'இணையத்தமிழ் : இணைய இதழ், வலைப்பூ, மின்னூல் மற்றும் சமூக வலைத்தளம் பற்றியதொரு பார்வை'

Tuesday, 28 July 2015 19:02 - வ.ந.கிரிதரன் - கணித்தமிழ்
Print

- 25.07.2015 அன்று 'டொராண்டோ' தமிழ்ச்சங்கத்தில் நடைபெற்ற 'கணினித்தமிழ் வரலாறும், வளர்ச்சியும்'  என்ற  நிகழ்வில் 'இணையத்தமிழ் : இணைய இதழ், வலைப்பூ, மின்னூல் மற்றும் சமூக வலைத்தளம் பற்றியதொரு பார்வை' என்னும் தலைப்பில் ஆற்றிய உரையிது. சுருக்கமாக மேற்கூறிய விடயங்களை ஆராய்கிறது. நிகழ்வில் நேரம் காரணமாகச்சில விடயங்களை முழுமையாக வாசிக்க முடியவில்லை. வாசித்த கட்டுரையின் முழு வடிவம் இங்கு ஒரு பதிவுக்காக பிரசுரமாகின்றது. - வ.ந.கி -

வாசிப்பும், யோசிப்பும் - வ.ந.கிரிதரன்

கணித்தமிழ், கணினித்தமிழ், இணையத்தமிழ் என்று பல்வேறு சொற்தொடர்களால அழைக்கப்பட்டாலும் இச்சொற்தொடர்களெல்லாம் ஒரு பொருளையே சுட்டுகின்றன. கடந்த இருபது வருடங்களில் இணையத்தமிழ் பல்வேறு துறைகளிலும் காத்திரமாகக்கால்பதித்து ஆரோக்கியமாக வளர்ந்துள்ளது. இணையத்தமிழின் வளர்ச்சி நம்பிக்கையூட்டுவது. மகிழ்ச்சியினைத்தருவது. ஆனால் , இணையத்தின் சகல ஆரோக்கியமான அம்சங்கள் பலவற்றை கலை, இலக்கியத்துறையிலுள்ளவர்கள் அனைவரும் முறையாகப் பாவிக்கின்றார்களா? பாவித்துப் பயனடைகின்றார்களா? என்று பார்த்தால் கிடைக்கின்ற பதில் ஏமாற்றமே. இங்குள்ள எத்தனை பேர் வலைப்பூக்களை வைத்திருக்கின்றீர்கள்? எத்தனைபேர் மின்னூல்களைப் பதிப்பித்திருக்கின்றீர்கள்? எத்தனைபேர் இணைய இதழ்களில் எழுதுகின்றீர்கள்? எத்தனைபேர் இணைய இதழ்களை நடாத்துகின்றீர்கள்? இன்று கூட இணையத்தில் தமிழில் எழுதத்தெரியாதவர்கள் பலர் இருக்கின்றார்கள். பாமினி எழுத்துருவில் எழுதியதை ஒருங்குகுறி எழுத்துக்கு மாற்றத்தெரியாதவர்கள் இருக்கின்றார்கள்? இன்று விண்டோஸ் போன்ற 'ஒபரேட்டிங் சிஸ்டம்' எல்லாம் ஒருங்குறியை மையமாகக்கொண்டே இயங்குகின்றன. இருந்தும் MSWord போன்ற விண்டோஸ் அப்ளிகேசன்களில் தமிழில் எழுத எத்தனை பேருக்குத்தெரியும்? இணையத்தில் பலருக்குத் தமிழ்ப்பாட்டுகளைக் கேட்பதும், முகநூலில் புகைப்படங்களை இடுவதும் போன்ற செயற்பாடுகளுடன் பொழுது முடிந்துவிடுகின்றது. இதற்கு முக்கிய காரணம் இணையத்தொழில்நுட்பம் வழங்கும் பயன்கள் பற்றிய பூரண அறிவில்லாமலிருப்பதும், அவற்றை எவ்விதம் பாவிப்பது என்பதுபற்றிய தெளிவில்லாமலிருப்பதும்தான் என்று கருதுகின்றேன்.

கடந்த பல வருடங்களாக தமிழகம், மலேசியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பல கணினித்தமிழ் பற்றிய ஆய்வரங்குகள் பல நடைபெற்றிருக்கின்றன. கலந்துரையாடல்கள், கருத்தரங்குகள் பல நடைபெற்றிருக்கின்றன. அந்த வகையில் 'டொராண்டோத்தமிழ்ச்சங்கத்தினர்' நடாத்தும் இந்தக்கருத்தரங்கும் முக்கியமானதோர் ஆரம்பம். மாதாமாதம் இதுபோன்று பல்துறைகளில் கருத்தரங்குகள் நடாத்தி வருவதன் மூலம் ஆரோக்கியமான செயற்பாட்டினைச்செய்துவரும் டொராண்டோத்தமிழ்ச்சங்கத்தினருக்கு எனது பாராட்டுகளைத்தெரிவித்துக்கொள்கின்றேன்.

இணையத்தமிழ் பற்றிச் சுருக்கமான அறிமுகத்தைத்தருவதும், அவற்றைப்பாவித்து பயன்களை எவ்விதம் அடைவது என்பது பற்றியும், இணையத்தமிழின் வளர்ச்சிக்காக இணையத்தொழில் நுட்பம பற்றிய அறிவினை மேலும் எவ்விதம் அதிகரிப்பது என்பது பற்றியும் பார்ப்பதே இக்கட்டுரையின் முக்கியமான நோக்கம்.

இணையத்தமிழ் பற்றிய சுருக்கமான அறிமுகம்.

இணையத்தமிழ் பற்றிக்குறிப்பிடும் முனைவர் மு.பழனியப்பன் "ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எண்பதாம் ஆண்டு முதல் கணினியில் தமிழ் இடம் பெற ஆரம்பித்தது. ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொண்ணூற்று ஐந்தாம் ஆண்டு முதல் தமிழ் இணையத்தில் உலாவர ஆரம்பித்தது. இணையத்தில் தமிழ் இடம் பெற்று ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் ஆகிவிட்ட இந்த சூழலில் அதன் வளர்ச்சி குறிக்கத்தக்க இடத்தைப் பெற்றுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர் வரை கணினி அல்லது இணையம் தமிழை வளர்க்க ஒரு துணை கருவியாகப் பயன்பட்டு வந்தது. ஆனால் தற்போது கணினித் தமிழே தனித் துறையாக வளர்ந்து வருகிறது. ஆங்கில வழியாகக் கற்ற கணினித் தொழில் நுட்ப வல்லுநர்கள் மெல்லத் தமிழில் நுழைந்து தொழில் நுட்பங்களைத் தமிழ்ப் படுத்தித் தமிழ இணையத்தை வலுப் பெறச் செய்து வருகின்றனர்" என்பார்.

இணையத்தில் தமிழினால் அதாவது இணையத்தமிழினால் ஏற்படும் முக்கியமான நன்மை பற்றிக்குறிப்பிடும் அவர் "கல்வெட்டுக்களிலும், ஓலையிலும், காகிதத்திலும் உலா வந்த தமிழ தற்போது வலையேறி இணையத்தில் இணைந்துள்ளது. இதன் காரணமாக வெள்ளத்தில் அழியாமல், வெந்தணலில் வேகாமல், கள்வரால் கொள்ளப்படாமல் காக்கின்ற நிலைபெற்ற தன்மைக்குத் தமிழ் வந்துவிட்டது." என்பார்.

இணையத்தின் முக்கியமான அம்சங்களாக தேடுபொறிகள், நூலகங்கள், கலைக்களஞ்சியங்கள், இணைய இதழ்கள், மின்னூல்கள், சமூக ஊடகங்கள் மற்றும் வலைப்பூக்கள் ஆகியவற்றைக்குறிப்பிடலாம். இவை அனைத்தையும் தமிழ் மொழி மூலம வாசிக்கும் வகையில் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது. சுருக்கமாகத்தமிழ் எவ்விதம் இத்தொழில்நுட்பங்களில் நுழைந்து சிறந்து விளங்குகின்றதென்பதைப்பார்ப்போம்.

நூலகங்கள் மற்றும் கலைக்களஞ்சியங்கள்!

இணையத்தொழில்நுட்பத்தின் வாயிலாக இணையத்தில் தமிழ் நூலகங்கள் , கலைக்களஞ்சியங்கள் போன்றவை விளங்குகின்றன. தமிழகத்தமிழர்கள், மற்றும் உலகின் பல பாகங்களிலும் வாழும் தமிழர்கள் எனப்பலராலும் இவ்வகையான நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வகையான நூலகங்களுக்கு ஆக்கங்களைத் தட்டச்சு செய்து அவற்றை நூல்களாக்கிப்பதிவேற்றுவதென்பது மிகவும் நேரத்தை எடுத்துக்கொள்ளும் பணி. பல தன்னார்வத்தொண்டர்களின் சேவையினால் இப்பணி சாத்தியமாகியுள்ளது.

இவ்வகையான நூலகங்களினால் என்ன பயன் என்று பார்த்தால் முக்கியமான பயன்களாகப் பின்வருவனற்றைக் கூறலாம்.

* சங்க காலத்து இலக்கியங்கள் தொடக்கம், தற்கால இலக்கியப்படைப்புகள் வரையில் நூல்களை அதிக அளவில் இவ்வகையான நூலகங்களில் சேகரித்து வைக்க முடியும். இவ்வளவு நூல்களையும் வீடுகளில் சேர்த்து வைப்பதென்பது மிகுந்த இடத்தை அடைத்துக்கொள்ளுமென்பதால் பலருக்குச் சாத்தியமாகாத விடயமது. மேலும் இந்நூல்கள் அனைத்தையும் வாங்கி வைப்பதென்றால் மிகவும் செலவான விடயமது. ஆனால் இந்நூல்களை ஆயிரக்கணக்கில் மிகவும் இலகுவாக இணையத்தில் சேகரித்து வைக்க முடியும். இதனால் அச்சு நூல்களைப் பாவிக்கும் நிலை குறைவடைகின்றது. இது சூழலுக்குத் தொலை நோக்கில் மிகுந்த பயனுள்ளது.

*  இந்நூலகங்கள் வாயிலாக வருடத்தில் எந்த நாளிலென்றாலும், எந்த நேரத்திலென்றாலும் இங்கு காணப்படும் நூல்கள், சஞ்சிகைகளை வாசிக்க முடியும். பொதுவாக நூலகங்களை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே பாவிக்க முடியும்.

* கலை, இலக்கியம் பற்றிய பல்வேறு ஆய்வுகளுக்கு இந்நூலகங்கள் மிகுந்த உதவியாக இருக்கின்றன. உதாரணமாக நூலகம் மற்றும் படிப்பகம் ஆகிய இணைய நூலகங்களில் மல்லிகை, சிரித்திரன், கலைச்செல்வி, மல்லிகை, தாயகம் (கனடா), தேடல் (கனடா), வைகறை (கனடா), சுவடுகள் (நோர்வே), உயிர்நிழல் (பிரான்சு) , ழகரம் (கனடா) போன்ற பல சஞ்சிகைகளைச் சேகரித்து வைத்திருக்கின்றார்கள். ஈழத்தமிழர்களின் (புலம் பெயர்ந்த தமிழர்களையும் உள்ளடக்கி) படைப்புகள் (புனைவுகள், அபுனைவுகள்)  பல இந்நூலகங்களில் சேகரித்து வைக்கப்பட்டுள்ளன.

* மின் நூலகங்களை அமைப்பதற்குச் செலவு அதிகமில்லை. இணையத்தளமொன்றினை உருவாக்கி இயக்குவதற்குரிய சேவையினை  இணைய சேவை வழங்குநர் ஒருவரிடமிருந்து இலவசமாக அல்லது மிகவும் குறைந்த செலவில் பெற்றுக்கொள்ள முடியும். இணையப்பக்கங்களை அமைப்பதற்குரிய தொழில்நுட்ப நிபுணர்களின் உதவியினைப் பெரும்பாலும் தன்னார்வத்தொண்டு அடிப்படையில் பெற்று நூலகங்களை அமைத்துக்கொள்ள முடியும்.

* இவ்விதமான நூலகங்களின் சேவையினை இலட்சக்கணக்கான மக்கள் உலகின் பல பாகங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ள முடியும்.

இதுபோன்ற பல காரணங்களைக் கூற முடியும். உதாரணத்துக்குச் சில முக்கியமான நூலகத்தளங்களைப் பார்ப்போம்.

* மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம் (Project Madurai) | இதற்குரிய இணையத்தள முகவரி: http://www.projectmadurai.org/

இத்திட்டம் பற்றி இத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அறிமுகத்தின்படி 1998இல் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் எந்தவித அரசாங்க மற்றும் தனியார் நிறுவன உதவியின்றி , வியாபார நோக்கற்று , தன்னார்வத்தொண்டர்களின் சேவையினால் உருவாகிப்பராமரிக்கப்பட்டுவரும் திட்டம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆரம்ப காலத்தில் இணைமதி, மயிலை தமிழ் எழுத்துகள் பாவிக்கப்பட்டு மின்பதிப்புகள் உருவாக்கப்பட்டாலும் 1999ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தகுதர  அதாவது 'திஸ்கி' (TSCII - Tamil Script Code for Information Interchange) எனப்படும் எழுத்துருகொண்டு உருவாக்கப்பட்ட மின்பதிப்புகளும், 2003ஆம் ஆண்டிலிருந்து ஒருங்குக்குறி (Unicode) எழுத்துருகொண்ட மின்பதிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.

இத்திட்டதிலுள்ள மின்பதிப்புகள் இணையப்பக்க வடிவிலும் (HTML Format), PDF வடிவிலும் காணப்படுகின்றன.  இவற்றை நீங்கள் இணையத்திலேயே வாசித்துக்கொள்ளலாம் அல்லது உங்கள் கணினிகளுக்குப் பதிவிறக்கிச் சேமித்துத் தேவையானபோது வாசித்துக்கொள்ளலாம்.

இத்திட்டத்தில் காணப்படும் நூல்களில் சில: திருக்குறள், அவ்வையார் நூல்கள், திருவாசகம் போன்ற சமய நூல்கள், நளவெண்பா, பாரதியார் பாடல்கள், சிலப்பதிகாரம், புறநானூறு, இருபதாம் நூற்றாண்டு ஈழத்தமிழ் இலக்கியம், கல்கியின் பொன்னியின் செல்வன், சிவகாமியின் சபதம், பார்த்திபன் கனவு, ஜெயகாந்தனின் சிறுகதைத்தொகுதிகள் மூன்று, கம்பராமாயணம், நா.பார்த்தசாரதி நாவல்கள் (பாண்டிமாதேவி, சமுதாய வீதி இவ்விதம் 512 நூல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.

* சென்னைநூலகம்.காம் | இதற்குரிய இணையத்தள முகவரி: http://www.chennailibrary.com/index.html
2006 செப்டம்பர் 25 ஆரம்பமாகிய இந்நூலகம் தமிழ் நூல்களை முற்றிலும் இலவசமாக வழங்குவதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பாகும். கோ.சந்திரசேகரனால் நடாத்தப்பட்டுவரும் இந்நூலகத்தின் ஆரம்பக்காலகட்டத்தில் ஆலோசனைகள் கூறி உதவிய தேன்கூடு நிறுவனரான திரு.சாகரன் அவர்களின் பங்களிப்பு முக்கியமானதென்பதைத தளம் பற்றிய அறிமுகத்தில் குறிப்பிடடப்பட்டுள்ளது. 2009ஆம் ஆண்டிலிருந்து இத்தளமானது  "கௌதம் வெப் சர்வீசஸ்" (Gowtham Web Services) நிர்வாகத்தின் கீழ் இயங்கி வருகின்றதென்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இத்தளத்தில் பழந்தமிழ் இலக்கியங்கள் (எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண் கீழ்க்கணக்கு, ஐம்பெருங்காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள், சைவ சித்தாந்த நூல்கள், இலக்கண நூல்கள், கம்பராமாயணம் போன்ற்) தொடக்கம் தற்கால இலக்கியப்படைப்புகள் வரை (ராஜம் கிருஷ்ணன் படைப்புகள், நா.பார்த்தசாரதி, சு.சமுத்திரம், புதுமைப்பித்தன், கல்கி, அறிஞர் அண்ணா, ந.பிச்சமூர்த்தி போன்றோரின் பல படைப்புகள்) இத்தளத்தில் இலவசமாக வாசிக்க முடியும். பதிவிறக்கிக்கொள்ள முடியும். அதே சமயம் இந்நூலகத்தில் உறுப்பினர்களாகச் சேருவதன் மூலம் இந்நூலகத்தின் அனைத்து மின்னூல்களையும் இலவசமாகப்பதிவிறக்கிக்கொள்ள முடியும். அத்துடன் கெளதம் பதிப்பக வெளியீடுகளை 20% தள்ளுபடி விலையில் பெற்றுக்கொள்ளவும் முடியும். உறுப்பினர்களிலும் பல்வேறு வகையான பிரிவுகள், ( அடிப்படை உறுப்பினர் / சிறப்பு உறுப்பினர் / கெளரவ உறுப்பினர் ) உண்டு.

இத்தளத்தில் தேடுதலுக்காக தேடுபொறி வசதியும் அமைக்கப்பட்டுள்ளது.

* முக்கியமான இன்னுமொரு தளம் தமிழ் இணையக்கல்விக்கழகம் ஆகும். முன்னர் தமிழ் இணையப்பல்கலைக்கழகம் என்றழைக்கப்பட்ட தளம்தான் இன்று இவ்விதம் மாறியுள்ளது.

இத்தளத்தின் நூலகத்தில் நூல்கள்,அகராதிகள், கலைச்சொற்கள், சுவடிகள், நிகண்டுகள், சுவடிக்காட்சியகம், பண்பாட்டுக்காட்சியகம் என்ற பிரிவுகளுண்டு. இத்தளத்தில் தேடுபொறி வசதியுமுண்டு.

நூல்களைப்பொறுத்தவரையில் இலக்கணம், சங்க இலக்கியம், காப்பியங்கள், இருபதாம் நூற்றாண்டு கவிதைகள் / உரைநடைகள், நாட்டுப்புற இலக்கியங்கள், சிறுவர் இலக்கியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள், மற்றும் அகராதிகள், நிகண்டுகள் போன்ற பிரிவுகளில் நூற்றுக்கணக்கில் நூல்களூள்ளன. இது தவிர பல்வேறு வகையான கற்கை நெறிகளில் கல்வி கற்றும் பட்டங்கள் பெறும் வசதிகளையும் கொண்டது. இத்தளத்தின் இணையத்தள முகவரி:  http://www.tamilvu.org/

இவை தவிர மேலும் முக்கியமான இரு தளங்கள் ஈழத்தமிழர்களால் நடாத்தப்பட்டு வருவது. நூலகம் ( http://www.noolaham.org ) , படிப்பகம் ஆகிய இணைய நூலகங்கள் ஆகும். நூலகம் தளத்தின் இணையத்தள முகவரி: http://www.noolaham.org  இத்தளத்தில் நூல்கள், சஞ்சிகைகள், பத்திரிகைகள், பிரசுரங்கள் ஆகியன எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள், வெளியிட்ட ஆண்டு ஆகிய பகுப்புகளில் பிரித்து வெளியிட்டுள்ளார்கள். மேலும் தளத்திலுள்ள விடயங்களை மலையக ஆவணகம், முஸ்லீம் ஆவணகம், இதழகம், வாசிகசாலை, சுவடியகம், நிறுவனங்கள், ஆளுமைகள் போன்ற பல உபபிரிவுகளில் இலகுவாகப்பெறும் வசதியினையும் செய்துள்ளார்கள். தளத்தின் செயற்பாடுகளுக்குப் பல்வேறு வழிகளில் உதவிய தன்னார்வத்தொண்டர்கள் பற்றிய விபரங்களையும் தொகுத்து வெளியிட்டுள்ளார்கள். ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகள், வெளிவந்த சஞ்சிகைகள் போன்றவற்றை இந்நூலகத்தில் வாசிக்கலாம். எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளையும் அனுப்பி வைக்கலாம். தங்கள் தளத்தின் நோக்கம் "நூலகத் திட்டம்: இலங்கைத் தமிழ் எழுத்தாவணங்களை மின்வடிவாக்கிப் பாதுகாத்து அவற்றை எவரும் எப்போதும் இணையத்தில் இலகுவாகப் பெற்றுப் படிப்பதற்கு ஏற்றவண்ணம் வெளியிடும் ஓர் இலாப நோக்கற்ற தன்னார்வக் கூட்டு முயற்சி." என்று குறிப்பிடும் நூலகக்குழுவினரின் சேவை பாராட்டுதற்குரியது.

இது போன்ற இன்னுமொரு நூலகம்தான் 'படிப்பகம்" இணையத்தளமும் ஆகும். இதன் இணையத்தள முகவரி: http://padippakam.com/  இப்படிப்பகத்தில் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காகப்போராடிய அரசியல் அமைப்புகளின் பிரசுரங்கள், வரலாற்றுப்பதிவுகள், புலம் பெயர் தமிழர்களினால் வெளியிடப்பட்ட சஞ்சிகைகள் பலவற்றின் pdf வடிவப்பிரதிகள், மார்க்சிய நூல்கள், இயக்கங்கள், தமிழ் அரசியல் கட்சிகள் பற்றிய விபரங்கள் என படைப்புகள் பலவற்றை படிக்கலாம்.

இங்கு இன்னுமொருவரின் இணையத்தளத்தினையும் நிச்சயம் பதிவிட வேண்டும். பொள்ளாச்சி நசனின் 'தமிழம்' என்ற தளத்தினைத்தான் கூறுகின்றேன். இணையத்தள முகவரி: http://www.thamizham.net/ 1903 ஆம் ஆண்டிலிருந்து வெளியான சிற்றிதழ்கள் பலவற்றின் பட்டியல்கள், 31,000 வரையில் மின்னூல்கள் (பிடிஃப் கோபபாக) என மேலும் பல அரிய கதவல்களுடன் விளங்கும் தளமிது.

தமிழ் விக்கிபீடியாவும் மறக்கப்பட முடியாத தளங்களிலொன்று. கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவின் தமிழ் வடிவமிது. இதன் இணையத்தள முகவரி:

இவை போன்ற மேலும் பல முக்கியமான இணையத்தளங்கள் இருக்கும்; இருக்கலாம். எல்லாவற்றையும் விரிவாக இங்கு கூற முடியாது. எனக்கு  முக்கியமானவை என்று பட்டவற்றையே இங்கு தந்துள்ளேன்.

இணைய இதழ்கள் மற்றும் வலைப்பூக்கள் பற்றி....

இணைய இதழ்களைப்பற்றிக்குறிப்பிடுகையில் இணையத்தில் மட்டுமே வெளிவரும் இதழ்களூள்ளன; அச்சூடகங்களின் இணையப்பதிப்புகளுமுள்ளன. அவையும் இணையத்தில் வெளிவரும் இதழ்கள்தாம். இருந்தாலும் இணையத்தில் மட்டுமே வெளியாகும் இதழ்களை மட்டுமே இணைய இதழ்கள் என்று அழைக்கும்போக்கு தமிழ் அறிஞர்களிடையே நிலவுகின்றது. சு. துரைக்குமரன் பி.லிட் , எம்.ஏ அவர்களும் 'தமிழ் இணைய இதழ்கள் ஒரு முன்னோட்டம்' என்ற கட்டுரையில் :அச்சு இதழ்களி¢ல் பேர்போன இதழ்களும் தங்கள் இதழ்ப்பகுதிகளை இணையவழியாகத் தந்து வருகின்றன. அவற்றை மீள்பிரசுரம் என்பதாகக் கருத இயலுமே தவிர இணைய இதழ்களாகக் கருதத் தகாது." என்று கூறுவார். இணையத்தில் மட்டுமே வெளிவரும் இதழ்கள்தாம் இணையத்தில் தமிழை முதலில் ஏற்றின. அந்த அடிப்படையிலேயே இணைய இதழ்கள் பற்றி இக்கட்டுரையாளரின் கருத்துமுள்ளது.

இணையத்தொழில்நுட்பம் வெளிவருவதற்கு முன்னர் ஒரு சஞ்சிகையினை வெளிக்கொணர்வது மிகுந்த பொருட் செலவு மிக்கது. அவ்விதம் வெளியாகும் சஞ்சிகைளும் கூட 500 அல்லது 1000 பிரதிகள் வரையில் அல்லது இவற்றிலும் குறைவான எண்ணிக்கையிலேயே அச்சடிக்கப்படுவதும் வழக்கம். இவ்விதம் வெளியாகும் சஞ்சிகைகள் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே நின்று விடுவது வழக்கம். ஆனால் இணையம் இந்த நிலையினை மாற்றியது. கலை, இலக்கியத்தில் ஆர்வம் மிக்க ஒருவர் , இணையத்தொழில் நுட்பமும் அறிந்திருந்தால் , அத்துடன் நோக்கத்தில் அர்ப்பணிப்பும் இருந்தால் தனித்து ஒருவராலேயே இணைய இதழொன்றினைக் கொண்டுவரமுடியும். அதற்குதாரமாக நான் என்னையே கூறுவேன். 2000ஆம் ஆண்டிலிருந்து 'பதிவுகள்' இணைய இதழ் வெளிவருகின்றது. உலகின் பல பாகங்களிலிருந்தும் பதிவுகள் இணைய இதழுக்குத் தீவிர வாசகர்கள் இருக்கிறார்கள். தமிழகத்தில் அதிகமான வாசகர்களிருக்கிறார்கள். பல படைப்பாளிகளுக்குப் பதிவுகள் களமைத்துக்கொடுக்கிறது. தமிழகப் பல்கலைக்கழகங்களில் பதிவுகள் இணைய இதழுக்கு மிகுந்த மரியாதையும், வரவேற்புமுண்டு. அதனால்தான் பதிவுகள் இணைய இதழுக்குத் தமிழகத்துப் பல்கலைக்கழகங்களிலிருந்து ஆய்வுகள் கட்டுரைகள் அனுப்பப்படுகின்றன. இதனைச் சாதிக்க வைத்தது இணையம்தான். இங்கிருக்கும் நீங்களும் இது போன்ற இணைய இதழ்களை நடத்த முடியும். ஆர்வமிருந்தால், அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பிருந்தால் நிச்சயம் மிகவும் இலகுவாக இணைய இதழொன்றினை நடாத்திட முடியும்."

இணைய இதழ்களைப்பற்றி 'இணையத்தமிழின் பரப்பும், பதிவும், பயன்பாடும்' என்னும் கட்டுரையில் முனைவர் பழனியப்பன் பின்வருமாறு குறிப்பிட்டிருப்பார்:

"இணையில்லா இணைய இதழ்கள்: தற்காலத்தில் இணைய இதழ்கள் குறிக்கத்தக்க அளவில் வாசகத் தளத்தைப் பெற்றுவருவது கவனிக்கத்தக்கது. இணையத்தில் மட்டுமே தன் ஆளுமையைச் செலுத்தும் இதழ்களே இணைய இதழ்கள் ஆகும். இவ்வகையில் திண்ணை http://www.thinnai.com,  பதிவுகள்http://www.pathivukal.com, வார்ப்பு http://www.vaarppu.com(கவிதையிதழ்), நிலாச்சாரல்http://www.nillasaral.com, வரலாறு.காம் http://www.varalaaru.com, தமிழ்த்திணை, முத்துக்கமலம் போன்ற பல இதழ்களைக் குறிப்பிடலாம். பல இலட்சங்கள் போட்டு அச்சிதழாகக் கொண்டுவருவதைக் காட்டிலும் இவ்விதழ்கள் வண்ணமயமாக அதிக பணச்செலவின்றி வாசகர்களை எட்டும் நிலையில் சிறந்தனவாகும். மேலும் இவ்விதழ்களில் வந்த ஆக்கங்களை பகுதி பிரித்து வைத்துக் கொள்ள முடியும். மேலும் நாள்படி, ஆசிரியர்படி தேட முடியும் என்பது இன்னுமொரு சிறப்பு. இதனைத் தமிழ் இணைய இதழ்கள் அனைத்தும் கடைபிடித்து வருவது குறிக்கத்தக்கது. உலகத் தமிழர்கள் ஒருங்கு கூடும் இடமாக இந்த இணைய இதழ்கள் விளங்குகின்றன. பிரபலமான எழுத்தாளர்களும் இதில் எழுதி வருவது குறிக்கத்தக்கது."

வலைப்பூக்கள் பற்றிச்சில வார்த்தைகள் .....

இணையத்தளங்களை வடிவமைப்பதற்கு ஒருவருக்கு அவற்றை வடிவமைப்பதற்குரிய தொழில்நுட்ப அறிவு அவசியம்.  HTML , Java script, CSS போன்ற அடிப்படை அறிவு தேவை. தளத்தினை நிறுவிப்பராமரிப்பதற்கு ஒரு 'சேர்வர்' என்னும் கணினி அல்லது அச்சேவையினை வழங்குமொரு நிறுவனத்தின் உதவி தேவை. ஆனால் இவை எதுவுமில்லாமல் ஒருவரால் வாசகர்களுடன் தம் படைப்புகளையும், அவர்களின் பின்னூட்டங்களையும், கால வரிசைப்படி  , பல்வேறு படிம அச்சுகளில் (Templates) இலவசமாக உருவாக்கவும் , அவ்விதம் உருவாக்கிய படைப்புகளை உலகமெங்கும் பரந்து வாழும் ஏனைய வலைப்பதிவாளர்களுடனும், பொதுமக்களுடனும், கலை, இலக்கிய ஆளுமைகளுடனும் பகிர்ந்துகொள்ள முடியும். சில சமயங்களில் இவ்விதமாக உருவாக்கப்படும் இணையத்தளங்களின் மூலம் மேலதிகமாக வருமானமும் பெற்றுக்கொள்ள முடியும். இவ்விதமான தொழில் நுட்பம்தான் வலைப்பதிவுகளாகும். ஆங்லிலத்தில் 'பிளாக்ஸ்' என்பார்கள். Web Blogs என்பதன் சுருங்கிய வடிவம்தான் ''பிளாக்' ஆகும்.

இந்தவிதமான வலைப்பதிவுகள் இணையத்தில் பல்வேறு மொழிகளிலும் மில்லியன் கணக்கிலுள்ளன. இவற்றை உருவாக்குவதற்கு உங்களிடம் சொந்தமாகக்கூடக் கணினி இருக்க வேண்டிய தேவையில்லை. பொதுநூலகங்களில் அல்லது இணையச்சேவை வழங்கும் நிறுவனங்களிலுள்ள கணினிகள் மூலமும் உருவாக்க முடியும்.

வர்த்தகம், இலக்கியம், சினிமா, பெண்ணியம், பங்குச்சந்தை, விளையாட்டு என்று எந்தத்துறையிலும் எண்ணிலடங்கா வலைப்பதிவுகளை இணையப்பரப்பில் காணலாம். கூகுள் போன்ற தேடு பொறியில் தேடுவதன் மூலம் இவற்றைக்கண்டு கொள்ளலாம்.

வலைப்பூக்கள் எண்ணிலடங்காதனவாகவிருப்பதால், இவற்றைத்திரட்டித்தரும் இணையத்தளங்களும், 'தமிழ்மணம்' போன்ற, இருக்கின்றன. இவை திரட்டித்தருவதால் 'திரட்டிகள்' எனவும் அழைக்கப்படுகின்றன. திரட்டி, வலைப்பூக்கள், தமிழ்மணம், தேன்கூடு போன்றவற்றை உதாரணத்துக்குக் கூறலாம்.

இவ்விதமான வலைப்பூக்களை உருவாக்குவதற்குப் பல நிறுவனங்களுள்ளன. இருந்தாலும் முக்கியமான இரு நிறுவனங்களாகப்பின்வரும் நிறுவனங்களைக்கூறலாம்:

1.பிளாக்கர்ஸ்.காம் (http://www.blogger.com)
2.வேர்டுபிரஸ்.காம் (http://www.wordpress.com)

இத்தளங்களில் ஏதாவதொன்றில் அங்கத்தவராக இணைந்து, அத்தளங்கள் வழங்கும் தொழில்நுட்ப உதவிகளைக்கொண்டு நீங்கள் சில நிமிடங்களிலேயே உங்களுக்கான வலைப்பதிவினை உருவாக்கி விடலாம். உங்களுக்கு மட்டுமேயுரிய தனித்துவமான 'டொமைன்' பெயர் வேண்டுமானால் மாதாந்தக் கட்டணத்தில் அவ்விதமான வலைப்பூக்களை அந்நிறுவனங்களினூடு உருவாக்கிக்கொள்ளலாம்.

நடிகர்கள் , எழுத்தாளர்கள் எனச் சமூகத்தின் பல்வேறு ஆளுமைகளில் பலரும் வலைப்பூக்களை வைத்திருக்கின்றார்கள்.

ஆங்கிலத்திலும், தமிழிலும் இது பற்றிய விளக்கங்களுடன் கூடிய நூல்கள் பல உள்ளன. இணையத்திலும் எழுத்து வடிவிலும், யு டியூப் காணிளிகள் வடிவிலும் பல வளங்கள் உள்ளன. இவற்றைப்பயன்படுத்துவதன் மூலம் பயனடையலாம்.

மின்னூல்கள் பற்றி...

மின்னூல்களைப்பொறுத்தவரையில் மின்னூல்களை வாசிப்பதற்குப் பல வகையான கருவிகளுள்ளன. கிண்டில், கோபோ போன்ற பல கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. இக்கருவிகளின் மின் மை (E-Ink) திரையில் நூல்களை பக்கங்களைப்புரட்டி, அடிக்கோடிட்டு ஆனந்தமாக வாசிக்கலாம். இவ்வகையான கருவிகளில்  epub, mobi போன்ற கோப்பு வகைகளில் வாசிக்கலாம். அத்துடன் சகலருக்கும் அறிமுகமான pdf  வகைக்கோப்புகளையும் வாசிக்கலாம்.  அமெசன் நிறுவனத்தின் கிண்டில் வகை மின்னூல் வாசிப்புக்கருவிகள் mobi வகையான மின்னூல்களை வாசிப்பதற்கு உகந்தவை. கிண்டில் வாசிப்புக் கருவியால epub வகைக்கோப்புகளை வாசிக்க முடியாது. ஆண்டிராய்ட் கருவிகளில் fbreader மென்பொருள் மூலமும், ஆப்பிள் கருவிகளில் ibook மென்பொருள் மூலமும் மின்னூல்களை வாசிக்க முடியும்.

epub வகை மின்னூல்களை mobi வகை மின்னூல்களாக மாற்றுவதற்குரிய மாற்றிகளுமுள்ளன. calibre என்ற மென்பொருள் இதற்கு உதவுகின்றது.  msword , pdf வகைக்கோப்புகளையும் மேற்படி epub, mobi  வகை மின்னூல்களாக மாற்ற முடியும்.

எழுத்தாளர்கள் தமது படைப்புகளை மின்னூல்களாக்க இணையத்தில் பல தளங்களுள்ளன. Issuu.Com,  Calameo.Com  போன்ற தளங்களில் 'மைக்ரோசாவ்ட் வேர்ட்' அல்லது 'பிடிஃப்' கோப்புகளை மின்னூல்களாக்கும் வசதிகளுள்ளன. இத்தளங்களில் அங்கத்தவர்களாகி இலவசமாக உங்கள் படைப்புகளை மின்னூல்களாக்க முடியும். இந்நிறுவனங்களிடம் பல்வேறு வகையாக திட்டங்களுள்ளன. அடிப்படைத்திட்டம் இலவசமானது. ஏனையவை மாதா மாதம் கட்டணம் கட்ட வேன்டிய திட்டங்கள். அடிப்படைத்திட்டங்களை விட மேலதிகப் பயன்களைக்கொண்டவை. இத்தளங்களுக்குச் சென்று மேலதிக விபரங்களை அறிந்து கொள்ளுங்கள்.

எழுத்தாளர் முல்லை அமுதனின் மாத இதழான காற்றுவெளி சஞ்சிகை Issuu.com மூலமாகவே வெளிவந்து உலகமெங்கும் பரந்திருக்கும் வாசகர் வட்டத்தைச்சென்றடைகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர உங்களது அச்சில் வெளிவரும் சஞ்சிகைகளின் இணையப்பதிப்புகளை அல்லது இணையத்தில் மட்டுமே வெளிவரும் இணைய சஞ்சிகைகளை மின்னூல்களாக்கி விற்பனைச் செய்யவும் முடியும். Magzter.Com  என்ற நிறுவனத்தில் பல தமிழ்ச்சஞ்சிகைகளை (கணையாழி உட்பட) இவ்விதம் வாங்க முடியுமென்பது குறிப்பிடத்தக்கது.


தமிழில் மின்னூல்களை வழங்கும் நிறுவனங்கள்.

பிரதிலி.காம்
தமிழில் உங்கள் படைப்புகளை உள்வாங்கி மின்னூல்களாக்கி வெளியிடும் தளங்களுமுள்ளன. அண்மையில் ஆரம்பமான 'பிரதிலிபி.காம்' குறிப்பிடத்தக்க தளமாகும் இந்நிறுவனத்தின் இணையத்தள முகவரி வருமாறு: http://www.pratilipi.com.  தற்போது இந்திய மொழிகளான ஹிந்தி, மராத்தி, குஜராத்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் வெளியான படைப்புகளை இத்தளத்தில் வாசிக்கலாம். தற்போது சிறுகதைகள், கவிதைகள், புத்தகங்கள், சஞ்சிகைகள் ஆகிய பிரிவுகளில் எழுத்தாளர்கள் பற்றிய அறிமுகக் குறிப்புகளுடன் படைப்புகளை வெளியிட்டு வருகின்றார்கள். எதிர்காலத்தில் மேலும் பல இந்திய மொழிகளில் படைப்புகளை உள்வாங்கப்பட்டும் சாத்தியங்களுள்ளன. இத்தளத்தினை உருவாக்கி நடாத்தும் குழுவில் ரஞ்சித் பிரதாப் சிங் (Ranjeet Pratap Singh - KIIT University, B.Tech, FMS, Delhi MBA), பிரசாந்த குப்தா (Prashant Gupta - BITS Pilani, B.E. and M.E.), ராகுல் ரஞ்சன் (Rahul Ranjan - KIIT University, B.Tech.), சலி மோடி (Shally Modi - SP University, M.Sc., M.B.A), சங்கர நாராயண தேவராஜன் (Sankarnarayana Devarajan - Anna University, B.Tech, FMS, Delhi MBA) ஆகியோருள்ளனர். தமிழ் எழுத்தாளர்கள் தம் படைப்புகள் மேற்படி தளத்தில் மின்னூல்களாக வெளிவரவேண்டுமானால் சங்கர நாராயண தேவராஜனுடன் This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it என்னும் மின்னஞ்சல் மூலம் தொடர்புகொள்ளுங்கள். பிரதிலிபி தளத்துக்குச் சென்று இத்தளம் வழங்கும் சேவைகள், நிபந்தனைகள் போன்றவற்றை அறிந்துகொள்ளுங்கள்.

FreeTamilebooks.Com
தமிழில் மின்னூல்களை உருவாக்கி வெளியிடும் இன்னுமொரு இணையத்தளம் freetamilebooks.com ஆகும். இத்தளம் மின்னூல்களை அறிவியல், ஆன்மிகம், ஆளூமைகள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், நகைச்சுவை, நுட்பம், புதினங்கள், வரலாறு ஆகிய பிரிவுகளில் வெளியிட்டு வருகின்றது. மேலும் உங்கள் படைப்புகளை மின்னூல்களாக்கி பல்வேறு மின்னூல்களை வாசிக்கும் கருவிகளுக்கும் கணினிகளுக்கும் ஏற்ற வகையில் வெளியிடும் இந்நிறுவனத்தின் இணையத்தளத்தில் மின்னூல்கள் பற்றி, அவற்றின் உருவாக்கம் பற்றி பயனுள்ள தகவல்களுள்ளன.

இந்நிறுவனத்தை நடாத்தும் குழுவில் தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களான பிரியா (மும்பாய்) , இராஜேஸ்வரி (ஆஸ்திரேலியா), து.நித்யா (சென்னை), சிவமுருகன் பெருமாள் (அமெரிக்கா), கிஷோர் (சிங்கப்பூர்), ஜெயேந்திரன் சுப்பிரமணியம்  (பூனே), ஜெயேந்திரன் சுப்பிரமணியம் (அரபு நாடு) , லெனின் குருசாமி (காரைக்குடி),  மு. சிவலிங்கம் (ஓய்வு பெற்ற பொறியியலாளர், தமிழகம்), மனோஜ் குமார் (கோவை), கலீல் ஜாகீர் (விழுப்புரம்), அன்வர் (சென்னை), அ. இரவிசங்கர் (புதுக்கோட்டை), த.சீனிவாசன் (சென்னை)  மற்றும் ஜெகதீஸ்வரன் (சென்னை) ஆகியோருள்ளனர். மேற்படி தளத்துக்குச் சென்று மேலதிக விபரங்களைப்பெற்றுக்கொள்ளலாம். இணையத்தள முகவரி: http://freetamilebooks.com

தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் மின்னூல்களை வெளியிடும் நிறுவனங்களுடன் தொடர்புகொண்டு அவற்றின் சேவையினை இலவசமாகப்பெற்றுப் பயனடையுங்கள்.

மின்னூல்களால் ஏற்படும் நன்மைகள் பல. அவற்றில் சில வருமாறு:

உங்கள் படைப்புகள் உலகின் பல்வேறு பாகங்களிலும் வசிக்கும் வாசகர்களைச் சென்றடைகிறது. இலவசமாக மின்னூல்களைத்தயாரிக்க முடிகின்றது. காகிதங்களைப் பாவிக்காததால், தபாற் செலவு இல்லையென்பதால் சூழலுக்கு மிகவும் பயனை மின்னூல்கள் தருகின்றன. இயற்கை அழிவுகள் பலவற்றிலிருந்து உங்கள் படைப்புகள் தப்பி, நீண்ட காலத்துக்கு நிலைபெற்று நிற்க முடிகின்றது. இணையத்தமிழின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. இது போல் பல காரணங்களை மின்னூல்கள் வழங்குகின்றன.

சமூக ஊடகங்கள் பற்றிச்சில வார்த்தைகள்....

தற்போது மிக அதிகமானவர்களால் பாவிக்கப்படும் சமூக ஊடகம் முகநூலே. சுமார் ஒரு பில்லியன் அங்கத்தவர்களைக்கொண்ட ஊடகமிது. முகநூல் மூலம் அடையும் நன்மைகள் பல. அவற்றில் சில வருமாறு:

உங்களது உறவினர்களுடன், அல்லது உங்களது பால்ய காலத்து நண்பர்களுடன், உங்களுடன் வேலை பார்க்கும் நண்பர்களுடன், பல்வேறு நாடுகளில் வாழும் உங்களுக்குத்தெரிந்த எவருடனும் மிகவும் இலகுவாகத் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள முடிகின்றது. புகைப்படங்களை, காணொளிகளை, நீங்கள் அறிந்த பல்வேறு விடயங்களை, சமூக, அரசியல் மற்றும் இலக்கியம் பற்றிய உங்கள் கருத்துகளை மிகவும் இலகுவாகப் பொது வெளியிலும், அந்தரங்க வெளியிலும் பரிமாறிக்கொள்வதற்குரிய வசதிகளைக்கொண்ட  ஊடகம் முகநூல்.

மேலும் பொதுவான அச்சு ஊடகங்களில் வெளிவராத விடயங்களை, தகவல்களையெல்லாம் உடனுக்குடன் எழுத்துகளாகவோ, புகைப்படங்களாகவொ அல்லது காணொளிகளாகவோ முகநூல் மூலம் பகிர்ந்துகொள்ளலாம்.

சமூக, அரசியற் களத்தில் முகநூல் மூலம் ஆர்ப்பாட்டங்களை, அரசியல் நிகழ்வுகளை மிகவும் இலகுவாக ஒருங்கிணைந்து நடாத்திட முடிகின்றது. கலை, இலக்கிய விழாக்கள் பற்றிய தகவல்களை விரைவாகப் பலருக்கு அறிவிக்கவும், அவர்களுக்கு அழைப்புகளை அனுப்பவும் வழியினை முகநூல் ஏற்படுத்தித்தந்திருக்கின்றது.

மேலும் நண்பர்களுடன் அரட்டை அடிக்கவும் (குழுவாகவும், தனியாகவும்) முடிகின்றது.

உங்கள் வாழ்நாளில் நேரில் சந்திக்கவே சாத்தியமற்ற சமூக, அரசியல், கலை, இலக்கிய ஆளுமைகளுடன் நட்பினைப்பேணிட, அவர்களூடன் கருத்துகளைப் பரிமாறிட முகநூல் வழியேற்படுத்தித்தந்திருக்கின்றது.

இவைபோல் பல் ஆரோக்கியமான காரணங்களைப் பட்டியலிடலாம். அதே சமயம் எந்தவொரு தொழில் நுட்பமும் ஆரோக்கியமான நன்மைகளுடன், எதிர்மறையான விளைவுகளையும் கூடவே கொண்டு வருவது வழக்கமானதொன்றே. முகநூல் போன்ற சமூக உடகங்களும் அதற்கு விதிவிலக்கானவை அல்ல. இவற்றைப்பாவிக்கும் நாம்தாம் நன்மை, தீமைகளை ஆராய்ந்து, உரிய முறையில் இவ்வூடகங்களைப் பாவிக்க வேண்டும். அணுச்சக்தியினை ஆக்கச்சக்திக்குப் பாவிப்பதைப்போல் இவ்வகையான சமூக ஊடகங்களையும் பாவிக்க வேண்டும்.

முகநூலென்ற சமூக ஊடகத்தினை உலகுக்கு வழங்கிய மார்க் எலியட் சுக்கர்பெர்க் (Mark Elliot Zuckerberg) மானுடர்களின் நன்றிக்குரியவர்.

ஏனைய சமூக ஊடகங்களான 'லிங்க்டின்' (Linkedin) , 'ட்வீட்டர் (twitter)', 'யு டியூப்' (youtube)போன்ற சமூக ஊடகங்களெல்லாம் மானுடருக்குப் பல்வேறு வகைகளில் பயனளிக்கின்றன. குறிப்பாக யு டியூப் மூலம் பாடல்களைக் கேட்க, திரைப்படங்களை, அரிய பழைய காலத்துத்திரைப்படங்களைப் பார்க்க, அரசியல் தலைவர்களின், கலை, இலக்கிய ஆளுமைகளின் உரைகளைக் கேட்க, ஆவணப்படங்களைப் பார்க்க, அறிவியல் நூல்கள் மற்றும் பல்வேறு தொழில் நுட்பங்கள் பற்றிய விடயங்களைக்கற்க என இவை போன்ற பல நன்மைகளைப்பெற முடிகிறது.

இளங்கலைஞர்கள் தம் படைப்புகளைக் காணொளிகள் மூலம் வெளியிட்டு சர்வதேசரீதியாகத் தம்மை இனங்காட்டிட முடிகின்றது. ஆவணப்படங்களை, குறுந்திரைப்படங்களை வெளியிட முடிகிறது. என்னைப்பொறுத்தவரையில் முகநூலுக்கு அடுத்து நான் அதிகம் பாவிக்கும் சமூக ஊடகம் யு டியூப் தளமே ஆகும்.
 
This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Tuesday, 28 July 2015 19:54