பதிவுகளுக்கு அனுப்பும் படைப்புகள் பற்றி படைப்பாளிகள் கவனத்திற்கு..

Saturday, 07 September 2013 20:20 - பதிவுகள் - பதிவுகள்.காம் மின்னூற் தொகுப்புகள் , பதிவுகள் & பட
Print

"அனைவருடனும் அறிவினைப் பகிர்ந்து கொள்வோம்! ("Sharing Knowledge With Every One")" - பதிவுகள்

பதிவுகளுக்கு அனுப்பும் படைப்புகள் பற்றி படைப்பாளிகள் கவனத்திற்கு.. பதிவுகளிற்கு வரும் ஆக்கங்களை மூலக் கருத்துச் சிதையாத வண்ணம் திருத்துவதற்கு ஆசிரியருக்குப் பூரண அதிகாரமுண்டு. அது ஆசிரியரின் உரிமை. ஆனால் அதனை விரும்பாவிட்டால் படைப்புகளை அனுப்பும் பொழுது 'வெளியிடுவதானால் திருத்தாமல் மட்டுமே வெளியிடவும்' எனக் குறிப்பிட்டு அனுப்பி வைக்கவும். இதன் மூலம் பல தவறுகளை நீக்கி விட முடியும். பதிவுகளுக்கு ஆக்கங்களை அனுப்ப விரும்பினால் லதா (யூனிகோடு)  எழுத்தினை அல்லது ஏதாவதொரு tsc எழுத்தினைப் பாவித்து தட்டச்சு செய்து அனுப்பி வையுங்கள். அனுப்ப முன்னர் எழுத்துப் பிழைகளை, இலக்கணப் பிழைகளைச் சரி பார்த்து அனுப்பி வையுங்கள். மேற்படி பிழைகளுக்குப் படைப்புகளை அனுப்பும் படைப்பாளர்களே பொறுப்பு. தற்போதைய சூழலில் 'பிரதியைச் சரிபாத்தல்' எமக்கு மிகவும் சிரமமானது. இருந்தாலும் முடிந்தவரை திருத்த முயல்வோம். முக்கியமான இலக்கணப் பிழையாக பன்மை எழுவாயும், ஒருமைப் பயனிலையும் கொண்டமைத்த வாக்கியங்களைக் கூறலாம். 'பாமினி' எழுத்தினைப் பாவித்து அனுப்பி வைப்பதைத் தவிர்க்க முனையுங்கள். 'பாமினி' எழுத்தில் வரும் படைப்புகள் பதிவுகளில் உடனடியாகப் பிரசுரமாவதில் தாமதம் ஏற்படலாம். அவற்றை tscற்கு மாற்றும் பொழுது பல எழுத்துகள் , 'இ', 'அ','ஆ', மற்றும் 'ஞ' போன்றன காணாமல் போய் விடுவதால் மீண்டும் அவ்வெழுத்துகளைத் தட்டச்சு செய்ய வேண்டிய மேலதிக வேலை எமக்கு ஏற்பட்டு விடுகிறது.  ஒருங்குறி (யூனிகோட்) எழுத்துக்கு மாற்றுகையில் தேவையற்ற எழுத்துகளை இடையிடையே தூவி விடுகின்றது. அவற்றை நீக்குவதென்பது மேலதிக வேலை. குறிப்பாகப் படைப்பானது மிகவும் நீண்டதாகவிருந்தால் தேவையற்ற சிரமத்தைத் தருகிறது.'பாமினி'யில் எழுத விரும்புவர்கள் அவற்றை ஏதாவதொரு  'உருமாற்றி' (Converter) மூலம் ஒருங்குறிக்கு  மாற்றி, அவற்றை மின்னஞ்சல் செய்தியாக அனுப்பி வையுங்கள். பதிவுகளில் வெளியாகும் படைப்புகளின் கருத்துகள் பதிவுகளின் கருத்தாக இருக்க வேண்டியதில்லை. எழுத்துச் சுதந்திரம், பேச்சுச் சுதந்திரம் கருதி படைப்புகள் பதிவுகளில் வெளியாகும்.

மேலும் பதிவுகள் இணையப் பத்திரிகையின் அடிப்படையான நோக்கங்களில் சிலவற்றைப் பின்வருமாறு கூறலாம்:

இணையத் தமிழினை வளர்ப்பது. இணையத்தில் தமிழின் பாவனையினை அதிகரிப்பதற்குப் படைப்பாளிகளைத் தமிழில் எழுதுவதற்குத் தூண்ட வேண்டும். வாசகர்களைத் தமிழில் வாசிப்பதற்குத் தூண்ட வேண்டும். இதனைத் தான்  இணையத் தமிழ் இதழ்கள் செய்கின்றன. பதிவுகளும் இதனைத் தான் செய்கின்றது. இதில் ஓரளவு வெற்றியும் அடைந்துள்ளது. அதனால் தான் பதிவுகளுக்குத் தமிழில் தட்டச்சு செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் படைப்புகளை மட்டுமே பிரசுரித்து வருகின்றோம்.

ஈழவிடுதலைப் போராட்டம் இதுவரையில் பல்வேறு விதமான வரலாற்றுக் கட்டங்களைச் சந்தித்து வந்துள்ளது. நடந்த தவறுகளை அனைவரும் உணர்வோம். தவறுகளை இனங்கண்டு அவற்றை எதிர்காலத்தில் மீண்டும் நிகழாதபடி பார்த்துக் கொள்ள வேண்டியது நமது கடமை. உதாரணமாக நடைபெற்ற குழுமோதல்கள், முஸ்லீம் மக்கள் வெளியேற்றம், மாற்றுக் கருத்துள்ளவர்களின் மறைவு போன்றவற்றினைக் குறிப்பிடலாம். அன்று முட்டி மோதிக் கொண்ட தமிழ் இயக்கங்கள் பல இன்று ஓரணியிலுள்ளன. இன்னும் அவற்றிற்கிடையில் உள்முரண்பாடுகள் இருந்தாலும் அவை முன்பு போல் பகை முரண்பாடுகளாக இல்லை. தமிழ் முஸ்லீம், சிங்களக் கட்சிகள், மக்களுக்கிடையில் முன்பு எப்போதும் இல்லாத அளவில் பரஸ்பர நம்பிக்கைகள் நல்லெண்ணம் வளர்ந்துள்ளன. இந்நிலையில் பழையதை மிகவும் ஆவேசத்துடன் ஒருபக்கச் சார்பாகக் கிண்டுவதென்பது ஆரோக்கியமான நடைமுறையல்ல. நேரிய நடைமுறையல்ல. அது எதிர்மறையானது. வாழ்க்கையில் நாம் செய்யும் தவறுகளை தொடர்ந்தும் தூக்கி வைத்துக் கொண்டேயிருப்பதில்லை. தவறுகளை இனங்கண்டு மீண்டும் செய்யாமலிருக்கும் வழிவகைகளைக் கண்டு முன் செல்வது தான் மனிதரின் இயல்பு. இந்நிலையில் அவ்விதம் தவறுகளை அனைவரும் உணர்ந்து ஆக்க பூர்வமாக நடந்து வருமொரு சூழலில் மிகவும் ஆக்ரோசமாக ஒருவிதக் கிண்டலுடன் கடந்த கால நிகழ்வுகளை வர்ணிப்பதென்பது தர்க்கமாக எமக்குப் படவில்லை. வெறும் குதர்க்கமாகத் தான் படுகின்றது. அத்தகைய குதர்க்கமான கருத்துகளைப் பிரசுரிப்பதில் பதிவுகளிற்கு உடன்பாடில்லை. ஆனால் ஒரு விடயத்தை ஆக்க பூர்வமாகவும் குறிப்பிடலாம். எதிர்மறையாகவும் குறிப்பிடலாம். விடயமொன்றினை ஆக்க பூர்வமாகக் கூறுவதுதான் பதிவுகளின் நிலைப்பாடு. படைப்பாளிகளே! உங்கள் எழுத்தின் நியாயத்தை தீவிரத்தை உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகள் மேலெழுந்து மூடி மறைத்து விட விட்டு விடாதீர்கள். உணர்ச்சிகளை நீக்கி உங்கள் கருத்துகளைத் தர்க்க ரீதியாகப் பதிவு செய்யுங்கள். அதுவே வரவேற்கப் படக் கூடியது. பதிவுகளில் மாறுபட்ட அரசியல் கருத்துகள் கொண்டவர்களெல்லாம் பங்கேற்கின்றார்கள். அதனை நாம் வரவேற்கின்றோம்.

தமிழ் அரசியல் வரலாற்றினைப் போலவே தமிழ் இலக்கியச் சூழலிலும் குழு மனப்பான்மை பலமாக ஆதிக்கம் செலுத்துகின்றது. பல்வேறு குழுக்கள். குழுக்களாக இருங்கள். ஆனால் நீங்கள் படைப்பது தான் சரியான இலக்கியமென்று இறுமாப்பு கொண்டு தலைக்கனம் கொண்டு திரியாதீர்கள். வெறும் வார்த்தைகளைச் சொற்களை இலாகவமாகக் கையாள்வதொன்று மட்டும் தான் சீரிய படைப்பென்பதல்ல. 'மாடாய் உழைச்சவன் வாழ்க்கையிலே பசி வந்திடக் காரணம் என்ன மச்சான்?' என்று மிகவும் எளிமையாகக் கேட்கப்படுவதும் சிந்தனையைத் தூண்டும் அற்புதமான இலக்கியப் படைப்புத் தான். பதிவுகள் எந்தவொரு இலக்கியக் குழுவுக்கும் மட்டும் உரியதல்ல. பல்வேறு பிரிவினரும் பதிவுகளில் பங்கேற்கலாம். பிரசுரிப்போம். சரியான தரவுகளுடன் ஆதாரங்களுடன் உங்கள் கருத்துகளைக் கூறுங்கள். பிரசுரிப்பதில் எமக்கு எந்தவித ஆட்சேபனையில்லை. ஆக்கபூர்வமாக விவாதிப்போம். முட்டி மோதிக் கொண்டு விவாதிக்கத் தேவையில்லை என்பது பதிவுகளின் கருத்து. படைப்புகளைப் படைப்புகளினூடாக அணுகும் மனப்பான்மையினை வளர்த்துக் கொள்வோம். அதுதான் சரியானதென்று நாம் வாதிட இங்கே வரவில்லை. ஆனால் அதுதான் ஆரோக்கியமானது. தேவையானதென்பது எமது கருத்து.   பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்பும் அனைத்துப் படைப்பாளிகளுக்கும் எமது மனமார்ந்த நன்றி. தற்போது இதனைத் தான் எம்மால் செய்ய முடியும்.

பதிவுகளுக்கு அனுப்பி வைக்கப்படும் படைப்புகளைப் பிரசுரிப்பதற்குத் தெரிவு செய்யும் உரிமை பதிவுகளுக்கே உண்டு. பதிவுகளுக்குப் படைப்புகளை அனுப்பும் படைப்பாளிகளுக்குத் தற்போதைய நிலையில் சன்மானம் எதுவும் வழங்குவதற்கு சாத்தியமில்லை. இதனை ஏற்றுக் கொள்ளும் படைப்பாளிகளே பதிவுகளுக்குத் தமது ஆக்கங்களை அனுப்பி வைக்கும்படி கேட்கப்படுகின்றீர்கள். எதிர்காலத்தில் பதிவுகள் படைப்பாளிகளுக்குச் சன்மானம் கொடுக்கும் வகையில் வளர்ந்தால் நிச்சயம் படைப்பாளிகளுக்கு எங்கள் கடமையினைச் செய்வோம். அதுவரையில் படைப்பாளிகளின் ஆக்கங்களை உலகத் தமிழ் மக்களிடையே எடுத்துச் செல்வோம். அதன் மூலம் பலவேறு நாடுகளில் பரந்து வாழும் தமிழ் மக்களிடையே, தமிழ் இலக்கிய ஆர்வலர்களிடையே, படைப்பாளிகளிடையே தொடர்புகளை ஏற்படுத்துமொரு களமாகவும் விளங்குவோம்.

இலகுவாக மின்னஞ்சல் கிடைப்பதால் பலர் அதனைத் துஷ்பிரயோகம் செய்வதால், பதிவுகளுக்குப் படைப்புகள் அனுப்புபவர்கள் தங்களது புனை பெயருடன் உண்மைப் பெயரையும் , தொடர்புகொள்வதற்குரிய தொலைபேசி இலக்கத்தினை/ சரியான மின்னஞ்சல் முகவரியினைத் தரவேண்டுமென தீர்மானித்திருக்கின்றோம்.

பதிவுகளுக்குப் ப்டைப்புகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it .  'பதிவுகள்' இணைய இதழை http://www.pathivukal.com, http://www.pathivugal.com , http://www.geotamil.com ஆகிய இணைய முகவரிகளில் வாசிக்கலாம்.

Last Updated on Monday, 31 August 2020 09:29