மின்னூல் வாங்க: வ.ந.கிரிதரனின் 'குடிவரவாளன்'

Tuesday, 06 January 2015 18:50 - பதிவுகள் - மின்னூல்கள்
Print

- பதிவுகள்.காம் வெளியிடும் மின்னூல்களை இப்பக்கத்தில் வாங்கலாம். தற்போது பிடிஃப் வடிவத்தில் மட்டுமே மின்னூல்கள் அமைந்திருக்கும். விரைவில் மின்னூலின் ஏனைய வடிவங்களிலும் கிடைக்கும். விரைவில் நல்லூர் இராஜதானி நகர அமைப்பு (திருத்திய இரண்டாம் பதிப்பு) , அ.ந.கந்தசாமியின் நாவல் 'மனக்கண்', அ.ந.க படைப்புகள், வ.ந.கிரிதரன் கட்டுரைகள், வ.ந.கிரிதரன் கவிதைகள், அ.ந.க. கவிதைகள் ஆகியவை மின்னூல்களாகக் கிடைக்கும். 'பதிவுகள்' இணைய இதழின் தொகுப்பு மலரும் விரைவில் மின்னூலாகக் கிடைக்கும். -


வ.ந.கிரிதரனின் நாவலான 'குடிவரவாளன்'  மின்னூலினை வாங்க விரும்புகின்றீர்களா?

வணக்கம்!  'குடிவரவாளன்' நாவலினை மின்னூலாக பிடிஃப் வடிவத்தில் வாங்க விரும்புபவர்கள் கீழுள்ள இணைய இணைப்பில் வாங்கிக்கொள்ளலாம். விலை $4 (கனடியன்):

குடிவரவாளன் நாவல் பற்றி மேலும் சில குறிப்புகள்... வ.ந.கிரிதரன் -

இந்த நாவல் என் வாழ்வின் அனுபவங்களை மையமாக வைத்து உருவானது. இலங்கையில் நிலவிய அரசியல் சூழல்களினால் உலகின் நானா திக்குகளையும் நோக்கிப் புகலிடம் நாடிப் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களில் நானுமொருவன். கனடா நோக்கி, மேலும் 18 ஈழத்தமிழர்களுடன் பயணித்துகொண்டிருந்த எனது பயணம் இடையில் தடைபட்டது. பாஸ்டனிலிருந்து கனடாவிற்கு எம்மை ஏற்றிச்செல்லவிருந்த டெல்டா 'எயார் லைன்ஸ்' எம்மை ஏற்றிச் செல்ல மறுத்துவிட்டது. அதன் காரணமாக, மீண்டும் இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக நாங்கள் அனைவரும் அமெரிக்காவில் அரசியல் தஞ்சம் கோரினோம். இவ்விதமாக பாஸ்டனில் அகதிக்காக விண்ணப்பித்த எம்மை அமெரிக்க அரசு நியூயார்க்கிலுள்ள புரூக்லீனிலிருந்த தடுப்பு முகாமினுள் அடைத்து வைத்தது. சுமார் மூன்று மாதங்கள் வரையில் அத்தடுப்பு முகாம் வாழ்வினுள் எம் சுதந்திரத்தை இழந்திருந்தோம். அதன் பின்னர் எம்மை விடுதலை செய்தார்கள்.

எனது தடுப்பு முகாம் அனுபவங்களை மையமாக வைத்து 'அமெரிக்கா என்னும் நாவலினைத் 'தாயகம்' (கனடா) பத்திரிகையில் எழுதினேன். அந்நாவலும் சில சிறுகதைகளும் 'அமெரிக்கா' என்னும் தலைப்பிலொரு தொகுப்பாகத் தமிழகத்தில் ஸ்நேகா மற்றும் மங்கை பதிப்பகம் (கனடா) ஆகியவற்றின் வெளியீடாக வெளிவந்தது. அதன் பின்னர் எனது நியூயார்க் மாநகர அனுபவங்களை மையமாக வைத்து 'அமெரிக்கா 2' என்னும் நாவலை எழுதினேன். இந்நாவல் பதிவுகள் மற்றும் திண்ணை ஆகிய இணைய இதழ்களில் தொடராக வெளிவந்தது. இந்த நாவல் பின்னர் அமெரிக்கா: சுவர்களுக்கப்பால் என்னும் தலைப்பில் பதிவுகள் இணைய இதழில் மீள்பிரசுரமாக வெளிவந்தது. அந்த நாவலே தற்போது 'குடிவரவாளன் (AN IMMIGRANT) என்னும் பெயரில் மின்னூலாக வெளிவந்துள்ளது. இந்த நாவலுக்குக் குடிவரவாளன் என்னும் பெயரே மிகவும் சரியாகப் பொருந்துவதாகக் கருதுகிறேன். இந்த நாவல் ஓர் ஈழத்துத் தமிழ் அகதி அமெரிக்காவின் நியூயோர்க் மாநகரில் ஒரு சட்டவிரோதக் குடிவரவாளனாக எவ்விதம் தன் இருப்பினைத் தக்க வைப்பதற்காகப் போராடுகின்றான் என்பதை விபரிக்கும். அந்த வகையில் முக்கியமானதோர் ஆவணமாகவும் இந்த நாவல் விளங்குகின்றது.

இந்த நாவல் பல தகவல்களை உள்ளடக்கியுள்ளது. அகதிகள், சட்டவிரோதக் குடிவரவாளர்கள் பற்றி அமெரிக்காவில் நடைமுறையிலிருக்கும் சட்டங்கள் பற்றி இந்நாவல் கேள்வியினை எழுப்புகின்றது. இவ்விதமாக அமெரிக்க மண்ணில் தம் இருப்பிற்காகப் போராடும் குடிவரவாளர்கள் எவ்விதம் அங்கு அவர்கள் நிலை காரணமாகப் பல்வேறு வழிகளிலும் பாதிப்புக்குள்ளாகின்றார்கள் என்பதை இந்நாவல் விபரிக்கின்றது. குறிப்பாக இவ்விதமான குடிவரவாளர்களை எவ்விதம் அவர்களைப் பணியிலமர்த்துவோர் அதிக வேலை வாங்கிப் பிழிந்தெடுக்கின்றார்கள் என்பதை, வேலை வாய்ப்பு முகவர்கள் எவ்விதம் இவ்விதமான தொழிலாளர்களின் நிலையைத் தமக்குச் சாதகமாக்கி, வேலை வாய்ப்பெனும் ஆசை காட்டி, பணத்துக்காக ஏமாற்றுகின்றார்களென்பதையெல்ல்லாம் நாவல் விபரிக்கின்றது. இவ்வளவு தூரம் அலைக்கழிக்கும் வாழ்வினைக் கண்டு அஞ்சாது, துவண்டு விடாது இந்நாவலின் நாயகன் எவ்விதம் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு,  தன் பயணத்தைத் தொடர்கின்றான் என்பதை நாவல் கூறும். அதே சமயத்தில் இலங்கையின் வரலாற்றில் களங்கமாகவிருக்கும் 1983 ஜூலைக் கலவரத்தினை வெளிப்படுத்தும் ஆவணப்பதிவாகவும் இந்நாவல் விளங்குகின்றது. வாசிப்பவர்கள் அதனைப் புரிந்துகொள்வார்கள்.

இன்னுமொன்றினையும் இந்த நாவல் வாசிப்பவர்கள் உணர்ந்துகொள்வார்கள். பொதுவாகப் புலம் பெயர்ந்து வாழும் சூழலை மையமாக வைத்து நான் எழுதும் புனைகதைகளில் , அவற்றில் வரும் பாத்திரங்கள் இருவிதமாக உரையாடுவார்கள். தமிழர்கள் தமக்கிடையில் உரையாடும்பொழுது வழக்கம்போல் தமது பேச்சுத் தமிழில் உரையாடிக்கொள்வார்கள். ஆனால் வேற்றுமொழி மனிதர்களுடன் பேசும்பொழுது அவர்களது மொழிகளில் பேசிக்கொள்வார்கள். Hi Man, Hi Friend போன்ற சொற்தொடர்களைத் தாராளமாகத் தமது உரையாடல்களில் பாவித்துக்கொள்வார்கள். அவ்விதமான பாத்திரங்களுடனான உரையாடல்கள் ஒருவிதமான மொழி பெயர்ப்புத் தமிழிலிருக்கும். எனது சிறுகதைகள் பலவற்றில் இது போன்ற நடையினை வாசிப்பவர்கள் அவதானிக்கக் கூடும். இந்நாவலிலும் அதனை நீங்கள் அவதானிக்கலாம்.

தடுப்பு முகாம் வாழ்வினை விபரிக்கும் 'அமெரிக்கா' நாவலும், அதன் பின்னரான நியுயோர்க் மாநகரத்து வாழ்வினை விபரிக்கும் 'குடிவரவாளன்' நாவலும் என் அனுவங்களை மையமாக வைத்து உருவானவை. அன்றைய காலகட்டத்து என் மன உணர்வுகளை மேற்படி நாவல்கள் புலப்படுத்தும். அத்துடன் குறிப்பிட்ட காலகட்டங்களின் ஆவணப்பதிவுகளாகவுமிருக்கும். இது போன்று தமது அனுபவங்களை மையமாக வைத்துப் புலம் பெயர்ந்து பல்வேறு நாடுகளிலும் வாழும் தமிழ்ப் படைப்பாளிகளிடமிருந்து புனைவுகளோ அல்லது அபுனைவுகளோ அதிக அளவில் வெளிவரவேண்டும். நாளைய தலைமுறையினர்க்கு இன்றைய தலைமுறையினரின் வரலாற்றுப் பதிவுகளாக அவை விளங்குவதால் இவ்வகையான படைப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

Last Updated on Wednesday, 16 October 2019 05:36