‘நம்பிக்கை இன்னும் இருக்கிறது’! புதியவன் இராசையாவின் 'ஒற்றைப்பனைமரம்' , பா.அ.ஜயகரனின் 'Insight’ நாடகம் பற்றிய மதிப்பீடுகள்!

Thursday, 04 July 2019 22:22 - தேவகாந்தன் - தேவகாந்தன் பக்கம்
Print

கிளைப் பனைமரம்

எழுத்தாளர் தேவகாந்தன்கடந்த ஜுன் 14, 2019இல் புதியவன் இராசையாவின் ‘ஒற்றைப் பனைமரம்’ திரைப்படத்தை ரொறன்ரோவில் பார்க்க முடிந்திருந்தது. புகலிட மற்றும் இலங்கைச் சூழலில் குறும்பட ஆக்கங்கள்போல் முழுநீள திரைப்படங்கள் வெளிவர ஆரம்பித்திருப்பது நல்ல சகுனமேயாகும். ஆனாலும் நம்பிக்கை தருகிற விதமான பெறுபேறுகள் கிடைக்கவில்லைப்போன்ற தோற்றமே காணக்கிடக்கிறது. அசோக ஹெந்தகம, பிரசன்ன விதானகெ போன்ற சிங்கள நெறியாளர்களது படங்களுக்கு நிகரானவளவுகூட  இவை உயர்ந்து செல்லவில்லை. இதில் உலகத் தரமென்பது கனவுக்கு எட்டாத்  தூரமாகவே இருக்கிறது. இந்த உண்மையை மறுப்பதில் பிரயோசனமில்லை. இதை நேரில் முகங்கொள்வதே செய்யத் தகுந்தது. ஆனாலும் ‘ஒற்றைப் பனைமர’த்தில் அதன் பிரதியாக்க மேன்மையை ஒரு பார்வையாளனாய் என்னால் வியக்க முடிகிறது. ஆயின், ‘ஒற்றைப் பனைமரம்’ அடையவேண்டிய உயரத்தை ஏன் அடையாமல் போனது என்ற கேள்வியும் அதனடியாகவே எனக்குள் முளைக்கிறது. பல கேள்விகளில் இது ஒன்று. ஆனாலும் முக்கியமான கேள்வி.

இத் திரைப்படம்  பார்வையாளனுக்கு எதுவுமே இல்லையென்பது நியாயமற்ற கூற்று. ஆனால் அது அடைந்திருக்க வேண்டிய உச்சம் தவிர்ந்திருக்கிறதென்பதும் நிஜம். அப்போதும்கூட முப்பத்தேழு உலக படவிழாக்களில் பங்குபெற்று பன்னிரண்டு விருதுகளை அது பெற்றிருக்கிறதான ஒரு தகவல் கண்டேன். American Filmatic Arts Awards இன் சிறந்த பரீட்சார்த்த பிறநாட்டு திரைப்பட வரிசையில் அந்தப் பரிசு கிடைத்திருக்கிறது. நல்லது. இது அவர்களது பார்வை. எனது பார்வை வேறு. ஆயினும் அது நம்பிக்கை தரும் புகலிட திரைப்படமாக இருக்கிறதென்பதையும் இந்த இடத்தில் நான் வலியுறுத்தவேண்டும்.

ஆரம்பத்திலேயே குறைந்தளவு மூலதன வசதியோடு தொடங்கிய இத் திரைப்பட முயற்சியில்  தான் பல தயாரிப்பு இடைஞ்சல்களை எதிர்கொள்ள நேர்ந்ததென ரொறன்ரோவில் திரைப்படம் முடிய  இடம்பெற்ற கலந்துரையாடலில் புதியவன் இராசையா  தெரிவித்திருந்ததை நினைத்துக்கொள்ளவேண்டும். அது ஏற்கப்படக் கூடியதுதான். ஆனாலும் மிகக் குறைந்தளவு பட்ஜெட்டில் சர்வதேச திரைப்பட விழாக்களில் விருது வாங்கி உலகின் சிறந்த சினிமா விமர்சகர்களால் பாராட்டுப்பெற்ற  திரைப்படங்களை நாம் மறந்துவிடக் கூடாது.

இத் திரைப்படத்தில்  தவிர்த்திருக்கக்கூடிய பல தவறுகள் போஸ்ற் புரொடக்‌ஷனில்தான் நிகழ்ந்துள்ளன. என் ஆதங்கத்தைக் கிளர்த்துவன அவைதான். குறிப்பாக எழுத்துக்கு முன்பாக வரும் சுமார் ஏழு நிமிஷ கடைசி யுத்தக் காட்சிகள் அவசியமற்றவை. அந்த நிகழ்வுகளை உடனடிப் பின்னால் வரும் காட்சிகள்மூலம் பார்வையாளன் சினிமாவிலிருந்தே உள்வாங்கியிருப்பான்.

தானே தன் சக பெண் போராளியை  அவளின் வேண்டுகோளின்படியே எனினும் சுட்டுக் கொல்லநேரும் அவலம் கதாநாயகியின் மனநிலையில் ஏற்படுத்தும் பாதிப்பை அவளது மனது பிளந்தெழும் வேறு பொழுதுகளில் ஒரு பின்னோட்ட துண்டுக் காட்சியாகக் காட்ட நிறையவே வாய்ப்பு இருந்தது. அதன்மூலம் திரைப்படம் மேலும் தன்னை இறுக்கிக்கொள்ள வழி ஏற்பட்டிருக்கும். படத் தொகுப்பாளர் சுரேஷ் அர்ஸ் அதைத் தவறவிட்டிருக்கிறார்.

சிறுமி அஜாதிகாவின் புல்லாங்குழல் பிரேமையை விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதன் காரணம் லேசாகவெனினும், அப்படியேதும் இருந்திருந்தால், காட்டப்பட்டிருக்கவேண்டும். மட்டுமல்லாமல், சிறுமி புல்லாங்குழலை மிகுந்த திறமையோடு வாசிப்பதை  திரைப்படத்திற்காக ஒப்புக்கொண்டாலும், வேறு தருணங்களிலும் புல்லாங்குழல் பின்னணி இசையாக வருவது  பார்வையாளனிடத்தில் ஒரு மயக்கத்தையும், ஒவ்வாமையையும் ஏற்படுத்துகிறது.  மற்றும்படி அஸ்வமித்ராவின் இசையமைப்பு திரைப்படத்தோடு இயைந்து செல்லும்படியாகவே இருக்கிறது.  கூடிய கவனமெடுத்திருந்தால் இக்குறைபாடுகளைத் தவிர்த்திருக்க முடியும்.

இத் திரைப்படம் குறித்த விமர்சனமெனின் இவைகுறித்து இன்னும் ஆழமாகச் சொல்லலாம்.  ஆனால் எனது பார்வை ஒரு மதிப்பீட்டிற்கானது மட்டுமே.

 

புதியவன் ராசையாவின் 'ஒற்றப் பனை மரம்'

சுந்தரம், கஸ்தூரி ஆகிய இருவருக்குமிடையே உள்ளோடியிருந்த உணர்வைக் காட்டுவதில் திரைப்படம் அபார வெற்றியை அடைந்திருக்கிறது. நடிகர்கள், இயக்குநர், பிரதியாக்ககாரர் ஆகிய முத்திறத்தாருமே இவ்வெற்றியில் சமமான பங்கினைப் பெறுகிறார்கள்.

பாத்திரங்கள் தம் குணசித்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள் என்பது சற்று மிகையே என்றாலும்  கஸ்தூரி, கஸ்தூரியின் இயக்க நண்பர்கள், சுந்தர், மற்றும் சிறுமி, அயலவர், வெளிநாட்டிலிருந்து வந்து எரிகிற நெருப்பில் பிடுங்கியது ஆதாயமென யுத்த அழிவிலிருந்து மீள முடியாத கணவனற்ற பெண்களை வலைவீசும் காமுக பாத்திரங்களில் நடித்தவர்கள்  அனைவருமே அமெச்சூர் நடிகர்களாயிருந்தும் பொருட்படுத்தக்கூடிய விதமாக நடித்திருக்கிறார்கள்.
இவர்களில் கஸ்தூரியின் நடிப்பு அற்புதமானது. கணவனைப் போரில் இழந்தமை, யுத்தத்தில் தன் சக போராளியையே கொல்லநேரும் மனச் சிதறல், யாருமாயில்லாத ஒருவருடன் மனைவியாக அகதி முகாமில் பதியநேரும் துர்ப்பாக்கியம், வெளியில் தலைவிரித்திருக்கும் கலாச்சார சிதைவினால் அடையும் தார்மீகக் கோபம் ஆகிய உணர்ச்சிகளை மௌனத்தினாலேயே காட்டிவிடுகிறார் அவர். அவருக்கு ஈடுகொடுக்கிறது சுந்தர் பாத்திரத்தில் நடித்த புதியவனின் நடிப்பு. இந்த இடங்களில் மகிந்த அபேசிங்கவின் ஒளிப்பதிவு மிகப் பொருத்தமாக இருக்கிறது.

இறுதியாக என் மதிப்பீட்டுக்கு வருவது திரைப்படத்தின் செய்தி; அது கொண்டிருக்கும் அர்த்த பரிமாணம்.

சுந்தரத்திற்கும் கஸ்தூரிக்குமிடையிலான கரிசனைகள் அந்தளவில் மட்டுமாக இல்லையென்பதை மிக அழகான நடிப்பின் மூலமே நடிகர்கள் வெளிப்படுத்துகிறார்கள். நெறியாள்கையின் திறமையும் இதில் பெருமளவு உண்டு. இந்த உணர்வுப் புள்ளி வேறு வேறு சந்தர்ப்பங்களில் வேறுவேறு பேருக்கு வேறுவேறு விதமாக  இருக்க முடியும். என்னளவில் இது மிக நுட்பமாக அவர்களுள் வளர்ந்துள்ள காதலை இங்கிதமாய்க் காட்டுவதாய்த்தான் தென்படுகிறது. வெளிப்படத் தோன்றாது உள்ளோடி வளர்ந்த இந்த உணர்வை மனிதத்தின் வெகுசிறப்பான அம்சமாய் நான் காண்கிறேன். இங்கு யாரும் ஒற்றை மரமாக இல்லை. கஸ்தூரி இல்லை; சுந்தரம் இல்லை ; கூடவிருக்கும் சிறுமி இல்லை. யாருமே இல்லை. போரடித்த நிலத்தில் இவ்வாறான உறவுகள் தண்ணீரூற்றாமலே வளர்ந்து பற்றிப்படர்கின்றன. நினைப்பறியா விகசிப்பு. மானிடம் இங்கே வென்று நிற்கிறது.

யுத்தத்தின் பின்னால் இலங்கைத் தமிழ்ச் சமூகம் எதிர்கொள்ளும் கலாச்சார சீரழிவுகளையும், பொருளாதார பின்னடைவுகளையும், அதனாலான வறுமையையும், அது கொள்ளும் பசியையும், மாந்த முயற்சிகள் அருகிப்போய் எதிர்காலம் சூன்யமாகும் கொடுமையையும் திரைப்படம் தன் வெகுவான கவனத்தில் கொண்டிருக்கிறது. முஸ்லீம்கள் வடக்கைவிட்டு வெளியேற்றப்பட்ட துயரத்தை இன்னும் அழுத்தமாகக் காட்டியிருக்கலாம். சம்பவமாய் வரும் காட்சிகளில் உணர்வு வெறுமை பெற்றிருக்கிறது. ஆயினும் இந்நிகழ்வு முக்கியமானது. இதுபோலன்றி முன்னாள் போராளிகளின் சீரழிவு குறித்தான விவரணைகள் போதுமானவளவு காட்டப்பட்டிருப்பது சிறப்பு.

இந்த இரண்டு அம்சங்களுமேதாம் ரொறன்ரோவில் இத் திரைப்படத் திரையிடலுக்கு எதிராக எழுந்த நடவடிக்கைகளாக இருக்கக்கூடும். இவற்றை இயக்குநரோ தயாரிப்பாளரோ முன்னரே கருத்திலெடுக்காமல் இருந்திருக்க முடியாது. இருந்தும் இந்த விஷயங்கள் காட்சிப்படுத்தப்பட்டு இருக்கின்றமை, ஏற்கனவே இதுபோன்ற விஷயங்கள் ‘கலிங்கு’ நாவலில் பதிவாகியுள்ளபோதிலும், பாராட்டுதலுக்குரியது.

இதன் காரணமாகவே ‘ஒற்றைப் பனைமரம்’ சமகாலத்தின் முக்கியமான சமூகப் பிரச்னைகளை அணுகியதில் பல கிளைகளுள்ள பனைமரமாக எனக்குத் தோன்றுகிறது. 108 நிமிஷ நேர திரைப்படம் தகுந்தபடி எடிட்டிங் செய்யப்பட்டிருந்தால் தொய்வுகளற்ற, இன்னும் இறுக்கமான, தீவிர பார்வையாளனுக்கான பொருண்மை மிக்கதாய் வடிவமெடுத்திருக்க முடியும். எனக்குப்போல இப் பனைமரத்துக் கிளைகள் பார்வையாளனுக்கும் தவறாமல் தெரிந்திருக்க வாய்ப்பு ஏற்பட்டிருக்கும். ஏற்கனவே ‘மண்’போன்ற சில திரைப்படங்களினை இயக்கிய ஆற்றலோடு வந்த புதியவன் இராசையாவை இத் திரைப்படம் கைவிடவில்லை.

உள்ளிருந்து உடற்றும் கனல்

Tamil Resources Centre of Toronto - thedakam‎தேடகத்தின் 30ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு/Thedkam 30th Anniversary

கடந்த ஜுன் 2019இல் யோர்க் வுட் திரையரங்கில் நடைபெற்ற தேடகத்தின் முப்பதாவது ஆண்டு நிறைவு நிகழ்வில் மேடையேறியிருக்கிறது, பா.அ.ஜயகரனின் ‘Insight’ நாடகம்.

ஒரு பிரதி தன்னுள்ளாய்த் தகித்துக்கொண்டிருப்பது. அது சொற்களினால் தாங்கப்படுவது. இந்த பின்நவீனத்துவ வரையறை இலக்கியப் பிரதிக்கு மட்டுமில்லை, நாடகப் பிரதிக்கும் பொருந்துவது. பா.அ.ஜயகரனின் இந்த நாடகப் பிரதி அவ்வாறான தன்மைகளை கூடவோ குறையவோ கொண்டிருந்ததென்பதில் மாற்றுக் கருத்தில்லை.

‘Insight’ என்ற ஆங்கிலத் தலைப்புக்கான  தமிழ்த் தலைப்பாக  ‘உள்ளிருந்து…’ என்ற சொல்லை இட்டிருந்ததில் எனக்கு உடன்பாடில்லை. நுண்ணுணர்வு என்ற பதம் தாராளமாகவே பொருந்தி வந்திருக்கும். என்றாலும் அது எனக்கு பிரச்னையில்லை. நாடகத்தின் முக்கியமான வெளிப்பாட்டு அம்சம், அது கொண்டிருந்த தகிப்பு. அதனால்தான் அதற்கான மதிப்பீட்டுரையின் தலைப்பை ‘உள்ளிருந்து உடற்றும் கனல்’ என இட்டிருக்கிறேன்.

அதுவொரு குறியீட்டுப் பிரதியென்பது, நாடகத்தை நன்கு அவதானித்தவர்களால்  தெரிய முடிந்திருக்கும். ஒரு குறியீட்டுப் பிரதியானது எப்போதும் ஆக்கியோனின் உள்பொதிந்த அர்ததத்தினையே கொண்டிருப்பதென வியாக்யானம் பெறாது. அது தேர்ந்த பார்வையாளனின் அர்த்தப்படுத்துதலுக்கும் பெருமளவு வாய்ப்பளித்திருக்கும். அந்தவகையில் மிருகங்களும் மனிதனுமாக பாத்திரங்கள் அமைக்கப்பட்ட இந்த குறியீட்டுப் பிரதியில் பார்வையாளன் தன் புரிதலின்படி அர்த்தத்தை ஏற்றிவிட இடைவெளிகள் நிறையவே இருக்கின்றன.

எலியும் பூனையுமான இரண்டு பாத்திரங்களால் அல்லாமல் அதே குணவியல்புடைய இரண்டு மனித பாத்திரங்களால் உருவாக்கப்பட்டிருந்தாலும் பிரதியின் அர்த்தம் வேறாகிவிடாது. ஆனால் எலியும் பூனையுமாக பாத்திரங்கள் வருகையிலேயே அரங்கு பார்வையாளனின் மொத்த அவதானிப்பையும் ஈர்த்துக்கொள்கிறது.

மிகக் கச்சிதமாய் அளந்துவைத்த வசனங்களில் பாத்திர உரையாடல் தொடர்ந்துகொண்டிருந்த வேளையில், மேலும் அது காட்சிப்படுத்துதலின் வீரியத்தை வேண்டி நின்றிருந்தது. அரங்க அமைப்பு அதை நிறைவேற்றிக் கொடுக்கத் தவறிவிட்டது. அரங்க நிர்மாணம், ஒளியமைப்பு, ஒப்பனை எதுவுமே  நாடகர்களைக் கைவிட்டுவிட்டமை துர்பாக்கியம். பூனையும் எலியுமாக நடித்தவர்கள் தம் குரலிலும் பாவத்திலும் முடிந்தளவு உணர்ச்சிகளைக் காட்டினரென்றாலும், அது அரங்கக்  குறைபாடுகளால் சோபிக்கவில்லை. இவற்றின் மொத்த விளைவு அளிக்கை பலஹீனப்பட்டு உச்சம் அடையப்படாததாயிற்று.

மிருகங்கள் பெரும்பாலும் அவற்றின் ஆதாரமான குணநலனுக்காகவே, நாய் அதன் விசுவாசத்திற்கும், பூனை அதன் பிற ஜந்துகளை குறிப்பாக எலியினை அணுகவிடா ஆற்றலுக்காகவுமாக, போஷிக்கப்படுகின்றன. அந்த ஆதார குணத்தை விலக்குகின்ற மிருகம் எஜமானனின் கெடுபிடிக்கும் கோபத்திற்கும் ஆளாகின்றது. பூனைக்கே தன் இயல்பான எலியோடுள்ள பகை மறந்த நட்பு தோன்றினாலும், எஜமானனுக்கு அது உவப்பாக இருப்பதில்லை. தொடர்ந்து அந்த மிருகங்களின் பகைமையை வளர்ப்பதே அவனது ஆதாயமடைதலின் தேவையாக இருக்கிறது.  அவன் அந்தப் பகைமையை தூண்டிக்கொண்டே இருக்கிறான். ஆனால் அவற்றின் நட்பு அவனை வேறு உபாயங்களைத் தேடவைக்கிறது. அப்போது கண்டடையப்படுவதுதான் பொறி.

இதை இரண்டு பகையாளிகளுக்கு இடையிலான மோதலில் ஆதாயம் காணும் ஒருவரின் மனநிலையாக வாசிக்க முடியும். விளக்கமாகச் சொன்னால், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமோ, இந்தியாவுக்கும் சீனாவுக்குமோ, இலங்கைத் தமிழருக்கும் இலங்கை முஸ்லீம்களுக்குமோ இடையிலான முரணை தன் ஆதாயத்திற்காக ஒரு வல்லரசோ அல்லது ஒரு அதிகார நிறுவனமோ பயன்படுத்திக்கொள்வதோடு ஒப்புநோக்க முடியும். பூனைக்கும் எலிக்குமிடையிலான நட்பு சிலவேளை மனிதனின் உள்நோக்கம் புரியப்பட அவனின் கொலையாகவும் நீட்சிகொள்ள வாய்ப்பிருக்கிறது. பிரதி இந்த நுண்மைகளைத் தவறவிடாதது அதன் பலம்.

பூனையாக நடித்த இலங்கதாஸ் பத்மநாதன் சரி, எலியாக நடித்த சுடரகன் முருகையா சரி தம் முயற்சியிலும் ஈடுபாட்டிலும் சளைப்பினைக் காட்டவில்லை. குறைவுபட்டுப்போன பாத்திரம்போல் வெறுமனே தோற்றத்தை மட்டும் அரங்கில்  கிருபா கந்தையா காட்டிப்போயிருந்தாலும், அளிக்கை குறியீட்டு வகைமையானதால் அதுவும் ஓர் அர்த்த பரிமாணம் கொள்கிறது. அடுத்த தலைமுறையாக, ஒரு அதிகார நிறுவனம் அழிய அதை அடியொட்டி எழும் இன்னொரு அதிகார நிறுவனமாக அதைப் புரிந்துகொள்வதில் பார்வையாளனுக்கு சிரமம் இருந்திருக்கவில்லை.

களப்பூரான் தங்காபற்றி இனி சொல்லவேண்டும். அரங்கிலும், நாடக அளிக்கை முடிந்ததன் பின் பார்வையாளரிடையேயும் சில அபிப்பிராயங்கள் களப்பூரானின் நடிப்புபற்றி இருந்ததை நான் கவனித்திருந்தேன். அவசியத்திற்கு தேவையில்லாத நடிப்பு… இயல்பில்லாத நடிப்பு… என  சிலரால் உதிர்க்கப்பட்டிருந்த கருத்துக்களை முழுவதுமாய் நிராகரிக்கிறேன். ஒரு குறியீட்டு அரங்க அளிக்கையில் இந்த மிகை நடிப்பு ஆதாரமான பங்களிப்பைச் செய்வது. இன்னும் பிரதியால் மட்டும் தாங்கப்பட்டுக்கொண்டு இருந்த நாடகம் பிற பாத்திரங்களால் அனுசரணை பெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், களப்பூரானின் நடிப்பே அதன் தரத்தை உயர்த்தியதென்பது என் கணிப்பு. ஒருவேளை அந்தவகையான நடிப்பை முன்தீர்மானம் செய்துகொண்டேதான் அந்தப் பிரதி தயாரிக்கப்பட்டதோ என்றுகூட எனக்கு ஒரு அபிப்பிராயம் உண்டு. இயல்பில்லாததே இயல்பாகும் தன்மை இந்த விஷயத்தில் இருக்கிறது. மேலைத் தேய குறியீட்டுவகை நாடகங்களில் இதுவே அனுசரிப்பாயிருப்பது நினைவுக்கு வருகிறது.

பா.அ.ஜயகரனின் நாடகங்கள் மொத்தமுமே குறியீட்டு நாடக வகையைச் சார்ந்தவை என்ற கணிப்பை, அவரது பிறவகை எழுத்துக்களுக்கூடாகவும் பொருத்திப் பார்த்துக்கொள்ளலாம். அவரின் சிந்தனை அமைவே இவ்வாறானது என்றேதான் நினைக்கத் தோன்றுகிறது. இந்த நாடக அளிக்கையினைப் பார்த்தபோது சரி, இதற்கான மதிப்பீட்டினை எழுதுகிறபோது சரி 2006 ஜுனில் மேடையேறிய அவரது ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’ என்ற நாடகம் தவிர்க்கமுடியாதபடி என் நினைவுக்கு வந்தது.

மலைகளை அகற்றிய மூடக் கிழவனின் உட்கனலை அப்படியே கொண்டிருந்தது அந்த நாடகம். அதுவும் குறியீட்டு வகையான நாடகமே. அந்த நாடகத்தில் முக்கிய பாத்திரமேற்ற பி.ஜே.திலீப்குமாரின் நடிப்பும், அந்த நாடகத்திற்கு மிகத் தேவையான மிகை நடிப்பாகவே இருந்தது. அந்தப் பாத்திரத்தை அதுமாதிரித் தவிர வேறுமாதிரி பிரசன்னப்படுத்திவிட முடியாது.

அந்த நாடகத்தில் லூன் என்றொரு பறவை வரும். அதேபோலவே இந்த நாடகத்தில் ஒரு பொறி. மாயாவாத அம்சமாக இதை விமர்சகர்கள் கணிப்பார்கள்.  ஜயகரனுக்கு ‘ஒரு காலத்தின் உயிர்ப்பு’ வெற்றியை அளித்திருந்தது. தமிழில், குறைந்தபட்சம் புலம்பெயர் தேசங்களில், குறியீட்டு வகை நாடகங்களுக்கு ஜயகரன் செல்லக் குழந்தையுமானார். ஆனால் அதை அவரது ‘Insight’ அவருக்குச் செய்துகொடுக்கவில்லை. அவரது ஆற்றலில் இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 05 July 2019 08:53