கவிதை: ஆயுள்வேத வாகடம்: ஊற்றும் மாற்றும்

Wednesday, 06 January 2021 23:08 - ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் - கவிதை
Print

-ஞானக்கவி தேசபாரதி தீவகம் வே.இராசலிங்கம் -

பால சிவகடாட்சம் பல்கலையின் பட்டமுளார்
காலக் கணிப்போடும் கற்றுநன்றே – காலமது
தாறுமாறாய்ப் போந்து தடயங்கள் மாற்றிவரும்
நேர்மாறைக் கண்டார் நிசம் !

செகராச சேகரன்தன் சொல்லுவாக டத்தை
முகத்தாயம் மாற்றியோர் முன்றில் – நகையோடும்
நற்பேரைத் தான்மாற்றி நாளம் வகைமாற்றி
நிற்போரைக் கண்டார் நிலம் !

அகத்தியர் ஈராயி ரம்மென மாற்றிச்
செகராச சேகரன்நூல் சேர்த்துத் - தமிழ்நாட்டில்
வாகடத்தைக் காட்டி வருத்தநூல் தாம்எடுத்துக்
பாகடத்தை மாற்றினார் பார்!

ஈழ வரலாற்று ஏலவாய்; எப்போதும்
ஆழவேர் கொண்ட அளப்பெரிதாம் - கோளமுறும்
வந்த மருத்துவத்தை மன்றில் எழுதுவித்துத்
தங்கள் பெயரிட்டாரே தாம் !

ஈழத்து ஆய்வாலும் எங்கும் பரிகாரம்
நீளவே நின்ற நெருக்கடியால் - தாளவே
மாற்றி இடுவோர் மடக்கை யளந்தபடி
சாற்றி உரைகண்டார் சால் !

சித்த மருத்துவத்தைச் சேகரர்கள் யாழ்மன்னர்
மெத்தவுமே ஆராய்ந்து மீட்டுள்ளார் – முத்தமிழின்
பற்றாய் வரைந்ததமிழ் பார்முழுதும் செல்;வதற்கு
வித்தாய் அமைந்ததிந்த வேர் !

ஆயுள்வேர் வாகடங்கள் அத்தனையும் தங்களுடன்
சாயும் எனவுரைத்துச் சாட்டாகப் - போயுரைத்துப்
பாடிக் கரைத்துப் பரிகாரம் தான்தேடிக்
காடி வரைந்தாரே காண் !

மூல அறிவியல்கள் மூலப் படியாய்ந்து
பால சிவகடாட்சம் பாங்குரைத்தார் – சீலமொடு
ஞாலக் கருவூலம் நாடி நலந்திகழச்
சீலம் படைத்தார் சிறப்பு !

 

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Wednesday, 06 January 2021 23:10