அஞ்சலிக்குறிப்போடு, அக்கா எழுதிய ஆக்கம்! நாடகமேடையில் பாண்டியன் செழியனாக கனல் கக்கும் வசனம் பேசிய செல்வி அக்கா!

••Friday•, 04 •December• 2020 02:36• ??- முருகபூபதி -?? எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
•Print•

 திருமதி  “ செல்வி   “ சண்முகவடிவம்பாள் சண்முகம்

எங்கள் குடும்பத்தின் மூத்த சகோதரி செல்வி அக்கா திருமதி சண்முகவடிவம்பாள் இம்மாதம் ( டிசம்பர் ) 01 ஆம் திகதி இலங்கையில் நீர்கொழும்பில் திடீரென மறைந்துவிட்டார். எனது எழுத்துலக வாழ்வில், தொடர்ந்தும் கலை, இலக்கிய, கல்வி சார்ந்த ஆளுமைகள் மறைந்தவேளைகளில் அவர்தம் நினைவுகளை பதிவுசெய்து அஞ்சலிக்குறிப்புகள் எழுதிவந்திருக்கும் நான், முதல் தடவையாக எனது உடன்பிறப்பு குறித்து எழுதநேர்ந்துள்ளதும் விதிப்பயன்தான்.

அக்காவுக்கு பேச்சாற்றல் எழுத்தாற்றல், வாதிடும் திறமை இருந்தது. ஆனால், திருமணத்தோடு இல்லறத்தை நடத்தும் ஆற்றலை வளர்ப்பதில்தான் கவனம் செலுத்தினார்.

அக்காவின் இயற்பெயர் சண்முகவடிவம்பாள். வீட்டில் செல்லமாக செல்வி என அழைக்கப்பட்டு, அதுவே ஊரிலும் உறவினர் மத்தியிலும் நிலைத்தபெயராகியது.

எங்கள் பாடசாலைக்கு ஒரு தடவை தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்த குன்றக்குடி அடிகளார், அக்காவின் பேச்சாற்றலை வியந்து பாராட்டிவிட்டு, “ உனது பெயரின் தமிழ் அர்த்தம் - அறுவதன எழிலரசி – “ என்றார்.

அக்காவுக்கு 1966 ஆம் ஆண்டு திருமணம் நடந்தபோது நான்தான் மாப்பிள்ளைத்தோழன். அக்காவின் திருமணம் பேசித்தான் நடந்தது. பரஸ்பரம் மணமக்களின் படங்கள் காண்பிக்கப்படாமல் ஒருவரோடு ஒருவர் பேசாமல் நடந்த அக்காலத்தைய திருமணம்.

வீட்டில் நடந்த பதிவுத்திருமணத்தின்போதும், அதன்பிறகு சில மாதங்கள் கழித்து நீர்கொழும்பு ஶ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் சிறப்பாக நடந்த திருமணத்தின்போதும்கூட, அக்கா, தனக்கு வரப்போகும் மணமகனை ஏறிட்டும் பார்க்கவில்லை. பேசவில்லை !

முதலிரவில்தான் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்திருப்பார்கள்.

அக்கா திருமணமாகியதும், மச்சான் Field Officer ஆக பணியாற்றிய பலாங்கொடையில் அமைந்த அல்ஃபா எஸ்டேட்டிற்கு சென்றுவிட்டா.

பசுமை பூத்துக்குலுங்கும் தேயிலைக்கொழுந்து வாசம் பரவும் மலையடிவாரத்தில் அக்கா வாழ்ந்த வீடுகளுக்கு எனது பாடசாலை விடுமுறை காலத்தில் சென்றுவிடுவேன்.

அக்கா கர்ப்பிணியாகும் வேளைகளில் பிரசவத்திற்காக எங்கள் ஊருக்கு அழைத்துவரும் தொண்டும் என்னையே சார்ந்தது.

அக்காவின் நான்கு பிள்ளைகளும் எமது பூர்வீக வீட்டிலேயே பிறந்தனர். அனைத்தும் சுகப்பிரசவம்.

அக்காவுக்கு இடுப்புவலி வரும்போதெல்லாம், மருத்துவச்சியை சைக்கிளில் அழைத்துவரும் பொறுப்பும் என்னையே சார்ந்திருந்தது.

அக்காவுக்கு மூன்று ஆண்கள், ஒரு பெண் பிள்ளை மக்களானார்கள். இவர்களில் மகளும் இரண்டு மகன்மாரும் லண்டனில் . தம்பிமாரான நான் அவுஸ்திரேலியாவில். ஒரு தம்பி நித்தியானந்தன் லெபனானில், இளைய தம்பி ஶ்ரீதரன் சவூதி அரேபியாவில். எவராலும் அக்காவின் இறுதிநிகழ்வுக்குச்செல்ல முடியாமல் கொரோனா இடையில் வந்து தடுத்துவிட்டது. அக்காவின் கணவரான எமது மச்சானும் எமது உடன் பிறந்த தங்கையும் அவளது கணவரும் உடனிருந்த ஒரு மகனும் மருமகளும் எனது தம்பி நித்தியானந்தனின் குடும்பத்தினரும் இறுதி நிகழ்வுகளை நடத்தினார்கள். வெளியூர் உறவினர்களும் வரமுடியாமல், அக்கா, தனது இறுதிப்பயணத்தை தொடர்ந்தார்.

மரணஅறிவித்தலைப் பார்த்து உலகடங்கிலிருந்தும் பலர் இந்த டிஜிட்டல் யுகத்தில் உடனுக்குடன் தொடர்புகொண்டு தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்தார்கள். அந்த அன்பு நெஞ்சங்களுக்கு மனமார்ந்த நன்றி.

இலங்கை வானொலி கலைஞர் சானா. சண்முகநாதன் எங்கள் ஊரில் விஜயரத்தினம் கல்லூரியில் தமது மத்தாப்பு – குதூகலம் நிகழ்ச்சிகளை 1960 களில் ஒலிப்பதிவுசெய்யவந்தபோது, அக்காவின் பாடசாலைப் பருவத்து பேச்சாற்றலையும், நடிப்பாற்றலையும் பார்த்துவிட்டு, வானொலி கலையகத்திற்கு பயிற்சிக்கு அழைத்தார். அந்த அழைப்பிதழ் கடிதத்தையும் நான் பார்த்திருக்கின்றேன்.

அந்த நிகழ்ச்சியில்தான் சக்கடத்தார் புகழ் ராஜ் , கலைவளன் சிசுநாகேந்திரன் முதலானோரையும் முதல் முதலில் பார்த்தேன்.

ஆனால், பெண்கள் வேலைக்குச்செல்வதையே விரும்பாத எமது முன்னோர்களின் குடும்பத்தின் பாரம்பரியம் அக்காவை தடுத்தது. அதே காலப்பகுதியில் எங்கள் வீட்டுக்கு விருந்தினராக வருகை தந்த தமிழக அறிஞரும், எமது அப்பாவின் தாய்மாமனாரும் பாளையங்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவருமான ( கலெக்டர் ) தொ.மு. பாஸ்கரத் தொண்டமான், அக்காவை தமிழ்நாட்டுக்கு படிக்க அனுப்பிவைக்குமாறு அழைத்தார்.

அதனையும் எமது குடும்பப்பின்னணி தடுத்தது.

இத்தனை தடைகளையும் மீறமுடியாமல், திருமண பந்தத்தில் இல்லறத்தலைவியாக, தான் கடந்து பாதையிலேயே நாமும் கடந்து செல்லவேண்டும் என்று விரும்பியவர். அந்தப்பாரம்பரியத்தை காலமும் கருத்தும் மீறியதனால் அக்காவும் காலத்தோடு இணையவேண்டியதாயிற்று.

எமது ஆசான் பண்டிதர் க. மயில்வாகனம் அவர்களின் நூற்றாண்டு பாரிஸ் மாநகரில் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்றபோது வெளியிடப்பட்ட சிறப்பு மலரில் எங்கள் செல்வி அக்கா எழுதிய ஆக்கத்தை அக்காவின் நினைவாக இங்கே பதிவுசெய்கின்றேன்.

 


நீர்கொழும்பில் தமிழ் நாடகக் கலைக்கு புத்துயிரூட்டிய எங்கள் மதிப்பிற்குரிய ஆசான் பண்டிதர்!

- "செல்வி" சண்முகவடிவம்பாள் சண்முகம் -

 

 திருமதி  “ செல்வி   “ சண்முகவடிவம்பாள் சண்முகம்

இலங்கையின் வடமேல் மாகாணத்தில் நீர்கொழும்பில் தமிழ்ப்பேசும் கத்தோலிக்க மக்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்தமையால், அவர்களின் பாதிரிமார் மற்றும் கலைஞர்கள், பரிசுத்த வேதாகமத்திலிருந்து சில காட்சிகளை தேர்வுசெய்து நாடகமாக்கி வருடாந்தம் தங்கள் தேவாலய முன்றலில் மேடை அமைத்து இரவிரவாக அரங்கேற்றிவந்தனர்.

இற்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பிருந்து இவ்வாறு நாடகங்கள் அரங்கேற்றம் கண்டுள்ளன. குறிப்பாக நீர்கொழும்புக் கடற்கரை வீதி செபஸ்தியார் தேவாலயம், மற்றும் முன்னக்கரை, குடாப்பாடு, பெரியதெரு (Grand Street) ஏத்துக்கால், பள்ளஞ்சேனை முதலான பிரதேசங்களில் இருந்த தேவாலயங்களில் கத்தோலிக்க மதம் சார்ந்த நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.

அரங்க நிர்மாணம், மேடைத்திரைச்சீலை வடிவமைப்பு, பாத்திரங்களுக்கு ஏற்ற ஒப்பனை அலங்காரம் முதலானவற்றில் தேர்ச்சி பெற்ற கலைஞர்களும் இந்தப்பிரதேசங்களில் வாழ்ந்தனர்.

வாய்க்கால் என்ற ஊர் நீர்கொழும்பு - சிலாபம் வீதியில் மகாஓயா நதியின் தீரத்தில் வருகிறது. இங்கு சரித்திர நாடகங்களுக்குத் தேவையான ஆடை, அணிகலன்கள், அரச மகுடங்கள், இமிடேசன் ஆபரணங்கள் யாவும் வாடகைக்கு கிடைக்கும்.

எங்கள் ஊரில் தொலைக்காட்சியின் வருகைக்கு முன்னர், ஒரு சில சினிமா தியேட்டர்கள்தான் இருந்தன. அங்கு தியாகராஜ பாகவதர் என். எஸ். கிருஷ்ணன் காலத்துப்படங்கள் திரையிடப்பட்ட காலத்தில், தேவாலய முன்றல்களில் நாடகங்கள் மேடையேறின. அதனை எம்மூர் மக்கள் டயலோக் என்றுதான் அப்போது அழைத்தனர்.

Dialogs என்ற ஆங்கிலச்சொல்லின் தமிழ் அர்த்தம் உரையாடல். அன்று அவர்களினால் அரங்கேற்றப்பட்ட நாடகங்களில் உரையாடல் அதிகமாக இருக்கும். இவ்வாறு அவர்களின் நாடகக்கலை வளர்ந்தோங்கிய வேளையில் கடற்கரை வீதியில் அரச மரநிழலில் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய இந்து வாலிபர் சங்கம் முதலில் கீற்றுக்கொட்டகையாகத்தான் காட்சி அளித்தது.எங்கள் ஊருக்கு வடபிரதேசத்திலிருந்து வருகை தந்தவர்களில் பெரும்பாலானோர் சுருட்டுக்கைத்தொழிலை அங்கு அறிமுகப்படுத்தினர். அரசமரத்திற்கு சமீபமாகவே சுருட்டுக்கொட்டில்கள் தோன்றி, சுருட்டுக்கம்பனிகள் வளர்ந்தன.

அங்கு பணியாற்றிய முன்னோர்கள் ஒன்றிணைந்து சுருட்டுத் தொழிலாளர் சங்கம் அமைத்தனர். அவர்களுக்கென ஶ்ரீசித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் போது நான்காம் நாள் திருவிழா நடைபெற்றது.

இன்றும் இந்த நடைமுறையிருக்கிறது. இவர்கள்தான் நீர்கொழும்பில் யாழ்ப்பாணம் சின்னமேளம் கலையை அறிமுகப்படுத்தியவர்கள். அத்துடன் நீர்கொழும்புக்கு சமீபமாக குருநாகல் செல்லும் பாதையில் வரும் தங்கொட்டுவ பிரதேசத்தில் பலசரக்கு கடைகளும் நகை அடவு நிலையங்களும் புடவைக்கடைகளும் நடத்தி வர்த்தகத்தில் மேலோங்கிய வடபகுதி காரைநகர் பகுதி மக்களுக்கும் ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் ஏழாம் திருவிழாவிற்கான உபயம் கிடைத்தது. இவர்களும் வடக்கிலிருந்து பிரபல நாதஸ்வர - தவில் வித்துவான்களை அழைத்து வந்து கச்சேரிகளை நடத்தினர்.

எமது இளைமைக்காலத்தில் இரண்டு தரப்பினரும் நடத்திய கோயில் திருவிழாக்கள் பெரும் கொண்டாட்டமாய்த்தான் அமைந்தன. ஶ்ரீ சித்திவிநாயகர் ஆலயத்திற்கு முன்பாக நூறாண்டுகளுக்கு முன்னர் அமையப்பெற்ற இந்து வாலிபர் சங்கத்தில் நடந்த கலை விழாக்களில் எமது தாய்மாமனார் இரா. சுப்பையா அவர்களும் , அவருடைய தாய் மாமனார் வெற்றிவேல் அவர்களும் மற்றும் இவர்களின் நண்பர்களும் வேடங்கள் தரித்து நாடகங்கள் நடத்தியிருப்பதாக எமது அம்மா அடிக்கடி சொல்லியிருக்கிறார்கள்.

கீற்றுக்கொட்டகையாக இருந்த சங்கத்தின் மண்டபம் கல்லினால் கட்டப்பட்டு, கூரைக்கு ஓடு வேயப்பட்டு, பூரணத்துவமான அரங்கமாக மாற்றுவதற்கு எமது முன்னோர்கள் அங்கு வேடங்கள் தரித்து கலைநிகழ்ச்சிகள் நடத்தி நிதி திரட்டியதாகவும் , சுருட்டுத்தொழிலாளர் சங்கத்திற்கும் இந்தப்பணியில் பங்களிப்பு இருந்ததாகவும் எமது தாத்தாவும் ஆச்சியும் , அம்மா மற்றும் அத்தைமார் உறவினர்களும் தெரிவித்துள்ளார்கள்.

இந்தப்பின்னணியில்தான் பண்டிதர் க. மயில்வாகனன் அவர்களின் வருகை 1954 இல் நடந்தது. அவரது தலைமையில் விவேகானந்தா வித்தியாலயம் தொடங்கப்படுவதற்குக் காரணராக இருந்த ( அமரர்) எஸ். கே. விஜயரத்தினம் அய்யா இந்து வாலிபர் சங்கத்தின் அக்கால கட்டத்தின் தலைவராக இருந்தார்.

அச்சமயம் நான் கடற்கரை வீதியில் செபஸ்தியார் தேவாலயத்தின் கட்டுப்பாட்டிலிருந்த றோமன் கத்தோலிக்க ஆரம்பப் பாடசாலையில்தான் கற்றேன். எமது தாய்மாமனார் இரா. சுப்பையாவின் மகள் தேவா ( இன்று ஜெர்மனியில் வசிக்கிறார்) ஆவே மரியா மகளிர் பாடசாலையில் பயின்றார். இவ்வாறு எனது வயதிலும் என்னை விட குறைந்த வயதிலும் இருந்த சைவத்தமிழ்ப்பிள்ளைகள் அனைவரும் அங்கு ஏதாவது ஒரு கத்தோலிக்கப் பாடசாலையில்தான் கற்றுக்கொண்டிருந்தனர்.

இந்து வாலிபர் சங்கத்தில் வார விடுமுறை நாட்களில் சாமி சாத்திரியார் என்ற பெரியார் என்போன்ற பிள்ளைகளுக்குச் சைவ சமய பாடம் போதித்துக் கூட்டுப்பிரார்த்தனை வகுப்புகளும் நடத்தினார்.

பண்டிதர் மயில்வாகன் அவர்களின் வருகையையடுத்து அங்கு மறுமலர்ச்சி ஏற்பட்டதென்றே சொல்லவேண்டும். அவர் மாணவர்களின் கலை, இலக்கிய ஆற்றலை இனம்கண்டு ஊக்குவிப்பதற்காக மாணவர் இலக்கிய மன்றம் என்ற அமைப்பை மாணவர்களைக்கொண்டே உருவாக்கினார். அதுவரை காலமும் கத்தோலிக்க பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த ஆண் - பெண் சைவத்தமிழ் மாணவர்கள் படிப்படியாக விவேகானந்தா வித்தியாலயத்திற்கு வந்து சேர்ந்தனர்.

மாதாந்தம் மதியவேளையில் மாணவர் இலக்கிய மன்றத்தை தலைமை ஆசிரியர் பண்டிதர் மயில்வாகனன் அவர்கள் ஆசிரியர்கள் மூலமாக ஒருங்கிணைப்பார். மாணவர்களின் சுயவிருத்தி இதனால் முன்னேறியது.

பாடுதல், ஆடுதல், பேசுதல் , நடித்தல் முதலான துறைகளில் மாணவர்களுக்கு அந்த இலக்கிய மன்றம் சிறந்த ஊக்கியாகத்திகழ்ந்தது.

அந்த நிகழ்ச்சிகளில் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட்டது. அதனால், கலைத்துறையில் தேர்ச்சி பெறக்கூடிய மாணவர்களையும் பண்டிதர் அவர்கள் அடையாளம் கண்டு பயிற்சிகளை வழங்கினார். ஆசிரியை திலகமணி தில்லைநாதன் அவர்கள் எனக்கும் என்னுடன் படித்த கமலா என்ற மாணவிக்கும் குறத்தி நடனத்தை பயிற்றுவித்தார். பண்டிதரின் முயற்சிகளுக்கு அக்காலத்தில் பக்கபலமாக இருந்தவர்கள் இரண்டு ஆசிரியர்கள். ஒருவர் வில்லிசை வேந்தன் என நன்கு அறியப்பட்ட உடப்பூர் பெரி. சோமாஸ்கந்தர் மாஸ்டர். மற்றவர் நீர்கொழும்பு முன்னக்கரையைச்சேர்ந்த அல்ஃபிரட் நிக்கலஸ் மாஸ்டர்.

இவர்களின் கூட்டணியில் தயாரிக்கப்பட்ட நாடகம்தான் செழியன் துறவு. அதற்கான கதை வசனத்தை எழுதியவர் உடப்பூர் பெரி. சோமாஸ்கந்தர் மாஸ்டர். மேடை அரங்க நிர்மாணம் மற்றும் ஒப்பனை ஆடை அணிகலன் விடயங்களை அல்ஃபிரட் நிக்கலஸ் மாஸ்டர் கவனித்தார்.

பாண்டியன் செழியனுக்கும் சேர மன்னனுக்கும் இடையில் தொடங்கிய மோதலில் சேரனின் மகள் சிக்குண்டு போர்க்களத்தில் மடியும் காட்சியுடன் முடிவடையும் நாடகம். " பாண்டிய நாட்டின் மீது படையெடுக்கவேண்டாம்" என்று சேரனிடம், அவன் மகள் எவ்வளவோ கெஞ்சிக்கேட்டும், அவன் அவளது கோரிக்கையை நிராகரித்து, படையெடுக்கின்றான். இறுதியில் கைதாகி பாண்டியன் அரசின் சிறையில் தடுத்துவைக்கப்படுகிறான்.

சேரனின் மகள் புலவர் வேடம் அணிந்து பாண்டியன் அரசவையில் தன்னை சேரநாட்டுப்புலவர் என அறிமுகப்படுத்திக்கொண்டு பாண்டியனை புகழ்ந்து பாடுகிறாள். பாண்டியன் அவளுக்கு என்ன பரிசுவேண்டும்? எனக்கேட்கவும், தங்கள் சேரநாட்டு மன்னனை சிறையில் பார்ப்பதற்கு அனுமதி தரவேண்டும் என்கிறாள். சேரன் மகளைப் புலவர் என்று நம்பிவிடும் பாண்டியன் செழியன் அதற்கு அனுமதி தருகிறான்.

சிறையை பார்வையிட புலவர் வேடத்தில் செல்லும் மகள், தந்தை சேரனிடத்தில், “ இனியும் போர்வேண்டாம், இங்கிருந்து தப்பிச்சென்று சேரநாட்டு மக்களை பரிபாலிக்குமாறு “ சொல்லி அனுப்புகிறாள். சேரன் மகள், சேரனுக்கு தரப்பட்ட சிறைச்சாலை உடையை அணிந்துகொண்டு, தனது புலவர் வேடத்து ஆடைகளை கொடுத்து அணியச்செய்து தந்தையை தப்பி ஓடவைக்கிறாள்.

ஒருநாள் பாண்டியன் செழியன், சிறைக்கு வந்து சேரனைப்பார்க்கும்போது அவனது வேடத்தில் மகள் - புலவர் - இருப்பது கண்டு அதிர்ச்சியடைகின்றான். ஒரு பெண்ணை அவ்வாறு சிறைவைப்பதற்கு விரும்பாத பாண்டியன் அவளை எச்சரித்து விடுதலை செய்து சேரநாட்டிற்கு திருப்பி அனுப்புகின்றான்.

ஆக்கிரமிப்பில் ஆர்வம் கொண்டிருந்த சேர மன்னன் மீண்டும் பாண்டிய நாட்டின் மீது படையெடுத்துவருகின்றான். போர் நடக்கிறது. சேரன் தந்திரமாக மறைந்து நின்று அம்பை எய்தபோது குறுக்கே ஓடிவந்து தனது மார்பில் அம்பை ஏந்தி பாண்டியனை காப்பாற்றுகிறாள் சேரன் மகள்.

அதனால், சேரன் கலங்கி துடிக்கும்போது, " சேர மன்னா, இனியாவது உனது ஆக்கிரமிப்பு எண்ணத்தை கைவிடு. உனக்கு எனது நாடுதானே வேண்டும். நீயே வைத்துக்கொள், வீணாக மக்களைப் பலியெடுப்பதற்கு ஆக்கிரமிப்பு போர்கள் நடத்தவேண்டாம்" எனச்சொல்லிவிட்டு மணிமுடியை கீழே வைத்துவிட்டுத் துறவறம் பூண்டு காட்டுக்குச்செல்கின்றான்.

செழியன் துறவு என்ற இந்த நாடகத்தில் நான் பாண்டியன் செழியனாகவும் சக மாணவி சுப்பம்மாள் சேரனாகவும் எங்கள் பெரியம்மா மகள் மனோன்மணி சேரன் மகளாகவும் - புலவராகவும் நடித்தோம். பாண்டியனின் அமைச்சராக மாணவி கமலாவும் சேவகர்களாக மாணவிகள் சத்தியவாணி, கிருஷ்ணவேணி ஆகியோரும் நடித்தோம். கனல் தெறிக்கும் வசனங்கள். அரண்மனை, சிறைக்கூடம், போர்க்களம் முதலான காட்சிகள் பிரமிக்கத்தக்கவையாக அமைந்தன.

பண்டிதர் அவர்களும் சோமாஸ்கந்தரும் தீவிர பயிற்சி வழங்கி எம்மை பழக்கினர். அனைவரும் நீண்ட வசனங்களை ஏற்ற இறக்கமுடன் மனனம் செய்து உணர்ச்சிகரமாக நடித்து பாராட்டுப்பெற்றோம். செழியன் துறவு நாடகம் நீர்கொழும்பு தமிழ்ப்பாடசாலைகளுக்கிடையில் நடத்தப்பட்ட நாடகப்போட்டியில் முதல் பரிசும் சான்றிதழ்களும் பெற்றது.

அதே நாடகம் வீரத்திருமகள், மகுடம் காத்த மங்கை முதலான பெயர்களில் மீண்டும் மீண்டும் நீர்கொழும்பில் பெற்றோர் தின விழாக்களில் மேடையேற்றப்பட்டது. அத்துடன் குமணன் என்ற அரச நாடகத்தையும் பண்டிதர் தயாரித்து மேடையேற்றினார். அதில் நான் குமணனாக நடித்தேன்.

நீண்ட நெடுங்காலமாக எங்கள் ஊரில் கத்தோலிக்க சமயம் சார்ந்த நாடகங்கள் Dialogs என அழைக்கப்பட்ட பின்னணியில், பண்டிதர் அவர்களின் வருகையுடன் தமிழர் வரலாற்று நாடகங்களை நோக்கிய சிந்தனைகள் மலர்ந்தன.

எமது மாணவர்கள், கரகாட்டம், ஒயிலாட்டம், குறத்தி நடனம், காவடி நடனம் முதலான தொன்மையான கலை வடிவங்களை பயின்றனர். ஆரங்கேறினர். அத்துடன் செவ்விந்தியர் நடனமும் ஆடினார்கள்.

அதற்காக அன்று கடுமையாக உழைத்தவர்தான் பண்டிதர் மயில்வாகனன் அவர்கள். இவ்வாறு நாடகம், நடனம் முதலான துறைகளில் மாணவர்களை ஊக்குவித்து பயிற்சியளித்த பண்டிதர் அவர்கள், பேச்சுப்போட்டிகளுக்கும் சைவசமய பாடப்பரீட்சைகளுக்கும் மாணவர்களை தயாரித்து அனுப்பிவைத்தார். வருடாந்தம் கொழும்பு விவேகானந்த சபை நடத்திய பரீட்சைகளில் நாம் தோற்றினோம். அன்று எமக்கு பரிசாகக் கிடைத்த சான்றிதழ்களும் பெறுமதியான நூல்களும் இன்றும் எமது வீடுகளில் பத்திரமாக இருக்கின்றன.

அவற்றில் எல்லாம் பண்டிதர் அவர்களினதும் இதர ஆசிரியர்களினதும் நினைவுகள் ஆழமாகப் பதிந்திருக்கின்றன.

பண்டிதர் அவர்கள் என்றும் எங்கள் நினைவுகளில் நிழலாகத் தொடருவார்.

அன்னாருக்காக அவரின் மாணவர்கள் ,சந்ததியினர், தமிழ்ப்பற்றாளர்கள் பாரிஸ் மாநகரில் நூற்றாண்டு விழா நடத்துவது அறிந்து மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றேன்.

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Friday•, 18 •December• 2020 11:58••  

•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.108 seconds, 2.37 MB
Application afterRoute: 0.139 seconds, 3.12 MB
Application afterDispatch: 0.285 seconds, 5.71 MB
Application afterRender: 0.287 seconds, 5.85 MB

•Memory Usage•

6206664

•12 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'hhf0du5bcsso55brhdtqn4fpj5'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1726723683' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'hhf0du5bcsso55brhdtqn4fpj5'
  4. INSERT INTO `jos_session` ( `session_id`,`time`,`username`,`gid`,`guest`,`client_id` )
      VALUES ( 'hhf0du5bcsso55brhdtqn4fpj5','1726724583','','0','1','0' )
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 17)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 6344
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-09-19 05:43:03' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-09-19 05:43:03' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='6344'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 52
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-09-19 05:43:03' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-09-19 05:43:03' )
      ORDER BY a.ordering

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- முருகபூபதி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- முருகபூபதி -=- முருகபூபதி -