பேராசிரியர் க.கைலாசபதி நினைவாக….

Friday, 04 December 2020 07:49 - மணியம் சண்முகம் - முகநூல் குறிப்புகள்
Print

- சிறப்பான முகநூற் பதிவுகள் அவ்வபோது பதிவுகளில் மீள்பிரசுரமாகும். அவ்வகையான பதிவுகளிலொன்று இப்பதிவு. - பதிவுகள் -


பேராசிரியர் க.கைலாசபதி நினைவாக….உலகறிந்த மார்ச்சிய தமிழ் அறிஞர் பேராசிரியர் கனகசபாபதி கைலாசபதி அவர்கள் இவ்வுலகை விட்டு மறைந்து 38 ஆண்டுகள் ஆகின்றன. 1933 ஏப்ரல் 05 ஆம் திகதி மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் பிறந்த கைலாசபதி, 1982 டிசம்பர் 06 ஆம் திகதி கொழும்பு பொது வைத்தியசாலையில் தனது இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டார். மரணிக்கும் போது அவருக்கு 49 வயது மட்டுமே நிரம்பியிருந்தது.

உலகில் சாதனை படைத்த பல மனிதர்களைப் போலவே கைலாசபதி அவர்களையும் மரணம் இளம் வயதிலேயே காவு கொண்டுவிட்டது. தனது குறுகிய ஆயுள் காலத்தில் அவர் தமிழ் இலக்கியத்துக்கும், மார்க்சிய விமர்சனத்துறைக்கும் அளித்த அளப்பரிய, காலத்தால் அழியாத பங்களிப்பை நோக்குகையில், அவர் இன்னும் சிறிது காலம் வாழ்ந்திருந்தால் அறிவுலகம் இன்னும் எத்தனை அரும் பெரும் பொக்கிசங்களை அவரிடமிருந்து பெற்றிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
கைலாசபதி அவர்களைப் பற்றி நான் சுன்னாகம் ஸ்கந்தவரோதயாக் கல்லூரியில் படிக்கும் காலத்தில் கேள்விப்பட்டிருந்தாலும், அவரை முதன்முதலாகப் பார்த்தது 1966 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்திருந்த எமது புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில்தான். தோழர் வி.ஏ.கந்தசாமியைச் சந்திப்பதற்காக அவர் வந்திருந்தார். ஆனால் கந்தசாமி அந்த நேரத்தில் அங்கிருக்காததால் உடனும் திரும்பிச் சென்றுவிட்டார்.

முதலில் வந்தவர் யார் என்று நான் அறிந்திருக்கவில்லை. பின்னர் அலுவலகத்தில் அப்பொழுது இருந்த ஒரு தோழர் மூலம்தான் வந்தவர் பிரசித்தி பெற்ற கைலாசபதி அவர்கள் என அறிந்து கொண்டேன். அன்றே அவரது தோற்றம் எனது மனதில் பதிந்து கொண்டது. நெடிதுயர்ந்த தோற்றம். கண்ணாடியின் பின்னே கூர்மையான கண்கள். கையில் ஏதோ ஒரு புத்தகம் வைத்திருந்தார். கட்டம் போட்ட அரைக்கை சேர்ட் அணிந்திருந்ததாக நினைவு. அவருடன் சில வார்த்தைகளாவது கதைக்காமல் விட்டுவிட்டோமே என்ற ஆதங்கம் தோன்றியது.

அதன் பின்னர் அவர் எழுதிய பல கட்டுரைகளைத் தேடிப் படித்தேன். ஆரம்பத்தில் அந்தக் கட்டுரைகளின் கனதியான சாராம்சத்தை கிரகிக்க முடியாமல் போய்விட்டாலும், பின்னர் படிப்படியாக அவற்றைக் கிரகித்துக் கொண்டேன். அவர் பத்திரிகைகளில், சஞ்சிகைகளில் எழுதிய கட்டுரைகள் கணக்கில் அடங்காதவை. அதேபோல, அவர் எழுதி வெளியிட்ட நூல்களும் பலப்பல.

அந்தக் காலத்தில் தோழரும் எழுத்தாளருமான சுபைர் இளங்கீரன் எழுதிய “நீதியே நீ கேள்” என்ற நாவல் என்னைப் போன்றவர்கள் மத்தியில் ஒரு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. அந்த நாவல் ‘தினகரன்’ பத்திரிகையில் தொடராக வந்தது என்றும், அப்பொழுது கைலாசபதி அவர்கள்தான் தினகரன் ஆசிரியராக இருந்தார் என்றும் கேள்விப்பட்டேன். அது மாத்திரமல்லாமல், கைலாசபதி ஆசிரியராக இருந்த காலம் தினகரன் பத்திரிகையின் பொற்காலம் எனவும், அவர்தான் பல எழுத்தாளர்களை தினகரன் மூலம் தமிழ் இலக்கிய உலகிற்கு அறிமுகப்படுத்தி வைத்தவர் என்றும் பிற்காலத்தில் அறிந்தேன். பின்னர் நான் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியில் முழுநேர ஊழியராக வேலை செய்த காலத்தில், தோழர் நீர்வை பொன்னையன் மூலம் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. அந்தச் சங்கத்தின் அச்சாணியாகவும், பிரதம வழிகாட்டியாகவும் கைலாசபதிதான் செயற்பட்டுக் கொண்டிருந்தார். எனவே கொழும்பு செல்லும் போது சில சந்தர்ப்பங்களில் நீர்வை பொன்னையனுடன் சேர்ந்து கைலாசபதியை சந்திக்கும் வாய்ப்புகள் ஏற்பட்டன.

கைலாசபதி பிறந்தது மலேசியா. ஆனால் அவரது சிறு வயதிலேயே அவர் தாயாருடன் நாட்டில் இலங்கை வந்துவிட்டார். ஆரம்பத்தில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற கைலாசபதி, பின்னர் கொழும்பு ரோயல் கல்லூரியில் படிப்பைத் தொடர்ந்தார். யாழ். இந்துக் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் அங்கு கற்பித்துக் கொண்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் மு.கார்த்திகேசன் மூலமாக கைலாசபதி அவர்களுக்கு மார்க்சிய சிந்தனையின் பால் ஈடுபாடு ஏற்பட்டது. அந்த அத்திவாரமே பிற்காலத்தில் அவர் பழந்தமிழ் இலக்கியங்களை மார்க்சிய அடிப்படையிலான வரலாற்று பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தில் ஆராயவும், நவீன தமிழ் இலக்கியத்தின் மீது அந்தக் கண்ணோட்டத்தில் தாக்கம் செலுத்தவும் வழிவகுத்தது கல்லூரிப் படிப்பு முடிந்ததும் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இணைந்து பட்டதாரியானார். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கற்கும் போதே ‘வீரகேசரி’ பத்திரிகையில் தொல்காப்பியம் பற்றி கட்டுரை எழுதியுள்ளார். திருமண வாழ்வில் பிரவேசித்த கைலாசபதி இடைக்காட்டைச் சேர்ந்த ஏற்கெனவே உறவினரான நா.மாணிக்க இடைக்காடர் (இவர் எனது தந்தையார் சண்முகம் வழி இரத்த உறவினர்) என்பவருடைய மகள் சர்வமங்களம் அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு சுபமங்களா பவித்ரா என்ற இரு பெண் பிள்ளைகள் உண்டு. (ஆரம்பத்தில் வவுனியா அரசாங்க அதிபராகப் பணிபுரிந்த இடைக்காடர், பின்னர் ஐ.நாவின் உணவு விவசாய அமைப்புப் பிரதிநிதியாகப் பல நாடுகளில் பணிபுரிந்துள்ளார். அப்படி ஆபிரிக்க நாடொன்றில் பணி புரியும்போது ஒருமுறை இயக்கச்சியிலுள்ள எமது வீட்டுக்கும் வருகை தந்துள்ளார்)

 

பின்னர் கைலாசபதி பட்ட மேற்படிப்புக்காக இங்கிலாந்திலுள்ள உள்ள பர்மிங்காம் பல்கலைக்கழகம் சென்றார். அங்கு அவர் பிரித்தானியாவின் புகழ்பெற்ற மார்க்சிய அறிஞரான பேராசிரியர் ஜோர்ஜ் தொம்சன் அவர்களின் மேற்பார்வையில் ஆய்வுகளை மேற்கொண்டார். அது கைலாசபதி அவர்களின் மார்க்சிய நோக்கிலான பார்வையை மேலும் கூர்மைப்படுத்தியது. கைலாசபதி அங்கு சமர்ப்பித்த “தமிழ் வீரயுகப் பாடல்” (Tamil Heroic Poetry) என்ற கட்டுரை உலகப் புகழ்பெற்றதுடன், ஒக்ஸ்போர்ட் அச்சகத்தால் நூலாகவும் பின்னர் வெளியிடப்பட்டது. கொழும்பில் இருந்து வெளியான ‘தினகரன்’ பத்திரிகையில் இணைந்து கொண்ட கைலாசபதி, முதலில் அதன் வார இதழ் ஆசிரியராகவும், பின்னர் 1959 முதல் 61 வரை பிரதம ஆசிரியராகவும் சிறப்பாகப் பணிபுரிந்தார். அந்தக் காலமே தினகரனின் பொற்காலம் எனக் குறிப்பிடப்படுகிறது.

1974 இல் அப்போதைய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தால் யாழ்ப்பாணத்தில் (திருநெல்வேலியில் பரமேஸ்வரா கல்லூரி இருந்த கட்டிடத்தில்) முதன்முதலாக பல்கலைக்கழக வளாகம் அமைக்கப்பட்டது. இடதுசாரிக் கட்சிகளினதும், இதர முற்போக்கு சக்திகளினதும் வற்புறுத்தலால் ஆரம்பிக்கப்பட்ட இவ்வளாகத்தின் முதலாவது தலைவராக பேராசிரியர் க.கைலாசபதி நியமிக்கப்பட்டார். அவர் இப்பதவியை 1974 ஓகஸ்ட் முதல் 1977 யூலை வரை வகித்தார். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டதையும், அதன் தலைவராக கைலாசபதி நியமிக்கப்பட்டதையும் விரும்பாத தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ் பிரிவினைவாத - இனவாத சக்திகள் கைலாசபதி யாழ்ப்பாணம் வந்து வண்ணார்பண்ணையில் தங்கியிருந்த மைத்துனர் வீட்டின் மீது இரவு நேரத்தில் கைக்குண்டொன்றை வீசினர். இந்தத் தகவலை அறிந்து நானும் இன்னும் ஒரு தோழரும் அடுத்த நாள் அதிகாலை அவரைப் பார்க்கச் சென்றோம். எம்மை வரவேற்று உரையாடிய கைலாசபதி, சிரித்துக் கொண்டே எம்மிடம் பின்வருமாறு கூறினார்:

“இந்த மடையன்களுக்குத் தெரியாது போலும், நானும் ஒரு பனங்காட்டு நரியென்று”.

கைலாசபதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை கல்வியியல் ரீதியாக மட்டுமின்றி, கட்டிட ரீதியாக, தளபாட ரீதியாக, ஆள்புல ரீதியாக, உள் கட்டமைப்பு ரீதியாக உருவாக்குவதற்கு எடுத்துக் கொண்ட பெரும் பிரயத்தனங்களை அந்த நேரத்தில் கண்கூடாகக் கண்டவர்களுள் நானும் ஒருவன். அது மட்டுமின்றி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்கு மிகவும் திறமை வாய்ந்த விரிவுரையாளர் குழாம் ஒன்றையும் மற்றைய பல்கலைக்கழகங்களிலிருந்து தேர்ந்தெடுத்து கொண்டு வந்து சேர்த்தார். அவர்களுள் கா.சிவத்தம்பி, கா.இந்திரபாலா, ப.சந்திரசேகரம், மௌ.சித்திரலேகா, எம்.ஏ.நுஃமான், குணரத்தினம், டாக்டர் சிவஞானசுந்தரம் (நந்தி), மு.நித்தியானந்தன், இராமகிருஸ்ணன் உட்பட பலர் அடங்குவர்.

அவர் அங்கு பதவி வகித்த காலத்தில் தன் தொழிலுடன் மட்டும் நின்றுவிடவில்லை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பலரை அழைத்து “ஆக்க இலக்கியக் கருத்தரங்கு” என்ற தலைப்பில் தொடர் இலக்கியக் கருத்தரங்குகளையும் நடத்தினார். அதில் நானும் தவறாது பங்குபற்றினேன்.

கைலாசபதி யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் தலைவராக இருந்த போது ஒருமுறை தன்னை வந்து சந்திக்கும்படி என்னை அழைத்தார். எதற்காக அழைக்கிறார் என யோசித்துக் கொண்டு சென்ற போது, “மணியம், தமிழர்களுக்கென்று இடதுசாரிகளின் முயற்சியால் பல்கலைக்கழகம் ஒன்று வந்துவிட்டது. பல்கலைக்கழகத்தைச் சுற்றி சாப்பாட்டுக் கடைகள், பலசரக்குக் கடைகள், லோன்றி, சலூன், சைக்கிள் கடை எல்லாம் வந்திட்டுது. ஆனால் அவசியம் தேவையான ஒரு கடை இன்னும் வரவில்லை. அந்தக் குறையை நீர்தான் பூர்த்தி செய்ய வேண்டும். வேறு ஒன்றும் இல்லை, பல்கலைக்கழகச் சுற்றாடலில் நீர் ஒரு புத்தகக் கடையைத் தொடங்க வேண்டும்” என்றார்.

ஏற்கெனவே நான் நமது கட்சி வேலைகளுடன், கட்சியின் ‘யாழ் புத்தக நிலைய’த்தையும் நிர்வகித்து வந்ததை அறிந்துதான் இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறார் எனப் புரிந்து கொண்டேன். அன்று அவர் தந்த ஆலோசனையின் விளைவே நான் யாழ் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் அமைத்த எனது புத்தகக் கடையின் உருவாக்கம்.

1975 ஆம் ஆண்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்திய ‘தேசிய ஒருமைப்பாட்டு மாநாட்டின்’ பிரதம ஏற்பாட்டாளரும் கைலாசபதி அவர்களே. இந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட 12 அம்ச தீர்மானத்தை அப்போதைய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க நேரடியாக வருகை தந்து பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாநாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளின் வாலிப முன்னணிகள் சார்பாக அனுர பண்டாரநாயக்க, வாசுதேவ நாணயக்கார, சரத் முத்தெட்டுவேகம ஆகியோருடன், எமது மார்க்சிச – லெனினிச கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிப முன்னணியின் சார்பாக என்னையும் பேசுவதற்கு கைலாசபதி அவர்கள் ஏற்பாடு செய்தமை என் வாழ்நாளில் மறக்க முடியாதது.

கைலாசபதி அவர்களை 1966 இல் முதன் முதல் கண்டதிலிருந்து அவருடன் 1982 இல் அவர் இறக்கும் வரை சுமார் 16 வருடங்கள் வரை எனக்கு உறவு இருந்து வந்துள்ளது. அதன் தாற்பரியமோ என்னவோ அவரது உயிர் பிரியும் இறுதி நிமிடங்களில் அவரருகே இருக்கும் சந்தர்ப்பம் எனக்கும் கிடைத்தது. இது நான் எதிர்பார்க்காத ஒன்று. அன்று நானும் கிளிநொச்சியில் இருந்த வந்த ஒரு தோழரும் மாத்தறையில் நடைபெற்ற எமது கட்சிக் கூட்டம் ஒன்றில் பங்குபற்றிவிட்டு கொழும்பு – தெகிவளையில் இருந்த தோழர் நீர்வை பொன்னையன் வீட்டுக்குத் திரும்பி வந்தோம். அங்குவந்தபோது கைலாசபதி அவர்களுக்கு உடல்நிலை மோசமாகியதால் தோழர் நீர்வை அவரைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்கு சென்று விட்டதாக அறிந்து நாமும் அங்கு விரைந்தோம்.

வைத்தியசாலையில் கைலாசின் கட்டிலைச் சுற்றி அவரது மனைவி சர்வமும் வேறு சிலரும் நின்று கொண்டிருந்தனர். கைலாசின் கண்கள் மூடியபடி இருந்தன. என்னைக் கண்டதும், “நீங்கள் கேட்டீர்கள், மணியம் வந்திருக்கிறார்” என அவரது மனைவி சர்வம் கூறினார். கைலாசின் கண் இமைகள் சற்று அசைந்தது போலிருந்தது. அதன் பின் சர்வம் தந்த பாலில் சில துளிகளை அவரது வாய்க்குள் ஊற்றினேன். அதன் பின்னர் இரண்டொரு நிமிடங்களில் அவர் உயிர் பிரிந்துவிட்டது. இந்த நிகழ்வு என் உயிர் உள்ளவரை என் மனதைவிட்டு அகலாத ஒன்று. ஏனெனில், என் தகப்பனார் 101 வயதில் 2006 இல் மறைந்த போது கூட அவர் அருகில் இருக்கும் கொடுப்பனவு எனக்குக் கிடைக்கவில்லை.

நாம் எமது வாழ்க்கையில் ஏராளமான மனிதர்களுடன் பழகிய போதிலும், அரசியலில் தோழர் மு.கார்த்திகேசன் அவர்களும், இலக்கியத்தில் பேராசிரியர் க.கைலாசபதி அவர்களுமே எமது முதன்மையான வழிகாட்டும் ஆதர்ச முன்னோடிகளாக இருக்கின்றனர், இனிமேலும் இருப்பர்.

Last Updated on Friday, 04 December 2020 08:04