வாசம் பரப்பிய மல்லிகை வாடி வீழ்ந்தது மண்ணில் !

Thursday, 28 January 2021 21:12 - கவிஞர் மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா , மெல்பேண், அவுஸ்திரேலியா - கவிதை
Print

எழுத்தாளர் டொமினிக் ஜீவா

வாசம் பரப்பிய மல்லிகை
வாடி வீழ்ந்தது மண்ணில்
தேசம் தெரியும் ஜீவா
தேசம் விட்டேகினார் விண்ணில்

வெள்ளுடை வேந்தனாய் ஜீவா
வீதியில் நடந்துமே திரிந்தார்
கல்லிலும் முள்ளிலும் நடந்தார்
கருத்துடன் எழுதியே உயர்ந்தார்

எள்ளவும் அஞ்சவும் மாட்டார்
எடுத்தை முடித்துமே நிற்பார்
கள்ளமில் மனமுடை  ஜீவா
காலனின் கையிலே சென்றார்

மூலையில் ஒதுங்கியே நில்லா
முயற்சியை கையினில் எடுத்தார்
நாளையே எண்ணியே உளத்தில்
நம்பிக்கை எழுத்தினில் விதைத்தார்

எழுதிடும் கரங்களுக் கெல்லாம்
ஏணியாய் ஆகினார் ஜீவா
மல்லிகைத் தொட்டிட்ட பலபேர்
மனமெலாம் உறைகிறார் ஜீவா

ஈழத்து இலக்கிய பரப்பில்
இருக்கிறார் விருட்சமாய் ஜீவா
ஆழமாய் மல்லிகை அமைத்தார்
அவரெங்கும் படர்ந்துமே  இருந்தார்

நீண்டநாள் சஞ்சிகை தந்தார்
நிமிர்வுடன் எழுத்தினை ஆண்டார்
ஆண்டவன் திருவடி அடைந்தார்
ஆனாலும் தெரிகிறார் ஜீவா

 

Last Updated on Thursday, 28 January 2021 21:16