எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் விருட்சம்

••Wednesday•, 16 •May• 2012 23:23• ??- யமுனா ராஜேந்திரன் -?? யமுனா ராஜேந்திரன் பக்கம்
•Print•

எம்.ஜி.ஆர் எனும் மாபெரும் விருட்சம் தமிழ் சினிமா வரலாறு எழுதுதலில் இருவிதமான சிந்தனைப் பள்ளிகள் இருக்கின்றன. முதல் சிந்தனைப்பள்ளி தியோடர் பாஸ்கரனுடையது. தியோடர் பாஸ்கரன் தமிழ் சினிமா வரலாறு எழுதுதலில் முன்னோடி ஆளுமை. அவரது பார்வை தமிழ்ச் சினிமா காட்சிரூப ஊடகமாக வளராமல் போனதற்கான தமிழ் சமூகக் கலை வரலாற்றுக் காரணங்களையும், அரசியல் காரணங்களையும் விரித்துச் சொல்வதாகவே இருக்கிறது. வரலாற்றுரீதியில் தமிழ் சினிமாவில் பேச்சு, இசை போன்றவை பெரும் இடம், அதனோடு வேறு வேறு காலங்களில் தமிழ் சினிமா மொழியில் நேர்ந்து வந்திருக்கும் வடிவ மாற்றங்களையும் நுட்பங்களையும் அவர் அவதானித்துப் பதிவு செய்கிறார்.  
தியோடர் பாஸ்கரன் முன்வைக்கிற காட்சிரூப சினிமாவை உருவாக்குவது எனும் தேடல் தமிழ் மொழியில் பிரச்சாரம் தவிர்ந்த யதார்த்த மொழி கொண்ட ஐரோப்பிய பாணி சினிமாவை, சமூக விமர்சன சினிமாவை, தமிழ் சூழலுக்கு ஏற்ற நவ யதார்த்த சினிமாவை உருவாக்குவது எனும் தேடலுடன் தொடர்பு பட்டது. வங்கத்திலும் கேரளத்திலும் எழுந்த சத்யஜித்ரே, அடூர் கோபாலகிருஷ்ணன் போன்றவர்கள் முன்வைத்த புதிய சினிமாவை தமிழிலும் விளைவது தொடர்பான தேடல் இது. 
 

இன்னொரு சிந்தனைப் பள்ளியும் தமிழில் உண்டு. அது திராவிட இயக்கத்தவரின் பிரச்சார சினிமா என்பது அசலான மண்ணின் விளைச்சல் என்றும், அது காலத்தின் தேவை என்றும், அதற்கு இன்னும் பொருத்தம் இருக்கிறது என்றும், அனைத்து சினிமாவும் வியாபாரம்தான் என்றும் பார்க்கும் பார்வை. அதனோடு வங்கத்திலும் கேரளத்திலும் உருவான திரைப்படங்கள் வாழ்க்கையைச் சொல்லாத, தத்துவக் காவிகள் என்று சொல்லும் பார்வை இவர்களுடையது. திரைப்படத்திலும் திராவிட பார்ப்பனக் கூறுகளைப் பார்ப்பதுதோடு, ஜெயகாந்தனது திரைப்படங்களை பார்ப்பனியப் படங்களாகப் பார்த்தும் - காட்சிமொழி சார்ந்து அல்லாது இதுவரைத்திய எழுத்துப் பிரதி சார்ந்து - இவர்கள் பிரதிசார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் எழுதுவார்கள். எம்.எஸ்.எஸ்.பாண்டியன், சுபகுணராஜன் போன்றோர் இந்தச் சிந்தனைப் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.
 
தமிழ் சினிமா குறித்த இதுவரையிலான மேற்கத்திய ஆய்வுகளும் சரி, ஆங்கிலத்தில் வந்திருக்கும் ஆய்வுகளும் சரி இருவகையிலுமாகப் பெரும்பாலுமானவை திராவிட இயக்கப் பிரச்சாரத்துக்கும் தமிழ் சினிமாவுக்குமான உறவு குறித்ததாகவே இருக்கிறது.
 
எம்.எஸ்.எஸ்.பாண்டியன் எம்.ஜி.ராமச்சந்திரன் குறித்து, அவரது புனிதபிம்பம் குறித்து ஆய்வு செய்திருக்கிறார். எம்.ஜி.ஆர்.தான் விரும்பிவாறு, தன்னை முன்னிறுத்திக் கொள்ள, தனக்கான தமிழ் சினிமாவை உருவாக்கினார் என்பது அவரது பார்வை. திராவிட இயக்கத்தின் பிரச்சார பாணியைச் சுவீரித்துக் கொண்ட எம்.ஜி.ராமச்சந்திரன், அறிஞர் அண்ணா, கலைஞர். கருணாநிதி போன்றவர்களின் திராவிட இலட்சியவாதத்தை முன்வைத்தவராக அல்லாமல், தன்னை ஒரு புனிதபிம்பமாக முன்னிறுத்திக் கொண்டதொரு சினிமாவை உருவாக்கினார் என இப்பார்வையை விரித்துக் கொண்டு போகலாம்.
 
மார்க்சியரான கா.சிவத்தம்பி தமிழ் சினிமா வரலாறு எழுதுதலில் இருக்கும் இந்த இரு வேறு சிந்தனை வெளியில்தான் தனது கருத்துக்களை முன்வைக்கிறார். தமிழ் சினிமா காட்சிரூப ஊடகமாக ஏன் புரிந்து கொள்ளப்படவில்லை என்பதனை தியோடர் பாஸ்கரன் வழியிலேயே, தமிழ் நாடகத்திற்கும் தமிழ் திரைப்படத்திற்குமான தொடர்ச்சியை முன்வைத்து சிவத்தம்பி விளக்குகிறார். மொழிவழிப்பட்ட வகையில் ஆங்கிலத்தில் அசையும் படம் - மூவிங் இமேஜ் -  என அர்த்தம் தரும் சினிமா தமிழில் திரைப்படம், அதாவது அசையாத படச்சட்டகம் - ஸடில் போட்டோ - எனவே புரிந்து கொள்ளப்பட்டது என்பதனையும் சிவத்தம்பி குறிப்பிடுகிறார்.
 
காட்சிரூப சினிமா, திராவிட இயக்கப் பிரச்சார சினிமா என்ற விவாத வெளியில் ஒரு மார்க்சியராகச் சிவத்தம்பி நுழைகிறபோது, அவர் பல்வேறு விடயங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவரது கல்விப்புலம் சார்ந்த தொழில்முறையிலான நாடகம் குறித்த அறிவுடன், தமிழ்சினிமாவின் வளர்ச்சியைக் காட்சிரூப ஊடகம் எனும் அளவையுடன் அவர் ஒப்பிட்டு விவரிக்கிறார். சிவாஜிகணேசனின் பராசக்தி கால நாடக பாணி நடப்பின் துவக்கம் முதல், முதல் மரியாதை படத்தின் காட்ருபத்திற்கு ஒப்புக் கொடுத்துத் தன்னை மாற்றிக் கொண்ட அவரது பிற்கால நடிப்பு வரையிலாக அவருள் நேர்ந்த மாற்றம் வரையிலும் சிவத்தம்பி இதனை அவதானிக்கிறார்.
 
தமிழ்சினிமாவின் விசேஷமான பகுதியாக திரை இசைப் பாடல்களைக் குறிப்பிட்டு, தமிழ் கவிதை மரபுடன் அதனை அவர் இணைக்கிறார். தமிழ் சினிமாவின் வடிவம் தொடர்பான பிரச்சினையை அவர் திராவிட இயக்கத்தின் பிரச்சார நோக்குடன் இணைத்துப் பார்க்கிறார். தமிழ்ப் பண்பாட்டில் சினிமா என்பதனை, திராவிட இயக்கத்தவரால் வரையறை செய்யப்பட்ட தமிழ் பண்பாடு எனும் பகுத்தறிவு மற்றும் நாத்திக, எதிர் பார்ப்பனீய மரபின் பின்னணியில் ஆய்வுசெய்கிறார். பகுத்தறிவு மரபு - பக்தி மரபு என்பதற்கு இடையிலான முரண், சிறுதெய்வ வழிபாடாக பக்தி மரபு ஆனது பகுத்தறிவு மரபுக்கு விரோதமானது அல்ல, அது தமிழ்ப் பண்பாட்டின் ஒரு பகுதியாக நோக்கப்பட வேண்டும் என்கிறார் கா.சிவத்தம்பி.
 
திராவிட இயக்க பிரச்சார சினிமா முன்வைத்ததே தமிழ்ப் பண்பாடாக ஆகியிருந்த நிலைமையை கா.சிவத்தமபி விளக்குகிறார். வங்கத்திலும் கேரளத்திலும் நடந்த மாற்றங்களுக்கு மாறாக கம்யூனிஸ்ட்டுகள் அல்லாமல் தமிழகத்தில் திராவிட இயக்கத்தவர் எவ்வாறு தமிழ் சினிமாவைக் கைப்பற்றினார்கள் என்கிற பிரச்சினை குறித்தும் கா. சிவத்தம்பி குறிப்பிட்டுப் பேசவும் செய்கிறார்.
 
தமிழ்சினிமா வரலாறு குறித்த கா.சிவத்தம்பியின் கட்டுரைகளில் மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட கட்டுரை எம்.ஜி.ராமச்சந்திரன் முதலமைச்சராக இருந்து தமிழகத்தில் நடத்திய உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டின்போது அவர் வாசிக்கவிருந்து தடுக்கப்பட்ட கட்டுரை. எம்.ஜி.ராமச்சந்திரனின் வளர்ச்சியும் எழுச்சியும் அவர் தமிழ் சினிமாவில் உருவாக்கிய புனிதபிம்ப சினிமாவையும் பற்றியது அக்கட்டுரை.
 
கா.சிவத்தம்பி தமிழ் சினிமா குறித்து எழுதிய இறுதிக் கட்டுரையாக இருப்பது மணிரத்தினத்தின் சினிமாக்களை முன்வைத்து அவர் எழுதிய கட்டுரையாகும். திராவிட இயக்கக் கருத்தியலின் பின்னணி கொண்டு, தமிழ் சமூகத்தின் மீதான தமிழ் சினிமாவின் பண்பாட்டுத் தாக்கத்தினை மதிப்பிடத் துவங்கிய கா.சிவத்தம்பியின் திரைப்பட விமர்சனப் பயணம் (1981 முதல் 2004 வரையிலும் எழுதப்பட்ட அவரது தமிழ்த் திரைப்படம் குறித்த கட்டுரைகளின் தொகுப்பு : தமிழ்ப் பண்பாட்டில் சினிமா : மக்கள் வெளியீடு : சென்னை-2004 : மறுபதிப்பு என்.சி.பி.ஹெச் : சென்னை - 2010)  மணிரத்னத்தின் படங்களின் அரசியலையும் அழகியலையும் அவதானிப்பதுடன் தனது பயணத்தை நிறுத்திக் கொண்டு விடுகிறது.
 
சிவத்தம்பி தமிழ் சினிமா ஆய்வுக்குச் செய்த பங்களிப்பு எனத் திரும்பத்திரும்பச் சொல்லப்படுவது எம்.ஜி.ராமச்சந்திரன் குறித்த அவரது பார்வையாகும். எம்.ஜி.ராமச்சந்திரன் குறித்த கருணாநிதி சார்பு அல்லது பின்னாளைய திராவிட முன்னேற்றக் கழகச் சார்பு சினிமா விமர்சகர்களுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளின் விமர்சகர்களுக்கும் சிவத்தம்பியின் பார்வை மிக உவப்பானதாக இருந்தது. இன்னும் திராவிட அரசியலின் மிகப்பெரும் பங்களிப்பாக பகுத்தறிவு வழிப்பட்ட நாத்திகத்திற்கு மாற்றான நம்பிக்கையில் பயணித்தபடி, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயரில் அந்த இயக்கத்தின் தொடர்ச்சியெனத் தமது அரசியல் கட்சியை எம்.ஜி.ஆர. முன்னிலைப்படுத்திக்கொண்டதும், மரபான திராவிட இயக்கத்தவரின் சிந்தனைப் போக்கிற்கு ஒரு மிகப் பெரும் சவாலாகவும் அமைந்திருந்தது.
 
திமுக சார்பாளர்கள், மார்க்சியர்கள், பெரியாரியர்கள் என அனைவரும் எம்.ஜி. ராமச்சந்திரன் குறித்த சிவத்தம்பியின் பார்வையினை ஏற்பதிலுள்ள சமூகவியல் அரசியல் நிஜம் இதுதான்.
 
எம்.ஜி.ஆரை அடியொற்றி ரசிகர் மன்றங்களைப் பின்னாளைய அரசியல் பிரவேசத்தின் தற்கால அமைப்பாக உருவாக்க முனையும் தமிழ் சினிமா கதாநாயகர்களைக் குறித்த சமூகவியல் ஆய்வுக்கும் எம்.ஜி.ஆர்.நிச்சயமாகவே ஒரு துவக்கப் புள்ளியாகவே அமைகிறார். இந்த வகையிலும் எம்.ஜி.ராமச்சந்திரன் குறித்த சிவத்தம்பியின் பார்வை முக்கியமானதாக இருக்கிறது.
 
எம்.ஜி.ராமச்சந்திரன் குறித்த சிவத்தம்பியின் குறிப்பிட்ட கட்டுரை மிகப்பரவலாக அறியவந்ததற்கான அரசியல் காரணங்கள் அன்றும் இன்றும் என்றும் வலுவாகவே இருக்கின்றன. 1981 ஆம் ஆண்டு மதுரையில் நடந்த உலகத்தமிழ் மாநாட்டில் சமர்ப்பிக்க சிவத்தம்பி எழுதிய ஆங்கிலக் கட்டுரை*  பின்னாளில் அரசியல் தொடர்பாடல் ஊடகமாகத் தமிழ் சினிமா எனப் பின்னாளில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியானது. இக்கட்டுரை எம்.ஜி.ஆர்.குறித்த ஒரு விமர்சனமாக ஆகிவிடும் எனும் பயம் காரணமாக மாநாட்டில் இக்கட்டுரையை வாசிக்க மாநாட்டு அமைப்பாளர்கள் மறுத்துவிட்டனர். எம்.ஜி.ஆர்.தன்னைப் பற்றிய எந்தக் குறிப்பும், அது பாராட்டாக இருந்தால் கூட அதனை விரும்பவில்லை என மாநாட்டுக் குழுவைச் சார்ந்த அருணாசலம் என்பவர் தன்னிடம் தெரிவித்ததாகச் சிவத்தம்பி குறிப்பிடுகிறார். இக்கட்டுரை அதனது ஆங்கில வடிவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பு அமைப்பான என்சிபிஎச் பதிப்பாகத் தனிநூலாக அப்போது வெளியானது.
 
இப்பிரதியைப் படித்துக் கருத்துச் சொன்னவர்களில் ஈழமார்க்சியரான ஏ.ஜே. கனகரத்னாவும் ஒருவர் என்பதனை சிவத்தம்பி பதிவு செய்கிறார்.
 
இக்கட்டுரையில் பேசப்பட்ட பல்வேறு எம்.ஜி.ஆர். குறித்த பல்வேறுவிடயங்கள் பிற்பாடு பற்பல கல்வித்துறைசார் நூல்களில் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. எம்.எஸ்.எஸ். பாண்டியனது நூல் த இமேஜ் டிரேப் முதல் செல்வராஜ் வேலாயுதம் பதிப்பித்த நூலிலுள்ள** ஹார்ட் கிரேவ் மற்றும் ஸாரா டிக்கி வரை உள்ள கட்டுரைகளில் சிவத்தம்பியினது கட்டுரையின் பாதிப்புக்களை நாம் கணவியலும்.
 
எம்.ஜி.ஆரின் படங்களில் சமூகத்தளைகளை மீறி தனிமனிதன் மேல்நிலைப்பாட்டை எய்தமுடியும் என்ற கருத்து மிகச் செப்பமாகப் பதிய வைக்கப்பெற்றது. அவர் சித்தரித்த பாத்திரங்களின் குணாம்சங்களைக் கொண்ட ஒருவராகவே அவர் போற்றப்பட்டார். இதனால், தமிழ்நாட்டின் நடுமட்டத்திற்குக் கீழ்வந்த சமூகப்படிநிலையினரிடையே அவர் ஒரு உதாரணபுருஷராகவே போற்றப்பட்டார். தம் நிலையிலுள்ள ஒருவர் மேல்நிலை அடைந்ததாகவே அவர் உயர்ச்சியையும் புகழையும் அச்சமூகமட்டங்களைச் சேர்ந்தோர் நம்பினார்கள். இதனால் தன்னம்பிக்கையும் சுயவளர்ச்சி பற்றிய பிரக்ஞையுமுள்ள ஓர் இளைஞர் குழாம் தமிழ்நாட்டில் வளரத்தொடங்கியது. எம்.ஜி.ஆர். தனது கவர்ச்சியின் தளமாக, தமிழ் பற்றிய நிiலாட்டினைக் கொள்ளவில்லை. இன்றும்கூட கலைஞர் கருணாநிதியோடு தொடர்புபுபுறுத்தப்படும் தமிழ்த்தன்மை எம்.ஜி.ஆரோடு பொறுத்திப் பார்க்கப்படுவதில்லை. அவருடைய அறைகூவல் நல்ல நேர்மையான மனிதன் பற்றியதாவே இருந்தது. இன்று அவர் இல்லாத நிலையிற் பார்க்கும்பொழுது அவரின் தொடர்பாற்றல் திறனால் அவர் தன்னைப் பற்றிய மதிப்பீட்டினை உயர்த்துவதற்கு ஏற்றவகையில் நடந்துகொண்ட ஒருவர் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது. எம்.ஜி.ஆரை உண்மையில் திராவிட இயக்கச் சினிமாத்துறைச் செயற்பாட்டுச் சாதனைகளிலிருந்து நோக்காது, அதனைத் தளமாகக் கொண்டு வளர்ந்து தனக்கென ஓரிடத்தினை வகுத்துக்கொண்டார் என்றே கூறல் வேண்டும். மேலும்,அண்ணா கலைஞர் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து வேறுபட்ட ஒரு சமூகத்தாக்கத்தையே இவர் ஏற்படுத்தினார் என்று கொள்ளல் வேண்டும் (தமிழ்ப் பண்பாட்டில் சினிமா : க.சிவத்தம்பி : பக்கம் 13) என 2004 ஆம் ஆண்டு வெளியான தமது நூலின் முதல் பதிப்பில், தமது எம்.ஜி.ஆர. குறித்த ஆதாரமான கட்டுரை எழுதப்பட்டு 24 ஆண்டுகளின் பின் அவரது பார்வையை மீளுறுதி செய்கிறார் சிவத்தம்பி.
 
இக்கட்டுரை குறித்து 2011 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தின் முக்கியமான தமிழ்த் திரைப்பட ஆய்வாளரும் கல்வியாளருமான சுந்தர் காளியோடு மதுரை பாபுவும் சேர்ந்து குறிப்பிடும்போது (திரைப்பட ஆய்வுகளுக்குப் பேராசிரியர் சிவத்தம்பியின் பங்களிப்பு : மதுரை பாபு-சுந்தர் காளி : காட்சிப் பிழை திரை : ஆகஸ்ட் 2011) தமிழ்த் திரைப்பட ஆய்வுகளுக்கான சிவத்தம்பியின் பெரும் பங்களிப்பு என்பது திராவிட இயக்கத்திரைப்படங்கள் பற்றிப் பொதுவாகவும், எம்.ஜி.ஆர்.பற்றிக் குறிப்பாகவும் அவர் எழுதியுள்ளதேயாகும் எனக் குறிப்பிடுகிறார்கள்.
 
திராவிட இயக்கத் திரைப்படங்களும் எம்.ஜி.ஆரும் குறித்த ஆய்வுக்கு ஊடகச் சமூகவியல் பார்வையைப் பயன்படுத்தியிருப்பதாக சிவத்தம்பி குறிப்பிடுகிறார். திராவிட இயக்கப் படங்களோடு குறிப்பாக எம்.ஜி.ஆர். எனும் ஆளுமை குறித்துப் புரிந்துகொள்வதற்கு சிவத்தம்பி தேர்ந்து கொண்டிருந்த இப்பார்வை மிகுந்த அளவில் மட்டுப்படுத்தப்பட்டதும், குறையானதும் என்றே என்னால் கருத முடிகிறது.
 
சினிமாவையும் வரலாற்றையும் - அதனை உலக அளவில் என்று கூட விரித்துக் கொள்ளலாம் - முன்வைத்து அரசியல் அதிகாரத்திற்கும் குறிப்பிட்டதொரு திரை ஆளுமைக்கும் உள்ள உறவை நாம் எம்.ஜி.ஆரை முன்வைத்துப் பேசுவதானால், எம்.ஜி.ஆர். போன்றதொரு ஆளுமையை நாம் அவருக்கு முன்னும் காணமுடியாது, பின்னும் காணமுடியாது. எம்.ஜி,ஆர். எனும் ஆளுமையை பெரும் விருட்சமாகக் கொள்வோமானால், அந்த விருட்சத்தின் வேறு வேறு கிளைப் பண்புகள் கொண்டிருந்தவர்கள் எனவே நாம் திரைப்படத் திருஉருக்கள் எனச் சொல்லப்படுகிற கிளின்ட ஈஸ்ட்வுட் முதல், கறுப்பு எம்.ஜி.ஆர். எனத் தன்னைத் தானே கோரிக்கொள்கிற விஜயகாந்த் வரை நாம் மதிப்பிட முடியும் என நினைக்கிறேன்.
 
எம்.ஜி.ஆர். எனும் ஆளுமையைப் புரிந்து கொள்வதற்கு நாம் ஊடகச் சமூகவியலோடு பிரச்சாரமும் சமூக உளவியலும் குறித்த அணுகுமுறையையும், ஸ்டாலின் முதல் சதாம் குசைன் மற்றும் மாவோ வரையிலுவுமான வரலாறும் தனிநபர் வழிபாடும் போன்றன குறித்து அணுகுவதற்கான உளவியல் பார்வையையும் கொண்டிருக்க வேண்டும் எனவே நான் நினைக்கிறேன். சிவத்தம்பியும் சரி, சிவத்தம்பியை ஏற்று எம்.ஜி.ஆர். குறித்த அவர் பார்வையை வழி மொழிகிறவர்களும் சரி சொல்கிற, இன்று அவர் இல்லாத நிலையிற் பார்க்கும்பொழுது அவரின் தொடர்பாற்றல் திறனால் அவர் தன்னைப் பற்றிய மதிப்பீட்டினை உயர்த்துவதற்கு ஏற்றவகையில் நடந்துகொண்ட ஒருவர் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது எனும் பார்வை எந்தவிதத்திலும் சமநிலை கொண்ட பார்வையாக இருக்கமுடியாது.
 
இந்த எனது ஆட்சேபத்திற்கான மூன்று வலுவான காரணங்களாக நான் கருதுவது பின்வருமாறு :
 
முதலாவதாக, ஒரு ஆளுமையை ஏற்கும் மக்கள் கூட்டத்தின் மனநிலையில் செயல்படும் சமூக உளவியலை இங்கு நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். இரண்டாவதாக, அந்தக் குறிப்பிட்ட ஆளுமையின் உளவியல் உருவாக்கத்திற்கும் அவரது நடத்தைக்குமான உறவைவைத்து மதிப்பீடுகளுக்கு வந்து சேரும் வெகுமக்களையும் நாம் குறைத்து மதிப்பிடுகிறோம். அனைத்துக்கும் மேலாக வரலாற்றில் தனிநபர் வகிக்கும் பாத்திரம் என்பதனை தனிநபர் உளவியலாக்கம் நீங்கிய புறநிலைப் பண்பு என மட்டுமே நாம் வரையறை செய்கிறோம்.
 
எம்.ஜி.ஆரைப் பொறுத்து தன்னைப் பற்றிய மதிப்பீட்டினை உயர்த்துவதற்கு ஏற்றவகையில் நடந்துகொண்ட ஒருவர் என்கிற மதிப்பீடு அவரைக் குறித்த கொச்சையான பார்வை என்றே நினைக்கிறேன். சிவத்தம்பியினது இந்தப் பார்வைக்காகவே திராவிட முன்னேற்றக் கழகச்சார்பு திரைப்பட விமர்சகர்களும், தமிழகத்தின் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாளர்களும் தத்தமது அரசியல் நோக்குகளுக்குச் சார்பாக இதனைக் கையாள்கிறார்கள் எனவே நான் கருதுகிறேன்.
 
பிறந்த நாட்டிலிருந்து வெளியேறிய ஒரு குடும்பத்தில் அயலகத்தில் பிறந்த ஒருவர், தமது ஏழாவது வயதில் மூன்றாம் நிலை படித்துக் கொண்டிருந்த வேளையில் கல்வி கற்க வசதியற்று படிப்பை நிறுத்தியவர், பட்டிணி என்ன என்பதையறிந்த வறுமையில் வாடிய ஒருவர், தாயினால் வளரக்கப்பெற்ற அதனால் அவர்மீது அபரிமிதமான பரிவு கொண்ட ஒருவர், இரு மனைவியரையும் நோய்க்குப் பலி கொடுத்தவர், குடும்ப மரபுக்கு மாறாக பிறிதொருவர் மனைவியை மணந்து கொண்டவர், மரபு மீறிய பெண் உறவுகளை மேற் கொண்டவர், கருத்தியலினாலோ ஆழ்ந்த தத்துவப் பார்வைகளினாலோ வழிநடத்தப்படாத ஒருவர் என்பதுதான் எம்.ஜி.ஆர். குறித்த சித்திரம்.
 
எழுத்தாளர் க.நா.சுவின் பார்வையில் சொல்வதானால் அவர் ஆரிய பழமைவாதத்திற்கு மாற்றாக திராவிடப் பழமைவாதத்தை முன்வைத்தவர்.*** இன்னும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெண்கள் குறித்த பார்வைக்கும் எம்.ஜி.ஆரின் பெண்கள் குறித்த பார்வைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. எந்த நிலப்பிரபுத்துவ அணுகுமுறையில் இருந்து வெளியேறுவதாக அவர்கள் கோரிக் கொண்டார்களோ அதே நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளில்தான், பெண்களைப் பொறுத்து அவர்கள் சரணடைந்தார்கள்.
 
எம்.ஜி.ஆரின் வறிய மற்றும் விளிம்பு நிலை மக்கள் மீதான பாசம் மற்றும் பரிவு என்பது வறுமையும் பட்டிணியும் குறித்துப் பட்டறிந்து பெற்ற அவர் அனுபவத்தில் இருந்துதான் உருவாகியது. அது அவரது வெள்ளந்தியான அரசியலிலும் திரைப்படங்களிலும் அவரது ஆட்சியின் கீழான சடூகத் திட்டங்களிலும் பிரதிபலித்தது. அவர் தயாரித்து இயக்கிய நாடோடி மன்னன் திரைப்படம் முன்வைத்த சமூகத் திட்டங்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையையொத்ததாக இருப்பதை எவுரும் இன்று அவதானிக்க முடியும். இதனை அவர் தேர்ந்த கருத்தியல் அடிப்படையிலிருந்தல்ல, தனது இயல்பான தேர்வுகளில் இருந்துதான் செய்கிறார். திரும்பத் திரும்ப பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமும் அவரும் இணைந்தது தற்செயலானது இல்லை. அது திட்டமிட்ட நடவடிக்கை.
 
தனிமனித வாழ்வில் தன்னலமறுப்பையும் தியாகத்தையும் போற்றிய தமிழக கம்யூனிஸ்ட், காங்கிரஸ், திராவிடத் தலைவர்கள் மீது பேரன்புகொண்டவர் அவர். அண்ணாதுரை, காமராஜ், ஜீவா மற்றும் கல்யாணசுந்தரம் போன்ற தலைவர்கள் மீதான அவரது பேரன்பு அவரது நடத்தைகளில் வெளிப்பட்டது.
 
அவரது ஈகைக் குணம் என்பது வெறுமனே ஐதீகம் இல்லை. இன்று அனைத்தும் வெளிப்படையாகவும் ஸ்தூலமாகவும் இருக்கிறது. திரைப்படப் புகழைக் குடும்பச் சொத்தாக மாற்றுபவர்களாக ரஜினிகாந்த முதல், விஜயகாந்த ஈராக, விஜய் வரை இருக்கிறார்கள். எம்.ஜி.ஆர். அப்படியானவராக இருக்கவில்லை.
 
வறிய மக்களிடம் அவர் அன்பு காட்டினார். தாம் நம்பியவற்றுக்கென அவர் அள்ளிக் கொடுத்தார். மரபான பழமையான பெண்மையைப் போற்றினார். அவரது திரைப்படம் - வாழ்வு - நடத்தை என்பதற்கு இடையிலான இடைவெளி, அவர் காலத்திய பிற அரசியல் தலைவர்களோடும் நடிகர்களோடும், ஏன் இன்றைய அரசியல் தலைவர்களோடும் நடிகர்களோடும் ஒப்பிட முன்னுதாரணம் இல்லாதது. அவரது திரைப்படங்கள் வெற்றிபெற்றதிலும், அவர் மக்கள் மனங்களில் கோலோட்சியதிலும் இவையணைத்தும் மிகப்பேரும் பங்காற்றின. சிவத்தம்பி மிகச் சரியாக மதிப்பிடுவது போல, மார்க்சியர்கள் போல திராவிட மரபினருக்கு பொருளாதாரச் சுரண்டல் குறித்த அரசியல் பார்வை இல்லை. என்றாலும், இதிலிருந்து வெளிப்பட்ட கருணாநிதி குழுமம் வந்து அடைந்திருக்கும் அவல இடமும் எம்.ஜி.ஆர் பெற்ற இடமும் ஒன்றேயானது இல்லை.
 
ஈழவிடுதலைப் போராட்டத்திலும் ஈழவிடுதலையிலும் எம்.ஜி.ஆர். கொண்டிருந்த ஈடுபாடு எவரும் அறியாதது. அவரது கடப்பாடும் ஈகைக் குணமும் வெளிப்பட்ட தருணம் குறித்து தனது நூலில் (விடுதலை : எம்.ஜி.ஆரும் புலிகளும்: விடுதலைக்குவித்திட்ட மாமனிதர் : அன்டன் பாலசிங்கம் : 2003) அன்டன் பாலசிங்கம் விரிவாக எழுதுகிறார். விடுதலைப் புலிகளுக்குத் தமிழக அரசின் சார்பாக நிதி கொடுப்பது தொடர்பான செய்தி வெளியானபோது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவும் அவரது தூண்டுதலின் பேரில் ராஜீவ்காந்தியும் அதனைத் தடுக்கிறார்கள். ராஜீவ்காந்தியையும் மீறி ஆறு கோடி ரூபாய் வரையிலான உதவியை எம்.ஜி.ஆர்.தனது சொந்தப்பணத்திலிருந்து விடுதலைப் புலிகளுக்குத் தருகிறார்.
 
அன்றிருந்த இந்திய அரசியல் சூழலில் இந்தச் செயலின் பின் விளவுகளின் பாரதூரத்தன்மையை எவரும் அறிய முடியும். 
 
விடுதலைப் புலிகள்-விடுதலைப்புலிகள் அல்லாதவர்கள் எனும் அரசியல் நிலைபாட்டில் இருந்து பார்க்கிறவர்கள் எம்.ஜி.ஆரின் இந்தச் செயல்பாட்டை எவ்வாறும் விமர்சிக்கலாம். ஆனால், ஈழுமக்களின் விடுதலையிலும், அதில் விடுதலையில் விடுதலைப்புலிகளின் ஈடுபாட்டையும் நம்பி அவர் அள்ளிக் கொடுத்த ஈகத்தின் பின்னிருந்த தனிமனித தார்மீக அறத்தை எவரும் சந்தேகிக்க முடியாது. எம்.ஜி,ஆர் உலக விடுதலைப் போராட்டங்களைக் கரைத்துக் குடித்தவர் இல்லை. ஆனால், தனது மனதுக்கு அருகிலான ஈழமக்கள் மீட்சி பெற வேண்டும் என விரும்பிய மனிதர் அவர். இன்று அவர் இல்லாத நிலையிற் பார்க்கும்பொழுது அவரின் தொடர்பாற்றல் திறனால் அவர் தன்னைப் பற்றிய மதிப்பீட்டினை உயர்த்துவதற்கு ஏற்றவகையில் நடந்துகொண்ட ஒருவர் என்ற எண்ணமே மேலோங்கி நிற்கிறது என்று, பாலசிங்கத்தின் நூல் வெளியாகிய 2003 ஆம் ஆண்டின் பின்பாக, 2004 ஆம் ஆண்டிலும் சிவத்தம்பி எழுதுவாரானால், அவரது பார்வை முழுமையான ஆய்வுப் பார்வை இல்லை என்றுதான் நாம் முடிவுக்கு வரமுடியும்.
 
தமிழகக் கலாசசார வரலாற்றிலும் திரை வரலாற்றிலும் எம்.ஜி. ஆர் என்பது ஒரு தனித்த நிகழ்வு. திரைப்படம் - வாழ்வு - தனிநபர் உளவியல் - பிரச்சாரம் - விடுதலை உணர்வு - அரசியல் அதிகாரம் - சமூக உளவியல் என அனைத்தும் தழுவி விவாதிக்க வேண்டிய ஒரு நிகழ்வு இது. ரசிகர்கள் மன்றங்கள் - திரைப்படத்தின் வழி கதாநாயகன் விதைக்கும் பிரமைகள் - கதாநாயகனின் எதிர்கால அரசியல் ஆசைகள் என்பனவற்றுக்கான உறவுகள் குறித்த ஆய்வுக்கு எம்.ஜி.ஆர் குறித்த சமூகவியல் ஆய்வு ஒரு கருவியாக இருக்கலாம், இருக்கிறது, இனி மேலும் இருக்கும். ஆனால் எம்.ஜி.ஆர் எனும் தன்னேரில்லாத நிகழ்வைப் புரிந்துகொள்ள இந்த ஆய்வுக் கருவி போதாது.
 
குறிப்பாக சிவத்தம்பி முன்வைத்த ஊடகச் சமூகவியல் பார்வை நிச்சயமாகப் போதுமானது இல்லை.
 
ஓரு ஆளுமையாக எம்.ஜி.ஆரின் தனிநபர் உளவியல் உருவாக்கமும், அவரை ஏற்றவர்களாக குறிப்பிட்ட வெகுமக்கள் குறித்த, அவர்களது சமூக உளவியலாக்கமும் குறித்த பன்மைத்துவக் கருவியே மிகச் சிறந்த கருவியாக இருக்க முடியும். அதற்கான அடிப்படையை மார்க்சீய உளவியல் அணுகுமுறை தருகிறது எனவே நான் கருதுகிறேன். எம்.ஜி.ராமச்சந்திரன் குறித்த சமநிலையிலான ஆய்வு என்பது, நவீன ஆய்வுக் கருவிகளின் அடிப்படையில்  தமிழ் மொழியில் இதுவரை இல்லை என்பதனை என்னால் திட்டவட்டமாகச் சொல்லமுடியும். மிகச் சமீப எதிர்காலத்தில் அதற்கான சாத்தியம் இருக்கிறது என்றும் என்னால் சொல்ல முடியும். அதற்கான முயற்சிகளும் நடந்து வருகின்றன என்பதனையும் நான் இங்கு ஒரு செய்தியாகப் பதிய விரும்புகிறேன்.
 
ஓன்று மட்டும் நிச்சயாக இருக்கும், எம்.ஜி.ஆர். குறித்த எத்தகைய ஆய்வுகளுக்குமான துவக்கப் புள்ளியாக சிவத்தம்பியே இருப்பார் என்பதனை மட்டும் எவரும் மறுக்க முடியாது.
 
ஆதாரங்கள்
* The Tamil Film as a Medium of Political Communication : 1981
** Tamil Cinema : the Cultural Politics of India’s Other Film Industry : 2008
*** Quoted in M.G Ramachandran : My Blood Brother : Attar Chand : 1988

நன்றி : காலம் - ஏப்ரல்-ஜூன் : 2012

•Last Updated on ••Thursday•, 29 •August• 2013 22:23••  

•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.035 seconds, 2.37 MB
Application afterRoute: 0.042 seconds, 3.12 MB
Application afterDispatch: 0.081 seconds, 5.74 MB
Application afterRender: 0.083 seconds, 5.90 MB

•Memory Usage•

6253488

•12 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'fna322d323enqlqmdf6iu8ef41'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1715396870' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'fna322d323enqlqmdf6iu8ef41'
  4. INSERT INTO `jos_session` ( `session_id`,`time`,`username`,`gid`,`guest`,`client_id` )
      VALUES ( 'fna322d323enqlqmdf6iu8ef41','1715397770','','0','1','0' )
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 71)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 797
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-05-11 03:22:50' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-05-11 03:22:50' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='797'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 55
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-05-11 03:22:50' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-05-11 03:22:50' )
      ORDER BY a.ordering

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- யமுனா ராஜேந்திரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- யமுனா ராஜேந்திரன் -=- யமுனா ராஜேந்திரன் -