தொடர்நாவல்: புதிய பாதை ('அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்' ) (4-6) - வ.ந.கிரிதரன் -

••Saturday•, 19 •August• 2017 13:50• ??- வ.ந.கிரிதரன் -?? நாவல்
•Print•

[இந்நாவல் கனடாவிலிருந்து வெளிவந்த 'தாயகம்' பத்திரிகையில் தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் 'அருச்சுனனின் தேடலும் அகலிகையின் காதலும்'  என்னும் பெயரில் தொடராக வெளிவந்த நாவல். பின்னர் குமரன் பப்ளிஷர்ஸ் வெளியீடாக வந்த 'மண்ணின் குரல்' தொகுப்பிலும் வெளிவந்திருந்தது. இப்பொழுது ஒரு பதிவுக்காக, ஒரு சில திருத்தங்களுடன் 'பதிவுகள்' இணைய இதழில் வெளியாகின்றது.  மேலும் இந்நாவலுக்குத் தற்போதுள்ள பெயரிலும் பார்க்க 'புதிய பாதை' என்னும் தலைப்பு இருப்பதே நன்றாக எனக்குத் தோன்றுகின்றது. அதன் விளைவாக இதன் பெயர் 'புதிய பாதை' என்று மாற்றப்படுகின்றது. இந்நாவல் அப்போதிருந்த அரசியற் சூழலில் புதிய பாதையை வற்புறுத்துகின்றது. நாவலின் பிரதான பெண் பாத்திரமான 'டீச்சர்' பாத்திரத்தினூடு சமூகத்தில் நிலவி வந்த ஓரபட்சமான நம்பிக்கைகளுக்கு எதிராகவும் குரல் கொடுப்பதோடு  புதிய பாதையை நாடி நிற்கிறது. எனவேதான் 'புதிய பாதை' என்னும் பெயருடன் நாவல் இனி அழைக்கப்படும். எதிர்காலத்தில் மீண்டும் நூலாக வெளிவருவதாகவிருந்தால் 'புதிய பாதை' என்னும் பெயரிலேயே வெளிவரும்.-பதிவுகள்]


அத்தியாயம் நான்கு: டீச்சரும், சிறுவனும்!

அன்று அவனைச் சந்திப்பதற்காக வரும்போது அவள் ஒரு முடிவுடன் வந்திருந்தாள். அவனுடன் பழகத் தொடங்கியதிலிருந்து அன்று வரையிலான தொடர்பிலிருந்து அவள் ஒன்றைமட்டும் நன்குணர்ந்திருந்தாள்.  அவன் வாழ்வில் துயரகரமான அல்லது ஏமாற்றகரமான சூழல் ஒன்றை அவன் சந்திருக்க வேண்டும். அளவு கடந்த பாசம் வைத்திருந்த அவன் தாயாரைப் பறிகொடுத்திருக்கலாம். அவன் மனைவியை அல்லது காதலியை இழந்திருக்கலாம். அல்லது இராணுவத்தின் குண்டுவீச்சுக்கு அவனது குடும்பம் பலியாகியிருக்கலாம். சமூக விரோதியென்று  மின் கம்பத்திற்கு அவனது தம்பியை அல்லது தந்தையை அல்லது தாயைப் பறிகொடுத்திருக்கலாம். அல்லது படையினரின் பாலியல் வன்முறையிலான வெறியாட்டத்தில் அவன் மனைவி அல்லது காதலி சீரழிந்திருக்கலாம்.  அல்லது அவன் படையினரால் மிகுந்த சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டிருக்கலாம். அல்லது வேறு ஏதாவது காரணமாயிருக்கலாம். ஆனால் எது எப்படியோ அவன் பாதிக்கப்பட்டிருக்கிறான்.  அந்தப் பாதிப்பின் தன்மை மிக மிக ஆழமானதாக இருக்க வேண்டும். அதுதான் அவனைச் சிலையாக உறைய வைத்திருக்கிறது. சாதாரண ஒரு மனிதரிற்கு  இருக்கவேண்டிய உணர்வுகள், செயற்பாடுகள் குன்றி ஒரு விதமான கனவுலகில் , மனவுலகில் அவன் சஞ்சரிப்பதற்குக் காரணமாக அந்தப் பாதிப்புத்தானிருக்க வேண்டும். இதனால் அவள் ஒரு முடிவுக்கு வந்திருந்தாள். அவனை அவள் மாற்றப் போகின்றாள். அந்த உறைதலை அவள் உருக்கப் போகின்றாள். அந்த மெளனத்தைக் கலைய வைக்கப் போகின்றாள். அவனையும் பேச வைக்கப் போகின்றாள். கலகலப்பானவனாக, துடிதுடிப்பு மிக்கவனாக ,  அவனை உருமாற்றிடப் போகின்றாள். இதற்கு ஒரு வழி .... அவனைச் சீண்டி விளையாடிடப் போகின்றாள். வாழ்க்கையின் நிலையாமையை உணர்த்தி, உருகுவதிலுள்ள அர்த்தமற்ற தன்மையை அவனுக்கு போதிக்கப் போகின்றாள். இவ்விதமானதொரு முடிவுடன்தான் அவள் அன்று வந்திருந்தாள்.

'ஹாய்...' என்று அவனை அழைத்த விதத்தில் அவளது எண்ணத்தின் தீர்க்கம் மறைந்திருந்தது. பரிசோதனை செய்யப்போகும் ஒரு விஞ்ஞானியின் ஆவல் அதில் ஒளிந்திருந்தது.

'வட் அ பியூட்டிபுஃல் டே' என்றாள். அவனருகில் மிக நெருக்கமாக அமர்ந்தாள்.  அவர்களது இதுவரை காலமான நட்பின் விளைவாக இருவருமே ஒருவருடன் ஒருவர் நீ, நான் என்று ஒருமையில் கதைக்குமளவுக்கு நெருங்கியிருந்தார்கள்.

அவனது கண்களையே சிறிது நேரம் உற்று நோக்கினாள்.

சக்தி வாய்ந்த கண்கள்.

வலிமை மிக்க கூரிய கண்கள்.

கனவு மிதக்கும் கண்கள்.

அவனது வாழ்க்கையை மாற்றுவதற்கு அவள் முடிவு செய்திருந்தாள்.  ஆனால் என்னவென்ன வழிகளில் அவற்றை நடைமுறைப்படுத்த முடியும்?

அவனை 'அவுட்டிங்'க்குக்குக் கூட்டிப் போகலாம். 'நயாகரா போஃல்ஸி'ற்குப் போகலாம். 'ஹமில்டன் ஆஃபிரிக்கன் சபாரி' , 'வொண்டர் லாண்'டிற்கு ... இப்படி ஏதாவது ஒன்றில் பொழுதைக் கழிக்கலாம்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாகச் செய்ய வேண்டிய முக்கியமான வேலை. அவனைப் பேச வைப்பது. கலகலக்க வைப்பது. சிரிக்கச் செய்வது.

அவனை மீண்டும் நெருக்கமாக நோக்கினாள். அவர்களைச் சுற்றி உலகம் கலகலப்பாக இயங்கிக் கொண்டிருந்தது.

'நீ ஏன் எந்த நேரமும் உம்மென்று மூஞ்சியை வைத்திருக்கிறாய்... ஸ்மைல் ... நீ சிரிக்கேக்கை எவ்வளவு வடிவாய் இருக்கிறாய் தெரியுமா?'

அவன் அவள் சொல்வதைக் கேட்டபடியிருந்தான். பதிலுக்கு ஏதாவது கூற விரும்பினான். பதிலாக இலேசான சிரிப்பு, புன்னகை கோடு கிழித்தது.

'அப்படித்தான் ஆ ... அப்படித்தான்.. இப்படித்தான் நீ எப்பவும் .. சிரித்தபடி இருக்க வேண்டும். ஓகே...'

குழந்தைக்கு டீச்சர் கூறுவதுபோல் கையைக் காட்டி, கண்களை உருட்டி, அவள் கூறிய விதம்... உண்மையிலேயே அவனுக்கு சிரிப்பு வந்தது. சிரித்தான்.

'ஓகே டீச்சர்'

'என்ன .. யார் சொன்னது நான் டீச்சரென்று'  பொய்க்கோபம் அவள் முகத்தில் குமிழியிட்டது.

'நீ டீச்சரேதான் ... உன்னைப் பார்க்கேக்கை டீச்சரைப் போலவே இருக்கிறாய். ... உன்னை இனி டீச்சரென்று கூப்பிடப் போகின்றேன்.'

உறைதலிலிருந்து மெல்ல மெல்ல உருகிக் கொண்டிருந்தான். உவகையில் அவள் நிரம்பினாள்.

'நான் டீச்சரென்றால்... நீ... ஓகே.. சிறுவா... நான் டீச்சரென்றால் நீ எனக்குச் சிறுவன்தான்... என்ன சிறுவா'

முதன் முறையாக அவன் நெஞ்சில் இலேசான உணர்வுகள்... ஆனந்தமாக மனம் விட்டுச் சிரித்தான்.

'சிறுவா... இன்று கொஞ்சம் நேரத்தோட போகோணும்... 'மிராக'லிலை 'குரோசரி ஷொப்பிங்' செய்யணும்... கூடத் துணைக்கு வாறியாம்' என்றதும் தலையாட்டினான். பழையபடி உறைநிலைக்குத் திரும்பிவிட்டானா? கனவுலகில் புகுந்து விட்டானா?

'என்ன... ம் ... பதிலைக் காணவில்லையே... வாயிலென்ன கொழுக்கட்டையா'

அவள் கொழுக்கட்டை என்று கூறவும் குபீரெனப் பீறிட்டுக்கொண்டு சிரிப்பு வந்தது. சிரித்தான். காலையில் மாமா மகனுடன் நடந்த மோதல் நினைவுக்கு வந்தது. மாமா மகன் கொழுக்கட்டை என்று கூறியது நினைவுக்கு வந்தது. சோமசுந்தரப் புலவர் ஞாபகத்தில் வந்தார்.

'என்ன சிரிப்பு... சிறுவா'

'மச்சானுடன் ஒரு சண்டை ... ஞாபகம் வந்தது..'

'அதுக்கென சிரிப்பு'

'டீச்சர். அவனும் கொழுக்கட்டையைப் பற்றிச் சொன்னான். நீயும் சொன்னாய். கொழுக்கட்டை சோமசுந்தரப் புலவரின் 'ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை' பாடலை ஞாபகத்துக்குக் கொண்டு வந்துவிட்டது.  அதுதான்'

எத்தனையோ வருடங்களுக்கு முன்னால், குழந்தைகளாகயிருந்தபோது கேட்ட பாடல் வரிகள் மூளையின் ஆழத்தே பதிந்து விடுகின்றன. மீண்டும் ஏதாவது ஒரு சொல் அல்லது காட்சி அவற்றைப் புதைக்குழிகளுக்குள் இருந்து மீட்டு வந்து இன்பத்தைத் தந்து விடுகின்றன'

இவ்விதம் அவன் நெஞ்சில் எண்ணமொன்று ஓடியது.

'விந்தையான உலகம். அதிசயமான உலகம்'

'ஏன் டீச்சர்?'

'பார்த்தாயா , எப்பவோ ஒரு காலத்திலை உன் காதுகளுக்குள் புகுந்த பாடலின் நினைவுகள் எத்தனையெத்தனையோ வருடங்களின் பிறகு இன்றைக்கு உன் மூளையின் ஆழத்துக்குள்ளிருந்து வெளிவரும் அதிசயத்தை.... இப்படித்தான் ஒவ்வொரு செக்கனும் எங்கட வாழ்க்கையில் நடக்கிற ஒவ்வொரு செயலும், காட்சியும் மூளைக்குள் பதிந்து கிடக்கின்றது.

அவளது சொற்கள் அவனைப் பழையபடி  பழைய நிலைக்கே திருப்பிவிட்டது. உறைநிலைக்குத்  திரும்பி விட்டான். அவனுக்கேயுரிய தனியுலகத்திற்குத் திரும்பி விட்டான்.

'என்ன ' அவள் அவன் தோள்களைப் பற்றி அசைத்தாள். அவன் அசைவதாகக் காணோம். 'இவனை மாற்றுவதென்பது இலேசான காரியமல்ல'. இவ்விதம் எண்ணினாள். 'நிறைய பொறுமை, அவகாசம் வேண்டும். அடிக்க அடிக்கத்தானே அம்மியும் நகர்கிறது. தளராமல், சோர்ந்துபோய் விடாமல், விடாமுயற்சியுடன் முயல வேண்டும்.  முயல முயலத்தான் எல்லாமே கை கூடுகின்றது.

அவள் என்றைக்குமே தோல்விகளைக் கண்டு தளர்ந்து விடுபவளல்லள்.  சவால்களுக்கு எதிராக, ஏமாற்றங்களுக்கு எதிராக எதிர்நீச்சல் போட்டுப் போட்டே பழகும் பிரிவினைச் சேர்ந்தவள்.  இவனது விசயத்தையும் ஒரு சவாலாகவே ஏற்றுக்கொண்டுள்ளாள்.

மெல்ல மெல்ல இருள் கவியத்தொடங்கி விட்டிருந்தது. வேலை முடிந்து செல்லும் பிரயாணிகளுடன் அடிக்கடி 'கோ ட்ரெயின்கள்' விரைந்து சென்றன.  வழக்கம்போல் 'டொன் வலிப் பார்க்வே'(don valley parkway) இறுகிக் கிடந்தது. 'சவுத் பவுண்ட்' (south bound) மட்டும் அசைந்தபடி இருந்தது. வழக்கம்போல் கதிரவணைத்தன் அரவணைப்பிற்குள் முழுமையாக அடக்கி விட்ட இன்பத்தில் அடிவானப் பெண் நாணிச் சிவந்து கிடந்தாள்.  நேரத்துடனேயே சந்திரன் தன் பயணத்தைத் தொடங்கி விட்டிருந்தான்.  அவனுக்குத் துணையாக மேலுமிருவர் வெள்ளியும் வியாழனுமாயிருக்க வேண்டும்.

மெல்ல மெல்ல 'பார்க்'கில் சனநாட்டம் குறையத் தொடங்கியிருந்தது. 'பார்க்கிங் லொட்'டின் மூலைகளில் தூங்கிக் கிடந்த கார்களினுள் தழுவிக் கிடந்த சோடிகளைத் தவிர ஏனையவர்கள் திரும்பிக்கொண்டிருந்தார்கள்.

இருள் நன்கு மூடி விட்ட பொழுது. 'பார்க்' தனிமையில் மூழ்கி விட்டது. அந்தத் தனிமை படர்ந்த சூழலை நாடி காதலர்கள், போதை மருந்து வாசிகள், தனிமையைப் பயன்படுத்திக் கார் பழக வருபவர்கள், நடு இராத்திரிகளில் டொராண்டோவின் இரவு ராணிகளுடன் வரும் இளவல்கள், ... இவ்விதம் இரவினிலும் அந்தப் 'பார்க்'கை நாடி மனிதர்கள் வரத்தான் செய்தார்கள். ஆனால் இவர்கள் எல்லோரும் ஒரே சமயத்தில் வருவதில்லை.  அப்படி வருபவர்கள் 'ஓவர்லி புளவாட்'டை நோக்கிய 'பார்க்'கின் ஏனைய பகுதிகளுக்குச் சென்று விடுவார்கள். இதனால் பொதுவில் பார்வைக்கு அந்தப் 'பார்க்' இரவுகளில் தனிமையில் மூழ்கியிருப்பதுபோல் தோன்றும்.

அவர்களிருந்த பகுதியில் அச்சமயம் அவர்களிருவருமே தனித்து விடப்பட்டிருந்தார்கள். காரொன்று அவர்களிருந்த பகுதியை நோக்கி வந்தது. அண்மையில் வந்ததும்தான் அவள் கவனித்தாள். ... பொலிஸ் கார்... வழக்கமான ஓபிஸர்கள்.. இவர்களைப் பார்த்துக் கையசைத்துவிட்டுச் சென்றார்கள்.

சற்றுத் தொலைவில் காரொன்று வட்டமடித்துக் கொண்டிருந்தது. இருவரும் ஒருவித அமைதியுடன் அதனையே நோக்கியபடியிருந்தார்கள். 'பார்க்கிங் லொட்'டில் பார்க் பண்ணுவதும், 'ரிவேஸ்' பண்ணுவதும், 'திரி பாயின்ற் டேர்ன்' அடிப்பதும் அடிக்கடி சிக்னல் போடுவதுமாக யாரோ கார் பழகிக் கொண்டிருக்கிறார்கள்.  அருகில் டொன்வலிப் பார்க் வேயில் ஒழுங்கு திரும்பியிருந்தது.  ஒளிப் பொட்டுக்கள் மின்னி  அசைந்தன்.

'சிறுவா ஷொப்பிங் செய்ய வேணும்... வெளிக்கிடுவமா?'

' ஓம் டீச்சர்..' மீண்டும் அவன் உருகிய நிலையில்... தொலைவில் வட்டமடித்துக் கொண்டிருந்த  கார் இவர்களை நோக்கி வந்தது.  எதிர்பாராத விதமாக 'ஹெட் லைட்' ஒளி இவர்கள்மேல் பாய .. கண்கள் கூச...  கைகளால் மறைத்தபடி இருவரும் அதனையே நோக்கினார்கள். இவர்களைத்  தாண்டிய கார் சிறுது நேரம் நின்றது. பின் பறந்தது. இவனால் உணர முடிந்தது. அந்தக் கார் மாமா மகனின் கார். மாமா மகன்தான் யாருக்கோ கார் பழக்கியிருக்க வேண்டும்.

'என்ன சிறுவா? உனக்கு அவனைத் தெரியுமா' என்றாள் டீச்சர்.

'ஓம் டீச்சர். ஹீ இஸ் மை கசின்' என்றான் சிறுவன்.

'எனக்கும் அவனைத் தெரியும்' என்றாள் டீச்சர்.

"எப்படி டீச்சர்?'

'பிறகு சொல்லுறன். இப்ப ஷொப்பிங்குக்கு நேரமாச்சுது. வெளிக்கிடுவமா'

'ஓகே டீச்சர்' என்றான். இருவரும் புறப்பட்டார்கள்.

 


அத்தியாயம் ஐந்து: ரொறன்ரோவின் காதல் இளவரசர் வருகிறார். பராக்...பராக்.

"மிராகல் சுப்பர்மார்க்கட்டில் சனம் அவ்வளவாக இல்லை. 'தள்ளுவண்டிலொன்றை தள்ளியபடி அவளைப் பின் தொடர்ந்தான். இங்கே சாமான்கள் அவ்வளவு சீப்பில்லை. 'நோ பிரில்ஸிலை சேல் போட்டிருக்கிறான்கள். ஆனால் கிட்டடியில அவங்கட ஸ்டோர்ஸ் ஒன்றுமில்லை."நொப் ஹல்ஸிலை" சரியான 'சீப்'பென்று சொல்றது தான். அவ்வளவு பெரிய 'சீப்'பில்லை. கோழி இறைச்சி மட்டும் விலை பரவாயில்லை. மற்றும்படி இங்கை எல்லாமே சுத்துமாத்துத் தான்."
இது பற்றியெல்லாம் அவன் நினைத்துப் பார்ப்பதே கிடையாது. தேவைக்கு வந்து விலை எதுவானாலும் வாங்கும் குணவகையைச் சேர்ந்தவன் அவன். எதிரில் சல்வார் ஹமீசுடன், பஞ்சாப்காரியொருத்தி தள்ளுவண்டியில் குழந்தைகளையும், 'குரோசரி வகைகளையும் ஒன்றாக வைத்துத் தள்ளிக் கொண்டு சென்றாள். அவளது அழகான கூந்தல் மட்டும் முழங்கால்கள் வரை நீண்டிருந்தது.

‘என்ன சிறுவா. என்ன யோசனை' இவன் நினைவிற்கு வந்தான்.

'ஒன்றுமில்லை டீச்சர். இப்படியெல்லாம் பார்த்து நான் வாங்கிறதேயில்லை’

'ஓ மை கோட்"

‘என்ன டீச்சர். என்ன?

"இங்கை பார். முட்டையும், பாலும் சேலிலை" போட்டிருக்கிறான்கள். ’லார்ஜ் முட்டை நைன்டிநைன் சென்ஸ்' ரெண்டு லீற்றர் பால் டூ நைன்டி நைன். வட் எ சேர்ப்பிரைஸ்"

அவள் குழந்தையைப் போல் குதூகலிப்பதைப் பார்க்கையில் இவனிற்கும் ஒரு வித களிப்பு பரவியது.

'சிறுவா"

"என்ன டீச்சர்"

"இன்றைக்கு உனக்கு டின்னர் என்ரை இடத்தில் தான் தோசை சுடப் போறன். ஊரிலை அம்மா செய்யிறதைப் போல் ட்ரை பண்ணப் போறன். இங்கிலிஸ் மூவி ஒன்றுமிருக்கு. டொக்டர் சிவாகோ பார்த்தனியா"

எத்தனையோ வருடங்களிற்கு முன்னால், யாழ்ப்பான நூலகத்தில் "போரி பஸ்டர்நாக்கின் டொக்டர் சிவாகோ தமிழ் மொழிபெயர்ப்பு படித்தது நினைவில் வந்தது.

"கதை படித்திருக்கின்றன். மூவி பார்க்கேலை டீச்சர்"

'அப்ப உனக்கு இந்த மூவியை நல்லாப் பிடிக்கும் விளங்குவதும் கஷ்டமாக இராது"

மீண்டும் ஒரு கணம் யாழ்ப்பாண நூலகத்தை எண்ணினான். அவனது இளமைப் பருவத்தின் முக்கியதொரு நண்பனாக விளங்கியநூலகம். நூலகம் செல்வது ஒரு முக்கிய நிகழ்வாக, அவன் வாழ்வின் பிரதானமானதொரு அங்கமாக இருந்தது.
நூல்கள் படிப்பது. "ரெவரன்ஸ்" பகுதியில் படிப்பது. சஞ்சிகைகள் படிப்பது. முனியப்பர் கோயில், முற்றவெளி, சுப்பிரமணியம் பார்க், பண்ணைக் கடற்கரையொன்று அலைந்து திரிவது. டச்சுக் கோட்டையின் அகழிச் சுவரொன்றின் மேலிருந்து படம் எடுத்தது. நூலகத்திற்கு நேர்ந்த கதியின் ஞாபகமும் எழுந்தது. இப்பொழுது கூட ஒரு முறை உடம்பு சிலிர்த்தது. அதை எரிக்க எப்படித் தான் மனசு வந்திருக்க முடியும். பாதிரியார் ஒருவர் கூட அதிர்ச்சி தாங்காமல் இறந்ததும். ஒரு மாசமாக பித்துப் பிடித்தவன் போல் திரிந்ததும். யாழ்ப்பாண நூலகம் மீண்டும் அவனது நண்பனின் நினைவைக் கொண்டு வந்து நிறுத்தி விட்டது. அவனுடன் தான் இவன் அடிக்கடி நூலகம் செல்வான். மீண்டும் மீண்டும் நினைவுகள் அவனைச் சுற்றித்தான் வட்டமிடுகின்றன. எவ்விதம் நிகழ்வுகள் சில எதிர்பாராமல் சம்பவித்து விடுகின்றன. அத்தகைய நிகழ்வுகளின் முன்னால் சூழல்கள் எவ்விதம் ஒருவனை இயக்கமற்றவனாக்கிக் கட்டிப் போட்டு விடுகின்றது. ஷொப்பிங் முடிந்து அவளது அப்பார்ட்மெண்டை அடைந்த போது மணி ஒன்பதரையாகி விட்டிருந்தது. அவளிற்கோ அன்று வெள்ளிக்கிழமை. அடுத்த நாள் காலையில் எழும்ப வேண்டுமென்ற கவலையில்லை. வீட்டிலிருந்து கடிதங்கள் சில வந்திருந்தன. "குரோசரி பைகளை அப்படியே சோபாவில் போட்டுவிட்டு ஒடிச் சென்று இன்னுமொரு சோபாவில் சாய்ந்தபடி கடிதங்களைப் பிரிக்கத் தொடங்கினாள். இவன் 'பிரிட்ஜிற்குள் அடுக்க வேண்டியதை அடுக்கிவிட்டு மீண்டும் "லிவிங் ரூமிற்கு வந்தான். இன்னமும் அவள் கடிதங்களிலேயே மூழ்கிக் கிடந்தாள். அவளைத் தொந்தரவு செய்ய விரும்பாமல் இவன் பல்கனியிற்கு வந்தான். எதிரில் தெரிந்த காட்சிகளில் மனமொன்றினான். ஒரு மூலையில் கிடந்த பெட்டிகளில் வாசம் செய்து கொண்டிருந்த புறாக்கள் சில மனித நடமாட்டத்தை உணர்ந்ததற்கறிகுறியாக அசைந்து தமதிருப்பினை வெளிக்காட்டி விட்டு மீண்டும் தூங்கிப் போயின. வெளியில் இருள் பரவிக் கிடந்தது. தெருவிளக்குகள் தூங்கி வழிந்தன. வாகனங்கள் சில வளைவான வீதியில் வழுக்கிச் சென்றன.

அமைதியான, பழைய காலத்து, ஒலியற்ற பேச்சற்ற திரைப்படமொன்றைப் பார்ப்பது போல் உணர்ந்தான். இரவுக்குரிய ஒலிகளற்று நேரம் விரைந்து கொண்டிருந்தது. அறைச்சுவர்களில் பல்லிகளைக் காணவில்லை. வெளியில் தெருவிளக்குகளிற்கு அடியில் நோட்டமிட்டுச் செல்லும் சொறிநாய்களைக் காணவில்லை. தொலைவிலிருந்து கத்தும் நத்துக்களின் குரல்களைக் கேட்கவில்லை. தெருக்களில் அசை போடும் கட்டாக்காலி மாடுகளின் முனங்கல்களில்லை. விண்ணில்கூட நட்சத்திரங்கள் நகரத்தின் செயற்கை விளக்கொளிகளினால் மறைந்து குறைவாகவே சிரித்தன. எந்நேரமும் உயிர்த்துடிப்பில் இருக்கும் ஊரின் இரவுக் காலங்களின் இனிமையில் மனது மெய்மறந்தது. அங்கில்லாத வசதிகள் இங்கிருந்தன. இங்கில்லாத இனிமை அங்கிருந்தது. வாழ மட்டும் அங்கிருப்பவர்களுக்குத் தெரியவில்லை அது மட்டும் தெரிந்திருந்தால். கண்ணாடியினுாடு உள்ளே நோக்கினான். அவள் கடிதங்களை வாசித்து முடித்திருந்தாள். ஏதோ சிந்தனையில் மூழ்கிப் போனவளாக அப்படியே சோபாவிலிருந்தாள். அவள் அப்படியிருப்பது அவளது குணவியல்புகளிற்கு ஒவ்வாதவொன்றாக இவனிற்குப்பட்டது.

உள்ளே நுழைந்தான்

"என்ன டீச்சர். ஒரே யோசனை’

இந்தா லெட்டரை நீயே படி

"சீச்சீ. வேற ஆக்களின்ரை லெட்டரை நான் படிக்க விரும்பேலை"

‘என்னையென்ன வேற ஆளெண்டா இன்னமும் நினைக்கிறே. இட்ஸ். ஓ.கே. நீ படிக்கலாம்"

கடிதங்களை நீட்டினாள்.

ஆனால் இவன் மறுத்தான்.

'நான் அப்படி நினைக்கேலை. ஆனால் இன்னொருத்தரின்ரை லெட்டரைப் படிக்க எனக்கு விருப்பமில்லை. விருப்பமென்றால் ‘விசயத்தை சொல்லு டீச்சர்"

'இப்படி ஆறுதலாய் வந்திரு’ அவன் அவளருகில் வந்தமர்ந்தான்.

'சிறுவா" இதற்கிடையில் சிறுவா, டீச்சர் என்று ஒருவரையொருவர் அழைப்பது அவர்களிற்கு இலகுவானதாக இயல்பானதாக ஆகி விட்டிருந்தது.

'சிறுவா"

‘என்ன டீச்சர்"

'உனக்கு இதுவரையிலை என்ரை குடும்பத்தைப் பற்றி சொல்லேல்லை. அதற்கு நேரமும் கிடைக்கேலை. 'ஊரிலை என்னை நம்பி நாலு குமருகள் இன்னமும் இருக்குதுகள். இதுகளைக் கட்டி மேய்ந்தபடி. பாவம் அம்மா. ஊர் இருக்கிற நிலைமையிலை."

"சரியான கஷ்டம் தான்'

இங்க எப்படி தனிய வந்தனி இங்க யாருமே சொந்தங்கள் என்று இல்லையா, டீச்சர்"

'சிறுவா, அது பெரிய கதை. அதை பிறகொரு சமயம் சொல்லுறன். ஆனா இன்றைக்கு வந்த லெட்டர்கள். அம்மாவின் லெட்டரொன்று. தங்கச்சிமாரின்ரை லெட்டர்கள் மற்றவை'

‘என்னவாம் பிரச்சனை'

'உனக்கு தெரியும் தானே. இப்ப அங்க பழையபடி அடிக்கத் தொடங்கிட்டாங்கள். இந்த லெட்டர்களை போன மாசம் "போஸ்ட் பண்ணியிருக்கினம்"

இவன் மெளனமாக அவள் கூறுவதையே அவதானித்தான்.

'கடைக்குட்டியும், அதுக்கு முந்தினதும் இன்னும் சில ஊர்க்குமருகளும் சேர்ந்து இயக்கத்திற்கு ஓடிப் போட்டுதுகளாம். அம்மா புலம்பி எழுதியிருக்கிறா. மூத்த தங்கச்சிமாரும் அழுதழுது எழுதியிருக்கினம்",

இவன் பழையபடி மோனித்த நிலைக்குள் மூழ்கி விட்டான். அவள் மேலே ஏதோ கூறிக் கொண்டே போனாள். ஆனால் உணரும் நிலையில் இவன் இல்லை. அவனிற்கு மட்டுமேயுரிய மோன உலகில் உறைந்து போனான்.
மீண்டும் அவனது இதயத்தின் அடிப்பாகம் விழித்து விட்ட நிலையில் மூழ்கி, உறைத்து சிலையானான். சிறிது நேரத்தின் பின்தான் அவள் அவன் நிலையைக் கவனித்தாள். பேச்சை நிறுத்தினாள். மெல்ல அவன் முகத்தை உலுப்பினாள். அவனை நிகழ்காலத்திற்கு இழுத்து வந்தாள். தன் பிரச்சனையைக் கூறப் போய் அவனைப் பிரச்சனைக்குள் மாட்டி விட்டதை உணர்ந்தாள்.

'ஐம் சோ சொறி, என்ரை பிரச்சினையை தேவையில்லாமல் உனக்குச் சொல்லிப் போட்டன். வீணாய் உன்ரை'மைன்டையும்' குழப்பிப் போட்டன்."

இவனிற்கு அன்று காலை மாமாமகன் இவனைப் பார்த்து நளினமாக, நக்கலாகக் கேட்டது காதில் ஒலித்தது. 'ஏதோ இந்தாப் பார். வெட்டிப் பிடுங்கிறன் எண்டு தானே போனனிங்கள். என்னடா வெட்டிக் கிழிச்சியள். உங்கட மூஞ்சிக்கு

அவன் சந்தித்திராத, அவளது கடைக்குட்டித் தங்கச்சிமார் மேல் ஒரு வித பரிதாபம் தோன்ற மனம் நெகிழ்ந்தான். அந்தப் பிஞ்சு உள்ளங்களை இவ்வளவு தூரம் உயிரையும் வெறுத்துப் போகும்படியாக கவிந்திருக்கும் சூழலை வெறுத்தான். அந்த உள்ளங்களின் தூய்மைக்கும் நேர்மைக்கும் எதிர்காலம் தரப்போகும் பரிசுகளை அஞ்சி நெஞ்சு விதிர்த்தான்.

“சீ. நான் ஒரு விசரி. தேவையில்லாமல் என்ரை கதையைச் சொல்லி உன்னை வருத்திப் போட்டன். ஏய். கமான். கமான். ஏய் சிறுவா. சியர் அப்"

இவள் பூவிலும் மெல்லிய தளிர் விரல்களால் அவன் தோள்களைப் பற்றி தூக்க முயன்றாள். அவனது நிலையை உடனடியாக மாற்ற வேண்டும். இல்லாவிட்டால் அவனை உறைநிலையிலிருந்து உருகுநிலைக்கு மாற்றுவது கஷ்டமாகி விடும்.
இறுதியில் வெற்றி அவளிற்குத்தான். அவன் கலகலத்தான். அவள் களித்தாள். அன்றிரவு அதன் அப்பாட்மென்ட் திரும்பியபோது மணி ஒன்ரை நெருங்கிக் கொண்டிருந்தது. வழக்கமாக வெள்ளிக்கிழமைகளில் மாமாமகன் நண்பர்களின் இருப்பிடங்களுக்கு சென்று விடுவான். சனிக்கிழமை தான் திரும்பி வருவான். ஆனால் வழமைக்கு மாறாக இன்று அப்பாட்மென்ட் கலகலத்த படியிருந்தது.

கதவைத் திறந்து இவன் உள்ளே நுழைந்தான். கலகலப்பு நிசப்தமாகியது.

மாமா மகனும் அவனது முக்கிய நண்பர்களான குட்டை நண்பனும், நெட்டை நண்பனும், குண்டு நண்பனும் இவனையே வைத்த கண் வாங்காது பார்த்தபடி நின்றார்கள். எல்லோர் கைகளிலும், ஒன்றில் 'லபாற்றும் இன்னொன்றில்
கோழிக்காலும் இருக்கையில், கண்கள் சிவந்து கிறங்கிக் கிடந்தன. ஸ்டீரியோவில் கலங்கரை விளக்கம் எம்.ஜி.ஆர் பொன்னெழில் பூத்தது புதுவானில் பாடலை சோகமாக பாடிக் கொண்டிருந்தார். டிவியில் சிற்றி டிவியின் கிரேட் மூவி ஓடிக் கொண்டிருந்தது. இவர்கள் எல்லோருக்குமே குறிப்பாக மாமா மகனிற்கு குடிக்கத் தொடங்கியதுமே எம்.ஜி.ஆரின் பழைய படப்பாடல்கள், சோகப் பாடல்கள்தான் அல்லது சிவாஜியின் ஆலயமணி, பாலும் பழமும் கால கட்டப் பாடல்களைப் கேட்காவிட்டால் மண்டையே வெடித்து விடும்.

குடித்தபடி, இடையிடையே கோழிக்கால்களை சுவைத்தபடி, நழுவும் சாறங்களையும் சரி செய்ய முடியாத மப்பு நிலையில் சோபாக்களில் சரிந்தபடி அல்லது தரையில் இருந்தபடி, சோபாக்களின் மேல் சாய்ந்தபடி வாத்தியின்ரை மணிப்பாடல்களை விமர்சித்தபடியே தூங்கி விடுவது தான் இவர்களது பொதுவான வழக்கம். இவனைக் கண்டதும் மாமா மகனின் முகத்தில் ஏளனமும் இகழ்ச்சியும் கலந்ததொரு பாவம் தோன்றியது.

'ரொறன்ரோவின் காதல் இளவரசர் வருகிறார். பராக்...பராக்.."

குட்டையும் நெட்டையும் குண்டும் கொல்லெனச் சிரித்துவிட்டு கோழிக்கால்களைச் சப்பின. பொதுவாகவே அவை இவனுடன் பிரச்சனைக்கு வருவதில்லை. மாமாமகனின் நடவடிக்கைகளுக்கு ஏற்ப ஆலோசனைகள், அறிவுரைகள், ஒத்துதல்கள் செய்வது தான் அவைகளின் வழக்கமாக இருந்தன.

"ஊரிலை கலகப் போரிலை வென்றபிறகு ஐயா, இங்கை, ரொறன்ரோவில கல்விப் போரிலை வெல்லுறதுக்கு போராடத் தொடங்கியிருக்கிறார் போல."

குண்டும் நெட்டையும் குட்டையும் மறுபடியும் கொல்லென்று சிரித்தன. இம்முறை கோழிக்காலிற்குப் பதிலாய், ஒரு மிடறு விழுங்கின. மாமா மகனின் குத்தல் மொழிகளை விட அக்குத்தலில் தொக்கி நின்ற இலக்கிய நயத்தை இவன் ரசித்தான். சில வேளைகளில் இப்படித்தான். மாமா மகன் மிக அருமையாக, பொருத்தமாகக் கலகப் போர், கலவிப் போர் போன்று தூய சொற்களைப் பேசி புல்லரிக்க வைத்து விடுகிறான். முற்பிறப்பென்று ஒன்று இருந்தால் நிச்சயம் இவன் ஒரு தமிழ் பண்டிதராக இருந்திருப்பான். மாமா மகனை தமிழ் பண்டிதர் உருவில் கற்பனை செய்து பார்த்தான். பொருத்தமாயும் வேடிக்கையாயும் இருந்தது.

‘என்னடா உன்னைத் தான். உன்ரை ஹெட்டிலை என்ன தான் நினைச்சுக் கொண்டிருக்கிறாய். என்ரை மானத்தை வாங்கவெண்டே வந்து தொலைச்சிருக்கிறாய். இவன் மெளனமாக அறைக்குள் போக திரும்பினான். மாமா மகன் விடவில்லை. குரலைக் கடுமையாக்கினான்.

'எதுக்கெடா அந்த நாயோட பார்க்கென்று சுத்தித் திரியிறாய்"

அவளை நாயென்று மாமா மகன் கூறுவதைக் கேட்டு இவன் நெஞ்சு ஆத்திரப்பட்டது.

'நீ எதுக்கு அவளை இழுக்கிறாய்"

‘என்னடா பெரிய அவள். அவளாம் அவள். அந்த நாய்க்காக என்னையே எதிர்த்துப் பேசிறியாடா'

'அண்ணை, மச்சான் சொல்றதும் சரிதானே. பேசாம மச்சானைக் கேட்டு நடவுங்கோ நெட்டை அட்வைஸ் பண்ணியது. நெட்டையின் அட்வைஸை விட அது அழைத்த 'அண்ணை’ என்ற பதம் இவனுக்கு எரிச்சலைத் தந்தது. அதே சமயம் எதற்காக இவர்கள் எல்லாம் அவள் மேல் ஆத்திரமாயிருக்கிறார்கள் என்பது விளங்கவில்லை.

இம்முறை மாமா மகன் கர்ஜித்தான். 'டேய் சொல்லிப் போட்டன். இன்னொருக்கா அவளுடன் உன்னைக் கண்டனோ. டேய் அவள் ஆர் தெரியுமோடா. சீ இஸ் எ பிச். நம்பர் வண் பிச். புருஷனை வைச்சுக் கொண்டு இன்னொருத்தனோட. ஓடிப் போன பிச்."

இவனுக்கு மாமா மகனின் சொற்கள் ஆத்திரத்தை தந்தன. அதிர்ச்சியைத் தந்தன. குழப்பத்தைத் தந்தன. தலையிடித்தது.

"பிளிஸ். என்னைத் தொந்தரவு செய்யாதே. கொஞ்சம் தனிய இருக்கவிடு விண்னென்று வலித்த நெற்றியை பிடித்தபடி தன் அறைக்குள் நுழைந்தான்.


அத்தியாயம் ஆறு: மாமா மகன் நண்பர்களின் ஆராய்ச்சியும், சிறுவனின் மனப்போராட்டமும்!

லிவிங்றுமில் மாமா மகனும் அவனது மூன்று நண்பர்களினதும் கொட்டம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. பல்வேறு விஷயங்களைப் பற்றி வம்பளந்து கொண்டிருந்தார்கள். அறையினுள் இவன் கட்டிலில் புரண்டபடியிருந்தான். மனம் அமைதிப்பட மாட்டேன் என்று அடம் பிடித்தது. ஒரு விதமான எரிச்சல் உணர்வு, பொறுமையற்ற தன்மை பொங்கியது. 'பாவி போன இடம் பள்ளமும் திட்டி. ஆச்சி அடிக்கடி கூறும் பழமொழி, ஆச்சி மண்டையைப் போட்டு பத்து வருடங்களாகி விட்டன, இக்கணத்தில் ஞாபகம் வந்தது. இவனிற்காகவே உருவான பழமொழியாகப் பட்டது. கடந்த கால நிகழ்வுகளை ஒரு கணம் சிந்தித்தான். மாயமான, பிரச்சனைகளை உருவாக்கும் ஒரு வித சக்தியொன்று அவனது வாழ்வெங்கணும் தனது ஆதிக்க இழைகளைப் பரப்பி விட்டிருந்தது போல் "லிவிங் றுமில்" மாமா மகன் கும்பல் கனடிய அரசியலை அலசிக் கொண்டிருந்தது. ஸ்ரீரியோவில் சோகம் பாடிக் கொண்டிருந்த வாத்யார் பட்டுக் கோட்டையின் தூங்காதே தம்பி தூங்காதே அறிவுரை கூறிக் கொண்டிருந்தார். மாமா மகன் வாத்யாரின் அறிவுரைக் கேற்ப தூங்காமல் விழித்துக் கொண்டிருப்பது போல் தோன்றியது.

"'எனக்கு வாற கிழமையிலிருந்து லே ஒஃப் தர இருக்கினம்" நெட்டையின் குரல் கேட்டது. அந்த வெறிக்குள்ளும் குரலில் கவலை தொனித்தது.

"எல்லாம் மல்றோனியால வந்த வில்லங்கம் தான் ம்.ட்ருடோ. மட்டும் இப்ப 'பிரைம் மினிஸ்டரா' இருந்திருந்தா - நடக்கிறதே வேற' இது கட்டை.

'"போன லெக்கூடினிற்கு பிரீ ரேட், பிரீ ரேட் எண்டு கத்தினாங்கள். மடச்சனங்கள் நம்பி ஏமாந்திட்டுதுகள். பார்த்தியா நடந்ததை. டீ கன்ட்ரட் தவுசன்ட்பக்டரிகள் மூடிப் போட்டினமாம். பாத்தியா நாடிருக்கிற கூத்தை. ஒரே
றிசெஷன்"

மாமா மகனிற்கு கனடிய அரசியலில் இருக்கும் ஆர்வம் பிறந்த மண் அரசியலில் இருப்பதாக தெரியவில்லை. ஒரு நாளாவது ஊர் நிலைமையை இவ்வளவு ஆர்வமாக அவன் அலசியதை இவன் பார்த்ததில்லை.

யாரோ டெலிபோனை டயல் பண்ணுவது கேட்டது.

‘என்னடா இந்த சமயத்திலே ஆருக்கடா அவசரமாய் போன் பண்ணுறாய்"

கட்டை தான் கேட்டான். நியூஸ் அடிச்சுப் பாத்தனான். ஊரில சண்டை தொடங்கியிட்டுதல்லே'. இது குண்டு. அவன் தான் போன் டயல் பண்ணியிருக்க வேண்டும். அவர்களது உரையாடல் பல்வேறு வழிகளில் தொடர்ந்தபடி இருந்தது. சிறிது நேரம் சிங்கப்பூரில் வந்து நிற்கிற ஒருவனை எப்படி தலை மாற்றி கூட்டி வருவது என்று தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். அன்எம்ப்ளாய்மென்ட்டிலிருந்து எப்படி வருமானத்தைக் கூட்டுவது என்று ஆராய்ந்து கொண்டார்கள். இவ்விதம், பல்வேறு கிளைகளாக பிரிந்து சென்ற உரையாடல் இறுதியில் சினிமாவில் வந்து நின்றது. சிறிது நேரம் குஷ்புவைப் பற்றி கிசுகிசுத்துக் கொண்டார்கள். கெளதமியின் நினைவுகளில் கிளுகிளுத்துக் கொண்டார்கள். சிலுக்கை எண்ணி சிலிர்த்துப் போனார்கள். அமலாவின் அழகில் மயங்கிப் போனார்கள். இதுவரை நடைபெற்ற இவர்களின் உரையாடலில் கூடுதலான இடத்தை சினிமாவே பிடித்துக் கொண்டது. படுக்கையில் இவனுக்கு மண்டை விண் விண் என்று வலித்துக் கொண்டது. தனது படுக்கையிலிருந்து எழுந்து தனது ஹிட் பாக்கைத் திறந்தான். அந்த ஹிட் பாக் ஒன்று தான் அவனது ஒரே ஒரு உடமை. மூன்று டெனிம் ட்ரவுசர்கள். இரண்டு மூன்று சேட்டுகள், டீ சேட்டுகள், ஐந்து சோடி சொக்ஸ். இவை தவிர முக்கியமான இமிக்கிரேஷன் பத்திரங்கள். சறங்கள் இரண்டு. இவற்றுடன் கூடவே சில புகைப்படங்கள். ஊர்க்கடிதங்கள். அத்துடன் பாரதியின் பாடல்கள் அடங்கிய தொகுப்பு. குறிப்பேடு. இவை தான் அவனது முக்கியமான உடமைகள். குறிப்புப் புத்தகத்தை மட்டும் எடுத்துவிட்டு ஹிட் பாக்கை பழைய இடத்தில் வைத்தான்.

இந்தக் குறிப்புப் புத்தகம் எழுதுவதை அவன் ஒரு பழக்கமாகக் கொண்டிருந்தான். சொல்லப் போனால் அந்தக் குறிப்புப் புத்தகம் அவனது ஆத்மார்த்த நண்பனாகத் தான் விளங்கியது. பல வருடங்களிற்கு முன்னால் அவன் வாசித்த 'டயறி ஒஃப் ஆன் பிராங் தான் அவனது இந்தக் குறிப்பெழுதும் பழக்கத்திற்கு காரணமானது. நாசிகளிடம் அகப்பட்டு உயிரிழந்த யூதச் சிறுமியொருத்தி பெற்றோருடன் அகப்படுவதற்கு முன்னால் தலைமறைவு வாழ்க்கை நடத்திய காலகட்டத்தில் எழுதிய டயறி தான் அது. பின்னாளில் உலகப் புகழ் பெற்ற இலக்கியமாக உருவெடுத்தது. அந்தச் சிறுமி ஆன், தனிமையில் அந்தக் குறிப்பேட்டை தனது சினேகிதியாக்கி "கிட்டி என்ற பெயரிட்டு தன் மன உணர்வுகளை பகிர்ந்து கொண்டாள் படிப்பவர் கண்களைக் குளமாக்கும் டயறி. அந்தக் குறிப்பெழுதும் பழக்கம் மட்டும் இல்லையென்றால் ஒரு வேளை இவனுக்கு பைத்தியமே பிடித்து விட்டிருக்கலாம். உணர்வுகளின் வடிகாலாக இருப்பதன் மூலமே இவனைச் சமநிலையில் வைப்பதில் அந்தக் குறிப்புகளுக்குப் பெரும் பங்குண்டு. தன் மனதில் படுவதை எந்த வித தயக்கமும் இன்றி அக்குறிப்புகளாக கொட்டுவதில் ஒருவித நிறைவு ஏற்படும். கட்டிலில் வந்து படுத்தவனாக குறிப்பேட்டைப் புரட்டினான். கண்களில் பட்ட பக்கத்தை வாசித்தான்.

"இன்று என் வாழ்வில் மறக்க முடியாத ஒருநாள். என் இறுதிக் காலம் வரையில் மறக்க முடியாது அமைந்து விட்ட அந்த நிகழ்வு நான்கு வருடங்களுக்கு முன்னால் இதே தினம் தான் நடந்தது. பல்வேறு கனவுகளுடன் எதிர்பார்ப்புகளுடன் புறப்பட்ட எங்களது எண்ணங்களிற்கு சாவு மணி அடிக்கப்பட்ட முதலாவது நாள். என் உயிருக்குயிரான நண்பனை எந்த நண்பனை நம்பிக்கைகளின் அடிப்படையில் என் அமைப்பிற்கு கொண்டு வந்து சேர்த்தேனோ அந்த இனிய நண்பனை என் கைகளினாலேயே கைது செய்ய வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டு விட்ட பயங்கரமான நாள். காலம் எவ்வளவு கொடியது. உயிருக்குயிராக நீ நம் மக்களை நேசித்தது. தாய்க்கு மேலாக நம் மண்ணை நீ போற்றியது. அமைப்பிற்காக உன் வாழ்வையே தாரை வார்த்தது. உன்னை எனக்குத் தான் தெரியும். எனக்கு மட்டுமே புரியும். உன்னைப் போய் உளவாளி என்றார்கள். அதைக் கேட்டு நீ துடித்த துடிப்பு. நண்பா! உன் முடிவிற்கு நான் அல்லவா எமனாக வந்து விட்டேன். உனக்காக எவ்வளவோ தூரம் மேலிடத்துக்கு எடுத்துச் சொன்னேன். சாதாரண விசாரணை என்றார்கள். கடமையைச் செய் என்றார்கள். பந்த பாசங்களுக்கு இடமில்லை என்றார்கள். கடமையைச் செய்தேன். கண்ட பலன்? பலனைப் பற்றி சிந்திக்காதே என்றார்கள். பயணத்தை தொடர் என்றார்கள். எப்படித் தொடர்வது எவ்விதம் சூழல்களின் கைதியாக இருந்து விட்டேன். நண்பா, என்னை மன்னித்துவிடு மன்னித்து விடு!”


நெஞ்சில் வேதனை மண்டியிட்டது. அடுத்த பக்கத்தைப் புரட்டினான்.

1.O. 1.91
"இயற்கைத் தாயே! என்னை எதற்காகப் படைத்தாய்? எதற்காகப் படைத்தாய் படைத்த என்னை எதற்காக முரண்பாடுகளுக்குள் சிக்க வைத்து விட்டாய். நாட்டிற்கு உழைக்க குடும்பத்தைக் கைவிட்டேன். அமைப்பிற்காக நண்பனை இழந்தேன். இன்று அன்னிய தேசமொன்றில் அரசியல், பொருளாதார அகதிகளில் ஒருவனாக அலைகிறேன். வயது போன நிலையில் அம்மாவும் தங்கச்சியும் ஊரிலை உயிரை வைத்துக் கொண்டு வாழும் நிலையில். பல்வேறு குழப்பகரமான எண்ணப் போக்குகளின் மொத்த விளைவாக என்னை நீமாற்றிவிட்டாயே. எதற்காக? இயற்கைத் தாயே! எதற்காக?"

குறிப்பேட்டின் பக்கங்களைப் புரட்டினான். இன்னுமொரு பக்கத்தில் இவ்வாறிருந்தது.

25.2.91.
"இதே தினத்தில் தான் நான்கு வருடங்களுக்குமுன் அவனைக் கடைசியாக சந்தித்தேன். வாடி உலர்ந்து போயிருந்தான். முகமெல்லாம் உரோமம் மண்டிக் கிடந்தது. முகத்தில் நம்பிக்கைச் சிதைவினால் எழுந்த ஏமாற்றம் தெரிந்தது. "நீயுமா புருட்டஸ்' என்ற சீசரை எண்ணினேன். அதன் பிறகு அவனை நான் காணவேயில்லை. நீ தப்பி விட்டதாக அறிவித்தார்கள், வழக்கம் போல் நம்பினேன். நிம்மதிப் பெருமூச்சு விட்டேன். ஆனால் உண்மை தெரிந்த போது உன் முடிவிற்கு நானே காரணமாக இருந்து விட்டேன். அதர்மத்திற்கெதிராக, அநீதிக்கெதிராக சீற்றமுடன் எழுந்தோம், புத்தமைப்புக் கனவுகளுடன் எழுந்தோம். எல்லாமே எவ்விதம் அடித்து நொருக்கப்பட்டன. எவற்றிற்கெதிராக போராட எழுந்தோமோ அவை எம் மத்தியில் பலமாக எழுந்த போது ஏன் எம்மால் எதிர்த்துப் போராட முடியவில்லை. அதர்மம் எங்கிருந்து வந்தாலும் அதர்மம் தானே. அதர்மத்தை எதிர்ப்பதற்குரிய சக்தியை ஏன் நாம் இழந்து விட்டிருந்தோம். ஏன்? ஏன்? எங்களிற்கிடையில் தர்மத்தைக்கடைப்பிடிக்க முடியாத எம்மால் எவ்விதம் மக்களுக்கு அதைத் தர முடியும்."

மேலும் சில பக்கங்களை புரட்டினான். புதிய பக்கத்திற்கு வந்தான். அதில் எழுதத் தொடங்கினான்.

25. 1O.1991
"இயற்கைத் தாயே! இன்று என் மனம் பெரிதும் குழம்பிக் கிடக்கிறது என்னைச் சுற்றி தனது ஆதிக்க இழைகளைப் பரப்பியிருக்கிற அந்தச் சக்தியின் ஆதிக்கம் மீண்டும் ஒருமுறை கொடூரத்தைக் காட்டி விட்டது போல் தெரிகிறது. அண்மையில் தான் அவளைச் சந்தித்தேன். அவளை என் தங்கையைப் போல் எண்ணிப் பழகுகின்றேனா? அப்படிச் சொல்வதற்கில்லை. ஆனால் ஒரு தூய்மையான சினேகிதியாகத் தான் கருதுகிறேன். அந்த நட்புணர்வைத் தவிர அவள் மேல் வேறெந்த பாலியல் ரீதியான உணர்வுகளையும் நான் கொண்டிருக்கவில்லை. இந்த நட்பிற்கும் பிரச்சனை வந்து விடும் போல் தெரிகின்றது. அவளது கடந்த கால வாழ்க்கை பற்றிய கவலை எனக்கில்லை. ஆனால் சுற்றியிருப்பவர்கள் சும்மாயிருக்க மாட்டார்கள் போல் படுகின்றது. இவளிற்கு என்னால் எந்தப் பிரச்சனைகளும் வரக் கூடாது. ஆனால் இதுவரையில் யார் யாரிற்கு மேல் எல்லாம் நான் அன்பு வைத்திருக்கிறேனோ அவர்களை எல்லாம் ஏதோ ஒரு வகையில் இழந்து தான் வருகிறேன். அன்று அவன். இன்று இவளா? இயற்கைத் தாயே! எதற்காக இந்தச் சோதனை? காலக் குமிழிக்குள் கரையும் வாழ்வின் அர்த்தமென்ன? மண்டை விண்விண்ணென்று வெடிக்கிறதே. என்ன செய்ய?"


இவ்விதம் எழுத எழுத, உணர்வுகளை எழுத்தாக வெளியே தள்ளத் தள்ள மனம் இலேசாகிக் கொண்டு வந்ததை உணர்ந்தான். வெளியில் இன்னமும் மாமா மகன் கும்பலின் கும்மாளம் தொடர்ந்தபடி தான் இருந்தது. இவனிற்கு மனசு சற்றே இலேசாகிக் கிடந்தது. அம்மாவின் ஞாபகம் வந்தது.

தங்கச்சியின் ஞாபகம் வந்தது. கவலையில் கண்கள் சற்றே பனித்தன. சிறுவயதில் படித்த 'பொரிமாத் தோண்டியின்' ஞாபகமும் வந்தது. கடைசியில் இருந்ததையும் போட்டு உடைத்து விட்டோமா? இலேசாக நெஞ்சுக்குள் வலித்தது. அதர்மத்திற்கெதிரான தர்மப் போரில் எத்தனை வகையான இழப்புகள். அதர்ம இழப்புகள். பகவத் கீதையைக் கொளுத்த வேண்டும்' என மனம் சிந்தித்தது. சமயநூல் போரைப் பற்றி உபதேசிக்கிறதே என்றால் அது நிஜப் போரல்ல. ஆத்மாவிற்கு ஆண்டவனை அடையும் வழியை உருவகமாக கூறும் உயர்ந்த தத்துவம் என்பார்கள். போர், போராட்ட முறைகள் சரிதானா என்றால் நிஜவாழ்வில் கீதையே தர்மத்திற்கான, அதர்மத்துக்கெதிரான போரை ஆதரிக்கிறதென்பார்கள். உள்ளுக்குள் நடைபெறும் அதர்மங்களைப் பற்றிக் கேட்க நினைத்தாலோ கடமையைச் செய், பலனை எதிர்பாராதே" என்பார்கள். சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி மனிதர்கள் கீதையைப் பாவித்துக் கொள்கிறார்களா? அல்லது கீதை உண்மையிலேயே உயர்ந்த தத்துவத்தைத் தான் கூறுகின்றதா?

ஜன்னலினூடு தெரிந்த வானத்தை நோக்கினான். நட்சத்திரங்கள் சில சுடர்ந்தபடியிருந்தன. விமானம் ஒன்றின் ஒளிச்சிமிட்டல்கள் தெரிந்து மறைந்தன. பாதி திறந்திருந்த ஜன்னலினூடு இலேசான குளிர்காற்று வீசியது.

மாமா மகன் கும்பல் இப்போதோ ரொறன்ரோவில் பெண்கள் நிலைமை பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தார்கள்.

‘எங்கட பெட்டையளை நல்லாப் பழுதாகிப் போட்டினம்" இது நெட்டை,

"எல்லாம் இவங்கட சட்ட திட்டங்கள் தான். ஊரிலை அடங்கிக் கிடந்ததுகளை, அடிச்சாலும் ஒரு பேச்சு திருப்பிப் பேசமாட்டாமல் கிடந்ததுகளை இவங்கட சட்ட திட்டங்கள் பழுதாக்கிப் போட்டுதுகள். கை வைக்கேலாது. உடனே நைன் வன் வன்' என்று பயப்பிடுத்துகினம் இது மாமா மகனின் குரல்.
அந்தக் கும்பலில் கொஞ்சம் விசயம் தெரிந்தவன் போல் கதைப்பவன்.

'என்னோட பக்டரியில் ஒரு மிக்ஸ் ஜமெய்க்கன் வேலை செய்யிறான். 'அவன் சொல்லுவான் சிறிலங்கன் பெட்டையளைப் பற்றி. எனக்கே நம்ப முடியேலை! இது நெட்டை,

‘என்னடா சொல்லுவான் சொல்லுடா. சொல்லுடா. இது குண்டும் கட்டையும் ஒரே குரலில் ஒரே சமயத்தில்,

'அவன் ஒரு பார்ட்டியில ஒரு சிறிலங்கன் பெட்டையைச் சந்தித்தவனாம். அவள் மூலமாய் இன்றைக்கு நாலைஞ்சு பெட்டையளை வைச்சிருக்கிறானாம். நம்பவே முடியவில்லை. பார்க்க சாது போல் இருப்பினமாம். சிறிலங்கன் பெட்டையள் பெஸ்ட் என்பான் பழையபடி நெட்டை.

"எங்கட பெட்டையள் சரியான தந்திரசாலிகள். எங்களுக்கு முன்னால பத்தினி வேசம் போடுவாளவை, காப்பிலிகள், வெள்ளை யளோட பண்ணாத கூத்தில்லை. எங்களோட திரிஞ்சால் ஊருக்குள்ள எங்கட சமூகத்துக்குள்ள கதை வந்திடுமல்லே. அது தான் இந்தக் கூத்து இது மாமா மகன்.

இனி இப்போதைக்கு இவர்கள் இந்த விசயத்தை விட்டு ஒய மாட்டார்கள் போல் பட்டது. எத்தனை மாட்டை அவிழ்த்ததுகள், எத்தனை கன்றை அவிழ்த்ததுகள், எத்தனை மாட்டையும் கன்றையும் அவிழ்த்ததுகள், எத்தனை காப்பிலியுடன் போனதுகள், வெள்ளையுடன் போனதுகள். போய் வந்ததுகள். இப்படியெல்லாம் புள்ளி விபரங்களுடன் ஒரு அலசு அலசுவார்கள். இது மாமா மகனுக்கு கை வந்த கலை. அதே சமயம் இவர்கள் காப்பிலிகள், சோமாலிகல், ட்ரினிடாட், கயானா, வெள்ளைப் பெண்களுடன் அலைந்த கதைகளை, ஜார்விஸ், சேர்ச் பகுதியில் பேரம் பேசிக் கொண்டு வந்த கதைகளை பேரம் பேசும்போது பெண் பொலிசிடம் அகப்பட்டு அபராதம் கோர்ட்டில் கட்டிய கதைகளைப் பற்றிக் கொஞ்சம் கூட மூச்சு விடமாட்டார்கள். படுக்கையில் இவனுக்கு அலுப்பாக இருந்தது. இதுவரை கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த நித்திராதேவி ஒருவழியாக இவன் மேல் இரக்கப்பட்டு வந்துதழுவிக் கொண்டாள். அப்படியே தூங்கிப் போனான்.

[ தொடரும் ]

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

நாவல்: அருச்சுனனின் தேடலும், அகலிகையின் காதலும் (1-3)

•Last Updated on ••Friday•, 24 •August• 2018 23:42••  

•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.022 seconds, 2.37 MB
Application afterRoute: 0.028 seconds, 3.12 MB
Application afterDispatch: 0.070 seconds, 5.88 MB
Application afterRender: 0.071 seconds, 6.06 MB

•Memory Usage•

6426568

•12 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '26hv0dv8q5td8312bsf97d0lg6'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1702300328' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '26hv0dv8q5td8312bsf97d0lg6'
  4. INSERT INTO `jos_session` ( `session_id`,`time`,`username`,`gid`,`guest`,`client_id` )
      VALUES ( '26hv0dv8q5td8312bsf97d0lg6','1702301228','','0','1','0' )
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 0)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 4801
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2023-12-11 13:27:08' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2023-12-11 13:27:08' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='4801'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 49
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2023-12-11 13:27:08' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2023-12-11 13:27:08' )
      ORDER BY a.ordering

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- வ.ந.கிரிதரன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- வ.ந.கிரிதரன் -=- வ.ந.கிரிதரன் -