வயோதிபத்திலும் இலட்சிய வாழ்க்கை

Thursday, 02 February 2017 20:22 ▬பேராசிரியர் கோபன் மகாதேவா▬ சமூகம்
Print

-பேராசிரியர் கோபன் மகாதேவா -முன்னுரை
வயோதிப காலம் என்பதை, நாம் எம் நடைமுறை வாழ்வின் ஊதிய-நோக்கு வேலைகள், தொழில்கள், உத்தியோகங்களிலிருந்து விடைபெறும் 65-வயதின் பின்னர் நடத்தும் வாழ்க்கை எனக் கருதலாம்.  இந்தியாவிலும் இலங்கை யிலும் இருந்து வெளிவரும் புதினப் பத்திரிகைகள், சஞ்சிகைகளில் 50-வயதுக்கு மேற்பட்டோரை எல்லாம் வயோதிபர் எனக் குறிப்பதை 2011இலும் பலதடவை கண்டிருக்கிறோம்.  சென்ற நூற்றாண்டுகளில் ஆசிய நாடுகளில் மலேரியா, நீரிழிவு, தொற்று நோய்கள், பிள்ளைப் பேற்றினில் குழந்தைகளும் தாய்மாரும் இறத்தல், போன்ற இயற்கை அனர்த்தங்களினாலும் போரினாலும் மனிதரின் சராசரி வாழ்க்கை 40-வயதுக்குக் கிட்டியே இருந்ததை அவர்கள் இன்றைய புதிய சூழ்நிலையிலும் மறக்க மறுக்கின்றனர்.  உலகின் மேற்குப் பாதியில் வசிக்கும் எம்மவரின் கோணத்திலிருந்து, ஆனால் உலக மக்கள் எல்லோருக்குமே பலன்படும் பாணியிலேயே இக்கட்டுரை எழுதப் பட்டிருக்கிறது.

மனித வாழ்வின் முக்கிய குறிக்கோள் என்ன?
இது ஒரு முக்கியமான அடிப்படைக் கேள்வி.  இந்தக் கேள்விக்கு மனச் சுத்தியுடன் தம் சொந்தச் சூழ்நிலைக்கு ஏற்பச் சிந்தித்துத் தெளிந்த பதில் பெறுவோர் எந்த வயதிலும் வாழ்க்கையில் இன்பமும் அமைதியும் காணலாம். ஆனால் வயோதிபரின் கோணத்திலிருந்தே இன்று இப் பொருளை ஆராய் கிறோம். என் சிந்தனையின் படி, வயோதிபரின் இலட்சியக் குறிக்கோளாவது: இயற்கை அன்னை எமக்குத் தந்துள்ள உயிரையும் உடம்பையும் அவளே திரும்ப எடுக்கும் நிமிடம் வரை கவனமாகப் பாதுகாத்து, முடியுமான வரை இன்பமாக வாழ்ந்து கொண்டே எமது குடும்பத்தினர், அயலார், சமூகத்தினர் போன்றோருக்கு இயலுமானவரை உதவிக் கொண்டு இன விருத்தியுடன் உலக அபிவிருத்தியையும் ஊக்கி, இயற்கைமாதாவையும் எம்மெம் ஆண்டவரையும் துதித்துப் பேணிக் கொண்டு ஆறுதலாக வாழ்வதே, என்பதாகும்! வயோதிபத்தில் தற்காப்பின் முக்கியத்துவம்
வயோதிப வயது, எம் உடம்பின் வல்லமை குறைந்து கொண்டு போகும் பருவம். ஆனால் அது எம் மனமும் மூளையும் பல்லாண்டுகளின் அனுபவத்தால் முதிர்ச்சியும் பக்குவமும் அடைந்த பொன் பருவம்.  எனவே எம் அனுபவத்தையும் முதிர்ச்சியையும் பலன்தரப் பாவித்து, எமக்குத் தீங்கு விளைவிக்கும் சாத்தியமுள்ள இக்கட்டான நிலைகளை வரு முன்னரே ஊகித்து அவற்றை நாம் தவிர்த்துக் கொள்ளல், விவேகம்.  அந்தக் கட்டத்தில் நாம் அனேகமாக, எம் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து, கல்வி ஊட்டித் தொழில்பெற ஊக்கிப் பொறுப்பான பிரசைகளாக்கி, அவர்கள் தம் தமது சொந்தக் குடும்ப வாழ்க்கைகளைத் தொடங்கிநடத்த உதவி முடித்திருப்போம். எனவே இன்று அன்னார்க்கு ஆலோசனை உதவிகள் மட்டுமே செய்துகொண்டு, நாம் அவர்களுக்கு ஒருவித பிரச்சினைகளும் கொடுக்காமல் நாமாகவே தனிய வாழமுடியுமானால், அதுவே பாரிய, நீண்ட அமைதி தரும் சாதனையாகும்.  அக் கட்டத்தில், சூழ்நிலையால் வகை கூடிய விபத்துக்களிலிருந்து எம் உடம்புக்குச் சில தீமைகள் ஏற்படலாம்.

மேலும் பொருள், பெயர், புகழுக்கு எம் மனதில் எஞ்சி இருக்கக் கூடிய பேராசைகளினால் எம் பொருட் சேமிப்புகளையும் எம்  நேரத்தையும் சக்தி களையும் தம் சொந்த நலன்களுக்காகக்  குறிவைப்போரிடமிருந்தும் இடர்கள் வரலாம்.  இவை போன்ற பிரச்சினைகளிலிருந்து தப்பி வாழவே தற்காப்பு அவசியம் என்கிறேன்.  ஆனால் இவ்வாறான பிரச்சினைகள் வெளியாரிடம் இருந்து மட்டும் ஏற்படுமென்றும் சொல்லமுடியாது.  பொறுப்பற்ற எம் சொந்தப் பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், இனத்தாரிடமிருந்தும் இவை வரக்கூடும்.

குடும்பத் தொண்டும் சமூக சேவைகளும்
எவ்வளவு தான் நாம் எம் மனத்தைக் கட்டுப் படுத்தி, நாம் பெற்ற மக்களின் நன்மைகளையும் எம் இளைப்பாறலையும் கருதி அவர்களைச் சுதந்திரமாகத் தனித்து வாழ ஊக்கி, அதில் வெற்றியைக் கண்டாலும், அவர்களைப் பற்றிச் சிந்திக்காமல் ஒருநாளேனும் நாம் இருக்க முடியாது.  எனவே, அவர்களுடன் ஓடும்-புளியம்பழமும் போலத் தொடர்பைப் பேணிக் காத்து, ஊக்கங்கள்-ஆலோசனைகளை வழங்கி, வாரத்தில் ஒரு முறையாவது தொடர்பு கொண்டு, மாதம் ஒரு தடவையாவது எமது வீடுகளிலோ அவர்கள் வீடுகளிலோ ஒரு சில மணித்தியாலங்கள் சந்தித்து அளவளாவி எம் பிணைப்பைத் தொடர்தல், இரு பகுதியினரின் வாழ்வையும் பலப்படுத்தும்.  அவர்கள் கேட்கும் விடயங்களில் மட்டும், அதுவும் அவர் கோரும் நேரங்களில் மட்டும் எம் ஆலோசனைகளை வழங்கினால், அவர்கள்வாழ்வில் நாங்கள் தேவையற்றவாறு தலையிடுகிறோம் என்னும் குற்றச்சாட்டுக்கு ஆளாவதைத் தவிர்க்க முடியும். மேலும், அவர்கள் கேட்கும் உதவிகளை, கேட்கும் நேரங்களில், எமக்கும் இயலுமான, சாத்தியமான வழிகளில் சாக்குப்போக்குச் சொல்லாமல் நாம்அளிப்பதற்கு, அவர்களின் கோணத்திலிருந்து முழு மனதுடன் சிந்தித்து, இரு பகுதியினருக்கும் மனத் திருப்தியும் பலனும் வரக்கூடிய முறையில் தெண்டிக்க வேண்டும்.  எம்மால் முடியாத நேரங்களில் எமக்கு ஏன் முடியாது என, உண்மை விளக்கங்களுடன் நேரத்துடன் அவர்களுக்குச் சொல்லிவிடல் அவசியம்.

அதே போல், அக்கம் பக்கத்தினர், இனத்தார், சமூகத்தினரை நாம் முற்றாக மறந்து, துறந்து, வயோதிபத்திலும் வாழ முடியாது.  அவ்வாறு செய்யத் தெண்டித்தால் எம் மன நிறைவு, அமைதி, முதலியன பாதிக்கப் படுவது திண்ணம்.  எனவே நட்பு மனத்துடன், சுயநலமற்ற சிறுசிறு பரஸ்பரச் சேவைகள், கொடுக்கல் வாங்கல் முதலியனவற்றை இயலுமானவாறு, சாத்திய மானவாறு, தொடர்தல் எம் வாழ்வைச் சிறப்பாக்கும். 

ஆகக் குறைந்தது, மேற்கூறிய எல்லாருடனும் சிரித்த-முக வணக்கம், பொது-ஆர்வ விடயங்களைப் பற்றிச் சிறுசிறு சல்லாபங்களை ஒவ்வொருநாளும் நாம் செய்து வந்தால் வாழ்வில் வெறுமையும் விரக்திநிலையும் தனிமையின்பயமும் ஏற்படா.  எம்மால் நிறுவி நடத்த எமக்கு நேரம், இடவசதி, வல்லமை, உண்மைவிருப்பம் இல்லா திருப்பினும், ஏற்கெனவே கிராமங்களில், நகரங்களில், நாட்டில், உலகில் நிறுவி இயங்கும் தொண்டுகளுக்கு நாம் சிறு சிறு தொகைகளைச் சேர்த்துத் தனியாகவோ நண்பர் குழுக்களாகவோ அளிப்பதும் நிறைவு தரும்.

இயற்கை அளிக்கும் இறப்பை, நன்றியுடன் அமைதியாக வரவேற்போம்!
வயோதிப காலத்தில் எம் மனதில் சில நாட்களில் பல தடவை எழுந்து எட்டிப் பார்த்து எம்மைத் துன்புறுத்தும் ஓர் எண்ணம் எதுவெனில், கட்டாயம் நடக்கவிருக்கும் எம் சாவைப்பற்றிய பீதியே.  வயோதிப வாழ்வில் மட்டுமல்ல,  இளமையிலும், இடை-நடு வாழ்விலும் கூட, எம் மனதைத் தெளிவுடனும் தைரியத்துடனும் செயலாற்றச் செய்ய உதவக்கூடிய துணை ஒன்று உண்டு என்றால், அது எம் மரணத்தைப் பற்றிப் பயமின்றி வாழும் பக்குவ நிலையே! ஆனால் எம் மிகப்பெரிய பிரச்சினை என்ன வென்றால், இந்தப் பக்குவ நிலையை அடைவது எப்படி, என்பதே!!  ஒவ்வொருவரும் இப் பக்குவத்தை அடையவே முடியும், என்பது என் திடமான நம்பிக்கை.  ஆனால் அதை அடையும் பாதைகள் ஒவ்வொரு தனிநபர்களின் பிரத்தியேக அம்சங்களில் தங்கியுள்ளன.

முதலில், மரணத்தை நாம் எவ்வாறேனும் தவிர்க்க முடியாது என யதார்த்தமாக நம்பவேண்டும்.  மேலும், அதைப் பற்றியே சதா சிந்தித்துப் பயந்து வாழ்வது மடைமை என்பதையும், மரணம் எப்போதாவது வரட்டும், அதுமட்டும் நாம் எமக்குச் சரியென்று படும் காரியங்களைச் செய்துகொண்டு, முடியுமானவாறு, இயலுமான நீதி-வழிகளில் நாம் மகிழ்வுடன் வாழ்வோம், மரணத்தின் பின் எமக்கு ஒரு துன்பஉணர்வோ பயமோ ஏற்படாது,  எனும் உண்மைகளையும் நம்பவேண்டும்.  தெய்வ நம்பிக்கையுடன் நாளாந்தம் பிரார்த்தனை செய்தும் இந்நிலையைப் பெறலாம்.

வயோதிபத்திலும் நாளாந்த வேலைத்திட்ட நிரல்கள்  வேண்டும்
எப்போதும் முயற்சி செய்து கொண்டே வாழ்பவர்கள் தமக்குக் கவலைகள் ஏதும் இல்லாதவர்கள் போல் நடப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள்.  இது உண்மையே.  ஏனெனில் எமக்குஎத்தனையோ பிரச்சினைகள், ஆசைகள் இருக்கின்றனவே? அவற்றில் எதை நாம் முதலில் தொடங்கி முடிப்பது, போன்ற சந்தேகக் குழப்பங்கள், தொடர்ந்த கவலையையே எமக்குத் தரும்.

எனவே வயோதிபத்திலும், இரவில் சயனிக்குமுன் அடுத்தநாள் என்னென்ன வேலைகளை எந்தெந்த வரிசையில் செய்து முடிப்பதென ஒரு நிரலை மனத்திலோ எழுத்திலோ படம்போட்டு வைப்பது எமக்குக் கவலையைக் குறைத்து, சுறுசுறுப்பையும் கூட்டும்.  ஒன்றிரண்டை முதலில் செய்துமுடித்த பின்னர் மிஞ்சியிக்கும் வேலைகளை முன்பின்னாகவும் செய்யலாம். 

ஆனால் நிரல்செய்வது என்றும் நன்று.  இரவுநித்திரையில், அனேகமாக நாம் சிந்தித்துத் தெண்டிக்காமலே, அக்காரியங்களைச் செய்து முடிக்கும் வழிகள் தோன்றி வருவதையும் நாம் காணலாம்.

உணவுக் கட்டுப்பாடுகளும் தேகாப்பியாசமும் சயனமும்
வயோதிபத்தில் நாம் எதை உண்கிறோம், எவ்வளவு உண்கிறோம், எத்தனை தடவை உண்கிறோம் என்றெல்லாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எமக்கு அக்கட்டத்தில் அதிக உணவு தேவையே இல்லை.  ஏனெனில் நாம் ஓடியாடி அதிக வேலை செய்யப் போவதில்லை.  எம் உடம்பும் சில உணவுகளை அதிகஅளவுகளில் சீரணிக்கச் சிரமப்படும். 

எனவே வைத்தியர் களின் ஆலோசனைக்கு உட்பட்டு, புரத உணவு, கொழுப்புணவு, சீனி-ரக-உணவு, விற்றமின்கள், தாதுப்பொருள்கள் உள்ள உணவுகளை உசித விகிதங்களில், குறைத்து உண்ணுதல் அவசியம்.  அதிகளவு உப்பையும் சீனியையும் தவிர்த்து, கூடிய அளவு பழங்கள், இலை, காய்கறிகள் உண்பது நன்று.  நாளாந்தம் சிறிதளவு மதுபானமும் நன்றே அன்றித் தீமையில்லை, ஆனால் அவசியமும் இல்லையென, வைத்தியர்கள் கூறுகின்றனர்.

அத்துடன் நாம் நாளாந்தம் போதிய தேகாப்பியாசம் செய்தலும் அழகைப் பேணுதலும் எம்மைச் சுகாதாரத்துடன் நீண்டகாலம் வாழ உதவும்.  தினமும் 1-2 மைல்கள் சுறுசுறுப்பாக நடத்தல், நீச்சல் செய்தல், அவயவங்களை நோவின்றிச் சுலபமாக இயங்கவைக்கும் சில தேகாப்பியாசங்களை வாரத்தில் 2-3 தடவை யாவது செய்தலும் மிக உதவும். மேலும், நாளாந்தம் 6-9 மணிகளுக்கு நிம்மதியாகத் தூங்கினால், எமது உடம்பு தன்னைத் தானே பழுது பாhத்து, நாளாந்தம் நடக்கும் அவயவச் சேதங்களை றிறைவாக்கவும் உதவும். 

நடுநிசிக்குமுன் தூங்கச் சென்று சூரியோதயத்துடன் எழுவதும், மதியத்தில் 30-60 நிமிடம் சார்மனையாக அல்லது கட்டிலில் படுத்து ஆறுவதும், வயோதி பர்களுக்கு நோயின்றிவாழ உதவும் என்பதும் பொது அனுபவம்.

வயோதிபத்தில் தாம்பத்திய வாழ்க்கை
தம்முடன் தமது தம்பதிகள் சேர்ந்து வாழும் அதிர்ஷ்டக்கார வயோதிபர்கள், இருவரின் வல்லமை, விருப்பங்களுக்கு அமைய, பாலியலில் ஈடுபடுதல் ஆரோக்கிய ரீதியில் உதவுமேயன்றிக் கெடுதல்கள் ஒன்றும் ஏற்படா, என அறிதல் நலம்.  சமய ஈடுபாடுகள் கூடவுள்ளோர் வயோதிபர் பாலியலைத் துறக்கவேண்டும் என நம்புதல் மடைமையே என பல வைத்திய ஆராய்ச்சி யாளர்கள் கருதுகின்றனர்.  நீண்டகாலம் வாழ்ந்த ஆண், பெண், இருபாலா ரினதும் அனுபவமும் அதையே பிரதிபலிக்கிறது.

நோயற்று வாழ்தல்
மேலே கூறியுள்ளவற்றையும் பின்வரும் கோட்பாடுகளையும் பின்பற்றி வாழ்ந் தால் சாதாரணமாக, வயோதிபர்கள் நோயின்றி வாழ்தல் சாத்தியம்.  எனினும் ஆபத்துக் குறிகள் ஏதும் உடம்பில் தோன்றினால், உடனே வைத்தியரிடம் காட்டத் தயங்கக்கூடாது.  தொற்றுநோய்கள், கிருமித்தாக்குதல்கள் எவருக்கும் எப்போதும் நடக்கமுடியும்.  வயோதிபத்தில் முதற் கடமை: நோயின்றிச் சுகா தாரம்பேணலே, என்பேன்.

எதையும் தாங்கும் மனோநிலையின் முக்கியத்துவம்
வயோதிபத்தில், எதையும் தாங்கும் மனோ நிலையை நாம் ஏற்படுத்திக் கொள்ளல் முக்கியம்.  மேற்கூறியவாறு மரணத்தின் பயத்தை வென்றவுடன், எதையும் தாங்கும் மனோநிலை தானாகவே வரும்.  மேலும், வரக் கூடிய தோல்விகள், இழப்புக்கள், நட்டங்களைக் கற்பனை செய்து ஒவ்வொருநாளும் பயந்து சாகாமல், வரவிருக்கும் சம்பவங்கள், நிகழ்ச்சிகளின் சிறப்பு அம்சங் களையும், எதிர்பாராமல் கிடைக்கக் கூடிய நன்மைகள், இலாபங்களையும் சிந்தித்து கற்பனை செய்து எம் மனோதைரியத்தைக் கூட்டிக்கொள்ளப் பழகுதல், நலம். வாழ்க்கையில் வெற்றியும்தோல்வியும், பார்ப்போர் கண்களி லேயே கூடத் தங்கியிருக்கின்றன என்பதை நாம் என்றும் மறக்கப் படாது.

கடைசிமட்டும் பொருளாதரச் சுதந்திரத்தைப் பேணுதல்
எமது மரணத்தின் பின் எம் சொத்துக்கள் எந்தெந்த விகிதத்தில் எவர்எவருக்குச் சேர்மதி ஆகவேண்டும் என்றும், எமது மரணக் கிரியைகள் எப்படி நடக்க வேண்டும் என்றும், எமது மரண சாசனத்தை [Last Will] நேரத்துடன் எழுதிப் பத்திரமாக வைத்துவிட்டு, அதன்பின் அதைப் பற்றிச் சிந்திக்காதிருத்தல் எம் மனஆறுதலுக்கு உதவும்.  ஆனால் எம் சொத்துக்களில் தேவையானவற்றையாவது வைத்து, எம் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பாதுகாற்காமல் எல்லாவற்றையும் நேரத்துடன் எம் வாரிசுகளுக்கு (உ-ம்: அவர்களின் மணங்களின் போது) எழுதிக் கொடுத்து விட்டு அதனால் அவர்கள் எம்மை எம் எஞ்சியுள்ள வாழ்வின் கடைசிவரை கைவிடாமல் பார்ப் பார்கள் என நம்புவது, இரு பகுதியினருக்கும் பிரச்சினைகளையே தேடிக் கொள்ளும் விவேகம் குறைந்த, உலக அனுபவத்துக்கு எதிரிடையான செயலாகும்.

வயோதிபத்திலும், இறந்தபின்னரே இளைப்பாறல்! அது தானாக வருவது!!
50-65 வயதின் பின்னர் ஒருவிதமான பொறுப்புள்ள முயற்சியும் எடுக்காமல் வீட்டு வேலைகளை மட்டும் செய்து கொண்டு தொலைக்காட்சியுடனும் புதினப் பத்திரிகை, சீட்டுவிளையாட்டு, ஊர்சுற்றுதல், திருமணங்கள், செத்தவீடுகள் செல்லல், இலவச அரங்கேற்றங்கள், கலைநிகழ்ச்சிகள் பார்த்தல் முதலிய வற்றில் தங்கள் நேரத்தைச் செலவிடுவதையே வயோதிபர் செய்ய வேண்டும் என்பது பலரின் கொள்கையாகும்.  அப்படி நம்பி நடப்பவர்கள் உண்மையில் நிம்மதியும் தன்னிறைவுமின்றி அலைந்து திரிந்து கெதியில் நோய்வாய்ப்பட்டு இறப்பதையே நடைமுறையில் காண்கிறோம்.

ஆனால் நாம் முன்னர் விவரித்த கொள்கைகளுடன், தம் பிள்ளைகளுக்குக் கிட்ட ஆனால் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டு, தமக்கும் உலகுக்கும் பலன் தரும் ஏதும் துறைகளில் முழு மூச்சாக ஆனால் சுகாதாரத்துக்கு இடைஞ்சலோ ஆபத்தோ ஏற்படா வண்ணம் சுறுசுறுப்பாக வேலைசெய்துகொண்டு தம் தற்போதைய திறமைகள் வலிமைகளை முழுவனே பாவித்து நாளாந்தம் தன்னிறைவு பெற்றுவந்தால், நீடூழி வாழ்வார்கள் என்பது என் திடமான நம்பிக்கை.  தம் இளைய பருவங்களில் செய்ய விரும்பிய, ஆனால் வசதிகள், சந்தர்ப்பங்கள் கிடைக் காதபடியால் செய்யமுடியாது இருந்த காரியங்களைச் செய்ய முயல்வதற்கும் வயோதிபம் இடம் தரக் கூடியது.

முடிவு
வயோதிபத்தில் நாம் குரோதங்கள், காழ்ப்புணர்வுகள், பேராசைகளைத் துறந்து, பொறுமையைப் பேணி, மற்றைய எல்லோரையும் வாழவிட்டு நாமும் வாழப் பழகல் நலம்.  எமது பழையை சாதனைகளையும் வாழ்க்கை வரலாற்றையும் மற்றையோர் காதுகளும் மனங்களும் புண்ணாகும்படி திரும்பத் திரும்பப் பறை தட்டுவதை விட்டு மற்றையோரின் வெற்றிகளைப் புகழ்ந்து மேலும்மேலும் அவர்களை ஊக்கவேண்டும்.  முடியுமானவரை தரும நோக்குள்ள காரியங்களில் ஈடுபட்டு மனநிறைவு பெற முயல வேண்டும்.  இவற்றையும், மேற் கூறியவற்றையும் கடைப் பிடித்தால் வயோதிபர்கள் மகிழ்வுடனும் மன நிறைவுடனும் நீண்டகாலம் வாழலாம் எனத் திடமாக நம்பலாம்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Thursday, 02 February 2017 20:25