வாசிப்பும், யோசிப்பும் 367: கெளரியின் 'அகதி'!

Sunday, 10 January 2021 01:27 - வ.ந.கிரிதரன் - வ.ந.கிரிதரன் பக்கம்
Print

கெளரியின் 'அகதி'  - நெடுங்கவிதைகவிஞர் கெளரியைப்பற்றி முதலில் எழுத்தாளர் கடல்புத்திரன் மூலம்தான் நான் கேள்விப்பட்டேன். அவர் கெளரியின் 'சோகங்களிலும் துயரமானது' என்னும் கவிதையைப்பற்றி விதந்து கூறுவார். அத்தலைப்பில் கெளரியின் கவிதைத்தொகுப்பொன்றும் 1988இல் வெளியானதாக நான் அறிந்திருக்கின்றேன். அதன் பின்னர் கெளரியை நான் தொண்ணூறுகளில் தாயகம் (பத்திரிகை -> சஞ்சிகை) கனடாவில் வெளியானபோது வெளியான அவரது படைப்புகளினூடு அறிந்திருக்கின்றேன். அவரது படைப்புகள் தாயக'த்தில் வெளியாகியுள்ளன. 'டொராண்டோ'விலிருந்து வெளியான ஏனைய ஊடகங்கள் சிலவற்றிலும் வெளியாகியுள்ளன. தாயகம் பத்திரிகையில் தாயகம் பத்திரிகையில் அதிகமாக எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்களைப்பற்றி 'தாயக எழுத்தாளர்கள்' என்னும் கட்டுரையொன்றும் எழுதியுள்ளார். அதில் என்னையும் உள்ளடக்கியிருந்தார். அக்கட்டுரையும் நினைவிலுள்ளது. அக்காலகட்டத்தில் அவரது நெடுங்கவிதையான 'அகதி' நூலுருப்பெற்றது. அதனை வடிவமைத்துக்கொடுத்திருந்தவர் சகலகலாவல்லவரான 'தாயகம்' ஆசிரியரான ஜோர்ஜ்.ஜி.குருஷேவ்தான். அவர்தான் எனது 'எழுக அதிமானுடா' கவிதைத்தொகுப்பினையும் வடிவமைத்துத் தந்திருந்தார். அக்காலகட்டத்தில் அவரே தனது இருப்பிடத்தில் தாயகத்தை 'ஆப்பிள்' கணினியில் வடிவமைத்து, தன்னிடமிருந்த சிறிய  அச்சியந்திரம் மூலம் அச்சிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தார்.

'அகதி' கவிதைத்தொகுப்பினை வடிவமைத்தவர் 'தாயகம்' ஆசிரியர் ஜோர்ஜ்.ஜி.குருஷேவ் என்றால், அதன் அட்டைப்படத்தை வடிவமைத்துக்கொடுத்தவர் கனடா மூர்த்தி (யாழ் இந்து நாராயணமூர்த்தி). அக்காலகட்டத்தில் தாயக'த்தில் வெளியாகிக்கொண்டிருந்த முனியின் கேள்வி பதில்கள் வாசகர்களால் விரும்பிப் படிக்கப்பட்டவை. சிரித்திரனின் மகுடி பதில்களைப்போல், சுதந்திரனின் குயுக்தியார் பதில்கள் போல் , 'தாயக'த்தின் 'முனி' பதில்களும் முக்கியமானவை. சிரிக்கவும், சிந்திக்கவும் வைப்பவை. முனி என்றால் ஏதோ ஆலமரத்து முனியென்று நினைத்து விடாதீர்கள். முனிவர் என்பதன் சுருக்கமான முனியே இந்தத் தாயகத்து முனி.

கெளரியின் 'அகதி' கவிதை நூலை வெளியிட்டிருப்பது 'டொராண்டோ'வில் இயங்கிக்கொண்டிருந்த  'சமூக ஆய்வு மையம்' (Social Research Circle) என்னும் அமைப்பாகும். வெளியிட்ட ஆண்டு: ஏப்ரில் 1991.

மேற்படி கெளரியின் 'அகதி' நெடுங்கவிதை நூலுக்குச் சிறப்பானதொரு முன்னுரையினைப் பேராசிரியர் சமுத்திரன் அவர்கள் எழுதியுள்ளார். பின்னுரைக் குறிப்பினை விமர்சகர் இந்திரன் அவர்கள் எழுதியுள்ளார். முன்னுரையில் பேராசிரியர் சமுத்திரன் அவர்கள் பின்வருமாறு கூறுவார்:

"கெளரியின் நெடுங்கவிதை ஒரு முக்கியமான சமகாலப்பங்களிப்பு எனக் கருதுகிறேன். கவிஞனின் சுயசரிதைப் பாங்கு இந்தப்படைப்பின் உயிரோட்டத்தைப் பலப்படுத்துகின்றது. கவிதையில் பலமாக இழையோடும் சோகமும், ஆத்திரமும் இன்றைய ஈழத்தின் யதார்த்தத்தின் ஒருவகைப் பிரதிபலிப்புகள். புலம் பெயர்ந்த இளம் தமிழர் பலர் எழுதும் கவிதைகளில் ஒரு துன்பியல் தன்மை படர்ந்திருப்பதைக் கவனிக்கலாம். கெளரியின் நெடுங்கவிதை இதற்கு விதிவிலக்கல்ல.  சொந்த அனுபவங்களின் துன்பங்கள் அங்கே தமிழ் மக்கள் படும் அவஸ்தைகள் இவையெல்லாம் ஏற்படுத்திய தாக்கங்களின் விளைவே 'அகதி'. ஆனால் நெடுங்கவிதை விரக்தியின் மறு உருவமல்ல. வாழ்க்கையிடம் அழகிருக்கிறது. வாழ்க்கையை நேசிக்க வேண்டும். வாழ்க்கையையும் மனிதத்துவத்தையும் தவிர்த்த ஒரு விடுதலை இலட்சியம் இருக்க முடியாது என்ற தத்துவத்தைத் தழுவியது."

கெளரியின் 'அகதி' நெடுங்கவிதை பல விடயங்களில் முக்கியத்துவம் மிக்கது. புகலிடத்தில் அகதி ஒருவன் அடையும் பலவகைப்பட்ட நிகழ்வுகளையும் விபரிப்பது. உயிருடன் வாழ இடம் தந்த புகலிடத்தில் இல்லாத மகிழ்ச்சி , வாழ்வதை மறுத்த பிறந்த மண்ணில் இருப்பதையும் நினைவு கூரும் 'அகதி' பிறந்தமண்ணில் நிலவும் அரச அடக்குமுறைகள், அதன் விளைவுகள், நாட்டில் நிலவும் இனத்துவச் சிந்தனைகளையும் காட்டமாக விமர்சிக்கிறது. கூடவே விடுதலைக்குப் போராடப் புறப்பட்ட ஆயுத அமைப்புகளின் அக, புற முரண்பாடுகளையும் , அவற்றின் விளைவாகப் புரியப்பட்ட படுகொலைகளையும் அதே காட்டத்துடன் விமர்சிக்கின்றது. பிறந்த மண்ணில் நிலவிய சமூக, அரசியற் சூழல் காரணமாக வெளியேறிய தமிழ் அகதியொருவனை எவ்விதம் மேனாட்டுச் சமூக, அரசியல் எதிர்கொள்கிறது விமர்சிக்கும் 'அகதி' புகலிடத்தில் விரவிக்கிடக்கும் நிறவாதச் சிந்தனைகளின் தாக்கங்களையும் எடுத்துக்காட்டுகின்றது.

கெளரியின் 'அகதி' இன்னுமொரு விடயத்தையும் தெளிவாக எடுத்துரைக்கின்றது. இலங்கையின் இனவாத அரசுகள் நாட்டின் பொருளாதாரப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதில், அதன் விளைவாகப்பெரும்பான்மையினத்தவரின் மத்தியிலிருந்து எழக்கூடிய வர்க்கப்புரட்சியினைத் தடுக்கும் முகமாக, சிறுபான்மையின மக்களுக்கெதிராக இனவாதம் பேசிப் பிரச்சினையைத் திசை திருப்புகின்றது. தமிழ்த்தலைமைகளும் பதவிகளுக்காக இனவாதத்தில் குளிர்காய்கின்றார்கள். இவ்விதமாகக் கடுமையாக விமர்சிக்கும் 'அகதி' போராட்ட அமைப்புகளுக்கிடையில் நிலவிய மனித உரிமை மீறல்களையும் கடுமையாக விமர்சிக்கின்றது.

நூலுக்குச் சிறப்பானதொரு பின்னுரையினை எழுதிய விமர்சகர் இந்திரன் அவர்கள் 'அகதி' பற்றிப்பின்வருமாறு குறிப்பிடுவார்:

"தமிழில் இதுவரை யாருமே பதிவு செய்திராத அனுபவத்தை அகதி எனும் நிலையை ஒரு சுய சித்திரமாக இக்கவிதையில் அமைத்திருக்கின்றார். அடியாளத்தில் அமைந்த  ஒரே சீரான அகவல் ஓசையுடன் நகரும் கவிதை ஏராளமான விமர்சனங்களை , சிங்கள் அரசு பற்றிய, அரசை எதிர்க்கும் போராளிக்குழுக்கள் பற்றிய, உலகினைப் பலநாடுகளாகப் பிரித்து எல்லைச்சுவர் எழுப்பியது பற்றிய, ஒன்றிணைந்து இயங்க வேண்டிய நேரத்தில் அகதிகளின் தனியான, சுயநலமான சந்தர்ப்பவாதப் போக்குகள் பற்றிய விமர்சனங்களை முன் வைக்கிறது."

நூலைப்பற்றிய விமர்சகர் இந்திரனின் வார்த்தைகள் 'அகதி' பற்றிய சரியான வார்த்தைகள்.

கெளரியின் அகதி நூலை நூலகம் தளத்தில் வாசிக்கலாம்: https://noolaham.net/project/661/66052/66052.pdf

'அகதி'யுடன் எழுத்தாளர் கெளரியும் 'டொராண்டோ'விலிருந்து காணாமலே போய்விட்டார். அதன் பிறகு அவரது படைப்புகளை எவற்றையும் நான் ஊடகங்களில் காணவில்லை. அவர் 'மொன்ரியாலில் வாழ்வதாகக் கேள்விப்பட்டேன். அவரைப்பற்றி மேலதிகத்தகவல்கள் அறிந்தவர்கள்  அவற்றை இங்கு பகிர்ந்துகொள்ளுங்கள்.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 10 January 2021 01:52