தர்மிஸ்டர் ஜே.ஆர்.ஜெயவர்தனா: சாணக்கியரா? சாதுரியக்காரரா?

••Saturday•, 31 •October• 2020 21:28• ??- முருகபூபதி -?? எழுத்தாளர் முருகபூபதி பக்கம்
•Print•

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவின் நினைவு தினம் நவம்பர் 1.

ஜே.ஆர்.ஜெயவர்தனா

இலங்கை சுதந்திரம் பெறுவதற்கு முன்னர் 1943 ஆம் ஆண்டு நடந்த சட்ட சபைத்தேர்தலில் ஒருவர் வெற்றிபெற்றார். களனி பிரதேசத்திலிருந்து முதல் முதலாக அவர் தெரிவாகும்போது அவரது வயது 37. இலங்கையில் நீதித்துறை சார்ந்த ஒரு பெரியவருக்கும் செல்வந்த குடும்பத்திலிருந்து வந்த ஒரு பெண்மணிக்கும் பிறந்தவர்தான் அந்த களனி தொகுதியை பின்னாளில் பிரதிநிதித்துவப்படுத்தியவர். அவர் பிறந்த இல்லம் எது...? என்பதைச் சொன்னால் எவருக்கும் ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை! அந்த இல்லம் கொழும்பு வடக்கில், களனி கங்கைக்கும் ஆமர் வீதிக்கும் நடுவில் வரும் கிராண்ட்பாஸ் வீதியில் 185 ஆம் இலக்கத்தில் அமைந்துள்ளது. இன்றும் நீங்கள் அந்த இல்லத்தின் முகப்பினை பார்க்கலாம். அந்த இல்லத்தில், நீதிக்கும் செல்வச்செழிப்பிற்கும் பெயர் பெற்ற அந்தக்குடும்பம் வாழ்ந்த காலத்தில் 1906 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி பிறந்த குழந்தையின் பெயர் ஜூனியஸ் ரிச்சர்ட் ஜெயவர்தனா.

இலங்கை அரசியல் வரலாற்றின் ஏடுகளில் இவரது ஆளுமை குறிப்பிடத்தகுந்தது. எத்தனையோ சவால்களை முறியடித்து, தான் நினைத்தவற்றை பல்வேறு தந்திரோபாயங்களுடன் சாதித்தவர். இவரை ஜே.ஆர். எனவும் ஜே.ஆர். ஜெயவர்தனா எனவும் அழைப்பர். 1977 இல் நடந்த பொதுத்தேர்தலில் அறுதிப்பெரும்பான்மையுடன் வெற்றிபெற்றதையடுத்து, தார்மீக சமுதாயம் அமைப்பதுதான் தனது நோக்கம் என்றும் சொல்லி, அதனை தமது தாய் மொழியில் தர்மிஷ்ட சமாஜய என வர்ணித்தார். ஆனால், அந்த தார்மீக ஆட்சியில் 1977 – 1981 -1983 ஆம் ஆண்டுகளின் காலப்பகுதியில் நடந்த பல சம்பவங்களை பார்க்கும்போதும் அகில இலங்கை எங்கும் நிகழ்ந்த வன்முறைகள், தீவைப்புகள், படுகொலைகள் அனைத்தையும் சீர்தூக்கிப்பார்க்கும்போதும், அதுதான் அவர் கனவு கண்ட தார்மீக சமுதாயமா..? எனவும் கேட்கத்தோன்றும்.

இவரது பதவிக்காலத்தில்தான் யாழ்ப்பாணம் பொதுநூலகமும் கயவர்கள் ஏவிவிட்ட தீ அரக்கனுக்கும் பலியாகியது. அவரது அரசியல் எதிரிகள் அவரை "மிஸ்டர் தர்மிஸ்டர்" எனவும் அழைத்தனர். பதினொரு பிள்ளைகளில் மூத்த புதல்வனாக அவர் பிறந்த இல்லம்தான் ஒன்பது தசாப்தங்களுக்கு முன்பிருந்து வீரகேசரி நாளிதழ் வெளியாகும் கட்டிடம்!

இலங்கை பிரித்தானியரின் ஆளுகைக்குள் இருந்த காலப்பகுதியில் பிறந்திருக்கும் ஜே.ஆர்., ஒரு கத்தோலிக்க குடும்பப்பின்னணியை கொண்டிருந்தவர். அவரது பெயரிலிருந்தே அதனையும் தெரிந்துகொள்ளமுடிகிறது. அவர் மட்டுமல்ல, சொலமன் டயஸ் பண்டாரநாயக்கா, ஃபீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கா ஆகியோரும் கத்தோலிக்கப் பின்னணி கொண்டிருந்தவர்கள்தான்.

ஜே.ஆரின் அரசியல் பிரவேசம் 1938 இல் தொடங்குகிறது. இலங்கை தேசிய காங்கிரஸில் இணைந்து தீவிரமாக அரசியலில் ஈடுபட்டு, முதலில் புதுக்கடை வட்டாரத்திலிருந்து கொழும்பு மாநகர சபைக்குத் தெரிவாகி, அதன்பின்னர் களனி சட்டசபைத்தொகுதியின் பிரதிநிதியாக வந்தார். சட்டசபை உறுப்பினராக, சுதந்திரத்தின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக, யூ. என்.பி. அரசுகளின் பதவிக்காலங்களில் நிதியமைச்சராக, ராஜாங்க அமைச்சராக, அக்கட்சி தோல்வி கண்டபோது 1970 இல் எதிர்க்கட்சித்தலைவராக, பின்னர் 1977 இல் அறுதிப்பெரும்பான்மையுடன் வென்றபோது முதலில் பிரதமராக அதனையடுத்து நிறைவேற்று அதிகாரம் பொருந்திய ஜனாதிபதியாக வளர்ந்தவர். அந்திம காலத்தில், ஜனாதிபதி பதவிக்காலம் முடிந்ததும், அமைதியாக அரசியலை விட்டு ஒதுங்கி, 1996 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1 ஆம் திகதி ( இன்றைய தினம் ) மறைந்தார்.

அவர் ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தி, மேற்கொண்ட நடவடிக்கைகள் இலங்கை அரசியலில் மிகுந்த கவனத்திற்குரியவை. அதிசிறந்த ராஜதந்திரி. அதிகம் பேசமாட்டார். ஆனால், அவர் வாய்திறந்தால் அங்கிருந்து கொட்டும் வார்த்தைகளில் பழுத்த அனுபவம் பேசும். அதனால் பாரதப்பிரதமர் இந்திராகாந்தி முதல் பல உலகத்தலைவர்கள் அவரை " நரி" எனவும் அழைத்துள்ளனர். எனினும் பண்டாரநாயக்கா போன்று அவருக்கு தேசியத்தலைவர் என்ற மகிமை கிட்டவில்லை. எனினும் அவர் ஏனைய தலைவர்கள் போன்று வாரிசு அரசியலை தனது குடும்பத்திற்குள் நுழைக்கவில்லை. டீ. எஸ். சேனாநாயக்காவின் சகோதரர் ஆர். ஜீ. சேனாநாயக்கா, புதல்வர் டட்லி சேனாநாயக்கா, பேரன் ருக்மன் சேனாநாயக்கா ஆகியோரும், பண்டாரநாயக்கா குடும்பத்திலிருந்து அவரது மனைவி ஶ்ரீமாவோ, மற்றும் மகள் சந்திரிக்கா, அவரது கணவர் விஜயகுமாரணதுங்க, மகன் அநுரா பண்டார நாயக்கா ஆகியோரும், பிரேமதாசாவின் குடும்பத்திலிருந்து சஜித் பிரேமதாசா, மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்திலிருந்து முதலில் ஜோர்ஜ் ராஜபக்‌ஷ, பின்னர் சாமல், சகோதரர்கள் கோதா, பஸில், மகன் நாமல் ஆகியோர் அரசியல் பிரவேசம் செய்தார்கள்.

ஜே.ஆர்.ஜெயவர்தனாஜே.ஆர். ஜெயவர்தனாவின் துணைவியார் எலினா எளிமையாக வாழ்ந்தவர். மகன் ரவி ஜெயவர்தனாவை அரசியல் வாரிசாக்காமல், ஒரு விமானியாக்கி, போர்க்காலத்தில் விசேட அதிரடிப்படையை உருவாக்கும் சூத்திரதாரியாக்கினார்.

அமரர் பண்டாரநாயக்காவின் நினைவாக கொழும்பு 7 இல் சீன அரசாங்கம் பிரமாண்டமான சர்வதேச மாநாட்டு மண்டபம் அமைத்துக்கொடுத்திருக்கிறது. தனக்குப்பின்னர் தனது நினைவாக தான் நீண்ட காலம் அரசியல் செய்த தேசம் ஏதாவது நினைவு மண்டபம் அமைத்தால், அதற்கு தான் பிறந்த 185, கிராண்ட் பாஸ் வீதி இல்லத்தையே தெரிவுசெய்யவேண்டும் என்ற கனவும் விருப்பமும் ஜே.ஆரிடம் குடியிருந்தது.

அந்த இல்லம் வீரகேசரி பத்திரிகை வெளியிடும் நிறுவனமாக மாறியதற்கும் கதைகள் இருக்கின்றன. இந்தியா - தமிழ்நாட்டில் தனவணிகர் சமூகத்தைச்சேர்ந்தவர்கள் செறிந்து வாழ்ந்த செட்டி நாட்டு மண்ணில் ஆவணிப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்து, வளர்ந்து கொழும்புக்கு வர்த்தகம் செய்யவந்திருக்கும், பெரி. சுப்பிரமணியம் செட்டியார், 1930 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி வீரகேசரி என்ற பத்திரிகையை வெளியிட்டார். அவரது புதல்வர்களின் பெயர்கள்: அரசகேசரி, வீரகேசரி. தங்கள் பிள்ளைகளின் பெயர்களில் வீடு அமைப்பது, வர்த்தக நிலையங்கள் தொடங்குவது, பத்திரிகை - இதழ்கள் வெளியிடுவது முதலான கலாசாரம் அனைத்து இனத்தவர்களிடமும் இருக்கிறது.

செட்டியாரின் வீரகேசரி, தொடக்கத்தில் தமிழ் தனவணிகர்களின் ஸ்தாபனங்கள் படிப்படியாக தொடங்கிய கொழும்பில் செட்டியார் தெரு என இன்றும் அழைக்கப்படும் வீதியில்தான் ஒரு கட்டிடத்தில் வெளியானது. ஒரு பத்திரிகை காரியாலயம் இயங்குவதாயின், ஆசிரிய பீடம், அச்சுக்கோப்பாளர் பிரிவு, அச்சு இயந்திரப்பிரிவு - ஒப்புநோக்காளர் பிரிவு, நிருவாக பீடம், விநியோகம் - விளம்பரப்பிரிவு - கணக்காளர் பிரிவு என பல பகுதிகள் இடம்பெறும். இவை அனைத்தும் முதலில் செட்டியார் தெருவில் ஒரு கட்டித்திற்குள்தான் அமைந்திருந்தன.

வீரகேசரி பத்திரிகை முதலில் தலைநகரிலும் பின்னர் படிப்படியாக வெளியூர் பதிப்புகளையும் வெளியிடத்தொடங்கியதும், அங்கு ஊழியர்களின் எண்ணிக்கையும் பெருகத்தொடங்கியது. செட்டியாருக்கு வேறு இடம் பார்க்கவேண்டிய நிர்ப்பந்தம் தோன்றியது. அக்காலப்பகுதியில் இலக்கம் 185 இல் அமைந்திருந்த இல்லத்தில் வாழ்ந்த குடும்பம் கொழும்பு தெற்கிற்கு இடம்பெயர்ந்தமையால் குத்தகை அடிப்படையில், அந்த இல்லம் கைமாறியது. செட்டியார், அந்த இல்லத்தை குத்தகை அடிப்படையில் வாங்கி, அங்கிருந்து வீரகேசரி பத்திரிகையை அச்சிட்டு வெளியிட்டார். அவர் அதனை வாங்கிய நேரம் நல்லநேரமாக இருந்திருக்கவேண்டும். 1931 - 1932 காலப்பகுதியிலிருந்து கடந்த ஒன்பது தசாப்த கலமாக வீரகேசரி 185 ஆம் இலக்க இல்லத்திலிருந்து வெளியாகிக்கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட குத்தகை முறை பல தலைமுறைகளையும் கடந்து, நிருவாக பீடங்கள் இயக்குநர் சபைகள் மாறினாலும் வீரகேசரியும் அதன் சகோதர வெளியீடுகளும் இடம்பெயராமல் அந்த இல்லத்திலிருந்துதான் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.

தான் பிறந்து தவழ்ந்த அந்த இல்லம் எப்படி இருக்கிறது என்பதைப்பார்ப்பதற்காக நீண்ட காலத்திற்குப்பின்னர் (1977 இற்குப்பின்னர்) ஜனாதிபதியாக அங்கு வருகை தந்தார் ஜே.ஆர். ஜெயவர்தனா. அவருடன் அச்சமயம் பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாசவும் வந்தார். அவர்களின் நோக்கம் அங்கு 1906 ஆம் ஆண்டு பிறந்த குழந்தையின் கனவை நிறைவேற்றுவதற்காகவே என்பதே எமது ஊகம். வீரகேசரி நிருவாகத்திற்கு அரசமட்டத்திலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டன. மட்டக்குளிய பிரதேசத்தில் நிலம் வாங்கி அங்கு புதிய கட்டிடம் அமைத்து வீரகேசரிக்கு நிரந்தர இடம் தேடுவதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஜே.ஆரின். நெருங்கிய நண்பராகவும் விளங்கியிருந்த அதன் அப்போதைய அதிபரும், சென். அந்தனீஸ், சின்டெக்ஸ் முதலான பெரிய நிறுவனங்களின் தலைவருமாக விளங்கியவரும் தலைநகரில் பெரிய வர்த்தகப்பிரமுகராகவும் திகழ்ந்த ஞானம் அவர்களின் பெரு முயற்சியினால், அரசின் அழுத்தம் குறைந்து மறைந்துபோனது.

அவ்விடத்தில் ஜே.ஆருக்கென பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைப்பதாயின், அந்தப்பிரதேசத்தில் இயங்கிய பல வர்த்தக நிலையங்களை அப்புறப்படுத்தவேண்டிய நிலை தோன்றலாம். அங்குள்ள குடியிருப்பாளர்களையும் வெளியேற்றவேண்டிய நெருக்கடிகள் ஏற்படலாம். அது அரசுக்கு பல்வேறு சட்டச்சிக்கல்களையும் தோற்றுவிக்கலாம். ஒரு தேசத்தின் அதிபருக்காக பிரமாண்டமான நினைவில்லம் அமைவதாயின் அந்தப்பிரதேசம் நவீன முறையில் பாதுகாப்பு பிரதேசமாக உருவாக்கப்படவேண்டும். ஆனால், ஜனநெருக்கடியும் போக்குவரத்து நெரிசலும் நீடிக்கும் அவ்விடத்தை அவ்வாறு மாற்றும் முயற்சி இறுதியில் கைவிடப்பட்டது. இதுவிடயத்தில் அந்தத்தலைவர் தனது கனவை நனவாக்காமலேயே அமரத்துவம் எய்திவிட்டார்!

" நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால், தெய்வம் ஏதுமில்லை. நடந்ததையே நினைத்திருந்தால் நெஞ்சில் அமைதியில்லை. முடிந்த கதை தொடர்வதில்லை!" என்று கவியரசர் கண்ணதாசன் எழுதியிருப்பது போன்று, அந்தத்தலைவரும் ஒரு தீர்மானத்திற்கு வந்திருக்கவேண்டும்.

அவரது உறவினர்கள் ( விஜயவர்தனா குடும்பம்) தலைநகரில் ஏரிக்கரை அருகே ஒரு பெரிய இல்லத்தை உருவாக்கி மும்மொழிகளிலும் பத்திரிகைகளை வெளியிட்டார்கள். அதுதான் Lake House.

இவ்வாறு இலங்கை தலைநகரில் தோன்றிய பல பத்திரிகைகளின் கதைகளின் பின்னால் பல சுவாரஸ்யமான செய்திகள் இருக்கின்றன.

1977 இற்குப்பின்னர் ஜே.ஆரின் பதவிக்காலத்தில்தான் இலங்கையில் தொகுதிவாரியான தேர்தல்கள் நிறுத்தப்பட்டு விகிதாசார பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில் மாவட்ட ரீதியாக உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவானார்கள். அதனால்தான் இன்று பல கட்சிகள் நாடாளுமன்றினுள் பிரதிநிதித்துவம் பெற்றுள்ளன. அதற்காக அக்கட்சிகள் அவருக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். 1970 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலின் முடிவுகளை பார்த்தபின்னர்தான் இத்தகைய திட்டத்தை அவர் நடைமுறைப்படுத்துவதற்கு மனதிற்குள் படம் வரைந்தார். அந்த தேர்தலில் அவரது ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியடைந்திருந்தாலும், முழு நாட்டிலும் அக்கட்சிதான் அதிகப்படியான வாக்குகளை பெற்றிருந்தது.

இடதுசாரிகள் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு வழங்கிய ஆதரவை மீளப்பெற்றதனால், 1977 தேர்தலில் சமசமாஜகட்சியும், கம்யூனிஸ்ட் கட்சியும் படுதோல்வியடைந்தன். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினால் எதிர்கட்சி தலைவரைக்கூட தெரிவுசெய்யமுடியாமல், தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளர் நாயகம் அ. அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித்தலைவரானார்.

ஜே.ஆரின் பதவிக்காலத்திலும் அவர் தமது கட்சிப்பிரதிநிதிகளின் அழுத்தங்களுக்கும் ஆளாகியிருந்தாலும் அனைத்தையும் சாதுரியமாக முறியடித்தார். அவரது உறவினரான உபாலி விஜேவர்தனாவை பாரிய கொழும்பு அபிவிருத்தி ஆணைக்குழுவின் தலைவராக்கியபோதும் கட்டுநாயக்காவில் அமையப்பெற்ற சுதந்திர வர்த்தக வலயத்தினை அவரது கண்காணிப்பிற்கு ஒப்படைத்தையடுத்தும் கட்சிக்குள் நிழல் யுத்தங்கள் தொடர்ந்தன. உபாலி விஜேவர்தனா ஒரு விமான விபத்தில் காணாமலேபோய்விட்டார்.

ஐக்கிய தேசியக்கட்சியின் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புத்தலைவரும் களனி தொகுதி எம்.பி.யும் விஞ்ஞான கைத்தொழில் அமைச்சருமான சிறில் மத்தியூவின் அடவடித்தனமான பேச்சுக்களை பொறுக்கமுடியாமல், அன்னாரின் அமைச்சுப்பதவியையும் ஜே.ஆர். பறிக்கநேர்ந்தது. இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு இந்தியப்பிரதமர் ராஜீவ் காந்தியுடன் ஜே.ஆர் ஒப்பந்தம் செய்தபோது, பிரதமர் பிரேமதாசாவின் அதிருப்திக்கும் ஆளானார். 1977 ஓகஸ்ட் 18 ஆம் திகதி நாடாளுமன்றில் பொறுப்புவாய்ந்த பிரதமராக அவர் திருவாய் மலர்ந்தருளிய பேச்சு இன்றுவரை அரசியல் ஆய்வாளர்களினால் சொல்லப்படுகிறது. அந்த வரிகள்: “ போர் என்றால் போர். சமாதானம் என்றால் சமாதானம். “

1978 பெப்ரவரி மாதம் முன்னைய ஶ்ரீமா அரசின் அரசியல் அமைப்பினை மாற்றி, ஜனநாயக சோசலிஷக் குடியரசு அரசியலமைப்பினை நடைமுறைப்படுத்தி, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறைக்கு வழிசமைத்து ஜனாதிபதியானார். அதன் மூலம் தன்னால் ஆணைப்பெண்ணாக்கமுடியாது. ஆனால், வேறு அனைத்தும் செய்யலாம் என்றார்.

மட்டக்களப்பு எம்.பி. செல்லையா இராசதுரை தமிழரசுக்கட்சியிலிருந்து விலகியதையடுத்து, அவரை அரவணைத்து அவருக்காகவே இந்து கலாசார அமைச்சினை உருவாக்கினார். அன்றுமுதல் அதற்கும் இதர மதங்களுக்காகவும் அமைச்சுக்கள் அறிமுகமாகின.

விஜயகுமரானதுங்க நடிகராகவிருந்து அரசியலுக்கு வந்தவர். முதலாவது ஜனாதிபதித்தேர்தலில் அவர் ஹெக்டர் கொப்பேகடுவவை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்தபோது அரசிக்கூப்பன் அச்சிட்டு விநியோகித்த குற்றச்சாட்டின் பேரில் கைதாகி தடுத்துவைக்கப்பட்டார். தமது கணவரை விடுவிப்பதற்காக விஜயகுமாரணதுங்கவின் மனைவி சந்திரிக்கா ஜே.ஆரை சந்தித்துப்பேச சென்றபோது, வரவேற்று உபசரித்த ஜே.ஆர். , விஜயகுமரணதுங்க அதுவரையில் நடித்த சிங்களப்படங்கள் பற்றி பேசி, உரையாடலை திசைதிருப்பினார். இதிலிருந்து வாசகர்கள் ஜே.ஆர். என்ன சொல்லவந்தார் என்பதையும் புரிந்துகொள்ளமுடியும்.

அவர் 1977 இல் பிரதமராக பதவி ஏற்றதும் அவரை குளிர்மைப்படுத்துவதற்கு அவரது கட்சி எம்.பி.க்கள் சிலர் அனைத்து அரச திணைக்களங்களிலும் முன்னாள் பிரதமர் ஶ்ரீமாவின் படங்கள் இருக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்தி உங்களது படம்தான் இனிமேல் அங்கிருக்கவேண்டும் என்று சொன்னபோது, “ வேண்டாம் அந்தப்படமும் அழகானது. அதுவும் இருக்கட்டுமே “ என்றவர்தான் நகைச்சுவையுணர்வும் மிக்க ஜே.ஆர். அப்போது நாடாளுமன்ற பார்வையாளர் களரியிலிருந்து அவரது மனைவி எலினா ஜெயவர்தனா சிரித்துக்கொண்டிருந்தார். அதே பதவிக்காலத்தில்தான் ஶ்ரீமாவின் குடியியல் உரிமையையும் மேடைகளில் பேசும் உரிமையையும் பறித்தார்.

ராஜீவ்காந்தி ஜே.ஆரை. முதல் முதலில் சந்தித்தபோது ராஜீவின் வயதைக் ஜே.ஆர். கேட்டபோது ராஜீவின் வயது 43. தான் 44 வருடங்களுக்கு முன்பே அரசியலுக்கு வந்துவிட்டதாக ஜே.ஆர் சொன்னார். இதிலிருந்து ஜே.ஆரின் உள்ளக்கிடக்கையை புரிந்துகொள்ள முடியும்.

ஜே.ஆரின். அரசியல் காலத்தில்தான் முதல் பிரதமர் டி. எஸ். சேனாநாயக்கா காலிமுகத்திடலில் குதிரை சவாரியின்போது தவறிவிழுந்து மரணமடைந்தார். பின்னாளில் மற்றும் ஒரு பிரதமர் பண்டாரநாயக்கா, ஒரு பிக்குவினால் சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்குப்பின்னர் அவரது கட்சியைச்சேர்ந்த லலித் அத்துலத்முதலி, காமினி திசாநாயக்க, ரஞ்சன் விஜேரத்தின, வீரசிங்க மல்லிமராச்சி, மற்றும் ஜனாதிபதி பிரேமதாச ஆகியோரும் படுகொலையுண்டனர். அயல்நாடான இந்தியாவில் இந்திரா காந்தியும் அவரது மகன் ராஜீவும் வேறு வேறு சந்தர்ப்பங்களில் படுகொலையுண்டனர். பாகிஸ்தான் பிரதமர் சுல்பிகார் அலி பூட்டோ தூக்கிலிடப்பட்டார். அவரது மகள் பெனாசிர் பூட்டோ சுட்டுக்கொல்லப்பட்டார். மற்றும் ஒரு பாக்கிஸ்தான் பிரதமர் ஷியாவுல்ஹக் விமான விபத்தில் கொல்லப்பட்டார். இலங்கையில் மேலும் பல தமிழ் – சிங்கள அரசியல் தலைவர்கள் படுகொலையுண்டனர்.இவ்வளவு அவச்சாவுகளையும் தனது அரசியல் வாழ்வில் கண்டவரான  ஜே.ஆர். ஜெயவர்தனா பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியிலும் இயற்கை மரணம் எய்தியது அவரது விதிப்பயன்தான்.

இலங்கை அரசியலில் தனக்குப்பின்னர் எந்தவொரு வாரிசையும் விட்டுச்செல்லாத தனித்துவமான தலைவர் என்ற பெயரையும் பெற்றார். அத்துடன் இன்றும் இலங்கை அரசியலில் அனைவரும் தலையை பிய்த்துக்கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரம் குறித்த அரசியல் பாதையை தனது நினைவாக விட்டுச்சென்றவரும் ஜே.ஆர். ஜெயவர்தனா அவர்கள்தான் ! அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ரேகனுக்கு இலங்கை யானைக்குட்டியும் பரிசளித்தார். அமெரிக்காவின் எதிரியான கியூபா அதிபர் ஃபிடல் காஷ்ரோவையும் கட்டி அணைத்தார்.

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Saturday•, 31 •October• 2020 22:13••  

•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.025 seconds, 2.37 MB
Application afterRoute: 0.031 seconds, 3.12 MB
Application afterDispatch: 0.073 seconds, 5.71 MB
Application afterRender: 0.075 seconds, 5.85 MB

•Memory Usage•

6205848

•12 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'jsen8hed12khf6jav0lh3nb745'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1713276111' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'jsen8hed12khf6jav0lh3nb745'
  4. INSERT INTO `jos_session` ( `session_id`,`time`,`username`,`gid`,`guest`,`client_id` )
      VALUES ( 'jsen8hed12khf6jav0lh3nb745','1713277011','','0','1','0' )
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 68)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 6279
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-04-16 14:16:51' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-04-16 14:16:51' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='6279'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 52
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-04-16 14:16:51' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-04-16 14:16:51' )
      ORDER BY a.ordering

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- முருகபூபதி -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- முருகபூபதி -=- முருகபூபதி -