பதினேழாவது அரங்காடல் - 2015

Tuesday, 28 April 2015 23:49 - தேவகாந்தன் - தேவகாந்தன் பக்கம்
Print

17வது அரங்காடல் - 2015 -தேவகாந்தன்-   மனவெளி அரங்க அளிக்கைக் குழுவினரின் பதினேழாவது அரங்காடல் நிகழ்வு சித்திரை 17,2015இல் வழக்கம்போல் மார்க்கம் தியேட்டரில் நடந்து முடிந்திருக்கிறது. ஐந்து அளிக்கைகள்,சுமார் நான்கு மணிநேரத்தில்; பல்வேறு உணர்வுத் தெறிப்புகளை பார்வையாளரிடத்தில் பதித்துப் போயிருக்கின்றன. இவை ஒவ்வொன்றும்பற்றிய விமர்சனமல்ல இக்கட்டுரை. ஒவ்வொரு அளிக்கையும் முடிவுற்ற கணத்தில் மனத்தில் எஞ்சிய உணர்வோட்டம் எது காரணமாய் ஏற்பட்டதென்ற நினைவோட்டத்தின் பதிவுமட்டுமே. மாலை 06.03க்கு தொடங்கிய இரண்டாம் காட்சியின் முதல் நிகழ்வு யாழினி ஜோதிலிங்கத்தின் ‘நீலம்’ என்பதாக இருந்தது. பிரதியின் சொல்லடர்த்தியும்,காட்சிப் படிமங்களும் காரணமாய்,முதல் அளிக்கையாக அது நிகழ்வில் அமர்த்தப்பட்ட ஒழுங்குக்காய் அமைப்பாளர்களுக்கான பார்வையாளனின் பாராட்டைக் கோரியிருந்தது. ஒரு களைப்புற்ற மனம் கனதியான பிரதியொன்றைத் தொடரும் சிரமம் இதனால் தவிர்க்கப்பட்டது. ஒரு இசை நாடகத்தின் பரிமாணத்தின் பல கூறுகளை இது தன்னகத்தே அடக்கியிருந்தது என்பது நிஜம். தீவிர அளிக்கையென்பது அதன் அசைவுகளால் மட்டுமல்ல,ஒலியும்,ஒளியுமாகிய தொழில்நுட்ப உத்திகளின்  உதவியுடன்,காட்சிப்படுத்தலின் இடையீடுறா நீட்சியின் அமைவையும் கொண்டதாய் நவீன அரங்க அளிக்கையின் அனுபவம் தமிழ்ச் சூழலில் முக்கியத்துவமும்,முதிர்ச்சியும் பெற்றுவருவதன் அடையாளமாய் இருந்தது ‘நீலம்’.

‘நிலம் நீலம் - கடல் நீலம் - வானம் நீலம் - நீ நீலம் - நானும் நீலம்’ என்று அளிக்கை தொடங்கும்போதே நீலம் மனதினில் கவியத் துவங்கிவிட்டது. வெறுமையும் நீலமேயாகும்.  மனதின் வெறுமை. விடயமும் நீலமேயாகயிருக்கிறது.

‘அவள் யாக்கையின் நீலம்
கானகத்தின் திக்குகளையெல்லாம்
துயரத்தால் தோய்த்துக்கொண்டிருக்கிறது
நனைந்து இருண்ட தரையில்
நீலக்; குட்டைகள் தேங்கி
அவற்றில் கள்ளிகள் முளைக்கின்றன’

என்ற வரிகள் இடம்பெற்ற ப்ரேமா ரேவதியின் ‘யாக்கையின் நீலம்’ என்ற கவிதைத் தொகுப்பின் கவிதையொன்று உடனடியாக எனக்கு ஞாபகமாயிற்று. அது நாடக வாசிப்பை வேறொரு தளத்துக்கு நகர்த்தியது. அளிக்கையே பல்வேறு வாசிப்பின் சாத்தியங்களைக் கொண்டே இருந்தது. ஆயிரம் விலங்குகளுக்குள் சிக்குண்ட பெண்ணின் வாழ்க்கை முடிவுறா பெருவெளியை நோக்கி நகரும் அவலமாகவும்,தன்னைத் தானாகவே தக்கவைக்க முனையும் எத்தனங்களை தனது சந்ததிகளையும் தொடரவைக்கும் தாயின் ஆவேசக் குரலாகவும் அளிக்கையை வாசிக்க முடியும். காட்சியில் விலங்கின் இறுக்கம் தளர்வதும் மறுபடி இறுகுவதும்கூட அர்த்தபரிமாணமுள்ளது.

தன் பிரதியின் சொல்லடர்த்தி படிமங்களில் விளக்கமாகும்படி அமைத்த நெறியாள்கை எனக்குப் பிடித்திருந்தது. மிக எதார்த்தமாய் ஆக்கப்பட்ட பிரதியின் அளிக்கை ‘காற்றெல்லாம் தென்றல் அல்ல’. சில தொடரற்று முடியும் காட்சிகளும்,அது கொள்ளும்; மௌனங்களும் பொருத்தமான இடங்களில் இடம்பெற்று பாராட்டக்கூடியனவாயிருந்தன. அடுத்து இடம்பெற்ற ‘சிருஷ்டி’ குழந்தைகளின் மனநிலையில் ஆதிக்கம் செலுத்தும் குடும்பம் சார்ந்த உறவுகளின் குரூரத்தைச் சித்திரிப்பதாய் அமைந்திருந்தது. ஹரிணி சிவக்குமாரின் பாவபேதங்களைக் காட்டும் திறமை சபையில் பெரிதாகப் பாராட்டப்பெற்றது.

17வது அரங்காடல் - 2015நான்காவதாக சோபாசக்தியின் ‘செரஸ் தேவதை’ இடம்பெற்றது. தெரிந்த தேவதையோடு தெரியாத செரஸும் தொடர்ந்துகொண்டிருந்தது அளிக்கையின் இறுதிவரை. வெற்றியாளர்களால் வகுக்கப்பெறும் போரின் விதிகள்,சட்ட,தத்துவ சகல புலங்களாலும் புனிதப்படுத்தப்படுகின்றன. மட்டுமில்லை சட்ட,தத்துவப் புலங்களும் போரின் விடயத்தில் ஒன்றாகவே நடந்தும் கொள்கின்றன. எந்த ஒரு சாட்சியையும் அழித்துவிடுவதென்பதுதான் அவற்றின் வேதம். இதில் தேவதைகளும் விலக்காவதில்லை. செரஸ் தேவதையின் அழிந்த உடலில் இயங்கிய உயிரும் அழிக்கப்படுவதுடன் அளிக்கை நிறைவெய்துகிறது. அதிகார மையங்களாக அரசும் மதமும் அமைந்திருக்கிற உண்மை அளிக்கையில் நிறைவாக நிரூபிக்கப்படுகிறது. சட்டத்தினையும் தத்துவத்தினையும் புரிந்துகொண்டதாக தேவதை காட்டப்படுவதுதான் அளிக்கையின் அதிவிசேஷ புலபடுத்துகையாக நான் கருதுகிறேன். தன் எதிர்ப்பற்ற ஒப்புக்கொடுப்பினாலே அதை தேவதை நிறுவுகிறது. இதில் மீட்சி எங்கே இருக்கிறதென யோசிக்கும்போதுதான் அளிக்கை தன்னுள் மறைத்துவைத்திருக்கும் உண்மை பார்வையாளனுக்கு வெளிப்பாடடையும். எதிர்ப்புகளின்றேல் தேவதைகளும் அழிவிலிருந்து தவிர்ந்துகொள்ளமுடியாது என்பதுதான் இந்த அளிக்கை உள்பொருளாய்க் கொண்டிருக்கிற விசேஷம்.

வசனங்களில் மிகுந்த தாராளம் காட்டப்பட்டுள்ளது. இராணுவத்தானும்,பாதிரியும் அவரவர்க்கான சிந்தனைத் தளத்துக்குரிய வார்த்தைகளைப் பிரயோகித்துக்ககொள்கிறார்கள். மேலும் ‘இழுமென் மொழியால் விழுமியது நுவலல்’ என்ற இலக்கண நியதியின்மூலம்,சொற்களுக்கும் ஓசையுண்டென்பதை  தெரிந்து ஆக்கப்பட்ட அளிக்கையின் வசனங்கள் ஒரு ஒலிமையத்தைநோக்கி நகர்ந்த பிரதியாக அதை ஆக்க வலுவாக எத்தனிக்கின்றன. அது தர்சனின் நாடகத்திறம் உள்வாங்கி வெளியிட்ட ஆற்றலின் பங்காகவும் கொள்ளப்படலாம். எனினும் அந்த ஆறுதலான நகர்வும்,ஆறுதலான உரைப்பும் பல சமயங்களில் ஒரு எல்லையையும் மீறி அமைந்திருந்ததையும் இங்கே குறிப்பிடவேண்டும். சிக்கலான கருத்துக்களின் உள்ளடக்கப் பிரதியொன்று திறமையாக சபேசனால் காட்சிப்படுத்தப்பட்ட சாதனையையும் இந்த அளிக்கை கொண்டிருந்தது. மெலிஞ்சி முத்தனின் ‘மோகப் பறவை’ இந்த அளிக்கைகளுள் உன்னதம். ஒரு பரவசத்தை அளித்து,கனடியத் தமிழ் நாடக மேடை இதுவரை இயன்றிராத ஒரு அதியுயர்ந்த தளத்துக்கு பார்வையாளனை  இது உயர்த்தியது.

ஒரு பரீட்சார்த்த முயற்சி எப்போதும் பலஹீனங்களையும் கொண்டேயிருக்கிறது. ‘மோகப் பறவை’யும் இதற்கு விலக்கல்ல. அமெச்சூர் கலைஞர்களாதலால் அவ்வறான பலஹீனங்களைப் புரிந்துகொள்ள முடியும். ஒட்டுமொத்தமான சமூக அவலங்களையும் தூக்கியெறிவதாக நினைத்து தன் எல்லை கடந்து பிரதி பேசமுனைந்ததை இதன் பலஹீனங்களில் ஒன்றாகச் சுட்டலாம். மூன்றாம் பாலினத்தவர்பற்றிய பிரஸ்தாபம் அதன் திணிப்புக்குள்ளும் அடங்க மறுத்து மறுபடி மறுபடி நழுவி விழுந்ததை பிரதியாக்ககாரரே அவதானித்திருக்கமுடியும். மற்றும் தாளக்கட்டு சில இடங்களில் அறுந்ததையும் அவதானிக்கக்கூடியதாய் இருந்தது. அரங்கின் கலை இன்னும் மேன்மையாக்கப்படலாம். இக்குறைபாடு அனேகமாக எல்லா அளிக்கைகளிலுமே இருந்தது. இதெல்லாம் ஒரு நுட்பத்தில் கைகூடவேண்டியது. ஒருவேளை அளிக்கைகள் தொடர்ந்தேர்ச்சியாக அரங்காக்கமாகும் வாய்ப்பு ஏற்படின்,இவ்வாறான சிறுகுறைகளும் நேர்செய்யப்பட்டு பிரதியின் பூரணத்துவம் உறுதிசெய்யப்பட வாய்ப்புண்டு. அந்த வாய்ப்பு கனடாத் தமிழ் மண்ணில் அற்றிருக்கும் நிலையை நாம் இங்கே நினைத்துப்பார்த்து அமைதி கொள்ளவேண்டியிருக்கிறது.

முதலில் இதை ஒரு மாயாயதார்த்தப் பிரதியாக புனைவு செய்தமையை இதன் விசேஷ அம்சமாக சொல்ல விரும்புகிறேன். இவ்வாறு மாயாயதார்த்தம் கலந்திராவிட்டால் இது சொல்லவந்த விடயங்கள் தமிழ்ச் சூழலில் மிகவும் கொச்சையாக அர்த்தப்பட்டு நகைச்சுவைத் துணுக்குகளாய் எடுக்கப்பட்டிருக்கும் விபத்து நேர்ந்திருக்கும். மேலும் நாடகத்தையும் தென்மோடிக் கூத்துப் பாணியையும் இணைப்பதற்கான வாய்ப்பும் இல்லாமல் போயிருக்கும். ஒரு புதிய முயற்சியின் ‘கூத்’தாக அமைந்த சரிவைத் தவிர்த்திருக்கவே முடிந்திராது. பிரதியாக்கம் இந்த முயற்சியில் பெரிதும் கைகொடுத்திருக்கிறது. இதற்காக மெலிஞ்சிமுத்தனைப் பாராட்டலாம்.

இவ்வகை முயற்சி வேறு வேறு புலங்களில் மேற்கொள்ளப்பட்டதற்கான தகவல் இல்லை. இதுவே ஒரு முதன் முயற்சியாகக் கொள்ளப்பட முடிந்தால்,அந்த முயற்சியின் வெளிப்பாடு மெலிஞ்சிமுத்தனில் நிகழ்ந்ததற்காகவும்,அதை அரங்கேற்றிய  மனவெளிக்காகவும் நாம் பெருமைப்பட முடியும்.
                                     
கனவிலுருவான தேவதையாய் வந்து நடனம்,பாட்டு,அசைவு,பேச்சு எல்லாமே தேவதையினதாகவே இருக்கும்படி அற்புதமாகக் காட்சிப்படுத்திய ஐஸ்வர்யா சந்துருவின் நடிப்பாற்றல் இந்த அளிக்கையின் இன்னொரு சிறப்பு. பொதுவாக அனைத்து நடிகர்களுமே தம் பாத்திரத்தை உணர்ந்து சிறப்புற நடித்திருக்கிறார்கள் என்று சொல்லவேண்டும். பாத்திரங்களுக்கான நடிகர் தேர்வின் பொருத்தம்,அளிக்கையினது வெற்றியின் பிரதான பங்கு. கடந்த காலங்களைவிட மெலிஞ்சிமுத்தனின் நெறியாள்கை மேலும் மெருகேறியுள்ளமையை அளிக்கை முழுதுமே காணக்கூடியதாய் இருந்தது. ஒட்டுமொத்தமாய்ச் சொல்லுமிடத்து,மனவெளியின் இந்த பதினேழாவது அரங்காடல் ஒரு புள்ளியைத் தொட்டிருக்கிறது என தயங்காமல் சொல்வேன். முதலில்,பெரும்பாலான அளிக்கைகள் தமிழ்மேடை பிரஷ்டம் செய்திருந்த பல சொற்களை மேடைக்கு இழுத்துவந்து அவற்றைப் புனிதப்படுத்தியிருக்கின்றன. ‘சிருஷ்டி’ தவிர்ந்த அத்தனை அளிக்கைகளுக்குமே இதை வலுவாய்ச் செய்திருக்கின்றன. சொற்களில் மட்டுமில்லை,உள்ளடக்கத்திலும் பல பிரதிகள் கருத்து வெளிப்பாட்டை வெகு சுயாதீனமாய்ச் செய்திருந்தன.

 'செரஸ் தேவதை’யின் இடையிலேயே பார்வையாளர் ஒருவர் கோபமாய் எழுந்து தும்தும்மென நிலமதிர வெளியேறியது இதன் காரணமாகக்கூட இருக்கலாம். ஆனால் அரங்கு பெரும்பான்மையும் இந்த பிரஷ்டங்களின் மீள்வருகையை அங்கீகரித்திருந்தது. பல புதிய நெறியாளர்களால், பிரதியாக்ககாரரால், ந்டிகர்களால் அரங்கு பொலிந்திருந்தது. நம்பிக்கையின் நிர்மாணத்தை மனவெளி நடத்திமுடித்திருக்கிறது. வரும் மேடைகளில் சாதனைகளை எதிர்பார்ப்போம்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 30 April 2015 01:14