கவிதை: பழைய புத்தகக்கடை அனுபவமொன்று!

Wednesday, 03 February 2021 03:12 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

கவிதை: பழைய புத்தகக்கடை அனுபவமொன்று!

எனக்குப் பிடித்த விடயங்களிலொன்று
பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்கள் வாங்குவது.
புதுக் கடைகளில் வாங்குவதை விடப்
பழைய புத்தகக் கடைகளில்  வாங்குவதிலுள்ள
இன்பமே தனி.
பழைய புத்தகக் கடைகளில் கிடைப்பதைப்போல்
எல்லாவகைப் புத்தகங்களும்
புதுப்புத்தகக் கடைகளில் கிடைப்பதில்லை.
உதாரணத்துக்கு ஒன்று கூறுவேன்.
உங்களால் பழைய  புத்தகக் கடைகளில்
வாங்குவதைப்போல்
புதுப்புத்தகக் கடைகளில்
பால்ய பருவத்தில் பிடித்தமான இதழொன்றில்
தொடராக வெளியான,
ஓவியங்களுடன் கூடிய , அழகாக 'பைண்டு' செய்யப்பட்ட
நூல்களை ஒருபோதுமே பெற முடியாது.
அந்நூல்களைக் கைகளால் அளைகையிலுள்ள சுகம்
இருக்கிறதே
அதுவொரு பெரும் சுகமென்பேன்.
அவ்வகையான சுகத்தினை ஒருபோதுமே உங்களால்
புதுப்புத்தகக் கடைகளில் பெற முடியாது.

அவை மானுட இருப்பின் ஒரு காலத்தின் பதிவுகளை
உள்ளடக்கியவை. நான் அவ்வகையாக
'பைண்டு' செய்யப்பட்ட புத்தகங்களைப்பற்றிக் கூறுகின்றேன்.
நான் இவ்விதம் கூறுவதால்
என்னை நீங்கள்
நான் புதுப்புத்தகக்கடைகளின்
பிரதான எதிரி என்று மட்டும் தப்புக் கணக்குப்
போட்டு விடாதீர்கள்.
ஆயினும் அவ்விதம் நீங்கள் கருதினால்
அதை நான் தடுக்கப்போவதில்லை. ஏனெனில்
அது உங்களின் சுதந்திரத்தில் நான் தலையிடுவதாக
அமைந்து விடும்.
அதற்காக நான் வருந்தப்போவதுமில்லை.
அண்மையில் கூட வழியில் நானொரு
பழைய புத்தகக் கடையினைக் கண்டபோது
மனம் கேட்கவில்லை. உள்ளே
எட்டிப்பார்த்தாலென்ன
என்ற எண்ணமெழுந்தபோது
வீடு முழுக்கக் குவிந்துள்ள புத்தகக் குவியல்களை
ஒருமுறை எண்ணினேன்.
அண்மையில்தான் முடிவு செய்திருந்தேன்
இனியும் புத்தகங்கள் வாங்குவதில்லையென்று.
வாங்கிக்குவித்துள்ளவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாக
வேண்டியவர்களுக்கு, புத்தகப்பிரியர்களுக்கு,
நூலகங்களுக்குக் கொடுத்துவிடவேண்டுமென்று.
இருந்தாலும் மனங் கேட்கவில்லை.
இம்முறைமட்டும் கடைசித்தடவையாக
இருந்துவிடட்டுமென்று எண்ணினேன்.
இவ்விதம் முடிவெடுத்தவுடன் அந்தப்
பழையப் புத்தகக் கடைக்குள் நுழைவது
எளிதாயிற்று.
நானே எதிர்பாராதவாறு,
நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த,
என் பால்யகாலத்து விருப்புச் சஞ்சிகைத் தொடரொன்று
அழகாக பைண்டு செய்யப்பட்ட நிலையில் கிடைத்தது.
எனக்குப் பிடித்த எழுத்தாளரின் வாழ்க்கை அனுபவத்தையொட்டிய
உள்ளத்தைத் தொட்டுச் செல்லும் புனைகதை.
புத்தகத்தின் முதல் பக்கத்தைப் பார்த்தேன்.
அழகான கையெழுத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது:
"என் பால்ய காலத்துச் சகிக்கு என் பிரிய அன்பளிப்பு"
எழுதியவர் பெயரைப்பார்த்தேன்.
என் பதின்மப் பருவத்தில்
என் பால்ய காலத்துச் சகிக்கு நான்
அன்பளிப்பாகக் கொடுத்திருந்த புத்தகம்
அது.
இப்பொழுது சொல்லுங்கள். உங்களால்
இது போன்றதொரு பழைய புத்தகத்தைப்
புதுப்புத்தக்கடைகளிலொன்றிலாவது
வாங்க முடியுமா?
பழைய புத்தகக்கடைகளில்
பழைய புத்தகங்கள் மட்டும்தாம்
கிடைக்கவேண்டுமென்பதில்லை.
பழசாகிவிட்ட இதயங்களும் அங்கு
கிடைப்பதுண்டு.


This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Saturday, 06 February 2021 09:25