துயர் பகிர்வோம்: எழுத்தாளர் நீர்வை பொன்னையன்

Friday, 27 March 2020 17:08 - கனடா தமிழ் எழுத்தாளர் இணையம் - இலக்கியம்
Print

நீர்வை பொன்னையன்காலம் விரைந்து கொண்டே இருக்கிறது என்பதை எமக்குத் தெரிந்தவர்கள் எங்களை விட்டுப் பிரியும் போது மீண்டும் நினைவூட்டுகின்றது. கொரோனா வைரஸ்ஸின் பாதிப்பால் உலகமே உறைந்து போயிருக்கும் இச்சந்தர்ப்பத்தில், தாயகத்தில் வாழ்ந்த 90 வயதான எழுத்தாள நண்பரின் மறைவும் இதைத்தான் எமக்கு எடுத்துக் காட்டுகின்றது.

எழுத்தாளர் நீர்வை பொன்னையன் அவர்களை நான் நேரில் சந்தித்ததில்லை. அவரது ஆக்கங்களை மாணவப்பருவத்தில் படிக்க நேர்ந்ததால் அவரது எழுத்துக்களால் கவரப்பட்டேன். எமது முன்னோடிகளான ஏனைய எழுத்தாளர்களைப் போல அவரிடமும் ஒரு தனிப்பட்ட எழுத்துநடை இருந்தது.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்த ஈழநாடு பத்திரிகையில் எனது முதலாவது கதை வெளிவந்து எனக்கு தளம் அமைத்துக் கொடுத்ததுபோலவே அவரது முதலாவது கதைக்கும் ஈழநாடு தளமமைத்துக் கொடுத்திருந்தது. நீர்வேலியில் பிறந்த இவர் நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரியில் ஆரம்ப கல்வியைப்பெற்றார். அதன்பின் கல்கத்தா சென்று பட்டப்டிப்பை நிறைவேற்றினார். இவரது மேடும் பள்ளமும், ஜென்மம், காலவெள்ளம், பாஞ்சான், வந்தனா போன்ற ஆக்கங்கள் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்கன.

சிறந்த எழுத்தாளர்களும், தரமான எழுத்துக்களும் குறைந்து வரும் இக்காலத்தில் சாகித்ய ரத்னா விருது பெற்ற இவரது இழப்பு ஈழத்தமிழ் இலக்கிய உலகிற்குப் பேரிழப்பாகும். இச்சந்தர்ப்பத்தில் அவரது குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் எங்கள் துயரைப் பகிர்ந்து கொள்கின்றோம்.

குரு அரவிந்தன்
கனடா தமிழ் எழுத்தாளர் இணையம்

This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Last Updated on Friday, 27 March 2020 17:10