வாழ்வினில் ஒளிவரப் பொங்கலே வா !

Wednesday, 13 January 2021 11:35 - மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா, மெல்பேண், அவுஸ்திரேலியா - கவிதை
Print

மங்கலம் பொங்கிடப் பொங்கலே வா
மனமெலாம் மகிழ்ந்திடப் பொங்கலே வா
சொந்தங்கள் இணைந்திடப் பொங்கலே வா
சுமையெலாம் இறங்கிடப் பொங்கலே வா !

வறுமைகள் வரண்டிடப் பொங்கலே வா
வளர்ச்சிகள் மிகுந்திடப் பொங்கலே வா
தொழிலெலாம் சிறந்திடப் பொங்கலே வா
துணிவது நிறைந்திடப் பொங்கலே வா !

பட்டதுன்பம் போயகலப் பொங்கலே வா
பார்பிடித்த நோயகலப் பொங்கலே வா
மட்டற்ற மகிழ்ச்சிதரப் பொங்கலே வா
மாண்பற்ற செயலகலப் பொங்கலே வா  !

மருத்துவம் விரிந்திடப் பொங்கலே வா
மாண்டிடக் கொரனா பொங்கலே வா
மாநிலம் விடிவுறப் பொங்கலே வா
வாழ்வினில் ஒளிவரப் பொங்கலே வா !

வயலுழுவார் வாழ்வுயரப் பொங்கலே வா
வறுமையெனும் சொல்லகலப் பொங்கலே வா
மதுநினைப்பு மனமகலப் பொங்கலே வா
வாலறிவன் மனநிறையப் பொங்கலே வா !

ஆன்மீகம் செறிந்திடப் பொங்கலே வா
அறமது பரவிடப் பொங்கலே வா
ஆணவம் அடங்கிடப் பொங்கலே வா
அன்பெங்கும் மலர்ந்திடப் பொங்கலே வா !

ஊழல்கள் ஒழிந்திடப் பொங்கலே வா
உத்தமர் வெளிவரப் பொங்கலே வா
ஏழைகள் சிரித்திடப் பொங்கலே வா
இன்பமே பொங்கிடப் பொங்கலே வா !

கற்றவர் சிறந்திடப் பொங்கலே வா
கயவர்கள் மறைந்திடப் பொங்கலே வா
நற்றமிழ் செழித்திடப்  பொங்கலே வா
நன்மைகள் விளைந்திடப் பொங்கலே வா  !

 

Last Updated on Wednesday, 13 January 2021 11:57