ஜெமினியின் மறைவு தரும் பாடம் ! ?

Sunday, 31 January 2021 08:54 நடேசன் இலக்கியம்
Print

தேனீ ஆசிரியர் ஜெமினி கங்காதரன்ஸ்டுட்காட்டில் (Stuttgart, Germany) நண்பர் யோகநாதன் புத்திராவின் வீட்டில் பத்துப்பேர் சில வருடங்கள் முன்பாக என்னைச் சந்திக்க வந்திருந்தார்கள் அவர்கள் பலரில் ஒருவர், தலையில் கருமையான தொப்பியணிந்தபடி ஓரத்தில் அமர்ந்திருந்தார். அப்போது யோகநாதன் “இவர்தான் தேனி ஜெமினி “ என அறிமுகப்படுத்தியபோது “தேனியை நடத்திக் கொண்டு ஜெர்மனியில் எப்படி உங்களால் உயிர்வாழ முடிகிறது?” எனக் கேட்டேன். ஆரம்பத்தில் அவரிடமிருந்து புன்சிரிப்பு மட்டும் வந்தது. சிறிது நேரத்தின் பின் “ எவரையும் எனது வீட்டுக்கு அனுமதிப்பதில்லை. ஒருவரையும் நம்பமுடியாது “ என்றார் . எனக்கு ஜெமினி தொடர்ச்சியாக வீரமும் விவேகமுமாக போரை நடத்தும் ஒரு தளபதியாகத் தெரிந்தார். “ நானும் அப்படித்தான். மெல்பனில் நானும் பெரும்பாலானவர்களை எனது கிளினிக்கில் வைத்துத்தான் பேசுவேன். முக்கியமாகத் தமிழர்களை, “ என்றேன்.

பாம்பு இறந்துவிட்டது என்பதால் பலர் முகநூலில் வீரவசனம் பேசும் இக்காலமல்ல, அக்காலம் . நாடு கடல் , கண்டம் கடந்து ஆலகால விஷம் கொண்ட அரவமாக முழு நஞ்சை காவியபடி இரைதேடி வேட்கையுடன் சீறிக்கொண்டு உலகமெங்கும் திரிந்த காலம். விதுரராக வில்லை ஒடித்துவிட்டு ஒத்துழைக்காதவர்கள் சிலர் இருந்தாலும் , விடுதலைப் புலிகளை நேராக விமர்சித்தவர்கள் மிகக் குறைவு. அதிலும் தொடர்ச்சியாக அவர்களை விமர்சித்து உயிர் தப்பியவர்கள் ஒற்றைக்கை விரலில் எண்ணக்கூடியவர்கள்.

13 வருடங்கள் அவுஸ்திரேலியாவில் நான் உதயம் நடத்தியபோது என்னைப் பாதுகாக்க நான் அவுஸ்திரேலிய தொழிற்கட்சியில்15 வருட அங்கத்துவம் வகித்தேன். அரசின் தொடர்பு மட்டுமல்ல, விக்ரோரியா மாநில பொலிஸ், அவுஸ்திரேலிய உளவு நிறுவனத்தினர் தொடர்பும் எனக்கு இருந்தது. மேலும் எனக்குப் பல நண்பர்கள் பாதுகாப்பிருந்தது. கடல் சூழ்ந்த கண்டமாகிய அவுஸ்திரேலியாவில் பிரான்ஸில் செய்வதுபோல் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட முடியாது. உதயம் பத்திரிகை நடத்தும்போது விடுதலைப்புலி ஆதரவாளர்கள் பத்திரிகை கட்டுகளை எரித்து, தூக்கி எறிந்து எனது படத்தை ஓமந்தையில் வைத்து பல அச்சுறுத்தல்களை தொடர்ந்தார்கள். 1997 இல் உதயத்தைத் தொடங்கியதிலிருந்து, தொடர்ந்த அபாயங்களை நான் அறிந்ததால் ஜெமினியிடம் அந்தக் கேள்வியைக் கேட்டேன்.

தேனி ஜெமினி என்னைப் பொறுத்தவரையில் நான் நிமிர்ந்து பார்க்கும் ஒரு சிலரில் ஒருவர் . அவரது அறிவு சார்ந்த தைரியம் , தொடர்ச்சியான செயற்பாடு, எக்காலத்திலும் ஊசலாடாத மனவுறுதி என்னைக் கவர்ந்ததால் , ஒரு முறை மட்டும் பார்த்தபோதும் , நான் தொடர்ச்சியாக பேசி நட்பாக உறவாடிவந்த மனிதர். அவுஸ்திரேலியாவில் உதயம் பத்திரிகைக்காக எழுதிய கட்டுரைகளைத் தொடர்ந்து தேனியில் பிரசுரித்ததன் மூலம் என்னைக் கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும் அறிமுகப்படுத்தினார். அதற்காக நான் மட்டுமல்ல பல தமிழர்கள் நன்றி உடையவர்களாக இருக்கவேண்டும்.

2009 இல் சுனாமி வருகிறது எனப் பெருங்குரலில் எழுந்த எனது கூச்சலை தேனி வெளிக்கொண்டு சென்றது . அதை எவரும் பொருட்படுத்தவில்லை. தேனியில் மணியம் அவர்கள் விடுதலைப்புலிகள் வதைமுகாம் நிகழ்வுகள் எழுதியபோது தேனி அதைப் பிரசுரித்தது. இதை விட பல ஆங்கில கட்டுரைகளைத் தமிழில் பிரசுரித்தது. இலங்கையில் தமிழ் ஊடகங்கள் எல்லாம் கூட்டாகவே பம்பாய் சிவப்பு விளக்குப்பகுதியாக பத்திரிகைத்துறையில் தொழில் நடத்தியபோது, தனி ஒரு ஊடகமாக, இறுதியில் 40, 000 வாசகர்களைக் கொண்டு தேனியை நடத்திய துணிவு ஜெமினிக்கு இருந்தது. எனது அரசியல் கட்டுரைகள் மட்டுமல்ல சிறுகதைகள், மிருக வைத்திய கதைகள் , பயணக்கதைகளை பிரசுரித்தது. அதற்கப்பால் பிற்காலத்தில் எனது நண்பர்கள் பலரைத் தேனியில் எழுத வைத்தேன்.

ஜெமினி எனது முகநூல் நண்பராக இருந்தபோது நகைச்சுவை துணுக்குகளை மட்டுமே பதிவு செய்வார் அதைப் பார்த்தபோது மிகவும் சீரியசான இணையத்தை நடத்தும் ஒருவர் அதன் சுவடுகள் இன்றி, நகைச்சுவையில் நண்பர்களுடாக சேர்ந்து சிரிக்கும் விடலைத்தனத்தையும் கண்டேன்.

நான் 2020 ஜனவரி மாத இறுதியில் இந்தியா - இலங்கை என விடுமுறைக்குப் போய்விட்டு மார்ச் மாத இறுதியில் வந்து மீண்டும் எழுத தேனியைத் தேடியபோது அது புதுப்பிக்கப்படவில்லை . மீண்டும் யோகநாதனை தொடர்பு கொண்டபோது கொரோனோ தொற்றால் ஜெமினி பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் இருப்பதாக அறிந்தேன். அந்தத் தொற்றிலிருந்து மீண்டு குணமாகியபோதிலும் ஜெமினியின் உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டிருப்பதாக அறிந்தேன். பத்து மாதங்கள் கொரோனோவோடு போராடி வென்றபோதிலும், அதனது பாதிப்புகள் அவரது உயிரை கவர்ந்துவிட்டது. இறுதிச் சடங்குகளை வீடியோவில் பார்த்தபோது அந்த நோய் அவரது உள்ளுறுப்புகளுடன் உடலில் பாதியையும் தின்றுவிட்டது என்பது தெரிந்தது.

ஆரம்பத்தில் தேனி இணையத்தில் தங்கள் படங்கள் வருவதையோ, கட்டுரைகள் வருவதையோ விரும்பாமல் பயந்தவர்களும், பிற்காலத்தில் தேனிக்கு தங்கள் கட்டுரைகளை அனுப்பினார்கள். ஒவ்வொருநாளும் பதிவேற்றப்படும் தேனியில் சில நாட்கள் பத்துக் கட்டுரைகள் கூட வந்துள்ளன. தற்போது வலைப்பதிவை நடத்தும் எனக்குத் தவறுகள் திருத்திய கட்டுரையைப் படத்துடன் பதிவேற்ற அரைமணி நேரமாகும் . அப்படிப் பார்த்தால் ஆறு கட்டுரைகள் பதிவேற்ற மூன்று மணி நேரமாகும் . கிட்டத்தட்ட கிழமையில் ஒரு நாள் இணையத்தில் செலவழிக்கவேண்டும் . இதற்கான நேரத்திற்கு எவ்வளவு மதிப்பு தெரியுமா?

புங்குடுதீவில் பிறந்து யாழ். இந்துக் கல்லூரியில் படித்த ஜெமினிக்கு காலத்தின் பெறுமதி தெரியும். ஆனால், எதுவித பிரதிபலனும் பார்க்காது மக்களுக்கு உண்மை சென்றடைய வேண்டுமென்பதால் பணம் மட்டுமல்ல மற்றைய இன்பங்களான நட்பு , உறவு என்பவற்றையும் இழந்து, தனது குடும்பத்திற்கான நேரத்தில் தேனிக்காக உழைத்தது இலகுவான காரியமில்லை .இவை எல்லாவற்றிற்கும் மேலாக ஜெமினி தன்னை அடையாளப்படுத்தாமல் உழைத்ததே தனித்தன்மை. இது இலகுவானதல்ல. இவைகளை செய்வதற்கு ஆசை துறந்து ஒரு கருமத்தைத் தவமாகச் செய்யும் ஜென் துறவியின் மன நிலைவேண்டும். வழியில் மலத்தில் உழன்ற பன்றிகளை விலக்கி பயணிக்கவேண்டும், முட்டாள்களின் உபதேசங்களைச் சிரித்தபடி கடக்கவேண்டும். குடும்ப உறவுகளாவது நம்மை அங்கீகரிக்கவேண்டும் என்ற அங்கலாய்ப்புடன் கரும மாற்றவேண்டும். இவை சாதாரணமானவர்களால் முடியாது.

தேனி என்ற இணையத்தளம் 2001 இலிருந்து தொடரியாக, உண்மையை உரைத்தபடி பாலைவனத்தின் நடுவே உண்மையைத் தேடியவர்களுக்கு தாகசாந்திக்குத் தண்ணீர்ப் பந்தலாகியது . பொய் பிரசாரத்தை அரங்கேற்ற விரும்பியவர்களுக்கு வயிற்றெரிச்சலைக் கொடுத்தது. தேனியை வாங்கி முடக்கப் பலர் பணத்துடன் தயாராக இருந்தார்கள் என்பதும் எனக்குத் தெரியும். மற்ற சமூகம் மாதிரியல்லாத நமது இனம், உவர் மண்கொண்ட திணை. இங்கிருந்து நற்பயிர்களாக மனிதர்கள் மாமாங்கத்திற்கு ஒரு முறை தோன்றுவார்கள் . அப்படி நெருக்கடியான காலத்தில் ஒரு தன்னலமற்ற சேவையைச் செய்து வந்த ஜெமினியின் மறைவு நண்பர்களிடம் மட்டுமல்ல, தமிழ் வெளியில் நிரப்ப முடியாத ஒரு வெளியை விட்டுச் சென்றுள்ளது. அந்த இடம் எப்போது நிரப்பப்படும்? இங்கு நாம் கற்கும் ஒரு படிப்பினை, தனிமனிதர்கள் முயற்சிகள் , அரசியல் என எந்தக் கருமங்களும் நல்லதோ கெட்டதோ ஒரு வரையறைக்கு மேலாக செல்லாது என்பதை டொமினிக் ஜீவாவின் மல்லிகை , ஜெமினியின் தேனி என்பன நமக்கு பறைசாற்றுகின்றன.

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Sunday, 31 January 2021 08:59