நினைவேற்றம் முனை 2

Saturday, 01 November 2014 22:47 -தேவகாந்தன்- தேவகாந்தன் பக்கம்
Print

 -தேவகாந்தன்-   ஒரு காலத்தில் எங்கள் கிராமத்தில் குழைக்கடைச் சந்தியென்றொரு இடமிருந்தது. மாரி தொடங்கியதும் குழைக் கடை தொடங்கும். கடையென்றால் விற்கிறதல்ல, வாங்குகிற கடை. தென்மராட்சி குழைக்காடு என்று சொல்லப்படுவதற்கேற்ப நெடுமரங்களும், வேலிமரங்களுமாய் குழை செறிந்து நிழல் விழுந்த பூமியாகவே இருந்தது. வடமராட்சியின் செழிப்பான விவசாயத்துக்காக யூரியாபோன்ற இரசாயன பசளையினங்கள் இல்லாத அக் காலத்தில் பசளையாகப் பாவிப்பதற்கு பனையோலையும், எருவும், குப்பையும் வீடுவீடாகச் சென்று வாங்கியதுபோல, அங்கிருந்து வந்து குழையும் வாங்கினார்கள். குழை வாங்குவற்கான மத்திய ஸ்தானம்தான் குழைக்கடை.

நெடுவாகக் கிடந்த பருத்தித்துறை வீதியை அம்பலந்துறை வயலிலிருந்து தொடங்கி கல்வயலின் அருகுவரை சென்றிருந்த மணலொழுங்கை ஊடறுத்துக்கிடந்த சந்தியில், முதிர்ந்த ஒரு ஆலமரத்தின் கீழே அது கூடியது. கட்டுக்கட்டாக பூவரசு, சீமைக்கிளுவை, வேம்பு, பாவெட்டை, அன்னமுன்னா, கிலுகிலுப்பை, மஞ்சவுண்ணாவென்று வீட்டுமரக் குழைகளும், கொய்யா, கிஞ்ஞா ஆகிய காட்டுமரக் குழைகளும் மரங்கள் மொட்டையடிக்கப்பட்டு கட்டுக்கட்டாகக் கட்டி அங்கே கொண்டுவரப்பட்டு காலை ஒன்பது பத்து மணிவரை நடைபெறும் அக் கடையிலே விற்பனையாகின.

குழையேற்றும் வண்டில்கள் சிலவேளைகளில் மழை கருதியோ, வேறு காரணத்தாலோ வராதுபோய்விடுகிற நிலைமையினால், வண்டில்கள் வந்திருக்கும் நாளின் அதிகாலையில் ‘குழை கொண்டுவா…குழை’ என ஒழுங்கையொழுங்கையாகத் திரிந்து பெருந்தொனியெடுப்பார் வீரகத்தி. வீரகத்திக்கு ஒரு கால் ஊனம். தாண்டித் தாண்டித்தான் நடப்பார். என்ன குழையென்று பார்த்து, கை பிடித்துத் தூக்குகையிலேயே அதன் கனதியைக் கணித்து விலை குறிப்பது அவர்தான். பாரத்துக்காக பச்சைத் தடிகளையும் சேர்த்துக் கட்டாக்கியிருப்பதையும் அந்தக் கைப்பிடியிலேயே கண்டுபிடித்துவிடுகிற அபார திறமையிருந்தது வீரகத்தியிடம்.

உள்ளே பச்சைத் தடிகள் வைத்துக் கட்டிய கட்டோடு கொண்டுவந்தவரின் அத்தனை கட்டுகளும் அதற்குமேல் தலா மூன்று சதம், நான்கு சதத்துக்கு மிஞ்சிப் போகாது. அறாவிலைக்குக் கொடுத்துவிட்டுத்தான் வரவேண்டும். கொடுக்காமல் கொண்டுபோய் காயப்போட்டு, காய்ந்த பிறகு எரிப்பதைத் தவிர அவற்றை வைத்துக்கொண்டு வேறெதுவும் செய்துவிட முடியாது.

ஒரு சதம், இரண்டு சதமெல்லாம் பெரிய தொகை அக்காலத்தில். அதற்கு முந்திய தலைமுறையில் அரைச் சதம், கால் சதம்கூட பாவனையில் இருந்திருப்பதனை அக் காசுகளை பெரியவர்களின் ‘கொட்டப்பெட்டி’க்குள் கண்கூடாகவே கண்டதில் எனக்கு நிச்சயம். இன்றைக்கு கனடாவில் ஒரு சதம் இல்லாது போயிருக்கிறது. ஒரு பொருள் ஏழு சதமானால் அதற்கு ஐந்து சதமும், எட்டுச் சதமாக இருந்தால் அதற்கு பத்துச் சதமும் எடுப்பதற்குச் சட்டரீதியாகவே இடமுண்டாகியிருக்கிறது. சில்லறைகளின் புழக்கம் இக்காலத்தில் எல்லாரிடமும்தான் இருந்திருக்கிறது. சில்லறைக் கடன்களைக் கேட்டால் ‘இதோ, நாளைக்கு குழைவித்திட்டுத் தாறன்’ என்பதை பொதுவாகக் கேட்கக்கூடியதாக இருந்திருப்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். வீட்டு மரக் குழை விற்பனை பெரியவர்களுக்கு சேர்கிறதென்றால், காட்டுமரக் குழைகளான கொய்யாவும் கிஞ்ஞாவும் விற்பது சிறுவர்களுக்குத்தான் சேர்கிறது. இனிப்பு, டப்புறு, தும்பு முட்டாஸ் என்பவற்றுக்கு அதில் ஒரு பகுதி போனாலும், மீதி ‘காசு கட்டு’ விளையாட்டில்தான் செலவாகும். அக் காலத்தில் ‘போளை அடி’யும் அதிகமாக இருக்கும். அது வெளிவெளியாக வீட்டு முற்றத்திலும், ஒழுங்கை ஓரத்திலும் நடக்க, காசு கட்டுதலென்பது ஒரு சூதுபோல பெரியவர்களின் கண்கள் படாத மறைவிடங்களில்தான் நடப்பது வழக்கம். அதற்காக சிறிவர்களெல்லாம் மழை அரித்தோடிய வாய்க்கால் பக்கம்தான் போவார்கள்.

அக் காலத்தில் ஒன்று, இரண்டு, ஐந்து, பத்து, இருபத்தைந்து, ஐம்பது சதங்கள் குத்திக் காசுகளாக இருந்தன. இரண்டு, ஐந்து, பத்து, இருபத்தைந்து, ஐம்பது சதங்கள் பித்தளையிலிருக்க ஒரு சதம் மட்டும் செப்பிலிருந்தது. ஒரு சதமே காசுகட்டு விளையாட்டில் பயன்படுத்தப்பட்டது. மெலிந்த ஒரு சதத்தைவிட, தடிமனான ஒரு சதக் குத்திக்கு மதிப்பு அதிகம் இந்த விளையாட்டில்.

நிற்பதற்கான ஒரு அடையாளத்தைக் குறித்துவிட்டு, பதினைந்து இருபதடி தூரத்தில் ஒரு கோட்டினைப் போட்டு பக்க எல்லைகளும் குறித்தான பின், நிற்கும் அடையாளத்திலிருந்து எதிரே கிழித்த கோட்டினை நோக்கி குத்திக் காசை இலக்குவைத்து வீசவேண்டும். கோட்டுக்கு மிகக் கிட்டவாக இருக்கும் குத்தியிலிருந்து முதலாவது, இரண்டாவது, மூன்றாவதென ஆட்டக்காரர் தெரிவாவர். முதலாவதாக வந்தவர் முதலில் அவ்வளவு சதங்களையும் கையிலெடுத்து குலுக்கி தலையுயரத்துக்கு மேலாக எறிவார். குருசு, ராசா என்று நாணயத்தின் பக்கங்களுக்குப் பெயர். விழுந்த ராசாப் பக்க சதங்களெல்லாம் அவருக்கானது. மீதியை இரண்டாம் இடத்திலிருப்பவர் அதுபோலும் கிலுக்கி எறிய எடுப்பார். விளையாட்டு இவ்வாறு எல்லா நாணயங்களும் முடியும்வரை தொடரும்.

குழைக் கடைக் காலத்தில் மட்டுமே இது விளையாடப்பட்டதற்கு சிறியவர்களிடத்தில் அக்காலத்தில் நிலவிய காசுப் புழக்கமே காரணம். மற்றும்படி ஒரு சதத்தை சாதாரணமாக பெரியவர்களிடமிருந்து சிறுவர்களால் பெற்றுவிட முடியாது. அதுவும் காசு கட்டி விளையாடவென்றால் பெற்றுவிடவே முடியாது. ஒரு அவுன்ஸ் சீனி ஒரு சதத்துக்கு வாங்கலாம் அப்போது. வீரகத்தியோடு எனக்கு நல்ல அறிமுகமுண்டு. எங்கள் சில்லறைக் கடையில் வியாபாரச் சில்லறை எடுப்பதற்காக அவர் வீட்டுக்கு அதிகமும் வருவார். வீரகத்தி சில்லறை வாங்க வருகிற நேரங்களில் இரண்டு மூன்று ரூபாவுக்கான சில்லறைகளின் முதல் எண்ணிக்கை என்னதாகவே இருந்திருக்கிறது. காசு கட்டு விளையாட்டில் பார்வையாளனாகவே பங்குபற்றியிருந்த எனக்கு, அவ்விளையாட்டை விளையாடுபவர்களைவிட சில்லறைகளுடனான அதிக தொடர்பு அவ்வண்ணமே ஏற்பட்டது. வீரகத்திக்கும் எங்களுக்குமான அந்த ஊடாட்டத்தில்தான் வடமராட்சியிலிருந்து வரும்போது விலைக்கென்றாலும் நல்ல முற்றிய இராசவள்ளிக் கிழங்கு எங்களுக்குக் கிடைத்துவந்தது அவர்மூலம்.

என் சிறுவயதுக் காலத்துக்குப் பின்னால் குழைக்கடை நடக்கவில்லை. அந்தளவில் யூரியாபோன்ற இரசாயன உரங்கள் பாவனைக்கு வந்திருந்தன. இவ்வாறான ஒரு காலகட்டம் இயற்கைப் பசளையினால் விளைந்த காய்கறியின் சுவையான சமையல் பிற்பாடு இல்லாமலாகிப்போனதன் எல்லையாகவும் இருந்தது.

இந்தப் பாதை வழியேதான் நான் தினமும் பாடசாலைக்குச் செல்வேன்.  அந்தப் பகுதியிலுள்ள பள்ளிப் பிள்ளைகள் பெரும்பாலானவர்களும்கூட.
இந்தக் குழைக்கடைச் சந்தியில் குழைக் கடை நடக்கும் எதிர்மூலையில் ஒரு முதிர்ந்த வாகை மரம்.  அந்த மரத்துக்கு அருகே ஒரு மைல்கல் ஒன்றரையடி உயரத்துக்கு நன்றிருந்தது. எப்போதும் ஏதேதோ பராக்கில் இருந்துவிட்டு தாமதமாகவே பள்ளியிலிருந்து வீடு செல்லும் நான், இந்த மைல் கல்லில் பலவேளைகளில் அமர்ந்து இளைப்பும், பொழுதும் ஆறியிருக்கிறேன். வாகை மரம் வளர்ச்சியினால் எல்லை பிரித்து உள்நுழைந்திருந்த வளவும், அதிலிருந்த வீடும், அந்த வீட்டு மனிதரும் நெடுங்காலத்துக்கு, இன்னும் சொல்லப்போனால் இற்றைவரைகூட, என்னால் மறக்கபட முடியாத நீள் நினைவுகள்.

அந்த வீட்டு மனிதரின் பெயர் சின்னப்பு என்பது என் மனச் சிலையின் எழுத்து. எனது ஐயாவோடு மிகப் பழக்கமானவர் அவர். மரமேறுகிறவராய் இருந்தார். இருந்தாலும் தங்கள் வளவிலுள்ள மரங்களிலேயே கள்ளிறக்கி தொழில் செய்தவர். நீண்டகாலம் அவரது நினைவு என் நெஞ்சத்திலிருப்பதற்கு குடுமி வைத்தும், காதுகளில் சிவப்புக்கல் கடுக்கன் போட்டும், மிகச் சிவந்த உடம்போடும், தீட்சண்யமான பார்வையோடுமுடைய அவரது உருவமே முதல் காரணம். அவர்போல அவ்வளவு தீட்சண்யமாகப் பார்த்தவரை நான் இன்றுவரை கண்டதில்லை. நிறையப் பேசாதவரும் அவர். அந்தத் தோற்றம் ஒரு மலைப்பையே இன்னும் தந்துகொண்டிருக்கிறது.

ஊரில் பெரும்பாலும் இல்லாதவிதமாக அவருக்கு இரண்டு குடும்பங்களிருந்தன. கிட்டக்கிட்டவாகவே. இதன் சாத்தியப்பாடெல்லாம் எனது அக்கறையில்லை. ஆனால் அந்த இரண்டு குடும்பங்களையும் காபந்து பண்ணுமளவிற்கு அவருக்கிருந்த பெரும் காணி எனக்கு வியப்பு. அந்தக் காணி தேங்காய், மாங்காய், முருங்கைக்காய் விற்றும், கள்ளிறக்கியும் இரு குடும்பங்களைப் பராமரிக்கிற அளவுக்குப் பெரிதாயிருந்தது. ஏறக்குறைய அந்தப் பகுதியிலே பெரிய வளவுடையவர் கல்வளவு ஐயர் ஒருவர் மட்டும்தான். அந்த அளவுக்கு இல்லையென்றாலும், ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவருக்கு அந்தளவு பெரிய நிலம் கிடைப்பது அசாதாரணம்.

இன்னுமொரு புதுமையாக அவரது வீடு. அவரது வீடு கீழே சிமெந்து நிலமும், சுண்ணாம்புச் சுவர்களும்கொண்ட பெரியவீடு. அம்மாதிரி வீடுகளை அரிதாகவே நான் கண்டிருக்கிறேன். நல்லூர் ராஜதானியினதோ, வன்னிப் பகுதி குறுநில அரசுகளினதோபோன்ற காலத்து ஒரு மந்திரியினது, அல்லது ஒரு பெரிய அரசதிகாரியினது வீடுபோலவே இருந்தது. அதன் முகப்பு வேலைப்பாடுகளும் இதை எனக்கு அறிவித்தன. இவையெல்லாவற்றிலிருந்தும் நான் வளர்ந்த காலத்தில் சரித்திரம் மேலும் மேலும் அறிகையாக என்னால் ஒரு முடிவுக்கே வரமுடிந்தது. சின்னப்புவின் மூதாதையர் என்ன ஜாதியாக இருந்தாலும் அதற்கேற்றவான ஒரு அரச காரியத்தையே செய்து வந்திருக்கிறார்கள் என்பதே அது. சின்னப்புவின் தோற்றம் அவரது வசதிகளைக்கொண்டு வேறுமாதிரி முடிவுக்கு ஒருவர் வரமுடியாது.

இன்றைக்கு அந்த ஊரில் அவரின் சில வாரிசுகளைத் தவிர மற்றப்பேர் புலம்பெயர்ந்திருக்கின்றனர். இல்லாவிட்டால் இந்தக் குடும்பத்தைப்பற்றி நிறையவே அறிந்திருக்க முடியும். அதற்கான முயற்சி அவசியமாயிருக்கிற பொழுதில் சாத்தியமற்றதாகவும் இருக்கிறது. ஒரு வரலாற்றுக் கதை அந்தக் குடும்பத்துள் மறைந்திருப்பதாகவே இன்றும் நான் நம்புகின்றேன். இந்த நினைவிலிருந்து கொடிகட்டி விரிவதுதான் இந்த மூன்றாம் முனைக்கே அவசியமான விடயம்.

இந்த வளவின் மூலையில் வாகை வேலி பிரித்த இடத்து மைல்கல்லில் அமர்ந்திருக்கிற வேளையிலெல்லாம் அந்த மெல்லிய மாலையில் நான் கேட்டது அந்த வீட்டிலிருந்த வானொலியிலிருந்து கிளர்ந்து வரும் பாடல்களை. மாலை மூன்று மணியிலிருந்து ஆறு மணிவரை சினிமாப் பாடல்களாகவே ஒலிபரப்பியது இலங்கை வானொலியின் வர்த்தக சேவை. ஓளவையார் படத்திலிருந்து பாதாளபைரவி ஊடாக தேவதாஸ், பராசக்தி வரையான பாடல்கள் வானொலியில் ஒலிபரப்பாகும். கேட்டுக் கேட்டு பாடல்கள் எனக்கு மனப்பாடமே ஆகியிருந்தன. ஆனாலும் அந்த சேர்ந்திருந்த சீர்களும், பிரிந்திருந்த சொல்களுமான பாடல்களினால் அர்த்தம் விளங்காது நான் குழப்பமே அடைந்திருந்தேன்.

உதாரணத்துக்கு ஒரு பாடல்: ‘சந்தோ சம்தரும் சவாரி போவோம் சலோ..சலோ!’ இந்த ‘சந்தோ’ என்பதென்னவென்றோ, ‘சம்தரும்’ என்னவென்பதோ எனக்கு அப்போதெல்லாம் விளங்கவேயில்லை. இன்னொரு பாட்டு: ‘ஓ..ரசிகுஞ்சி மனைவா…ஜொலிக்கும் உடையணிந்து களிக்கும் நடனம் புரிவோம்.’
இதில் ‘ரசிக்குஞ்சி’ என்பதோ, ‘மனைவா’ என்பதோ எனக்கு அறிகையாகியிருக்கவில்லை. ஆறு அல்லது ஏழு வயதில் ஏற்பட்ட இந்தப் புரியாமைதான், சொல் தேடும் முயற்சியில் என் முதல் பயணமென இப்போது தெரிகிறது.

எட்டு ஒன்பது வயதிலேயே, ‘சந்தோசம் தரும் சவாரி போவோம்’ என்பதே இசைக்காகச் சொல் பிரிந்து ‘சந்தோ சம்தரும்’ எனப் பாடப்பட்டதென்றும், ‘ஓ..ரசிக்கும் சீமானே வா’ என்பதுவே ‘ஓ..ரசிக்குஞ்சி மனைவா’ என பிரிந்திருந்தது எனவும் நான் கண்டடைந்ததுதான் என் சொல் சார்ந்த என் முதல் கண்டடைவுகள்.

இவற்றையெல்லாம் நான் அந்த முதிர் வாகையின் கீழுள்ள மைல் கல்லில் அமர்ந்திருந்தபடி சின்னப்பு வீட்டு வானொலியில் கேட்ட ஞாபகமெல்லாம், சின்னப்புவின் நினைவாகவேதான் வருகிறது. அல்லது சின்னப்புபற்றிய நினைவெல்லாம் சொல் பிரிந்த பாடல்களினால் நான் பொருள் புரியாது திகைத்த காலத்தைச் சொல்லிநிற்கின்றன.

‘மாங்காய்ப் பாலுண்டு மலைமேல் இருப்பவர்க்கு தேங்காய்ப் பால் ஏதுக்கடி’யென்றும், ‘சொர்ப்பன வாழ்வில் மகிழ்ந்து சுப்பிரமண்ய சுவாமி உனை மறந்தேன்’ எனவும் கள் போதையில் ஐயா பாடுகின்ற பாடல்களும், ‘உற்றார் எனக்கு ஒருபேரும் இல்லை, உமையாள் தமக்கு மகனே’ என்பதுபோன்ற அம்மாவின் பிரார்த்தனைகளும் பள்ளிப் பாடங்களைவிடவும் என் சின்னவயதைப் பதப்படுத்தின என்றே இன்றும் நான் நம்புகின்றேன். சொல்களினூடாகவே என் இலக்கியப் பயணத்தின் முதலடி இருந்திருக்கிறது.

(முனை 3 தொடரும்)
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 01 November 2014 23:02