கலகம் விளைத்து வந்த நாவல்: நீ.பி.அருளானந்தனின் ‘இந்த வனத்துக்குள்’பற்றி…

Sunday, 10 April 2016 23:24 -தேவகாந்தன் தேவகாந்தன் பக்கம்
Print

 -தேவகாந்தன்-   ஈழத்து நாவல் இலக்கியம் தன்னளவிலான முயற்சிக்கும் சிந்தனைக்குமேற்ப இலக்கியப் பாதையில் முன்னேறிச் சென்றுகொண்டிருப்பினும் அது தன்மேல் பூட்டப்பட்ட விலங்குகளையும் சுமந்துகொண்டேதான் செல்கிறதென்று ஒரு விமர்சகனால் சொல்லமுடியும். இலகு யதார்த்தப் போக்கில் மூழ்கி கருத்துநிலையால் தன்னைச் சுற்றி முன்னேற்றத்தின் சகல சாத்தியங்களையும் சிரமமாக்கிக்கொண்டேதான் அது நடந்திருக்கிறதென்பது கசப்பானதெனினும் உண்மையானது.

ஆரம்ப காலங்களில் மரபு சார்ந்து நடந்த ஈழத்து தமிழ் இலக்கியம் பின்னால் முற்போக்குப் பாதையில் திரும்பிய வேளையிலும் நவீனத்துவத்துக்கான ஒரு மொழியையும் நடையையும் பார்வையையும் கண்டடைந்து தொடர்ந்துசெல்ல முடியாமற்போனமை துர்ப்பாக்கியமே. அதனுடைய முன்னேற்றமென்பது அளந்து அளந்து வைக்கப்பட்டதாக ஆயிற்று. யதார்த்தத்திற்குப் பின்னால் நவீன யதார்த்தம் தோன்றியதென்பதையோ பின்நவீனத்துவப் போக்கு பரீட்சிக்கப்பெற்றதென்றோ அதன் வழி இலக்கியம் மொழியால் நடத்தப்படுகிறதென்பதையோ அது இன்றைவரைக்கும் புரிந்ததாய்ச் சொல்லிவிட முடியாதே இருக்கிறது. தலித் இலக்கியத்துக்கான முன்னோடி எழுத்துக்களை ஈழத்து இலக்கியம் தந்திருந்தபோதும் பெருமைப்படக்கூடிய புனைவிலக்கியமொன்றை அது தரமுடியாதிருந்ததின் காரணம் இங்கே இருக்கிறதெனக் கொள்வதில் தவறில்லை.

தமிழகத்தில் முதல் தமிழ் நாவலான வேதநாயகம்பிள்ளையின் ‘பிரதாபமுதலியார் சரித்திரம்’ 1879இல் தோன்றியதெனில்  ஈழத்து முதல் தமிழ் நாவலான சித்திலெவ்வை மரைக்காரின் ‘அசன்பேயுடைய சரித்திரம்’ 1885இல் தோன்றிற்றென்பது விமர்சகர் யாவர்க்கும் ஒப்பமுடிந்த முடிவு. எனில் ஈழத்து முதல் தமிழ் நாவல் தோன்றி இன்றைக்கு ஒன்றேகால் நூற்றாண்டுக்கு சிறிது மேலேயாகியிருக்கிறது. இந்த நீண்ட கால வரலாற்றில் எடுபொருள் குறித்த தன்மையால் எஸ்.பொ.வின் ‘தீ’யும் புதிய களநிலை குறித்த தன்மையால் பாலமனோகரனின் ‘நிலக்கிளி’யும் தெளிவத்தை யோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’யும் பேசப்பட்டாலும் மொழியமைப்பின் வசீகரத்தாலும் வலுவான உரையாடல்களாலும் இறுகியதும் வேறுபட்டதுமான நடையினாலும் மங்களநாயகம் தம்பையாவின் ‘நொறுங்குண்ட இருதயம்’ தீவிர வாசகர்கள் மத்தியில் மிகுந்த கவனத்தைப் பெற்றிருந்தது. இதுவே இந்நீண்ட வரலாற்றுப் புலத்தில் ஈழத்து இலக்கியத்தின் சாதனையெனச் சொல்லக்கூடியதாக இருந்தது. இந்நிலையில் அண்மையில் வெளிவந்திருக்கும் நீ.பி.அருளானந்தனின் ‘இந்த வனத்துக்குள்’ நாவல் இதுவரையிருந்த ஈழத்து தமிழ் இலக்கியத்தின் மொண்ணைத்தனத்தினை நொருக்கிப்போடும் மொழி நடை உரையாடல் மற்றும் பொருள் சார்ந்த வி~யங்களின் வல்லபத்தோடு வெளிவந்திருப்பதை அதன் திசைமாற்ற முன்னறிவிப்புக் குரலாக நான் காண்கிறேன். இருந்தும் ஈழத்திலேயே இது பெருங்கவனம் பெற்றிராதது ஆச்சரியகரமானது.

இந்த நாவலை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 2016 தை மாசி மாதமளவில் என்னால் வாசிக்க முடிந்திருந்தது. இக்காலகட்டத்திய எனது நெடும் பயணம் காரணமாக இதுபற்றிய என் மனப் பதிவுகளை உடனடியாகச் செய்ய முடியாதபோதும் என் மனத்துக்குள் பரவசமாயும் ஈழத்து இலக்கியத்தின்மேலான நம்பிக்கையைத் தருவதாகவும் இந்த நாவல் இருந்துகொண்டே இருந்தது. இதுவரை கால புனைவிலக்கியப் போக்கை முற்றாக நிராகரித்துக்கொண்டு புதிய வசனநடையும் புதிய மொழிப் பிரயோகமுமாய் தன்னைப் பிரதியாக்கும் வீறினை உள்ளாரக் கொண்டிருந்தது இந்த நாவல். இதன் ஒவ்வொரு பக்கத்திலும் அதன் மரபை மீறிச் செல்லும் கலகம் இருந்தது. தன்னுடைய மொழியையும் நடையையும் இதுவரை காலத்தில் இல்லாதபடி மீறிச் செல்ல இது எடுத்துக்கொண்ட பொருளும் களமும் பெருவாய்ப்பாக இருந்ததெனினும் தன் மீறல்களால் நாவலின் கதையோட்டமும் கட்டமைப்பும் குலைந்துவிடாது தன்னைக் காத்துக்கொண்டமை இந்த நாவலின் முக்கியத்துவத்தை உறுதிசெய்வதாக நான் கருதுகிறேன்.

2014 மார்கழியில் வெளிவந்திருக்கும் இந்த நாவல் இலங்கையில் தெலுங்கு மொழி பேசும் வனக் குறவரின் வாழ்க்கை முறையைப் பேசுகிறது. வனமே கதைநிகழ் களமாக அமைகிறது. அவர்களது பேச்சு மொழியையும் அதற்கிணையாக பிரதியின் படைப்பு மொழியையும் படைப்பாளி கையாண்டிருப்பது இதுவரை ஈழத்து நாவலிலக்கியத்தில் அபூர்வமாக நடந்திருப்பது.

நொச்சிக்குளம் பாவற்குளம் ஈறற்பெரியகுளம் அக்கரைப்பற்று காஞ்சிரங்குடா மன்னார் செட்;டிகுளம் கதிர்காமம் என்று மட்டுமில்லாமல் தமுத்தேகம குடகம அளிக்கம்பை ஆகிய இடங்களையும் தன் கதைப் பரப்பாகக் கொண்டிருக்கிறது ‘இந்த வனத்துக்குள்’. கவனிக்கப்பெறாதிருந்த ஒரு சமூகத்தினைக் கண்டடைந்து அதன் மொழியையும் உரையாடல்களையும் மிக அற்புதமாகக் கையாண்டிருக்கிறார் படைப்பாளி. நாவலில் உளதாகிய பேச்சு மொழியையே அவர்கள் பயன்படுத்தினார்களா என்பதை என்னால் உறுதிபடச் சொல்லமுடியாவிட்டாலும் இலங்கையின் பல்வேறு பாகங்களில் அவர்களது வாழ்முறையையும் பேச்சு முறையையும் அவதானித்தவன் என்ற முறையில் இந்த நாவலில் வரும் பாத்திரங்களின் உரையாடல் நம்பகத்தன்மை வாய்ந்ததாய் இருந்ததென்பதை நிச்சயமாகக் கூறமுடியும்.

வனத்தின் குழந்தைகளாக வாழும் இவ் இனக் குழுமத்தின் இயல்பு எவ்வாறு புறநிலைகளால் சீரழிகின்றது என்பதுதான் நாவல் பேசவருகிற வி~யம். தங்கள் பண்பாட்டுடனும் வாழ்முறைகளுடனும் வாழும் இவர்களது வாழ்க்கையே பெரிதாகப் பேசப்பட்டிருப்பினும் நாட்டின் புறநிலைமைகளால் இவர்களுறும் அவதிகளையே நாவல் பிரதானமாகச் சொல்லுகிறது.

இதுபோன்ற இனக் குழுமங்கள்பற்றி ஈழத்து நாவல்களில் குறிப்பாக மலைப்புற வேடர்கள்பற்றி செங்கை ஆழியானின் ‘ஜன்ம பூமி’போல் பேசப்பட்டிருப்பினும் நாவலுக்காக படைப்பாளி தேர்ந்துகொண்ட நடை முக்கியத்துவம் ‘இந்த வனத்துக்குள்’ நாவலில் அதிகம். தன்னை வெளிப்படுத்த அது எடுத்துக்கொண்டது பொருளையும்விட நடையாகவே இருக்கிறது. அதனால்தான் அது மரபு மீறியதாக வேற்றுமை உருபுகளையும் வசன அமைப்புகளையும் கையாள்கிறது. ஒரு பிரதி மொழியால் அமைவது என்பதை இந்த நாவல் வலிமையாக உறுதிசெய்கிறது.

‘சடைத்து வளர்ந்த உயரமான அந்த மரம் நடுக் காட்டுக்குள் உள்ள ஒரு மரம்தான். அந்த மரத்தின் வாகான ஒரு கிளையில்; தொத்திக் கிடக்கின்ற தேனடையில் தேனீக்கள் மா பிசைந்தமாதிரி அப்பிப்போய்க் கிடந்தன’ என்று தொடங்கும் இந்த நாவல் ரங்கமுத்து தும்பண்ணா எங்கட்டண்ணா அணவத்து மூங்கோட் பச்சோர் நல்லக்கா மசக்கா என பல்வேறு பாத்திரங்களோடு 254 பக்கங்களில் விரிந்துசென்று முடிகிறது.
இது வேற்றுமையுருபுகளை இதுவரையான அவற்றின் பயன்பாட்டினடியாக இல்லாமல் வித்தியாசமாகப் பிரயோகிப்பது சுவையாகவே இருக்கின்றது. ‘இப்போ வெண்ணிறக் காட்டுப்பூ பூத்த மரமொன்று அவர்களது கண்களுக்குச் சந்தித்தது’ என்பதுபோல பல்வேறு வேற்றுமையுருபுகளும் இலக்கணம்மீறிய பயன்பாடு கொள்கின்றன.

இயக்கமொன்றின் பிரசன்னத்தை அவர்கள் காண்கிற காலத்திலிருந்து அவர்கள் மேலான பொலிஸ் இராணுவ வன்முறை தொடங்குகின்றது. உரிமைக்கான போராட்டத்தில் பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களை தமிழர்கள் அடைகிறார்களெனில் தமிழர்களாயில்லாத இந்த இனக் குழுமம் தமிழ்போன்ற ஒரு மொழியைப் பேசுவதாலேயே கைதுசெய்யப்பட்டும் காவலில் வைக்கப்பட்டுமான இன்னல்களை அடைவதை நாவல் தெளிவாகப் பேசுகிறது. தம் இன்னலின் காரணமே தெரியாமல் அவர்கள் அடையும் குழப்பமும் கலக்கமும் மனத்தை அதிரவைக்கின்றன.

நிலைபேறான ஒரு சமூகமாக முன்னேற அவர்கள் மத்தியில் இறங்கியிருந்த கிறித்துவ மதம் வழிகாட்டுகிறது. குக் பாதரின் உதவியால் அவர்களுக்கு பங்கீட்டு முத்திரையும் கிடைக்கிறது. புனித சவேரியர் தேவாலயம் அவர்களது குடியிருப்புக்கு மத்தியில் எழுகிறது. கூட்டுறவுச் சங்கமும் கிராம அபிவிருத்திச் சங்கமும் தோன்றுகின்றன. அப்போதுதான் பாதுகாப்புப் படையும் வன்முறைக் கும்பல்களும் அவர்களை தமிழ் இயக்கங்களுக்கு ஆதரவானவர்களாக இனங்காணுகின்றன. அதனால் அவர்களது குடியிருப்பே எரித்து நாசமாக்கப்படுகிறது. அவர்களும் கொலை மற்றும் பெண்கள்மேலான பாலியல் வன்முறைகளுக்கு ஆளாகின்றார்கள். அழிவுகளின் பின் அவர்களுக்கான அகதிமுகாம் ஏற்படுத்தப்பட்டிருப்பினும் அவர்கள் அங்கிருந்து விலகியபோது பெருமளவு எண்ணிக்கையில் குறைந்துபோயிருந்தார்கள். நூற்றியெழுபது குடும்பங்களாக அங்கே சென்றவர்கள் இருநூற்று பத்து எண்ணிக்கையினராக வெளியேறினர். இவ்வாறாக அவர்கள் மேல் இனக்கலவரமும் யுத்தமும் இறக்கிய பாதிப்பின் சோகத்தை  எடுத்துரைத்திருப்பதை நாவலின் பிற்பகுதி முழுக்க காணமுடியும்.

அகதிமுகாமைவிட்டு நீங்கும் இவர்கள் புதிதாக ஒரு புலத்தில் குடியேற்றப்படுவதும் அதன்வழி தம் வாழ்வியலே மாற்றம் காணும் இவர்கள் தம் சொந்த மண்ணான இந்தியாவை அடைகிற ஏக்கங்களில் மிதப்பதும் இறுதியாகப் பேசப்படுகிறது. இச்சமூகத்தின் இயல்பான இருப்பு சிங்கள-தமிழ் இனக் கலவர காலங்களிலும் யுத்த காலத்திலும் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை நூல் தெளிவாகவே எடுத்துரைக்கின்றது. யுத்த காலமொன்றில் விளிம்புநிலை மனிதர்கள் எவ்வவாறு பாதிப்படைகிறார்கள் அவர்களது இனத் தொகையே எவ்வாறு சிறுகச் சிறுக அழித்தொழிக்கப்படுகிறது அவ்வினத்துப் பெண்கள் பாலியல் ரீதியாக எவ்வாறான தாக்குதல்களைச் சந்திக்கிறார்கள் என்பனவற்றையெல்லாம் தமிழர்மீது புரியப்பட்ட வன்முறையின் மறைமுக விளக்கமாகவே என்னால் புரிந்துகொள்ள முடிந்திருந்தது. ஒன்றை விளக்கிச் சென்று சொல்லப்படாத இன்னொன்றினையும் புரியவைத்த இந்த முயற்சி சமகாலத்து இலத்தீன் அமெரிக்க மாயாவாத நாவல்களுக்கான பண்பாக விமர்சகர் கூறுவர். 

கதைக்கான ஒரு மொழியையே நாவல் கையாண்டிருந்தபோதும் அது இன்னும் சிறப்பாகச் செப்பனிடப்பட்டிருக்க முடியுமென்றே கருதத்தோன்றுகிறது. அர்த்தம் நகர மறுத்து அடம்பிடிக்கிற அளவுக்கான நடைச் சிக்கல்களையும் சில இடங்களில் இது சந்திக்க நேர்வது இதனால்தான். நாவல் நகர்ச்சியின் இடையிடையே படைப்பாளியே நேரடியாக கருத்துச் சொல்ல முன்வருவது இதன் இன்னொரு பலஹீனம். மேலும் இந்நாவல்பற்றி சொல்வதற்குள்ள வி~யம் இதன் பதிப்புச் சார்ந்தது.

ஒரு தீவிர வாசகனுக்கு அவன் வாசிக்கும் மொழியின் எழுத்துருவானது மிகமிக முக்கியமானது. அதுவே வாசிப்புச் சுகத்தையும் பெற உதவியாக இருக்கிறது. ஆனால் இந்த நாவல் அந்தச் சுகத்தை செய்யும்படியான எழுத்துருவில் அமைந்திருக்கவில்லை என்பதை இதன் குறைகளுள் ஒன்றாக நிச்சயம் சொல்லியாக வேண்டும்.

மரபை மீறிய நடையை இது கைக்கொள்வதும் வேற்றுமையுருபைகளை வேறுவேறுவிதங்களில் கையாள்வதும் பொருத்தமற்ற நிறுத்தக் குறியீடுகளை இடுவதும் செய்கிறபோதே வாசிப்பின் இயல்பான வேகத்துக்குத் தடை ஏற்பட்டுவிடுகிறது. அதுவே இதன் சுவையாக இருப்பதில் தீவிர வாசகன் பின்னிற்பது இல்லையென்றாலும் வாசிப்புக்கான இடைஞ்சல் நிச்சயமாக இருக்கிறது. இதைத் தாண்டிச் சென்றே பிரதியின்பத்தை அடையவேண்டியிருக்கிறது. குறையாக இருக்கும் இதனை மீண்டும் மீண்டுமான செம்மையாக்கத்தின் மூலம் நேர்படுத்தியிருக்க முடியும்.
இறுதியாக இவ்வாறான தொடர்ந்தேர்ச்சியான முயற்சிகளால் ஈழத்து தமிழ் நாவலை ஒரு செறிவானதும் நேர்ச்சியானதுமான பாதையில் பயணப்பட வைக்க முடியுமென்று நிச்சயமாக நம்பலாம். அந்தவகையில் வெகு கவனிப்புக்கும் முக்கியத்துவத்திற்கும் உரிய நாவலாகிறது ‘இந்த வனத்துக்குள்’.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 10 April 2016 23:30