தொடர் நாவல்: வெகுண்ட உள்ளங்கள் (4)

Saturday, 08 December 2018 22:35 - கடல்புத்திரன் - நாவல்
Print

- கடல்புத்திரன்  (பாலமுரளி) -

[ 1983 கறுப்பு ஜூலைக் கலவரத்தைத்தொடர்ந்து ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பல்வேறு ஈழத்தமிழரின் விடுதலை அமைப்புகளில் இணைந்து போராடப் புறப்பட்டனர். அவ்விதமாகப் புறப்பட்டவர்களில் 'கடல்புத்திர'னும் ஒருவர். தனது அனுபவங்களை மையமாக வைத்து 'வெகுண்ட உள்ளங்கள்' நாவலை இவர் படைத்திருந்தாலும், இந்த நாவல் விரிவானதொரு நாவலல்ல. ஆனால் இவ்விதமாகத் தமது இயக்க அனுபவங்களை மையமாகக்கொண்டு ஏனையவர்களால் படைக்கப்பட்ட நாவல்களிலிருந்து இந்த நாவல் முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் படைக்கப்பட்டிருப்பதொன்றே இந்த நாவலின் முக்கியமான சிறப்பாகக் கருதுகின்றோம். பொதுவாக இவ்விதமான படைப்புகளை எழுதுபவர்களின் எழுத்தில் விரவிக்கிடக்கும் சுயபுராணங்களை இவரது 'வெகுண்ட உள்ளம்' நாவலில் காண முடியாது. 'வெகுண்ட உள்ளங்கள்' என்னுமிந்த இந்த நாவல் 1983ற்கும் 1987ற்குமிடைப்பட்ட பகுதியில், ஈழத்தமிழர்களின் போராட்ட எழுச்சி எவ்விதம் ஒரு கடலோரக்கிராமத்தின்மீது தாக்கத்தினை ஏற்படுத்தியது என்பதை விபரிக்கின்றது. அந்த வகையில் இந்நாவல் அக்காலகட்டத்தை ஆவணப்படுத்திய முக்கியதொரு படைப்பாக விளங்குகின்றது. கூடவே அமைப்புகள் எவ்விதம் செயற்பட்டன, அவற்றின் கட்டமைப்புகள் எவ்விதமிருந்தன என்பவற்றையும் வெளிப்படுத்துகின்றது. - பதிவுகள் -]

- கடல்புத்திரனின் 'வெகுண்ட உள்ளங்கள்' நாவலின் நான்காம் அத்தியாயம் இது. இதில் விபரிக்கப்படும் மிதவை பற்றிய தகவல் ஈழத்தமிழர்கள்தம் ஆயுதப்போராட்டத்தில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. போராட்டச்சூழல் காரணமாகப் பாதைகள் பல தடைப்பட, முக்கியத்துவமற்றிருந்த அராலித்துறை ஊர்க்காவற்றுறைக்குச் செல்வதற்குரிய படகுத்துறையாக முக்கியம் பெறுகின்றது. அப்பகுதிக் கடற்றொழிலாளர்களால் நடத்தப்பட்டுக்கொண்டிருந்த படகுச்சேவையை போராட்ட அமைப்புகள் தம் வசம் எடுத்துக்கொள்கின்றன. இந்நாவலில் முக்கிய பாத்திரங்களிலொன்றான கனகனின் 'இயக்கம்' பயணிகளுடன், வாகனங்களையும் ஏற்றிச்செல்கின்ற பெரிய மிதவையொன்றினை வெற்றிகரமாகச் செய்கின்றது. இது பற்றி நாவல் பின்வருமாறு விபரிக்கின்றது:

"தீவுப்பகுதி எ.ஜி. எ. அமைப்பு புத்திசாலித்தனமாக இன்னொரு ஏற்பாடும் செய்திருக்கிறார்களடா. வெல்டிங் பெடியன், தோழனும் கூட‌… சுந்தரத்தின் ஐடியா வை அந்த எ.ஜி. எ.அமைப்பு ஒத்துழைப்புக் கொடுத்து செயற்படுத்தியது. அவனோடு சேர்ந்து செயல்பட ஏழெட்டுப் பேரை சர்வேசன் நியமித்தான். காம்பிற்கு பின்னாலுள்ள பெரிய‌ வளவில் புதிய வெற்று டீசல் ட்ரம்கள் குவிக்கப்பட்டன. சுந்தரம் குழு சுறுசுறுப்பாக இயங்கியது. அவற்றின் வாய்ப் பகுதிகளை மூடி வெல்ட் பண்ணினார்கள். காற்று அடைக்கப்பட்ட ட்ரம்களை அருகருகாக அடுக்கி , அதன் மேல் கம்பிச்சட்டம் வைத்து இணைத்து ஒட்டினார்கள். அப்படியே ஒரு மேடை போல் அமைத்தார்கள்.மூன்று நான்கு நாட்களாக முழு மூச்சாக செயல் பட்ட அவர்கள் கடைசியில் வெற்றியடைந்திருந்தனர். அது முதல் தரமான மிதவையாக காரைநகர் கடற்பகுதியிலுள்ள பெரிக்கு இணையாக செயற் படுமென்ற நம்பிக்கை அவர்களுக்கு எல்லாம் இருந்தது. ட்ராக்டரில் ஏற்றப்பட்டு புழுதியைக் கிளப்பிக் கொண்டு போய் கடலில் இறக்கப்பட்ட போது பெடியள்கள் கரகோசம் செய்தார்கள். தச்சுவேலை தெரிந்த ஒரு பெடியன் ஒருவன், இவனும் தோழன் தான்… கம்பிச் சட்டத்தின் மேல் கையோடு கொண்டு வந்த பலகைகளை வைத்து கச்சிதமாகப் பொருத்தி விட்டான். அவன் சொல்லிக் கொடுத்தபடி மற்ற‌ பெடியளும் உதவியாக இருந்ததால் வேலை இரண்டு மணித்தியாலத்திலேயே முடிந்தது."

இயக்கம் அமைத்த இந்த மிதவை (Ferry) பற்றிய தகவல் இந்நாவல் பதிவு செய்யும் முக்கியமான தகவல்களிலொன்று. உண்மையில் வரலாற்று முக்கியத்துவம் மிக்கது. இது போல் ஈழத்தமிழர்களின் ஆயுதப்போராட்டத்தைப்பற்றிய நாவல்களைப்படைப்பவர்கள் இது போன்ற தகவல்களை உள்ளடக்கிய அக்கால மானுட வாழ்க்கையினை விபரிப்பது முக்கியமானது. இனி அத்தியாயம் நான்கினை வாசியுங்கள். - பதிவுகள் -


அத்தியாயம் நான்கு: சரித்திரம் படைத்த மிதவை!

ஊரிலுள்ளவர்களைப் போல அப்ப, அண்ணனுக்கும் வெளிநாடு போகிற ஆசை பிடித்திருந்தது. அதற்காக காசுக்காக இழுபறிப்பட்டது ஒரு பெரும் சோகக் கதை. கை கூடாது என்று நிச்சயமாகத் தெரிந்தபோது அண்ணன் குடியில் விழுந்தான். பாபும் லதாவும் பிறந்த போதும் அவர்கள் வாழ்வில் மகிழ்ச்சி அறவே இல்லை.

அண்ணியின் சகோதரங்கள் வந்து பாராதது வேறு அவரை வெகுவாகப் பாதித்தது. சண்டையும் பூசலும் இருவருக்குமிடையில் மெல்ல மெல்ல எழ ஆரம்பித்தன. அண்ணன் அவருக்கு அடிக்கவே தொடங்கியிருந்தான். யாருடனும் அதிகமாக பழகியிராத அண்ணிக்கு கமலம் ஒருத்தியே சினேகிதியாக இருந்தாள். அவளை பின்னேரங்களில் பிள்ளைகளோடு அங்கே வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருப்பதைக் காணலாம். அப்படியிருக்கிற ஒருநாள் லதா கத்தியால் விரலைச் சீவிக் கொண்டாள். சதையில் ஆழமாக வெட்டு விழுந்திருந்தது. சிறிது தொங்கியது. அண்ணியோட கமலமே தொலைவிலிருந்து கொட்டக் காடு ஆஸ்பத்திரிக்கு …ஒடினாள். தொடர்ந்த நாட்களில் அண்ணனோடு அவளுக்குப் பிரச்சனை முற்றிவிட்டது.அதனால் அடி கூட வாங்கினாள். அயலவர்களுக்குத் தெரிந்த போதும் யாரும் தலையிட முடியவில்லை. கடைசியில் அம்மா அண்ணனைக் கூப்பிட்டுக் கண்டித்தாள்.

"பாவம் புள்ள, அவளுக்கு நாங்க தாண்டா துணையாயிருக்க வேணும் !"

அடுத்த இரு நாட்களுக்கு பிறகு பாபு நெருப்பிலே கை வைத்து விட்டான். அதுவும் பெரிதாக கொந்தளித்து அடங்கியது. உடன்பிறப்புகளின், புருசனின் புறக்கணிப்பால் அவர் வெகுவாகப் பாதிக்கப் பட்டார். மாரிகாலம் வேறு சூழலைச்சேறாக்கியது.

ஊர்மனையில் ஏற்பட்ட வெள்ளம் வாய்க்கால் வழிய ஒடி குளங்குட்டைகளை  எல்லாம் நிரம்பி வழியச் செய்தது. ஒரு மாலைப் பொழுதில் கமலத்தோடு கதைத்துக் கொண்டிருந்த அண்ணி“கொல்லைக்குப் போயிட்டு வரேண்டி பிள்ளைகளை  ஒருக்காய்ப் பார்த்துக்கொள்” என்று காய் வெட்டிக் கொண்டு பின்புறமாக கிழக்கு வயல் குளத்தை நாடிச் சென்று விட்டார். நீச்சல் தெரியாது என்ற துணிச்சல் அவர் நடையை வேகப்படுத்தி இருக்க வேண்டும். நீர் நிறைஞ்சு வழிஞ்சு பார்க்க‌ பயங்கரமாக இருந்தது. அக் குளத்தில் இறங்கினார்.

அவ்விடத்தாலே தற்செயலாக வந்த அன்டனின் அப்பா தத்தளித்துக்  கொண்டிருந்த அண்ணியைக் காப்பாற்றினார். கடவுள் மனித ரூபத்தில் வருகிறது என்பது உண் தான். பிறகே, அண்ணன் திருந்தினான். கெளரவத்தைக் கைவிட்டு அவளிட ஊர்ப் பக்கம் போய் ஆறுதலுக்கு யாரும் ஒருத்தராவது வந்து பார்க்கச் சொல்லி இரந்து கேட்டு விட்டு வந்தான்.

அப்பதான் முதல்  தடவையாக நம்ம திலகன் அங்கே வந்தான்.

அவன் வந்த போது கனகனுக்கு கூட வரவேற்பளிக்கிற மனநிலை இருக்கவில்லை. அங்கே நடந்த களேபரங்கள் அவன் மனதைப் பாதித்திருந்தன. சாதித் திமிரில் வந்தவயள், என்ற ஆவேசம் அவனுள்ளும் பற்றியிருந்தது. முன்னம் அம்மா மளிகைச் சாமான்களை அவன் மூலமாக அண்ணிக்கு அனுப்பும் போதெல்லாம் ‘அவர், திலகனை நினைத்து வாரப்பாடாக ஏதாவது சொல்வார்.“தம்பி, உன்னைப் பார்க்கையில் தம்பி ஞாபகம் வருகுதடா” என்பார். “உன்வயசு தான் அவனுக்கும் இருக்கும்” என்பார். “நான் உங்கண்ணாவோடு வரும்போது அவன் விபரம் தெரியாதவன்”கரைவார். இருந்த போதும், வெறுக்கவே செய்தான்.

அப்ப, திலகன் வந்ததால் அதிகம் மகிழ்ந்தவர் அவர் ஒருத்தர் தான். அவன் அங்கே ஒருநாள் பகற்பொழுது முழுவதும் இருந்து விட்டுப் போனான். அது அவருக்குப் பெரும் மன ஆறுதலை அளித்திருந்தது. அதற்குப் பிறகு அவனைப் பற்றி கதைப்பது இன்னமும் கூடி விட்டிருந்தது.

இப்ப, அவன் வந்திருக்கிற நிலை வேறு !

இயக்கத்திற்கு தன்னை அர்ப்பணித்தவனாக, இப்படி போனது எல்லாச் சாதியிலும் அதிகமானதாகவே இருந்தன. இளைஞர்கள் பழைய பிற்போக்குத் தனங்களை கட்டியழ விரும்பாமல் வீட்டை விட்டு , விட்டு, ஒடி, ஒடி ச் சேர்ந்தார்கள். அதனால் பொதுவாக எல்லாரும் அவர்களை மரியாதை உணர்வுடன் பார்த்தார்கள்.

இவன் எப்ப? எப்படி? போனான். நிச்சயம் அறிய வேண்டும்  என்று தீர்மானித்தான் தன்னை சிறிது அவனோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளவும் செய்தான். தனக்கு அரசியல் தெரியவில்லை என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும் அவனால் இயக்கத்திற்கு போய்ச் சேர முடியும் போலவும் படவில்லை.

வலையில் உள்ள பொத்தல்கள் எரிச்சலூட்டின‌,அலுப்பூட்டின. வேலையை அவனிடம் பொறிஞ்சு விட்டு செல்லன் ஊர்வம்புக்கு போய் விட்டிருந்தான். அனேகமாக வளவில் தனிமை அவனைச் சிந்திக்க வைக்கும்.போற வாற சமயங்களில் நண்பர்களில் யாராவது ஒருவன்.வலைக் குவியலில் கொஞ்ச நேரம் இருந்து கதைத்து விட்டுப் போவான். அவனுக்கு ஆறுதல் அளிக்கிற பொழுதுகள் அவையே.

இயக்கச்செய்திகள், நாட்டு நடப்புகள், ஆமியின் செல்லடிகள், அவர்கள் பேச்சில் இடம் பெறும். காம்ப்புக்கு வரும் துண்டுப் பிரசுரம் புத்தகங்கள் எல்லாம் அவனுக்கு முதலில் வந்து விடுகின்றன. "நீயும் வாசியன்" என திலகன் கொடுத்து விடுகிறான்.

செல்லன் வீட்டு விராந்தையில் ஒருபக்கம் வைத்திருக்கிற ஒரு காட்போட் பெட்டியில் அவை கணிசமாக சேர்ந்திருந்தன. அவனுக்கும் அந்த வீட்டுக்குமுள்ள பிணைப்பைப் பார்த்து விட்டு, அயலுக்குள்ள இருக்கிற பஞ்சன் அண்ணை முருகேசனோடு வீதியால் வருகிற போது வேலியால் எட்டி ப் பார்த்து "மாப்பிள்ளை எப்படி சுகம்'என்று கேட்கிறான்.

‘பாரன் !, செல்லன் தன்ரை மூத்தவளை இவனுக்கே கட்டிவிடப் போறான்’ என்று பகிடியாகச் சொல்லி விட்டுப் போகிறான்.

அவனுக்கு சிரிப்பு வருகிறது அவன் வேலையில் மூழ்கி விடுகிறான். அவன் மனநிலை,அன்டனுக்கும் நகுலனுக்கும் தான் தெரியும். அவர்களை இப்பவெல்லாம் போர்ட் ஒட்டமும் முரத்தில் மூழ்கி விட்டதால் காண்பது அரிதாக இருந்தன. பெரும்பாலும் காம்ப்பிலே தங்கி விடுகிறார்கள்.

அண்ணி அவனைக் காண்கிற போதெல்லாம் “தம்பியைக் கண்டனியா?” என்று விசாரிக்கிறார். அவனும் “கண்டால் சொல்கிறேன் அண்ணி” என ஆறுதலுக்குச் சொல்கிறான்.

அவனே அவர்களைத் தேடிக் கொண்டு தான் இருக்கிறான். வசந்திக்கு எழுதிய கடிதம் 'பொக்க'ட்டில் கனநாளாக உறங்கிக் கொண்டு கிடக்கிறது. அவளுடைய அண்ணன் ஊர்ச் சண்டியனாக வேறு இருந்ததால் யாருமே பகிரங்கமாக அவளை நெருங்க முடியாமல் இருந்தது. அன்டன் அவர்களுடைய உறவுக்காரன். அவள் வீட்டில் சகஜமாகப் பழகும் பேர்வழி அவர்களுக்கிடையில் தூது வேலை பார்ப்பவன்.

அராலிப் பள்ளிக்கூடத்துக்குப் போய் வந்த பழைய நாட்களிலே அவனுக்கு அவள் மேல் கண் விழுந்து விட்டது. அவள் அடுத்த வகுப்பில் படித்தவள். ஒரு துடிப்பான அழகு அவளிடம் எப்பவும் குடி கொண்டிருந்தது. வயல் வரம்பிலே அவளின் 'செட்' முதலில் போக. அவனின் 'செட்' பின் தொடரும்.

அவளைக் குறித்து பகிடி பண்ணுவான். பிறகு “டேய் உன்ரை மச்சியைச் சொல்லலையடா’ என்று அண்டனுக்கு சமாதானம் வேறு சொல்லி ஏமாற்றுவான். இப்படியே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெட்டையைப் பற்றி அளந்து கொண்டு வருவார்கள். அன்டனும் தன் பங்குக்கு ‘சிவப்பி எப்படியடா’ என்று கேட்பான். குறைந்த பட்சம் அந்தப் பெட்டைகளுக்குக் கூடத் தெரியப் படுத்தாமலே பள்ளி வாழ்க்கை முடிந்தது.

பிறகு, அன்டன் இயக்கத்திற்கு வேலை செய்யத் தொடங்கி விட்டான். நகுலனோடு அவனும் 'ரெயினிங்' எனப் போய் வந்த போது கோயிலடியில் சபா வைக்கிறது மட்டும் மிஞ்சியிருந்தது. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் கனகன் வசந்தி மேலுள்ள தன் ஒரு தலைக் காதலை வெளிப்படுத்தினான்.

அந்த வருட ஐயனார் திருவிழாவின்போது கோயிலில் சனம் குவிந்திருந்தது. பிரதான கோவில் வீதி ஒரமெல்லாம் கடை கண்ணிகள் முளைத்து கலகலப்பை மூட்டின. "உன்னை அம்மா கூப்பிடுறா" என சினேகிதி செட்டோடு வந்த வசந்தி அன்டனைக் கண்டு விட்டுக் கூப்பிட, நண்பர்கள் அவளை வளைத்துக் கொண்டார்கள்.

“கனகு சொல்லன்ரா” எனப் பேசி அவனை பேச வைத்து விட்டார்கள். அவன் ‘விரும்புவதை திக்குத் திணறிச் சொன்னான்.

அவளுக்கு அன்டனின் கூட்டாளி என்தால் நல்ல அபிப்பிராயம் இருந்தது. ஒரளவு பழகிய முகம். அவள் விரும்புவதற்கு தடையிருக்கவில்லை. "இரண்டு பேரும் கதையுங்கோ. நாங்க போயிட்டு வாறோம்" என அன்டன் கிளம்பி நண்பர்களைப் போங்கடா என்று துரத்தினான். பிறகு தான் இருவருக்குமிடையில் தபால்காரனாக இருக்கிறான்.

‘எழுத்தில் தான் என்னமா எழுதுகிறாள். ஒவ்வொரு தடவையும் அவள் கடிதத்தை பெறும்போது கனகனின் மனம் சிட்டுக் குருவியாய் பறக்கிறது. இவன் எங்கே போய் தொலைந்தான்? இப்ப எல்லாம் இவயளைப் பிடிக்கேலாது. அவளிடம் கடிதம் கொடுத்து வாங்கவில்லை என்பதே அவனுக்குப் பெரிய கவலையாக இருந்தது.

அவர்களில் திலகனே முதலில் களைத்து விழுந்து வந்தான். வலைக் குவியலில் அலுப்புடன் அமர்ந்து கதை அளந்தான். “ஒட்டத்தை மறுகரைக்கு கொடுத்துவிட முடிவாகிவிட்டது” என்றான். “என்ன விசயம்” என அவன் விளக்கம் கேட்டான்.

“பண விரையம் தான்” என்றவன் “எங்கட ஒட்டம் வாய்க்கலை” என பகிடியாக வருத்தத்துடன் சொல்லித் தொடர்ந்தான். “சேருகிற காசு எங்களிட காம்ப் செலவுக்கும் ஒட்டிகளின் சம்பளத்திற்கும் தான் மற்ற இயக்க போட்டியாலை அதிகமாக அலைய வேண்டியிருக்கிறது. அலைச்சல் அதிகம். - ஒரே கரையாகச் செயல்பட்டால் ஒரளவு செலவைக் கட்டுப்படுத்தலாம் என்று ஜி. எ. , இன் பழைய முடிவை அமுல் படுத்துகிறது.”

தீவுப்பகுதி எ.ஜி. எ. அமைப்பு புத்திசாலித்தனமாக இன்னொரு ஏற்பாடும் செய்திருக்கிறார்களடா. வெல்டிங் பெடியன், தோழனும் கூட‌… சுந்தரத்தின் ஐடியா வை அந்த எ.ஜி. எ.அமைப்பு ஒத்துழைப்புக் கொடுத்து செயற்படுத்தியது. அவனோடு சேர்ந்து செயல்பட ஏழெட்டுப் பேரை சர்வேசன் நியமித்தான். காம்பிற்கு பின்னாலுள்ள பெரிய‌ வளவில் புதிய வெற்று டீசல் ட்ரம்கள் குவிக்கப்பட்டன. சுந்தரம் குழு சுறுசுறுப்பாக இயங்கியது. அவற்றின் வாய்ப் பகுதி களை மூடி வெல்ட் பண்ணினார்கள். காற்று அடைக்கப்பட்ட ட்ரம்களை அருகருகாக அடுக்கி , அதன் மேல் கம்பிச்சட்டம் வைத்து இணைத்து ஒட்டினார்கள். அப்படியே ஒரு மேடை போல் அமைத்தார்கள்.மூன்று நான்கு நாட்களாக முழு மூச்சாக செயல் பட்ட அவர்கள் கடைசியில் வெற்றியடைந்திருந்தனர்.

அது முதல் தரமான மிதவையாக காரைநகர் கடற்பகுதியிலுள்ள 'பெரி'க்கு இணையாக செயற்படுமென்ற நம்பிக்கை அவர்களுக்கு எல்லாம் இருந்தது.

'ட்ராக்ட'ரில் ஏற்றப்பட்டு புழுதியைக் கிளப்பிக் கொண்டு போய் கடலில் இறக்கப்பட்ட போது பெடியள்கள் கரகோசம் செய்தார்கள்.தச்சுவேலை தெரிந்த ஒரு பெடியன் ஒருவன், இவனும் தோழன் தான்… கம்பிச் சட்டத்தின் மேல் கையோடு கொண்டு வந்த பலகைகளை வைத்து கச்சிதமாகப் பொருத்தி விட்டான். அவன் சொல்லிக் கொடுத்தபடி மற்ற‌ பெடியளும் உதவியாக இருந்ததால் வேலை இரண்டு மணித்தியாலத்திலேயே முடிந்தது.

ஆழமற்ற கடலாகையால் மிதவை பாரம் ஏற்ற கணிசமான அளவு தாழும். பாதை கண்டு இதை ஒட்ட முடியாது. அவுட்போட் மோட்டார் பூட்டுறது வேறு கஷ்டம், வலிக்கிறது தான் ஒரே வழி”என்று ஒட்டிமார் அபிப்பிராயம் தெரிவித்தார்கள்.

ஒரிரண்டு பிரச்சனைகள் இருந்த போதும் தீவுப் பெடியளுக்கு சந்தோசமாகவே இருந்தது.  'எங்கட பெடியள் கை வண்ணம்' என திலகனுக்கு கூட சந்தோசம் பற்றியிருந்தது.அதை அக்கரைக்கும் இக்கரைக்கும் கொண்டு போக ஏழெட்டுப் பெடியள்கள் தேவைப் பட்டார்கள். பெரும்பாலும் மார்பளவுத் தண்ணிர் இருந்ததால் அவர்கள் தண்ணில் இறங்கி நனைவது பற்றி அக்கறைப் படவில்லை.

அந்த மிதவை படைத்த சரித்திரம் பெரியது. “சுய மூளையைப் பாவித்து தயாரிக்கப்பட்ட ஆமட் கார், ஹெலிகாப்டர், கிரனேட், மோட்டார்கள், ஷெல்கள் இந்த வரிசையில் இதுவும் ஒன்று. தமிழ் மக்கள் பெருமைப்படக்கூடிய விடயம் தான். றால் வளர்ப்பு, காளான் வளர்ப்பு, இயற்கை வாயு உற்பத்தி இவற்றோடு கூட எண்ணப் படக்கூடியவையே.

அதிலே, பெரிய மினிபஸ், கார், ட்ராக்டர் போன்ற வாகனங்கள் எல்லாம் இலகுவாக ஏற்றப்பட்டு இடம் மாற்றப்பட்டன. கருவாட்டுச் சிப்பங்கள் வர்த்தக நோக்கில் தீவுப்பக்கமிருந்து கொண்டு வரப்பட்டன.

அவர்களுக்கு வேண்டிய சகல உணவு வகைகளும் நீரில் சிறிதும் நனையாமல் பத்திரமாகக்கொண்டு செல்ல உதவியது.சாமான் செட்டுக்கள் கொண்டு செல்வதற்குரிய ஒரே மிதவையாக அது இருந்ததால், ஒரே நேரத்தில் எத்தனையோ தொன்களை கொண்டு சென்றதால் மக்கள் பெடியள் பரவாயில்லை என தட்டிக் கொடுத்தார்கள். தம்பிமார் திலகங்கள் தாம்’ என்று சிலர் சிலாகித்தனர். தீவு அமைப்பு இதன்மூலம் கணிசமாக உழைத்தது.

[தொடரும்]

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 09 December 2018 07:19