நினைவுகளின் தடத்தில் - 12, 13, 14 & 15

••Monday•, 10 •July• 2017 21:48• ??- வெங்கட் சாமிநாதன் -?? வெங்கட் சாமிநாதன் பக்கம்
•Print•

- வெங்கட் சாமிநாதன் -- அமரர்  கலை, இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதனின் 'நினைவுகளின் சுவட்டில்..' முதல் பாகம் டிசம்பர் 2007 இதழிலிருந்து, ஜூலை 2010 வரை 'பதிவுகள்' இணைய இதழில் (பழைய வடிவமைப்பில்) வெளியானது. இது தவிர மேலும் பல அவரது கட்டுரைகள் அக்காலகட்டப் 'பதிவுகள்' இதழ்களில் வெளிவந்திருக்கின்றன. அவை அனைத்தும் மீண்டும் 'பதிவுகள்' இதழின் புதிய வடிவமைப்பில் மீள்பிரசுரமாகும். - பதிவுகள் -


நினைவுகளின் தடத்தில் - 12

மாமாவிடம் ட்யூஷன் படிக்க வந்தவர்கள், ஏழெட்டுப் பேர் இருப்பார்கள். எங்கள் பள்ளியின் இறுதி வகுப்பாகிய எட்டாம் வகுப்புக்கு தேர்வை அரசு நடத்தும் பொதுப் பரிட்சையே தீர்மானிக்கும் என்ற காரணத்தால் ட்யூஷன் படிக்க வந்து சேர்ந்தவர்கள் அவர்கள். இரவு இரண்டு மணிநேரம் படிப்பார்கள். இது ஒரு மூன்று நான்கு மாதங்களுக்கே நடக்கும். பெற்றோர்களுக்கு தம் பையன்கள் எப்படியாவது கவர்ன்மெண்ட் பரிச்சையில் பாஸ் செய்யவேண்டும். பள்ளிப் பரிட்சையாக இருந்தால் கவலை இல்லை. ஒரு வருஷத்திற்கு இரண்டு வருஷன் ஒரு வகுப்பில் படித்துவிட்டுப் போகட்டும் கவலை இல்லை. பெரும்பாலானவர்கள் பக்கத்துப் பட்டி தொட்டிகளிலிருந்து வருபவர்கள். விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவரகள். உள்ளூர் பையன்களோ, சிறு வியாபாரிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். வத்தலக்குண்டுக்கு அனுப்பி ஹைஸ்கூலில் சேர்த்து அவன் படித்து என்ன கிழிக்கப்போகிறான். உள்ளூர்ப் படிப்பே போதும் என்று நினைப்பவர்கள். ஆனாலும் பாஸ் செய்து விடவேண்டும் என்று ஆசைப்படும் பெற்றோர்கள். இந்த மூணு நாலு மாச ட்யூஷனை வைத்துக்கொண்டு மாமா படும் அவஸ்தை மிக பரிதாபமானது. இப்போது நினைத்துப் பார்க்கும் போது தான் அதன் பரிதாபம் மனதில் படுகிறது. என் ஞாபகத்தில் ட்யூஷன் சம்பளம் மாதம் ஒரு ரூபாய். அதை மாமா வாங்கப் பட்ட பாடு பெரும்பாடாக இருக்கும். ஒவ்வொரு மாதமும் ட்யூஷன் படிக்கும் மாணவனிடம், "போய் உங்கய்யா கிட்டேயிருந்து ட்யூஷன் சம்பளம் கேட்டு வாங்கிட்டு வாடா," ன்னு சொல்லி அனுப்புவார் மாமா. ஆனால் அந்த ட்யூஷன் சம்பளம் ஒரு ரூபாய் தானாவும் வராது. சொல்லியும் வராது. "என்னடா உங்கய்யா கிட்டே கேட்டியாடா, ஏன் சம்பளம் வாங்கீட்டு வரலே?" என்று மாமா கேட்பார். "கேட்டேன் சார், தரேன்னு சொல்லச் சொன்னாங்கய்யா," என்பது எல்லோரிடமிருந்தும் வரும் ஒரே பதிலாக இருக்கும். பள்ளிக்கூடச் சம்பளம் எட்டணா வாங்குவதே பெரும்பாடாக இருக்கும். அதில் ட்யூஷன் சம்பளம் ஒரு ரூபாய் என்ன சுலபமாகவா வந்துவிடும்? பக்கத்து பட்டி தொட்டிகளிலிருந்து வரும் விவசாயக் குடும்பங்களுக்கு கஷ்டமாக இருக்கலாமோ என்னவோ. ஆனால் உள்ளூரில் ஜவுளிக்கடையும், மளிகைக் கடையும் வைத்திருக்கும் வியாபாரிகளுக்கு அரையணாவோ ஒரு ரூபாயோ படிப்பிற்கு என்று கையை விட்டுப் போக விடுவது என்பது அவ்வளவாக மனம் சுலபத்தில் இடம் தரும் விஷயமாக இருந்ததில்லை. கடைகளில் வேலை பார்க்கும் பையன்களிடமும் இதே விவகாரம்தான். சம்பளம் கேட்டால், "வேலையைக் கவனி, சம்பளம் எங்கே போயிடுது. நீயும் இங்கேதான் இருக்கே, நானும் எங்கேயும் ஒடிடப் போறதில்லை. சம்பளத்துக்கு என்ன அவசரம் இப்போ?" என்ற கதை வசனம் ஒவ்வொரு மாதமும் ஒழுங்காகக் கேட்கும். ஆனால், மாமா பள்ளிக்கூடம் போகும் வழியில் கடையிலிருந்தே மாமாவுக்குக் குரல் போகும், " ஐயா பத்திலே துண்டு விழுந்தது அப்படியே நிக்கிதே? பாத்து செய்யுங்க" என்று. அவர் பையன் பள்ளிக்கூடச் சம்பள பாக்கி, ட்யூஷன் சம்பளப் பாக்கி பற்றி பேச்சே வராது. மாமாவும் அந்த சமயத்தில் அதைச் சொல்ல மாட்டார். "சம்பளப் பாக்கி வரவேண்டியிருக்கு. அது வந்ததும் கொடுத்து அனுப்பறேன்" என்று கடையின் அருகே வந்து பதில் சொல்லி விட்டு பள்ளிக்கு நடப்பார். உள்ளூரில் எல்லோரும் தெரிந்தவர்கள். யாருடனும் சண்டை போடமுடியாது. பாக்கி வைப்பவர்கள், கடைசியில் கொடுக்காமலேயே காலம் தள்ளிவிடுகிறவர்கள் அவர்களாகவே இருந்தாலும் கூட. நாலு மாச ட்யூஷன். இப்படியே போய்விடும். பரிட்க்ஷ முடிந்ததும் ஸ்கூல் மூடிவிடும். அப்புறம் யார் கண்டார்கள் ட்யூஷன் சம்பள பாக்கியை?மேனேஜ்மெண்ட் ஸ்கூல் அல்லவா? பள்ளிக்கூட வாத்தியார்கள் சம்பளத்திலும் அனேகமாக இந்த கதை தான். ஒன்றாம் தேதி சம்பளம் கொடுத்தது என்பது அனேகமாக நடந்ததில்லை. பத்து பனிரெண்டு தேதி ஆகிவிடும். இதற்குள் மாமா பள்ளிக்கூடம் இருக்கும் ரோடிலேயே, தன் பெரிய விட்டின் முகப்பு திண்ணியில் உட்கார்ந்து கொண்டு பஞ்சாயத்து செய்து கொண்டிருக்கும் சுப்பய்யரிடம் மாமா எத்தனை தடவை கும்பிடு போட்டு "முதலாளி, இன்னும் சம்பளம் போடலையே, வாத்தியார்களுக்கெல்லாம் கஷ்டமா இருக்கும், சொற்ப சம்பளக்காரங்கல்லியா? என்பார். சுப்பயரும் சிரித்துக்கொண்டே தான் ":அதுகென்ன போட்டுடறது," என்பார். அவ்வளவு தான் மாமாவுக்கு பதில் கிடைத்துவிட்டது. இனி அவர் பஞ்சாயத்துக்கு குறுக்கே நிற்கக்கூடாது. "என்ன சார், மானேஜர் கிட்டே கேட்டீங்களா?", என்று வாத்தியார்கள் எல்லாம் கேட்க்கும் கேள்விகளுக்கு மாமா தான் பதில் சொல்லியாக வேண்டும். இது நான் நிலக்கோட்டையில் இருந்த வரை அனேகமாக ஒவ்வொரு மாதமும் தவறாது நிகழும் கதை.

இந்த மாதிரியான நிலக்கோட்டை வாழ்க்கையில் மாமாவுக்கு சந்தோஷம் தரும் கணங்கள் இருந்தனவோ என்னவோ, தெரியாது. எனக்கு சில மகிழ்ச்சிதரும் கணங்களாக இருந்தன. அவை நிலக்கோட்டையை விட்டு நகர்ந்த நாட்கள். எட்டாம் வகுப்பு அரசு பொதுப் பரிட்சை எழுத வத்தலக்குண்டு போன நாட்கள் அவற்றில் ஒன்று. வத்தலக்குண்டு கவர்ன்மெண்ட் ஹைஸ்கூலில் தான் பரிட்சை நடந்தது. அந்த ஒரு சமயம் தான் நிலக்கோட்டையிருந்து ஆறே ஆறு மைல் தூரத்திலிருந்த வத்தலக்குண்டுக்கு நான் போனது. அந்த பெரிய பள்ளிக்கட்டிடமும், எத்தனையோ சுற்று வட்டார பள்ளிகளிலிருந்து வந்த மாணவர்கள் பெரிய பெரிய ஹால்களில் நூற்றுக் கணக்கில் உட்கார்ந்து பரிட்சை எழுதுவதும், எனக்கு பதிய காட்சிகளாக இருந்தன. எனக்கு அவையெல்லாம் பார்க்க மிகவும் பிடித்துப் போயிற்று. பரிட்சை எழுதினோம். என்ன எழுதினேன் என்றெல்லாம் ஞாபகமில்லை. பரிட்சை எல்லாம் ஒரே நாளில் காலையிலும் மாலையிலுமாக முடிந்தது என்று தான் நினைக்கிறேன். ஏனெனில் நாங்கள் எங்கும் இரவு தங்கியிருந்ததாக நினைவில் இல்லை. அன்று மாலை எங்கள் எல்லோரையும் சுற்றி உட்காரவைத்து, பரிட்சைக் கேள்விகளை ஒவ்வொன்றாகக் கேட்டு நாங்கள் எழுதிய பதிலைச் சொல்லச் சொல்லி ஒவ்வொருவருக்கும் கிடைக்கக்கூடும் மார்க்குகளைக் குறித்துக்கொண்டார்கள். என்னைக் கேள்விகேட்கும் வாத்தியாராக வந்தவர் அம்பி வாத்தியார் தான். கடைசியில் மாமாவிடம் அம்பி வாத்தியார் சொன்னார். "கணக்கில் பயல் அறுபது மார்க் வாங்கிடுவான் சார்," மாமா சந்தோஷப்படுவார் என்று தான் அம்பி வாத்தியார் நினைத்தார். நானும் அப்படித்தான் நினைத்தேன். இரண்டு பேரும் பரிதாபகரமாக தோற்றோம். மாமாவுக்கு கடும் கோபம். "ஏண்டா கழுதை, நீ 60 மார்க் வாங்குவதற்காடா வருஷம் பூரா உயிரைக் கொடுத்து சொல்லிக்  கொடுத்தேன்?" என்று மாமா திட்ட ஆரம்பித்தார். திட்டினாரே ஒழிய அடிக்கவில்லை. எல்லோரும் பரிட்சை முடிந்த சந்தோஷத்தில் காராபூந்தியும் லட்டுவும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அதனிடையே தான் இந்த இரண்டாம் கட்ட பரிட்சையும் மார்க்கு போடலும், கடைசியில் காராபூந்தி லட்டுவோடு அர்ச்சனையும்.

என்னவானாலும் வத்தலக்குண்டு பிரயாணம் சந்தோஷமாகத் தான் இருந்தது. நான் பரிட்சையில் பாஸ் செய்துவிட்டேன். மார்க் என்னவாக இருந்தால் என்ன? அடுத்த வருடம் ஜூன் மாதம் மதுரையில் படிக்கப் போகிறேன். அது வத்தலக்குண்டுவை விட மிகப் பெரிய ஊர். 32 மைல் டி.வி.எஸ் பஸ்ஸில் பிரயாணம் செய்யலாம். இதற்கு முன் ஒரு முறை மதுரை போயிருக்கிறேன். மேற்குக் கோபுர வாசலில் வழியாக அதன் கடைசியில் இருக்கும் ஒரு தியேட்டர் (அங்கு எப்போதும் ஆங்கிலப் படம் தான் காட்டுவார்கள். பெயர் மறந்து விட்டது, ரீகல் என்று நினைக்கிறேன்), அது நோக்கிப் போகும் பாதையில் கொஞ்ச தூரம் நடந்தால் ஒரு பார்க் வரும். அதன் எதிரே ஒரு சந்து போகும். அந்த சந்தில் இரண்டாம் வீட்டில் மாமியின் அப்பா இருந்தார். அந்த வீட்டிலிருந்து கொஞ்ச தூரம் நடந்தால் செண்டிரல் சினிமா வந்துவிடும். அப்போது ஸ்ரீவள்ளி ஒடிக்கொண்டிருந்தது என்று நினைவு. கோமல் ஸ்வாமிநாதன் 1995லோ என்னவோ மதுரையில் நாடக/இலக்கிய விழா நடத்தியபோது என்னையும் அதற்கு அழைத்திருந்தார். அப்போது மதுரை காலேஜ் ஹாஸ்டலில் தங்கி இருந்தோம். அந்த சமயம் என் மாமியின் குடும்பம் இருந்த(வாடகைக்குத் தான்) அந்த பழைய வீட்டைப் பார்க்கும் ஆர்வம் எழுந்தது. என்னால் அந்த பழைய சந்தைக்கூட கண்டு பிடிக்கமுடியவில்லை.

மாமாவின் வசதிக்குறைவினாலும், அழுத்தும் வறுமை காரணமாகவும், நிலக்கோட்டையை விட்டு எங்கும் அதிகம் சென்றதில்லை. ஆறு மைல் தூரத்திலிருக்கும் வத்தலக்குண்டு பயணம், அங்கிருந்த 13 வருடங்களில் கிடைத்த அந்த ஒரே பயணம் சந்தோஷமளித்ததென்றால் பயணங்கள் எனக்கு எவ்வளவு அபூர்வமாகக் கிடைத்தன, அதன் காரணமாகவே அவை எனக்கு எவ்வளவு சந்தோஷமளித்தன என்பதை யூகிக்கலாம். என் சந்தோஷத்தைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறேன். மதுரையிலேயே, ஒரு பெரிய பட்டணத்தில் தங்கி படிக்கப் போகிறேன் என்ற எண்ணமே என்னை வானத்தில் பறக்கும் பிரமையைத் தந்தது. ஆனால் மாமாவுக்கு அது ஒரு பெரிய சுமையாக இருந்தது. சாதாரணமாக நிலக்கோட்டியில் அன்றாட பொழுது கழிவதே பெரிய பிரயத்தனமாக இருந்தது மாமாவுக்கு. இதில் நான், சின்ன மாமா, பாட்டி மூவரையும் மதுரையில் ஒரு தனிக்குடித்தனம் அமைத்து என்னையும் சின்ன மாமாவையும் ஹைஸ்கூலில் படிக்கச் சேர்ப்பது என்பது மாமாவுக்கு தாங்க முடியாத சுமை. என் சின்ன மாமா வத்தலக்குண்டு ஹைஸ்கூலில் படித்த ஹைஸ்கூலில் அந்த வருடம் பெயில் ஆகிவிட்டதால் அங்கு படிக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்ய என்னையும் ஹைஸ்கூலில் சேர்க்க வேண்டியிருந்ததால் இரண்டு பேரையும் மதுரையில் சேர்த்து படிக்க வைப்பது என்று முடிவாயிற்று. பாட்டி எங்களுக்கு சமைத்துப் போடுவாள். மாமா? மாமி அப்போது நிலக்கொட்டையில் இல்லை. சண்டை போட்டுக்கொண்டு மதுரைக்கு வந்துவிட்டாள் மாமி. "நான் சமைத்துச் சாப்பிட்டுக்கொள்கிறேன், ஒரு வருஷம் தானே, இவன் ஸ்கூல் ·ப்னல் பாஸ் பண்ணட்டும் போறும்," என்று தீர்மானித்துவிட்டார் மாமா. இதற்கு தன் கடைசி பிள்ளை (என் சின்ன மாமா) யின் சார்பில் பாட்டியின் வற்புறுத்தலும் ஒரு காரணம்.
21.11.07

நினைவுகளின் தடத்தில் - 13

- வெங்கட் சாமிநாதன் -வீட்டு வாசலில் மாமாவுடன் பேசிக்கொண்டிருந்தார் அம்பி வாத்தியார். தற்செயலாக நான் அங்கு வந்து சேர்ந்தது, என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே, "மாப்பிள்ளை டவுனுக்குப் போய் படிக்கப் போறாராக்கும்! இனிமேல் அவர் டவுன் வாசிதான்." என்றார். அது சும்மா தமாஷாகப் பேசுவதாகவும் இருக்கும். கொஞ்சம் கிண்டலும் கலந்திருக்கலாம். நிச்சயமில்லை. ஆனால் எனக்கு அது சந்தோஷமான சமாச்சாரம் தான். நான் மதுரைக்குப் போய் படிக்கப் போகிறேன் என்பது எல்லோரும் பேசும் ஒரு விஷயமாகியிருந்தது, எனக்குச் சந்தோஷம் தான். அது என்னை முக்கியப்படுத்தி இல்லை. சின்ன மாமா மதுரைக்குப் போய் படிப்பது என்பது நிச்சயமானதும், எனக்கும் நிலக்கோட்டையில் எட்டாம் வகுப்புப் படிப்பு முடிந்ததும் மேலே படிக்க வெளியே தான் போக வேண்டும் என்ற நிலையில், சின்ன மாமாவோடு ஒட்டிக்கொண்டு விட்டேன். ஆனால் எப்படியானால் என்ன, நான் மதுரையில் படிக்கப் போகிறேன். பெரிய நகரம் அது. நிறைய சுத்தலாம். வருஷம் பூராவும் சுத்திக்கொண்டிருக்கலாம். அப்படியும் மதுரை அலுத்துவிடாது, அது பார்த்துத் தீர்ந்துவிடாது, என்ற எதிர்பார்ப்பும் பரபரப்பும் என்னில் பரவியிருந்தது. அத்தோடு, இன்னும் ஒரு பெரிய விஷயம். மதுரையில் பாட்டியும் சின்ன மாமாவும் தான் இருப்பார்கள். மாமா இல்லை. அவரது கட்டுப்பாட்டில் இருக்கும் நிர்ப்பந்தமும் இல்லை. நான் என் இஷ்டம் போல இருக்கலாம். ஒரு சுதந்திர பிறவியாக. எல்லாவற்றையும் விட இப்போது முதலில் அனுபவிக்க இருப்பது 30 மைல் பஸ் பிரயாணம். அதை நினைக்க நினைக்க மனத்தில் ஒரே பூரிப்பு. ஆனால் 2 மணி நேரம் தான் நீடிக்கும் அந்த சுகம். அது பற்றி அப்போது கவலை இல்லை.

வெகு அரிதாகவே கிடைத்தன எனக்குப் பிரயாண சந்தோஷங்கள். இந்த 13 வருஷங்களில் பக்கத்தில் இருக்கும் வத்தலக்குண்டுக்கு ஒரே ஒரு முறை தான் போக வாய்த்தது. அதுவும் பரிட்சை எழுத. சின்ன மாமாவுக்கு எவ்வளவு அதிர்ஷ்டம்!. வத்தலக்குண்டுக்கு கவர்ன்மெண்ட் போர்டு ஹைஸ்கூலில் படிக்க சேர்ந்த பிறகு மூன்று வருஷங்கள் தினம் காலையில் போனால் சாயந்திரம் வந்தால் போதும் அவ்வளவு நேரமும் வத்தலக்குண்டில் கழிக்கலாம் என்றால் எவ்வளவு அதிர்ஷ்டம் சின்ன மாமாவுக்கு மாத்திரம்! பக்கத்தில் இருக்கும் அணைப்பட்டி கூட பார்த்ததில்லை. இவ்வளவுக்கும் மாமா சுவாமிநாத ஸ்வாமி பக்தர், அவர் குல தெய்வம். பின் ஏன் ஒரு தடவை கூட ஏன் மாமா அங்கு போனதில்லை? அவர் போயிருந்தால் என்னையும் கட்டாயம் அழைத்துச் சென்றிருப்பார். ஆனால் இப்போது அதைப் பற்றியெல்லாம் கவலை இல்லை. இப்போது ஒரு வருஷம் பூராவும் மதுரையில் இருக்கப் போகிறேன். அதுவும் சுதந்திரமாக.

இதற்கு முன்னால் ஒரு நீண்ட பிரயாணம், அதுவும் ரயிலில் போகும் அதிர்ஷ்டம் எனக்கு இருந்திருந்தது. இரண்டு வருஷம் இருக்குமா? அல்லது மூன்று வருஷங்கள் ஆயிடுத்தா? எனக்கு பூணூல் போட்டாகணும். வயசாயிண்டிருக்கிறது. அப்பாவிடமிருந்து லெட்டர் வந்தது. எல்லோரும் உடையாளூர் போகணும். உடையாளூரில் அப்பாவும் அம்மாவும் இருக்கிறார்களே. அந்த பிரயாணம் தொடங்கிய பிறகு தான் எவ்வளவு புது விஷயங்கள் அதில் அனுபவிக்க இருந்தன என்று தெரிந்தது. ஒரு பகல் பூராவும் ரயிலில் பிரயாணம் செய்யலாம். அவ்வளவு தூரம் உடையாளூர்.முதலில் ஐந்து மைல் தூரத்தில் இருக்கும் அம்மையநாயக்கனூருக்குப் போகவேண்டும், அங்கு போய்த்தான் ரயில் ஏறவேண்டும். அம்மையநாயக்கனூர் ரயில் ஸ்டேஷனுக்குப் பேர் கொடைரோடு. மதுரையிலிருந்தோ, அல்லது வடக்கே சென்னையிலிருந்தோ கொடைக்கானல் போகிறவர்கள், கொடைரோடு ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து ரோடு வழியாக கொடைக்கானல் போகவேண்டும். அந்தக் காலத்தில், பிரிட்டீஷார் ஆட்சி நடந்த காலத்தில், சென்னை கவர்னர், கோடை காலத்தில் ஊட்டிக்கோ அல்லது கொடைக்கானலுக்கோ தான் போய்த் தங்குவார்களாம்.

கொடை ரோடிலிருந்து செங்கோட்டா பாஸஞ்சர் வண்டியை பிடிக்க வேண்டும். அது காலை 5.30 மணிக்கோ என்னவோ வரும். அது ஒரு வண்டிதான் கும்பகோணம் போகும். அந்த வண்டியைப் பிடிக்க வசதியாக நிலக்கொட்டையிலிருந்து பஸ் ஏதும் கிடையாது. குதிரை வண்டியில் தான் போகவேண்டும். காலை நாலு அல்லது நாலரை மணிக்கு குதிரை வண்டி எங்கிருந்து கிடைக்கும்.? மாமா முதல் நாள் சாயந்திரம் போய் நாடார் ஹைஸ்கூலுக்கு 10-15 வீடு தள்ளி இருக்கும் குதிரை வண்டிக்காரருக்குச் சொல்லி வைக்கவேண்டும். காலையில் 4 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துவிடவேண்டும், ரயிலைப் பிடிக்கவேண்டும் என்று. வீட்டில் 3 மணிக்கே எழுந்து எல்லா ஏற்பாடுகளும் செய்யப்படும். ரயிலில் சாப்பிடுவதற்கு இட்லி, புளியஞ்சாதம், தயிர் சாதம் எல்லாம் தயாராகும். வீடு ஒரே ரகளையும், கோலாகலமுமாக இருக்கும்.

 

1942-லோ 1943-லோ சரியாக ஞாபகமில்லை. உபநயனத்திற்காக உடையாளூர் போக ரயிலில் போனது. அது தான் எனக்கு ஞாபகமிருக்கும் முதல் ரயில் பிரயாணம். முதல் நாளிலிருந்து வீடு அல்லோகப் பட்டுக்கொண்டிருக்கும். அதைச் செய்யக்கூடாதா, இதைச் செய்யக்கூடாதா, மக்கு மாதிரி இப்படி நின்னுண்டேயிருக்கியே, என்ற திட்டுக்கள் மாமாவிடமிருந்தும், பாட்டியிடமிருந்தும் வந்துகொண்டேயிருக்கும். அதையெல்லாம் தாண்டி காலையில் நாலு நாலரைமணிக்கு குதிரை வண்டியில் உட்கார்ந்துவிட்டால் முதல் நாள் கேட்ட திட்டுக்களெல்லாம் மறந்து விடும். சில்லென்று இருக்கும் அந்த முன் காலை இருட்டில் குதிரை வண்டி சவாரி சந்தோஷமாக இருக்கும். அது மட்டும் என்ன? பின் தொடர்வது எல்லாமே சுகமான விஷயங்கள் தான். முதல் தடவையாக சிறு பையனாக, ஒரு பகல் முழுதும் ரயில் பிரயாணம் செய்வது என்பது ஸ்வர்க்க அனுபவம் தான். அப்போதெல்லாம் முன் பதிவு என்பதெல்லாம் இருந்ததில்லை. வெகு வருஷங்களுக்கு இருந்ததில்லை. டிக்கட் வாங்கிக் கொண்டு கிடைத்த காலி இடத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டியதுதான்.

அந்த புதிய அனுவத்தை நான் வெகுவாக ரசித்தேன். ஒவ்வொரு சின்ன நிலயத்திலும் ரயில் நின்றது. கொடை ரோடைத் தாண்டியதும், திண்டுக்கல் வரை, பின் அதைத் தாண்டியும் கொஞ்ச தூரம் வரை, ரயில் பாதையின் இருபக்கங்களிலும் வெகு தூரத்திற்கு ஜவந்தி மலர்ந்திருக்கும். அல்லது திரா¨க்ஷ பயிர் செய்திருப்பார்கள். பந்தல் பந்தலாக படர்ந்திருக்கும் அந்த வெளியில் திரா¨க்ஷப் பழ்ங்கள் கொத்துக் கொத்தாகத் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இப்போது என்ன செய்கிறார்களோ தெரியவில்லை. அதன் பிறகு அந்த வழியில் பிரயாணம் செய்ததெல்லாம் ஓரிருமுறை இரவு நேரங்களில் ரயில் அந்தப் பகுதியைக் கடந்து விடும். இம்மாதிரி கண்ணுக்கெட்டும் தூரம் வரை ஜவந்திப் பூக்களாக பார்த்தது முதல் அனுபவம்.மிக சந்தோஷம் தந்த அனுபவம். உலகம் இப்படியெல்லாம் கூட அழகாக இருக்கிறதே, எல்லாமே நிலக்கோட்டைக்கு அப்பால் தானா? என்று நினைத்தேன். இம்மாதிரியான மலர்ப்பரப்பை ஹாலந்து தேசத்தில், செய்திப் படங்களிலும், இந்நாட்களில் நம் சினிமாக் காட்சிகளில் தான் டூயெட் பாட ஹாலந்து போவதால் பார்க்கக் கிடைக்கிறது. ஹாலந்தில் காணுவது போன்று அடிவானம் வரை விஸ்தாரமான மலர்ப் பரப்பல்ல, திண்டுக்கல்லைச் சுற்றிக் காணப்பட்டது.

ஒவ்வொரு நிலையத்திலும் நின்று நின்று சென்று கொண்டிருந்தது வேடிக்கையாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது. எத்தனைபேர்கள், இறங்குவதுன் ஏறுவதுமாக. வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில், அதாவது இரண்டு மூன்று நிலயங்களில் அடுத்தடுத்து நின்றதும், மாமாவிடம் எப்போது ஊருக்குப் போகும் என்றுகேட்டேன். "சாயந்திரமாத்தாண்டா போகும். அதான் சாப்பிடறதுக்கெல்லாம் எடுத்துண்டு வந்திருக்கே" என்றார். நான் இடைப்பட்ட எண்ணற்ற ரயில் நிற்கும் நிலயங்களை எண்ணத் தொடங்கினேன். முப்பத்திஒன்றோ, முப்பத்தி இரண்டோ எண்ணினேன் என்று ஞாபகம். இது அந்த 1942 அல்லது 1943 வருடத்தில் எண்ணிய கணக்கின் நினைவு தான். இன்னமும் இந்த எண்ணிக்கை எனக்கு நினைவில் பதிந்திருக்கிறது. சரிதானா, இவ்வளவு ரயில் நிலயங்கள் இருக்கின்றனவா என்று சரிபார்க்க ரயில்வே கால அட்டவணைப் புத்தகத்தைப் பார்த்தேன். அதில் வேக வண்டிகள் நிற்கும் நிலயங்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டிருந்தன. ஆக, இந்த எண்ணிக்கை சரிதானா என்பது இப்போது தெரியாது. அந்த வயதில், முதல் அனுபவத்தில் எண்ணத் தோன்றிற்று. அது வேடிக்கையாகவும் இருந்தது.

பெரிய நிலயங்களில், அதாவது ரயில் சந்திப்புகளில் வண்டி அதிக நேரம் நின்றது. என் ஞாபகத்தில் திருச்சி வந்ததும் மாமா எங்களையெல்லாம் சாப்பிடச் சொல்லிவிட்டு, "இதோ வந்து விடுகிறேன்" என்று சொல்லிவிட்டு ரயிலை விட்டு இறங்கி வெளியே போனார். வண்டி கிளம்புவதற்குள் திரும்பி வந்துவிட்டார். வந்த பிறகு தான் அவர் சாப்பிட ஆரம்பித்தார். பின்னர் நான் அவர் இறங்கிப் போனது எதற்கு என்று கேட்டுத் தெரிந்து கொண்டேன். அக்காலங்களில் நீண்ட தூர ரயில் பிரயாணங்களுக்கு கட்டணம் அதிகம் என்றும் அதனால் தான் கொடைரோடிலிருந்து திருச்சிக்கு ஒரு முறையும், பின்னர் திருச்சியில் இறங்கி கும்பகோணத்திற்கு மறுபடியும் எல்லோருக்கும் டிக்கட் எடுத்து வந்தார் என்றும் தெரிந்தது. எனக்கு அவர் திருச்சியில் இறங்கியது தான் தெரியும். இடையில் திண்டுக்கல்லிலும், பின்னர் தஞ்சாவூரிலும் ரயில் நிற்கும் நேரம் அதிகம் என்ற போதிலும், இப்படி அடிக்கடி இறங்கி டிக்கட் எடுப்பது சிரமம் என்றா, இல்லை, இந்த சிரமத்திற்கு ஏற்ற பணம் மிச்சம் அதில் இல்லை என்றா என்பது தெரியாது. இப்போது எங்கும் அந்தமாதிரி சலுகைகள் கிடையாது அப்போது அந்த சலுகை இருந்தது இப்போது நினைத்துப் பார்க்க வேடிக்கையாகத் தான் இருக்கிறது. சலுகைகள் கொஞசம் தலைகீழாகத் தான் தோன்றுகிறது. ஒரு வேளை அந்தக் காலத்தில் ஏழை மக்கள் ரயிலில் நீண்ட தூர பிரயாணங்களை மேற்கொள்வதில்லை என்றோ, அல்லது நீண்ட தூரம் பிரயாணம் செய்பவர்கள் கொஞ்சம் கூட கொடுத்தால் சௌகரியமாக பயணம் செய்யலாம் என்றோ, என்ன தர்க்க நியாயமோ தெரியவில்லை. அப்போது கொடைரோடிலிருந்து கும்பகோணத்திற்கு ஒரு டிக்கட்டுக்காண கட்டணம் ஒரு ரூபாய் பத்தணா தான். இதில் மாமா திருச்சியில் இறங்கி டிக்கட் மறுபடியும் வாங்கி மிச்சம் பிடித்திருக்கக்கூடியது எவ்வளவு அணாக்கள் என்று எனக்குத் தெரியாது. அது சில அணாக்கள் அல்லது ஒரு ரூபாய்க்குக் கிட்டத்தட்ட இருக்கலாம். ஆனால் இங்கு நான் இதைச் சொல்லக் காரணம் ஒன்று, இந்த மாதிரியான வேடிக்கையான சலுகைகள் அன்று இருந்தன. இரண்டு, என் மாமாவின் வருவாயில், இப்படி மிச்சம் பிடிக்கும் சில அணாக்களோ,அல்லது ஒரு ரூபாய் சொச்சமோ, பெரிய கணிசமான தொகையாக இருந்திருக்கிறது என்பதும் தான். இப்படி அணா அணாவாக கணக்கிட்டுச் செலவழிக்கும் நிலையில் இருந்த மாமா தான் என்னை இரண்டு வயதிலிருந்து மதுரையில் 9-வது படிப்பு முடியும் வரை படிப்பித்தார். பின்னர் என் இடத்தை என் அடுத்த தம்பி எடுத்துக் கொண்டான். அவன் எஸ்.எஸ் எல்.ஸி வரை படித்தான். அவன் படித்து தேர்ந்ததும், அவனுக்கு அடுத்த தமபியும் மாமாவிடம் தான் படிக்கச் சேர்ந்தான். அவனுக்கு மதுரையோ வத்தலக்குண்டோ போகத் தேவை இருந்திருக்கவில்லை. அவன் காலத்தில் நிலக்கோட்டையிலேயே ஒரு போர்டு ஹைஸ்கூல் தொடங்கப்பட்டு விட்டது.

வெங்கட் சாமிநாதன்/16.12.07 ''பதிவுகள்' ஜூன் 2008 இதழ் 102


நினைவுகளின் தடத்தில் - 14!

- வெங்கட் சாமிநாதன் -கும்பகோணம் ரயில் நிலையத்தில் இறங்கியதெல்லாம் நினைவிலிருந்து அழிந்து விட்டது. பின் வருடங்களில் நான் அதே ரயில் வண்டியில் ஓரிருமுறை பயணம் செய்திருப்பதால் அது மாலை நாலரை மணி சுமாருக்கு கும்பகோணம் வந்து சேர்ந்திருக்கும். அங்கிருந்து உடையாளுருக்குப் போவதென்பது அந்நாட்களில் ஒரு சிரம சாத்தியமான காரியம். கும்ப கோணத்திலிருந்து அரசிலாற்றைத் தாண்டி வயல் வரப்புகளின் வழியே நடந்தால் இன்னம் இரண்டு ஆறுகளை, முடிகொண்டான், குடமுருட்டி என்னும் இரண்டு ஆறுகளைத் தாண்டி சுமார் ஐந்தரை மைல் தூரத்தில் இருந்தது உடையாளூர். குடும்பத்தோடு செல்கிறவர்கள், ஆறு மைல் தூரத்தில் இருக்கும் வலங்கிமான் என்னும் ஒரு சிற்றூருக்குப் போகவேண்டும். அது ரைட் ஆனரபிள் என்று சொல்லப்பட்ட வி.எஸ். சீனிவாச சாஸ்த்ரிகளின் பிறந்த ஊர். அவர் பெயரின் வி. என்ற எழுத்து வலங்கிமான் என்ற ஊரைத்தான் குறிக்கும். அங்கு போக இந்நாட்களில் பஸ் வசதி உண்டு. அப்போது நான் பேசிக்கொண்டிருக்கும் 1940-களில் பஸ் வசதி இருந்ததா என்பது நினைவில் இல்லை. நாங்கள் கும்பகோணத்திலிருந்து வலங்கிமானுக்கு பஸ்ஸில் பிரயாணம் செய்தோமா என்பதும் நினைவில் இன்று பதிந்திருக்கவில்லை. எனக்கு அடுத்து மிகத் தெளிவாக நினைவில் ஓடும் காட்சி, வலங்கிமான் ஊரின் பிரதான சாலையின் மத்தியில் மாட்டு குதிரை வண்டிகள் நிறுத்தியிருக்கும் இடத்தில் என் அப்பா வண்டிக்காரர் சிலருடன் பெரிதாக சத்தம் போட்டுக்கொண்டு இருந்தது தான். அப்பா மிகவும் கோபக்காரர், சுலபத்தில் அவர் பேரம் பேசாது ஒரு காசு கொடுத்துவிட மாட்டார் என்பதை நான் பின்னாட்களில் தெரிந்து கொள்வதற்கான முதல் அனுபவக் காட்சி, அன்று வலங்கிமான் மாட்டு வண்டிக்காரர்களோடு அவர் சண்டையே போடுவதாகத் தோற்றம் தந்த அவரது கடுமையான பேரத்திற்கான சத்தம் தான்.

வலங்கிமான் குதிரை என்பது அந்தப் பக்கத்தில் எல்லோர் வாயும் பேசும் கேலிப் பேச்சு. வலங்கிமான குதிரை நோஞ்சலாகத்தான் இருக்கும். சாதாரணமாக நாம் காணும் குதிரையின் கம்பீரமான தலை நிமிர்ந்த தோற்றத்தில் நான் என்றும் பின்னாட்களில் கூட கண்டதில்லை. வண்டியில் பூட்டப்பட்டு ஓடும் குதிரை கூட நிமிர்ந்த தோற்றத்தில் இராது. கழுதையைப் போல குனிந்த தலையுடன் தான் அது ஓடும். ஓடுமா வண்டியை இழுக்குமா என்பது சந்தேகத்திற்குரிய விஷயம். "வலங்கிமான் குதிரையாட்டமா, கிழக்கே போகணும்னா மேக்கே பாத்துன்னாடா வண்டியை ஓட்டணும்?" என்ற பேச்சை நான் பின் நாட்களில், உடையாளுரில் இரண்டு வருடங்கள் (ஜூன், 1948 - ஆகஸ்ட், 1949) தங்கி கும்பகோணத்தில் படித்த காலத்தில், எல்லோரும் கேலி பேசக் கேட்டிருக்கிறேன். ஆனால் அன்று நான் அங்கு அந்த புகழ்பெற்ற வலங்கிமான் குதிரை வண்டி எதனையும் பார்த்த தாக நினைவில் இல்லை. வலங்கிமானிலிருந்து உடையாளுருக்கு வண்டி அமர்த்திப் போகும் அவசியமும் எனக்கு இருந்ததில்லை. எல்லாம் நடை தான். கும்பகோணம் ரயில் நிலயத்திலிருந்து ஊடையாளுருக்கும், உடையாளூரிலிருந்து கும்பகோணம் ரயில் நிலயத்திற்கும் வயல் வரப்புகள் வழியே நடந்து சென்று தான் பழக்கம். அது தான் சுலபமும், சீக்கிரம் நிறைவேறும் ஒன்றும், செலவில்லாது நடந்துவிடும் காரியமும் ஆகும். ஒரு முறை என் பாட்டியை கிராமத்திலிருந்து காலை மூன்று மணிக்கு, வரப்புகளின் வழியே நடத்தி அழைத்துச் சென்றேன். அது ஒரு கதை. பின்னால் சொல்வேன். மணி என்ன என்று பார்ப்பதற்கு அன்று கிராமத்தில் யார் வீட்டிலும் கடிகாரம் இல்லை. "வெளுத்துண்டு வரமாதிரி இருக்குடா, நீ பாட்டியை அழைச்சிண்டு கிளம்பு" என்று அப்பா சொல்லி விட்டார். பாட்டியை நிதானமாக அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது. கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு நானும் பாட்டியும் போய்ச் சேர்ந்த போது மணி காலை ஐந்து. ஒன்றே கால் மணி நேரம் முன்னதாக. பிறகு அந்த இருட்டில் பாட்டியை அழைத்துக்கொண்டு எப்படி போய்ச் சேர்ந்தேன் என்பதை நினைத்து பயந்து போவேன், அதை நினைத்துப் பார்த்த போதெல்லாம்.

இரண்டு மாட்டு வண்டிகளில் தான் அன்று நாங்கள் ஊருக்குப் பயணமானோம். வண்டி கிளம்பும் போது நன்றாக் இருட்டி விட்டது. வலங்கிமானிலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் கொஞ்ச தூரம் வந்து பின் தேனாம் படுகை என்று வழிகாட்டி மரம் காட்டும் கப்பி ரோடில் மூன்று மைல் தூரம் மாட்டு வண்டியில் பயணம் செல்ல வேண்டும். அது கப்பி ரோடும் இல்லை. வண்டிச் சக்கரம் பதிந்து ஆழமான சுவடிட்ட மண் ரோடில் தான் வண்டி போகும்.

இருட்டி விட்டது. இரண்டு மாட்டு வண்டிகளில் நாங்கள். வண்டிபாதையும் இருட்டில் தான் மூழ்கியிருந்தது. இரண்டு வண்டிகளின் அடியில் மண்ணெணெய் ஹரிகேன் விளக்குகள் தொங்கிக்கொண்டிருந்தன. அந்த ஹரிகேன் விளக்கு வெளிச்சத்தில் தான் வண்டித் தடம் தெரிந்தது. அது தான் வண்டிக்காரனுக்கு வழி காட்டியது. மாடுகளை ஒட்டும் சத்தம். ஆங்காங்கே மின்மினிப் பூச்சிகள் தெரிந்தது. இரவு நேரத்தில் மரம் சூழ்ந்த இடங்களில், வயல் வெளிகளில் கேட்கும் இரவுப் பூச்சிகளின் சப்தம். தவளைகளின் 'க்ரோக், க்ரோக்' 'கொஞ்சம் முன்னாலேயே கிளம்பியிருக்கலாம். இருட்டிடுத்து' என்று மாமா சொல்ல, அப்பா, ' இவன்களோட மன்னாடறதிலேயேன்னா பாதி பொழுது போயிடறது. இவங்களை விட்டா வேறே கதியெல்லேன்னு இவங்களுக்கு நெனப்பு" என்று அலுத்துக் கொள்ள, வண்டிக்காரன், "சாமி, இப்படியே பேசினா எப்படிங்க சாமி நாங்க பொழைக்கறது, கும்பகோணமா, நீடாமங்கலமா நீங்க போறீங்க. திரும்பச்சே சவாரி கிடைக்கும்கிறதுக்கு. உடையாளுருக்கு அதுவும் இந்த இருட்டிலே கூப்பிடறீங்க. குழந்தை குட்டிகளோட குடும்பமா போறிங்க. நீங்களே சொல்லுங்க. வேறே யாராச்சும் வந்தாங்களா? உடையாளுருக்கு போனா, அங்கே என்ன சவாரி கிடைக்கும் எங்களுக்கு. வெத்து வண்டியாத்தானே நாங்க திரும்பணும். நாங்க திரும்பவேண்டாமா? இதெல்லாம் நெனைச்சுப் பாக்க மாட்டறிங்களே. இந்த நேரத்திலே வரதே பெரிசுங்க. சும்மா திரும்பறதுக்கு ரெட்டைச் சத்தம் கொடுக்கணும் நீங்க. என்னமோ மனம் போன போக்கிலே பேசீட் டுப் போறீங்க. உங்களே யாரு கேக்கறத்துக்கு இருக்காங்க?" என்று இரண்டு பேரும் மாறி மாறி பேசிக்கொண்டு வந்தார்கள். அப்பாவால், 'சரி, சரி, நீ பேசீட்டே இன்னம் லேட் பண்ணாதே என்று தான் சொல்ல முடிந்தது.

அந்த இருட்டில் வண்டிச்சக்கரத்தின் உருளல், இரவுப் பூச்சிகள் எழுப்பும் சத்தம், வண்டியினுள் பேச்சுக் குரல் எல்லாம் ஏதோ ஒரு புதிய உலகத்திற்கு, பழக்கப்படாத, உலகத்தில் பயணம் செய்து கொண்டிருப்பதான உணர்வு இப்போது அதை நினைக்கும் போது தோன்றுகிறது. ஒரு முறை, பாபுராஜபுரத்திலிருந்து, இல்லை, உமையாள் புரத்திலிருந்தா? - நினைவில் இல்லை சரியாக, காலையில் நான்கு மணிக்கு இப்படித்தான் மாட்டு வண்டியில் கிளமபி கும்பகோணம் வந்தோம். வழியெல்லாம் இருட்டுத் தான். அப்போது மின் விளக்குகள் சாலையில் இருந்ததில்லை. எங்காவது வழியில் ஒரு பிள்ளையார் கோவிலில் எண்ணைய் விளக்கொன்று மங்கலாகத் தெரியலாம். வண்டியின் அடியில் ஹரிகேன் விளக்கு ஒன்று அசைந்தாடிக்கொண்டு வழி காட்டிக்கொண்டிருந்தது. அது என்ன வழிகாட்டிக்கொண்டிருந்திருக்கும் என்பதை என்னால் இப்போது கற்பனை கூட செய்து கொள்ள முடியவில்லை. வீட்டை விட்டு வண்டி கிளம்பியதிலிருந்து, அது கொஞ்சம் நீளமான இரட்டை மாட்டு வண்டி, குடும்பம் பூராவுமே அதில் நெருங்கி அடைத்திருந்தோம், வண்டி வீட்டை விட்டு கிளம்பியதிலிருந்து, காலை நான்கு மணி என்பதையும் ஞாபகப் படுத்திக்கொள்ளவேண்டும், நாங்கள் தங்கியிருந்த வீட்டின் வாசலிலேயே காணப்பட்ட நாயொன்று, அது தெரு நாய் தான், வீட்டு வளர்ப்பு நாயல்ல, அக்கிரகாரங்களில் யாரும் நாய் வளர்க்கமாட்டார்கள். அது எப்போதும் அந்தத் தெருவில் ஏதோ ஒரு வீட்டின் முன் படுத்துக் கிடக்கும், அதன் தெரு அலைச்சல் முடிந்த பின். எந்த வீட்டிலிருந்தாவது யாரவது மிச்சம் மிகுதியை வந்து வெளியே போட்டால் ஒடி வந்து தின்னும். அந்த நாய் தான் விடியும் முன் நாலு மணிக்குக் கிளம்பிய வண்டியின் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது. பாவமாக இருந்தது. அதற்குக் கூட விஸ்வாசமும், பிரியாமை உணர்வும் இவ்வளவு தூரம் வருத்துவதாக இருக்குமென்று நாங்கள் நினைத்ததில்லை. " அது கொஞ்ச தூரம் வந்துட்டுப் போயிடுமுங்க. இல்லைன்னா, நான் திரும்பிப் போகும்போது என்னோட திரும்பிடும். நீங்க கவலைப் படாதீங்க," என்று வண்டிக்காரன் சொன்னது நினைவிலிருக்கிறது.

தூரத்தில் மஞ்சள் ஒளி ஒன்று சின்னதாக மின்னியது. "ஊரு வந்தாச்சு. அதோ மஞ்சளா தெரியறதே, அது தான் தெரு விளக்கு. தெருக்கோடி பிள்ளையார் கோயிலை ஒட்டி இருக்கும். இந்த இருட்டிலே அது தான் அடையாளம்" என்றார் அப்பா. வண்டி ஊருக்குக் கிட்ட நெருங்கியதும் விளக்குக் கம்பம் தெளிவாகத் தெரிந்தது. ஊர் எல்லையில் இருந்த பிள்ளையார் கோயிலும் விளக்குக் கம்பமும் மேடிட்ட இடத்தில் இருந்தன. அந்த மேட்டில் வண்டி ஏற கொஞசம் கஷ்டப்படத் தான் செய்தது. அந்த ஒரு விளக்கைத் தவிர ஊரில் வேறு தெரு விளக்குகள் இல்லை. ஒவ்வொரு வீட்டின் பிறையிலும் வைக்கப்பட்டிருந்த எண்ணைய் விளக்கை வைத்துத் தான் வீடுகளை அடையாளம் காண முடிந்தது. வீடுகளின் முன் ஒரு சிலர் நின்று கொண்டிருந்தவர்கள், ஒவ்வொருவராக விசாரிக்கத் தொடங்கினார்கள். "பிள்ளையாண்டானை அழைச்சிண்டு வந்தாச்சா? ஏன் இத்தனை நாழி?' என்று ஒவ்வொரு வீட்டின் வாசலிலிருந்தும் ஒவ்வொரு குரலில்.

- 1.1.08 -

நினைவுகளின் தடத்தில் - 15

- வெங்கட் சாமிநாதன் --ஊரின் ஆரம்பத்தில் ஒரு கோடியில் ஒரு கம்பத்தின் மேல் எரியும் மண் எண்ணைய் விளக்கைத் தவிர ஊரில் இரவு நடமாட்டத்திற்கு வேறு விளக்கே இல்லையென்றால் எப்படி இருந்திருக்கும் என்று இப்போது நினைத்துப் பார்க்கும்போது, அந்த வாழ்க்கை எப்படி இருந்திருக்கும், எப்படி வாழ்க்கை சாத்தியமாகியது என்று ஆச்சரியப்படத் தோன்றுகிறது. ஆனால் நான் தான் இப்போது அதை நினைத்துப் பார்க்கும்போது ஆச்சரியமும் திகைப்பும் அடைகிறேனே தவிர வேறு யாரும், நானே கூட அப்போது ஆச்சரியப்படவில்லை. வாழ்க்கையில் சகஜமான ஒன்றாகத்தான், அது பற்றிய நினைப்பே இல்லாமல் இருந்திருக்கிறார்கள். வாழ்க்கை அவர்களுக்கும் ஓடிக்கொண்டுதான் இருந்திருக்கிறது. அப்படி பார்க்கப் போனால், நிலக்கோட்டையிலேயே கூட அப்போது மின்சாரம் வந்துவிடவில்லை. எங்கள் வீட்டுக்கு வெளியே, உடையாளூரில் கண்ட மாதிரி, ஒரு விளக்குக் கம்பமும் மண்ணெண்ணெய் விளக்கும் தான் இருந்தது. மின்சார இணைப்பு வர நிலக்கோட்டை இன்னும் சில வருஷங்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. நான் நிலக்கோட்டையை விட்டுப் போவதற்கு ஒன்றிரண்டு வருஷங்களுக்கு முன்னரே மின்சார விளக்குகள் தெருவுக்கு வந்து விட்டன. ஆனால் மாமா இருந்த வீட்டுக்கு இன்னமும் மின்சார இணைப்பு தரப்படவில்லை. இன்னமும் எனக்கு ஞாபகமிருக்கிறது. தினமும் பள்ளிக்கூடத்திலிருந்து வந்த பின், சற்று நேரம் கழித்து அந்தி சாய்வதற்கு முன்னதாகவே அன்றாடம் சிம்னி, ஹரிகேன் விளக்குகளின் கண்ணாடிகளைக் கழற்றி எடுத்து அவற்றில் மண்டியிருக்கும் புகைபோக அலம்பித் துடைத்து, மண் எண்ணெயோ, அல்லது அகல் விளக்குகளுக்கு கடலை எண்ணெயோ ஊற்றி, விளக்கேற்ற தயாராக வைப்பது மாமாவின் வேலைகளில் ஒன்று.

உடையாளூரில் அந்நாட்களில் இரவில் தெருவில் நடமாட, வீடுகளை அடையாளம் காண ஒவ்வொரு வீட்டின் முன் திண்ணைப் பிறையில் எரிந்து கொண்டிருக்கும் அகல் விளக்கே போதுமானதாக இருந்திருக்கிறது. உடையாளூர் வீட்டில் ஒரே ஒரு ஹரிகேன் விளக்கு தான் இருந்ததாகப் பார்த்த ஞாபகம். அது தான் அவ்வப்போது தேவைக்கேற்ப வீட்டினுள் ஒவ்வொரு இடத்துக்கும் எடுத்துச் செல்லப்படும்.

எனக்கு அன்று இரவு அந்த கப்பி ரோடில் செய்த மாட்டு வண்டி பிரயாணம் தான், அந்த சூழலும் தனித்து யாருமற்ற இருண்ட வயல் வெளியின் நடுவே போகும் பாதையில் போகும் உணர்வுடன் கூடிய நினைவில் தங்கி இருக்கிறது. பின் இருளில் அந்த ஊருக்குள் நுழைந்தது. எடுத்த உடன் ஊர் தொடங்கும் மேட்டில் ஒரு சின்ன பிள்ளையார் கோயில், அதைத் தொடர்ந்து ஒரே சாரியில் இருந்த நான்காவது அல்லது ஐந்தாவது வீடு. அவ்வளவே. வீட்டின் முன் கட்டு கூடத்தில், கூடத்தை ஒட்டிய தாழ்வாரத்தில் ஹோமம் வளர்த்து அதன் முன் நானும் அப்பாவும் உட்கார்ந்திருந்ததும், வேத மந்திரங்களின் உச்சாடனமே ஒரு கவர்ச்சியாக இருந்ததும் நினைவில் இருக்கிறது. ஒரு கோஷ்டியாக நாலைந்து பேர் சாமவேத மந்திரங்களைச் சொல்லக் கேட்கும் ஆனந்தம் அன்றிலிருந்து தான் தொடங்கியது என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறார்கள் என்ற அர்த்தம் ஏதும் அன்று புரிந்ததில்லை என்பது ஆச்சரியமில்லை. இன்று வரைக்கும் புரிந்ததுமில்லை. ஆனாலும் கேட்க இனிமையாக இருந்து வருகிறது. அன்று எனக்கு முகம் வீங்கியிருந்ததும், அது பொன்னுக்கு வீங்கி என்று சொன்னார்கள். அம்மா தன் தங்க செயினை என் கழுத்தில் மாட்டிவிட்டாள். அதை ஒரு நாள் பூராவும் போட்டுக்கொண்டிருந்தேன். வேறு ஒன்றும் அந்த உபநயனம் சம்பந்தப்பட்டது நினைவில் இல்லை. நிலக்கோட்டைக்குத் திரும்பியதும் தினம் மூன்று வேளை என்னை சந்தியாவந்தனம், மாத்தியான்னிகம்என்று மாமாவும் உடனிருந்து என்னைச் செய்யவைத்துக் கொண்டிருந்தது இன்னமும் மிகத் தெளிவாகத் திரையோடிக்கொண்டிருக்கிறது.

உடையாளுரில் அப்பா இருந்த வீடு சொந்த வீடு இல்லை. மண் தரை உள்ள வீடு தான். சாணி மெழுகிய தரை. கொஞ்சம் குண்டும் குழியுமாக இருந்தாலும் குளிர்ச்சியான தரை. எல்லா தஞ்சை கிராமத்து வீடுகளைப் போலவே இரண்டு கட்டுக்கள் கொண்ட நாட்டு ஓடு வேய்ந்த வீடு. இதற்கும் முன்னால் நான் இந்த ஊருக்கு, இந்த வீட்டுக்கு வந்திருக்கவேண்டும், ஆனால் எப்போது என்பது தான் நினைவுக்கு வர மறுக்கிறது. ஏனெனில் பல விஷயங்கள் முன்னர் பார்த்ததாக நினைவில் பதிந்திருப்பவை இப்போது இல்லாதிருந்தன. அப்பா வீடு இருந்த சாரியிலேயே நான்கு வீடு தள்ளி இருந்த வீட்டில் சித்தப்பா இருந்தார். சீனு என்று அழைக்கப்பட்ட சீனிவாசன். சித்தப்பாவோடு சித்தியும் பாட்டியும் இருந்தார்கள் அந்த வீட்டில். அந்த வீடு தான் தாத்தா இருந்த வீடு. எங்களுக்குச் சொந்த மான வீடு. எப்போது அப்பா தனியாக வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வந்தார் என்பது தெரியாது. அப்பாவைப் பெற்ற பாட்டி சித்தப்பா இருந்த வீட்டில் ஒரு ஊஞ்சலில் இரு கால்களையும் நீட்டி உட்கார்ந்து இருந்த படியேதான் எப்போதும் பார்த்திருக்கிறேன். பாட்டி விதவைப் பாட்டி. அந்த வீடு நன்றாக செங்கல் தளம் பாவிய வீடு. நன்றாக கட்டப்பட்ட வீடு. "கொலு வச்சிருக்காடா, சித்தப்பா வாத்திலே பாட்டி கூப்பிடறா பாக்க வரயா?," என்று அம்மா அழைத்துக்கொண்டு சென்றதும் அங்கு கூடத்தில் ஆறு ஏழு படி அமைத்து கொலுவைத்திருந்ததைப் பார்த்ததும் ஞாபகம் இருக்கிறது. எப்போதோ அந்தப் பாட்டி ஊஞ்சலில் உட்கார்ந்த படியே என்னையும் அழைத்துப் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டு '"பயப்படாதே" என்று சொல்லி ஊஞ்சலை ஆட்டியதும், "இந்தா இதை எடுத்துக்கோ," என்று என்னவோ பக்ஷணம் தின்னக் கொடுத்ததும், "நீ சாப்பிடு பாட்டி, நான் அப்புறமா சாப்பிடறேன்" என்று நான் சொன்னதாகவும், "அடேயப்பா, பாரேன், இந்த பேரனுக்கு புதுசா பார்த்த பாட்டிகிட்டே எத்தனை கரிசனம்னு! பாட்டி சாப்பிட்டாத்தான் இவனுக்கு உள்ளே இறங்கும் போல இருக்கு! என்னடா சொன்னே "நீ சாப்பிடு பாட்டி" எங்கே இன்னொரு தரம் சொல்லு பாப்பம்!" என்று என்னை எல்லோரும் அடிக்கடி கேலி செய்வது வழக்கமாகியிருந்தது. அந்த பாட்டி இல்லை இப்போது. அந்த வீட்டில் பாட்டியோடு, சீனுவாசன் சித்தப்பா, சித்தியோடு, இருபது இருபத்தைந்து வயதில் இன்னொரு சித்தப்பாவையும் பார்த்த ஞாபகம். அவரை ரங்கண்ணா என்று எல்லோரும் அழைத்ததும் நினைவில் இருக்கிறது. அவரை இப்போது உபநயனத்துக்கு வந்திருந்தபோது பார்க்கவில்லை. ஆனால் இது பற்றியெல்லாம் கேட்கவேண்டும் என்று அப்போது எனக்குத் தோன்ற வில்லை. 1947-48-ல் நான் மதுரையில் ஒருவருஷம் படித்துவிட்டு கும்பகோணத்தில் மேலே படிப்பைத் தொடர்வதற்காக உடையாளூர் வந்த போது தான், அம்மா அவ்வப்போது பழைய கதையெல்லாம் எனக்கு ஒழிந்த வேளைகளில் சொல்வாள். அப்போது தான் நான் அம்மாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ரங்கண்ணா ஒரு நாள் காணாமல் போய் விட்டதாகவும், எங்கே போனார், ஏன் போனார், இப்போது எங்கே இருக்கிறார்? என்று யாருக்கும் தெரியவில்லை என்றாள். கொஞ்ச கால கவலைக்குப் பிறகு அதுபற்றி யாரும் நினைப்பதில்லை, இனி பிரயோஜனம் இல்லை என்று, என்றாள். ரங்கண்ணாவுக்கு கொஞ்சம் மனப் பிறழ்வு இருந்தது என்றும் சொன்னாள்.

அந்த வீட்டில் கொல்லைக் கட்டில் ஒரு பசு மாடு கட்டியிருந்ததைப் பார்த்த ஞாபகம். அந்த மாடு இல்லை இப்போது. அப்பா ஒரு சிலேட்டு குச்சியோட, ஒரு ஒண்ணாங்கிளாஸ் பாடப்புத்தகமும் வாங்கி வந்து என்னிடம் கொடுத்து இரண்டு வீடு தள்ளி ஒரு பெரியவரிடம் அழைத்துச் சென்றார். அவர் திண்ணையில் உட்கார்ந்திருந்தவர் என்னைப் பக்கத்தில் உட்கார வைத்து சொல்லிக்கொடுக்க ஆரம்பித்தார். அதுவும் ஞாபகம் இருக்கிறது. ஆக, ஒரு வேளை எனக்கு அக்ஷராப்பியாசம் செய்து வைக்கத் தான் மாமா என்னை உடையாளுருக்கு அழைத்து வந்திருந்தாரோ என்னவோ. அது என் ஐந்தாவது வயதில் இருக்க வேண்டும். ஆனால், உடையாளுரில் பார்த்த காட்சிகளும் நடந்த சில விஷயங்களும் தான் நினைவில் இருக்கின்றனவே தவிர, இப்போது என் உபநயனத்தை ஒட்டி உடையாளுருக்கு வந்த பயணம் போல அந்த பழைய பயணம் நினைவில் இல்லை.

அப்போதெல்லாம் உடையாளூரில் ஆரம்பப் பள்ளிக்கூடம் கூட இருந்ததில்லை. ஆஸ்பத்திரி, பள்ளிக்கூடம், தபால் ஆபீஸ் என்று எதற்கெடுத்தாலும், மூன்று மைல் தூரத்தில் இருந்த வலங்கைமானுக்குத் தான் போகவேண்டும். அது தான் உடையாளூருக்கு அருகாமையில் இருந்த வசதிகள். ஊர் முழுதும் ஒரு மேடிட்ட நிலத்தில் அமைந்திருந்தது. நாங்கள் இருந்த தெரு ஒரு சாரி மாத்திரமே வீடுகள் கொண்டது. அதன் கிழக்குக் கோடியிலும் மேற்குக் கோடியிலும் இரு சாரிகளிலும் வீடுகள் கொண்ட இரண்டு தெருக்கள். அவற்றை இணைக்கும், எங்கள் தெருவுக்கு இணையான மற்றொரு தெரு. இவ்வளவு தான் உடையாளுர்ர். மொத்தமே 100 வீடுகளுக்குள் தான் இருக்கும். மேடிட்ட ஊரின் கிழக்குக் கோடியில் ஒரு பழங்கால சிவன் கோவில். 11-ம் நூற்றாண்டுக் கோவில். அதன் கல்வெட்டுக்களில் இருந்து ஒரு பகுதி அச்சிடப்பட்டு கண்ணாடியும் சட்டமும் போட்டு சுவரில் தொங்கிக்கொண்டிருக்கும். அது இப்போது இல்லை. என்னவாயிற்று என்று அர்ச்சகருக்கே தெரியாது. மேற்குக் கோடியில் ஒரு கோயில். செல்வமாகாளி அம்மன் கோயில். செல்வ மாகாளி தான் ஊரில் மிகப் பிரசித்தமான தெய்வம். ஊருக்கே குல தெய்வம். ஊரில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெண் குழந்தைக்காவது அம்மன் பெயர் இடப்பட்டிருக்கும். என் தங்கையின் பெயரே செல்லம் தான். இந்த ஊர் பற்றியும் பிரசித்தி பெற்ற செல்வமாகாளி அம்மன் பற்றியும் உ.வே.சா தன் நினைவு மஞ்சரியிலோ அல்லது எதிலோ எழுதியிருக்கிறார். உடையாளூருக்கு ஒரு பழங்கால பெயர் உண்டு என்று சொல்லி அந்த பெயரையும் அவர் குறித்திருந்தார். அதை நான் தேடித் தேடிப் பார்த்து விட்டேன். எனக்குக் கிடைக்கவில்லை. உடையாளூரைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் எனக்கு உ.வே.சா வின் நினைவும் எழும்.

உடையாளுருக்கு அன்று இரவு மாட்டு வண்டியில் ஒரு கப்பி ரோடில் பிரயாணம் செய்ததும், பள்ளியோ, ஆஸ்பத்திரியோ, தபால் வசதியோ எதுவும் அற்று இரவு அரிகேன் விளக்குகளும் அகல் விளக்குகளுமே மஞ்சள் நிற ஓளியை மினுக் மினுக் கென்று வீசிக்கொண்டிருந்ததையும், தங்களுக்கு இந்த வசதி எதுவும் இல்லாதது பற்றி எந்தக் கவலையோ வருத்தமோ இல்லாது, தங்களுக்கு அவையெல்லாம் மறுக்கப்பட்டவை என்று கூட நினையாமல் இந்த வசதிகளோடு வாழும் மக்களின் சந்தோஷங்களோடும், துக்கங்களோடும் வாழ்ந்து உடையாளூர் ஜனங்கள். நினைத்துப் பார்க்க எந்த விசேஷ குறையும் இல்லை. இன்று அது பற்றியெல்லாம் நினைவிலிருந்து எடுத்து எழுதும்போது, உ.வே.சாமிநாத அய்யர், சுவடு தேடி கிராமம் கிராமமாக செய்த மாட்டு வண்டிப் பயணங்களும் > ஹரிகேன் விளக்கொளியோ அகல் விளக்கொளியிலோ தான் அந்த பழம் தமிழ்ச்சுவடிகள் அவருக்கு தமிழ் இலக்கியத்தின் மகோன்னதத்தை ஒளி வீசிக் காட்டியது என்று நினைத்துப் பார்க்கத் தோன்றியது. அந்த பயணங்களும், அந்த உடையாளூர் தினங்களும், ஜனங்களும், என்னை உ.வே.சாவுக்கும் 19-ம் நூற்றாண்டுக்கும் இட்டுச் சென்று அந்த நாள் வாழ்க்கையின் காட்சிகளைக் கோடி காட்டின. 19-ம் நூற்றாண்டு கிராமங்கள், வாழ்க்கை இப்படித்தான் இருந்திருக்குமோ என்று நினைக்கத் தூண்டின.   [தொடரும்]

10.1.08

''பதிவுகள்' ஜூன் 2008 இதழ் 103

•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Monday•, 10 •July• 2017 21:54••  

•Profile Information•

Application afterLoad: 0.001 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.038 seconds, 2.37 MB
Application afterRoute: 0.044 seconds, 3.12 MB
Application afterDispatch: 0.111 seconds, 5.92 MB
Application afterRender: 0.114 seconds, 6.12 MB

•Memory Usage•

6486144

•12 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '15f06avbq8hqa2pqarqdgqb8h5'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1713306985' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = '15f06avbq8hqa2pqarqdgqb8h5'
  4. INSERT INTO `jos_session` ( `session_id`,`time`,`username`,`gid`,`guest`,`client_id` )
      VALUES ( '15f06avbq8hqa2pqarqdgqb8h5','1713307885','','0','1','0' )
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 44)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 3987
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-04-16 22:51:25' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-04-16 22:51:25' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='3987'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 23
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-04-16 22:51:25' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-04-16 22:51:25' )
      ORDER BY a.ordering

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- வெங்கட் சாமிநாதன் -=- வெங்கட் சாமிநாதன் -