் எண்டுதான் எனக்குச் சொல்லத் தெரியுது. வன்னியின்ர வாழ்முறையே வேற. அந்த நிலவியலுக்கு ஏத்தமாதிரியான வாழ்க்கை அது. அதுகின்ர சரித்திரமே குடாநாட்டுச் சரித்திரத்தைவிட வித்தியாசம். கோயில், தெய்வம் எல்லாம்கூட  வித்தியாசம். எண்டாலும் இப்ப எனக்கு இஞ்ச இருக்க விருப்பமாயிருக்கு. இந்த சனத்தின்ர ஆறுதலான முகத்தை கொஞ்சக்காலம் பாத்துக்கொண்டு இருக்கவேணும்போல இருக்கு. என்னையும் போராளியாய் இஞ்ச நான் நினைக்கிறேல்ல. ஆயுதம் தரிக்கேலாதுதான, அதால.”

“சனம் அங்க பயமில்லாம இருக்குங்கள், இல்லையே?”

“அங்க பயமில்லையெண்டது சரிதான். எல்லையளில கொஞ்சம் கரைச்சலிருக்கு. மற்றப்படி பிரச்சினையொண்டுமில்லை. எண்டாலும் ஒரு முழு வாழ்க்கையை அங்க ஆரும் வாழேல்லையெண்டுதான் எனக்குத் தெரியுது. அங்க நடக்கிறது வெறும் சீவனம்தான். வாழ்க்கையை தமிழ்ச் சனம் துலைச்சு கனகாலம் ஆயிட்டுது.”

“எல்லாரும் இஞ்ச இப்ப கதைக்கிறமாதிரி, இப்பிடியே ஒரு சமாதான ஏற்பாடு வந்திடுமெண்டு நீயும் நினைக்கிறியோ, நிஷா?”
“இயக்கத்தின்ர நிலைப்பாடு எனக்குத் தெரியா. சண்டை துவங்கியிட்டுது, இந்தக் களமுனைக்குப் போ எண்டால் போகவேண்டிய ஆள்தான் நான். எனக்கெண்டு ஒரு முடிவில்லை. ஆனா அபிப்பிராயமிருக்கு.”

“என்ன அது?”

“இயக்கம் அடையக்கூடிய ஆகக்கூடுதலான அடைவு இதுதானெண்டு நான் நினைக்கிறன், வித்யா. வடக்கில முகமாலையும், தெற்கில அம்பாறையும், கிழக்கிலயும் மேற்கிலயும் கடலுமாய் எல்லையள் வரையறுக்கப்பட்ட ஒரு தமிழீழம்  இந்த சிறீலங்காவுக்குள்ள இப்ப இருக்கு. புலியளின்ர கட்டுப்பாட்டில  இருக்கிற கடற்கரையின்ர நீளம் சிறீலங்காவின்ர கடற்கரை நீளத்தைவிட பெரிசு. இந்த நிலையில இந்த யுத்த நிறுத்த காலத்தை இயக்கம் சரியாப் பயன்படுத்தவேணுமெண்டு நான் நினைக்கிறன். நானறிஞ்ச மட்டில, கிழக்கில புதிய நிலையள எடுக்கவும், எடுத்த நிலையள பலப்படுத்தவும் இயக்கம் முயலுறதப் பாத்தா, அதுக்கு ஒரு தீர்வை அடையிற எண்ணம் இல்லையோவெண்டு சந்தேகமாயிருக்கு.”

“அப்ப… அன்ரன் பாலசிங்கம் சொல்லற மாதிரியான ஒரு தீர்வாயிருந்தா உனக்கு விருப்பமாயிருக்குமோ?”

“சரியாய்ச் சொன்னாய், வித்யா. அவர் சொல்லுறது சர்வதேச நிலைமைக்கும் ஏற்றதாயிருக்கெண்டு எங்களில சிலபேர் அங்க நம்புறம்.”

“இப்பிடியெல்லாம் அங்க காம்ப்பிலயிருந்தும் கதைப்பியளோ?”

“ரகசியமாய்க் கதைப்பம்.”

“எப்பிடி இதெல்லாம் போய் முடியுமோ? சனம்பட்ட அவதி இவ்வளவத்தோடயாச்சும் முடியவேணும். இந்த யுத்த நிறுத்தத்தோடயே ஒரு சமாதானத் தீர்வு வந்தா நல்லதுதான்.”

“அதுவும் கெதியில வந்தா நல்லது. இல்லையே, வித்யா?”

“கெதியில வந்தா நல்லதுதான்.”

“அப்பதான உனக்கு கெதியில கலியாணம் நடக்கும்.”

“போடீ…!”

“அதுசரி, உன்ர தங்கச்சியொருத்தி புலியளில நல்ல துவக்குச் சூட்டுக்காறியாய் இருக்கிறாளெண்டு உன்ர ஶ்ரீமல்லிட்ட சொல்லியிட்டியோ?”

“சொல்லியிட்டன்.”

“அதுதான பாத்தன். அப்ப உனக்கும் லவ்தான்.” வித்தியாவின் தோளில் கைபோட்டுக்கொண்டு நிலா சொன்னாள்: “உன்னைப் பகிடி பண்ணுறதாய் நினைக்காத. முந்தியே ஒரு பாதிப்பை அடைஞ்சிட்டாய். ஏமாற்றம் அது இதெண்டு இனியும் ஒரு பாதிப்பு உனக்கு வரக்குடாது, வித்யா. அதுதான் என்ர கவலை. கொஞ்சம் கெடுபிடியாய் உன்னோட கதைச்சிருந்தாலும், உன்ர நன்மைக்காண்டித்தான் அப்பிடி நான் கதைச்சனெண்டதை மறந்திடாத.”

“நீ என்ர தங்கச்சியடி. நீ ஒண்டும் சொல்லத் தேவையில்லை.”

“அப்பிடி எதாவது ஶ்ரீமல் பேசாமல் கீசாமல் ஊருக்கு ஓடுற எண்ணமிருந்தா, சொல்லு, என்ர தங்கச்சி துவக்கும் கையுமாய்த்தான் வருவாளெண்டு. எங்களோட நேருக்கு நேர் நிண்டு ஆமியால தாக்குப்பிடிக்க ஏலாதெண்டும் சொல்லு.”

“சொல்லுறன்” என்றுகொண்டு எழுந்தாள் வித்தியா. “மெய்யாய்ச் சொல்லப்போனா… ஶ்ரீமல்லுக்கு ஆயுதப் பயிற்சி அவ்வளவு இல்லையாம், நிஷா. தமிழ் படிச்சு சனத்தோட பழகி அவையின்ர நல்லபிப்பிராயத்தை எடுக்கிறதுதானாம் அதுகின்ர வேலை.”
“மெய்தான், வித்யா. தமிழ்ச் சனத்தோட பழகி அதுகின்ர மனநிலையில ஒரு மாற்றத்தை ஏற்படுத்துறதுக்கும், தகவலெடுக்கிறதுக்கும் ஆமியில அப்பிடியொரு பிரிவு இப்ப இருக்கு. ஒருவேளை மறுபடி சண்டை துவங்கினாலும் ஶ்ரீமல் தப்புறதுக்கு அதால நிறையச் சான்ஸ் இருக்கு, இல்லையே?”

வித்தியா சிரித்தாள். பிறகு, “எழும்பு, போவம். அம்மா இவ்வளவு நேரமாய்  காணேல்லயெண்டு அங்க தேடப்போறா.”
இருவரும் வீடுநோக்கி நடக்கத் தொடங்கினர்.

வெய்யில் இன்னும் ஊமை வெளிச்சத்தையே எறிந்துகொண்டு இருந்தது.

[தொடரும்]

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 09 September 2020 01:26