தி.க.சி. யின் நினைவில்

••Friday•, 04 •July• 2014 18:28• ??- வெங்கட் சாமிநாதன் -?? வெங்கட் சாமிநாதன் பக்கம்
•Print•

தி.க.சி. யின் நினைவில்என்னை மிகவும் திகைப்புக்கும் ஆச்சரியத்துக்கும் உள்ளாக்கிய மனிதர் சமீபத்தில் மறைந்த தி.க.சி. அறுபதுகளின் இடை வருடங்களிலிருந்து தான் தி.க.சி. எனக்குத் தெரிய வந்ததே.  தாமரை என்னும் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகையின் ஆசிரியராக. தமிழ் நாட்டு முற்போக்கு எழுத்தாளர்களுக்கு ஆதரவாளராக, கட்சிக் கோட்பாடுகளுக்கு , பிரசாரகராக, வழிகாட்டியாக. இவையெல்லாம் அவரது வெளித்தெரிந்த ரூபங்கள் பலவென்றாலும் அதிகம் கேட்கப்படும் குரல் ஒன்று தான். பின்னிருந்து தூண்டும் சக்தியும் ஒன்றுதான்.  இவை எதுவும் எனக்கு பிடித்தமான காரியங்கள் அல்ல.  அதே காலத்தில் வெளிவந்து கொண்டிருந்த, எழுத்து, இலக்கிய வட்டம் போன்ற பத்திரிகைகள் எனக்குப் பிடித்தமானவையாக, என் பார்வைக்கு ஒத்திசைவு கொண்டவையாக இருந்தன. தாமரை அல்ல. ஆனால், இந்த முற்போக்கு முகாமில் இருப்பவர்கள் பற்றியோ அவர்கள் செயல்பாடுகள் பற்றியோ எதுவும் கறாராகச் சொல்லி விட முடிந்ததில்லை. முற்போக்கு கூடாரத்திலிருந்தவர்களோடு மிக நெருக்கமாக இருந்த வல்லிக்கண்ணன், தாமரை இதழ் கட்சிக்கென தொடங்கப் பட்டதே விஜய பாஸ்கரன் நடத்தி வந்த சரஸ்வதியின் திறந்த மனப்போக்கும் செயல்பாடுகளும் ஜீவாவுக்குப் பிடிக்காமல் போய்விடவே,  கட்சியின் குரலை முழுக்க பதிவு செய்வதற்கென்றே தொடங்கப்பட்டது தான் தாமரை என்று சொல்லியிருக்கிறார். இதை அவர் சொன்னது, தாமரை தொடங்கப்பட்ட போது அல்ல.  வெகு காலம் பின்பு. அனேகமாக, என் நினைவு சரியெனில், தீபம் பத்திரிகையில், சரஸ்வதி காலம் என்னும் தொடரின் கடைசி பக்கங்களில் அதன் மரணத்தைப் பற்றிச் சொல்லும் போது இந்த திரைக்குப் பின் நடந்த கதையைச் சொல்கிறார். சரஸ்வதி பத்திரிகை  அச்சாகி வந்த ஜனசக்தி பிரஸ்ஸில் அதைத் தாமதப் படுத்தியே ஜீவா சரஸ்வதியை கடை மூட வைத்தாராம். அவர் சொல்லியிராவிட்டால் இந்த ரகசியங்கள் வெளிவராமலே போயிருக்கும். வல்லிக்கண்ணன் தைரியமாக தன் மனதில் பட்டதை, தான் பார்த்த உண்மைகளைப் பதிவு செய்த மிக அரிதான  சந்தர்ப்பங்களில் இதுவும் ஒன்று. இன்னொன்றையும் சொல்லி விடுகிறேனே. விஜய பாஸ்கரனின் சமரன் என்ற இதழில் திமுகவையும் அதன் தலைவர்களையும் சாட்டையடி என்று தான் அந்த விளாசலைச் சொல்ல வேண்டும். அப்படி விளாசியவர் தான் அதற்கு முன்னரும் மௌனம். பின்னரும் சுமார் 50 வருடங்களுக்கு வாயைத் திறக்கவில்லை. இவை யெல்லாம்  எப்படி நிகழ்கின்றன என்பது எனக்கு இன்னமும் புரியாத புதிராக, ஆச்சரியமாக இருந்து வருகிறது.

- வெங்கட் சாமிநாதன் -விஜய பாஸ்கரன் தன் சரஸ்வதி இதழில் தன்னை ஒரு செஞ்சட்டை அணிந்த தெருக்களில் கட்சி கோஷமிட்டுச் செல்பவராகக் காணவில்லை. அதில் க.நா.சு. சி.சு. செல்லப்பா, ஈழத்து கே டேனியல், டொமினிக் ஜீவா, என எல்லோருக்கும் இடமிருந்தது. மறக்கப்பட்டிருந்த மௌனியின் கதைகள் தொகுக்கப்பட்டதே கூட மௌனி வழிபாடாகிவிட்டதாக குற்றம் சாட்டிய ஈழத்துப் பேராசிரியர் ஏ ஜெ. கனகரத்னா வின் மௌனி வழிபாடு என்ற ஒரு கண்டன கட்டுரைக்குக் கூட இடம் இருந்தது. சரஸ்வதியில் வெளிவந்த ரகுநாதனின் எழுத்துக்களில்  கட்சி கோஷங்கள் இருக்கவில்லை. ஏன், முதன் முதலாக செல்லப்பா என்னை சரஸ்வதி காரியாலயத்துக்கு அழைத்துச் சென்ற போது (1961) விஜய பாஸ்கரன் என்னையும் சரஸ்வதிக்கு எழுதச் சொன்னார். யாரை? யாருக்கு அந்த அழைப்பு? அமெரிக்க முதலாளித்துவத்துக்கும், ஏகாதிபத்யத்துக்கும் அடிவருடியும், சி.ஐ.ஏ. ஏஜெண்ட்டும், ஆன என்னை, அமெரிக்காவிலிருந்து மணிஆர்டரில் பணம்  பெற்றுவருவதாக முற்போக்குகள் எல்லாம் ஒரே குரலாக விடாது குற்றம் சாட்டி வந்த என்னைத் தான் எழுதச் சொன்னார். அது ஆரம்ப காலம். நான் என்னங்க எழுதப் போறேன்?” என்று சொல்லி என்னை அறியாதே பின்னர் அந்தக் கட்சிக்குள் ஒரு பயங்கர சுனாமி புயல் வீசக்கூடும்  அபாயத்தைத்  தடுத்துவிட்டேன்.

அப்படியும் கூட, ஜீவா ஒன்றும் ஒரு பயங்கர புரட்சித் தீ கக்கும் கோஷங்களே அறிந்த கட்சிக்காரர் இல்லை. இலக்கியத்தில் தோய்ந்தவர். பாரதி பற்றி மணிக்கணக்கில் பேசுபவர். கட்சிப் பிரசாரம் என்று வந்து விட்டால், அது வேறு விஷயம். ஏழை விவசாயியின் வாழ்க்கையில் ஒரு ட்ராக்டரின் வருகை எத்தகைய முக மலர்ச்சியைத் தரும் என்று கிட்டத்தட்ட கருணாநிதி பாணி வசனத்தில் வர்ணித்து மாய்ந்து போவார். இப்படி அவர் எழுத்தைப் படித்த ஞாபகம் இருக்கிறது எனக்கு. சின்னப் பையன் சுந்தர ராமசாமியை, “நீ பூணூல் போட்டுக்கணும்” என்று உபதேசித்து, ”எங்கே, நீ சந்தியா வந்தன மந்திரம் சொல்லு பாப்பம்” என்றும் கேட்பார். நல்ல மனிதர் ஆனால் அப்பப்போ கட்சி தான் அவரை சாமியாடச் சொல்லும் போலும். என்ன செய்ய?, வல்லிக்கண்ணன் சொல்வதை நம்பித் தான் ஆகணும்.

ஆனால், தி.க.சியின் ஆசிரியத்வத்தில் வந்த தாமரை தன்னை ஒரு கட்சித் பத்திரிகை என்று பிரகடனப்படுத்துவதற்கான சமாசாரங்களையும் தவறாது பிரசுரித்து வந்தாலும்,(அச்சாவது ஜனசக்தி பிரஸ்ஸிலாக்கும்) பூமணி, பா. செயப்ரகாசம், கி. ராஜநாராயணன், பிரபஞ்சன், ஆ.பழனியப்பன் (பெயர் சரிதானா?) சார்வாஹன், வண்ணநிலவன், இப்படி பலர், அதில் எழுதினார்கள். தஞ்சை பிரகாஷ் நாடோடிக் கதைகள் நிறைய எழுதினார் என்று நினைவு. இன்னொரு சுவாரஸ்யமான விஷயம் எழுத்து பத்திரிகையும் க.நா.சு.வின் இலக்கிய வட்டமும் புதுக்கவிதைக்கு களம் தந்ததும் அதை தீவிரமாக எதிர்த்து வந்த சிதம்பர ரகுநாதன், நா.வானமாமலை, கலாநிதி கைலாசபதி எம்.ஏ. பிஹெச் டி ஆகியோரின் புதுக்கவிதைக்கு எதிரான தொடர்ந்த பிரசாரத்துக்கும் இடம் தந்தது. அத்தோடு, நிற்கவில்லை. வானம்பாடிகளின் “புதுக்கவிதைகளும்(?):” அதில் பிரசுரமாயின. சி.மணி நா.வானமாமலையின் புதுக்கவிதை எதிர்ப்புக்கு பதிலளித்த கட்டுரையையும் தாமரை பிரசுரித்தது. தருமு சிவராமூவின் E = mc2 என்னும் கவிதைக்கு வானம்பாடிகளின் ஆசிரியக் குழுவினரும் முற்போக்கு கவிஞருமான சிற்பி அவர்களின் நீண்ட பாஷ்யத்தையும் பிரசுரித்தது. யாருடைய கவிதையை?, அராஜக வாதியும், இருள்மய வாதியும் மாயாவாதியும் இன்னும் என்னென்னவோ வாதியும் மட்ட ரக புளுகனும், அற்ப புத்தி படைத்த அவதூறுக்காரனும், (எல்லாம் திகசி அவர்கள் கொடுத்த பட்டங்கள் தாம்) ஆன, அரூப் சீவராம் என்று தனக்கு அந்த சில நாட்களில் பெயர் சூட்டிக்கொண்ட இன்றைய பிரமிள் கவிதையை. பிரமீள்  ஒவ்வொரு முறையும் எழுத உட்காரும்போது தன் பெயரை, அல்லது அதன் உச்சரிப்பை மாற்றிக் கொள்வார். வேறு வழியின்றி பிரமிள் என்ற பெயர் நிலைத்தது அவர் மறைவுக்குப் பிறகு தான்.

இதற்கிடையில் புதுக்கவிதையை ஏதொ கொள்கை என்று அவர் கற்பித்துக் கொண்டவகையில் எதிர்த்து வந்த கலாநிதி கைலாசபதி எம்.ஏ. பிஎச் டி அவர்கள், வானம்பாடிக் கவிஞர்களில் ஒருவரான தமிழன்பனின்  தோணி  என்ற தலைப்பின் ”புதுக்கவிதை” தொகுப்புக்கு பாராட்டுக்களும் தன் ரசனையும் நிறைந்த நீண்ட முன்னுரை ஒன்று எழுதி ஆசீர்வதித்து இருந்தார்.  தமிழன்பனுக்கும் அவர் கட்சியின் வசிஷ்டர் வாயால் பிரம்மரிஷி என்ற பட்டம் கிடைத்த சந்தோஷம். ஆனால் யாருமே தாமரை பிரசுரித்த சார்வாகனின் கவிதைகளைப் பற்றி மூச்சு விடவில்லை. தாமரையில் எழுதுவதால் அவர் முற்போக்காகத் தானே இருக்க வேண்டும், திகசி யும் தீர விசாரிக்காமல் போட்டிருக்க மாட்டாரே  என்ற நினைப்பில்  கட்சிப் பெரியவர்கள் ஏதும் மறுப்புச் சொல்லவில்லை. கா. சிவத்தம்பிக்கு கலாநிதி கைலாசபதி எம். ஏ. பிஹெச். டியின் புதுக்கவிதை எதிர்ப்புப் பிரசாரத்தையும் ஆதரித்துப் பேசவேண்டும்.  தாமரையில் புதுக்கவிதைத் தோற்றம் தரும் சமாசாரங்களுக்கும் சமாதானம் சொல்லவேண்டும் என்னும் திக்குமுக்காடலில் தவிப்பு. இப்படியா?, அப்படியா? என்ற தீர்மானத்துக்கு வரமுடியாமல் தவித்தார். தாமரை ஆசிரியர் தி.க.சியைச் சாடமுடியுமோ? அல்லது தன் சித்தாந்த மூலவரான கலாநிதி கைலாசபதிக்குத் தான் எதிராக ஒரு நிலை எடுக்கமுடியுமோ? எனவே,”முன்னாலே பாத்தா செட்டியார் குதிரை, பின்னாலே பாத்தா கௌண்டர் குதிரையாட்டும் தெரியுது? என்ற அவரது ஒரு சமாளிப்பைக் கீழே பார்க்கலாம்.

“எனவே, முற்போக்குக் கடப்பாடுடைய தாமரை புதுக்கவிதைக்குத் தரும் முதலிடம் ஆராயப்படவேண்டியதொன்றாகும். தமிழ் நாட்டில் கிராமீயக் கலை ஆய்வுக்கு இலக்கியத் தளம் அமைத்துக்கொடுத்த தாமரை, இன்று புதுக்கவிதை பயில்வுக்கு முக்கிய இடம் கொடுக்கின்றது. இது மேனிலைத் தழுவலா (elitism-ஆ) அன்றேல் அடிநிலை மக்களை ஆற்றுப்படுத்தலா என்பது பற்றிய கருத்துத் தெளிவு எனக்கு ஏற்படவில்லை. ஆகஸ்ட் 1973 மல்லிகை இதழில் கா.சிவத்தம்பி)

கா. சிவத்தம்பி நல்ல படிப்பாளி, கைலாசபதி எம்.ஏ.பிஎச் டிக்கு இல்லாத இலக்கிய உணர்வும் ரசனையும் வாய்க்கப் பெற்றவர் என்றாலும் கலாநிதிக்கு ஒத்து ஊதியே பழக்கப் பட்டவர். அந்தப் பழக்கத்தின் காரணமாக, செம்மொழி மாநாட்டுக்கு வந்து கருணாநிதி புகழ்பாடியும் சென்றார். கருணாநிதி சாதாரண பாராட்டுக்களில் திருப்தி அடைபவரில்லை என்பது உலகம் அறியும். 

என்னமோ என்று நான் நினைத்திருந்த தி.க.சி. தன் தாமரை ஆசிரியத்வத்தில் பெரிய பெரிய அறிஞர் பெருமக்களை எல்லாம் கழைக்கூத்தாட வைத்துள்ளார் என்று பார்க்கும் போது, எனக்கு எல்லாம் தமாஷாகத் தான் இருந்தது. நான் ரசித்தேன். வேறு யாரும் நினைவு படுத்தாதையெல்லாம் நான் இப்போது நினைவு படுத்துகிறேன்.

- வெங்கட் சாமிநாதன் -வெகு ஆச்சரியமான நிகழ்வுகள் இவை. க.நா.சுவின் இலக்கிய வட்டம்  1948 – 1964 கால கட்டத்திய இலக்கிய நிகழ்வுகள் குறித்து சாதனை இதழ் என்றோ என்னவோ பெயரில் வெளியிட்டிருந்தது. அதில் நானோ, நகுலனோ, க.நா.சு. வோ எழுதியது பெரிய விஷயம் இல்லை. எனக்கு ஆச்சரியம் தந்தது தி.க. சியும் அதில் ஒரு மிக மிக நீண்ட கட்டுரை எழுதியிருந்தார். நினைவிலிருந்து எழுதுகிறேன். அதில் வணிக பத்திரிகைகளும் எழுத்தாளர்களும் செய்யும் நாசவேலைகளுக்கு ”மரண அடி” தந்தது மட்டுமல்லாமல் முதலாளித்துவத்துக்கு எதிராக, சோஷலிஸ சமுதாய உருவாக்கத்துக்கு எழுத்தாளர் பாடு படவேண்டும் என்றோ என்னவோ எழுதி, சில நல்ல எழுத்துக்களையும் குறிப்பிட்டு எழுதியிருந்தார். அவர் பாராட்டுக்கள், எழுத்து மக்களுக்காகவே தானே ஒழிய, வணிகத்துக்காக அல்ல, கலையும் உழைக்கும் பாட்டாளி மக்களின் எழுச்சிக்காக…….வகையறா வகையறாவாக வே இருந்ததாக என் நினைப்பு.  பிராபல்யங்களை எதிர்த்த வரையில் சரி என்பது என் நினைப்பாக இருந்தது. கூரான இலக்கியப் பார்வை இல்லாத ஒரு நீண்ட கட்டுரைக்கு க.நா.சு இடம் கொடுத்ததும், அதிகப் பேர் எழுதாத போது எழுதக் கேட்டு வந்ததை மறுப்பானேன் என்றும் இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் மாறாக, தி.க.சி. எல்லோரிடமும் சகஜ பாவத்தோடு பழகி வந்தவர் தன்னோடு கொள்கையளவில் மாறுபட்டு விரோதம் கொண்டவர்களுடனும் சினேகம் கொண்டிருந்தார் என்பது அப்போது எனக்குத் தெரியவில்லை.

கடுமையான, காரசாரமான  வாத விவாதங்கள் புதுக்கவிதை பற்றி நிகழ்ந்து வந்த கட்டம் அது. வானமாமலைக்கு எழுத்து பத்திரிகையிலும் அவரது புதுக்கவிதை எதிர்ப்புக்கு நீண்ட பதில் தந்திருந்தார் செல்லப்பா அதற்கு முன்னோ பின்னோ நான் விடுமுறையில் தெற்கே வந்திருந்த போது சென்னையில் செல்லப்பாவைப் பார்க்க வந்த போது அங்கு அவர் வீட்டில் சார்வாகனையும் தி.க.சியையும் செல்லப்பாவுடன் வெகு கால சினேகிதர்கள் போல உரையாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். செல்லப்பா அவர்கள் இருவருக்கும் என்னை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது நான் சார்வாஹனிடம் சொன்னேன். “ இங்கு தி.க.சியை இங்கு பார்ப்பதும் அவர்  வெகு சகஜ பாவத்தோடு உங்களோடும் செல்லப்பாவோடும் உரையாடிக்கொண்டிருப்பார் என்று நான் நினைக்கவே இல்லை. சந்தோஷமாக இருக்கிறது” என்றேன். அதற்கு சார்வாஹன் சொன்னார். “தாமரையே இப்போதெல்லாம் அவ்வளவு கடுமையாக இல்லையே” என்றார். “ஆமாம், கட்சியையும் மீறி சில விஷயங்கள் அதில் வருகின்றன, பார்த்தேன்” என்றேன்
ஜெயகாந்தன் முற்போக்கு எழுத்தாளர்களின் கட்சிக்காரர்களின் சூழலில் வளர்ந்தவர். சிறு வயதிலிருந்தே அவரை ஆதரித்தவர்கள் அவர்கள் தான்.
உன்னைப் போல் ஒருவன் படம் தில்லியில் ஷீலா தியேட்டரில் ஒரு நாள் திரையிடப்பட்டது. பார்த்தேன். வெகு தைரியமான தீவிர முயற்சி என்று எனக்குப் பட்டது. அதற்கு உதவியவர்கள், படத்தில் பேராசிரியராக நடித்தவர் எல்லோரும் முற்போக்கு முகாமைச் சேர்ந்தவர்கள். தில்லியில் இருந்தவர் ஒருவர் சோவியத் லாண்ட் பத்திரிகையில் வேலை பார்த்தவர். அவர் வீட்டில் தான் ஜெயகாந்தன் கரோல்பாகில் தங்கியிருந்தார். அவரை வரவேற்றுப் பாராட்டிப் பேசிய கூட்டத்தில் தலைமை தாங்கிய பால தண்டாயுதமும் இருந்தார். ஜெயகாந்தன் பேசும் போது, ஏதோ ஒரு கட்டத்தில் ”பாலா அவர்கள் சார்ந்திருக்கும் இயக்கம்”. என்று தன்னை அன்னியப்படுத்திக் கொண்டு பேசினார். எனக்கு இது என்ன புதிர் என்று பட்டது. சில வருடங்களுக்குப் பின் கசடதபற இதழில் நான் ஜெயகாந்தனைக் கடுமையாகத் தாக்கி எழுத நேர்ந்தது. அப்போது திகசி எனக்கு எழுதிய கடிதத்தில் “இதற்கெல்லாம் காரணம் நீங்களும் உங்களைப் போன்றவர்களும் தான். நீங்கள் வளர்த்து விட்ட ஜெயகாந்தன் வேறு எப்படி நடந்து கொள்வார்?” என்ற அர்த்தத்தில் எழுதியிருந்தார். ஜெயகாந்தன் தன்னை முற்போக்கு முகாமிலிருந்து விலக்கிக் கொண்டுவிட்டார் என்று தெரிந்தது. ஆனந்த விகடனிலும் சாவியின் ஆசிரியத்வத்தில் இருந்த தினமணிக் கதிரிலும் வெகுவேகமாக ஜெயகாந்தன் வளர்ந்துவிட்டதன் விளைவு என்று நினைத்துக்கொண்டேன். இந்தக் கடிதம் கசடதபற பத்திரிகையோடு நிகழ்ந்த சர்ச்சையில் அதற்கு எதிராக தருமு சிவராமு எழுதிய “கோணல்கள்” கட்டுரையில் பிரசுரமானது. கட்சியின் தலைமைக்கு திகசி எழுதிய கடிதம் சம்மதமாக இருக்கவில்லை என்று பின்னர் தெரிய வந்தது பேச்சு வாக்கில் தான். இதெல்லாம் பெரிய விஷயமில்லை. சின்ன சின்ன உரசல்கள். திகசியையும் கட்சியின் தலைமையையும் பொருத்த வரை. திகசியின் பொறுப்பில் தாமரை கட்சிப் பத்திரிகை என்ற பெயர் பெற்றிருந்தாலும், கட்சி சார்பும் கொள்கை விளக்கங்களும் நன்கு வெளித்தெரிய இருந்தாலும், திகசி அவர் காலத்திய இளைய தலைமுறை எழுத்தாளர்களிடையே தம்மை ஊக்குவிக்கும் பெரியவர் என்ற ஸ்தானம் பெற்றவராக இருந்தார். வல்லிக்கண்ணனிட மிருந்தும் கூட தன்னை ஊக்குவிக்கும்  ஒரு கார்டு கட்டாயம் வந்து விடும் தான். ஆனால் திகசி தாமரையில் இடமும் கொடுப்பாரே. பிரசுரமும் ஆகுமே.

”நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து எழுதுங்கள் பாட்டாளி மக்கள் புரட்சிக்கு உங்கள் எழுத்து வித்திடும்”, என்று வேறு ஊக்குவித்து நேரிலும் சொல்வார். ஒரு கார்டும் வந்து சாட்சியம் சொல்லுமே. அவரை நன்றியுடன் பார்க்கும் ஒரு பெரிய இளைஞர் பட்டாளமே உருவானது அவர் காலத்தில். அந்த பழக்கம் அவர் தாமரை ஆசிரியத்வத்தில் இல்லாத போதும் தொடர்ந்தது. அதிலும் திருநெல்வேலி இளைஞர் கூட்டத்துடன் திர்நேலி தமிழில் பேரப்புள்ளைகளை உற்சாகப் படுத்துவது இருக்கே அது மிக இனிமையும் வாத்சல்ய பாவமும் கொண்டது. பின்னாட்களில் அவரைச் சந்தித்தவர் தரும் புகைப்படங்களில் அவர் தன் சுடலை மாடன் தெரு வீட்டின் தாழ்வாரத்தில் தன் அறைக்கு எதிரில் ஒரு நாற்காலியில் அமர்ந்து குனிந்த வண்ணம் ஒரு கடிதம் எழுதிக்கொண்டிருக்கும் காட்சியே காணக் கிடைக்கும். காந்தி என்றால் சர்க்காவில் நூல் நூற்கும் காட்சி. சிவாஜி என்றால் முறுக்கிய மீசையும்  வாளேந்திய கையுமாக நிமிர்ந்து நிற்கும் கட்டபொம்மன் வேஷம் தரித்து, தி.க.சி.க்கு தன் இளைய தலைமுறைக்கு கடிதம் எழுதும் காட்சி. தி.க.சியின் ஆரம்பங்கள், நாற்பதுகளில், தாமரையில் நாம் கண்ட தி.க.சி உருவாவதற்கான ஆரம்பங்கள் இல்லையென என் நினைப்பு. அப்போது அவர் தொடர்புகள், கு.ப.ரா. கிராம ஊழியன் என்று எப்படி இருந்திருக்க முடியும்?.  வென்றிலன் என்ற போதும், ஐந்தாம் படை போன்ற கதைகள் எழுதிய ரகுநாதன் தான் பின்னர் தீவிர முற்போக்கு ஆனார்.  இந்த மாயம் எல்லாம் எப்படி நடக்கிறது என்பதை ஆராய்வது கஷ்டம். சோமன துடி மாதிரி ஏன் தமிழில் ஒரு திரைப்படம் வருவதில்லை என்று ஒரு இடத்தில் ஏங்கும் தி.க.சி. தான், அகிலனின் சித்திரப் பாவை நாவலுக்கு ஞானபீடப் பரிசு கிடைத்ததும்,  “இது தமிழ் இலக்கியத்துக்குப் பெருமை சேர்ப்பது, என்றும், அகிலன், சுதந்திரம், ஜனநாயகம், சமாதானம் சோஷலிஸம் ஆகிய லட்சியங்களுக்காக போராடுகிறவர்” என்று பாராட்டுக்களை அள்ளிச் சொரிந்தார். வேடிக்கை இல்லை. சிரிக்க வேண்டாம். நிஜமாகவே தான். ஒரு வேளை இடைப்பட்ட காலத்தில் அகிலனுக்கு சோவியத் ரஷ்ய அழைப்பு விடுத்து அவருக்கு ரஷ்ய சுற்றுப் பயணத்துக்கு உதவியதால் ஒரு வேளை திடீரென அகிலனை இந்த புஷ்பார்ச்சனைக்கு தகுதியாக்கியிருக்கலாம். அகிலனும் தன் பங்குக்கு தன் ரஷ்ய பயணம் பற்றி வெகு பரவசம் அடைந்து ரஷ்ய புகழ் பாடி கட்டுரைகள் எழுதினார். ஆனால் அத்தோடு அந்தக் கதை சரி.

ஆனாலும் தன் கட்சி ஆசான்களும் கட்சியும் புதுக்கவிதைக்கு எதிராக தொடர்ந்த பிரசாரம் நடத்திக்கொண்டிருக்கு போது தாமரையில் புதுக்கவிதை தோற்றம் அளிக்கும் வானம்பாடிகளுக்கும் இன்னம் மற்றோருக்கும் தொடர்ந்து இடமளித்து அதுபற்றி விவாதங்களுக்கும் களம் தந்த ஆசிரியரின் தாராள மனதை என்னவென்று சொல்வது? அது மட்டுமல்ல. பூமணி, வண்ணநிலவன், சார்வாகனுக்கெல்லாம் இடமென்றால், பாட்டாளி மக்களின் சர்வாதிகாரத்தை எப்படி கொணர இயலும்? இதையெல்லாம் எதிர்த்து கட்சி எழுத்தாளர்களும் தலைமையும் போராடிக்கொண்டிருப்பதிலிருந்து தெரிந்து கொள்ளவேண்டாமா? கட்சித் தலைமையிடமிருந்து கேள்விகளும் எதிர்ப்பும் எழவே, தி.க.சி என்ன செய்தார்?. தாமரையை விட்டு விலகினார் என்று வல்லிக்கண்ணன் சொல்கிறார். திகசி பற்றிய இந்த உள் விவகாரங்களில் வல்லிக்கண்ணனை நம்பாமல் வேறு யாரை நம்புவது?. தன் பதவியைத் துறந்த திகசி யை நாம் பாராட்டவேண்டும். இன்னொன்றுக்கும்  நாம் திகசி யை பாராட்டவேண்டும். தன் மகன், வண்ணதாசன், பின் தன் திர்நேலி சீட இளவல்கள், கலாப்ரியா, வண்ணநிலவன் யாரையும் அவர் முற்போக்கு ப்ராண்ட் எழுத்தை வற்புறுத்தவில்லை. அவர்களை அவர்கள் சுதந்திரத்துக்கு விட்டு விட்டது பெரிய விஷயம் இல்லையா? யாருக்கும் இதில் சந்தேகமிருப்பின், சு.கா. வுக்கு திகசி அவ்வப்போது தரும் பாராட்டுக்களையும் உற்சாகத்தையும் சுகாவே எழுதியிருப்பதைத் தான் நான் சுட்டவேண்டும். எந்த வகைக்கும் உட்படாத சுகாவின் எழுத்தைப் பாராட்டுவது என்றால், அதில் முற்போக்கு எங்கே என்று தேடத்தான் வேண்டும். கிடைக்காது.

தி.க.சி யின் ஆசிரிய பீடத்தில் தொ.மு.சி. ரகுநாதன் வந்து அமர்ந்தார். திகசியின் காலத்திலும் சரி, பின்னரும் சரி, தாமரை இதழ்களை அவ்வப்போது பார்க்கத் தான் எனக்குக் கிடைக்குமே தவிர, தொடர்ந்து அதை நான் கவனித்தவனில்லை.

நவீன விருட்சம் பத்திரிகைக்கு மதிப்புரை எழுதச் சொல்லி எனக்குக் கிடைத்த புத்தகம் திகசி யின் கட்டுரைகளையெல்லாம் தொகுத்திருந்த விமர்சனங்கள், மதிப்புரைகள், பேட்டிகள். அப்புத்தகம் என்னிடம் இல்லை. நவீன விருட்சம் இதழும் இல்லை. என் பார்வையில் நாவல்கள், சிறுகதைகள்………….. ……….. என்ற என் கட்டுரைத் தொகுப்பு 2000-ல் கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது, அதில் சேர்க்கப்பட்டுள்ள, தி.க.சியின் புத்தகத்துக்கு நான் எழுதிய மதிப்புரையிலிருந்து (பக்கம் 201 – 204) எழுதுகிறேன். மேலே தரப்பட்டிருக்கும் மற்ற மேற்கோள்களும் சுந்தர ராமசாமியின் கட்டுரைத் தொகுப்பிலிருந்து எடுக்கப்பட்டவை தான்.

திகசி யின் இத்தொகுப்பு பல ஆச்சரியங்களைத் தந்தது. ஆச்சரியம் என்ன. முற்போக்கும், கட்சி சேவகமும் திகசியை முற்றாக மாற்றிவிடவில்லை என்று எண்ணத்தை ஏற்படுத்தியது. அதிலிருந்து என் வார்த்தைகள் சிலவற்றையும் திகசி யின் வார்த்தைகள் சிலவற்றையும் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். அனேகமாக பலருக்கு இது திகசி யின் கேட்காத குரலாக இருக்கும். (இப்புத்தகத்தின்) 330 பக்கங்களும் படிக்க மிக சுவாரஸ்யமாக இருக்கின்றன. வெளித்தெரிந்த திகசியை விடுங்கள். உண்மையான திகசி யாரென்பது  சுவாரஸ்யமான புதிராக இருக்கிறது. கட்சி நிர்ப்பந்தங்களை மீறி, ஒதுக்கி, ஒரு நெருக்கம் ஏற்படும் எனில், திகசி பழகுவதற்கு மிக நல்ல மனிதராக இருக்கவேண்டும்.

இனி ஒரு நேர்காணல் (ப. 303)

கேள்வி:  ஒரு நல்ல படைப்பை நீங்கள் எப்படி இனம் கண்டு கொள்வீர்கள்?

திகசி: கலாபூர்வமாக மனசுக்கு நிறைவு அளிக்கும்படியான படைப்பு எதுவும் மிகச் சிறந்த படைப்பு தான். ஒரு தனித்தன்மை இனம் காட்டிவிடும். எல்லாவற்றுக்கும் மேலாக அது நம் நெஞ்சை நெருட வேண்டும். (it must disturb) படித்தபின் என்னவோ பண்ணுகிறது. அப்படியே புரட்டிப் போட்டு விடுகிறது. படிக்குமுன் இருந்த நான் வேறு.  இப்போதைய நான் வேறு என்கிற மாதிரியான பாதிப்பு ஏற்பட்டு விடுகிறது. இத்தகைய ரஸவாதம் எல்லா கலைகளுக்கும் உண்டு.”

இன்னும் சில கருத்துக்கள் வெவ்வேறு பக்கங்களிலிருந்து:

”சமூக சீர்திருத்த வேட்கை நிரம்பிய இவற்றில் (40 வருட திராவிட இயக்க படைப்புகளில்) பிரசார அம்சம் அதிகம். கலை அம்சம் குறைவு (ப. 29). கலை அம்சத்தைவிட கருத்து வலியுறுத்தலுக்கே சிறப்பிடம் (ப. 57). உரத்த குரலில் பேசுவதைத் தவிர்த்திருப்பாராயின்  (ப. 73). சில கவிதைகளில் பிரசார நெடி பலமாக அடிக்கிறது. (ப.146)  படைப்புகளில் கலை அம்சம் இருக்க வேண்டும்……சமூக நீதி கேட்கும் மக்கள் பகுதியின் வாழ்க்கையும் குரல்களும்……..படைப்புகளாகும் போது எவ்வளவு தூரம் கலை மதிப்பும், கலைத் தரமும் கொண்டதாக இருக்கின்றன என்பதைப் பொறுத்தே அவற்றின் தகுதி நிர்ணயிக்கப்படும் (ப. 309)

இவையெல்லாம் எப்போது சொல்லப்பட்ட கருத்துக்கள் என்பது தெரியவில்லை. இந்தத் திகசியை பொதுவாக அறியப்பட்ட திகசியில் அடையாளம் காணமுடியாது. ஆனல்,  இதற்குப் பின்னும் திகசி கட்சி கோஷங்களை விட்டவரில்லை. அதற்கு ஒரு சோறு பதமாக அவர் பாராட்டும் ஒரு கவிதையையும் அவர் பாராட்டையும் தரவேண்டும்.

”எங்கள் இலக்கியப் படைப்புகள் யாவும்
அறுசுவை கொண்ட
அரிசியின் சிற்றுண்டிகளை
நினைவுறுத்த வல்லவை. ஆம்
அவை யாவும் அடிப்படையில்
அரிசிக் கவிதை கதை கட்டுரைகளே!
அவற்றைப் படைக்கும் நாங்களும்
அரிசிப் படைப்பு பண்பாட்டாளர்களே!”

இது கவிதை எனவும், இவற்றில் நயம் அழகு, அருமையான முத்தாய்ப்பு எல்லாம் இருப்பதாக திகசி பாராட்டுகிறார்.(ப. 319) ஆனால் ஒன்று, கட்சியும் அது தந்த கொள்கைகளும் திகசி என்ற மனிதரை முற்றிலுமாக மாற்றிவிடவில்லை. ஆனால் சுமார் ஐம்பது வருட காலம் நீடித்து வந்துள்ளது.
திகசி யின் இந்த கட்டுரைத் தொகுப்பு 1999- ஆண்டுக்கான  சாஹித்ய அகாடமியின் தமிழ் விருது பெற்றது. நான் நிரந்தரமாகச் சென்னைக்குத் திரும்பியதும், பங்கு பெற்ற முதல் இலக்கியக் கூட்டம் திகசி-க்கான பாராட்டு விழா தான். திகசி தன் நன்றியுரையில் மேடையில் இருந்த சிவகாமி பக்கம் பார்த்த வாறே அடுத்த ஆண்டு விருது ஒரு பெண் எழுத்தாளருக்குத் தரப்படவேண்டும் என்பது தன் விருப்பம் என்று சொல்லி அகாடமியின் செயலர் சச்சிதானந்திடம், “இதை ப்ரெசிடெண்ட் ரமா காந்த் ராத்திடம்  ஆங்கிலத்தில் சொல்லுங்கள்” என்றார். இந்த விருது அவருக்கு மன நிறைவைத் தந்த ஒன்று என எனக்குத் தோன்றியது. எண்பது வருட வயதினருக்கு 60 வருட கால உழைப்பிற்குப் பிறகு வந்த அந்த சந்தோஷத்திற்கு உரியவர் தான் அவர்.

பல சமயங்களில் அவர் கட்சிக்காரராகவே நடந்து கொள்வதில்லை. அந்த சமயம் திகசியின் நினைப்பும் பேச்சும், ஐந்து சித்தாந்தங்களை ஒரு சேர பிரகடனம் செய்து வந்தது. “பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம், சூழலியம், தமிழியம். என்பன அந்த ஐந்து சித்தாந்தங்கள்.  அவர் இறப்பதற்கு சில நாட்கள் முன்பு பொதிகை தொலைக்காட்சியின் நேர்காணலில் தனக்கு வழிகாட்டியாக,தம் வாழ்க்கையை வடிவமைத்தவர்களாக, திருவள்ளுவரிலிருந்து தொடங்கி கம்பன், வள்ளலார் என்று எல்லாரையும் கடந்து வந்து பாரதி, ஜீவா வரை ஒரு நீண்ட பட்டியலையே வாசித்தார். வம்பற்ற பாடு. தவறிப் போய்க்கூட மார்க்ஸிலிருந்து தொடங்கி, ஸ்டாலின், ராமமூர்த்தி நம்பூதிரிபாத் பாட்டையில் அவர் செல்லவில்லை.

தாமரையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு அவரை ஒரு கூண்டுக்குள், என்ன, எந்தக் கூண்டுக்குள்ளும் அவர் அடைபடவில்லை.  90 வயதை எட்டிப் பார்ப்பவரிடம் கட்சியும் அவர் இஷ்டத்துக்கு விட்டு விட்டார்கள். ஓய்வு பெற்றுவிட்டவரை எந்த நிர்வாகம் தான் என்ன செய்யும்?
நான் இங்கு பங்களூருக்கு குடி பெயர்ந்த பிறகு ஒரு நாள் திடீரென்று சித்தன் பிரசாதிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவர் யுகமாயினியில் என்னை எழுத அழைத்ததிலிருந்து பழக்கம். நேரில் பார்த்ததுமில்லை. பழகியதுமில்லை. உறவை வளர்த்தது தொலைபேசிதான். தமிழை இனி உய்விக்கவேண்டிய அவசியம் தனக்கில்லை யுகமாயினி கடையைப் பூட்டிவிட்டு தமிழ் சினிமாவுக்கு ஏதாவது சேவை செய்யமுடியுமா? என்று கிளம்பிவிட்டார். 2012 வருட இடைப்பட்ட  மாதஙகளில் ஒரு நாள் முன்னிரவு நேரம் என்று நினைவு, அவரிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. “நான் சித்தன் பிரசாத் பேசறேன், சாமிநாதன். திருநெல்வேலியிலே இருக்கேன் இப்போது. திகசி வீட்டில் அவர் என் பக்கத்தில் தான் உட்கார்ந்திருக்கார். அவருக்கு உங்களோட பேசணுமாம். பேசுங்க” என்றார். திகசி பேசினார். எனது சௌக்கியம் பற்றி விசாரணையோடு, “அங்கே நீங்க என்ன பண்றீங்க. இங்கே ஒருக்கா வாங்களேன். நானும் தனியாத் தான் இருக்கேன். நீங்களும் இப்போ தனி ஆளாப் போயிட்டிங்க. நீங்க வாங்க இங்கே. என்னொடு பத்து நாள் இருங்க” என்றார். ஆச்சரியமாக இருந்தது. சந்தோஷமாக இருந்தது. அதிலும் ஒருவர் பெயர் இன்னொருவருக்குத் தெரிந்த காலத்திலிருந்தே சண்டை தான்  போட்டுக் கொண்டிருந்தோம். கடைசியில் இந்த சிஐஏ ஏஜெண்டை இவ்வளவு பரிவுடன், சினேக பாவத்துடன் அழைக்கிறாரே. மனித ஹிருதயம் தான் எத்தனை விசித்திரமான ஒன்று! எனக்கு அவரைக் கொஞ்சம் சீண்டத் தோன்றியது. “எதுக்கு ஐயா. நாம எழுத்திலே ஐம்பது வருஷமா சண்டை போட்டதை நேரிலேயே தொடரலாம்னா?” என்று கேட்டேன். அதற்கு அவர் சளைக்கவில்லை. “வாங்க நிறைய பேசலாம் .சண்டையும் போடலாம். திரும்பிப் போய் திகசி இன்னமும் அதே முட்டாளாத் தான் இருக்கான்னு எழுதுங்க” என்றார். சிரித்துக் கொண்டோம். இந்த வயசிலே எவ்வளவு உரக்கவும் சௌஜன்யத்துடனும் பேசமுடிகிறது அவரால்!

”சந்திக்கலாம் வரேன் எப்போ வாய்க்கிறதோ பார்க்கலாம்” என்றேன். சரி மனசிலே வச்சுக்கங்க. இப்போ வேண்டாம். ஒரே வெக்கையா இருக்கு. பவர் கட் வேறே நாள்முழுக்க. இது கொஞ்சம் சீரானதும் சொல்றேன். வாங்க” என்றார்.

இதற்கு கொஞ்ச நாள் பிறகு ஃபேஸ் புக்கில் சு.கா. திடீரென அசரீரியாக தரிசனம் தந்தார். அது தான் அவரோடு முதல் பரிச்சயம். அவரது குரல் அல்ல. எழுத்து தான் பேசிற்று. உலகத்து எழுத்தாளர்கள் எல்லோரையும் நாம் அப்படித்தானே தெரிந்து பரிச்சயம் கொள்கிறோம், அந்த மரபு கெட்டு விடக்கூடாது என்றிருப்பவர் சு.கா. என்று தெரிந்து கொண்டேன்.  அதற்கு ஒரு வருடத்திற்கு முன் “வாதங்கள், விவாதங்கள்” வெளியீட்டின் போது அவர் வந்திருந்ததாகச் சொன்னார்கள். அப்போது தரிசனம் தருவதற்கு இன்னம் வேளை வரவில்லை என்று நினைத்திருக்கலாம். பிறகு ஒரு நாள் அவர் குரலையும் கேட்டேன். அவரும் சொன்னார்,  ”நீங்கள் ஒரு முறை திருநெல்வேலி வந்து அவருடன் சில நாட்கள் இருக்கவேண்டும் என்று திகசி உங்களிடம் சொல்லச் சொன்னார்.  இதற்கு முன்னரே  அவர் அழைப்பு எனக்கு தொலைபேசியில் வந்ததைச் சொன்னேன்.  எனக்கு துணையாக யாராவது வந்தால் தான் நான் எங்கும் செல்ல முடியும்.  எல்லோரும் சேர்ந்தே போகலாமே, நான் நீங்கள், சொல்வனம் சேது, பாரதி மணி எல்லோரும் சென்னை வழியாகவே போகலாம். எல்லோரும் சேர்ந்து பேசிக்கொண்டே பயணம் செல்வது சுகமாகவும் இருக்கும். எனக்கும் துணை இருக்கும். ஏற்பாடு செய்யுங்கள்” என்றேன். நாட்கள் கடந்தன. சேது ஃபின்லாந்து போய்விட்டார். பாரதி மணி தில்லிக்கோ குர்காவ்ன்க்கோ போய் விடுவார். சுகா வுக்கு அவரது நிர்பந்தங்கள். இப்படி நாட்கள் கடந்தன.

இடையில் சொல்வனத்தில் சுகா அவர் தனக்கென அவரே உருவாக்கிக் கொண்டுள்ள ஒரு புதிய சுவாரஸ்யமான வடிவில் திகசியைப் பற்றிய பாசமும் வியப்பும் நிறைந்த ஒரு அழகான சித்திரம் வரைந்திருந்தார். அதில் மறுபடியும் திகசியின் அழைப்பு பற்றி. அதை சுகாவே அவரது எழுத்திலேயே சொல்லட்டும். என் வார்த்தைகளில் சொவது சுகாவின் எழுத்து அழகைக் கெடுத்துவிடும். சுகா எழுத்துக்கு நான் நியாயம் செய்ய வேண்டும். ”தி.க.சி தாத்தாவை கடுமையாக விமர்சித்து எழுதிய, எழுதுகிற, எழுத இருக்கிறவரிடம் என்ன செய்தியைச் சொல்ல இருக்கிறாரோ என்ற கலக்கத்தைக் காட்டிக் கொள்ளாமல், ‘சொல்லுங்க தாத்தா’ என்றேன். ‘அவரு மனைவியும் காலமான பெறகு பெங்களூர்ல தனியா உக்காந்து என்ன செய்யுதாரு? இங்கன ஒத்தக்காட்டுக் கொரங்கா நானும் தனியாத்தானெய்யா இருக்கென்? இங்கெ வந்து ஒரு வாரம், பத்து நாளு எங்கூட இருக்கச் சொல்லுங்கய்யா’ என்றார்.

உடனே பதில் சொல்லத் தெரியாமல் திணறினேன். ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் தி.க.சி தாத்தா இல்லை. அவர் மனம் எங்கோ சென்று கொண்டிருந்ததை அவரது முகம் காட்டியது.

‘என்னா மனுசன்யா அவரெல்லாம்? கருத்து ரீதியா நாங்க ரெண்டு பேரும் எதிர் எதிரானவங்கதான். எல்லாத்தயும் தாண்டி மனுசனுக்கு மனுசந்தானெ முக்கியம். அதத்தானெ எல்லா இலக்கியமும் சொல்லுது! தமிழ் இலக்கிய விமர்சனத்துக்கு அவரு எவ்வளவு செஞ்சிருக்காரு!’

நான் குறுக்கிடாமல் அமைதியாகக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.

சட்டென்று என் முகம் பார்த்து, ‘ஐயா, இங்கெ வந்து என் கூட கொஞ்ச நாளு இருந்துட்டு போயி, ‘தி.க.சி ஒரு முட்டாள்னு எளுதட்டுமெ! அதுக்காகவாது வெங்கட் சாமிநாதன் இங்கெ வரலாம்லா! என்ன சொல்லுதேரு?’.

சொல்லிவிட்டு, சத்தமாக தனது வழக்கமான சிரிப்பைச் சிரித்தார்.
(மூத்தோர் – சுகா – சொல்வனம் 21.10.2012)
-
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாது சென்னை செல்லும் வாய்ப்பு ஏற்பட்டது. குடும்பத்தோடு.  நான் நண்பரும் ஓவியரும், அண்ணா பல்கலைக் கழக பேராசிரியருமான (நான் என்னவாக இருந்தாலும் பெரியவர்களின் சிநேகம் எப்படியோ எனக்கு வாய்த்து விடும் பாக்கியம் எனக்கு) சீனிவாசனுடன் தங்கினேன். திடீரென நான் போய்ச் சேர்ந்த இரண்டாம் நாளே சீனுவாசன், ”வாங்க திருநெல்வேலி வரை என்னுடைய காரிலேயே போய் வருவோம்” என்று சொல்ல, கிளம்பி விட்டோம். கூட கோபியின் புது நட்பு. வழியில் ராஜபாளையத்தில் இறங்கி மணி, கடையத்தில் இறங்கி கலாப்ரியா சந்திப்புகள்.  காலை எழுந்ததும் காலை உணவுக்குப் பிறகு சுடலை மாடன் தெருவுக்கு திகசியைப் பார்க்க கிளம்பினோம். நான் ஆச்சரியத்தில் மூழ்கியிருந்தேன். எவ்வளவு காலம் திட்டமிட்டுக் கொண்டிருந்தது நடவாதது, திடீரென திட்டமிடாமலேயே எல்லாம் நடந்து விடுகிறது!! சின்ன குறுகிய தெருதான். ஆனால் நீண்ட தெரு. திகசியின் வீட்டு வெளிக்கதவைத் தாண்டி உள்ளே காலடி வைத்தால், சுகா தந்திருந்த புகைப்படத்தில் காணும் அதே காட்சி. தாழ்வாரத்தின் கோடியில் தன் அறைக்கு எதிரே ஒரு நாற்காலியில் அமர்ந்து குனிந்து எழுதிக்கொண்டிருக்கிறார். மெதுவாக உள்ளே சென்று அவர் அருகில் நிற்பதற்குள் ஏதோ நடமாட்டம் அறிந்து தலை நிமர்கிறார்.  சீனுவாசனுக்கு திகசியையும் அவரது திருநேலி சகாக்கள் வண்ணதாசன் கலாப்ரியா, எல்லோரையும் தெரியும். எங்களையெல்லாம் பார்த்ததும் அவரது முகக் களிப்பைப் பார்க்க சந்தோஷமாக இருந்தது.  மனித உறவுகளும் பாசமும் அந்த வயதில் அபரிமிதமாகப் பொங்கி எழும்.  இல்லாத போது ஏக்கம் சூழும். பேச்சு, படிப்பு, உற்சாகப்படுத்தி எழுதும் கடிதங்கள் இவை தான் அவரது தினசரி வாழ்க்கை. தனி மனிதர். தனித்து வாழவே ஆசை. பக்கத்தில் சில வீடுகள் தள்ளி ஒருவர் அவ்வப்போது வந்து பார்த்துக்கொள்கிறார். தினசரி பத்திரிகைகள் செய்தித் தாள்கள் வந்து சேர்ந்து விடுகிறது இன்னொரு நெடுங்கால அன்பரின் தயவில். போன உடன் பெரிதாக கொட்டை எழுத்தில் எழுதி வைக்கப் பட்டுள்ள அட்டையைக் காண்பிக்கிறார். அதிகம் அவரைப் பேச விடவேண்டாம். என்று ஒரு எச்சரிக்கை அதில் .  காது அவ்வளவாகக் கேட்பதில்லை. உரத்துப் பேசியும் பயனில்லை. எச்சரிக்கை அட்டையைக் காண்பித்து கீழே வைத்தவர் தான். அவர் தான் பேசிக்கொண்டிருக்கிறார். பயந்து பயந்து சில வார்த்தைகள் பேசியும் தலையை ஆட்டி பதில் தந்து கொண்டும் இருந்தோம் பக்கத்தில் உள்ள அன்பர்களும் வந்து சேர்ந்தார்கள். வயோதிகத்தையும் உடல் பலஹீனத்தையும் மீறி அவர்தான் எங்கள் எல்லொரையும் விட அதிக உற்சாகத்துடன் ஜீவனுடன் இருந்தார். (He was more lively and active than any of us there) பக்கத்துச் சிறிய அறை முழுதும் பத்திரிகைகள் புத்தகங்கள். ஏதோ பழைய பத்திரிகைக் கடை மாதிரி. வெளியே வராந்தாவில் அவர் காலடியிலும் பத்திரிகைகள் பரவிக் கிடந்தன.  அன்றாட உலகின் அக்கறை கொண்டும் அதே சமயம் விலகியும் தனித்து ஏதோ ஆஸ்ரமத்தில் வாழும் ரிஷி மாதிரி திகசி தந்த அந்த 2013 டிஸம்பர் காட்சி. சில மைல் தூரத்தில் வாழும் வண்ணதாசன் அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்கிறார்.  திகசி பிடிவாதமாக தனித்து வாழவே தேர்ந்து கொண்டுள்ளார். அதுவும் என் மனதில் அவரிடம் மரியாதை உணர்வையும்  வியப்பையும் உண்டாக்கியது. இந்த அமைதியும் தைரியமும் எனக்கும் ஆண்டவன் அருள வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். தனிமை தான். இருப்பினும் உலகோடு உறவு அறவில்லை. நிறைய அன்பர்களும் நண்பர்களும் சிஷ்யகோடிகளும் வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.

இரண்டு மணிநேரம் அங்கு இருந்திருப்போமா? இருக்கலாம். அவரிடமிருந்து விடை பெற்றுக்கொண்டோம். திருநெல்வேலியிலிருந்து அரவிந்தன் நீலகண்டனையும் அவரது அப்பாவையும் பார்க்க அவரைப் பார்த்து வருடங்கள் பல ஆகிவிட்டன. இனி எப்போது வாய்ப்பு கிட்டுமோ. நாகர் கோயில் போய்க்கொண்டிருந்தோம். சுபாஷிணி திகசியின் வீட்டில் இருப்பதாகவும் அவர் என்னைப் பார்க்க விரும்புவதாகவும் செய்தி வந்தது. நாங்கள் திருநெல்வேலியிலிருப்பதாக அவர்கள் நினைத்திருக்கிறார்கள்.

நாங்கள் அவரிடமிருந்து விடைபெற்றுச் சென்ற சிலமணி  நேரத்துக்குள் சென்னையிலிருந்து சுபாஷிணி திகசியைப் பார்க்க அவர் வீட்டில். மனித உறவின் நெருக்கத்தை விடாத நிறை வாழ்வு தான். இதை விட வேறென்ன வேண்டும்.

2014 மார்ச் 25ம் தேதி அவர் மறைந்து விட்டார். இன்னம் ஐந்து நாட்களில் அவரது  90 வயது பூர்த்தியாகி, 91 வது பிறந்த நாள் வாழ்த்துக்கள் வந்து கொண்டிருக்கும். அவருக்கு அஞ்சலி செலுத்த வந்தவர்களில் இலக்கிய மற்றும் பத்திரிகை உலகினர் கூட்டம் ஆச்சரியம் இல்லை வை.கோவும் நல்லகண்ணுவும் கூட ஈர்க்கப்பட்டனர் என்பது திகசியின் ஆளுமையின் வியாபகத்தைச் சொல்லும். அவருக்கு அஞ்சலி செலுத்தியவர்களில் அவர் காலத்தில் காய்ச்சி வறுத்தெடுத்த வணிகப் பத்திரிகைகளும் இருந்தன.

எவ்வளவு கடுமையான கருத்து வேறுபாட்டிலும், மனித உறவுகளை அவர் மறக்கவில்லை. எந்த வகைப் பாட்டிலும் அடங்காத சுகாவின் எழுத்தை உடன் இனம் கண்டு பாராட்டினார் என்றால், கட்சி வாய்ப்பாடு அவரது உணர்வுகளை மழுங்கடிக்கவில்லை என்று தானே அர்த்தம்? தாமிரபரணி தண்ணீரின் ஈர்ப்பும் இருக்கும் தான். ஆனால், பொது உலகில் அவருக்கு கட்சிரீதியாக எதிர்த் தரப்பில் நான் இருந்தாலும் மனதிற்குள் என்னிடம் அவர் சினேக உணர்வும் பாராட்டுமே கொண்டிருந்தார்.  நான் அவர் விருப்பப்படியே நேரில் சென்று அவருடன் சில மணி நேரங்களாவது சக மனிதர்களாக சந்தோஷத்துடன் கழித்தது அவருக்கும் சந்தோஷத்தைத் தந்திருக்கும். எனக்கும் கட்சி மறைத்து வைத்திருந்த ஒரு சக மனிதரைக் கண்டதில் சந்தோஷம்.

6.6.2014
•This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it•

•Last Updated on ••Friday•, 04 •July• 2014 18:42••  

•Profile Information•

Application afterLoad: 0.000 seconds, 0.40 MB
Application afterInitialise: 0.032 seconds, 2.40 MB
Application afterRoute: 0.037 seconds, 3.14 MB
Application afterDispatch: 0.073 seconds, 5.89 MB
Application afterRender: 0.075 seconds, 6.07 MB

•Memory Usage•

6435984

•12 queries logged•

  1. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'qvfrtpi0m9rrvnsu2ce46avjg0'
  2. DELETE
      FROM jos_session
      WHERE ( TIME < '1716171539' )
  3. SELECT *
      FROM jos_session
      WHERE session_id = 'qvfrtpi0m9rrvnsu2ce46avjg0'
  4. UPDATE `jos_session`
      SET `time`='1716172439',`userid`='0',`usertype`='',`username`='',`gid`='0',`guest`='1',`client_id`='0',`data`='__default|a:10:{s:15:\"session.counter\";i:34;s:19:\"session.timer.start\";i:1716172407;s:18:\"session.timer.last\";i:1716172437;s:17:\"session.timer.now\";i:1716172439;s:22:\"session.client.browser\";s:103:\"Mozilla/5.0 AppleWebKit/537.36 (KHTML, like Gecko; compatible; ClaudeBot/1.0; +claudebot@anthropic.com)\";s:8:\"registry\";O:9:\"JRegistry\":3:{s:17:\"_defaultNameSpace\";s:7:\"session\";s:9:\"_registry\";a:1:{s:7:\"session\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:4:\"user\";O:5:\"JUser\":19:{s:2:\"id\";i:0;s:4:\"name\";N;s:8:\"username\";N;s:5:\"email\";N;s:8:\"password\";N;s:14:\"password_clear\";s:0:\"\";s:8:\"usertype\";N;s:5:\"block\";N;s:9:\"sendEmail\";i:0;s:3:\"gid\";i:0;s:12:\"registerDate\";N;s:13:\"lastvisitDate\";N;s:10:\"activation\";N;s:6:\"params\";N;s:3:\"aid\";i:0;s:5:\"guest\";i:1;s:7:\"_params\";O:10:\"JParameter\":7:{s:4:\"_raw\";s:0:\"\";s:4:\"_xml\";N;s:9:\"_elements\";a:0:{}s:12:\"_elementPath\";a:1:{i:0;s:66:\"/home/archiveg/public_html/libraries/joomla/html/parameter/element\";}s:17:\"_defaultNameSpace\";s:8:\"_default\";s:9:\"_registry\";a:1:{s:8:\"_default\";a:1:{s:4:\"data\";O:8:\"stdClass\":0:{}}}s:7:\"_errors\";a:0:{}}s:9:\"_errorMsg\";N;s:7:\"_errors\";a:0:{}}s:16:\"com_mailto.links\";a:13:{s:40:\"0169973cfc9020548923f05f3b220c5ad519b768\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=388:2011-09-17-00-29-45&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44\";s:6:\"expiry\";i:1716172415;}s:40:\"c79cebc0223b8a1b5f4a381ca710e0c64ea65fe5\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1845:2013-11-25-01-34-02&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44\";s:6:\"expiry\";i:1716172416;}s:40:\"2f1cdcd1a2697292b2f4fd27a71de95e1316f361\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=6083:2020-07-23-02-59-23&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68\";s:6:\"expiry\";i:1716172416;}s:40:\"29ffc44cd3634536b07ee8fbc47aec8ec37a5730\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=2842:2-&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44\";s:6:\"expiry\";i:1716172417;}s:40:\"a02e1e35c5a88e35247435675c618893fbfc6adf\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1034:2012-09-06-00-46-04&catid=13:2011-03-03-17-27-10&Itemid=50\";s:6:\"expiry\";i:1716172422;}s:40:\"75de45cd43eedaaecd23f818930607ada38f791f\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1219:2012-12-13-05-28-43&catid=17:2011-03-03-20-13-15&Itemid=35\";s:6:\"expiry\";i:1716172422;}s:40:\"06360700fa08a288fb9dd0b184529be632cea244\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:136:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5231:2019-07-17-03-01-15&catid=2:2011-02-25-12-52-49&Itemid=19\";s:6:\"expiry\";i:1716172425;}s:40:\"7d0561590ecf8e4933f980ad3fafc90bdbcff326\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1656:2013-08-12-01-43-42&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44\";s:6:\"expiry\";i:1716172425;}s:40:\"70f99ffb275db4a7594c4221acd79ad109e073ff\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:142:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=4717:-the-old-man-and-the-sea&catid=49:2013-02-12-01-41-17&Itemid=63\";s:6:\"expiry\";i:1716172426;}s:40:\"9f8ca2b2c9e701bdd70d8c99321d9d58a7c70f89\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:120:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1166:-1&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44\";s:6:\"expiry\";i:1716172426;}s:40:\"4d8de628ef0a3fadbcb0a8af122bfcf270e0f979\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:121:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5694:-7-&catid=10:2011-02-28-21-48-03&Itemid=20\";s:6:\"expiry\";i:1716172426;}s:40:\"47ce5b2e2446fd06ad9add727db5f8a8e16d4563\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:137:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=1750:2013-10-02-02-59-18&catid=23:2011-03-05-22-09-45&Itemid=44\";s:6:\"expiry\";i:1716172427;}s:40:\"566b96be4273f94e95b18016c2cf919f92d3da0f\";O:8:\"stdClass\":2:{s:4:\"link\";s:133:\"https://archive.geotamil.com/index.php?option=com_content&view=article&id=5045:-1939-2019-q-q-&catid=52:2013-08-19-04-28-23&Itemid=68\";s:6:\"expiry\";i:1716172439;}}s:19:\"com_mailto.formtime\";i:1716172425;s:13:\"session.token\";s:32:\"fe153d22f76c387a7d5ed1ad05a38694\";}'
      WHERE session_id='qvfrtpi0m9rrvnsu2ce46avjg0'
  5. SELECT *
      FROM jos_components
      WHERE parent = 0
  6. SELECT folder AS TYPE, element AS name, params
      FROM jos_plugins
      WHERE published >= 1
      AND access <= 0
      ORDER BY ordering
  7. SELECT m.*, c.`option` AS component
      FROM jos_menu AS m
      LEFT JOIN jos_components AS c
      ON m.componentid = c.id
      WHERE m.published = 1
      ORDER BY m.sublevel, m.parent, m.ordering
  8. SELECT *
      FROM jos_paid_access_controls
      WHERE enabled <> 0
      LIMIT 1
  9. SELECT template
      FROM jos_templates_menu
      WHERE client_id = 0
      AND (menuid = 0 OR menuid = 44)
      ORDER BY menuid DESC
      LIMIT 0, 1
  10. SELECT a.*, u.name AS author, u.usertype, cc.title AS category, s.title AS SECTION, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug, g.name AS groups, s.published AS sec_pub, cc.published AS cat_pub, s.access AS sec_access, cc.access AS cat_access  
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      LEFT JOIN jos_sections AS s
      ON s.id = cc.SECTION
      AND s.scope = "content"
      LEFT JOIN jos_users AS u
      ON u.id = a.created_by
      LEFT JOIN jos_groups AS g
      ON a.access = g.id
      WHERE a.id = 2188
      AND (  ( a.created_by = 0 )    OR  ( a.state = 1
      AND ( a.publish_up = '0000-00-00 00:00:00' OR a.publish_up <= '2024-05-20 02:33:59' )
      AND ( a.publish_down = '0000-00-00 00:00:00' OR a.publish_down >= '2024-05-20 02:33:59' )   )    OR  ( a.state = -1 )  )
  11. UPDATE jos_content
      SET hits = ( hits + 1 )
      WHERE id='2188'
  12. SELECT a.id, CASE WHEN CHAR_LENGTH(a.alias) THEN CONCAT_WS(":", a.id, a.alias) ELSE a.id END AS slug, CASE WHEN CHAR_LENGTH(cc.alias) THEN CONCAT_WS(":", cc.id, cc.alias) ELSE cc.id END AS catslug
      FROM jos_content AS a
      LEFT JOIN jos_categories AS cc
      ON cc.id = a.catid
      WHERE a.catid = 23
      AND a.state = 1
      AND a.access <= 0
      AND ( a.state = 1 OR a.state = -1 )
      AND ( publish_up = '0000-00-00 00:00:00' OR publish_up <= '2024-05-20 02:33:59' )
      AND ( publish_down = '0000-00-00 00:00:00' OR publish_down >= '2024-05-20 02:33:59' )
      ORDER BY a.ordering

•Language Files Loaded•

•Untranslated Strings Diagnostic•

- வெங்கட் சாமிநாதன் -	::include()	[/home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php:564]

•Untranslated Strings Designer•


# /home/archiveg/public_html/libraries/joomla/application/component/view.php

- வெங்கட் சாமிநாதன் -=- வெங்கட் சாமிநாதன் -