சுருக்கெழுத்துக்கலை மறக்கப்பட்டுவிட்டதா..? “ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தந்தை” சி. இராமலிங்கம் அவர்களின் பணி.

Monday, 30 November 2020 08:28 - வி. ரி. இளங்கோவன் - இலக்கியம்
Print

சுருக்கெழுத்துக்கலை மறக்கப்பட்டுவிட்டதா..? “ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்துத்  தந்தை”  சி. இராமலிங்கம் அவர்களின் பணி.வி.ரி,இளங்கோவன்இலங்கையில் தமிழ்ச் சுருக்கெழுத்தின் தந்தையெனக் கருதப்படத் தக்கவர் அன்பர் இராமலிங்கம். அவர் நம்மவரின் மதிப்புக்குரியர்." இவ்வாறு பேராசிரியர் க. கைலாசபதி குறிப்பிட்டுள்ளார். இன்றைய நவீன கணினி - கைத்தொலைபேசி யுகத்தில் சுருக்கெழுத்தின் தேவை அருகிவிட்டது.  இலங்கையில் சுயமொழியில் நிருவாக அலுவல்கள் ஆரம்பித்த காலத்தில் தமிழ்ச் சுருக்கெழுத்தின் தேவை அவசியமாகப்பட்டது.

தமிழ்மொழியில் தமிழகத்து மூன்று பெரியவர்கள் (எம். சீனிவாசராவ் - என். சுப்பிரமணியம் - பி. ஜீ. சுப்பிரமணியம்) மூவகைச் சுருக்கெழுத்து முறைகளை உருவாக்கித் தமிழுக்கு அணி செய்தனர். இலங்கைக்கு 1950 -ம் ஆண்டுக்கு முன்னர் இச்சுருக்கெழுத்து முறைகள் எட்டவில்லை. 1951 -ம் ஆண்டில் இலங்கை வானொலி நிலையம் ஒரு தமிழ்ச் சுருக்கெழுத்தாளரையும் இரண்டு தமிழ்த் தட்டெழுத்தாளர்களையும் நியமனம் செய்தது.  இதில் ஒரு தட்டெழுத்தாளராக நியமிக்கப்பட்ட சி. இராமலிங்கமே பிற்காலத்தில் 'ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்துத் தந்தை"யெனப்    போற்றப்பட்டார். தமிழகத்தில் சி. இராமலிங்கம் சுருக்கெழுத்தை நன்கு கற்றுத் தேறியிருந்தார்.

1952 -ம் ஆண்டு மே மாதத்தில் அரசாங்க மொழிகள் கமிசனின் மேற்பார்வையில் மருதானை ஆனந்தாக் கல்லூரியின் ஒரு பகுதியில் சிங்கள - தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயிற்சி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு முதன்முதலாகச் சிங்களச் சுருக்கெழுத்துப் போதிப்பதற்கு ஒருவரும் - தமிழ்ச் சுருக்கெழுத்துப் போதிப்பதற்கு சி. இராமலிங்கமும் நியமிக்கப்பட்டனர். இந்நியமனத்திற்கெனத் தமிழில் நடாத்தப்பட்ட தேர்வில் பலர் போட்டியிட்டும் வேகப் பரீட்சையில் முதன்மையானவராகத் திகழ்ந்ததின் மூலமே இவர் தெரிவுசெய்யப்பட்டார்.

ஆனந்தாக் கல்லூரியில் தொடங்கப்பட்ட தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயிற்சி வகுப்பு 1959 -ம் ஆண்டிற்குப்பின் நிறுத்தப்பட்டது. ஆனால் யாழ் - பல்தொழில் நுட்ப நிறுவனத்தில் (தொழில் நுட்பக் கல்லூரி) சுருக்கெழுத்துப் பயிற்சி வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இராமலிங்கம் இங்கும் போதனாசிரியராக அனுப்பப்பட்டார்.

1974 -ம் ஆண்டு சம்மாந்துறை தொழில் நுட்பக் கல்லூரியிலும் தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயிற்சி ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரிகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் தமிழ்ச் சுருக்கெழுத்து - தட்டெழுத்துப் பயிற்சிபெற்றுத் தேறினர். இராமலிங்கம் அவர்களின் உறுதுணையோடு அவரது மனைவியும் ஈழத்தின் முதல் தமிழ்ச் சுருக்கெழுத்துப் பயிற்சிபெற்ற மாணவியுமான மகாலட்சுமி இராமலிங்கம் வெளியிட்ட சுருக்கெழுத்துப் பாடநூல் கல்விக் கூடங்களில் சுருக்கெழுத்து மாணவர்க்கான கைந்நூலாக நிலைபெற்றது.

'ஸிலோவன்" ஆங்கிலமுறை - 'பிட்மன்" ஆங்கிலமுறை என்பவற்றைக் கவனத்திலெடுத்து எம்மண்ணின் மொழிவழக்குக்கமையப் புதிய குறியீடுகளோடு - சொல்வதெழுதற் பயிற்சிகளையும் உள்ளடக்கியதாக - எம்மொழிக்கு ஓர் அணிகலனாக இந்நூல் விளங்கியது.

இராமலிங்கம் போதித்த தமிழ்ச் சுருக்கெழுத்து முறையில் பயிற்சி பெற்றோரே பாராளுமன்றம் - நீதிமன்றங்கள் - அரச காரியாலயங்கள் தொட்டு சாதாரண கந்தோர்வரை தமிழ்ச் சுருக்கெழுத்து - தட்டெழுத்தாளர்களாக நிரம்பியிருந்தனர். இவர் அறிமுகப்படுத்திய முறையினால் தமிழ்ச் சுருக்கெழுத்தின் வேகம் அதிகரித்துள்ளதை தமிழகத் தமிழ்ச் சுருக்கெழுத்தாளர்களே பாராட்டியுள்ளனர்.

1976 -ம் ஆண்டு பங்குனித் திங்கள் இராமலிங்கம் அவர்களின் பணியினைப் பாராட்டி வெள்ளி விழா நடத்தப்பட்டது. அன்று யாழ் வீரசிங்கம் மண்டபம் ஈழத்துத் தமிழ்ச் சுருக்கெழுத்தாளர் - தட்டெழுத்தாளர் - பொதுமக்களால் நிரம்பி வழிந்தமை குறிப்பிடத்தக்கது. சிறந்ததோர் வெள்ளி விழா மலரும் அன்று வெளியிடப்பட்டது.

எத்துறையிலும் முன்னோடிகள் வாழும்போதே கௌரவிக்கப்பட வேண்டும் - பாராட்டப்பட வேண்டுமெனக் குறிப்பிட்டு பத்திரிகைகள் பலவும் கட்டுரைகள் - செய்திகள் வெளியிட்டன. பேராசிரியர் க. கைலாசபதி - தமிழகத் தமிழ்ச் சுருக்கெழுத்தாளர் பலர் - தி. மு. க. தலைவர்களில் ஒருவரான பேராசிரியர் அன்பழகன் - புகழ்பெற்ற எழுத்தாளர் அகிலன் உட்படப் பலர் வாழ்த்துச் செய்திகள் வழங்கியிருந்தனர். 'சுருக்கெழுத்துத் தந்தை' கல்வித்துறையினரோடு மாத்திரமல்ல - கலை இலக்கியப் பத்திரிகைத் துறையினர் உட்படப் பல்துறையினரோடும் நெருங்கிப் பழகியவர்.

அக்காலத்தில் தொழில்நுட்ப நிறுவன மாணவர் சங்க விழாக்கள் கலை இலக்கிய விழாக்களாக மிளிர அவர் பக்கபலமாக நின்று உதவினார். கவிஞர்கள் சில்லையூர் செல்வராசன் - புதுவை இரத்தினதுரை - லோகேந்திரலிங்கம் - அன்பு ஜவகர்சா - நல்லை அமிழ்தன் - இலங்கை வானொலி நாடகத்துறைக் கட்டுப்பாட்டாளர் கே. எம். வாசகர் உட்படப் பலர் எம்மோடு விழாக்களில் கலந்துகொண்டமை ஞாபகம் வருகிறது.

கவியரங்கமானாலும் சரி - கருத்தரங்கமானாலும் பட்டிமன்றமானாலும் சரி யான் கலந்துகொள்ளும்போது அங்கு முன்வரிசையில் அமர்ந்து 'ஆகா... சபாஸ்..." போடும் என் ஆசானை எத்தனை வருடமாகிலும் மறக்க முடியாது..! அந்நியப் படை 'அமைதி" காத்த காலத்தில் நோயுற்ற 'சுருக்கெழுத்துத் தந்தை"யை மரணம் தழுவிக் கொண்டது. தெல்லிப்ளையைப் பிறப்பிடமாகவும் அராலியை வாழ்விடமாகவும் கொண்ட அவர் என்றும் தமிழையும் - தமிழறிஞர்களையும் - மண்ணையும் பெரிதும் நேசித்தவர். மண்ணை நேசித்த அந்தக் கலைஞன் - முன்னோடி - என் ஆசான் என்றும் மதிப்புக்குரியவரே..!

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Monday, 30 November 2020 08:57